நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் 2

இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே காணலாம்: நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் –1

புது உலகம்

பால் கிங்க்ஸ்நார்த்தால், ஜேம்ஸ் லவ்லாக்கின், ‘உலகம் தன்னைத்தானே வழி நடத்திக் கொள்ளும்’ என்ற சிந்தனையை ஏற்க முடியவில்லை; பின்னவர் இயந்திரங்களை தெய்வ நிலைக்கு உயர்த்தாவிட்டாலும், அதன் முக்கியத்துவத்தைச் சொல்வது இவருக்குக் கொடூரமாகக்கூட படுகிறது. உயிர்க் கோளத்தைக் காப்பாற்ற வேறு வழி தென்படவில்லையா? மனிதன் பெருகினால், வாழும் இடம் சிதைவுறும். சுற்றுச் சூழலில் நாம் பதிவு செய்யும் தடங்களால், நம் இனமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. ஆனால், தொழில்நுட்பத்தை விட்டு விட்டால், அதுவே இயற்கையைச் சிதைக்கும்; இந்த முரணை பாலால் ஏற்க முடியவில்லை. சூழியலாளரும், புலிட்ஸர் பரிசை வென்ற கவிஞருமாகிய கேரி ஸ்னைடரை (Gary Snyder, கவிதை “the Thoreau of the Beats”) பால் கொண்டாடுகிறார். 20ம் நூற்றாண்டின் சூழியல் மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை மனிதர்கள் எவ்விதம் எதிர் கொள்ள வேண்டுமென்று, கேரியைக் கேட்டதற்கு, அவர், “நீங்கள் உங்கள் வீடுகளில் இருப்பதே உங்களின் உண்மையான புரட்சி”என்றார். எங்கோ தொலைவில் இயற்கையுடன் கூடிய நாட்டுப்புற வாழ்க்கையில் எத்தனை பேரால் ஈடுபட முடியும்? அமேசான், பொருட்களை வீடு தேடி வழங்காவிடில், அறிதிறன்பேசிகள் இயங்காவிடில், நகரத்தோர் சிதறி நாட்டுப்புறங்களை அணுகுவார்கள்; அங்கே நிலவும் சிறு தொழில் நுட்பங்களை அழிப்பார்கள்; அவர்கள், மண்வெட்டி கொண்டு நிலத்தை சமன் செய்து, பயிரிட மாட்டார்கள்; கொலைபாதகங்களைச் செய்வார்கள்; உள்ளூரில் இருக்கும் போர்த்தலைவர்களின் ஆணையை ஏற்று புரட்சியாளர்கள் வெறித்தனமாக தங்கள் நிலத்திற்காகச் செயல்பட, அராஜகம் தலையெடுக்கும்; கொடுங்கோன்மை மேலோங்கும்- மீண்டும் இயந்திரங்கள் வரும். இயந்திரங்களிலிருந்து விலகுவது இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகாது. இன்றைய நவீன உலகிலிருந்து, விலகி நிற்கும் நாடுகளுக்கும் இது புரிய வேண்டும்.

மேற்கு நாடுகளுடனான ஜப்பானின் வர்த்தகம், எவ்வாறு தொடங்கியது என்பதை ஒரு சிறு அத்யாயத்தில் பால் காட்டுகிறார். அமெரிக்க கடற்படை அதிகாரி பெர்ரியின் ‘கறுப்புக் கப்பல்கள்’ 1853ல் ஜப்பானை மேற்குலக வணிகத்திற்கு உட்படுத்தும் விழைவோடு தாக்குதல் நடத்தின; ஆனால், பால் ஒன்றை மறந்துவிட்டார். அதே 19ம் நூற்றாண்டின் இறுதியில், இயந்திரப்புரட்சியால், ஜப்பான், 1905ல் நடந்த ‘சுஷிமா தீவிற்கான’ போரில், ரஷ்யாவின் கப்பற்படையை வென்றது; ஆசிய தேசம் ஒன்று, மேலை உலகை தன் இயந்திர மேன்மையால், தொழில் நுட்பத்தால் வென்றது. திபெத்தோ, இந்த நவீனத்திலிருந்து விலகியிருந்ததால், 1950ல் சீனாவின் வசமாகி, தன் பண்பாடு உட்பட பலவற்றை இழந்து நிற்கிறது.

சரி, சூழியல் சிக்கல்களிலிருந்து தொழில் நுட்பம், நம்மை மீட்டுவிடுமா? அதிகரிக்கும் புவிவெப்பம், நிச்சயமாக, மானுடவியலில் தான் தொடங்கியிருக்கிறது- மானுட நடத்தையில் என்றும் சொல்லலாம். அதற்காக, மனித செயற்பாடுகளே இந்தப் பேரிடரை எதிர்கொள்ளப் போதுமென எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த சூழல் ஆபத்துக்கள், பல நூற்றாண்டுகள் தொடரக்கூடும். நாளை உலகை மனித இனம் ஆளப்போகிறது என்றால், இந்த ‘ஆந்த்ரோபோசீன் (Anthropocene) மிகச் சிறிதாக தோற்றம் தரலாம்.

சூழலுக்கேற்ப நாம் வாழ்வதற்கு தொழில் நுட்பம் உதவுமென்பதை பால் மறுக்கிறார். முன்னேறுவது, பேரழிவில் தான் முடியும் என நினைக்க வேண்டாம். சரியான விதத்தில் பயன்படுத்தப்படும் அணுசக்தி, படிம எரி பொருள் பயன்பாட்டைக் குறைத்துவிடும். ஏறி வரும் கடலைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கரையோரக் குடியிருப்புகளை மேடேற்றி கோட்டையைப் போல் பாதுகாக்கலாம்; நகரங்களை அதீத தட்ப வெப்ப நிலையிலிருந்து தற்காத்து மீண்டெழும் வகையில் கட்டலாம்; காடுகள், வனங்கள் அமைக்கலாம்; மனிதர்களுக்கு உணவு கிடைக்கலாம். ஆனால், ‘அமைதி’ நிலவினால் தான் இவையெல்லாம் சாத்தியம். இன்று, போர்க்கருவிகளில், தொழில் நுட்பம் அதிகம் பயனாகிறது. வடக்கு வியட்னாமியரையும், வியட் காங்கிரஸ் படையினரையும்  செயலிழக்கச் செய்வதற்காகவும், மழைப் பருவத்தை நீட்டிப்பதற்காகவும், வன வளங்களை அழிப்பதற்காகவும், வேதிப் பொருளான ‘ஆரஞ்சையும்’, மேக விதைப்பையும் அமெரிக்கா மேற்கொண்டது.  (இந்தியாவில், இந்திய நாட்டில் இருந்து கொண்டே மணமற்ற, நிறமற்ற, ‘ரைசின்’ என்ற வேதிப் பொருளை,  ஆமணக்கு விதையின் கழிவிலிருந்து தயாரித்த ஒரு நாசகார குழு பிடிபட்டுள்ளது; அவர்களின் திட்டம், தண்ணீரில் கரையும் அந்த இரசாயனப் பொருளை, கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் கலந்து விடுவது; இது உயிர்க்கொல்லி- இதற்கு விஷமுறிவு மருந்து இல்லை.) ஒருக்கால், புவியின் சுற்றுச் சூழலை, புவி பொறியியல் மூலம் நேர் செய்ய முடியுமென்றால், அது புவியரசியல் கலகங்களை உண்டாக்கி, உயிர்க்கோளத்தில் சொல்லவொண்ணா தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூழலியலை முதன்மையாகப் பேசுபவர்கள், பாலை, ‘நைஹலிஸ்ட்’ என்று சொல்கிறார்கள். “எதுவும் வாழ்க்கையில் பொருளற்றது, ஒன்றுமேயில்லை” என்று சொல்பவர்கள் நைஹலிஸ்ட் (நிகிலிஸ்ட்?) என்று பொதுவில் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு சற்று அதீதமானது- மடத்தனமான, பலவீனமான கருத்துக்களை முன்னிறுத்த இப்படி அவர்கள் பாலைப் பற்றிச் சொல்கிறார்கள். பாலின் ‘பார்வை விஸ்தீரணம்’ கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சூழல் சிக்கல்களை அழுத்தமாக அவர் சொல்வது, நம் உணர்வுகளுக்குள் செல்கிறது; நமது காலம் உலக இறுதிக் காலம் என்று அவர் சொல்வது நம்மைத் துளைத்து, உடனடியாக, இடைவிடாமல் அதை மறுக்கச் சொல்கிறது. இவர்களுக்கெல்லாம் தெரியுமோ, தெரியாதோ, அழிந்து வருவதாக நம்பப்படும் உலகில் எவ்விதம் வாழ்வது என்று பலர் கேட்கிறார்கள். பாலின் பதில்கள், உண்மையை மீறியவை, ஓரளவிற்கே ஒத்திசைவு  உள்ளவை. பழைய மரபைத் தழுவிக்கொண்டாலும், பால், ‘புது- பாக வாழ்வைத்’ தொடர்கிறார். உலக அழிவும், மீள் வருகையும் சக்கரமென்ற சுழற்சியில் வருவதை இயற்கையும், வரலாறும் சொல்வதை அவர் எடுத்தாள்கிறார்- குறிப்பாகச் சொல்லப் போனால், இந்தக் கருத்தே- கிருத்துவ கோட்பாட்டிற்கு உடன்பட்டதல்ல- மேலும், பேரழிவை ஏற்காத ஒன்றும் கூட. இந்த இரண்டிற்கும் நடுவே அவர் ஊஞ்சலாடுகிறார்- அவர் சொல்லும் புது உலகம் இப்போதே வரப்போகிறதா அல்லது தொலை தூரத்தில் உள்ளதா என்பது தெளிவாக இல்லை.

பிந்தைய கருத்திற்கு சிறிது அறிவியல் உதவி இருக்கிறது. ‘கையா’ கோட்பாட்டை ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, சில அறிவியலாளர்களுக்கு ஒரு ஐயம் இருக்கிறது-இந்த பூமி ஒரு வளர்ச்சியடைந்த அமைப்பாக சிறப்பாகப் புரிந்து கொள்ளப்படுமா? Permian-Triassic (பெர்மியன்- ட்ரையாசிக்) பேரழிவு ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது- அதில் உலகின் 90% உயிரினங்கள் அழிந்தன. ஆயினும், உலகம் மீண்டது- வளப்பமான உயிர்க்கோளம் அமைந்தது. பூமிக்கு நாம் எத்தனை கெடுதல்களைச் செய்தாலும், புவி நிலைபெற்று வாழும். துருவ முனைகள் உருகலாம்; அதிக மக்கள் வாழும் இடங்கள், வாழத் தகுதியற்றவையாக மாறலாம்; காடுகள், பாலைவனங்களாகலாம்; அல்லது பாலைகள், வனங்களாகலாம்; நாகரீகங்கள் வரலாம், போகலாம்; பல காலங்களுக்கு, மனிதர்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்; ஆதவன் சுடர் விடுவான், உயிர்ப்பு இருக்கும்.

“பழுப்பு அல்லது மஞ்சள் களிமண் பாசி—ஒரு காலத்தில் உயிரின் தாலாட்டாக இருந்தது, இப்போது இதுவே கடலையும் கரையையும் மூடும் ஒரு ஆபத்தான அலையாகிவிட்டது.

மேற்கு ஆஃப்ரிகா கடற்கரையிலிருந்து, கல்ஃப் வளைகுடா வரை சுமார் 8800 கி மீட்டர் படர்ந்துள்ள, 37.5 மில்லியன் எடை கொண்ட இந்தப் பாசிகளால், கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்துக்களைச் சந்திக்கின்றன; பவழங்கள் நிறம் மங்குகின்றன; மீனவர்களின் வலைகள் இதில் சிக்குண்டு, அவர்களின் வாழ்வாதாரம் அழிகிறது; இவை வெளியிடும் ஹைட்ரஜன் சல்ஃபைடு, கெடு மணத்தை காற்றில் கலக்கிறது. அணுமின் நிலையத்தை குளிர்விக்கும்  கடல் தண்ணீருடன் இவை நிறைந்து வந்து, ஃப்ளோரிடாவில், அந்த மையத்தை சிலகாலம் மூடும்படி செய்துவிட்டன. கடல் வெப்பம் மற்றும் மனிதச் செயற்பாடுகளால் ஊட்டமடைந்து, இது உயிர்வளங்களை மூடுகிறது, காற்றை மாசுபடுத்துகிறது, இயற்கையின் சமநிலையை சிதைக்கிறது. இயந்திரங்களின் உதவி கொண்டு இவற்றை அகற்றப் பார்த்தால், பல் நுண்ணுயிரிகள் அழிந்து போகும் அவலமும் நடக்கிறது.” (https://share.google/oLgCvVj7MTM3FllD4)

இந்தியா

“மனிதன் இங்கு ஒரு கருப்பொருளே அன்றி, இப்பேரிருப்பின் உரிப் பொருள் அல்ல. மொத்த இருப்புக்கும், பிரபஞ்சத்திற்கும் ஆன்மீகப் பொறுப்பேற்று அதன் அர்த்த- அனர்த்த மதிப்பை சலித்துக் கொண்டு சுய அனுபவ அகந்தையின் நார்சிஸ பிறழ்ச்சியில் அவதியுற வேண்டியதில்லை”- (அகாதம்- பிரவீண் பஃறுளி, பாலை நிலவன்- நன்றி- கிரிதரன் ராஜகோபாலன் )

இயற்கையுடன் இருக்கப் பழகிய நாம்தான் அதை அழிக்கவும் துணிந்து விட்டோம். “இன்னறு நீர் கங்கை ஆறெங்கள் ஆறே, இங்கிதன் மாண்பிற்கு நேரெதிர் வேறே” பாரதி கொண்டாடுகிறார். ஆனால் ரூ 7000 கோடிக்கும் மேல் செலவழித்து கங்கையைத் தூய்மை செய்யும் திட்டத்தில், இரசாயனக் கழிவுகளை அகற்றவோ, சட்டவிரோத கல்குவாரிகளை அகற்றவோ, நிதி ஒதுக்கப்படவில்லை. மாத்ரிசதன் ஆசிரமத் துறவிகள் கங்கைக் கரைகளில் கட்டப்படும் பல்லடுக்குக் கட்டிடங்களையும், தொழிற்சாலைகளையும் எதிர்த்துப் போராடுகிறார்கள். இரு சாதுக்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்திருக்கிறார்கள். 194 நாட்கள் உண்ணா விரதமிருந்து போராடினார் ஆத்ம போதானந்த்.

தமிழ் நாட்டில் நொய்யல் ஆறு என்ற ஆறு காணாமலே போய்விட்டது. அடையாறு நதியும், கூவம் நதியும் நம்மைப் பரிகசிக்கின்றன. ஆறுகளில் சட்ட விரோதமாக மணலை அள்ளி அள்ளி, ஊற்றே வறண்டு விட்டது.

சூழல் பாதுகாப்பு என்பதை சிலர் அதீதமாகக் கையாள்வதையும் பார்க்கிறோம். ந்யூட்ரினோ திட்டம், செம்பு உருக்கு ஆலை ஆகியவை குறித்த அறிவார்ந்த புரிதல்கள் இல்லாமல், உணர்ச்சிகரமாக வாதாடுகிறோம். நிலம், நீர், காற்று மாசு படாமல் இருக்க வேண்டும்- அதற்கான கருவிகள் இருக்கின்றன. அதைச் செயல்படுத்த சிறந்த கண்காணிப்பும், மீறுபவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டுமேயன்றி, திட்டங்களைக் கைவிடுதல் நலம் தருமா?

நாம் இயற்கையை வணங்குபவர்கள்- பூமி அன்னை, வானம் தந்தை என்பது நம் மரபு. சூரியனை, சந்திரனை, நெருப்பை, காற்றை, நீரை, நிலத்தை தெய்வங்கள் என வைத்தோம். கருடன், சிம்மம், யானை, மயில், காளை, மூஞ்சூறு, இவையெல்லாம் நம் கடவுளின் வாகனங்களாகின. அரசு, வேம்பு, மா, அத்தி போன்ற பல மரங்கள் ‘ஸ்தல வ்ருக்ஷங்களாகின’. கருட தீர்த்தம், சூர்ய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கமலாலய அமுதக்குடம் போன்றவை புனித நீர் நிலைகள். அனைத்து நதிகளுமே அமுது செய்தன.

ரிக் வேதம் பூமியை ‘சக்தி’ எனச் சொல்கிறது. அதர்வ வேத புவி சூக்தத்தில், இடம் பெறும் 63 செய்யுள்களில், சிலவற்றைக் கீழே பார்ப்போம். பூமியை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், அதனால், உயிரினங்கள் எப்படி செழிக்கும் என்று பாடிய முனிவர்கள், சுற்றுச் சூழலின் அவசியம் தெரியாமலா இதைச் சொல்லியிருக்கிறார்கள்?

1.
தெய்வக் கைவண்ணம் கோட்டைகள்,
மண்டலமெங்கும் உழைப்பு மலர்கிறது;
கருப்பையில் கனமணி தாங்கும் நீ,
எல்லைதொறும் இனிமை தர இறைவன் அருள் புரிவானாக.
2.
கடலும் நதியும் நீர்நிலையும் கொண்ட நீ,
தானிய வளர்க்க நிலம் தருகிறாய்;
பாலும் பழமும் தானியமும் நீரும்,
உணவாகவும், அருந்துவதற்கும் நிறைவாக வழங்குவாய்.
3.
மொழி மாறுபட்டோர், மதம் மாறுபட்டோர்,
ஒரே இல்லத்தில் வாழ்வோர் எனக் கருதி,
தவறாத பசுவென செல்வநதிகள் ஆயிரம்,
எனக்கென வழங்கும் தாயே, வாழ்க.
4.
கோதுமை, அரிசி, பார்லி வளர்கின்ற பூமி,
ஐந்து இனங்கள் பிறக்கும் புனித நிலம்;
மேகம் ஊட்டமளிக்க, மழை நேசிக்க,
நீ எங்கள் தாயாகத் திகழ்வாயாக.”

நகர, கிராம அமைப்பிற்கான வழிமுறைகள், விதிமுறைகள் நம் அக நானூற்றிலும், புற நானூற்றிலும், (அகப்புறம், புறப்புறம்) வேதங்களிலும் காணக்கிடைக்கின்றன.

நில அமைப்பு (சரிவு நிலமா, மேட்டு நிலமா?), மண் வகை (செம்மண், களிமண்) காற்றடிக்கும் திசை, நீர் வரும் பாதை, கழிவு நீர் செல்லும் பாதை, ஏரி, குளம், மதகு, வாய்க்கால், கிராமப் பொதுக் குளம், வளர்ப்புப் பிராணிகள் நீரருந்தும் குளம், பயிர் நிலம், மேய்ச்சல் நிலம், தரிசு நிலம் போன்ற அனைத்திற்கும் இடம் கொடுத்து நகர, கிராம திட்டங்கள் போடப்பட்டன. காட்டிற்கும், நகரம்/ கிராமத்திற்கும் இடையில் எத்தனை யோஜனை தூரம் இருக்க வேண்டும் என்று கூட அந்த விதிகள் சொல்கின்றன. காட்டு உயிரினங்களும் வாழ வேண்டும், நாட்டு மனிதர்களும் அவைகளால் அல்லல் அடையக்கூடாது என்று சிந்தித்த இந்த மண்ணில் தான், யானைகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு உணவு தேடி வருகின்றன!

“தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல், வாழ உலகினில் மழை பெய்ய வேண்டும்” ஆண்டாள், அந்த மழை எப்படித் தோன்றுகிறது என்றும் சொல்கிறார் “ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி”

அரசு முழுமையாக முயன்றால்தான் அறிவியல், அற நெறியில் பயன் தரும்; வளர்ச்சியும், வாழ்வும் இணையும் அந்த நாள் வரும் என்று நம்புவோம்.

உசாவிகள்:

https://www.newstatesman.com/culture/2025/10/the-prophecies-of-paul-kingsnorth- Mr. John Gray 15/10/25

தமிழர் நகரமைப்பு, ரிக், அதர்வ வேதங்கள், ஆண்டாள்


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.