காலம்

கண் இமைக்கும் நேரத்தில்
கண் இமை மூடிவிடும் வேகத்தில் நகர்கிறது காலம்
இமைக்கும் இமைகள்
இறைக்கும் மூச்சுக்காற்று
சுரக்கும் உமிழ்நீர்
இவைபோல கடந்துசெல்லும் காலம்
நீ அதை கருத்தில் கொள்ளாமல் கடந்து செல்லும்பொழுது
ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை
அதை நீ உணரும் நொடி காலம் விரிவடைகிறது
உன் கண்மணிக்குள் வந்து நிற்கிறது
உன் மனம் அறியாமல் நகரமுடியாமல் திகைக்கிறது
ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை
அதை நீ உணரும் நொடி !
மறு ஒருமுறை
வாழ்ந்து பார்த்தக் கனவுகள் அனைத்தும் சிதையட்டுமே!
எண்ணிச் சேர்த்த செல்வங்கள் யாவும் மறையட்டுமே!
பிறப்பினால் ஈன்ற வனப்பும் கூடச் சிதைந்துப் போகட்டுமே!
என் மனம் சிதறிவிடுமா?
பேணிக் காத்த உறவுகள் அனைத்தும் ஏளனம் செய்யட்டுமே!
என்றென்றும் என்ற வார்த்தைகள் பொய்யாகிப் போகட்டுமே!
அவமானங்கள் தலைதூக்காதபடி வந்து சேரட்டுமே!
என் நம்பிக்கை நொறுங்கிவிடுமா?
இதனினும் கீழ் விழப் பூமியில் இடம் இல்லாமல் போகட்டுமே!
அடிகளுக்கு அடிப்பணியாமல் துளிர்த்தெழுந்த இலட்சியங்கள் வேரோடு உயிர்நீத்துப் போகட்டுமே!
இனி விட்டுப்பிரிய யாவருமின்றி எதுவுமேயின்றி நிற்கும் நிலை வரட்டுமே!
என் வீரம் இவற்றால் அடிப்பணிந்துவிடுமா?
பெருந் தோல்விகளோ சிறு வெற்றியோ கூடக் கண்டு உணர்ச்சிகள் இனி எழாதபடி மரத்துப் போகட்டுமே!
என் அஞ்சாமை அதனால் என்னை விட்டுப் போய்விடுமா?
மறு ஒருமுறை எழுந்து விடமாட்டேனோ?
ஆழ் இருளையும் போராடி வென்றுவிடமாட்டேனோ?
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
