ஒரு வாட்ஸாப் மொழிபெயர்ப்பு : ஷெல்லியின் “Autumn: A Dirge”

நண்பரொருவர் வாட்ஸாப்பில் தொடர்புகொண்டார். புத்தகமெல்லாம் எழுதியிருக்கும் சிறுகதை ஆசிரியரும் கூட. அவருக்கு அவ்வப்போது மொழிபெயர்ப்பு வெறி வந்துவிடும் எதையாவது மொழிபெயர்த்து நானென்னவோ மொழியாக்க உஸ்தாத் போல், என்னிடம் அனுப்பி கருத்து கேட்பார். நானும் அதே பாவனையில் எதையாவது உளறி வைப்பேன். இம்முறை ஷெல்லியின் ‘Autumn: A Dirge’ கவிதையை அனுப்பியிருந்தார். இது அப்படியொன்றும் பிரசித்தி பெற்ற கவிதை அல்லவே, இதை ஏன் மொழிபெயர்த்தார் என்று என்னைப் போல் நீங்களும் யோசிப்பீர்கள் என்பதை அனுமானித்ததால் என்னவோ அதற்கான காரணத்தையும் மொழிபெயர்ப்புடன் இணைத்திருந்தார். அதை இங்கே சிறு மாற்றங்களுடன் அளிக்கிறேன்:

“கவிதை, இந்திய அல்லது எந்த உலக கவிதையும் என்னுடைய முதல் சாய்ஸ் இல்லை. ஷெல்லி கவனத்திற்கு வந்தது, காந்தியைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் போது. ஷெல்லியின் “The mask of Anarchy” தான் காந்தியின் வன்முறையில்லா ஒத்துழையாமை எண்ணங்கள் வடிவு பெற ஓர் (one of the) மூலம் என்று படித்தபோது. கையில் இருக்கும் ஷெல்லி தொகுப்பை “வருடிக்கொண்டே” வரும்போது இந்த கவிதை. தலைப்பு – இலையுதிர்காலம். சரி, தற்போதைய ஸீஸன், இயற்கை, எப்படி ரொமாண்டிசைஸ் பண்ணியிருக்கார்னு பார்த்தேன்.

உண்மையில், இது சாதாரண கவிதை, படிமம்தான். சற்றே ஏமாற்றமாகவே இருந்தது. ஆனாலும் மொ.பெயர்க்கலாம் என்றுதான் இறங்கினேன்.ஆஸ்திரியாவில் மூத்த எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது (மொ.பெ பற்றி) – மொ.பெயர்ப்பாளர் எந்த அளவிற்கு “சுதந்திரம்” எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பேசுகையில் கிட்டதட்ட none என்றார்.

மூலத்தில் குறிப்பிடப்படாதவற்றை மொ.பெயர்ப்பாளர் (தம் சுய வாசிப்பின் வழியே) வேறு லெவலுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று புரிந்துகொண்டேன் (அப்படிச்செய்தால், அது மூலத்தைத் தழுவிய ஆனால் “புது”, இன்னொரு ஆக்கம்)

எனவே, முடிந்தவரை, வார்த்தைக்கு வார்த்தை நேரடியான மொ.பெயர்ப்புதான். கரண்டியில் இல்லையெனில் பாத்திரத்தில் இல்லாததால்தான். “

இனி ஆங்கில மூலமும் அவரது மொழிபெயர்ப்பின் வரைவும்:

Autumn: A Dirge

I.
The warm sun is failing, the bleak wind is wailing,
The bare boughs are sighing, the pale flowers are dying,
And the Year
On the earth her death-bed, in a shroud of leaves dead,
Is lying.
Come, Months, come away,
From November to May,
In your saddest array;
Follow the bier
Of the dead cold Year,
And like dim shadows watch by her sepulchre.

II.
The chill rain is falling, the nipped worm is crawling,
The rivers are swelling, the thunder is knelling
For the Year;
The blithe swallows are flown, and the lizards each gone
To his dwelling;
Come, Months, come away;
Put on white, black, and gray;
Let your light sisters play–
Ye, follow the bier
Of the dead cold Year,
And make her grave green with tear on tear.

இலையுதிர்காலம் – ஓர் தன்னிரக்கப் பாடல்/ கவிதை / இரங்கற் பா

I
வெதுவெதுப்பான இரவி மறைந்து கொண்டிருக்கிறான்; இருண்ட காற்று ஓலமிடுகிறது.

வெற்றுக்கிளைகள் சலித்துக்கொண்டிருக்கின்றன; வெளிர் மலர்கள் இறந்து கொண்டிருக்கின்றன

இந்த ஆண்டெனும் முதியவள், தன் மரணப்படுக்கையில்/ இறுதிப் படுக்கையில் புவியில், இலைகளின் சவப்போர்வையின்கீழ் கிடக்கிறாள்.

நவம்பரிலிருந்து மே வரையிலான மாதங்கள் சோக அணி வகுத்து காத்துக்கொண்டிருக்கின்றன.

மரித்துப் போன குளிர்ந்த/விரைத்துப்போன முதியவளின் சவப்பெட்டியைப் பின்தொடர்கின்றன;

மங்கலான/ ஒளியிழந்த/ சோபையான நிழல்கள் போல அவளின் கல்லறையின் அருகே காத்துக்கொண்டிருக்கின்றன / கவனித்துக்கொண்டிருக்கின்றன

II.
குளிர் மழை பெய்துகொண்டிருக்கிறது; குளிரில் நடுங்கிக்கொண்டே புழு தவழ்கிறது.
நதிகள் பெருகுகின்றன; இடி முழங்குகிறது.

களி குருவிகள் பறந்து போய்விட்டன, பல்லிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிவிட்டன.

குளிர் மாதங்கள் வந்துகொண்டிருக்கின்றன – வெளுத்த, கருத்த மற்றும் பழுப்பு மாதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆம், முதியவளின் (வருடத்தின்) சவப்பெட்டியை தொடர்கின்றன, அவள் கல்லறையை கண்ணீரால் கழுவி பசுமையை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன (வசந்த காலத்தை எதிர்பார்த்து)


கவிதையைப் பற்றிய சில உரையாடல்கள்

“வை திஸ் கொலவெறி?  ஷெல்லியின் பிரமாதமான கவிதைளில் ஒன்றில்லை என்றாலும் லிரிக்கல் ஃபீலை கவிதையின் ஒசை நயத்தால் ஷெல்லி கடத்திவிடுகிறார். நீங்கள் இன்னமும் சற்று சுதந்திரமாக மொழி பெயர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. வரிகளின் வீழும் ஒசையில் உருவாகும் இசையில் கவிதை பேசும் இழப்பைக் கைப்பற்ற முயன்றிருக்கலாம். இதைச் செய்ய நீங்கள் சங்ககாலப் பிரயோகங்களைக்கூட பயன்படுத்தாலாம் – உதாரணமாக எல்லை கழிய வாடை வாட்ட / பாழ்கிளை நெட்டுயிர்க்க… என்றெல்லாம் கூட சிந்தித்துப் பார்க்கலாம். தப்பில்லை. துல்லியத்தை சிறிது கைவிட்டாலும் கவிதையின் மையத்தை அதன் வலிமை என்று நான் கருதும் அதன் இசையில் கைபற்றியிருப்பீர்கள். – என்னோட அஞ்சு பைசா !” என்று நானும் என் முலாம் பூசிய அறிவுரையை அனுப்பி வைத்தேன். 

ஆனால் கவிதை இன்னமும் உறுத்திக் கொண்டிருந்தது. இயல்பாகவே மனம் சில வரிகளை மொழிபெயர்க்கத் தொடங்கியது. என்னுடன் இணைந்து மொழிபெயர்க்கும் ஒரு நண்பருக்கு கவிதையின் மூலத்தை அனுப்பினேன். அவர் பாரதிதான் இதைச் செய்ய முடியும் என்று முதலில் கூறிவிட்டு ஒரு வரைவை  சற்று நேரத்தில் அனுப்பி வைத்தார். நான் சில மாற்றங்களைச் செய்தேன். இருவரும் சேர்ந்து வாட்ஸாப்பில் சிறிது பட்டி பார்த்தோம்.

வெப்பம் தணியும் சூரியன், ஓலமிட்டழும் காற்று,
மொட்டைக் கிளைகள் பெருமூச்சு, வெளிறி மலர்கள் உதிர,

என்ற எழுவாய் / பயனிலை பெயர்ச்சொல்/ வினைச்சொல் போன்றவை தாறுமாறாக் கிடக்கும் பட்டியல் அடைகளால் கூர்மையுறும் பெயர்ச்சொற்களின் சீரான பட்டியலாக இப்படி மாறியது

வெப்பம் தணியும் சூரியன், ஓலமிட்டழும் காற்று,
பெருமூச்சிரைக்கும் மொட்டைக் கிளைகள். வெளிறி உதிரும் மலர்கள்

Come, Months, come away,
From November to May,

என்ற வரிகள் முதலில்

செல்லுங்கள், மாதங்களே, விலகிச் செல்லுங்கள்,
நவம்பர் முதல் மே வரை,

என்று மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.

இதைப் பற்றி சற்று விவாதித்தோம்

-come away, விலகி வாருங்கள்? அதாவது அவற்றை வருடத்துடன் சம்பந்தப்படுத்த விரும்பாதது போல், நவம்பரிலிருந்து மே மாதங்களை வருடத்திலிருந்து பிரித்தெடுக்க, கவிஞர் முயல்கிறார் என்று நினைக்கிறேன். sort of wishful thinking அவற்றை repress பண்ண பார்க்கிறார். April is the cruellest month etc. குளிர்கால மாதங்கள் இருண்மையானவை / கனமானவை. இதனால்தான் பிற மாதங்களை “lighter sisters” என்று அழைக்கிறார்.

ஆமாம், குளிர்காலம் ஆரம்பித்த உடன் வருடம் செத்துவிடுகிறது. இயற்கை மாறுகிறது – வீழ்கிறது, வெளிர்கிறது, உதிர்கிறது. வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் வாழ்வாகவும் குளிர்காலத்தைச் சாவாகவும் கவிதை வரையறுக்கிறது.

ஆமாம், இப்போதுதான் கவனித்தேன்… இந்த நவம்பர் முதல் மே மாதங்களே வருடத்தை கொலை செய்துவிட்டன என்ற பொருளும் கவிதையில் பொதிந்திருக்கிறது. கொலைகார்கள் சாவு ஊர்வலத்தில் பாடையை பின்தொடரும் முரணும்.

ஆமாம் அதனாலதான் அவற்றை Dim shadows watching the sepulchre என்று அடையாளப்படுத்தறார்.

முதல்ல சாதாரணக் கவிதைன்னுதான் தோணிச்சு, ஆனா இப்போ கொஞ்சம் நுண்மையாக இருக்கற மாதிரி இருக்கு. Of course, he is Shelley!

ஆனா இந்த கவிதையை கொஞ்சம் ஜாலியாத்தான் எழுதியிருக்கார்னு தோணுது. இரங்கலும் / துயரும் செயற்கையானதும் கூட. He is somewhat ironic and playful.

இந்த Blithe – playful or indifferent ?

Happy தான். சந்தோஷமான குருவிகள் இப்போது பறந்து விட்டன.

indifferent too – ஏன்னா செத்துப்போன வருடத்தப் பத்தி அதுங்களூக்கு கவலையில்ல.

ஆமாம். ஆனா இதப் படிக்கறச்ச எனக்கு முதல்ல ஆடனோட அந்த “Stop the Clocks” (அதான் அந்த Four Weddings and a Funeral படத்துல வந்துதே) கவிதைதான் ஞாபகத்துக்கு வந்துது. இரண்டுக்கும் ஒரே தாளகதி

நேரம். ஆடனக்கூட Hugh Grant / Josh Hannah மூலமாத்தான் நெனவுபடுத்திக்க வேண்டிருக்கு.

ஹா ஹா, ஆமாம். ஆனா அது மிக நெகிழ்ச்சியான கவிதை வாசிப்புதான்.

ஆமாம் நல்ல படம், நான் அந்த சர்ச்சுக்குப் போயிருக்கேன்.

கவிதைய ஏற்கனவே படிச்சிருந்தாலும் அந்த படம் அத வேற ஒரு லெவலுக்குக் கொண்டு போயிருச்சு. ஆனா அது ஒரு விதத்துல ஒரு வைரமுத்து பாணி கவிதைதான். எல்லாமே மிகை அதுல. ஷெல்லியோட இந்தக் கவிதையும் அப்படித்தான்.

ஆனா ஆடன்ல கவிதைய மூஞ்சில அறையறா மாதிரி ஆக்கற அளவுக்கு துயரமும் இருக்கு.

ஆனா ஆடன் கவிதைன்னு வரச்சே கொஞ்சம் over dramatic தான்.

I was wrong – இதவுட ப்ளண்டா கவிதைல பாட முடியுமா? இன்னோரு கவிதையில வர அந்த “love one another and die” வரியும் அந்த ரகம்தான்

Asking pigeons to wear crepes…

ஆமாம், Pour the ocean ஒரு அருமையான வரி…நியாயமா பார்த்தா ஆடன் கவிதைய விட நமக்கு ஷெல்லியோட கீட்ஸ் சாவப் பாடற Adonais கவிதைதான் ஞாபகத்துக்கு வரனும். அதுலயும் காலத்த அவர் ரெண்டா பிரிக்கறார். ஆனா இங்க அவர் கீட்ஸ் தலைய உறைய வைக்கற பனிய உருக்க மூடியாத கண்ணீர ரிப்ரெஸ் பண்ண பார்க்காம எக்காலத்துக்கும் அத நெனவுல வெச்சுக்க வேணுங்கற அர்த்தத்துல கவிதைய வழி நடத்தறார்.

ஆமாம் மிக இமாஜினேடிவ் கவிதை.ஹௌஸ்மன், டென்னிஸன், கிரேன்னு அவங்களோட இரங்கற்பா மரபப் பத்தி யோசிச்சுகிட்டே போலாம். 


வாட்ஸாப் உரையாடல் வழியே உருவான மொழியாக்கத்தின் இறுதி வடிவம்:
I

வெப்பம் தணியும் சூரியன், ஓலமிட்டழும் காற்று,
பெருமூச்சிரைக்கும் மொட்டைக் கிளைகள். வெளிறி உதிரும் மலர்கள்,
ஆண்டோ, மண்ணில், மரணப் படுக்கையில்
மரித்த இலைகள் போர்த்து,
வாருங்கள், மாதங்களே, விட்டு வாருங்கள்
நவம்பர் முதல் மே வரை,
துயர் வரிசை கட்டி நில்லுங்கள்.
கட்டையாய்ச் சில்லிட்ட சவத்து ஆண்டின்
பிண ஊர்வலம், உடன் செல்லுங்கள்,
கல்லறையில் நிழற்சாயைகளாய் காவல் நில்லுங்கள்.

II

குளிர் மழை பெய்கிறது, பனி கிட்டிப் புழு ஊர்கிறது,
கரை புரள்கிறது வெள்ளம், பறையென ஒலிக்கும் இடியோசை,
முழங்குகிறது இவ்வாண்டின் முடிவை;
களிக்குருவிகள் பறந்து போயின, பல்லியும் பாம்பும்
மண்ணுள் தஞ்சம் புகுந்தன;
வாருங்கள், மாதங்களே, விட்டு வாருங்கள்,
வெண்மையும் கருப்பும் பழுப்பும் பூணுங்கள்;
உம் ஒளிமிகு தங்கைமார் ஆடிப் பாடட்டும்-
ஆம், கட்டையாய்ச் சில்லிட்ட சவத்து ஆண்டின்
பிண ஊர்வலம், உடன் செல்லுங்கள்,
நில்லாக் கண்ணீர் நனைத்து அவள் கல்லறை பசியம் பூசட்டும்.


மறுநாள் காலையில் மொழிபெயர்ப்பை பற்றி ஒரு பதிவை எழுதியிருப்பதாக நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

கவிதை வாசிப்பு

ஷெல்லியின் கவிதையொன்றை வாட்ஸ்அப்பில் பகிர்ந்திருந்தார் நண்பர். அப்போது ஒரு பெரும் கவலையுடன் மருத்துவமனையில் இருந்தேன். அதற்கேற்றாற்போல் கவிதையும் மரணம், பிரேதம், கல்லறை, கண்ணீர், இப்படி பிரமாதமாக இருந்தது. என்னடா இது அபசகுனம் என்று துணுக்குற்ற மனதுடன் கவிதையை விருப்பமில்லாமல் வாசித்தேன்.

கோடையின் முடிவைப் பாடும் கவிதை, குளிர்கால மாதங்களை நோக்கிப் பேசுகிறது. கடைசி வரியில் ஷெல்லி, “கண்ணீர் மேல் கண்ணீர் சிந்தி அவள் கல்லறையை பச்சையாக்குங்கள்” என்று கேட்டுக் கொள்கிறான் (turn green).

ஜீனியஸ் தளத்தில்கூட, “வரப்போகும் வெயில் காலத்தின் பசுமைக்கு அவள் கல்லறையை தயார் செய்யுங்கள் ,” என்றுதான் போட்டிருக்கிறார்கள். அது சரியாகப்படவில்லை, அது ஒன்றும் விவசாய நிலமோ காடோ அல்ல. அப்புறம் யோசித்ததில் பாசி படர்வதைச் சொல்கிறார் என்பது புரிந்தது. ஒரு இடத்தில் தொடர்ந்து ஈரம் கசிந்து கொண்டே இருந்தால் அப்படித்தானே ஆகும்?

இந்த புரிதல், அது மனதில் எழுப்பிய காட்சி, கவிதையில் அவர் தொடர்ந்து வெளிப்படுத்தும் வெவ்வேறு உணர்வுகள், என் மனதை திசைதிருப்பி, அதன் அழகில் லயிக்கச் செய்து, அப்போதைய கவலையை லேசாக்கி விட்டது. அப்புறம் டாக்டரை பார்த்து விட்டு வரும்போது கவலை காணாமலே போய்விட்டது.

***

மொழியாக்கத்தை முதல் நண்பருக்கு அனுப்பினேன். மூல மொழியில் தொடர்ந்து கவிதைகளை வாசித்து செவித்தலை கூர்படுத்திக் கொள்வது மொழிபெயர்ப்புக்கு அத்தியாவசியம். அப்போதுதான் கவிதை அதன் மரபில் எவ்வாறு பொருந்துகிறது என்பதை நாம் உணர்கிறோம். அதன்பின் உங்கள் மொழியில் அதன் மரபின் பிரத்யேகங்களுடன் கவிதையை உங்களால் கடத்த முடியும். பெரும்பாலான தமிழ் மொழிபெயர்ப்புகளில் இது நிகழ்வதில்லை. நம் மொழியில் பாண்டித்யம் இருப்பதே போதுமென்று அவற்றை மொழிபெயர்த்தவர்கள்  நினைகிறார்கள் என்று தோன்றுகிறது. ஏஐ உலகில் இது மேலும் பலவீனமாகலாம். ஷெல்லியின் இந்த Autumn கவிதையையே எடுத்துக் கொள்வோம், அதை ஆங்கிலக் கவிதையின் ரொமாண்டிக் மரபில் இருத்தி  வாசிக்க வேண்டும். குறிப்பாக கீட்ஸின் Ode to Autumn  கவிதையுடனும், ஏன் ஷெல்லியின் பிரபலமான Ode to West Wind,  கீட்ஸ் மறைவப் பாடுகிற Adonais  கவிதைளோடக் கூட நாம் வாசித்துப் பார்க்கலாம். இன்னும் துணிவான வாசகர் அதிலிருந்து ஆடனின் Stop the Clocks  என்று தொடங்கும் Funeral Blues கவிதை வரையிலும் அவ்வாசிப்பை நீடிக்கலாம்… என்று மனதில் தோன்றியதை எல்லாம் கவிதையுடன் அவருக்கு அனுப்பி வைத்தேன். 

அவருக்கு அது உவப்பாகவே இருந்தது. 

மிகவும் இறுக்கமாக லிட்டரல் 1:1 மொழிபெயர்ப்பு செய்யத் தேவையில்லை என்று கற்பிதத்தை ஒரு take-away ஆக எடுத்துக்கொள்வதாக பதிலிட்டார். ஷெல்லியின் Mask of Anarchy கவிதையோட இரண்டு பத்திகளை இன்னும் சில நாட்களில் மொழிபெயர்க்கப் போவதாக பயமுறுத்தவும் செய்தார்.

Stop the clocks!


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.