கண்ணியமான கடைசிக் காலம்

இது இந்தத் தொடரின் நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களின் சுட்டிகள் இங்கே. 

முதல் மூன்று பாகங்களில் பெரும்பாலும் என்னைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்தும், தகவல்களின் அடிப்படையிலும் தெரிந்து கொண்டதோடு சிறிதே என்னுடைய கருத்துகளைச் சேர்த்து எழுதி இருக்கிறேன். ஆனால் இந்தப் பகுதியில் எழுதப் போவது பெரும்பாலும் என் சொந்தக் கருத்துகளே என்ற பீடிகையோடே தொடங்குகிறேன். இந்தக் கருத்துகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை என்பதாலேயே இந்தப் பீடிகை. 

நம் வீட்டில் இருக்கும் மூத்தோர் தங்கள் இறுதி காலத்தில் பெரும் வசதியையோ நீண்ட ஆயுளையோ எதிர்பார்ப்பதில்லை. தாங்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான தேவையாக இருக்கிறது. தாங்கள் மரியாதையோடு நடத்தப்படவேண்டும், மதிப்பிற்குரியவர்களாகக் கருத்தப்பட வேண்டும், தங்கள் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். தங்களை ஒரு பிரச்னையாக நினைக்கக்கூடாது என்பதே அவர்கள் விருப்பமாக இருக்கிறது. 

இந்தியாவில் மூத்தோர் தனியாக இருப்பது இன்னமும் பெரிய அளவில் நிகழ்வதில்லை. ஆனால் அவர்கள் தனிமைப்பட்டதாக உணரத்தான் செய்கிறார்கள். அதிலும் தம் இணையை இழந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை பெரிய அளவில் இருக்கிறது. இன்றைய பரபரப்பான சூழலில் அவர்கள் தாங்கள் மறக்கப்பட்டவர்களாகவே உணர்கின்றனர். அவர்கள் சரியாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறார்கள் ஆனால் பங்களிப்பவர்களாகக் கருதப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். 

இந்த வயதில் கண்ணியமாக நடத்தப்படுவது என அவர்கள் கருதுவது என்ன? ஒன்று தங்களைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் பொழுது அதில் தங்களுக்கும் பங்கிருக்க வேண்டும். குடும்ப நிகழ்வுகளிலும், சமுதாயத்தில் நடப்பவற்றிலும் தங்களுக்கும் பங்கிருக்க வேண்டும். தங்களின் இருப்பு சார்ந்த வசதிகள் எப்படிக் கவனித்துக் கொள்ளப்படுகின்றனவோ அதே போல தங்களின் மனம் சார்ந்த தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  இவற்றைத்தான் பெரியோர்கள் எதிர்பார்க்கின்றனர். 

குறிப்பாகத் தனியாக வாழும் முதியோர்களுக்கு சமுதாயமும் சுற்றி இருப்பவர்களும் அளிக்கும் ஆதரவு மிகவும் தேவையாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்துக் கொள்வது, கோயில்களுக்கு செல்வது, அல்லது தம் வயதொத்தவர்களோடுப் பேசிப் பழக வாய்ப்பிருப்பது இவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. 

முன்னம் சார்ந்திரா முதியோர் எனச் சொல்லி இருந்தேன். தம் மக்கள் வெளியூரிலோ வெளிநாடுகளிலோ இருந்தாலும் அவர்கள் வேறு யாரையும் சார்ந்திராமல் இருக்கப் பழகிக் கொண்டவர்கள். அவர்கள் தம் உறவினர், நண்பர்கள், தம் மக்களின் நண்பர்கள் என்று தமக்கான ஆதரவுக் குழுக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்பமும் கூட இவர்களை மற்றவர்களோடு நெருக்கமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அதில் தனிமைப்படுத்தப்படக்கூடிய சாத்தியமும் இருப்பதால் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். வயதானவர்களைக் கவனித்துக் கொள்வது என்பது அவர்கள் வாழ்வினை நீட்டிப்பது மட்டுமல்ல, அவர்களின் காலத்தை மரியாதையோடும், நட்போடும், சுதந்திரத்தோடும் கடக்க உதவ வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது. 

மூத்தோரைப் பற்றிப் பேசும் பொழுது நாம் தவிர்க்கும் தலைப்பு ஒன்று இருக்கிறது – மரணம். 

மரணத்தைப் பற்றிப் பேசுவது முறையானதாகக் கருதப்படுவதில்லை. அமங்கலமாகவும் மரியாதைகுறைவாகவும்தான் பார்க்கப்படுகிறது. ஒருவரின் உடல்நிலையைப் பற்றிப் பேசும் பொழுது கூட ‘பரவாயில்லை’, ‘தேறிக் கொண்டு வருகிறார்’, ‘முடிந்த அளவு போராடுகிறார்’ என்றெல்லாம் சொல்கிறோமே தவிர, ஒருவரின் உண்மையான நிலையைப் பற்றிப் பேச நாம் தயங்கத்தான் செய்கிறோம். வாழ்வில் நிலையானவை வரிகளும் மரணமும் மட்டுமே என்ற கூற்றுப்படி மரணம் தவிர்க்க முடியாதது. அதனால் அது குறித்துப் பேசுவது தவிர்க்கப்படக்கூடாதது. 

இன்றைக்கு நாம் மருத்துவமனைகளில் எப்போதும் காணக்கூடிய காட்சி ஒன்று இருக்கிறது. வயதில் மூத்த ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பார். அவரது உடல் பல கருவிகளின் உதவியால் மட்டுமே இயங்கிக் கொண்டு இருக்கும். ஆனால் அவரது உறவினர்கள் மருத்துவரிடம் என்ன செய்தாவது அவரைக் காப்பாற்றுங்கள் என வேண்டிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் எல்லா நேரங்களில் இப்படி என்ன செய்தாவது உயிரைத் தக்க வைப்பது சரியா என்பது குறித்து நாம் பேசுவதே இல்லை. பேசுவதை விடுங்கள், அது குறித்துச் சிந்திப்பது கூட இல்லை. ஒருவரின் உயிரை நீட்டிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோள் சரியானதா? யாருக்காக இந்த நீட்டித்தல்? அவஸ்த்தைப்பட்டுக் கொண்டு இருப்பவருக்கா அல்லது வெளியில் இருக்கும் நமக்கா? இந்தக் கேள்விகளைப் பற்றி எல்லாம் நாம் பேசியாக வேண்டும். 

அதற்காகச் சிகிச்சைகளை நிறுத்திவிட வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆனால் சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. அவர்கள் வலியைக் குறைப்பது, அவர்களை கஷ்டப்படாமல் வைத்துக் கொள்வது என்பவை அந்த வயதில் பெரிய அறுவை சிகிச்சையோ அல்லது வேறு கடுமையான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்வது போன்றவற்றை விடச் சிறப்பான முடிவாக இருக்கும். அந்தத் தேர்வுகள் பற்றிய சிந்தனை அவசியம். 

முடிவாக மரணம் இயற்கையானது என்பதை ஒத்துக்கொள்ள நாம் மனத்தளவில் தயாராக வேண்டும். மூத்தோர்களின் மருத்துவத் தேர்வுகள், அவர்களால் முடியாத பொழுது அவர்களைப் பற்றிய முடிவு எடுக்கக்கூடியவர்களை அடையாளம் காட்டுதல் போன்றவற்றுக்கு சட்டப்பூர்வமான ஆவணங்களைத் தயாரிக்க வழிமுறைகள் இருக்கின்றன. அது குறித்துப் பேசுவது அவசியம். இவை மூத்தோரின் இறுதிக்காலம் அவர்கள் விருப்பத்தின்படியே நிகழ உதவும். அதில் நம் கவலைகளையும், பொறுப்புகளையும், ஆசைகளையும் திணிப்பது குறையும். 

தீவிர சிகிச்சை விடுத்து ஆறுதல் அளிக்கும் சிகிச்சை, வீட்டிலேயே இறுதிக்கட்டக் கவனிப்பு முறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் இல்லை. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு  வரவர மரணத்தை வெறும் மருத்துவம் சார்ந்த பார்வையோடு அணுகாமல், மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய இயற்கை நிகழ்வாகப் பார்க்கத் தொடங்குவோம். ஒரு கட்டத்தில் போராடியது போதும் தான் ஒரு பரிசோதனை எலியைப் போல மருந்துகளாலும் கருவிகளாலும் உயிர் வாழ வைக்கப்பட வேண்டாம், நிம்மதியாக இறுதி மூச்சை விட வேண்டும் என்ற அவர்கள் எண்ணத்தை நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். கண்ணியத்தோடு அவர்கள் இவ்வுலகைக் கடக்கச் செய்வதும் நம் கடமைகளில் ஒன்றுதான். 

இந்தியா வெகுவேகமாக மூப்படைந்து கொண்டு இருக்கிறது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஐந்து இந்தியர்களில் ஒருவர் அறுபது வயதிற்கு மேலானவராக இருப்பார். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாலும், குடும்பங்களில் சிறிதாகிக் கொண்டே போவதாலும் மூப்பின் பாதிப்பு அதிகம் இருக்கப் போகிறது. மூத்தோரைக் கவனித்துக் கொள்ளக்கூடிய கட்டமைப்பும் அதற்கான வழிவகைகளும் நம்மிடையே இருக்கின்றனவா என்பதே நம் முன் பூதாகரமாக நிற்கும் கேள்விகள். 

நம் பண்பாட்டில் பெரியோர்களைப் பார்த்துக் கொள்வது என்பது குடும்பத்தாரின் கடமையாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்ற சமூகங்களைப் பார்க்கும் பொழுது அது தனிப்பட்டப் பொறுப்பு என்பதையும் தாண்டி சமுதாயத்திலும் கூட அதன் தாக்கம் இருப்பதை நாம் உணர முடிகிறது. ஓய்வூதியம், பொது வழங்கல் முறை, மருத்துவக் கட்டமைப்பு போன்றவை மட்டுமல்லாமல் முதியோர் கவனிப்பு மற்றும் மறுசீரமைப்பு மையங்கள் மூத்தோர் மருத்துவ நிபுணர்கள் போன்றவை வாழ்வின் தரத்தை மேம்படுத்த அவசியம் என்பது இன்றைய நிதர்சனம். 

நம்மிடையே ஒரு கலாச்சார மாற்றமும் கூட வர வேண்டியது அவசியமாகிறது. மூத்தோரைப் பாவப்பட்டவர்களாக, மற்றவர்களைச் சார்ந்து இருப்பவர்களாக நினைக்காமல் அவர்களை பங்களிக்கக்கூடிய திறன் இருப்பவர்களாக எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்களாக நினைக்கத் தொடங்க வேண்டும். அவர்கள் மற்றவர்களுக்குப் பாரம் இல்லை, அவர்கள் அனுபவங்கள், திறன்கள், பார்வை போற்றப்பட வேண்டியவை என்பதை நாம் உணர வேண்டும். நாம் இன்றிருப்பது அவர்களால்தான் என்பதை மறக்கக்கூடாது. அவர்களின் இருப்பைப் புறக்கணிக்கக்கூடாது. 

மூத்தோரைப் பார்த்துக் கொள்ளும் நமக்கும் வயதாகின்றது. அவர்கள் வாழ்வு நமக்குப் படிப்பினைதான். நாம் இன்று அவர்களுக்காக ஏற்படுத்தும் வசதிகள்தான் நாளை நமக்கும் கிடைக்கப் போகின்றன. மூப்படைவது என்பது பயப்பட வேண்டிய ஒன்றில்லை, அது கண்ணியமாக, சுயமரியாதையோடு வாழ வகை செய்து கொள்வது என்ற கலாச்சார மாற்றம் நம்மால் செய்யக்கூடியதுதான். மூத்தோருக்கான கட்டமைப்பு, இறுதிக்கால கவனிப்பு, கண்ணியமாக மூப்படைதல் போன்றவற்றைப் பற்றிய உரையாடல்களைப் பரவல் படுத்துதல் நமக்குப் பின் வரும் சந்ததியினருக்கு நாம் தரக்கூடிய கொடை. 

மூத்தோரைக் கவனித்துக் கொள்வது என்பது கருணையால் செய்யப்பட வேண்டிய ஒன்றோ கடமைக்காகச் செய்ய வேண்டிய ஒன்றோ இல்லை. அது காலச்சுழற்சியில் மற்றுமொரு கண்ணியே. நாம் இன்றைக்கு நம்மிலும் மூத்தோருக்குச் செய்வதே நாளை நமக்கும் வாய்க்கும். 

(முற்றும்)

பி.கு.:  டாக்டர் விஜய் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய தொடரை  அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட கட்டுரை. 


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.