சுழியத்தின் காரணியம்

தொடர்புள்ள பதிவு:

“எண்கள்ன்னா வெறும் கோடும் வட்டமும் கெடையாது. அத மனுஷன் உருவாக்கல. ஏற்கனவே இருக்கறத கண்டு புடிக்குறான். மண்ணுக்குள்ள இருக்க கண்ணுக்குத் தெரியாத நீரூத்து மாறி ப்ரோ இது. மனுஷன் கண்டுபுடிச்சதுலயே பெரிய புதையல் இதுதான். அது இயற்கைல இருக்கு.. அது மேல இருக்க மண்ணு, கல்லு எல்லாம் நீக்கிட்டா ஊத்து தண்ணி கெடச்சிடும். நம்ம தாகத்துக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ எடுத்துக்குறோம்.” பனியிடத்தின் பரந்த வெளியை நிறைத்திருக்கும் வெள்ளொளியைத் தாண்டி அவர் கண்கள் மின்னலடித்தன. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அலுவலகத் தோழர் அவர். எண்களைப்  பற்றிப் பேசினால் உற்சாகமாகிவிடுவார். எண்களுக்கிடையிலான உறவுகளும் ஊடாட்டங்களுமே உலகை இயக்குகிறது என்பார். ஆதியிலே எண்கள் இருந்தன, அவற்றை மனிதன் தன் குறியீடுகளால் எப்படி தொட்டெடுத்தான் என்பதை அன்று விளக்கிக்கொண்டிருந்தார். அவரை மறுத்துப் பேசுவது எங்களுக்கு உற்சாகமான பொழுதுபோக்கு.

அவர் தொடர்ந்தார் “பூஜ்ஜியம்ன்னு ஒரு விஷயத்த மனுஷன் கற்பனைல உருவாக்கிட முடியாது ப்ரோ. ஒன்னு இல்ல. அது இல்லங்குறத சொல்ல முடியும்னு தெரிஞ்சிக்குறான். அந்த இன்மையக் குறிக்க ஒரு வட்டத்த போடறான். அப்போ மொதல்ல இன்மைன்னு ஒன்ன கண்டுபுடிச்சாத்தான அதைக் குறிக்க பூஜ்ஜியம்ன்னு ஒன்ன உருவாக்கமுடியும்?”

நான் கூறினேன், “அப்போ உங்களோட கணக்கு எல்லாம் வெறும் குறியீடு தான் ப்ரோ. ஒரு நெஜத்தோட நிழல். அவ்ளோதான். ஆதியிலே இருந்தது எண்கள் கிடையாது. அது ரொம்ப காலத்துக்கு அப்பறமா வருது”

“கணிதம் உங்க பகுத்தறிவுக்கு வெளிய இருக்கு. அது பிரபஞ்சத்தோட விதி. இந்த பிரபஞ்சத்துக்கு ஒரு மொழி இருக்குன்னா அது கணிதம் தான். அதோட லிபி எண்கள். அதுல பூஜ்ஜியமும் ஒரு எழுத்து. அந்த பாஷை பேசத் தெரிஞ்சிட்டதால பல சமயங்கள்ல விதிய தெரிஞ்சிக்கிடுவோம். அப்பறமா அது இயற்கைல எங்க இருக்குன்னு தேடுவோம். வார்த்தைய போட்டுட்டு அர்த்தத்த கண்டுபுடிக்குறா மாறி.. கொழந்தைகளும் கவிஞர்களும் அப்டிதான் நாம பேசற மொழிய உருவாக்குறாங்க.. கணிதம் தெரிஞ்சவங்க பிரபஞ்ச மொழிய உருவாக்குறாங்க..”

“அப்படி ஒரு தெய்வீக அம்சம் எதுவும் அந்தக் கோடுகளுக்கு இல்ல ப்ரோ. காட்டுலயும் புல் வெளிலயும் வாழ்ந்த மனுஷன் தன்னோட வசதிக்காக உருவாக்கிக்கிட்டது தான் கணக்கு. ஒரு ஆப்பிள விட ரெண்டு ஆப்பிள் பசிய ஆத்தும்ன்னு கண்டுபுடிச்சதுமே கணக்கு பொறந்தாச்சு. மொழி எப்படி சேதி சொல்ல பயன்பட்டுச்சோ அப்டி தான் கணக்கும். An Useful tool. Imaginary number, algebra, number theory அது இதுன்னு நீங்களே அத சிக்கலா ஆக்கிக்கிட்டீங்க”

அவர் சீண்டப்பட்டார். சற்று நேரம் மௌனமானார். பின்னர் கூறினார்.

“சரி தான் ப்ரோ. நீங்க சொல்றது உண்மையாவும் இருக்கலாம். எண் கணிதத்துல காரணியம்ன்னு ஒன்னு இருக்கு தெரியுமா?”

“ஆமா”

“மூணோட காரணியம் எப்டி எழுதுவீங்க? 3 X 2 X 1. ஆறு. அதாவது உங்க கிட்ட மூணு பொருள் இருந்தா அத ஆறு விதமா அடுக்கலாம். ரெண்டோட காரணியம் ரெண்டு. ஒன்னோட காரணியம் ஒன்னு. இது வரைக்கும் சரி. ஆனா பூஜ்ஜியத்தோட காரணியம் எப்டி ஒன்னுன்னு ஆக முடியும்? அங்க பொருள் இல்ல. அத சொல்ல பூஜ்ஜியம் இருக்கு. இல்லாத பொருள அடுக்கறதுக்கு ஒரு அமைப்பு, வடிவம் எதுவும் இல்ல. அந்த வடிவமின்மைய மனுஷன் ஒன்னுன்னு குறிக்குறான். இது இயற்கைல எங்க இருக்கு சொல்லுங்க? இதோட பயன்பாடு என்ன?”

நான் அமைதியாக இருந்தேன். இன்மையை சூழ்ந்திருக்கும் காலிப்பெட்டி. அந்தப் பெட்டியும் வடிவமற்ற இன்மையே என்பதை, இறுதியாக ஒன்று என்று சொல்லி முடிக்க வேண்டி இருப்பதன் அபத்தத்தை யோசித்துக்கொண்டிருந்தேன். 

சுழியமே காரணம், அதன் காரணியமே ஒன்று. சுழியம் எனும் சாரமற்ற ரூபம், ஒன்று அதன் நாமம். சட்டென அலுவலகத்தில் கண்முன் இருந்த கணினிகளெல்லாம் சுழியங்களும் ஒன்றுகளும் சேர்ந்த நாமரூபங்களின் தொகுப்பாகத் தெரிந்தது. அலுவலகத் தோழர்களும் அவ்வாறே தோன்றினர். ’அது’ சாரமற்றதெனில் அதனைக் காணும், உணரும், உற்றறியும், ’இது’? 

இங்கிருக்கும் இவையெல்லாம் என்ன என்பதும் இவற்றையெல்லாம் அறிந்திடும் இது என்ன, இந்த நான் யார் என்பதும் தான் எத்தனைப் பழமையான கேள்விகள். 

ரமணரிடம் எந்தக் கேள்வி கேட்கப்படும்போதும் ‘அதைக் கேட்கும் நீ யார்’ என்பது திரும்பத் திரும்ப பதில் கேள்வியாகக் கேட்கப்படுகின்றது. கேள்விகளில் எல்லாம் அடிப்படையானது ‘நான் யார்?’ என்பதே என்கிறார். 

சாதாரணமாக நான் என்பதை நாம் எவ்வாறு அறிகிறோம்?

நான் இந்தக் கண்களுக்குப் பின்னால் இருந்து உலகைப் பார்க்கிறேன். நான் இந்த எண்ணங்களை சிந்திக்கிறேன். நான் இந்த உடலை இயக்குகிறேன். இந்த உடலால் உலகை உணர்கிறேன். நான் காண்கிறேன். நான் இயக்குகிறேன், இயங்குகிறேன். சுய விருப்புறுதி கொண்டிருக்கிறேன். என் நினைவுகள் இவை. என் கனவுகள் இவை. நான் இந்த மொழி, பண்பாட்டு, சமூகப் பின்னணி கொண்டவன். இவர்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் என்னைப்பற்றி இவ்வண்ணம் எண்ணுகின்றனர். சிலரை நான் வெறுக்கிறேன். அவர்களுக்கு நான் யார் என்பது தெரியாது. எனக்கொரு பெயருண்டு. அதை விளிக்கையில் நான், ‘நான்’ என உணர்கிறேன். இவ்வகையிலும் இன்னும் பலவாறாகவும் நான் உள்ளேன். தூலமாக. இதோ ஒரு கணம் முன்பு வரை..

நான் என்பதை அடிப்படையில் மாறாத ஒன்றாக எண்ணுகிறோம். அது தவறான புரிதல் என்பதே புத்தர் கூறும் அனத்தா எனும் தன்னின்மை. முதலில் நான் என்பதை நீர்மை கொண்டதாக, மாறிக்கொண்டே இருப்பதாகக் கொண்டால் அதனைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுகின்றன. நிலையானதொரு நான் என்பதே இல்லை என்றால் செயல்களைச் செய்வது யார்? இதனை எழுதுவதும் வாசிப்பதும் யார்? இங்கே தான் மெய்யியல் கணிதவியலோடு இணைகிறது. நான் என்ற ஒன்று காரணியமாகிறது. அதன் காரணம் என்பது சுழியம் எனும் இன்மை என்றாகிறது.

இந்த சுயம் என்பது பரிணாம வளர்ச்சிப் போக்கில் உயிர்களின் பிழைப்புக்காகவும் நீட்சிக்காகவும் தோன்றி வந்திருக்கவேண்டும். அது நிலையாக இருக்கவேண்டிய தேவை ஏதும் இல்லாததால் கணம் தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. இருத்தலின் மூன்று பண்புகள் என புத்தர் வகுத்ததில் முதலாவதான இந்த நிலையாமையைப் (அநிச்சா) புரிந்துகொள்வதன் மூலமே அடுத்த பண்பான தன்னின்மையையும் (அனத்தா) உணரலாம்.

தன்னின்மையை உய்த்துணர்ந்த புத்தர் அக்கண்டடைவை பகிர்ந்துகொள்ள வேண்டி கயாவிலிருந்து வாரணாசிக்குப் பயணிக்கிறார். அங்கே அவர் ஆற்றிய இரண்டாவது தம்ம உரை அனாத்தலக்கன சுத்தா எனப்படுகிறது. முதல் தம்ம உரையில் துக்கத்தின் நிதர்சனம் உரைக்கப்பட்டபின் தன்னின்மை குறித்த இவ்வுரை ஆற்றப்பட்டது.

நான் என்பதை இத்தனை பொருண்மையானதாக உணரும் மாந்தரை தன்னின்மை நோக்கி அழைத்துவருவது எங்ஙனம்? நான் என்று கணம் தோறும் உணரப்படுவதன் கூறுகள் என்னவென உரைப்பதன்மூலம் இருப்பது என்ன, அவற்றின் கூட்டியக்கத்தில் நான் என்ற கற்பிதம் தோன்றிவருவது எப்படி என்பதை அனாத்தலக்கன சுத்தத்தில் விளக்குகிறார். பாறையை உடைத்துப் பார்ப்பதுபோல் இதனை அவர் செய்யவில்லை. மாறாக நீர்மைகொண்டொழுகும் ஓர் அனுபவத்தை, பிடித்து நிறுத்தாமலே அதன்போக்கில் பகுத்துப் பிரித்துக் காட்டுகிறார். தன்னின்மை குறித்து புத்தர் உரைத்ததைக் கேட்டுணர்ந்த  ஐவரும் அக்கணமே விடுதலை அடைந்ததாகக் கூறப்படுகிறது. 

பாம்பின் தலையையோ வாலையோ கவனமாகப் பிடிப்பதைப் போல் தன்னின்மை குறித்த புத்த தரிசனத்தைக் கவனமாகவும் தெளிவாகவும் பிழையின்றியும் அறிதல் வேண்டும் என்கிறார் புத்தர். இந்தப் புரிதலில் தவறு நிகழ்வது எத்தனை ஆபத்து என்பதைக் கூறும்போதே ஆற்றைக் கடக்கப் பயன்படும் படகைப் போல் தன் போதனைகளைப் பயன்படுத்திவிட்டு நீங்கிச் செல்லவும் அறிவுறுத்துகிறார்.

வடிவம், உணர்ச்சிகள், அறிந்துணர்வு, மனவுருவாக்கங்கள், தன்னுணர்வு என ஐந்து கட்டுகளின் இயக்கமே இருக்கின்றது. இருப்பவை யாவும் இவ்வைந்துக்குள் அடக்கம். நான் என உணரப்படுவது இவ்வைந்தின் கூட்டியக்கமே. அவற்றின் நடுவில் இயக்குபவர் என யாருமில்லை என்பதே புத்தம் உரைப்பது. 

வடிவம் என்பது நான்கு பூதங்களால் ஆனது. தூலமாக நாம் உணரும் உடல், உடல் வழி நாம் அறியும் பொருள்வய உலகு, இவற்றின் கடினம், மென்மை (நிலம்), குளிர்ச்சி, வெப்பம் (நெறுப்பு), ஈரம், வறட்சி (நீர்), விரிந்து சுருங்கும் இயக்கம் (காற்று) என்றிவ்வாறாக வடிவம் அனுபவப்படுகின்றது. வடிவத்தை, உடலை நான் என அனுபவம் கொள்கிறோம்.

உணர்ச்சிகள் ஐம்புலன்களின் தொடர்பால் தோன்றுவதாக பிரதித்த சமுப்பதம் (அல்லது பிரதித்ய சமுத்பாதம்) உரைக்கிறது. உணர்ச்சிகள் மூவகை; இன்பம், துன்பம், இன்பமும் துன்பமுமற்றது. தோன்றி மறையும் தன்மைத்தான இவ்வுணர்ச்சிகளோடு அடையாளப்பட்டு அவற்றை நான் என அனுபவம்கொள்கிறோம்.

ஆறு புலன்களின் உள்ளீடுகளால் ஆனது அறிந்துணர்வு எனும் மூன்றாவது கந்தம். அவற்றிலும் பார்வையை முதன்மையாக வைத்து அறிந்துணர்வின் பிரதிநிதியாக்குகிறார் புத்தர். புலன்களில் பார்வையே அதிக செயலூக்கம் மிக்கதாக இருக்கிறது. ஒரு பொருளைப் பார்த்ததும் அதன் மீது அடையாள அட்டையை ஒட்டிவிடுகிறோம். நகரத்து சாலைகளில் பயணிக்கையில் வாசிக்காமல் பெயர்ப்பலகைகளை வெறுமனே பார்க்க முடிகிறதா? தன்னியல்பில் நிகழும் அச்செயலே அறிந்துணர்வு. அவ்வாறான ஆறு புலன்வழி அறிதலும் அதோடான அடையாளப்படுதலும் அறிந்துணர்வு எனும் கந்தமாகிறது.

மன உருவாக்கம் குறித்து வெவ்வேறு சூத்திரங்களில் புத்தர் மிக விரிவாக விவரிக்கிறார். கந்தங்களில் நுண்மையானது அதுவே. நோக்கம் அல்லது intent என்பது ஓரளவு நெருக்கமான பொருள் தருகிறது. பழக்கங்களால் ஆன அன்றாட செயல்கள் முதல் வாழ்வின் முக்கிய முடிவுகள் வரை பின்னிருந்து இயக்குகிறது நோக்கம் எனும் மன உருவாக்கம். இயல்பாக விடப்படும் ஒவ்வொரு மூச்சிலும் இது பொதிந்துள்ளது. நான் யார் என்ற கேள்விக்கு மன உருவாக்கங்களைக் கொண்டே பெரும்பாலும் விடை பகர்கிறோம். நோக்கத்தால் தான் உயிர்களின் பிறப்பு நிகழ்கிறது, தன்னுணர்வு தோன்றுகிறது என்பது புத்த வாக்கு.

தன்னுணர்வு (consciousness) கந்தங்களில் ஒன்றாக வைக்கப்படுவது விசித்திரமானது. கட்டுகளில் ஒன்றாக மட்டுமின்றி அதுவே கட்டப்பட்டதாகவும் இருக்கிறது. புறப்பொருளும் புலனுறுப்பும் இணையும் புள்ளியில் ஒவ்வொரு கணமும் தன்னுணர்வு தோன்றி மறைகிறது. கண், காது, மூக்கு, நா, உடல், மனம் என ஒவ்வொரு உறுப்பையும் சார்ந்து தன்னுணர்வுகள் எழுகின்றன. கண்களும் வடிவமும் சந்திக்கும் புள்ளியில் கண்-சார் தன்னுணர்வும், காதுகளும் ஓசையும் இணையுமிடத்து காது-சார் தன்னுணர்வும் என்றிவ்வாறாக அது தோற்றமுறுகின்றது. 

தனித்த இருப்பாக நான் இல்லை. நான் என்பது தூலமானதும் அல்ல. நான் என்பதோர் அனுபவம். அவ்வனுபவத்தின் ஐந்து கூறுகள் இவை. இவ்வைந்து கந்தங்கள் கட்டமைக்கும் அனுபவமே நான் என உணரப்படுகின்றது. இவ்வைந்தன்றி வேறேதும் இங்கில்லை. நான் என்பது இவற்றாலான தொகுப்பே. 

ஒரு சமயம் ராதா புத்தரிடம் கேட்கிறார். “இருப்பு இருப்பு என்று எல்லாரும் சொல்கிறார்களே அது என்ன ஐயா?”. புத்தரின் பதில் இவ்வாறிருக்கிறது: “வடிவம், உணர்ச்சி, அறிந்துணர்வு, மன உருவாக்கம், தன்னுணர்வு என இவற்றின் மீது எழும் பற்று, விருப்பு, வேட்கை. அங்கே சிக்குறும்போது, கட்டுறும்போது அது இருப்பாகிறது.”

கந்தங்கள் குறித்த இந்தப்  பார்வை இரண்டாவது தம்ம உரையிலேயே புத்தரால் வெளிப்படுத்தப்படுகின்றது. கந்தங்களால் கட்டப்பட்ட இந்த நான் நிலையற்றதாகவும் ‘என்’ கட்டுப்பாட்டில் இல்லாததாகவும் இருப்பதை மீண்டும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வருகின்றார்.

என் முகம், அதன் வடிவம் இவ்வாறிருக்க வேண்டும்; மகிழ்ச்சி அமைதி என அந்தந்த நேரத்துக்கான உணர்ச்சிகளைத் தேர்ந்தெடுக்க இயலவேண்டும்; வீட்டருகில் புதுக்கட்டிடம் கட்டப்படும் ஓசையை காதுகள் அறிந்துணராதிருக்க வேண்டும், நாசி நான் விரும்பாத வாசத்தை நுகராதிருக்க வேண்டும்; பழக்கங்களால் ஆன மன உருவாக்கங்களில் எது வேண்டும் என நான் தீர்மானிக்க வேண்டும்; தன்னுணர்வு இவ்வாறாக ஒளிரட்டும் என தீர்மானிக்க முடிகிறதா என அனாத்தலக்கன சுத்தத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. 

இந்த ஐந்து கந்தங்களும் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் அவற்றால் விளையும் துக்கத்தை அவ்வப்போதே சரி செய்துகொள்ளலாமே. அது இயலாதபோது அவ்வைந்தும் தானல்ல என்றாகிறது. 

அடுத்ததாக இந்த ஐந்த கந்தங்களின் நிலையாமையை சுட்டி அதனால் விளையும் துக்கம் குறித்து விளக்கப்படுகின்றது. பத்து வருடங்கள் முன்பு இருந்த வடிவம் இப்போது இல்லை; நேற்று இருந்த உணர்ச்சிகள் இப்போது இல்லை; காலையில் கேட்ட பறவையொலிகள் எங்கே; பிறந்தது முதல் மாற்றமே இல்லாத மாற்றவே இயலாத நோக்கம் ஏதும் இருக்கிறதா? எல்லாமும் மாற்றமுறும்போது இவற்றில் எதை நான், எனது, எனதுடைமை எனக்கொள்வது?

ஐந்து கந்தங்களால் ஆனதும், உண்மையில் அற்றதுமான இந்த ‘நான்’-ஐ, தன்னின்மையைக் கோர்க்கும் நூலாகச் செயல்படுவது எது? ஷென்பா என திபெத்திய பௌத்த நூல்கள் அதனைக் குறிப்பிடுகின்றன. தூண்டில் முள்ளாக நெஞ்சின் சதைகளில் இறங்கி பற்றிப் பிடித்து சென்ற கணத்தின் நான்-ஐயும் இக்கணத்தின் நான்-ஐயும் கோர்த்துப் பிடிக்கிறது. கந்தங்களால் விளையும் அனுபவங்களை ‘எனது’, ‘எனது’ என விளித்து என்னைச் சமைக்கிறது. அதுவே பற்று.

இந்தப் பற்று என்பது செயலூக்கம் மிக்கது; செய்-வினை. பற்று தானாகத் திகழ்வதல்ல. பற்றப்படுவதால் தோன்றுவது. பற்றும், நான் என்ற அனுபவமும், அதனால் விளையும் துக்கமும் முயன்று அடையும் ஒன்றாகிறது. இதனாலேயே துக்க விடுதலையும் தன்னின்மை எனும் அனுபவமும் நேரெதிரான செயலால், முயற்சியால் அடைய இயல்வதாகிறது.

சம்யுக்த நிகாயம் நான்கு வகை பற்றுதல்கள் குறித்து விளக்குகிறது.  உணர்வெழுச்சிகளின் மீது பற்றுதல், கருத்தாக்கம் மீது பற்றுதல், பழக்கம் மீது பற்றுதல், சுயம் குறித்த கருத்து மீது பற்றுதல். 

இதில் நான்காவதான ‘நான் இத்தகையவர்’ என்ற கருத்து மீதான பற்றுதலையே புத்தர் முதன்மையாக எடுத்துக்கொள்கிறார். இந்தப் பற்றுதல் மேலும் நான்காகப் பகுக்கப்படுகின்றது.

  1. கந்தங்களில் ஒன்றைத் தான் எனப் பற்றுதல்
  2. கந்தங்களைத் தன் உடமையாகக் கொள்வதால் எழும் பற்று
  3. தனக்குள் கந்தங்கள் இயங்குவதாக எண்ணுதல்
  4. கந்தங்களின் இயக்கத்தினுள் தான் இருப்பதாக எண்ணுதல்

சார்பெழுச்சி என்பது புத்தத்தின் அடிப்படை தரிசனம். கந்தங்களைச் சார்ந்து நான் எனும் அனுபவம் எழுவதை வெவ்வேறு விதங்களில் விளக்குகிறார் புத்தர். பற்று என்ற ஒன்றைச் சார்ந்தே கந்தங்கள் சேர்ந்து, தன்னிருப்பற்றதும், நிலையற்று மாற்றமுற்றபடியே நிகழ்வதுமான நான் எனும் சுயம் தோன்றுகின்றது.

இதனை உய்த்தறிவதே தம்மத்தின் பாதை. அப்பாதையில் செல்வோரை சோதனைக்குட்படுத்த மாரன் எப்போதும் காத்திருக்கிறான். சார்புக்காரணிகளின் கூட்டியக்கத்தாலேயே அனைத்தும் தோன்றுகின்றன, சுழியத்தின் வட்டக்கோட்டை அந்த இயக்கமே தோற்றுவிக்கிறது என்பதை உணர்ந்தோரை மாரனால் எதுவும் செய்ய முடிவதில்லை.

“கங்கையில் மிதக்கும் நுரை போன்றது வடிவம். அடைமழைக் காலத்தில் வானிலிருந்து வீழும் பருத்த நீர்த்துளி போன்றவை உணர்ச்சிகள். பின்வெயில் நேரத்தில் அசைவுறும் கானல் நீரின் பொய்த்தோற்றம் போன்றவை அறிந்துணர்வுகள். அதிவலுவான குடன்மரம் ஒன்றைத் தேடி கோடாரியோடு காட்டிற்குள் செல்லும் ஒருவன் இரண்டாள் உயரம் நிற்கும் பெரியதொரு வாழை மரத்தைக் கண்டு அதன் கொழுத்த நடுத்தண்டை வெட்டி எடுத்து மேல்தோலை நீக்கி நீக்கி குடன்மரப் பகுதியைத் தேடுவது போன்றவை மன உருவாக்கங்கள். நகரத்தின் சாலைகளில் வித்தைக்காரன் காட்டும் மாயாஜாலம் போன்றது தன்னுணர்வு. இதனை சரியாகப் புரிந்து இவற்றின் உள்ளீடற்ற தன்மையைக் காணும் ஒருவன் ஐந்து கந்தங்கள் மீதான மயக்கத்திலிருந்து தெளிவுறுகிறான். ஒரு பைத்தியத்தின் உளறலைப்போல் இவை சாரமற்றவை என அறிக.” என்கிறார் புத்தர்.

ஒருமுறை வாஜிரா எனும் பிக்குணி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது புத்தரை சோதித்து தோற்றுப்போன மாரன் மீண்டும் தோன்றுகிறான். அவளது தியானத்தைக் கலைக்க எண்ணி கேள்விகள் தொடுக்கிறான்.

“இந்த உயிரிருப்பு யாரால் தோற்றுவிக்கப்பட்டது? இதனை ஆக்கியவன் எங்கே? உயிரிருப்பு எங்கிருந்து தோற்றம்கொண்டது? அது எங்கே இல்லாமலாகிறது?”

வாஜிரா மாரனுக்கு பதிலளிக்கிறார்:

“இருப்பு என எதனைச் சொல்கிறாய் மாரா? கட்டப்பட்டவையன்றி இங்கே வேறேதுமில்லை. பல்வேறு பாகங்களைச்  சேர்த்து தேர் ஒன்று கட்டியெழுப்பப்படுவதுபோல் கந்தங்களால் உயிரிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதனை அறியாதபோது துக்கம் தோன்றுகின்றது.”

ஆக, எது நிலையற்றதோ அது துன்பம் விளைவிக்கிறது. வடிவம், உணர்ச்சி, அறிந்துணர்வு, மன உருவாக்கம், தன்னுணர்வு ஆகிய ஐந்து கந்தங்களும் உடைமையாகக் கூடியவை அல்ல. எது உடைமை அல்லவோ அதனைத் துறந்துவிடும்படி அலகதூபமசுத்தம் உரைக்கிறது. துறத்தல் என்றால் ’அது எனது’ என்ற பற்றை விட்டுவிடுதல். ஐந்து கட்டுகளையும் துறந்தபிறகு எஞ்சுவது என்ன? துறத்தலின் முடிவில் ‘நான்’ அழிந்துவிடுமா?

நான் என நாம் கொள்வது கட்டப்பட்ட ஒன்று என்றும் அது மாறிக்கொண்டே இருப்பதென்றும் உணர்ந்த பின் நான் என்பதே மறைந்து விடுவதில்லை. இல்லாத ஒன்றுக்கு இடப்படும் வெறும் பெயராக, சுழியத்தின் காரணியமாக, இல்லாத காலிப்பெட்டியாக  நான் தொடர்கிறது. செலுத்தப்பட்ட அம்பு முன்னுந்திய எய் விசையால் இன்னும் கொஞ்சம் சென்று வீழ்கிறது என்றென்றைக்குமாக. அதுவே நிப்பானம் என புத்தம் உரைப்பது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “சுழியத்தின் காரணியம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.