டோண்ட் கேர்

அஞ்சடிப் பெரஞ்ஜாவில் மூடிய இமைகளுக்குள் விழிப்புடன் படுத்துக் கிடந்தார் டோண்ட் கேர்!. இவ்வளவு நாட்களாக அருக்காணி வீட்டு சேவல் கூவும்வரை அயர்ந்து தூங்கியவர்!. அது கூவினால் மணி ஐந்தரை என்று கணக்கு!. ஆறு மணிக்கு பெரட்டு!. இரவுதோரும் மருந்தைப்போல் அவர் குடித்த அரை போத்தல் கின்னஸ் ஸ்டவுட்டும் தூக்கத்திற்குத் துணைப் போனது. அவரும் அதை ‘தூக்க மருந்து’ என்றுதான் கிண்டலாகச் சொல்லிச் சிரிப்பார். ஆனால், 55 வயதாகிவிட்டதால் இனி வேலையில்லையென்று நேற்று கிராணி நோட்டீஸ் சூராவைக் கொடுத்ததிலிருந்து நிம்மதி கெட்டுப் போனது. கெட்டுப்போன நிம்மதி முதலில் காவு வாங்கியது தூக்கத்தைத்தான். திடீரென்று ‘தூக்க மருந்து’ தனது வீரியத்தை இழந்துவிட்டிருந்தது!. மனசு எதையெல்லாமோ எண்ணிக் குழம்பியது.

‘யாருடைய நாய் இப்படி குரைக்கிறது? ‘கரக்.. கரக்..’ என்று தவளைச் சத்தம் கேட்கிறதே, மழை வரப் போகிறதோ?. காலை ஆறு மணிக்குப் பிடிக்கும் மழை, பத்து மணிவரை அடித்தால் ஜனங்களுக்கு மழைத் திட்டியாவது கிடைக்கும்!. இந்த வயதில் எங்கே போய் என்ன செய்வது?.’ 

டோண்ட் கேர் எழுந்து பெரஞ்ஜாவில் உட்கார்ந்தார். தலைமாட்டிலிருந்த பலகையின் இடுக்கில் சொருகி வைத்திருந்த சுருட்டைத் தடவி எடுத்துப் பற்ற வைத்தார். கைலி நழுவிக் காலடியில் கிடந்தது. மூத்திரம் முட்டிக்கொண்டு துளிர்த்தது. அம்மணக்குண்டியாகவே வெளியே போய், அல்லூரில் மூத்திரம் அடித்தார். கண்கள்  எரிந்தன!.     

இன்னும் பத்து நாட்களில் அவர் எஸ்டேட்டை விட்டு வெளியாகிவிடவேண்டும். வெளியில் பார்த்தார். எங்கும் ஒரே இருட்டு!.      

‘டோண்ட் கேர்!.

எஸ்டேட்டில் வயது வித்தியாசமில்லாமல் எல்லோருமே அவரை அப்படித்தான் அழைத்தனர். ஊர்ப் பெண்களும், பொடிப் பிள்ளைகளும் மட்டும் பின்னால் தாத்தாவைச் சேர்த்துக்கொண்டனர்.  

அவர் எதிரே வரும்போது, ‘டோய், டோண்ட் கேர் தாத்தா வர்றாருடா டோய்!.’ என்று ஊர்ப் பொடிசுகள் அவரை நோக்கி ஓடி வருவர். ‘டோண்ட் கேர் தாத்தாவா?.. அடி, உங்கப்பன் தந்தான..’ என்றோ ‘உம் பொண்டாட்டிய நண்டு கடிக்க..’ என்றோ பொய்க் கோபம் காட்டி, அவர்களைப் பிடிப்பதுபோல் அவர் பாவனைக் காட்டி மகிழ்வார். 

ஆண்டர்சன் துரை எஸ்டேட்டிற்கு வந்த புதுசு. அவன், எப்போதுமே புகைத்துக் கொண்டிருந்த   சுங்கானைப்போல் புகைந்துகொண்டே இருப்பான். அவன் காதில் விழ கூலித் தொழிலாளிகள் பேசிக்கொள்வதையோ, நின்ற இடத்தில் எச்சில் துப்புவதையோ, தரையில் உட்கார்ந்திருப்பதையோ பார்த்துவிடக்கூடாது. வெறிப் பிடித்துக்கொண்டவன்போல் ஆர்ப்பாட்டம் செய்து குதிப்பான். அப்படிப்பட்ட நேரங்களில் அவன் கத்தி, ஊர் ஜனங்கள் கேட்ட வார்த்தைதான், ‘டோண்ட் கேர்!.’ 

ரொம்ப நாட்களுக்கு அதன் அர்த்தம் புரியாமல், ‘தேவிடியா பசங்களா’, ‘கண்டார ஓலிங்களா..’ என்று, ஏதோ அவர்களுக்குத் தோன்றிய ஒரு கெட்ட வார்த்தையில் அதைப் புரிந்துகொண்டனர். 

ஒருநாள், வரவிருக்கும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் கமிட்டி கூட்டம் போட்டது. திருவிழாவிற்கு இரண்டு ‘பேர்’ வெட்டுவதா, மூன்று ‘பேர்’ வெட்டுவதா என்ற விஷயத்தில் பூங்காவனத்திற்கும் ரசியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட உச்சத்தில்,

“எப்பியும் போல தீமிதியன்னிக்கி ஒரு படம் காமிச்சா பத்தாதா. அது இன்னா புதுசா இந்த வருஷம் மாவிளக்கன்னிக்கும் ஒரு படம் காமிக்குனூன்னு சொல்றது!. அதுக்காவ மூனு நாளு சம்பளத்த வேற வெட்டுனுமாக்கும்?. நா இதுக்கெல்லாம் எம் மயிருலகூட ஒத்துக்க மாட்டன். நீங்க இன்னா செய்யினுமோ செஞ்சிக்கிங்க. ஐ டோண்ட் கேர்..” என்று கத்தி, பூங்காவனம் தோள் துண்டை உதறிக்கொண்டு எழுந்ததுதான் தாமதம், எல்லோருமே சிரித்துவிட்டனர். அன்றிலிருந்து அவனுடைய பெயர் டோண்ட் கேர் என்று ஆகிப் போனது. 

நினைக்க நினைக்க டோண்ட் கேருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கின.

ஒரு வருடமா?.. இரண்டு வருடங்களா?..    

சுங்கை காந்தம், மேரி, கெர்லிங், உலியாம், நூறு ஏக்கர், காப்பார் பாரு என்று அவனின் பெற்றோர் எஸ்டேட் எஸ்டேட்டாக அலைந்துகொண்டிருந்த போது, ஐந்து வருடங்களுக்கு முன்னர் செத்துப் போன ‘இருமல் கங்காணி’யின் தயவால் இந்த புக்கிட் முஞ்சோங் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்தான் ‘சங்கிலி கிராணியிடம்’ பேசி  இருவருக்கும் வேலைப் பர்மிட் ஏற்பாடு செய்துக்கொடுத்தார். இங்குதான் டோண்ட் கேர் என்ற பெயரே இப்போது நிரந்தரமாகிப் போன பூங்காவனம் பிறந்தான்.        

பெரிய ஆற்று மணல், ஸ்லேட் பலகை, நோட்டு புத்தகம் என்று எழுதிப் பழகவும்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை என்ற நீதிகளையும் மட்டி, மடையன், முட்டாள், மூடன், முழுமூடன் போன்ற கதைகளையும் படித்துப் பழகவும் ஆரம்பித்தவனுக்குத் தனது கூட்டாளிகள் பலரைப் போலவே படிப்பு ஏறவில்லை. தோப்புக் கரணம் மற்றும் முட்டிக்கால் போட வைப்பது, ரோத்தானில் அடிப்பது என்று எந்த தண்டனைகளும் அவர்களைப் படிக்கத் தூண்டவில்லை!. சக கூட்டாளிகளான மைலக்கா, செபஸ்டியன், செங்கோல், வேம்புலி, தாண்டவராயனோடு அவனும் ஆறாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தமது பெற்றோருக்கு உதவியாக, ‘வேலைக் காட்டுக்குப்’ போகத் தொடங்கினான். மங்கு துடைத்தான்; கித்தாப் பால் சேகரித்தான்; கித்தாக் கொட்டைகள் பொறுக்கினான்; அம்மாவிற்கு ரெண்டு வெட்டு இருக்கும் நாட்களில் சாணி அள்ளி, மாட்டுப் பட்டியைச் சுத்தம் செய்தான்; மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான். 

பெரும் காற்றுக்கு வேரோடு சாய்ந்த ரப்பர் மரத்தின் அடிப்பாகத்தை எட்டடி நீளத்திற்கு கங்காணியின் அனுமதியுடன் வெட்டிக்கொண்டு வந்து, லயத்தின் முன் நட்டு வைத்து, இளைஞர்கள் ரப்பர் மரத்தைக் காயம் படாமல் சீவப் பழகிக் கொடுத்தனர். பின்னர், பெற்றோருக்கு ஒத்தாசையாக ஒரு நிரையை சீவத் தொடங்கினர். உடல், ‘வாட்ட சாட்டமாக’ வயதுக்கு மீறி வளர்ந்தவர்களின் பெற்றோர், கங்காணியைக் கையில் போட்டுக்கொண்டு மகன்களுக்கு வயது 18 என்று கூட்டிச் சொல்லி, முதலில் காண்ட்ரக்ட்டில் வேலைக்குச் சேர்த்தனர். கொஞ்ச காலத்திற்கு கெந்திக்கு பால் ஸ்டோர், வெளிக்காட்டு வேலை, அந்தி வேலை என்று திட்டி எடுத்தவர்களின் வேலையைச் செய்துக் கொண்டிருந்தனர். அப்படித்தான் டோண்ட் கேரின் பெற்றோரும் அவனை வேலைக்குச் சேர்த்தனர். இரண்டு வயதைக் கூட்டிச் சொல்லி, வேலைக்குச்  சேர்ந்ததிலிருந்த சிக்கலை அவர் இப்போது அனுபவித்தார்!.    

37 வருடங்கள்!.

அப்பாப்பா!. எத்தனை கஷ்டங்கள்?. எத்தனை வலிகள்?.. எத்தனை சாவுகளைப் பார்த்தாகிவிட்டது?. 

‘ஒன்னாம் கட்ட வெட்டு’!. 

அதுதான் ஆக அருகில், ஒரு மைல் தூரத்தில் இருந்த வெட்டு!. இப்படியாக எட்டு வெட்டுகள் இருந்தன. தொழிலாளிகளை வெட்டுக்கு ஏற்றிக்கொண்டு போகும் ‘டக்கு’ வசதியெல்லாம் அப்போது கிடையாது. பெரட்டில் ‘ஆசர்’ சொல்லிவிட்டு வந்த கையோடு, காண்டாவில் முனைக்கு ஒரு வாளியை மாட்டிக்கொண்டு அதிகாலையிலேயே கூட்டமாக ‘வேக்கு.. வேக்கு’ என்று நடந்து வெட்டுக்குப் போக வேண்டும். நிரையை அடைந்ததும் இளைப்பாறக்கூட நேரமிருக்காது. சூரியன் உதிப்பதற்கு முன்னமே மரங்களைச் சீவிவிட்டால், பால் சுரப்பு நன்றாகவும், உச்சி நேரம் வரையும் வடிய அவகாசமும் இருக்கும். வெயிலில் நின்று, பாதங்களில் விழுந்துகிடக்கும் நிழலைப் பார்த்து, மணியைச் சரியாகவே அனுமானித்து, அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு, பால் சேகரிக்க ஆரம்பித்தால் முடிய இரண்டாகிவிடும். ரப்பர் பாலிருக்கும் இரண்டு வாளிகளையும் மீண்டும் காண்டாவில் பக்கத்திற்கு ஒன்றாய் மாட்டிக்கொண்டு பால் ஸ்டோரைப் பார்க்க நடக்க வேண்டும். பாலின் பாரம் ஒரு பக்கம்!. நடக்க வேண்டிய தூரம் ஒரு பக்கம்!. மழை வருவதற்குள் போய்விட வேண்டிய அவசரம் ஒரு பக்கம்!. அத்தனை பாரங்களையும் சுமந்துகொண்டு தோளிலிருந்த காண்டாவைப் போலவே அவர்களும் வளைந்துகொண்டே நடந்தனர். 

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக ரப்பர் பால் சிந்தி தடித்துப்போய் நாறும் ‘வேலைக் காட்டு உடுப்புகளை’ ‘அவுத்துப்’ போட்டு, லங்கோடோடு நின்றுக்கொண்டு, கால், தொடை, வயிறு, உயிர் நிலையென்று உடம்பெல்லாம் ஏறி ரத்தம் உறிஞ்சிக்கொண்டிருக்கும் அட்டைகளை கொள்ளிக் கட்டையால் ஒவ்வொன்றாய்ச் சுட்டுப் பொசுக்க வேண்டும். இப்படித்தான் பெற்றோர் தவறிய பின்னர், டோண்ட் கேர் சுருட்டு பிடிக்கக் கற்றுக்கொண்டார்.  பாவம், இதில் பெண்களின் பாடுதான் பெரும் பாடு!. 

‘Paraquat’, மற்றும் ‘Round Up’, போன்ற பாஷாணங்களின் அறிமுகத்திற்குப் பின்னரே இந்தத் தொல்லை நீங்கியது. ஆனால், குடும்பச் சச்சரவுகள் தாங்காமல் மூட்ட பூச்சி மருந்து குடித்து உயிர் பிழைத்த பெண்கள் இப்போது, பாஷாணம் குடித்து விரும்பிய சாவைத் தப்பாமல் தேடிக்கொண்டனர். டோண்ட் கேரின் மனைவிகூட தீராத வயிற்று வலி பொறுக்க முடியாமல் பாஷாணம் குடித்தே செத்துப் போனாள். 

அருக்காணி வீட்டு சேவல் கூவியது!. அந்தக் கூவல் தனது நோட்டீசை அறிவிப்பதுபோல் இவருக்குப் பட்டது.   

எஸ்டேட்டே விழித்துக்கொண்டது. எல்லோருடைய லயங்களிலும் மண்ணெண்ணை விளக்குகள் எரியத் தொடங்கின. அந்தக் காலை நேரத் தடபுடலில் சில வீடுகளில் குழந்தைகள் அழ ஆரம்பித்தன. 

ஜனங்கள் மண்ணெண்ணை விளக்குகளை ஏந்திகொண்டு பெரட்டுக்குப் போவதை டோண்ட் கேர் பார்த்தார். தனது விளக்கு இருக்கும் இடத்தை ஒரு நிதானத்துடன் அந்த இருட்டில் பார்த்தார். அதில் மண்ணெண்ணை தீர்ந்து போயிருக்குமென்று தோன்றியது. 

எதிரே, எப்போதும் போல் வெங்கடாசலம் கட்டியிருந்த கைலியைத் தூக்கி முக்காடு போட்டுக்கொண்டு போனான். அவன் ஒரு ‘அருப்பெடுத்த பொம்பள பொறுக்கி’ என்று எஸ்டேட்டில் பேசிக்கொண்டனர். புருஷன் இல்லாத பெண்கள் அவனைக் கடக்கும்போது, ‘மண்ணு சாப்புட போறத மனுஷன் சாப்புட்டு போறேனே..’ என்று ரகசியம் பேசுவான். அவர்களும் அதைக் கேட்டு, வாயைப் பொத்திச் சிரித்துக்கொண்டு போவார்கள். சிலர், வசப்பட்டும் போயினர்!.   

“என்ன டோண்ட் கேர், பெரட்டுக்கு நேரமாச்சே?.  வர்லியா?..” – கேட்டுக்கொண்டே நடந்தான். 

‘இந்த கமுலாட்டிக்கு உன்னும் தூக்கம் தெளியில போல..’ என்று முணுமுணுத்துக்கொண்டார். 

டோண்ட் கேரால் ‘சட்’டென்று பழக்கத்தை நிறுத்திக்கொள்ள முடியவில்லை!.  

வெளிக்காட்டு கங்காணியுடன் பேசிக்கொண்டு திரும்பிய பால் வெட்டு கங்காணி, டோண்ட் கேரைப் பார்த்ததும் வியப்புடன் அருகில் வந்து கேட்டார்.

“என்ன டோண்ட் கேர், ஒனக்குதான் நேத்தோட நோட்டீஸ் குடுத்தாச்சே!. நீ எங்கன வந்த?”    

டோண்ட் கேருக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.  

“வீட்ல சும்மா இருக்க முடியில கங்காணி!. அதான்..”  

அந்த பெரட்டு களமே அன்னியமாகிவிட்டதுபோல் மனசு கிடந்து தவித்தது. வேதனையுடன் சாஹூல் ஹமீது காப்பி கடையில் போய் உட்கார்ந்தார். 

“என்ன டோண்ட் கேர்?. ஒடம்பு சொகமில்லியா?. திட்டியா இன்னிக்கி?..” சாஹுல் கேட்டார்.

“அட நீ ஒன்னுப்பு. வயசாயிரிச்சாம்!. நேத்தோட நோட்டீஸ் குடுத்துட்டானுங்கப்பு..”   

“நிப்பாட்டிட்டானுங்களா?. ஆமா பின்ன. வயசாயிட்டா நிப்பாட்டிற வேண்டீதுதானே?. நீயும் பாவம், உன்னும் எவ்ளோ காலத்துக்குதான் வேல.. வேலன்னு ‘யான உழுந்தான் பாசா’ எல்லாம் ஏறி எறங்கிட்டு இருப்ப?.”

அவன் பேச்சு அவருக்கு மேலும் சலிப்பை ஊட்டியது. வெறுப்புடன் பெரட்டு களத்தைப் பார்த்தார். 

தோமஸ் கிராணியைப் பார்த்ததும் இரைச்சல் உடனே அடங்கி, ஜனங்கள் வரிசைக்குள் வந்தனர். கிராணி செக்குரோலை எடுத்து ஆஜர் எடுக்கத் தொடங்கினார்.

வெளிக்காட்டு வேலைக்காரர்கள்தான் முதலில்!. நேற்றுவரை அந்த வரிசையில் டோண்ட் கேரும் ஒருவர். 

ஆவடை என்ற பெயரில் ஆரம்பித்து வரிசையாக பலரின் பெயர்களைக் கூப்பிட்டு விட்டு பஞ்சவர்ணத்திற்கு வந்தார். அடுத்தப் பெயர் பூங்காவனம்!. இதுவரை முகத்தைப் பார்க்காமல் ‘ஆஜர்’ என்ற குரலை வைத்தே முகத்தைக் கிரகித்துக்கொண்டு வேகமாக நடந்த கிராணி, பஞ்சவர்ணத்தின் ஆஜரைக் குறித்துக்கொண்ட கையோடு யாரையோ தேடுவதுபோல் வரிசையைப் பார்த்து சற்றுத் தயங்கி, அடுத்த பெயருக்குப் போனார். 

 டோண்ட் கேர் மனம் நெகிழ்ந்து போனார். கிராணியால்கூட தனது நோட்டீஸை ஒரு கணம் தடுமாறிப் போகாமல் ஏற்றுக்கொள்ள முடியாததைப் பார்த்து தன்னிரக்கம் கொண்டு கலங்கினார். நெஞ்சு குமுறியது!. 

‘வயசாம் வயசு?. என்னா பெரிய வயசுப்பு?. 55 வயசுன்னு பாஸ்போர்ட் சொல்லிட்டா ஆச்சா?. ஒடம்பிலியும் வேலீலியும் அது தெரிய வேணாம்மா? அப்படி இன்னா வேல செய்ய முடியாம சொணங்கி உக்காந்துட்டனாம் இப்ப?. உண்மீலியே பாக்கப் போனா எனக்கு இப்ப வயசு 53 தான ஆவுது!. இருந்தாலும் வெறும் வயசா அது?. அவ்ளோவும் அனுபவமாச்சே, சும்மாவா!. மரத்தோட எலயா பாத்தே என்ன மிஸ்டேக்கு?. மாவு ஒரமா, உப்பு ஒரமா போடனும்ன்னு சொல்ற அறுவு ஆச்சே?. அப்படிப்பட்டவன எவ்ளோ சாதாரணமா நிப்பாட்டிடாய்ங்க கமுலாட்டிங்க?.’ 

மணி எட்டாகிவிட்டிருந்தது. ஜூலை மாத ரப்பர் மரத்தைப்போல் பெரட்டு வெறிச்சோடிக் கிடந்தது. கடைக்கு சாப்பிட வந்தவர்கள் எல்லோருமே, ‘என்ன டோண்ட் கேர், திட்டியா இன்னிக்கி?.’ என்று கேட்டது அவருக்கு மேலும்  சங்கடத்தைக் கொடுத்தது. 

வீட்டிற்குக் கிளம்பிப் போனார்!.

பெரியவர்கள் வேலைக்குப் போயிருந்தனர்.. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். வயதாகிப் போன தாத்தா, பாட்டிகள் மட்டுமே வீட்டில் முடங்கிக் கிடந்தனர். படிக்கப் போகாத பிள்ளைகளோ தம்பி, தங்கைகளைக் கூட்டி, ‘அந்திக் கடை’ வைத்து விளையாடிக் கொண்டிருந்தன.

‘அந்திக் கட..  சந்திக் கட..

ஆவணி பூத்தக் கட..

வெள்ளி மொளச்ச கட

வெங்காயம் வித்த கட

கப்சிப்..  கதவ சாத்..’

உடம்பில் தெம்பிருந்தவர்கள் யாருமே சும்மா இருக்கவில்லை. பெரஞ்ஜாவைப் பார்த்தார். இன்னும் மடித்து வைக்கப்படாதிருந்த பாயையும், தலைகாணியையும் பார்க்க எரிச்சலாய் இருந்தது. என்ன செய்வது; எங்கே போவது என்று மூளை குழம்பிக்கொண்டிருந்த போதே, இலக்கை கால்கள் தீர்மானித்துவிட்டது போல் டோண்ட் கேர் எழுந்து, ஏதோ யோசனையில் தன்னை மறந்து நடந்தார்.

அந்திக் கடை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள், ‘டோண்ட் கேர் தாத்தா டோய்..’ என்று ஓடி வந்தனர். அவர், அவர்களைக் கண்டுக்கொள்ளாததைப் பார்த்தும், பயந்துபோய் நின்று, அவரை ஒரு மாதிரியாகப் பார்த்து, விலகிப் போயினர். 

இவ்வளவு காலமாக நினைவில் எங்கோ புதைந்து கிடந்த செய்திகள் யாவும், எஸ்டேட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட உடனேயே திடீரென கிளர்ந்தெழுந்து, நினைவில் படர்ந்து அலைக்கழித்தன. பார்வையில் பட்ட ஒவ்வொரு காட்சியும் தனக்குப் பின்னால் புதைந்து கிடந்த கதைகளுக்குள் அவரை இழுத்து ஹிம்சிக்கத் தொடங்கின.

– அரசு வேம்பு மரங்கள்!.

மாரியம்மன் கோவிலுக்கு எதிரே ஒன்றோடு ஒன்று பிணைந்து வளர்ந்திருந்த அரசு, வேம்பு மரங்கள்!. ஒரு காலத்தில் வயதுக்கு வந்த ஊர்ப் பெண்கள் பலருக்கும் கல்யாணம் நடக்காமல் இருந்தபோது ஒரு தீமிதிக்கு அம்மன் அருள் வந்து, அந்த மரங்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி குறி சொன்னது. அதன்படியே சுற்றுச் சுவர் எழுப்பி, கல்யாணமும் செய்து வைத்தப் பின்னர் முருகம்மா, கமலா, வள்ளி என்று ஒவ்வொருவராய்க் கல்யாணமாகிப் போயினர். டோண்ட் கேர் விரும்பிய கங்காணி மகள் கமலாவும் அப்படித்தான் இவரை ஏமாற்றிவிட்டுப் போனாள்.  

-பெரிய ஆறு!. 

தேக்கு மரங்களாலான திறந்தவெளி பாலத்தைக் கொண்ட ஆறு!. அன்னம்மா மகன் ஊமையன் ஒரு மழை நாளில் அந்த ஆற்றில் விழுந்துவிட்டபோது, நான்கைந்து வாழை மரங்களை ஒன்றாகக் கட்டி ஆற்றில் போட்டு, ஒரு பகல் முழுக்க இவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. மாலையில் தீயனைப்புப் படையினர் வந்து, ஆற்றுச்சுழல் பிணத்தை பாறைகளின் இடுக்கில் கொண்டுபோய் சொருகியிருப்பதாகச் சொல்லி மீட்டெடுத்தனர். அந்தச் சம்பவங்களுக்குப் பின்னர், பாலத்தைக் கடந்து போகையில், கால்கள் தாமாகவே ஆற்றுப் பக்கமாக இழுத்துக்கொண்டுப் போவதாகப் பலரும் சொல்லத் தொடங்கினர். உடனே,  கர்ப்பிணிப் பெண்கள் யாரும் உச்சி வேளையில் பாலத்துப் பக்கம் போகக்கூடாதென்று எச்சரிக்கப்பட்டனர். அதோ!. ‘அபாயம்’ என்ற அறிவிப்பு பலகை, இப்போதும் அதைத்தான் உறுதி செய்துக்கொண்டிருக்கிறது.    

-குத்தாங்கட்டை!.

அதில் முனி குடியிருந்தது. ஒரு முறை, டக்கு டிரைவரின் பெண்ஜாதி பாப்பாத்தி, மரம் வெட்டிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று தரையில் விழுந்து புரண்டு, மரத்தின் உச்சியில், கருப்பா யாரோ தன்னைக் கூப்பிடுவதாகச் சொல்லியவளுக்கு வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. முனி அவளை அடித்து விட்டதாக ஊர் பேசிக்கொண்டது. அன்றிலிருந்து ஊர் மக்கள் வருடந்தோரும் ஆடு வெட்டி, ரத்தக் காவல் கொடுத்து முனியை சாந்தப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

– மாட்டுப் பட்டி

எஸ்டேட் ஜனங்கள் அங்குதான் மாடுகளை வளர்த்தனர். அப்போது, ‘Paraquat’ பாஷாணம் அடிக்கத் தொடங்கிய புதுசு. ஒரு நாள், மாடுகள் சில பாஷாணம் தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்து விட்டதால் உரிமையாளர்கள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அரற்றினர். ஊர்ப் பெரியவர்கள் சிலர் தமக்கு தெரிந்த நாட்டு மருத்துவமென்று ‘ஜாமாங்கூடு’லிருந்து மனித மலத்தை எடுத்து, கஞ்சித் தண்ணீரில் கரைத்து மாடுகளின் வாயில் பலவந்தமாக ஊற்றி விட்டனர். கொஞ்ச நேரத்தில் உயிரைப் பிழியும் குரலில் ஒக்கரித்து வாந்தியெடுத்து அவை பட்ட அவஸ்தை, பார்க்கச் சகிக்கவில்லை. சில மாடுகள் பிழைத்தன!. சில மாடுகள் இறந்தன!. 

-யான உழுந்தான் பாசா!. 

டோண்ட் கேரால் நம்பவே முடியவில்லை!. பொடி நடையாகவே அவர், ‘யான உழுந்தான் பாசா’ பக்கம் வந்திருந்தார். தனது அப்பா காலத்தில், இந்தப் பாசாவில் யானை ஒன்று விழுந்து மேலே ஏறி வர முடியாமல் நாளெல்லாம் பிளிறிக் கொண்டிருந்ததாம்!. வனத்துறை ஆட்கள் வந்தே அதைக் காப்பாற்றினார்களாம். அன்றிலிருந்து அது ‘யான உழுந்தான் பாசா’ ஆகிப்போனது. அன்று, அங்கே பாஷாணம் அடிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தனசாமிதான் கங்காணி!.  டோண்ட் கேரைப் பார்த்ததும் கையசைத்து நட்பைக் காட்டினான். அதைப் பார்க்க இவருக்கு வெறுப்பே எஞ்சியது. அவன் மேலிருந்த கோபம் மேலும் அதிகரித்தது. இவரை விட 5 வயது இளையவன்!. இருவருமே பால்ய கூட்டாளிகள்!. இளமையில் அவர்கள் சேர்ந்து செய்யாத போக்கிரித்தனமில்லை!. 

-பிலகாங் மத்தி!.

சம்பள நாட்களில் செந்தூல் கள்ளுக்கடைக்குப் போய்வந்த பெரியவர்களிடமிருந்து கேள்விப்பட்ட பிலகாங் மத்தி கதைகளால் அவர்களிருவரும், இரவுதோரும் சக்தியை விரயமாக்கிக்கொண்டிருந்த காலம்!. ஒரு கட்டத்திற்குமேல், வாய்மொழித் தகவல்கள் கற்பனைக்குப் போதவில்லை!. நேரடி அனுபவத்திற்கு ஏங்கித் தவித்து, ஒரு சனிக்கிழமை கோலாலம்பூருக்கு கிளம்பிச் சென்றனர். தமிழ் நேசன் எதிரே இருந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி, பிலால் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு, கொலிசியம் தியேட்டரில் எம் ஜி ஆர் நடித்த ஆனந்த ஜோதி படத்தைப் பார்த்துவிட்டு, மாலையில் சௌகிட் ரோட்டிலிருந்த ‘பிலகாங் மத்தி’ என்ற ‘தேவிடியா தெரு’வுக்குப் போனார்கள், இந்திய விபச்சாரியிடம் போக கூச்சப்பட்டு சந்தனசாமி ஒரு மலாய்க்காரியையும், டோண் கேர் ஒரு சீனத்தியையும் ஒருமணி நேரத்திற்கென்று ‘புக்’ செய்துக்கொண்டனர். தமது பராக்கிரமத்தைக் கண்டு அந்த விபச்சாரிகள் வாயடைத்துப் போகவேண்டுமென்று எண்ணிக்கொண்டனர். ஆனால், உள்ளே போன சந்தனசாமி ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தான். ஒரு நிமிட வித்தியாசத்தில், இன்னொரு அறையிலிருந்து டோண்ட் கேரும் வெளியே வந்தான். விபச்சாரிகள் அம்மணமாய் எதிரே நின்று, இவர்களின் ஆடைகளை அவிழ்த்த உடனேயே இருவருக்கும் ‘பாசா’ ஆகிப்போனதைக் கண்டு விபச்சாரிகள் சிரிப்பாய்ச் சிரித்தனர்!. ஏதேதோ கற்பனைகளுடன் உள்ளே சென்றவர்களின் கதை இப்படி ஆகிப் போனதை நினைத்து இருவரும் அவமானமும் கூச்சமும் பட்டு அசடு வழிந்தனர். இதேபோல், ஒரு முறை பீ பீ பார்க்கில் ரோஸ் சானின் அம்மண நடனத்தைப் பார்க்கச் சென்று, அவள் தன் பெண்ணுறுப்பில் வைத்து புகைத்துக்கொடுத்த சிகரெட்டை இருவரும் புகைத்து மயங்கியது; ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அறிமுக கதாநாயகி தோன்றிய காட்சியைப் பார்த்து இருவரின் சிலுவார்களும் ஈரமாகிப் போனது… 

இப்படி எத்தனையோ போக்கிரித்தனங்களை ஒன்றாகச் செய்த கூட்டாளிகள்!. ஒரு வயிற்றில் பிறக்காத குறைதான். ஆனால், இப்போது இவன் எஸ்டேட்டை விட்டே வெளியாக வேண்டி இருக்கும்போது, ‘நீ பொறந்த இந்த மண்ண உட்டு எங்கடா போவ?. நீயோ ஒண்டி கட்ட வேற. ஆதரவுக்குன்னு எங்கள உட்டா ஒனக்கு யாரு இருக்கா?. வேல இல்லாட்டி வூட்டதான புடுங்கிக்குவானுங்க. உன்னோட ஒன்னு வுட்ட தம்பீ நான்னு, பேசாம நம்ம வூட்ல வந்து இருந்துட்டு போடான்னு ஒரு வார்த்த சொன்னானா பாவி!.’ என்று எண்ணி, டோண்ட் கேர் மிகவும் மனஸ்தாபம் கொண்டார். சந்தனசாமிக்குப் பரவாயில்லை!. அவனுடைய ஒரே மகனும் எஸ்டேட்டிலேயே தனி குடும்பமாக வாழ்ந்து வந்ததால் வயதாகி விட்டால் மகனோடு போய் இருந்துகொள்ளலாம்.  

சந்தனசாமி என்று மட்டுமில்லாமல் தொப்லா கவுண்டன், திக்கு வாய் கோபால், ரசியா என்று மேலும் சில பால்யகால நண்பர்கள் இன்னும் எஸ்டேட்டில் இருக்கவே செய்தனர். ஆனால், அவர்கள் யாருமே இவருக்கு ஆறுதல் சொல்லி ஆதரவு தர வராததை நினைத்தபோதுதான் நெஞ்சு கொதித்தது. ‘என்னதான் கூட்டாளியா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதான?.’ என்று தன்னிரக்கம் கொண்டு கலங்கினார். அப்போது, ஏனோ இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்து போன கூட்டாளிகளான சங்கப்பிள்ளை, மாரிமுத்து, லூர்துசாமியை நினைத்துக்கொண்டார். அவர்கள் இருந்தால் நிச்சயமாக தன்னை இப்படி அநாதையாக விடவே மாட்டார்கள் என்று நம்பினார். அவர்களை நினைத்து மிகவும் ஏங்கினார்.

‘அவர்களைப் போலவே நானும் செத்துப் போயிருந்தால் இந்நேரம் அவர்களோடு நானும் இந்த எஸ்டேட்டின் மண்ணோடு மண்ணாகக் கலந்திருப்பேனே!. அவர்கள் பாக்கியசாலிகள்!.’     

பிறந்து, வளர்ந்த மண்!. பழகிக் கலந்த மனிதர்கள்!. ஒரு வயிற்றில் பிறவாத உறவுகள்!. வாழ்ந்து சேகரித்த நினைவுகள்!. இதையெல்லாம் விட்டுப் பிரிந்து, எங்கே போய் வாழ்வது?. 

டோண்ட் கேர், எஸ்டேட்டை விட்டுப் போக இன்னும் ஒரு வாரம் இருந்தது. அவருக்கு அந்த நாட்கள் தேவைப்படவில்லை போல!. 

இரண்டு நாட்களுக்குப் பின்னர்,

‘டோண்ட் கேர் எங்க போயிட்டார்ன்னே தெரியிலியே?. ரெண்டு நாளா ஆளையே காணல?. வீட்ட காலி பண்ண இன்னும் ஒரு வாரம் இருக்கே?. போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த சொல்ல தோன்ல பாரு!. ச்சே, என்னா மனுஷன்?.’ 

சந்தனசாமியும் இன்னும் சில கூட்டாளிகளும் மிகவும் குறைப்பட்டுக் கொண்டனர். 

இரண்டாவது வாரம்!.   

செம்மண் சாலையில் லொட.. லொடத்தபடி எஸ்டேட் சுடுகாட்டைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த பஸ்சிலிருந்த சந்தனசாமியின் பார்வை சுடுகாட்டின் பக்கம் சென்றது. புதைப்பதற்கு முன், பிணத்தைக் கிடத்தி, சாங்கியம் செய்யப் பயன்படுத்தும் வாங்கில் யாரோ படுத்து, பஸ்சைப் பார்த்தபடி சுருட்டு புகைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது!. 

‘யாரது?..’

பார்வையை மறைத்துக்கொண்டு பின்னோக்கி ஓடும் ரப்பர் மரங்களுக்கிடையே படுத்திருப்பவரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.

பஸ்சிலிருந்து யாரோ தன்னை எட்டி எட்டிப் பார்ப்பதை இவர், கொஞ்சமும் சட்டை செய்யவேயில்லை!.    


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “டோண்ட் கேர்”

  1. அந்திமத்தின் வெறுமையைப் பற்றிய நிதர்சனமான கதை. ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை, ஒரேடியாய் ஸ்தம்பிக்கும்போது மனித மனங்கள் அதை எதிர்கொள்ளும் பாவனைகள் வேறுபடுகின்றன. சிலது வலியாகவும், இன்னும் சில ஏக்கங்களாகவும் வெளிப்படும், ஒரு சிலருக்குதான் அதையும் கடந்து செல்லும் மார்க்கம் கிட்டும். அந்த விஷயத்தில் பூங்காவனமும் புத்தன் தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.