நாற்பதாவது மரணம்

FADE IN:

EXT. – NIGHT – A Street in chennai

INSET CARD: 2041 சென்னை நீலாங்கரை 

திரையில் இருட்டு. 

போலீஸ் ரேடியோவில் கரகர சத்தம் கேட்டு அடங்குகிறது. 

ஒரு போலீஸ் கார் மெதுவாக நகர்கிறது. மஞ்சள் வெளிச்சத்தில் உட்புறத் தெரு. ட்ரைவர் இருக்கையில் நாராயணன், 55 வயது மதிக்கத் தக்க கான்ஸ்டபிள். அவர் அருகே சப் – இன்ஸ்பெக்டர் முரளி. 45 வயது இருக்கும். 

நாராயணன் 

இந்தக் காலத்து பசங்க இப்படித் தான் சார். உங்க பையன் எங்கையாவது பிரண்ட்ஸ் கூட சுத்தப் போயிருப்பான். வந்திருவான்.

கார் மெதுவாக நகர்கிறது.

முரளி 

அவன் வளரும் போது  நான் வீட்லையே இல்லைங்க.அவங்க அம்மாவால சமாளிக்க முடியல. சின்ன வயசுல இருந்தே கெட்ட சகவாசம். அதுவும் தூத்துக்குடி போனான்னா அங்க லோக்கல் பொறுக்கி எல்லாம் இவனுக்குத் தெரியும். இப்ப பாருங்க, கரெக்ட்டா அங்க போய் காணாம போயிட்டான். 

நாராயணன்

ம்ம் 

முரளி

தூத்துகுடில நம்மளுக்கு வேண்டாதவன் வேற டிபார்ட்மென்ட்ல சில பேர் இருக்கான். ஒரு என்கவுண்டர் விஷயத்துல எல்லாரையும் புடிச்சு குடுத்தேன். இவன் மாட்டினா விட மாட்டானுங்க.

நாராயணன்

(புகைப்பது போல கை காட்டுகிறார்)

இந்த பழக்கம் எதுனா?

முரளி

எல்லாம் உண்டு. இது வரை ட்ரக்ஸ் பக்கம் போலன்னு நினைக்குறேன்

கார் ஒரு திருப்பத்தில் திரும்பி நாராயணன் திடீரென்று பிரேக் அடிக்கிறார். இருவரும் உற்றுப் பார்க்கிறார்கள்.

சற்றுத் தள்ளி அந்த காலியான தெருவில் விளக்கடியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அவர் அருகே கால்களை நீட்டிக் கொண்டு ஒருவர் சாய்ந்திருப்பது தெரிகிறது.

தெருவின் மற்றொரு புறம் இருட்டாக இருக்கிறது.

நின்று கொண்டிருப்பவர் (அருண்) அவர்களைப் பார்த்து கை காட்டுகிறார். அவருக்கு முப்பது வயதிருக்கும்.

கார் மெதுவாக அவர் அருகே போய் நிற்கிறது. முரளி கீழே இறங்குகிறார்.

முரளி 

என்ன பாஸ், என்ன ஆச்சு?

அருண் 

இவர் பைக் அங்க டிரெயினேஜ் பள்ளத்துல விழுந்திருச்சி. அடிபட்டிருக்கு.

முரளி, சாய்ந்து அமர்ந்திருந்தவர் அருகில் வருகிறார். 

முரளி

ஏம்பா பாத்து வரக் கூடாது?

அடிபட்டவர் 

எல்லா எடத்துலையும் இப்படி குழி தோண்டிப் போட்டா எப்படிங்க? எந்த ஸைனும் இல்ல.

அருண் 

நல்ல வேளை, எலும்பெல்லாம் எதுவும் உடையலீங்க. ஷாக்ல இருக்காரு. ஆம்புலன்ஸ் சொல்லிருக்கேன்.

முரளி 

உங்க பேரு? நீங்க அவர் கூட பைக்குல வந்தீங்களா?

அருண்

எம் பேரு அருண் சார். நான் இங்க சும்மா நின்னுட்டிருந்தேன் – எனக்கு அவரத் தெரியாது.

முரளி

(நாராயணனைப் பார்த்து )

ரெண்டு பேருக்கும் ட்ரிங்க்ஸ் செக் பண்ணிருங்க.

அடிபட்டவர் 

ஏங்க, நான் சத்தியமா எதுவும் அடிக்கலீங்க. இப்பிடி உங்க தப்ப எங்க மேல போடுறீங்க?

நாராயணன் கையில் ஒரு பையுடன் இறங்கி வருகிறார். முரளியின் போன் அடிக்கிறது. அவர் ஓரமாகப் போய் போன் எடுக்கிறார்.

முரளி

(போனில்)

என்னடி? ஏதாச்சும் தெரிஞ்சுதா?

(beat)

போலீஸ்ல மாட்னா நான்லாம் எதுவும் பண்ண மாட்டேன்னு ஏற்கனவே அவன் கிட்ட சொல்லியிருக்கேன்ல? உன்கிட்டையும் தான சொன்னேன்?

ஆம்புலன்ஸ் சத்தம் லேசாகக் கேட்கிறது. சிகப்பு நீல வெளிச்சம் முரளி முகத்தில் அடிக்கிறது. முரளி சற்றுத் தள்ளிப் போய் நிற்கிறார். (ஆம்புலன்ஸ் நாம் திரையில் காட்டவில்லை)

முரளி 

நான் எப்படிடி பேசுறது? தூத்துக்குடில எல்லாத்தையும் டிபார்ட்மென்டல் பகைச்சிட்டுத் தான இங்க வந்தேன்? எல்லாம் கொலைக்கு அஞ்சாதவனுங்க

சிறு இடைவேளைக்குப் பிறகு 

முரளி

சரி, நீ வை. எனக்கு வேலை இருக்கு.

முரளி திரும்புகிறார். நாராயணன் அருகில் நிற்கிறார். சற்றுத் தள்ளி அந்த விளக்கடியில் இன்னும் அருண் நின்று கொண்டிருக்கிறார்.

முரளி

என்ன நாராயணன்?

நாராயணன் 

சார், ட்ரிங்க்ஸ் செக் பண்ணிட்டேன். ஒண்ணும் இல்லை. ஆம்புலன்ஸ்ல அனுப்பிட்டேன்.

முரளி

அந்தாள் ஏன் இன்னும் இந்நேரத்துல அங்க நிக்குறான்?

நாராயணன்

அதான் சார். அவன் இந்த ஏரியாவே இல்லையாம்.

முரளி

பின்ன?

நாராயணன்

அண்ணா நகராம்

முரளி

இந்த நேரத்துல இங்க என்ன பண்றான்?

நாராயணன்

அதான் சார் கேட்டேன். ஒரு மாதிரி உளர்றான். ஆனா தண்ணில்லாம் எதுவும் இல்லை.

முரளி தள்ளி இருக்கும் அருணை மீண்டும் ஒரு முறை பார்க்கிறார். 

முரளி

வண்டில ஏற சொல்லுங்க.

நாராயணன்

அவனே போய்க்கிறேன்றான்.

முரளி

இந்த நேரத்துல எங்க போவான்? நாம கொண்டு போய் மெட்ரோல விட்டுர்றோம்னு சொல்லுங்க. போற வழியில கேட்டுக்கலாம்.

நாராயணன் நடந்து போய் அருணிடம் பேசுகிறார். பிறகு காரில் ஏறி வண்டியைக் கிளப்புகிறார். முரளி முன்னால் ஏறிக் கொள்கிறார். பின்னால் அருண்.

வண்டி மெதுவாக அடுத்த தெருவில் திரும்புகிறது.

முரளி 

என்ன வேலை பாக்குறீங்க அருண்?

அருண் 

அக்கவுண்ட்ஸ் சார்

முரளி

இங்க ஆபீஸ் இருக்கா?

அருண்

அதெல்லாம் இல்லை சார். எல்லாம் அண்ணா நகர் தான். இந்த ட்ரெயினேஜ் குழிய பாக்கத் தான் வந்தேன்

முரளியின் புருவங்கள் சுருங்குகின்றன.

முரளி

எதுக்கு? சமூக ஆர்வலரா நீங்க?

அருண்

இல்ல சார். யாராவது விழுந்தா ஆம்புலன்ஸ் கூப்பிடத் தான்.

கார் அடுத்த திருப்பத்தில் திரும்புகிறது. முரளி கையை நீட்டி நாராயணன் காலில் வைத்து வட்டமாகக் காட்டுகிறார்.

அருண் 

சார் மெட்ரோல சீக்கிரமா விட்டுர்ரீங்களா?

முரளி 

இதோ போயிடலாம். அதான் நைட்டு முழுசும் சர்வீஸ் இருக்கே. எங்களுக்கு இங்க இன்னும் ரெண்டு தெரு பேட்ரோல் பாக்கணும்…அப்டியே போயிடலாம்.

கார் மெதுவாகச் செல்கிறது.

முரளி 

குழி பத்தி உங்களுக்குத் தெரியும்னா அந்தாள் விழுற முன்னாடியே காப்பாத்திருக்கலாமே அருண்?

அருண் 

செத்துடுவாரானு பாக்கணும்ல சார்.

முரளி கண்ணாடியில் பின்னால் அமர்ந்திருக்கும் அருண் முகத்தைப் பார்க்கிறார். அதில் எந்தச் சலனமும் இல்லை. நாராயணனும் பார்க்கிறார்.

முரளி

நீங்க சொல்றது புரியல

அருண்

இல்ல சார். நான் போய் காப்பாத்திட்டா வேற யாராவது செத்துத் தான ஆகணும்?

முரளி

ஏன்?

அருண்

சென்னை  பூரா தோண்டிப் போட்ட ட்ரெயினேஜ் குழியிலே விழுந்து பதினஞ்சு சாவு கணக்கு சார். இப்போ வரைக்கும் பதினாலு ஆயிருச்சு. இவரு போயிருந்தா கணக்கு முடிஞ்சு போச்சு. ஆனா இவரு பொழைச்சிட்டார்.

முரளியின் போன் அடிக்கிறது.

முரளி

வண்டிய நிறுத்துங்க நாராயணன்.

முரளி இறங்கி சற்றுத் தள்ளி நின்று கொள்கிறார். நாராயணன் தனியாக காரில் அருணுடன் அமர்ந்திருக்கிறார். காரில் அமைதி.

முரளி போனில் பேசி விட்டுத் திரும்பும் போது நாராயணன் அவர் அருகிலே வந்து:

நாராயணன் 

வீட்லேர்ந்தா சார்? என்ன ஆச்சு பையன் விஷயம்?

முரளி

போலீஸ் தான் பிடிச்சு வச்சிருக்கானுங்க போல. பைக்ல தண்ணி அடிச்சிட்டு தாறுமாறா ஒட்டியிருக்கான். இவ வேற என்ன கூப்டு பேசச் சொல்றா.

நாராயணன்

அவனா சொல்லல, இந்த மாதிரி எஸ்.ஐ முரளி சார் பையன்னு?

முரளி

சொல்ல மாட்டான். திமிர் புடிச்ச பய.

முரளி காரைத் திரும்பிப் பார்த்து விட்டு:

முரளி 

இந்தாளு  அருண் மேஜர் சைக்கோவா இருப்பான் போல?

நாராயணன் 

சார், அதான் உங்க கிட்ட சொல்ல வந்தேன். இவன் முகத்த நான் முன்னமே பாத்திருக்கேனேன்னு சொல்லி யோசிச்சிட்டு வந்தேன். இந்த வீடியோ பாருங்க.

போனில் ஒரு வீடியோவை முரளிக்கு காட்டுகிறார். ஒரு பெரிய அரசியல் பேனர் சாலையில் மெதுவாகச் சாய்ந்து விழுவது ஆடி ஆடி மோசமாக தெரிகிறது. அடுத்து ஒருவர் பேசுகிறார்:

வீடியோ ஆள்

இந்த பேனர் விழும் போது சரியான நேரத்துல பைக்குல போனவங்கள இவர் காப்பாத்திட்டார். ஹலோ சார். உங்க பெயர் என்ன?

அருண் முகம் வீடியோவில் தெரிகிறது 

அருண்

அருண் 

வீடியோ ஆள்

எப்படி சமயோசிதமா அவங்கள காப்பாத்துனீங்க?

அருண்

நான் இங்க அதுக்குத் தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.

வீடியோ ஆள்

ஹா ஹா 

நாராயணன் வீடியோவைக் கட் செய்கிறார். 

நாராயணன் 

அஞ்சு வருஷம் முன்னாடி வந்திருக்கு. இது ரொம்ப பேமஸ் ஆகி இவர் பேர் பேனர் சித்தர்னே சொல்றாங்க. அப்புறம் ஏனோ மறைஞ்சிட்டாரு. இவ்ளோ வருஷம் கழிச்சு இங்க கரெக்ட்டா ஒருத்தர காப்பாத்தி விட்டாரு பாருங்க!

முரளி காரைத் திரும்பிப் பார்க்கிறார். உள்ளே அருண் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முரளி 

இந்த அருணே அந்த பேனரை விழ வச்சிருப்பான்னு உங்களுக்குத் தோணல? அதே மாதிரி இந்த ஆளையும் விழ வச்சிருப்பானோ?

முரளி காரில் மறுபடி ஏறி அமர்ந்து கொள்கிறார். நாராயணன் பின் கதவின் பக்கம். வண்டி கிளம்பவில்லை.

முரளி 

பேனர் சித்தராமே நீங்க?

அருண் 

இல்லைங்க, அப்பல்லாம் நான் சில பேரக் காப்பாத்தினதுனால அப்டி சொன்னாங்க. அப்புறம் தான் எனக்குத் தெரிஞ்சுது நாம இங்க ஒருத்தரக் காப்பாத்தினா  கணக்கச் சரி பண்ண அங்க வேற ஆளு செத்திருவாங்க. அதான் அந்த வேலைய நிறுத்திட்டேன்.

முரளி

அருண், இந்த கணக்குன்னு சொல்றீங்களே…அது எப்படி?

அருண்

அஞ்சு வருஷம் ஒரு சைக்கிள், ஒரு வட்டம்  சார். ஒரு சைக்கிள்ல  சென்னையில் ட்ரெயினேஜ்ல விழுந்து பதினஞ்சு சாவு. இது வரை பதினாலு ஆயிருக்கு. அதே மாதிரி பேனர் விழுந்து பத்து சாவு. அது இந்த சைக்கிள்ல முழுசா முடிஞ்சிருச்சு. தமிழ்நாட்டுல  போலீஸ் கஸ்டடி டெத் நாற்பது. இந்த முறை  முப்பத்தி ஒன்பது ஆச்சு. போலீஸ் துப்பாக்கிச் சூடு சாவு ஒரு இருபது. இந்த முறை அதுவும்  முடிஞ்சு போச்சு. இதைத் தவிர ட்ரெயின் விபத்து அது இதுன்னு சென்ட்ரல் கவர்மெண்ட் கணக்கு வேற.

முரளி

அஞ்சு வருஷத்துக்கு கணக்கா? அதாவது ஒரு ஆட்சிக்கு…? ஏதோ அரசியல் மாதிரி இருக்கு?

அருண்

அரசியல்லாம் இல்ல சார். விதி. யாரும் மாத்த முடியாது.

(beat)

வீட்டுக்குப் போகணும் சார்.

முரளி யோசித்தவாறே நிற்கிறார். நாராயணன் அவரை தள்ளி அழைத்து:

நாராயணன்

சார், ஸ்டேஷன் திரும்புற நேரமாச்சு. இவன் கிட்ட டைம் வேஸ்ட் பண்ண வேணாம். கொண்டு போய் விட்றலாம்.

முரளி மவுனமாக நிற்கிறார். காரில் உள்ள ரேடியோ கரபுர என்கிறது. பிறகு தெளிவாக:

கார் ரேடியோ 

நங்கநல்லூர் யூனிட் – பள்ளத்துல விழுந்து பைக் பெர்சன் டெத் ஆயிட்டாரு.  

அங்க மக்கள் disturbance இருக்கு. Backup போங்க.

முரளியின் கண்கள் விரிகின்றன. நாராயணன் அருணைப் பார்க்கிறார்.

அருண் 

நான் சொன்னேன்ல சார். விதி!

முரளி 

ஆனா இன்னைக்கு நைட்டே பாக்கி இருக்குற பதினஞ்சாவது ட்ரெயினேஜ் சாவு நடக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

அருண்

நாளைக்கு  எலெக்க்ஷன் அறிவிச்சிருவாங்கனு சொல்றாங்க  சார். நாளையோட சைக்கிள் ஓவர். உண்மையில அதுனால தான் நான் இன்னைக்கு  ஒவ்வொரு குழியா பாத்திட்டு போயிட்டிருக்கேன்.

காருக்குள் முரளியும் நாராயணனும் ஏறிக் கொள்கிறார்கள். கார் மெதுவாக நகர்கிறது. நாராயணன் முரளியைத் திரும்பிப் பார்க்கிறார்.

காருக்குள் அமைதி.

முரளி

இந்த ஆட்சில இது வரை போலீஸ் கஸ்டடி சாவு முப்பத்தி ஒன்பது முடிஞ்சிருக்குன்னு சொன்னீங்க, இல்லையா?

அருண்

ஆமா சார்.

முரளி

அப்டின்னா நாற்பதாவது இன்னைக்கு நைட்டுக்குள்ள முடியணும்.

நாராயணன் 

உங்க பையனுக்கு ஒண்ணும் ஆகாது சார், கவலைப்படாதீங்க.

(beat)

அருண் 

ஏன்? அவர் பையனுக்கு என்ன?

(beat)

முரளி 

அவன் தூத்துக்குடில இப்ப போலீஸ் கஸ்டடியில் இருக்கான்

நாராயணன் திரும்பி முரளியைப் பார்க்கிறார். முரளியோ, அவரைப் பார்க்காமல்:

முரளி 

நாராயணன், அங்க ரைட் எடுங்க.

நாராயணன் 

அங்க பீச் தான் சார் இருக்கு

அருண் 

சார், என்ன இறக்கி விட்ருங்க. நடந்தே போயிர்றேன்

முரளி, மறுபடி, கடுமையான குரலில்:

முரளி 

ரைட் எடுங்க நாராயணன்.

நாராயணன் வண்டியை வலது பக்கம் திருப்பி நிறுத்துகிறார். தூரத்தில் அலைகள். முரளியின் போன் திரும்ப அடிக்கிறது – மனைவியிடம் இருந்து.

முரளி அதைக் கட் செய்து திரும்பிப் பார்க்கையில் அருண் கதவைத் திறந்து கொண்டு இறங்கி வண்டி வந்த பாதையில்  வேகமாக நடக்கிறார்.

நாராயணன், முரளியிடம்:

நாராயணன் 

இவன் இங்க வந்து எதுக்கு சார் ஓடுறான்?

முரளி அதற்குப் பதில் சொல்லாமல் விரைவாக இறங்கி, துப்பாக்கியை உருவியவாறே:

முரளி

ஏய்…நில்லு!

நாராயணன்

விட்ருங்க சார். போனா போகட்டும்  

முரளி அதைக் கவனிக்காமல் துப்பாக்கியை கையில் ஏந்தியவாறே அருண் பின்னால் ஓடுகிறார். அருண் அவர் பின்னால் வருவதைப் பார்த்து இன்னும் ஓட, முரளி பாய்ந்து அவரைப் பிடித்து கீழே போட்டு மிதிக்கிறார்.

நாராயணன் அவர்களை பார்த்து ஓடி வரும் போதே முரளி துப்பாக்கியை திருப்பி வைத்து கையை ஓங்குகிறார்.

அருண் 

என்னைய விட்ருங்க சார். உங்க பையனுக்கெல்லாம் ஒண்ணும் ஆகாது. 

நாராயணன் மூச்சு வாங்க ஓடி வந்து: 

நாராயணன்

(முரளியிடம்)

ஏன் சார் இவன அடிக்கிறீங்க?

முரளி கையை இறக்குகிறார்.

அருண் 

(முரளியிடம் )

அவர்ட்ட சொல்லுங்க சார் 

முரளி மவுனமாக நிற்கிறார்.

அருண் 

(நாராயணனிடம் )

நாற்பதாவது சாவா இவர் கையில் இன்னைக்கு நான் செத்துட்டேன்னா கணக்கு தீர்ந்திரும், அவர் பையனுக்கு ஒண்ணும் ஆகாதுனு நினைக்கிறார். 

(beat)

நாராயணன் 

(கனிவுடன் முரளியிடம் )

சார், இவன் சொல்ற விதியை நம்ம மனசு வச்சா மாத்த முடியும். விட்ருங்க  

அருண் தலையை குனிந்து கொள்கிறார். முரளி மெதுவாகத் தளர்கிறார். துப்பாக்கி கீழே விழுகிறது. மூச்சு வாங்கியவாறே சற்று விலகி நிற்கிறார். முகத்தில் கை வைத்து அழுகிறார்.

முரளியின் போன் மறுபடி அடிக்கிறது.

முரளி அதை எடுத்து பார்க்கிறார். அவர் கை நடுங்குகிறது. போனை நாராயணனிடம் கொடுக்கிறார். நாராயணன் எடுத்து:

நாராயணன் 

சொல்லுங்கம்மா, நாராயணன் பேசுறேன்.

(beat)

ரொம்ப சந்தோஷம்மா. ஐயா வெளிய போயிருக்காரு. வந்தவுடனே சொல்றேன். 

போனை கட் செய்கிறார். 

நாராயணன் 

பையன் வெளிய வந்திட்டான் சார் 

நாராயணன் அருண் மெதுவாக எழுந்து நிற்க உதவுகிறார். முரளி தலையைக் குனிந்தவாறே நாராயணனிடம் போனை வாங்கி கொள்கிறார்.

மூவரும் மறுபடி வண்டியில் ஏறுகிறார்கள். 

அருண் 

இவர் பையனும் தப்பிச்சு நானும் தப்பிட்டேன்னா கணக்கச் சரி பண்ண இப்போ தமிழ்நாட்டுல வேற எங்கையாவது போலீஸ்னால சாவு கட்டாயம்  விழும். 

(beat)

நாராயணன்

இது விதில்லாம் இல்ல தம்பி. உன்னுடைய விரக்தி. அவ்ளோ தான்.

FADE OUT

THE END


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.