(1) நித்தியம்
ஆனந்தத்தைத்
தன்னோடு
தளைப்படுத்திக் கொள்கிறவன்
சிறகடிக்கிற வாழ்வைச்
சீரழிக்கிறான்.
ஆனந்தம்
பறந்து போகையில்
அதை முத்தமிடுகிறவன்
நித்தியத்தின்
சூரிய உதயத்தில்
வாழ்கிறான்.
வில்லியம் ப்ளேக்
வில்லியம் பிளேக்( 1757-1827): ஆங்கிலக் கவிஞர். ஓவியர். கற்பனா காலகட்டத்தின்(romantic age) கலை மற்றும் கவிதையுலகின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவர்.
(2) உன் தொலைந்த நினைவுகளை கண்டுபிடித்த இரவு

தொலைந்த உன் நினைவுகளை
கண்டுபிடித்த இரவு
அவற்றைக் கூட்டிச் சேர்க்கிறது உள்ளே-
வறண்ட குறுங்காட்டின் மீது
வசந்தம் கரவாய்க்
கீழிறங்கியது போல்,
குளிர் பாலைக்காற்றின்
சலசலப்பும் அசைவும் போல்
காய்ச்சல் கண்ட கண்ணிமை
சட்டென நலமுற்று
குளிர்ச்சியுறுவது போல்.
ஃபெயிஸ் அஹ்மது ஃபயிஸ் (Faiz Ahmed Faiz)
(Translated from Urudu by Keki Daruwalla)
ஃபைஸ் அகம்து ஃபைஸ் (1911-1984): பாகிஸ்தானியக் கவிஞர்; மிகவும் கொண்டாடப்பட்ட உருது எழுத்தாளர்.
(3) தனிமையில் வாழ்வது
தனிமையில் வாழ்வது-
தோன்றும் விதத்திலே
விஷயங்கள் இருக்கிறதென்பதையும்
ஒவ்வொரு நாளுக்கும்
மறைவான ஒரு
உள்நோக்கு இல்லையென்பதையும்
கழுத்துக்கெதிராய்
காற்றின்
ஒவ்வொரு மினுக் மினுக்கான ஒளிர்தலும்
ஆவியின் இருத்தலை
தெரிவிக்கிறதில்லையென்பதையும்
வாடகைக்கு விட்ட
பல வருடங்களுக்குப் பின்னர்
திருப்பி மீட்கப்பட்ட
வெறுமை மனதின்
அறைகள்
மற்றும் அறைகளினூடே
வழுக்கிச் செல்லும்
நீண்ட அந்த பிற்பகல்களை விட
அதிகமாக வேண்டாததற்கு
கற்றலைப் பற்றியதென்பதையும்
நம்புவதற்கு
கற்பது பற்றியது
அருந்ததி சுப்ரமண்யம் (1973): இந்தியக் கவிஞர்; பதினைந்து கவிதைக் தொகுப்புகளின் ஆசிரியர்; பல்வேறு கவிதைத் தொகைநூல்களின் தொகுப்பாளர்.
(4) முட்புதரிலிருந்து சில அத்திகள்
முதல் அத்தி
இரு முனைகளிலும்
எரிகிறது
என் மெழுகுவர்த்தி-
இரவு முழுதும்
நீடிக்காது அது.
ஆனால்,
ஆ,என் எதிரிகளே
மற்றும்
ஓ, என் நண்பர்களே-
அது
இனிமையான வெளிச்சத்தை
அளிக்கிறது!
எட்னா செயின்ட் வின்சென்ட் மில்லே (1892-1950): ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் மற்றும் நாடகாசிரியர். 1923-ல் அவர் எழுதிய ஒரு கவிதைக்காக புலிட்சர் பரிசு பெற்றவர். பெண்ணியப் பங்களிப்பாளர்
(5) பாதாம் இலையிடமிருந்து கற்றல்
தான் வீழும் போது
தீயொளிர்கின்ற
பாதாம் இலையிடமிருந்து
கற்றுக் கொள்.
தரை எரிகிறது.
புவி எரிகிறது.
தீவண்ணப் பிரகாசமே
எல்லாம்.
Eunice de Souza
(6) குயில்
குயிலே, அந்த அலறல்களை நிறுத்து.
இந்த விடியலில் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
உன் துயர்க் கூட்டுக்குரலோசையோடு
சேர்ந்து கொள்கின்றன காட்டுப் புறாக்கள்.
பார்! இலைகள் பச்சையாய் ஒளிர்கின்றன.
வானம் ஒரு வித நீலத்தில்-
கடலிலிருந்து ஒரு தென்றல் கூட அங்கு.
எப்படியாவது யாம் பிழைத்திருப்போம்.
குயிலே, அந்த அலறல்களை நிறுத்து.
Eunice de Souza
யூனிஸ் டி செளஸா (1940-2017): தன் கவிதைகளின் செறிவுக்கும், எதிர்பாராத் தன்மைக்கும் சிறப்பிக்கப்படுபவர். பெண்களின் தனிமையையும், அந்நியமாதலையும், இழப்பையும் தம் கவிதைகளில் பதிவு செய்தவர். குழந்தைகள் இலக்கியத்திற்கு பங்களித்தவர்; நாவலாசிரியர்; இலக்கிய விமர்சகர்.
Source: A Time for Change , Songs of Hope and Resilience, Edited with an introduction by Jerry Pinto, Speaking Tiger Books LLP, 2024.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
