அசோகமித்திரனின் கதையுலகம்

வெகுஜன இதழ்களில் அன்றாட அரசியல், சினிமா, பக்திச் செய்திகளுக்கு நடுவே சாதாரணமாக வெளியான சிறுகதைகளின் வழியாகவே அசோகமித்திரன் என்போன்ற பொது வாசகர்களுக்கு அறிமுகமானார். எந்தவிதமான சிறப்பியல்புகளும் இல்லாத, எவ்வகையிலும் அசாதாரணம் எனத் தோன்ற வைக்காத கதைமாந்தர்களும், சிறுகதையில் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் எதிர்பாராத திருப்பங்களோ, புதிர்முடிச்சுகள் அவிழும் முடிவுகளோ இல்லாத கதையோட்டமும் முதல் வாசிப்பில் பலரையும் ஈர்ப்பதில்லை. ஆயினும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற பிற முக்கியப் படைப்பாளிகளின் எழுத்துக்கள் வழியாக அசோகமித்திரனின் இலக்கிய முக்கியத்துவத்தை இன்றைய வாசகர்கள் தொடர்ந்து அறிந்து கொள்கிறார்கள்.

சிறுகதையின் மாஸ்டர் எனப் போற்றப்படும் அசோகமித்திரனின்  மேதைமையை நகைமுரணாக அவரது நாவல்கள் தான் எனக்கு உணர்த்தின. 18வது அட்சக்கோடு, தண்ணீர் மற்றும் கரைந்த நிழல்கள் போன்ற நாவல்கள் அவரது பெரும்பாலான கதைகள் நிகழும் செகந்திராபாத் மற்றும் சென்னை நகர்ப் பின்புலத்தையும் அவர் காட்டக்கூடிய கதைமாந்தர்களையும் நமக்கு நன்கு அறிமுகப்படுத்திவிடும். ஒரு பிரம்மாண்டமான ஓவியத்தை முதலில் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்து அதன் முழுக் காட்சிப்புலத்தையும் உள்வாங்கிக்கொண்ட பின்னர், அதனை நெருங்கிச் சென்று ஓவியனின்  ஒவ்வொரு வண்ணத் தேர்வையும் தூரிகையின் தீற்றலையும் புரிந்துகொள்வது போல, நாவல்களின் வழியே அசோகமித்திரன்  தீட்டுகின்ற அந்த ஒட்டுமொத்தச் சித்திரத்தை அறிமுகம் செய்துகொண்டது அவரது சிறுகதைகளைப் புரிந்துகொள்ள உதவும். 18வது அட்சக்கோடு நாவல் காட்டிய லான்சர் பாரக்ஸ் பின்புலத்தோடு ஐநூறு கோப்பைத் தட்டுகளின் சையது மாமாவை புரிந்துகொள்வது இன்னும் எளிதாகிறது.  

அசோகமித்திரன் கதைகளில் நாம் தொடர்ந்து காண்பது அன்றாட வாழ்வின் சாதாரணமானவர்களின், சாதாரணமானவைகளின் சித்தரிப்பு. ஆனால் பொதுப்பார்வைக்கு எந்தவித சலனத்தையும் ஏற்படுத்திவிடாத அந்த சதாரண நிகழ்வுகளில் கூட, அதனுள்ளுறையும் நுண்ணிய மாற்றங்களை   அவரால் கண்டுகொள்ள முடிகிறது. அதற்கும் மேலாக அவர் கண்டுகொள்ளும்  அந்த மின்னல் தெறிப்பு போன்ற கணங்களை அதே உயிர்த்துடிப்போடு நமக்கு கடத்திவிடவும் அவரால் முடிகிறது.  

வாழ்விற்கென்று எந்த அர்த்தமுமில்லை எனக்கூறும் இருத்தலியல்வாதம்(Existentialism) தனிமனிதர்களே தங்களது செயல்கள் மூலம் அந்த அர்த்தத்தை உருவாக்கிகொள்ளவேண்டும் என்கிறது. இருத்தலியலின் அந்த கசப்பு எப்போதுமே வெளிப்படும் அ.மியின் கதைகளில் அவரது  சாதாரணர்கள் உருவாக்கும் அந்த அசாதாரண கணங்கள் தான் அவர் கதைகளை தனித்துவமாக்குகின்றன. அவைதான் டகர் பாயிட் காதர் புலியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் தருணமாகவோ(புலிக்கலைஞன்), கைக்குழந்தையை வீட்டில் தனியே விட்டுவிட்டு அரும்பாடுபட்டு பிடித்த தண்ணீரை கன்றுக்குட்டி குடிக்க அனுமதிப்பதாகவோ(விடிவதற்குள்) அமைகிறது. உணர்ச்சிகரணமான கதைசொல்லல் இல்லாத கதைகளிலும் கூட அ.மியால் இதே மாயத்தை நிகழ்த்திக் காட்டி  விட முடிகிறது. ஓட்டலில் காபி வாங்கி விட்டு அது ஆறிப்போகும் நேரத்திற்குள் தன்னைப் பற்றி, தன் நண்பனைப்பற்றி, காந்தியைப் பற்றி ஒருவன் சிந்திக்கும் காந்தி,  நகல் எடுக்கச் சென்ற இடத்தில் தன் வாழ்க்கையை எண்ணிப்பார்த்து அந்த நகலகத்திலேயே வேலைக்குச் சேர யோசிக்கும் நகல், வருடத்தின் கடைசி நாளன்று டைரியைப் பிடித்துக்கொண்டு பேருந்தில் வரும் ஒருவனைப் பார்த்தவுடன் அவனது முழுவாழ்க்கையையும் மனதில் ஓட்டிப் பார்க்கும் டயரி போன்ற கதைகள் இதற்கு உதாரணமாகத் தோன்றுகின்றன.   

அசோகமித்திரனின் காந்தி,  ஐந்நூறு கோப்பை தட்டுகள் மற்றும் நகல் ஆகிய மூன்று சிறுகதைகளை முன்வைத்து அவரது கதையுலகைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். இந்த மூன்று கதைகளுமே எவ்வித திட்டமிடலுமின்றி தேர்ந்தெடுத்தவை போலத் தோன்றினாலும், ஒருவகையில் இவை அசோகமித்திரனின் ஒட்டுமொத்த கதையுலகையும் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்கின்றன எனத் தோன்றுகிறது. அவரது மிகப் பெரும்பாலான கதைகளைப் போல கீழ் மத்தியத்தர சாதாரணர்களின், வாழ்வின் ஒரு சாதாரண கணத்தை மட்டும் சொல்லும் ‘நகல்’,  ஹைதராபாத் நிஜாம் ஆட்சிப் பின்னணியில் எளிய தனிமனிதனின் கதையிலிருந்து அன்றைய வரலாற்றை எழுதும்  ‘ஐந்நூறு கோப்பை தட்டுகள்’ மற்றும் அவரது வழக்கமான பாணிக்கு மாற்றாக எழுதிய கதைகளுக்கு உதாரணமாக ‘காந்தி’ என வகைக்கொன்றாக இவை அமைகின்றன.

*

காந்தி : கசக்கும் உண்மைகள் 

“மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா?” என்று காந்தியின் வாழ்க்கையை அசோகமித்திரன் தொகுத்துக் கூறுவது, எந்த வரலாற்று ஆய்வு நூல்களின் வாயிலாகவும் நாம் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ளக் கூடியதை விடவும் ஆழமானதும் தீவிரமானதுமான பார்வையாகும்.  

காந்தி சிறுகதை அவரது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட கதைவடிவமும் உள்ளடக்கமும் கொண்டது. அ.மியின் ஒட்டுமொத்தக் கதையுலகம் தரும் பின்புலத்தில், காபிக்கு முன் உட்கார்ந்து சுய கசப்பிலிருந்து காந்தியக் கசப்பு வரை அத்தனையையும் எண்ணிப்பார்க்கும் ஒரு கதாப்பாத்திரம் நமக்கு வியப்பளிப்பதில்லை. வழக்கமான சிறுகதை வடிவை மீறிச்செல்லும் இந்தக் கதையின் வடிவைக் குறித்தும், அந்தக் காலகட்டத்தில் பல எழுத்தாளர்கள் அதற்கு முயன்றதைக் குறித்தும்  ஜெயமோகன்  எழுதி இருக்கிறார். 

இந்தக் கதையில் கசப்பை அவன் தன் சுய அடையாளத்திற்காக, அது தரும் பெருமைக்காக வலிந்து தன்மேல் ஏற்றிக் கொள்கிறான். முதலில் அவ்வடையாளத்தால் சங்கோஜமும் பின் பெருமிதமும்  அடையும் அவனுக்கு இறுதியில் அது மரத்துப் போன உணர்வாகவும் மாறி விடுகிறது. அந்தக் கசப்பு அவனுள்ளிருந்து வெளியேறி எல்லா இடங்களிலும் பரவுகிறது. அதுவே அவன் நண்பன் செய்த துரோகத்தின் கசப்பாக, காந்திய வெறுப்பின் கசப்பாக மாறி, கடைசியில் சுய கசப்பாக முடிகிறது. இந்தக் கதையை கசப்பின் பார்வையில் அல்லது வெறுப்பின் பார்வையில் என பல தளங்களில் பார்க்கலாம் என்றாலும், காந்தியை இன்னும் அணுக்கமாக உணர வைத்ததற்காகவும் இது முக்கியமான கதை என்று தோன்றுகிறது. கசப்பை விரும்பி தன்மேல் ஏற்றிக் கொண்டே இருந்த அவனுக்கு, அன்று அதுவே கசந்த உணர்வாகவும் மாறுகிறது. அங்கிருந்து  உண்மை கசப்பானது எனத் தொடங்கி, நட்பு கசந்ததை  எண்ணிப்பார்த்து தன்னைப் பற்றிய புரிதலில் முடிக்கிறான். 

இந்தக் கதையில் காந்தி பிரதானமல்ல தான். ஆனால் ஒரு நல்ல கதை பல தளங்களில் வாசிக்க வாய்ப்பு தருகிறது. அந்த வகையில் இந்தக் கதை காந்தியை இலக்கியம் மூலம் இன்னும் நெருங்கிச் செல்ல உதவுவதால் அந்தக் கோணமும் உகந்ததாக இருக்கிறது. வரலாற்றையோ அதன் நாயகர்களையோ எழுதி வைக்கப்பட்ட வரலாற்றுச் செய்திகள் மூலம் புரிந்து கொள்வதை விட, இலக்கியத்தின்  வழியே இன்னும் ஆழமாக நம்மால் நெருங்கிச்சென்று உணர முடியும். மகாபாரதத்தில் வியாசன்  காட்டும் கிருஷ்ணனும்,  போரும் அமைதியில் தால்ஸ்தோய் காட்டும் நெப்போலியனும் அவர்களைப் பற்றிய எந்த வரலாற்று ஆய்வு நூல்களையும் விட இன்னும் தெளிவாகவும் நெருக்கமாகவும் இருக்கிறார்கள். ஜெவின் மெல்லிய நூல், எஸ்.ராமகிருஷ்ணனின் இரு கிழவர்கள் மற்றும் அ.மியின் இந்தக் கதையும் அவ்வாறே காந்தியை அவரது பலங்களோடும் பலவீனத்தோடும் சேர்த்து புரிந்து கொள்ளவும் அவரை நோக்கி இன்னும் சில அடிகள் முன்செல்வதற்கும் வாய்ப்பளிக்கின்றது.

“தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் – மாற்றம் கொள்ளக் கூடியவன் – உயரக்கூடியவன் – என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை  இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர்” – காந்தியைப் பற்றி நாம் அறிய நேரும் பல எதிர்மறைச் சித்திரங்களுக்கு இதைவிடவும் சிறந்த பதிலொன்றைக் கூறிவிட முடியுமாவெனத் தெரியவில்லை. 

நட்சத்திரங்கள் மின்னும் வானின் பின்னணியில் ஒரு சிம்னி விளக்கொளியில் ஒரு கணமே தோன்றி மறைந்த சிறுவனின் பரிசுத்த முகத்தில் கரைந்து மனமுருகிக் கண்ணீர் விடும் நண்பன் எப்படி காந்தியைப் பற்றி அவ்வளவு வெறுப்புடன் விஷத்தைக் கக்க முடியும் என எண்ணத் தொடங்கி, தன் பிரியமான பூனைக்குட்டியோடு பாசத்தோடு நடந்துகொள்ளும் ஒருவன் தான் முன்பின் பார்த்தே இராத மனிதர்களைக் கொன்றழிக்கும் வெறுப்பு வரை சிந்தித்து, இறுதியில் தன் மனதில் ஊறும் சுய வெறுப்பையும் கசப்பையும் அவன் கண்டு கொள்கிறான். அந்தப் பின்னணியில், தான் எதிர்த்த ஆங்கிலேயர்களிடம் கூட வெறுப்பைக் காட்டாத காந்தியும், அசைவ ஓட்டலிலும் கூட புன்னகையோடு இருக்கும் புகைப்படக் காந்தியும் அவன் நெஞ்சில் இன்னும் அழுத்தம் கொள்கின்றனர்.  

காந்தியை நாம் புரிந்து கொள்ளும் இடமென்பது உண்மையில் நம்மை நாம் புரிந்து கொள்ளும் இடமும் கூடத்தான்.

*

ஐநூறு கோப்பைத் தட்டுகள் : வாழ்வின் கனிவு

ஒரு இலக்கியப் படைப்பின் அடிப்படையான சாராம்சம் எது? அந்தப் படைப்பின் வழியாகத் திரண்டு வரும் நீதியுணர்ச்சியும் தர்மமுமா, அந்தப் படைப்பு முன்வைக்கும் கருத்தியலா அல்லது அதன் அழகியலா?  இந்தக் கேள்வியோடு அசோகமித்திரனின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான ஐநூறு கோப்பைத் தட்டுகள் கதையை அணுகலாம்.

கதையின் முதல் வரியில் வரும் ‘ஸையது அப்துல் காதர் அண்ட் கம்பெனி’-யின் ஸையது, இறுதி வரியில் வரும் அந்த முட்டாள் புறா, இவர்களுக்கிடையில் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும் ஸையது மாமா – என ஓர் ஒற்றைச்சித்திரமாக இந்தக்கதை நெஞ்சில் பதிந்து போயிருக்கிறது. ராமன் ஆண்டாலும் ரஹீம் ஆண்டாலும் தனக்குப் பாதகம் இல்லை எனத் தன் வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அந்த ஸையதையும், இவ்வளவு குழந்தை குட்டிகளை வைத்துக்கொண்டு சிறகையும் ஒடித்துக்கொண்டு ஆனால் ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிற அந்த முட்டாள் புறாவையும் இரு ஆடிகளென நிறுத்தி, அவற்றில் ஸையதை பிரதிபலிக்கவைத்து அவரது வாழ்க்கையின் அர்த்தமின்மையை இந்தக் கதையில் காட்டுகிறார் அசோகமித்திரன்.   

ஒரு சிறுகதையை அந்தக் கதைக்குள் ஆசிரியர் கொடுத்திருப்பதை மட்டுமே கொண்டு மதிப்பிடுவதே சரியான முறை. ஒரு எழுத்தாளனோ அல்லது விமரிசகனோ அப்படிப் பார்ப்பதே சரி. ஆனால் ஒரு வாசகனாக இந்தக்கதைக்கு கொஞ்சம் வெளியேயும் சென்று, அ.மியின் ஒட்டுமொத்தக் கதையுலகில் இந்தக் கதை சென்று பொருந்துமிடத்தையும், இந்தக் கதைக்கு முன்னொட்டும் பின்னொட்டுமாக அவர் எழுதிய மற்ற கதைகளையும் சேர்த்துப் பார்ப்பது இன்னும் சிறப்பான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றது.  வாழ்விலே ஒரு முறை, சில்வியா போன்ற சிறுகதைகளிலும் 18வது அட்சக்கோடு நாவலிலும் செகந்தரபாத்தின் லான்சர் பாரக்ஸ் பின்புலத்தில் அமைந்த அ.மியின்  இளமைக்கால வாழ்வை அடைப்படையாகக் கொண்ட கதைகள் உண்டு. அந்தக் கதைகள் அன்றைய ஹைதராபாத் நிஜாம் அரசின் கீழிருந்த வாழ்க்கைச் சூழல், இந்திய விடுதலையை ஒட்டி அங்கு நிகழ்ந்த மாற்றங்கள், சுதந்திர இந்தியாவின் ராணுவத் துருப்புக்களுக்கும் நிஜாம் அரசுக்குமிடையேயான போரில் நிஜாமுக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட ரஜாக்கர் படைகள் மற்றும் அவர்களது அடக்குமுறைகள் ஆகியவைகளைப் பற்றி ஒரு தெளிவான பார்வையை நமக்குக் கொடுக்கின்றன. 

இந்த விரித்தெடுக்கப்பட்ட வாசிப்பின்  பின்னணியில், பணத்தின் மீது அசிரத்தை வந்து தாம் ஒரு சாமியாராகக்கூட ஆகிவிடலாம் என்று தோன்றுமளவிற்கு பணத்தை சம்பாதித்த ஸையதுக்கு, அந்த வயதில் முஸ்லிம்களுக்குப் புத்துயிர் அளித்து உலகனைத்தும் ஆளவைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது எனத் தோன்றுவதையும், அதன் பொருட்டு அப்படியான ஒரு ரஜாக்கர் குழுவைத் தயார் செய்வதற்காகத் தன் செல்வத்திலிருந்து குடும்பம் வரை அனைத்தையும் அவர் இழக்க நேரிடுவதையும் இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். தன் தவறான முடிவுகளாலும் வாழ்வின் அபத்த முரண்களாலும் அனைத்தையும் இழந்து நிற்கும் ஸையது, உயிர் நண்பனின் மறைவிற்குப் பின்னர் திக்குத் தெரியாமல் கலங்கி நிற்கும் அவனது பதின்வயது மகனுக்குக் கூட உதவ முடியாத நிலையில் நிற்கிறார். நாராயணனிடம் வீடு பார்த்துத் தருவதாகக் கூறி வாங்கிய 10 ரூபாயைக் கூட தனது செலவுக்குப் பயன்படுத்தி விட்டு, அவன் முன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் கையறும் நிலை ஸையதுக்கு. அந்த முட்டாள் புறாவின் வடிவில், ரஜாக்கர் படைக்காகப் போரிடச் சென்று காணாமல் போன தன் மூத்த மகனை, பின் நாராயணனைப் பார்க்கும் ஸையதுக்கு, தவறுதலாக வந்த அரசாங்கக் கடிதம் தந்த சில நிமிட மீட்பும் பின்னர் அது தனக்கில்லையென்ற நிதர்சனத்தின் சம்மட்டி அடியும் தான் அந்த ஆடியில் அவர் முகத்தையே காட்டியிருக்கக் கூடும். 

வெள்ளிடைமலை என்றொரு சொல் நம் மொழியில் உண்டு. கண்ணை மறைக்கும் காரிருள் பொழுதிலும் ஒரு கணநேர மின்னற்பொழுதில் தொலைவிலிருக்கும் பிரம்மாண்டமான மலையை முழுதாகவும் தெளிவாகவும் நம்மால் கண்டுவிட முடிவதைக் குறிக்கும் அபாரமான உவமை அது. அ.மியின் கதைகளில் பல இடங்களில் இந்த வெள்ளிடைமலை தரிசனங்களைக் காணமுடியும். இந்தக் கதையில் ஒரு சின்னஞ்சிறு குறிப்பாக வரும் ஸையதின் மருமகள் அதற்கான மிகச்சிறந்த உதாரணம். பெண்களுக்கென்று மிகக் கட்டுப்பாடான விதிகள் கொண்ட முஸ்லீம் சமூகத்தில், நிஜாம் ஆட்சிக்காலத்தில், அத்தனை கலவரங்களுக்கு மத்தியில், ஆண் வேடமிட்டுக் கொண்டு இரவில் கை ரிக்சா இழுக்கும் ஒரு பெண் என்ற ஒற்றைச் சித்திரத்திலிருந்து நம்மால் வெகுதொலைவுக்குச் செல்ல முடியும்.  

நம் வாசிப்பை இந்தக் கதைக்குள் இந்த இடத்தில் நிறுத்திக் கொண்டால் கூட இருத்தலியல் கதைகளின் எல்லைக்குள் நின்று, நொடிப்பொழுதில் தடம் மாறிப்போகும் அர்த்தமில்லாத வாழ்க்கையை ஸையது மாமாவின் வழியே புனைந்து காட்டும் அ.மியின் மேதைமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். மாறாக இந்தக் கதையின் அடுத்த பகுதியென அப்பாவின் சிநேகிதர் கதையையும் சேர்த்து வாசிப்போமென்றால், நாம் காணக்கூடுவது அந்தப் புறாவைப் போன்று தனது கள்ளமின்மையாலேயே மீண்டு மேலெழுந்து வந்து விடும் நாராயணனை; அவன் விரும்பாத போதும் தானே வற்புறுத்தி அவனது  புதிய வீட்டுக்கு வரும் ஸையது மாமாவை; ஒரு போதும் ஸையது மாமாவை மன்னிக்க மாட்டாள் என நினைத்த நாராயணனை “உங்களையெல்லாம் விட்டுட்டுப் போக அவருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ” எனக் கேட்டு அவனை வியக்க வைக்கும் அவனது தாயை; அவர்கள் வழியாக அர்த்தமில்லாத வாழ்க்கையிலும் தனிமனிதர்களின் தனிப்பட்ட முடிவுகளினாலும் செயல்களினாலும் அர்த்தத்தை உருவாக்கிக் காட்டும் அசோகமித்திரனை.  

ஸையதின் வாழ்க்கையை அ.மி எழுதும்போது, அவரது தவறான முடிவுகளை நியாயப்படுத்துவதில்லை, ஆனால் அவரை குற்றவாளியாகவும் காட்டுவதில்லை. அந்த வயதான மனிதரின் கையறு நிலையை, அவரது மகனைத் தேடும் ஏக்கத்தை, நாராயணனுக்கு உதவ முடியாத அவமானத்தை ஆழ்ந்த கனிவோடு பதிவு செய்கிறார். அதேபோல் நாராயணனின் தாயின் மன்னிப்பும், புறாவின் கள்ளமற்ற வாழ்வும் கூட அந்த கனிவின் வெளிப்பாடுகள்தான்.

ஒரு இலக்கியப் படைப்பின் சாரமென எழுந்து வருவது வைக்கம் முகம்மது பஷீர் முன்வைக்கும் நீதி உணர்ச்சியா, சிவராம காரந்த் சொல்லும் தர்மமா அல்லது காண்ட் கூறு அழகியலா என்ற தேடிக்கொண்டே இருந்த ஜெயமோகன் இறுதியில் அது கனிவு என்ற விடையைத் தனது குரு நித்யாவிடம் இருந்து அறிந்துகொண்டதாக ஆழ்நதியைத் தேடி நூலில் குறிப்பிடுகிறார். மகத்தான ஆக்கங்களில் பொங்கியெழும் அறச்சீற்றமாகவும், மானுடர் மேல் கொண்ட கருணையாகவும் வெளிப்படும் அதே கனிவு மறுபுறம் அவர்கள் கொண்ட துயராகவும் அதன் விளைவான கசப்பாகவும் கூட வெளிபடக்கூடும் என்கிறார். இருத்தலியல் காலத்தில் எழுதப்பெற்ற பல படைப்புகள் இன்று காலாவதியாகிப் போய்விட்டாலும் கூட, இன்றளவும் அசோகமித்திரனின் கதைகள் நமக்கு நெருக்கமாக இருப்பதன் காரணம் அவர் கதைகளில் அத்தனை கதாப்பாத்திரங்களின் ஊடாகவும் வெளிப்படும் அவரது கனிவுதான்!  

*

நகல் : சமரசத்தின் கணம்

அசோகமித்திரனின் கதைகளுக்கே உண்டான இலக்கணங்கள் நிரம்பிய கதை இது. நகல் எடுக்கக் கட்டணம் குறைவென்பதற்காகத் தன் வீட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் நகலகத்தைத் தேடி வரும், மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, சிபாரிசு இருந்தும் கல்லூரியில் இடம் கிடைக்காத அளவிற்கு மதிப்பெண் எடுத்த  ஒரு ‘சாதாரண’ பெண் பார்வதி. அவள் அந்த நகலகத்தில் காத்திருக்கும் சில மணி நேரப்பொழுதுகளில் அவளது மன ஓட்டம் அந்த நகலகத்தைப் பற்றி, அங்கு வேலை செய்யும் பெண்களைப் பற்றி, நகலெடுக்கக் கட்டுக்கட்டாகப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு வரும் கல்லூரி மாணவர்களைப் பற்றிப் பின்னிக்கொண்டு செல்கிறது.

தடி தடியான புத்தகங்களை நகல் எடுக்கும் கல்லூரி மாணவர்களோடு ஒற்றைப் புத்தகத்தோடு வந்த தன்னை ஒப்பிட்டு தன் எதிர்கால வாழ்வினை எண்ணிப்பார்க்கும் பார்வதி, அந்த என்ன ஓட்டங்களின் தொடர்ச்சியாக ஒரு கணத்தில் அங்கு வேலை செய்யும் பெண்களின் நகலாகத் தான் மாறிவிடலாம் என நினைக்கிறாள். கீழ் நடுத்தர வர்க்கச் சூழலில் வாழ நேர்ந்த, சராசரிக்கும் குறைவாக மதிப்பெண் வாங்கிய ஒரு பெண் நகலின் நகலாகத் தன்னை மாற்றிகொள்ளும் அந்த தருணத்தை அசோகமித்திரன் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். சாதாரணர்கள் தங்கள் லட்சியங்களையும் சுயத்தையும் துறந்து, யதார்த்தமான வாழ்க்கைச் சூழலோடு சமரசம் செய்துகொள்ளும் ஒரு தருணத்தைக்  காட்டக்கூடியதாக இந்தக் கதை அமைகிறது.

காந்தி கதையைப் போலத் தீவிரமான எண்ணச் சிடுக்குகளோ,  ஐநூறு கோப்பைத் தட்டுகளைப் போல விரிவான வரலாற்றுப் பின்னணியோ அல்லது  வாழ்க்கை முட்டி நின்று தவிக்கும் பெரும் சிக்கல்களோ இல்லாத, சாதாரணர்களின் அன்றாடத்தில் இருந்து பார்வதியின் மனதில் மாறுதல் நிகழும் ஒரு கணத்தை இதில் கதையாக்கி இருக்கிறார் அ.மி. புத்தகத்தின் நகலின் நகலை நகலெடுத்து நகலெடுத்துச் செல்வது, புத்தகத்தைப் போல தண்ணீரையும் நகலெடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது போன்று அவருக்கே உரித்தான அவதானிப்புகள் ரசிக்க வைக்கின்றன. 

அசோகமித்திரன் குறித்து ஜெ எழுதிய கட்டுரையில், அசோகமித்திரனின் எல்லா கதைகளையுமே மாறுதல் என்ற ஒற்றை வகைமைக்குள் அடைத்துவிட முடியும் என்கிறார். அ.மி  மாறுதல்களைச் சித்தரிப்பதுடன் நின்றுவிடுகிறார். அதை எந்தக் குறியீட்டுத் தளத்திற்கும் எடுத்துக் செல்வதில்லை என்பதே அவரது பலவீனம் என்றும் குறிப்பிட்டு இருப்பார்.  அந்த பலமும் பலவீனமும் ஒருங்கே வெளிப்படும் கதையென இது தோன்றுகிறது.               

**

கசப்பும் கனிவும்

ஐநூறு கோப்பைத் தட்டுகள் கதையில் வாழ்க்கையின் எல்லையில் முட்டி நிற்கும் சையதின் மேல் அசோகமித்திரன் காட்டும் கனிவுதான் காந்தி கதையில் கசப்பை உணர்ந்துகொள்ளும் கதாநாயகனின் மனஉளைச்சலையும், நகல் கதையில் பார்வதியின் சமரச தருணத்தையும் நம்மை ஆழமாக உணர வைக்கிறது. வெறும் விமர்சனமாகவோ தீர்ப்பாகவோ இல்லாமல், இருத்தலியலின் வறட்சியையும் மீறி  எளிய மனிதர்கள் மீதான ஆழ்ந்த புரிதலும் இரக்கமுமாக அது அவரது கதைகளில் வெளிப்படுகிறது. 

காந்தியில் கசப்பை உணரும் ஒருவன், சையதின் கையறு நிலை, பார்வதியின் சமரச தருணம் – இவையெல்லாம் நம் வாழ்வின் பிரதிபலிப்புகள். அசோகமித்திரன் நமக்கு விடைகளைத் தருவதில்லை. கேள்விகளைக் கூட எழுப்புவதில்லை. அவர் வெறுமனே காட்டுகிறார். ஆனால் அந்தக் காட்சியில் நம்மை நாமே புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

பூச்செடிகளில் தேனை எடுக்கும் சிறு தும்பிகளையோ, ஹம்மிங்பர்ட் போன்ற சிறு பறவைகளையோ கொஞ்சம் தள்ளி  நின்று  பார்க்கும்போது அவை எந்தவித அசைவுமில்லாது அந்தரத்தில் மிக இயல்பாக மிதப்பது போலவே இருக்கும். நெருங்கிச்சென்று பார்க்கையில் அவற்றின் சின்னஞ்சிறு சிறகுகள் காற்றில் அத்தனை விரைவாகத் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம். அசோகமித்திரனால் அந்தத் தும்பிகளையும் அவற்றின் சிறகடிப்பையும் மட்டுமல்ல, வாழ்வின் கசப்பையும் மீறி அவை எடுக்கும் அந்தத் தேனையும் கூட  எழுத்தில் கொண்டு வந்துவிட முடிகிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.