பாயும் குதிரை

Popular Graphic Arts, Public domain, via Wikimedia Commons

நான்கு கால்களையும் காற்றில் விரித்துப் பறக்கும் “பாயும் குதிரை” ஓவியங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரசித்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் அந்த ஓவியங்களில் காண்பது போலவே, குதிரையின் நான்கு கால்களும் காற்றில் இருக்குமா? அல்லது ஒரு காலாவது தரையில் இருக்குமா? 

இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள்.(நான் கேட்டதில்லை)

இதே  கேள்வி 19 ம் நூற்றாண்டில் பல ஆய்வாளர்கள், குதிரை ஆர்வலர்கள் ஆகியோருக்கு இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. 

சிலர் நான்கு கால்களும் தரையில் படாமல் குதிரை பாய்ந்து செல்வதைப் பார்த்திருந்தார்கள். சிலர், அவ்வாறு இருக்க முடியாதென்று கருதினார்கள். குதிரைகள் ஓடும் வேகத்தில் அதனை உறுதியாகக் கண்டு சொல்ல யாராலும் முடியவில்லை. அந்தக் கேள்வி ஒரு குதிரைப் பண்ணை உரிமையாளரை விடாமல் துரத்தியது. 

1878 ம் ஆண்டு. அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தின்  லீலன்ட் ஸ்டான்போர்ட் (Leland Stanford) என்ற செல்வந்தர் கலிஃபோர்னியாவின் ரயில்பாதை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் ஒரு முன்னாள் கவர்னரும் கூட. 

அவருக்கு பாலோ ஆல்டோ (Palo Alto) வில் ஒரு குதிரைப் பண்ணை இருந்தது. 

குதிரை வளர்ப்பில் ஈடுபட்டுவந்த லீலன்ட், குதிரை கால்கள் தரையைத் தொடாமல்  பாயும் என்று நம்பினார். ஆனால், அதனை நிறுவ ஆதாரம் எதுவும் இல்லை. இதனைக் கண்டறிய அவர் எட்வர்ட் மைபிரிட்ஜ் (Eadweard Muybridge) என்ற திறமையான புகைப்படக் கலைஞரை  நாடியிருந்தார்.

எட்வர்ட் மைபிரிட்ஜ்

Public domain, via Wikimedia Commons

இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி இருந்த எட்வர்டின் வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. குதிரை வண்டி ஒன்றில் ஊரூராய்ச் சுற்றிப் புத்தகம்  விற்பனை செய்துவந்தான் மைபிரிட்ஜ் . 

அப்படிச் செல்லும்போது ஒரு நாள் ஏற்பட்ட பெரும் விபத்தால் மைபிரிட்ஜின்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின் அவன்  சுபாவம் வெகுவாக மாறியது. அமைதியான புத்தக விற்பனையாளனாய் இருந்த மைபிரிட்ஜ் , விசித்திர நடவடிக்கைகள் கொண்ட புகைப்படக் கலைஞன் ஆனான்.

 குதிரை வண்டியில் பெரிய கேமராவுடன் (அப்போதைய கேமரா ஒரு உதவி ஆள் வைத்துச் சுமக்கும் அளவு பெரிதாக இருந்தது), நாடோடி போல  அலைந்து திரிந்து புகைப்படங்களை எடுத்து வந்தான். 

1868 ஆண்டுவாக்கில் எட்வர்ட் மைபிரிட்ஜ் ஒரு புகைப்படக் கலைஞராக பெயர் பெற்றிருந்தான். மைபிரிட்ஜ் சுற்றித்திரிந்து, எடுத்த புகைப்படங்களில், ஒரு மலையின் மீதிருந்து எடுத்த சொக்கவைக்கும்  கலிபோர்னியாவின் இயற்கை காட்சிகள் மைபிரிட்ஜின் புகழை மேலும் அதிகரித்தன. 

Eadweard Muybridge, Public domain, via Wikimedia Commons

1871 ல் தன்னிடம் உதவியாளராக பணியில் இருந்த ப்ளோரா ஸ்டோன் (Flora Stone) என்ற பெண்ணை மனம் செய்து கொண்டான் மைபிரிட்ஜ் . அப்போது அவனது வயது 41, ப்ளோரா ஸ்டோனின் வயது 21. இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். 

அப்போது சான் பிரான்சிஸ்கோ (San Francisco) வில் நாடக விமர்சங்களை எழுதி வந்ததவன் ஹாரி லார்கின்ஸ்  (Harry Larkyns). நல்ல நடையும் நகைச்சுவையும் கொண்ட எழுத்துக்குச் சொந்தக்காரன். வசீகரமானவன், சாகசங்களை விரும்புபவன். ஹாரி லார்கின்ஸ் 1843 ல்  பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தான். கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) அதிகாரி ஒருவருக்கு மகனாகப் பிறந்து, இளம் வயதிலேயே பெற்றோரால் இங்கிலாந்தில் உள்ள உறவினர்கள் வசம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டான். 

இளம் வயதிலேயே பெற்றோரைப் பிரிந்துவிட்ட ஹாரியின் வாழ்க்கையை இந்தயாவின்  1857 சிப்பாய்ப் போராட்டம் (சிப்பாய்க்  கலகம்), மேலும் புரட்டிப் போட்டது.

மாராட்டியத்தை ஆண்ட சத்ரபதி சிவாஜி  ‘பேஷ்வா’ என்றழைக்கப்பட்ட அமைச்சர் பதவிகளை உருவாக்கினார். பிற்காலத்தில் இந்தப் பதவி, அரசியல் அதிகாரம் பெற்ற பதவியாகவும், வாரிசுரிமையாகவும் மாறியது. பேஷ்வா ஆக இருந்த இரண்டாம் பாஜிராவ் என்பவருக்கு வாரிசு இல்லாததால், அவர் நானா சாஹிப் என்பவரைத் தன் வாரிசாக தத்தெடுத்துக் கொண்டார். 

அந்தக் காலகட்டத்தில், வாரிசுகள் இல்லாத அரசுகளை கிழக்கிந்தியக் கம்பெனி தன ஆளுகைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. எனவே,  இரண்டாம் பாஜிராவ் மறைந்த பின், நானா சாஹிபை ‘பேஷ்வா’ ஆக அங்கீகரிக்கவோ, பென்ஷன் வழங்கவோ கிழக்கிந்தியக் கம்பெனி மறுத்தது. 

1857 ல் சிப்பாய்ப் போராட்டத்தின்போது, நானா சாகிப் ஒரு படையுடன் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினருடன் போராடினார். இதில் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் சுமார் 120  பெண்கள் மற்றும்  குழந்தைகள் நானா சாஹிபின் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் ‘கான்பூர் படுகொலை’ யில் கொல்லப்பட்டவர்களில் ஹாரியின் பெற்றோரும் அடக்கம். 

Charles Ball, CC0, via Wikimedia Commons

பின்னாளில் இளைஞனான ஹாரி, மீண்டும் இந்தியா வந்து பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினான். இந்தியாவின் பல பகுதிகளிலும் பணி செய்து  மேஜர் பதவிக்கு உயர்ந்தான். வெறுமையான வாழ்க்கையால் அலைக்கழிக்கப்பட்ட ஹாரி, ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் சானபிரான்சிஸ்கோவில் வாழத்தொடங்கி இருந்தான். அப்போது ஹாரியால் வசீகரிக்கப்பட்ட பட்ட பெண்கள் பலர். அவர்களில் எட்வர்ட் மைபிரிட்ஜ் ன் மனைவி ப்ளோரா ஸ்டோனும் அடக்கம். 

ஒரு நாள், தன் மனைவி பத்திரப்படுத்தி வைத்திருந்த தங்கள் மகனின் புகைப்படத்தில் ‘லிட்டில் ஹாரி’ என்று எழுதி இருந்ததைப் பார்த்த, எட்வர்ட், தன் மனைவி பெற்றது ஹேரி லார்கின்ஸ் ன் மகன் என்று நம்பத் தொடங்கினான். 

அக்டோபர் 17, 1874 இரவு. கலிபோர்னியாவில்  ஒரு சுரங்கம் தொடர்பான பணியில்  இருந்த ஹாரியின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. வெளிய வந்த ஹாரிஸின் முன் நின்றிருந்தான் எட்வர்ட் மைபிரிட்ஜ். “என் மனைவியிடம் இருந்து உனக்கொரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லியபடி தன் துப்பாக்கியால் சுட்டான் எட்வர்ட். நெஞ்சில் பாய்ந்த தோட்டா, அலைக்கழிக்கும் ஹாரியின் வாழ்வை அமைதிப் படுத்தியது. 

மைப்ரிட்ஜ் கைது செய்யப்பட்டு, கலிபோர்னியாவின் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தது.  கைது செய்யப்படும்போது, மைபிரிட்ஜ்  எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டி, அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என வாதாடியது  போலீஸ் தரப்பு.

மறுபுறம், குதிரை வண்டி விபத்தில் தலையில் அடிபட்ட பின் மைபிரிட்ஜின் பொதுவான மனநிலையில் மாற்றம் இருந்தது என்றும்,  மனைவியின் துரோகத்தால் ஏற்பட்ட மனபாதிப்பால் இந்தக் கொலை நடந்தது என்றும் மைபிரிட்ஜ் தரப்பில் வாதாடப்பட்டது.

இந்த வழக்கின் ஜூரி, இந்தக் கொலையின் பின் இருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது என்று கருதி, மைபிரிட்ஜ் ஐ விடுதலை செய்தனர். ‘நியாயப்படுத்தக் கூடிய கொலை’ (Justifiable Homicide). 

The People of the State of California v. Edward J. Muybridge, 1875

Zscout370 at en.wikipedia, Public domain, via Wikimedia Commons

இதன் பின் ப்ளோரா மைபிரிட்ஜ் இடம் இருந்து விவாகரத்து பெற்றாள். தனிமரம் ஆன மைபிரிட்ஜ் கேமிராவுடன் அலைந்து திரிவதை தன் வாடிக்கை ஆக்கிக்கொண்டான்.

சாலி கார்ட்னர் (Sallie Gardner)

ஜூன் 17, 1878.  மைபிரிட்ஜ், லீலன்ட் ஸ்டான்போர்ன் குதிரைப் பண்ணைக்கு வந்து சேர்ந்திருந்தான். பாயும் குதிரையின் நான்கு கால்களும் தரையைத் தொடாமல் இருக்குமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறியும் தீர்மானத்தில் இருந்தான். தயாரிப்புகளில் மிகக் கவனமாக ஈடுபட்டான். 

ஓடு தளத்தின் பக்கத்தில் 24 கேமிராக்கள் பொருத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றும், ஓடுதளத்தின் குறுக்கு வாக்கில் கட்டப்பட்டிருந்த மெல்லிய கம்பிகளுடன் இணைக்கப்பட்டன. அந்தக் கம்பிகள், குதிரையின் கால்பட்டு அறுக்கப்படும்போது, அத்துடன் இணைந்திருக்கும் கேமிரா ஷட்டர் விடுவிக்கப்படும். ஓடும் குதிரை காமிராவில் பதிவாகும். இதுதான் திட்டம்.

இந்த சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரையின் பெயர் சாலீ கார்டனர் (Sallie Gardner). அன்று லீலன்ட் ஸ்டான்போர்ட் மற்றும் அவரது நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த  பாலோ ஆல்டோ (Palo Alto) பண்ணையில் கூடியிருந்தனர். ஓடு தளத்தின் ஒரு முனையில் குதிரை சாலீ நின்றுகொண்டிருந்தது. உத்திரவு கிடைத்தவுடன் சாலீ பாய்ந்து ஓடியது. சாலீயின் குளம்பொலியும், காமிராக்களின் ஷட்டர் ஒலியும் படபடத்தது போலவே பார்வையாளர்களின் இதயங்களும் படபடத்தன.

Eadweard Muybridge, Public domain, via Wikimedia Commons

அதே படபடக்கும் இதயத்துடன் இருந்த மைபிரிட்ஜ், அந்த 24 காமிராக்களையும் தீவிரமான பார்வையுடன் கவனித்தான். இது அவனது பல மாதத் திட்டம். சாலீ ஓடி முடித்ததும், மைபிரிட்ஜ் ஓடிச்சென்று கேமிராத் தகடுகளை (Photographic plates) எடுத்துக் கொண்டான். அவன் கைகள் பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன.

இருட்டறையில் புகைப்படங்களை உருவாக்கிப்பார்த்த மைபிரிட்ஜ், அந்தப்  புகைப்படங்கள் ஒரு விஷயத்தை உறுதி செய்தன.  குதிரை ஓடும்போது தன் நான்கு கால்களும் தரையில் படாமல் பாய்ந்து செல்லும் என்பதுதான் அது.   சாலீ ஓடும் காட்சியை ஒவ்வொரு கணமாகப் பதிவு செய்திருந்தன அந்தப் புகைப்படங்கள். மைபிரிட்ஜ் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மைபிரிட்ஜ் ன் இந்தப் படங்கள், குதிரையின் நான்கு கால்ப் பாய்ச்சல் பற்றிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஓவியர்கள் தங்கள் குதிரை ஓவியப் பாணியை மாற்றிக்கொண்டனர். 

இந்தப் படங்கள் சலனப்படம் தோன்றுவதற்கு ஒரு அடிப்படைக் காரணமாக இருந்தது.  அந்தப் படங்களே, உலகின் முதல் சலனப் படம் (motion picture)

இதன் பின்னை மைபிரிட்ஜ் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இயங்குவதை புகைப்படங்கள் மூலம் சிறு சலனப்படங்கள் ஆக்குவதில் ஆர்வமுடன் ஈடுபடத்தொடங்கினான். இத்தகைய படங்களை இயக்கிப் பார்க்க ஒரு கருவியை வடிவமைத்தான். ஒரு வட்டத் தட்டின் வெளி வட்டத்தில் புகைப்படங்கள் இருக்கும். ஒரு துவாரத்தின் வழியாக இந்தப் படங்களைப் பார்க்கலாம்.  இந்தத் தட்டைச் சுற்றுவதன் மூலம் அடுத்தடுத்த படங்கள், துவாரத்திற்கு நேராக வரும். இப்படித் தொடர்ந்து படங்கள் அடுத்தடுத்து வருவதன் மூலம் அது ஒரு சலனப் படமாகத் தோன்றும். இதனை ஒரு விளக்கின் உதவியால் திரையில் காட்டலாம். இந்தக் கருவி சூப்பராக்சிஸ்கோப் எனப்பட்டது. இதனை 1879 ல் உருவாக்கிய மைபிரிட்ஜ், அதன் மூலம் தனது குதிரை பாய்ந்து செல்லும் படங்களையும், அது போன்ற மற்ற படங்களையும் பார்வையாளர்களுக்குக் காட்டினான். 

புகைப்படங்கள், சலனப்படங்கள் மேல் மைபிரிட்ஜ் கொண்டிருந்த ஈடுபாடும், கடுமையான உழைப்பும் அவனுக்குத் தன் வாழ்க்கையின் குழப்பங்களில் இருந்து விடுபட உதவின. அவனது அலைக்கழிக்கும் மனம், புகைப்படங்களில் இளைப்பாறியது.  

மனம் போன போக்கில் பலவற்றையும் சொல்லிக்கொண்டு வந்ததில் ஒரு முக்கியமான செய்தியை சொல்ல மறந்து விட்டேன்.

மைபிரிட்ஜ் உருவாக்கிய சூப்ராக்சிஸ்கோப் (Zoopraxiscope) என்ற எளிய சலனப்படக் கருவியே பல மாறுதல்களை அடைந்து இன்றய திரைப்பட வடிவத்திற்கு வந்திருக்கிறது. அந்த வரலாற்றில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அங்கம் மட்டுமே .

குதிரையில் ஆரம்பித்து எடிசன் வரை வந்து விட்டோம். நாமாக இதனை இங்கேயே நிறுத்திக் கொள்வது நல்லது.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.