பணங்காய்ச்சி மரம்

ஜட்ஜமென்ட் டே

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் அது மஹாலிங்கம் என்கிற மாலியின் குடும்பம் தான். தஞ்சாவூரில் பெரிய ஜமீன் குடும்பமாக வாழ்ந்தவர்கள். மாலியின் தாத்தா. வெள்ளையர் காலத்தில் தனது பெயரில் டவுன் பஸ் விட்டவர். பலநூறு ஏக்கர் நிலங்கள், மாடுகள், பெரிய வீடு, அவற்றில் வரும் வாடகைகள் என்று ஏகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் மாலியின் தாத்தா விஸ்வேஸ்வர ஐயர். தோப்பில் நண்பர்களுடன், புதிதாக தயாரித்த கள்ளுடன் காணப்பட்டவர் விஸ்வேஸ்வரர். ஆடம்பர வாழ்க்கையும், அழகு மங்கைகளுமென வாழ்ந்துவிட்டு மடிந்த விஸ்வசரரின் மகன் ராஜகோபாலன் அவரை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானவர். தஞ்சையில் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று தனக்கும் தன் தங்கைக்கும் சரி பாதியாக பிரித்து, அவளுக்கு குடுக்க வேண்டிய பங்கை குடுத்து விட்டு மதராசுக்கு வந்து செட்டில் ஆனார் . சென்னை, மேற்கு மாம்பலத்த்தில் ஒரு பெரிய புத்தக கடை நடத்தி காலத்தை கழித்த ராஜகோபாலனுக்கு 3 மகன்கள். தந்தையின் சொத்துக்களை எல்லாம் பணமாக்கி அதை மூன்றாக பிரித்து 3 மகன்களுக்கும் சமமாக பிரித்து வங்கியில் வைப்பு நிதியாக (FD) போட்டு வைத்தார் ராஜகோபாலன். அவரின் மறைவுக்கு பிறகு அத்தொகை மிக பெரியதாக வளர்ந்து நிற்கும் என மூன்று மகன்களும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை முழுவதும் வேலைக்கு செல்லாவிட்டாலும் மூவர் குடும்பமும் உட்கார்ந்து சாப்பிடலாம், சகல வசதியுடன் வாழலாம் அவ்வளவு பணம். அது ஒரு பணங்காச்சி மரம்.  

இதை தவிர அவர் மேற்கு மாம்பலத்தில் கட்டிய அந்த பெரிய வீடு. அந்த வீட்டில் மூவருக்கும் சமமான பங்குண்டு என்று உயிலெழுதிவிட்டு இறந்தார் ராஜகோபாலன். 

ராஜகோபாலனின் மகன்களான சேஷாத்திரி, மூர்த்தி மற்றும் மஹாலிங்கம் வெவ்வேறு கனவுகள் படைத்தவர்கள். சேஷாத்திரிக்கு ஒரு வங்கியில் அதிகாரியாகவேண்டுமென்பது ஆசை, மூர்த்திக்கோ கிரிக்கெட் வீரராக வர வேண்டுமென்பது கனவு, நம் கதையின் நாயகனான மஹாலிங்கம் என்கிற மாலிக்கு ஒரு பெரிய தொழிலபதிராகவேண்டுமென்பது தவம். காலத்தின் சூழலில் சேஷாத்திரி, சென்னையில் உள்ள  ஒரு மிக ஆடிட்டரின் மகளை திருமணம் செய்து தனது மாமனார் அலுவலகத்துக்கு காப்பாளரானான். மனைவி சொல்லே மந்திரம் அவனுக்கு.

மூர்த்தியோ, கிரிக்கெட்டில் கிட்டதட்ட மாநில அளவு வரை கரை தேர்ந்து, அந்த ஒதுக்கீட்டில் கிடைத்த மத்திய அரசாங்க வேலையில் ‘செட்டில்’ ஆனான்.  மாலி மட்டுமே தனது கனவை விடாப்பிடியாக பிடித்து ஒரு நிறுவனம் தொடங்கினான். தன் தந்தை தனக்காக சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தான். தன் அண்ணன்கள் ஊதிய அபசகுன சங்குகளையெல்லாம் பொருட்படுத்தாமல் நிறுவனத்தை தொடங்கினான். திருமணம் செய்துகொண்டான். அத்தம்பதி ஒரு ஆண்பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் பெற்றெடுத்தார்கள். அவன் தொடங்கிய நிறுவனம் அமோகமாக சென்றது. சில நாடுகளில் கிளை அலுவகங்கள் திறக்கும் அளவு வளர்ந்து நின்றது, அந்நிறுவனம். ஆனால் காலத்தின் கோலம், ஒரு சில குளறுபடிகளாலும், ஆண்டவன் எழுதிய விதியாலும் மாலியின் நிறுவனம், ஒரு கட்டத்தில், மிக பெரிய வீழ்ச்சியை அடைந்தது. அவனின் போட்டியாளர்கள் அந்த வீழிச்சியை பயன்படுத்தி சில அரசியல்கள் செய்து அவன் எழுந்துகொள்ள முடியாத அளவு தாக்கினர். அதன் விளைவு. நிறுவனத்தை மூட வேண்டிய நிலை. இதுவரை சம்பாதித்த அனைத்து லாபங்களும் கடனை அடைக்கவே பத்தவில்லை. அதற்கு மேலும் பணம் தேவை பட்டது. மாலியிடம் அப்பொழுது இருந்தது தன் தந்தை எழுதிவைத்த அந்த மேற்கு மாம்பல வீட்டில் உள்ள அவனின் பங்கு. அதற்கு அவ்வீட்டை விற்க வேண்டும், அதற்க்கு சேஷாத்திரியும்  மூர்த்தியும் ஒத்துக்கொள்ளவேண்டும். பேசினான். மூர்த்திக்கு சம்மதம் தான் ஆனால் சேஷாத்திரியின் மனைவி அதற்குப் பச்சை கொடி காட்டவில்லை. அசைவானா சேஷாத்திரி?

அவனே, அதாவது அவனின் மாமனாரே, அதற்கு ஒரு தீர்வளித்தார்கள். அது மாலியின் பங்கை தாமே வாங்கி கொள்வது என்பது. பதிவுத்துறை அலுவலகத்தில் குறிக்கப்பட்டுள்ள சதுர அடி விலையை மிக துல்லியமாக கணக்கிட்டு மாலியிடம் குடுத்து அந்த பங்கை வாங்கினார்கள். கடன்கள் போக மிச்ச பணத்தை தன்  மகள் திருமணத்திற்காக ஒரு நிரந்தர வைப்பு தொகையாக போட்டு வைத்தான் மாலி. 

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மகள் உமா, பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மகன் ஹரிஷ் மற்றும் சாந்த சொரூபியான மனைவி ராதா போன்றோரின் வாழ்வாதாரத்தை காக்க ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றான் மாலி. அவன் வாங்கிய அந்த சம்பளம் வீட்டு செலவுக்கும், பிள்ளைகளின் கல்வி கட்டணங்களுக்கும், பிற இதர செலவுகளுக்குமே சரியாகி போக, சென்னையில் ஒரு நல்ல பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்க சற்று திணறினான். ஊருக்கு வெளியே ஒரு வீட்டிற்கு சென்று விட்டால் பள்ளி, கல்லூரிக்காக குழந்தைகள் பல மைல் தூரம் பயணம் செய்துவரவேண்டுமென்ற காரணத்தால் என்ன செய்வதென்ற குழப்பத்தில் உள்ள நிலையில் அண்ணன்  மூர்த்தி ஒரு யோசனை சொன்னான். அது மேற்கு மாம்பலத்தில் உள்ள அந்த பெரிய வீட்டில் அவன் குடும்பம் வாடகை இல்லாமல் வாழலாம் என்பது.  மூர்த்தி குடும்பமும், சேஷாத்திரி குடும்பமும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நிலையில் மாலி குடும்பம் அந்த பெரிய வீட்டில் வாடகை இல்லாமல் வாழலாம் என்ற யோசனையை வழங்கிய போது சேஷாத்திரி பல யோசனைகளுக்கும், ஆலோசனைக்களுக்கும் , தயக்கங்களுக்கு பின்னர் சம்மதித்தான். 

இப்போது மாலிக்கு தேவை படுவதெல்லாம் நிம்மதியான வாழ்க்கை மட்டுமே. பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேறவேண்டும், மகளுக்கு நன் முறையில் திருமணம் நடக்க வேண்டும். அதுவரை அவன் பூரண ஆரோக்கியத்துடன் இருந்து குடும்பத்தை காக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ, தன்னுடைய தவமே, கனவே, ஆசையே தன் குடும்பத்தின் இந்நிலைக்கு காரணமாகிவிட்டதே என்ற குற்றஉணர்ச்சி அவனை இரவுகளில் வாட்டிவதைத்தது. அந்த காரணத்தினாலோ என்னவோ அவன் என்றுமே தன்  பிள்ளைகள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லுவதில்லை. கடன் வாங்கியாவது அவர்களின் ஆசையை பூர்த்தி செய்வது வழக்கம்.

இப்பொழுது அவனின் கவலையெல்லாம் இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும் அவன் மகள் கேட்ட கல்லூரி சுற்றுலா கட்டணம், ஐ ஐ டீ நுழைவு தேர்வுக்கு படிக்க மகன் சில மாதங்களாக கேட்டு கொண்டிருக்கும் ஒரு ‘ஹை-டெக்’ லாப்டாப் மற்றும் மனைவியின் அடகுவைத்த நகைகள். செலவை சமாளிக்க மாமனார் வீட்டிற்கு தெரியாமல் நகைகளை அடகுவைத்து அதற்கு வட்டிக்கட்டவும் இயலாமல் மூழ்கும் நிலையில் உள்ளன அவை. ஒரு நாள் மச்சான்  அக்காவின் நகைகள் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்கிற பயம் மனதில் ஊஞ்சலாடியது. இவை எல்லாவற்றிற்கும் அவனுக்கு தேவை பணம். இன்றய தேதியில் அவனுக்கு தேவை 1 லட்சம். எப்படி புரட்டுவது என்று எண்ணும்பொழுது அவனுக்கு வரும் தூக்கமே அவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல். அந்த சில மணி நேர தூக்கத்தில் தன்னை சுற்றியுள்ள பொல்லாத உலகத்தை மறந்து கனவுலகில் வாழும் அந்த வாழ்க்கையே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. சில நேரங்களில் அந்த கனவு வாழ்க்கையில் இறந்துபோன தன் தாயார், தகப்பனார் வருவதுண்டு. சிறு வயதில் காதலித்த அந்த பக்கத்துவீட்டு பெண் கூட வருவதுண்டு, அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்த அந்த வாழ்க்கை வருவதுண்டு. கனவு முடிந்து, கண் விழித்து நிஜ வாழ்க்கைக்கு திரும்பும்போது அவன் மிக பெரிய ஏமாற்றத்தை உணரும்பொழுது  அந்த கனவு நிஜத்தில் தொடராதா என்று ஏங்கியதுண்டு. 

அப்படி ஒரு நாள் தூங்கி எழுந்த போது… 

“அப்பா, உன் கஷ்டமறிஞ்சு இது வர நான் எந்த excursionனும் போனதில்ல ஆனா இது கடைசி வருஷம். என் Friends  எல்லாம் இந்தவருஷம் நா வந்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கிறா. அதுவும் சிம்லா. இப்ப பாக்கலேனா எப்ப பாக்குறது? 25 ஆயிரம் ரூபா கேட்டேனே என்னாச்சுப்பா?” என்றால் மகள் உமா. 

“மேனஜர் கிட்ட பேசி இருக்கேம்மா. இன்னிக்கு சொல்றேன்னு சொல்லிருக்கார்” என்றான் மாலி. அவன் அப்படி எந்த மேனேஜரிடமும் பேசவில்லை. அவனை நம்பி 25 ஆயிரம் பணம் குடுக்க எந்த மேனேஜரும் தயாராக இல்லை. மகள் காலேஜுக்கு செல்லும்போது அவளை ஏமாற்றமடைய செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அந்த ஏமாற்றத்தை சற்று தள்ளி போட்டான்.

“அப்பா.. நான் கேட்ட லாப்டாப்பை மறந்துடாத” என்றான் மகன் ஹரிஷ்.          

பதில் ஏதும் கூறாமல், கண்ட கனவை நினைத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றான் மாலி. 

ஆபீசில், மதிய உணவருந்தி கொண்டிருக்கும் போது எதிரே அமர்ந்தாள் சரளா. நாற்பது வயதிருக்கும் சரளாவுக்கு. பார்க்க அழகாக இருந்தாலும் அவளின் நடவடிக்கைகள் பலருக்கும் பிடிக்காமல் போக அவளிடம் பெரிதாக அவள் அலுவகத்தில் யாரும் பேசுவதில்லை, அவளின் ஒரே ஆறுதல் மாலி. மாலியின் மென்மையான குணமும், கனிவான பேச்சும் அவளுக்கு ஒருவகை பாதுகாப்பையும், நம்பிக்கையையும் குடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற சரளாவுக்கு ஆபீசில் ஒரே நட்பு மாலி மட்டுமே. 

“என்ன மாலி, சோகமா இருக்கீங்க?” என்றாள் சரளா. மாலி எந்த மனநிலையில் உள்ளான் என்பதை பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடுவாள் சரளா. அது எப்படி என்று புரியாமல் அவன் பல முறை வியந்திருக்கிறான். இம்முறையும் அப்படியே. 

“ஒண்ணுமில்ல சரல்ஸ்.. வீட்டுல ஒரு பிரச்சனை. விடுங்க அது என்னோட போகட்டும்” என்றான் மாலி.

“சொல்லுங்க மாலி. இல்லேன்னா friends எதுக்கு இருக்கோம்” என்றாள் சரளா உரிமையாக. 

“என் பொண்ணுக்கு காலேஜ் டூர் போகணும்னு இருபத்தைந்தாயிரம் கேக்குறா.. என் பையனோ லேப்டாப் வேணும்னு பல மாசமா கேக்குறான். எவ்வளவோ தள்ளி போட்டுட்டு வந்துட்டேன். இன்னிக்கு எங்க வீட்டுல ஜட்ஜமென்ட் டே. உண்மைய ஒடச்சாகனும்” என்றான் சாப்பாடை ஸ்பூனால் வருடியபடி.

“என்ன உண்மை?” 

“பணம் இல்லங்கற உண்மை தான்.. வேற என்ன ” 

“எவ்வளோ ஆகும்?” என்று கேட்டால் சரளா 

“எல்லாம்  சேத்து  என்ன ஒரு அம்பதாயிரம் ஆகும்” என்றான் மாலி. “க்ரெடி கார்டில் லாப்டாப்பை வாங்கலாம்னு பார்த்தால் அதுலயும் லிமிட் அவ்வுளவு இல்ல” 

“சரி. என்கிட்டே இருக்கு நா தரேன்”  என்றாள்  சரளா  சற்றும் யோசிக்காமல்.

“இல்ல.. இல்ல சரல்ஸ் வேண்டாம். இதெல்லாம் தேவையில்லாத குழப்பம்” என்றான் மாலி அதிர்ச்சியாக. 

“இதுல என்ன குழப்பம்? கடவுள் புண்ணியத்துல என்கிட்டே சும்மாதான் கிடக்கு. குழந்தைகளுக்கு தானே. வாங்கிக்கங்க. அப்புறமா குடுங்க” என்றாள் சரளா 

“எப்போ கொடுக்கணும்னு சொல்லிட்டிங்கன்னா…”

“ஹ்ம்ம்.. உங்க பையன் ஹரிஷ் தலைதூக்குனதுக்கப்புறம் குடுங்க, இப்போதைக்கு அத பத்தி பேச வேணாம்”  என்றாள் சரளா பெருந்தன்மையாக.

மாலிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அது கேண்டீனாக இல்லையென்றால் அவள் காலில் விழுந்திருப்பான். கடவுள் இருப்பது உண்மை, அது இப்படி தான் ஏதா ரூபத்தில் வரும் என நினைத்து பெருமிதமடைந்தான். 

அப்பொழுது மாலிக்கு தெரியாது அவன் வீட்டிற்கு சென்றதும் ஒரு பேரிடி காத்திருக்கிறதென்று.

நினைப்பது ஒன்று… நடப்பது?

துள்ளி குதித்தனர் மகனும் மகளும். அவர்கள் எதிர்பார்க்கவில்லை மாலி பணத்துடன் வருவானென்று. மகன் ஹரிஷ் ஒரு நல்ல லாப்டாப்பை இணையதளத்தில் தேட ஆரம்பித்தான். அவன் பார்த்து வைத்திருந்த லேப்டாப் இருபத்திரண்டு ஆயிரங்களே என்பதால் இப்பொழுது அவனிடம் மூவாயிரம் ருபாய் அதிகமாகவே இருந்தது. அதற்க்கு ஒரு நல்ல ஒலி பெருக்கி அல்லது ஒரு நல்ல ‘ஹார்ட் டிஸ்க்’ வாங்கி கொள்ளலாம் என திட்டமிட்டான். மகள் உமா, தன் போனில் தோழிகளிடம் தாம் சுற்றுலாவுக்கு வருவதாக கூறி மகிழ்ந்தாள். 

“எப்பிடி இவ்வளவு பணம் கிடைத்தது?” என்று கேட்டாள் மனைவி ராதா.

“அதான் சொன்னேனே ஆபீஸ்ல லோன் அப்பளை செஞ்சேன்னு”

“அப்போ மாசாமாசம் பிடிப்பாளே” என்றாள் ராதா கவலையுடன்.

“இல்லை, இது பி-எஃப் லோன். கடைசில கழிச்சுடுவா” என்றான் மாலி. சரளாவை பற்றி ராதாவுக்கு தெரியாது. அவள் சந்தேகப்படுவாள் என்பதால் இல்லை அவளிடம் சொல்லும் அளவு சரளா ஒரு முக்கிய நபராக இதுவரை நினைத்ததில்லை மாலி. 

அப்பொழுது, அவன் செல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் அண்ணன் சேஷாத்திரியிடமிருந்து. வழக்கமான விசாரிப்புகளுக்கு பின் வந்தது அந்த பூகம்பம். 

“மாலி நானும் அனுஷாவும் நல்லா பேசிட்டு தான் இதை உன்கிட்ட சொல்றோம்” என்றான். 

‘ஏதோ வினை’ என்று எண்ணினான் மாலி.

“நீ அந்த வீட்டுல 5 வருஷமா இருக்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்பா எழுதி வெச்ச சொத்துக்கு 3 தலைமுறைக்கு நீ ஒக்காந்து சாப்பிட்ருக்கலாம். அத விட்டுட்டு ஏதோ அம்பானி ஆக போறேன், அதானி ஆக போறேன்னு சொல்லி எல்லாத்தையும் கோட்ட விட்டுட்ட. நாங்க அவ்வளவு சொல்லியும் நீ கேக்கல. இருந்தாலும் பரவால்லனு நாங்களும் அந்த வீட்டுல உன்ன வாடகை இல்லாம இருக்க விட்டுட்டோம். இப்போ அந்த வீட எங்களால விக்கவும் முடியாது. உன்ன காலி பண்ணுனு கேட்கவும் முடியாது. சரி போகட்டும். நீ அந்த வீட்டுல இருக்குறதுக்கு நன்றி கடனா நீ ஒண்ணு செய்யணும்னு எதிர் பாக்குறேன்” என்றான் மூத்த அண்ணன் சேஷாத்திரி. அவன் அப்படி பேசுவதில் மாலிக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. அவன் இயல்பு அது. 

” சொல்லு சேஷு” என்றான் மாலி.. என்ன சொல்ல போறான்?

“அந்த வீட்டுக்கு வெள்ளையடிச்சுப் பலவருஷமாச்சு. போன மாசம் கொலுக்கு அங்க வந்த அனுஷாக்கு பொருக்கவேயில்ல. எப்போதும் அத பத்தியே சொல்லிப் புலம்பி தள்ளிட்டா. அது அப்பாவோட நினைவாலயம் மாறி, நீ என்ன பண்ணு அந்த வீட்டுக்கு நல்ல ஒரு நாளா பாத்து வெள்ளையிடுச்சுடு.” என்றான் சேஷாத்திரி.

“வெள்ளையடிக்கிறதா? என்னால எப்பிடிடா முடியும்?” என்றான் மாலி மலைப்பாக. 

“என்னடா இது? 5 வருஷமா உன்கிட்ட எதுவும் கேக்கல. 3 வருஷம் முன்னாடி வந்த தண்ணி டேங்க்  பிரச்னையகூட நானும் மூர்த்தியும் தான் செலவு செஞ்சு சரி செஞ்சோம். இப்ப ஒரு வெள்ளையடின்னா ஏதோ செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் விட சொன்னது போல வாயை பொளக்குறியே.” என்றான் கறாராக.

அவன் பேசியது அவன் பக்கத்திலிருந்து பார்த்தால் சரி என்றே நினைத்தான் மாலி.. “இல்லே டா… அது வந்து “

“இங்க பாரு மாலி… ஒண்ணு  வெள்ளையடி இல்லேன்னா அடுத்த மாசத்துல இருந்து என் பங்கோட வாடகைய என்னோட அக்கௌன்ட்ல க்ரெடிட் பண்ணு. நா மத்தத பாத்துக்கறேன். ஒண்ணு தம்பியா இரு இல்ல டெனண்ட்டா இரு. இப்படி ‘situational advantage’ எடுத்துக்குறவனா இருக்காத” என்று கூறி தொடர்பை துண்டித்தான் சேஷாத்திரி.

விஷயத்தை அறிந்த இன்னொரு அண்ணன் மூர்த்தி சேஷாத்திரியை தொடர்பு கொண்டு கேட்டான்..

“அவன் பணத்துக்கு எங்கேடா போவான்?”

அதற்க்கு சேஷாத்திரி “இங்க பாரு மூர்த்தி, நாம எவ்வளோ சொல்லியும் கேக்காம பிசினஸ், கிசினசுன்னு ஆரமிச்சு எல்லாத்தையும் கோட்டை விட்டான், இருந்தும் நீ சொன்னியேனு சொல்லி அந்த வீட்டையும் வாடகை இல்லாம கொடுத்தாச்சு. நாளைக்கு அவனா காலி செய்யுறவறை ஒண்ணும்  சொல்ல முடியாது. இருந்தாலும் போனாபோறதுனு விட்டாச்சு. போனமாசம் அவாத்து கொலுக்கு  போன உன் மன்னி சொல்றா, அந்த உமா பொண்ணு ஒரு ‘சாம்சங் ஸ்மார்ட் போன்’ வெச்சுண்டிருக்காளாம். அவ்வளோ ஏன் ராதா கட்டிண்டிருந்த அந்த புடவை அஞ்சாயிரத்துக்கு கம்மியா இருக்காதுங்கறா. இதுக்கெல்லாம் மட்டும் எப்படி வந்துது பணம்? முடிவா சொல்றேன் மூர்த்தி, எனக்கு ரெண்டு குழந்தைகளும் வளந்தாச்சு. அடுத்த வருஷம் சின்னத்தையும் காலேஜுல சேக்கணும். நானும் எங்க தான் போவேன் பணத்துக்கு? அவன ஒண்ணு அந்த வீட்டுக்கு வெள்ளையடிக்க சொல்லு இல்ல எனக்கு வாடகைய குடுக்க சொல்லு” என்று கூறி போன் அழைப்பை துண்டித்தான் சேஷாத்திரி

அன்றிரவு மூர்த்தி, மாலியை தொடர்பு கொண்டான். 

“எனக்கு தெரிஞ்ச பெயின்டிங் கான்டராக்டர் கிட்ட பேசினேன். அவன் அந்த பெரிய வீட்டுக்கு பைண்டிங் மற்றும் இரண்டு கோட்டிங் அடிக்க 3 லட்சம் ஆகும்ங்கறான். சேஷுவ ஒரு லட்சம் போட சொல்றேன். நான் ஒண்ணரை லட்சம் போடறேன். ஆனா அது சேஷுக்கு தெரிய வேணாம், வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான். நீ அம்பதாயிரம் போடு போதும்” என்றான் மூர்த்தி. 

” என்னடா சொல்ற .. அம்பதாயிரமா? நான் என்ன டா செய்வேன்” என்றான் மாலி சற்று அதிர்ச்சியாக.

“இங்க பாருடா மாலி. என்னால என்ன முடியுமோ அத செஞ்சுட்டேன். நீயும் உன் பங்குக்கு ஏதா பண்ணு. ஆபீஸ்ல கடன் கேளு. கிரெடிட் கார்டுல லோன் எடு. கட்ட முடியலைன்னா பின்னால பாத்துக்கலாம்.என்னால முடிஞ்ச உதவிய நான் செஞ்சுட்டேன்.” என்று கூறி தொடர்பை துண்டித்தான் மூர்த்தி. 

விஷயத்தை வீட்டில் சொல்ல அப்செட் ஆனார்கள் மகன், மகள் மற்றும் மனைவி.  

“சரிப்பா. எனக்கு டூர் போக வேண்டாம். பரவால்ல, ஆனா தம்பிக்கு லாப்டாப் முக்கியம். மூர்த்தி பெரியப்பாகிட்ட நா பேசறேன் அம்பதாயிரத்த இருபத்தஞ்சாயிரமா வாங்கிக்க சொல்லி கேக்கறேன்.  மிச்ச 25க்கு லேப்டாப் வாங்கிடலாம்” என்றாள்  உமா பொறுப்பாக.

“எனக்கு லேப்டாப் இந்த வருஷம் வாங்கலேனா அடுத்த வருஷம் வாங்கிக்கலாம் .. இல்லேன்னா தேர்தல் வருது ,  ஏதா கட்சி இலவசமா குடுக்கும். அக்காக்கு இது கடைசி வருஷம் அவ டூர் போகட்டும். நா பெரியப்பா கிட்ட பேசறேன்” என்றான் ஹரிஷ் அவன் பங்குக்கு.

தம் பிள்ளைகளின் பொறுப்பான மற்றும் பாசமான சிந்தனையை கண்டு பெருமை அடைந்தான் மாலி.

“கண்ணுங்களா.. என்னோட கஷ்டம் என்னோடு போகட்டும். நீங்க இதுல தலையிட வேண்டியதில்லை. என் பசங்க அவங்க வாழ்க்கைல ஒரு நாள்  கூட பணத்துக்காக யார்கிட்டயும் போய் நிற்கவோ, கெஞ்சுவோ கூடாது. இது உயிர் மூச்சு இருக்கற வர நடக்காது. இது என் பிரச்சனை நா பாத்துக்கறேன். உங்களுக்கு நான் சொன்னது சொன்னது தான். டூரும், லேப்டாப்பும் கிடைக்கும் எந்த மாற்றமும் இல்லாம” என்று கூறிய மாலிக்கு கண்ணில் நீர் வடிந்தது. பிள்ளைகளுக்கு தெரியாமல் துடைத்து கொண்டான். 

நள்ளிரவு படுக்கையில்.. 

“என்ன செய்ய போறேள் ? குழந்தைகளுக்கும் வாக்கு குடுத்தாச்சு, உங்கண்ணாகிட்டயும் ஒத்துண்டாச்சு .. கையில இருக்கிறதோ அம்பதாயிரம். எப்படி புரட்ட போறேள்? ” என்றாள் ராதா. 

சரியான கேள்வி. ஒரு அக்கறையான மனைவிக்கு தம் கணவன்பால் அன்பிற்கும் பட்சத்தில் நள்ளிரவில் உறங்கமுடியாத நிலையில் கேட்க பட்ட அந்த கேள்வி நியாயமானது. ஆனால் மாலியிடம் தான் பதில் இல்லை. 

“தெரில டி. பாத்துக்கலாம். தூக்கத்துல ஆண்டவன் கனவுல வந்தா பணம்காய்ச்சி மரம் கேட்கலாம்னு இருக்கேன்.” என்றான் ‘சர்காஸ்டிக்’காக.

பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து, வறுமையே தெரியாத இளவாழ்க்கையை வாழ்ந்து இன்றைக்கு அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் அந்த வாழ்க்கையின் கொடுமையை விட தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சவுகரிய வாழ்க்கையை தரமுடியவில்லையே என்ற குற்றஉணர்ச்சியின் கொடுமையே மிக கொடியதாக இருந்தது மாலிக்கு. அதிலிருந்து தப்பிக்க அவனுக்கு கிடைத்த ஒரே கடவுசீட்டு அந்த 7 மணி நேர தூக்கம். அதில் வரும் கனவுகள். ஆகையால் ராதாவிடம் அதைப்பற்றி தொடர்ந்து விவாதிக்காமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றடைந்தான். அவன் சொன்னது போல் ஆண்டவன் வரவில்லை. வழக்கம் போல் அடுத்த நாள் காலையே வந்தடைந்தது.

காலை ஒரு 11 மணி அளவில், ஆபீசில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கையில் அவன் கைபேசி கூவியது. ஏதோ தெரியாத நம்பர். ஏதேனும் கடன்காரனாக இருக்கலாம் என்று போனை அலட்சியம் செய்தான் மாலி. விடாமல் தொடர்ந்து அடிக்க, எடுத்தான். 

“மாலி சாரா?”

“எஸ்”

“சார், உங்க வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் வந்து பூஜை செய்வாரே வெங்கடராம வாத்தியார். அவர் தான் உங்க நம்பர் குடுத்தார்”

“சொல்லுங்க”

“என் பேரு செல்வராஜ். உங்கள நேர்ல பாக்கணுமே”

“நேர்லயா. நா ஆபீஸ்ல இருக்கேன் சார். விஷயத்தை போனிலேயே சொல்லுங்கோ” என்றான் மாலி விடாப்பிடியாக. 

“இல்ல சார், நான் நேர்லயே வந்து பேசறேன். ஒரு முக்கியமான விஷயம். உங்க ஆபீஸ் அட்ரஸ் இந்த நம்பருக்கு வாட்டசாப் பண்ணிட்டீங்கன்னா அரை மணிக்குள்ள வந்துருவேன். ப்ளீஸ்” என்று செல்வராஜ் கெஞ்சினான் செல்வராஜ்.                         

என்னடா இது வம்பா போச்சு, இவன் எதுக்கு வருகிறான் என்று நினைத்து அலுத்து கொண்டு விலாசத்தை வாட்சாப் செய்தான் மாலி.

சொல்லிவைத்தார் போல்.. அரைமணியில் மாலியின் மேஜை தொலைபேசி அலற வரவேற்பாளர் இண்டர்காம் வழியாக செல்வராஜ் என்றொருவர் காத்திருக்கிறார் என்று கூறினாள். வரவேற்பறைக்கு சென்று பார்த்த மாலிக்கு ஆச்சரியம். வந்திருந்த ஆள் மிக கடுமையான வெயிலில் வாடியது போல் இருந்தான். அழுக்கான ஒரு சட்டை, எதிர்காத்தில் சைக்கிள் ஓட்டி வந்தது போன்ற தலை முடி.

“வாங்க, மீட்டிங் ரூமுக்கு போவோம்” என்று அழைத்து சென்ற மாலி உதவியாளரிடம் ஒரு ஜூஸ் எடுத்துவர சொன்னான்.

“சொல்லுங்க” 

“சார் என் பேரு செல்வராஜ். நான் சிவா சார் அசிஸ்டன்ட். ” 

“யாரு சிவா சார்?”

“’மாடர்ன்மேன்’ சிவா, கேள்வி பட்டுருக்கீங்க இல்ல?”

“என்னது ‘மாடர்ன்மேன்’ சிவா வா? புரியலையே”

“நீங்க ‘மாடர்ன்மேன்’ படம் பாத்தீங்க இல்ல?”

“பாத்துருக்கேன்”

“அந்த படத்தோட டைரக்டர். இன்னிக்கு இந்தியாவுலயே பெரிய டைரக்டர் சார்” என்றான் சற்று சத்தமாக. 

“சரி, இப்போ நான் என்ன செய்யணும்” 

“உங்க வீடு பூஜையெல்லாம் செய்துவைக்குற அய்யரு தான் எங்க கம்பெனிக்கும் பூஜ செஞ்சு வைக்குறாரு. அடுத்து எடுக்க போற படத்த எங்க டைரெக்டரே தயாரிக்கிறதால எங்க பட ஷூட்டிங்க்கு ஒரு பெரிய வீடு தேவ பட்டுச்சுன்னு உங்க வீட்டு வாத்தியார் கிட்ட சொல்லிவெச்சோம். ஸ்கெட்ச பாத்த ஒடனே. அவர் உங்க வீட எனக்கு காமிச்சாரு, என்ன ஒரு அதிசயம் பாருங்க அப்பிடியே நச்சுனு பொருந்துது.” 

உதவியாளர் ஜூஸை மேஜையில் வைக்க உடனே எடுத்து பருகினான் செல்வராஜ். ஒரே மூச்சாக குடித்து முடித்தான். பெரும் தாகம் போலும்.

“நேத்து அந்தப்பக்கமா டைரக்டர கார்ல கூட்டிட்டு போக சொல்ல உங்க வீட்டை காமிச்சேன். அப்டியே அசந்துட்டாப்ல. எப்படியாவது முடிச்சுருன்னுட்டாரு. படத்துல வர்ற ஹீரோ மாங்கா ஊறுகாய் பிசினஸ் செய்யுறாரு. மேற்கு மாம்பலத்துல வாழுறாப்ல கதை. உங்க வீடு தான் இதுக்கு பெஸ்ட்.” என்று கூறி கொஞ்சம் மூச்சுவாங்கி கொண்டான் செல்வராஜ்.

“இப்போ என்ன செய்யணும்னு சொல்றீங்க?” என்று மாலி அப்பாவியாக கேட்க. 

“ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன் சார். உங்க வீடு எங்களுக்கு ஒரு 45 நாளைக்கு வேணும், உங்க குடும்பத்த பத்தி ஐயர்ரு ஏற்கனவே சொல்லிட்டாரு. பையன் ஸ்கூல் படிக்கறான், பொண்ணு காலேஜ். நீங்க ஸ்கூல் பக்கத்துல ஒரு நல்ல எடம் கேட்டாலும் சரி, காலேஜ் பக்கதுனாலும் ஓகே. நாங்க அரேஞ்ச் பண்ணி தந்திருவோம்.”

“எதுக்கு?”

” அந்த 45 நாள் நீங்க போய் குடியிருக்கதான். உங்க ‘ஷிப்ட்டிங்’ செலவு, மற்றும்  அதுக்கான உதவி வேலையாட்கள் எல்லாமே நாங்க ஏற்பாடு செஞ்சுருவோம். ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்ட புதுப்பிச்சு உங்ககிட்டயே பத்திரமா குடுத்துருவோம். என்ன சொல்றீங்க?” என்றான் செல்வராஜ் அவசர படுத்தும் வகையில்.

“சரி தான். இருந்தாலும், வீட்டுல சில பேர்கிட்ட பேசணும்” என்றான் மாலி.

“தாராளமா பேசுங்க சார். ஆனா இல்லனு மட்டும் சொல்லாதீங்க. அப்டியே நல்ல நாள் பார்த்து சொல்லுங்க. ஏன்னா நீங்க அதெல்லாம் பாப்பீங்கனு தெரியும், நானும் ப்ரொடக்ஷன் மானேஜரும் வீட்டுக்கு வர்றோம்” 

“எதுக்கு?”

“அட்வான்ஸ் குடுக்க தான். மொத்த பேமெண்ட் 10 லட்சம். 3 லட்சம் அட்வான்ஸ் குடுத்துடறோம். என்ன சொல்றீங்க?”

என்று செல்வராஜ் கேட்க வாயடைத்து போனான் மாலி.

அச்சார கணக்கு

“நிஜமாவா சொல்ற? ‘மாடர்ன் மேன்’ சிவா நம்ம வீட்ல படம் எடுக்க போறாரா? அவரை பாத்தியா? நாங்க பாக்கமுடியுமா?” என்று சந்தோஷ திக்குமுக்காடலில் கேள்விகளை அடுக்கினாள் உமா.

“அவரலாம் வரலம்மா. அவர் அசிஸ்டன்ட் யாரோ செல்வராஜாம். இந்த வாத்தியாருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.” என்றான் மாலி.

“விடுங்கோ நல்லதுக்கு தானே. அதான் பணம் வருதே.” என்றாள் ராதா. 

“10 லட்சம் தரென்றான். அதுல நம்ம குழந்தைகள் செலவு போக. 9.5 லட்சம் தங்கும். அதுல உன் நகையெல்லாம் மீட்டுடலாம்டி, என்ன சொல்ற” என்றான் மாலி ராதா குடுத்த காபியை அருந்தியபடி. எப்பொழுதும் போல் அந்த காபி அமிர்தம் போலிருந்தது. 

“கண்டிப்பா” என்றாள் ராதா. 

“அது மட்டுமில்லாம, இவா ஸ்கூல், காலேஜ் பக்கத்துல ஒரு வீட்டுக்கு தாற்காலிகமா குடிபோகலாம்னும் சொல்றான். நாமளும் வேற வீட்டுல இருந்தாப்ல இருக்கும். நான் பொறந்ததுல இருந்தே இந்த வீடு தான்” என்றான்.

“அப்டின்னா அக்கா காலேஜ் பக்கத்துல போய்டலாம்பா, நா ஸ்கூட்டில ஸ்கூலுக்கு போய்டுவேன்” என்றான் ஹரிஷ்.

“ஐ. அஸ்கு புசுக். நீ ஸ்கூட்டில போக நான் நடந்து போணுமா. மொதல்ல லைசன்ஸ் எடுடா.” என்றாள் உமா நக்கலாக.

“அதான் அப்பாக்கு காசு வரபோதே எடுத்துட்டா போச்சு. எனக்கு இப்ப வயசு 18” என்று அவன் சொல்ல. 

“ஒரு புது ஸ்கூடியே வாங்கிட்டா போச்சு” என்றான் மாலி. 

“அட. இது சூப்பரா இருக்கே. எனக்கு தோணலையே.” என்றான் ஹரிஷ் 

“அதுக்குதான் ஒரு அப்பாவா திங்க் பண்ணணும்ணுகிறது” என்று சொல்லி மாலி கண்ணடிக்க…

“வாங்கி தர்ற பட்சத்துல ஒரு பைக்கா வாங்கி குடுப்பா, அடுத்த வருஷம் காலேஜுக்கு யூஸ் ஆகும்” என்றான் ஹரிஷ்.

“இவனுக்கு ஆனாலும் ரொம்ப பேராசை பா.” என்றாள் உமா. 

“போதும் போதும்” என்று அதட்டிய ராதா. “எல்லாம் சரி… மொதல்ல உங்க அண்ணாக்கள் கிட்ட இத பேசினேளா? வீடு உன்னோடது இல்ல. இது எங்க வீடு தான். அதுனால உனக்கு பங்கு கிடையாது.. குடுக்குற 10 லட்சத்த நாங்க சரி பாதியா பிரிச்சுக்குறோம்னு உங்க மூத்த அண்ணா சொன்னா. ஸ்கூட்டியும் கிடையாது, பைக்கும் கிடையாது. அடுத்த வருஷம் காலேஜுக்கு பஸ் பாஸுதான்” என்று சொல்லிவிட்டு ராதா உள்ளே சென்றாள். மாலிக்கு தலையில் இடி விழுந்தாற்போல் இருந்தது. 

“இத நாம யோசிக்கலையே. உண்மையாவே சம்சாரம் ஒரு மின்சாரம் தான்.” என்று எண்ணி கொண்டே அமைதியாக அமர்ந்தான் மாலி.

அன்று இரவே மாலி மூர்த்தியிடம் பேசினான்.. 

“இங்க பாரு, இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். சேஷு கிட்ட அவன் 3 லட்சம் தர்றதா  சொல்லு.அவன் 1 லட்சம் கேப்பான். குடுத்துடு எனக்கு ஒண்ணும் வேணாம் மிச்சத்தை வெச்சு ராதா நகையை மீளு. அது தான் முக்கியம், உன் மாமனார் வீட்டுக்கு தெரியறதுக்கு முன்ன அத செய்” என்றான் மூர்த்தி. 

மாலியும் அப்படியே சொல்ல., எதிர்பார்த்ததை போலவே சேஷாத்திரி 1 லட்சம் கேட்க. ஒத்துக்கொண்டான் மாலி.

இரண்டு நாட்கள் கழித்து அந்த துணை இயக்குனர் செல்வராஜுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான். அவன் மகிழ்ச்சியை தொலைபேசியிலேயே தெரிவித்துகொண்டான். வரும் ஞாயிற்று கிழமை நன்னாள் என்றும் அன்றே வந்து அச்சாரம் குடுப்பதாக கூறினான்.

சொன்னபடியே ‘ப்ரொடக்ஷன்’ மானேஜரும் செல்வராஜும் காசோலையும் கையுமாக வந்தார்கள். 3 லட்சம் அட்வான்ஸ் பணத்தை கையெழுத்திட்ட காசோலையை கொடுத்தார்கள். 

“எங்க பொண்ணு காலேஜ் பக்கத்துல ஏதா நல்ல வீடா பாத்து குடுத்தா வசதியா இருக்கும்.” என்று மாலி கூற. 

“பிரச்சனையே இல்ல சார். அந்த ஏரியாவுல ஒரு நல்ல சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்ஸ் புடிச்சு குடுத்துடறோம். சகல வசதிகளோடு அங்க போய்டுங்க. எப்ப வேணும்னாலும் வந்து ஷூட்டிங் பாருங்க. எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க. மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சப்புறம் மொத்தமா புதுப்பிச்சு வீட்டை குடுத்துடறோம்” என்றான் செல்வராஜ்.

மாலிக்கு பரம திருப்தி.

“எப்போ ஷூட்டிங் ஆரம்பிப்பீங்க?”

” ரெண்டாவது ஷெடியூல் தான் இங்க. முதல் ஷெடியூல் டில்லியில. அதுக்கு சில  அரசாங்க அனுமதியெல்லாம் வாங்க வேண்டி இருக்கு. எப்படியும் 2 மாசம் ஆகும். அதுக்கப்புறம் தான் உங்க வீட்டுல.” என்றான் செல்வராஜ். 

மாலியின் குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள்.

ஒரு சில நாட்களுக்கு பிறகு…

“ராதா, உன்னோட நகைக்கு எப்படியும் 5 லட்சம் வேணும். நம்மகிட்ட குழந்தைகள் செலவு போக இப்போ இருக்குறது 2.5 லட்சம். சேஷுவுக்கு இப்பவே அந்த 1 லட்சத்தை கொடுத்துட்டா தொல்லை விட்டது. மிச்சம் இருக்குறது 1.5 லட்சம் என்ன செய்யலாம்?” என்று மாலி கேட்டான்.

“உங்கண்ணாக்கு பணம் குடுக்க இப்ப என்ன அவசரம்? முழு பேமெண்ட் வந்தப்புறம் குடுத்தா என்ன?” என்றால் ராதா, கீரையை ஆய்ந்தபடி.

“குடுக்கலாம் டி. ஆனா அது மொத்தமும் உன் நகைக்குன்னு வெச்சுட்டேன். இப்போ அதுலேருந்து எடுக்க வேணாம். நம்ம கிட்ட இப்போ 1.5 லட்சம் இருக்கு. ஏதா  ஊருக்கு  போலாமா?” 

“ஒண்ணும் வேண்டாம் காச காரியாக்காதேள். கொண்டுபோய் எப்.டில போடுங்கோ.” என்று கூறி விட்டு எழுந்து சென்றாள் ராதா. 

மாலிக்கு மனசு பொறுக்கவில்லை. அவனுடைய பழைய குற்ற உணர்வு அவனை  கொன்றது. தாம் தொடங்கிய நிறுவனம் படுத்த நாள் முதற்கொண்டே ராதா அனுபவித்தது அனைத்தும் கசப்புக்களே. ஆனால் அவள் அவனிடத்தில் ஒரு முறை கூட தன் மனகுமுறல்களை கூறியதில்லை. வீட்டில் பணம் இல்லை என்று அவள் ஒரு முறை சொன்னால் கூட வியர்த்து விறுவிறுத்து போய்விடும் மாலிக்கு. அதை அறிந்த ராதா ஒரு முறை கூட கூறியதில்லை. மாறாக, அவனாக வீட்டில் பணம் உள்ளதா என்று கேட்க்கும் வரை காத்திருப்பாள். அல்லது தன்னுடைய வட்டாரத்தில் சிறு கடன் வாங்கி பிறகு அடைத்துக்கொள்வாள். அப்படி பட்ட உன்னதமான மனைவிக்கும், தம் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசை பட்டான் மாலி. 

அன்று மாலை, யாரிடமும் சொல்லாமல் ஒரு பெரிய எலெக்ட்ரானிக் அங்காடிக்கு சென்றான். ஒரு 1.5 டன் ஏ.சி யையும், ஒரு சோனி ஸ்மார்ட் LED தொலைக்காட்சிப்பெட்டியையும் ‘ஆர்டர்’ செய்தான். 

அடுத்த நாளே வீட்டிற்கு வந்தன. மகனும் , மகளும் சந்தோஷத்தில் துள்ளினார்கள். ராதாவின் முகத்தில் சிரிப்பு இல்லை. தன் கணவன் தன் மீது வைத்துள்ள பாசத்தை பார்த்து சந்தோஷ படுவதா அல்லது இப்படி செலவாளியாக இருக்கிறாரே என்று வேதனைபடுவதா என்ற குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தன. 

“உங்க அண்ணா கேட்டா என்ன சொல்லுவேள் ?” என்று அவள் வழக்கம் போல் கேட்க. 

“அடி  போடி. இந்த முறை நான் மூர்த்திக்கிட்ட கூட சொல்லப்போறது இல்ல. ஷூட்டிங்க்கு வந்தவா அப்டியே விட்டுட்டு போய்ட்டானு சொல்லுவேன். பணமா இருந்தா தான் சேஷு கேப்பான். பொருள என்ன பாதியாவா ஒடைச்சு குடுக்க முடியும்?” என்று சொல்லி மாலி  சிரிக்க.

நிம்மதி பெருமூச்சு விட்டு தானும் சிரித்தாள் ராதா.

இரண்டு மாதங்கள் கடந்தன. உமா, சிம்லா சென்று வந்தாள். ஹரிஷ்க்கு அந்த லேப்டாப் மிக வசதியாக இருந்தது. புதிதாக வாங்கிய அந்த தொலைக்காட்சி பெட்டி அந்த பெரிய வரவேற்பறைக்கு வாகாக இருந்தது. சென்னை வெயிலுக்கு அந்த ஏசி காற்றில்  உறங்குவது சுகமாக இருந்தது.

செல்வராஜிடம் இருந்து அழைப்பே வரவில்லை என்பதால் மாலியே ஒரு நாள் செல்வராஜை தொடர்பு கொண்டான். 

“சொல்லுங்க சார்”

“என்ன ஷூட்டிங்க்கு வரவேயில்ல? 2 மாசம் முடிஞ்சுடுச்சே” என்றான் மாலி செல் போனில்.

“அதுவா சார். உங்க கிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான்.நா முன்ன சொன்னாப்ல முதல் ஷெடியூலே இன்னும் முடிஞ்ச பாடு இல்ல. ஒரு மங்கா ஊறுகாய் விக்குறவன் எப்படி பிரதமமந்திரி ஆகுறான்னு தான் கதை. எங்க டைரக்டர் பிரதம மந்திரி மாளிகைலயே ஷூட்டிங் நடத்த முடியும்மானு பாத்துக்கிட்டிருக்காரு. அதான் ‘டிலே’ நானே போன் பண்றேன் சார்” என்று கூறி போனை வைத்தான் செல்வராஜ். 

இன்னும் 3 மாதங்கள் ஓடின. செல்வாராஜிடமிருந்து அழைப்பே வரவில்லை. நகைகள் மொத்தத்தையும் மூட்ட போகிறோம் என்ற தைரியத்தில், மாலி, கடந்த 7 மாதங்களாக நகை  வட்டியும் கட்டவில்லை. அலட்சியமாக இருந்துவிட்டான். நகை கடன் குடுத்த வங்கி, அழுத்தம் குடுக்க ஆரம்பிக்க, மறுபடி தொடர்பு கொண்டான் செல்வராஜை.

“சார்.. நானே உங்கள வந்து பாக்கணும் நெனைச்சேன்” என்றான் செல்வராஜ்,

“சொல்லுங்கோ. இப்டி சொல்லிண்டே இருக்கேளே ஒழிய வரமாட்டேங்கறேளே” என்று மாலி கூறியதும் சிரித்தான் செல்வராஜ்.

“தப்பா எடுத்துக்காதீங்க சார். இங்க ஒரே குழப்பம். கொஞ்சம் காஸ்டிங்கெல்லாம் மாத்திட்டோம். தீபாவளிக்குள்ள படம் வரணும். அதான்” 

“சரி எப்போ இங்க வந்து எடுக்கறீங்க?”

“அத பத்தி தான் சார் பேசணும். டைரக்டருக்கும் ஆர்ட் டைரக்டருக்கும் ஒரு சின்ன உரசல். டில்லி பிரதமர் மாளிகை மாறியே சென்னைல செட்டு போட்டு குடுத்துட்டாரு ஆர்ட் டைரக்ட்டரு ஆனா அவரு கேட்ட சம்பளம் ரொம்ப பெருசு. எங்க டைரக்டரு தான் தயாரிப்பாளருன்றதால கொஞ்சம் குறைச்சுக்க சொல்லி கேட்டார் அவரு பிடிக்குடுக்கவே இல்ல. அதுனால குடுக்குற காசுக்கு உங்க வீடு மாறியே ஒரு செட்டு  போட்டு வாங்கிட்டோம். இதுனால உங்க வீட்டுல எடுக்க வேண்டிய சீன்ஸ் எல்லாம் எடுத்தாச்சு சார்” என்றான் செல்வராஜ். தூக்கி வாரி போட்டது மாலிக்கு.

“என்ன சார் சொல்றேள். இதெல்லாம் முன் கூட்டியே சொல்ல வேண்டாமா? எங்கள பாத்தாஉங்களுக்கெல்லாம் எப்படி தெரியறது?” என்று மாலி கடிய…

“மன்னிச்சுக்கங்க சார். எனக்கு தெரியும் நீங்கல்லாம் ரொம்ப ‘பக்கா’னு, ஏதோ டெங்ஷன்ல விட்டுட்டோம் சார். மன்னிச்சுடுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினான் செல்வராஜ். 

ஆனால் மாலியின் எண்ண ஓட்டம் நகைகளை எப்படி மீட்பது என்பதிலேயே இருந்தது.

“சரி விடுங்கோ. அப்புறம் பேசறேன்” என்று கைபேசியை கட் செய்ய முனையும் போது.

“அடுத்த மாசம் வரேன் சார்” என்றான் செல்வராஜ்.

“எதுக்கு?”

“அதான் சார் அந்த அட்வான்ஸ திரும்ப வாங்க. நான் டைரக்டர்ட்ட சொல்லிட்டேன் நாம செஞ்சது சரி இல்லனு. அதான் அவர் உங்க வீட்டில படமெடுக்காட்டியும் ஐம்பதாயிரம் குடுக்க சொல்லிட்டாரு. 3 லட்சத்துல ஐம்பத்தாயிரம் வெச்சுக்கங்க, மிச்ச இரண்டரை லட்சத்துக்கு செக் போட்டுட்டு போன்  பண்ணுங்க நானே வந்து வாங்கிக்கிறேன்” என்று செல்வராஜ் கூற. தலையில் இடி விழுந்தது போல் இருந்தது மாலிக்கு.

மதிப்பு

என்ன செய்வதென்று அறியாமல் விழிபிதுங்கி இருந்த மாலி, விஷயத்தை மனைவியிடம் சொல்ல எதிர்பார்த்ததுபோல் கன்னாபின்னா என்று அவள் கத்தினாள்., இம்முறை தன் அண்ணன் மூர்த்தியிடமும் உதவிக்கு நிற்க முடியாது என்பதை அறிந்த மாலி மூத்த அண்ணன் சேஷாத்திரியிடம் பேசினான்.

“போச்சா. இதான் இந்த சினிமா காரனெல்லாம் நம்பவேப்படாது, அதுனால தான் நீ குடுத்த அந்த ஒரு லட்சத்தை அப்படியே பாங்க்குல போட்டு வச்சிருந்தேன். இ – டிரான்ஸ்பர் செய்யறேன், மூஞ்சில கொண்டுபோய் அடி ” என்றான் சேஷாத்திரி. 

அவன் கூறியது தன்னையே மூஞ்சியில் அடித்தது போல் இருந்தது மாலிக்கு. காரணம், தன் மனைவி அவ்வுளவு கூறியும் அதை சேமிக்காமல் பலவற்றையும் வாங்கி போட்டாகிவிட்டது. இரண்டரை லட்சத்தில் ஒரு லட்சம் மட்டுமே சேஷாத்திரியிடமிருந்து வரும் மிச்சம் ஒண்ணரை லட்சத்துக்கு என்ன செய்வது? சரளா குடுத்த ஐம்பதாயிரம் இன்னும் தன்னிடம் தான் உள்ளது இருந்தும் நாளை மறுபடி வெள்ளையடிக்க வேண்டுமென்று சேஷு அடம் பிடித்தால் என்ன செய்வது? அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால் கூட செல்வராஜுக்கு குடுக்கவேண்டியதில் ஐம்பதாயிரம் இடிக்கிறதே அதற்க்கு இனி என்ன செய்வது? இப்பொழுது மூழ்குவதற்கு தயாராக உள்ள ராதாவின் நகைகளை விற்றால் பின்னாளில் மாமனாரும், மச்சினனும் கேட்டால் எங்கே செல்வது? என்றாவது ஒருநாள் அன்நகைகளையெல்லாம் மீட்ப்போம் அதையே தன் மகள் திருமணத்திற்கு போட்டுவிடுவோம் என்றல்லவா யோசித்தோம் இப்பொழுது அதை எப்படி விற்பது? போன்று ஆயிரமாயிரம் கேள்விகள் மாலி மனதில் ஓடிய வண்ணம் இருந்தது. 

“என்னிடம் ஏதும் கேட்க்காதீர்கள், நீங்களாச்சு அந்த சினிமா கம்பெனியாச்சு, சொல்லும்போது கேக்கணும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, புரியலேனா பட்டு தான் புரிஞ்சுக்கணும்” என்று கூறி  சென்றாள்  ராதா.

மறுநாள் மதியம், அலுவலகத்தில் சரளாவுடன் சாப்பாடு. விஷயத்தை சொன்னான் மாலி…

“என் கிட்ட இருந்தத நான் குடுத்துட்டேன். இப்போ இன்னும் இருக்கானு கேட்டா நான் என்ன செய்வேன் மாலி?” என்றாள் சரளா. வாஸ்தவமான பேச்சு. 

மாலி எதையும் பேசாமல் மெளனமாக உணவையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே மாலி?” என்றாள் சரளா 

“சத்தியமா மாட்டேன்” 

“அந்த பத்து லட்சத்த வெச்சு என்னவெல்லாம் செய்யணுன்னு கணக்கு போட்ட உங்களுக்கு என்னோட ஐம்பதாயிரத்த குடுக்கணும்னு தோணுச்சா? இல்ல என்கிட்டே அப்படி ஒரு பணம் வருதுன்னு தான் சொன்னீங்களா? சத்தியமா சொல்றேன், நீங்க குடுக்கறேன்ன்னு சொல்லியிருந்தா கூட வாங்கியிருக்க மாட்டேன். அது ஹரிஷும் உமாவும் அடைக்கவேண்டிய கடன் ஆனா நீ ங்க என்கிட்ட அத சொல்லலைன்றது தான் இன்னும் ‘ஹர்ட்’ ஆகுது.” என்று கூறி ஒரு பெருமூச்சு விட்டு தொடர்ந்தாள் சரளா ” இங்க என்ன பத்தி பலபேர் பலவிதமா பேசும்போது கூட எனக்கு இவ்வளோ வலிக்கல, ஆனா என்கிட்டே அன்பா பேசுன மாலி இப்படி ‘ஆப்பர்ட்டியுன்ஸ்டிக் ரிலேஷன்ஷிப்’ (Oppotunistic relationship) வெச்சுருக்காருன்னு தெரியும்போது தான் ரொம்ப வலிக்குது” 

இதை கேட்ட மாத்திரத்தில் சரளா தன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதுபோல் இருந்தது மாலிக்கு. 

“சரளா….” என்று மாலி சமாதானம் செய்ய ஆரம்பிக்க.

” போங்க மாலி ” என்று கூறி எழுந்து சென்றாள் சரளா.

அன்று மாலை.. 

“ஏன் சார் ஏதும் பிரச்சனையா?”

“இல்லை, அதெல்லாம் இல்லை. இந்த ஊரை விட்டே போறோம். இது இனி எங்களுக்கு தேவையில்லை. அதான் 5 மாசம் முன்ன வாங்கின அந்த ‘எல்ஈடி’ டீவீயையும், ‘ஸ்ப்ளிட்’ ஏசியையும் திரும்பவும் வித்துட்டு பணமா வாங்கிட்டு போலாம்னு” என்றான் மாலி அந்த கடை முதலாளியிடம். 

“ஒன்னும் பிரச்சனை இல்ல சார், நாங்களே எடுத்துக்குறோம். டீவிக்கு பத்தாயிரமும், ஏசிக்கு அஞ்சாயிரமும் குடுத்து எடுத்துக்கிறோம்”  என்றார் முதலாளி சர்வசாதாரணமாக.

“என்ன சார் பகல் கொள்ளையா இருக்கு, ரெண்டும் சேத்து ஒன்னரை லட்சத்துக்கு வாங்கினேன். வெறும் பதினைஞ்சாயிரம் தரேன்ங்கறேளே”  என்றான் மாலி அதிர்ச்சியாக. 

“சார், எலெக்ட்ரானிக்ஸ்க்கெல்லாம் அவ்வளோ தான் வால்யூ. நீங்க வாங்கின 5 மாசத்துல மட்டும் 2 புது வெர்ஷன் ரிலீஸ் செஞ்சுட்டாங்க. சொல்லப்போனா இதுல எங்களுக்கு பேரிச்சம்பழம் தான் கிடைக்கும், இருந்தாலும் உங்களுக்காக ஒரு பதினைஞ்சாயிரம் தாறோம்” என்கிறார் முதலாளி கறாராக.

சேஷாத்திரி குடுத்த 1 லட்சம் போக கையில் இருப்பதோ பதினைந்தாயிரம். சரளா குடுத்த ஐபத்தாயிரத்தையும் சேர்த்தாலும் கூட 1.65 லட்சம் தெரிகிறது. சினிமா கம்பெனியிடம் குடுக்கவேண்டியதோ 2.5 லட்சம். என்ன செய்வதென்று புரியாமல் குடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான் மாலி. மூர்த்தியிடம் விஷயத்தை சொல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. 

மூர்த்தியை அவன் தொலைபேசியில் தொடர்புகொள்ள, அவனருகே ராதா, மகள் உமா மற்றும் மகம் ஹரிஷ் அமர்ந்தனர். அனைவருக்கும் டென்சன் தாங்கவில்லை. மூர்த்தி எப்பொழுதும் போல் கருணையுடன் விசாரிக்க, விஷயத்தை தயங்கி தயங்கி சொன்னான் மாலி. மூர்த்தியின் தொனி மாறியதை மாலியால் அறிய முடிந்தது. 

“எவ்வள்வு அடி பட்டாலும் நீ திருந்தவே மாட்டியாடா? இன்னும் எவ்வளோ டா வாழ்க்கையில அசிங்க படுவ?  அவ்வளவு சொல்லியும் உன்னால பொய் சொல்லாம இருக்க முடியலல்ல? அதுவும் என்கிட்டே பொய் சொல்லற.. உனக்கெல்லாம் உதவி செய்யணும்னு நினைக்கறேன் பாரு. அப்பா, தாத்தா காத்துவெச்சுட்டு போன சொத்து மொத்தத்தையும் அழிச்சுட்ட, இன்னும் பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ணனும். பையன் இன்னும் தலையெடுக்கல. இந்த தரித்திரத்துல உனக்கு ஏசி கேக்குதுல்ல? ” என்று ஊரே கேட்குமளவு போனில் கத்தினான் மூர்த்தி.

மூர்த்தி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மாலியின் மனதை பிடுங்கியெடுத்தது போல் இருந்தது. ஒரு பரபரப்பான சாலையில் தன்னை அம்மணமாக நிற்கவைத்து செருப்பால் அடித்தது போல் இருந்தது மாலிக்கு. அவன் கூறுவது வெளியில் இருந்து பார்த்தால் சரியென்றே பலருக்கு தெரிந்தாலும் , தன்னுடைய இளம் வயதில் அனைத்து சவுகர்யங்களுடனும் வளர்ந்த தாம் தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல ஏசி வைத்த படுக்கையறை கூட குடுக்க முடியவில்லை என்று தன்னை வாட்டியெடுக்கும் அந்த குற்றவுணர்வை யாரிடம் போய் சொன்னால் புரியும்? தனக்கு வரப்போகும் மனைவியை எப்படி வைத்து கொள்ளவேண்டும் என்று சிறு வயதில் ஒரு டைரியில் எழுதிவைத்த போது அதில் கடைசி குறிப்பாக “என் மனைவி, தாம்  ஒரு புருஷனை திருமணம் செய்துகொள்ள வில்லை, ஒரு அரசனை திருமணம் செய்துகொண்டோம் என்று பெருமிதம் கொள்ளல் வேண்டும். அதற்க்கு ஒரே வழி பிஸ்னஸ்” என்று எழுதியது நடுராத்திரி சிறுநீர் கழிக்க எழுந்து கொள்ளும் போது நினைவுக்கு வருவதும். அதுவே ஒரு வித அழுத்தமாக மாறி சில நாட்களின் நடுஇரவில் தாம் வாந்தி எடுத்ததையும் யாரிடம் கூறினால் அது அவர்களுக்கு புரியும்’ என்று தோன்றியது மாலிக்கு. 

“சாகுர வரைக்கும் எங்கிட்ட உதவின்னு வராத. என்னால முடிஞ்சத நானே ராதாகிட்ட குடுத்துக்குறேன்” என்று கூறி போனை ‘ பட் ‘ என்று கட் செய்தான் மூர்த்தி. 

 அன்றிரவு தன் பூஜையறையில் மாட்டப்பட்டிருந்த தன்னுடைய தந்தையின் பட த்தை பார்த்தபடியே அமர்ந்தான் மாலி. 

‘அப்பா நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டுமே ஏன் இந்த சோதனை? என் வாழ்வில் நான் அனைவருக்கும் துரோகம் இழைத்தது போல் உணர்கிறேன். நீங்கள் எனக்களித்த சொத்துக்களை பாதுகாக்காமல் கோட்டை விட்டது உங்களுக்கிழைத்த துரோகம்., ராதா கொண்டு வந்த நகைகளை அடகு வைத்து அதற்கு வட்டி கட்ட முடியாமல் தவிப்பது அவளுக்கிழைத்த துரோகம்., இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு எந்த வித சுகங்களும் கொடுக்காமல் வளர்ப்பது அவர்களுக்கிழைக்கும் துரோகம்., ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுத்தோம் என்ற பெருமையில் இருந்த என் மாமியார் மாமனாருக்கு தன் மாப்பிள்ளை அனைத்தையும் இழந்துவிட்டாரென்ற செய்தியை குடுத்தது அவர்கள் நம்பிக்கைக்கு இழைத்த துரோகம்., இதோ இன்று சரளாவுக்கு இழைத்தேன் துரோகம்., மூர்த்திக்கு இழைத்தேன் துரோகம்., நான் பிறந்ததே அம்மாவுக்கு செய்த துரோகமப்பா.,

எல்லோரும் நன்றாக இருக்கவேண்டுமென்றே பல காரியங்கள் செய்தேன் ஆனால் நான் செய்த எதுவும் நான் நினைத்து போல் நடக்காமல் எவரும் சந்தோஷமாக இல்லையே இது என்ன நியாயம் அப்பா? கொள்ளையடிப்பவனும், கஞ்சா இழுப்பவனையும், ஒண்ணுக்கு இரண்டு வைப்பாட்டி வெச்சுருப்பவனும், ஊர் காசை திருடுபவனும், கற்பழிப்பவனும் சந்தோஷமாக இருக்கும் இந்த கலியுகத்தில் எனக்கு கொஞ்சம் கூடவா சந்தோசம் வராது? அல்லது நான் செய்தது எதுவும் நேர்மையானது இல்லையா? இதற்க்கு நீங்கள் விடை குடுத்தே தீர வேண்டும். பித்ருலோகத்தில் இருந்து நீங்களும் அம்மாவும் இதெல்லாம் பார்த்து ரசிப்பத்துல உங்களுக்கென அவ்வளவு சந்தோஷம்னு எனக்கு புரியல’ என்று கூறி கண்ணீர் மல்க தன் பாரங்களை தன் தந்தையின் படத்திடம் இறக்கி வைத்தான் மஹாலிங்கம்.     

மாலியின் மகன் மற்றும் மகள் தன் தந்தையின் நிலையை சில நெருங்கிய நண்பர்களிடம் கூற, அவர்களால் முடிந்த பணஉதவியை செய்தார்கள். அதன் மூலம் ஒரு இருபத்தைந்தாயிரம் வந்தது, அப்படி இருந்தும் அறுபதாயிரம் இடித்தது. 

என்ன செய்யலாமென்று மாலி எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தினம் செல்வராஜிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“சார், நாளைக்கு வெள்ளிக்கிழமை உங்க வீட்டு பக்கமா வர்ற வேல இருக்கு சாயந்திரம் வந்துருவா? ” என்று செல்வராஜ் கேட்க தட்ட முடியவில்லை மாலியால். 

‘என்ன சொல்வது? எப்படி சொல்வது? நாம் ஏதோ மதிப்புமிக்க ஒரு நபர் என்றல்லவா அவன் நினைத்திருந்தான். அவனிடம் அறுபதாயிரம் இடிப்பதை எப்படி சொல்வது? ஏதாவது அசிங்கமா திட்டிவிடுவானா? போஸ்ட் டேட்டட் செக் குடுத்து சமாளிக்கலாமா? அதை எப்படி பிறகு சமாளிப்பது? இல்லை ஒரு ஆறு மாசம் நேரம் கேட்ப்போமா? மிச்சத்தை அந்த காசி விஸ்வநாதனிடம் விட்டுவிடுவோம்.’ என்று முடிவெடுத்தான் மாலி. 

மாலை 7 மணிக்கு வீட்டின் அழைப்பு மணியை அடித்தான் செல்வராஜ்.

“வாங்கோ” என்று மாலி செல்வராஜை உள்ளே அழைத்தது உபசரிக்க காபி எடுத்துவந்தாள் ராதா. 

“படமெல்லாம் முடிஞ்சுதா?” என்று மாலி கேட்டான் 

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சு சார். அடுத்த வாரம் ரிலீஸ். போஸ்டரலாம் கூட பாத்துருப்பீங்களே. சாரி சார் உங்க வீட்டுல தான் எடுக்க முடியாம போச்சு.” என்றான் காபியை ஒரே மடக்கில் குடித்த படி. 

“அதுனால என்ன? நாம நெனைக்குறது ஒண்ணு தெய்வம் தர்றது ஒண்ணு” என்றான் மாலி. 

“சரி தான் சார். அப்புறம் அந்த அட்வான்ஸ் …” என்று செல்வராஜ் தொடங்க. 

“அது தான் சார், நானே பேசணும்னு நெனச்சேன். செக்கெல்லாம் போட்டு வெச்சிட்டேன்” என்று கூறி மாலி காசோலை வைத்திருந்த உரையை நீட்ட அதை பெற்று கொண்டான் செல்வராஜ்.  அவன் குடுத்த பணத்துக்கு அறுபதாயிரம் கம்மியாக எழுதப்பட்டிருந்தது அந்த காசோலையில்.

“திறந்து பாருங்கோ.” என்றான் மாலி.

“இருக்கட்டும் சார்” என்றான் செல்வராஜ்.

“அட., திறந்து பாருங்களேன்.”  

என்றான் மாலி விடாப்பிடியாக.

“இல்லை சார், ஒரு மாட்டர் சொல்லணும்” என்று கூறி பெருமூச்சு விட்டு தொடர்ந்தான் செல்வராஜ், “உங்ககிட்ட இந்த வீட்டுல ஷூட்டிங் எடுக்க அனுமதி வாங்கிட்டு போன அன்னிக்கு தான் அந்த விஷயம் நடந்துச்சு. ஒரு ப்ரொடியூசர் கிட்ட கதை சொல்லி இருந்தேன். உங்க வீட்ட விட்டு வெளியே போயிட்டு கடைல டீ குடிச்சுட்டு இருக்கசொல்ல அந்த தயாரிப்பாளர் போன்ல கூப்பிட்டு , கதை எங்களுக்கு ஓகே நீயே எடுன்னுட்டாரு. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. அன்னைக்கே எங்க டைரக்டர் கிட்ட விஷயத்தை சொன்னேன். அவரு நான் பாதிலேயே படத்தை விட்டு போறேன்னு அப்செட் ஆகிட்டாரு. அதுனால, இந்த படத்தை முழுசா முடிச்சு குடு நானே அந்த படத்தை தயாரிக்கறேன்னு சொல்லிட்டாரு” என்று சொல்லி செல்வராஜ் நிறுத்த..

“வெரி குட். ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்” என்றான் மாலி. 

“நன்றி சார், இந்த வீடு ரொம்ப அதிர்ஷ்டமான வீடு. அதுனால என்னோட படத்தை இந்த வீட்டுலையே வெச்சுக்கலாம்னு முடிவுபண்ணி டைரக்டர்  கிட்ட சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. அதுனால தான் உங்கள பூஜைக்கு அழைச்சுட்டு அப்டியே இந்த பணத்தை நீங்களே அட்வான்சா வெச்சுச்சுக்கங்க. முன்ன பேசுனா 10 லட்சம் இல்லாம இதுக்கு இன்னும் 5 லட்சம் அதிகமா குடுத்து இன்னும் ஒரு மாசம் வீட எடுத்துக்குறோம். அதுனால, நீங்க குடுத்த இந்த செக் போக.. இந்த செக்கையும் சேத்து அட்வாஸ்னா வாங்கிக்கங்க அப்டியே பட பூஜைக்கு வந்துடுங்க ” என்று கூறி ஒரு தட்டில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் சகிதம் மாலி குடுத்த காசோலை மற்றும் இன்னொரு காசோலையில் ஐந்து லட்சம் ரூபாய் என எழுதி குடுத்தான் செல்வராஜ். மாலி கண்ணில் கண்ணீர் பெருகெடுத்து வர, தாங்கமுடியாத சந்தோஷத்தில் ராதாவை பார்த்தான் அவள் கணங்களும் குளமாகி இருந்தன. 

பூஜை அழைப்பிதழை பிரித்து படித்தான் மாலி, படத்தின் பெயர் “பணம்காய்ச்சி மரம்” என அச்சிட்டிருந்தது. தன் வரவேற்பறையில் மாட்டியிருந்த தன் தந்தையின் புகைப்படத்தை பார்த்தான். என்றும் போல் இல்லாமல் இன்று அவர் உதடு சற்று புன்னகைத்தது போலிருந்தது மாலிக்கு.

****

PS : என் தாத்தா மீதுள்ள அன்பால் அவரின் பெயரை இக்கதையின் நாயகனுக்கு சூட்டியமையால் இக்கதையை மறைந்த என் தாத்தா மஹாலிங்கம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

7 Replies to “பணங்காய்ச்சி மரம்”

  1. மிக மிக சிலாகித்து வாசித்தேன்.
    அற்புதமான கதை.
    மூன்று நான்கு தலைமுறை வாழ்க்கையை நேர்த்தியாக தொகுத்து வழங்கி
    நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டீர்கள்
    வாழ்த்துக்கள்
    கோவையில் இருந்து என் பாராட்டுக்கள்.

    1. அருமையான எழுத்து நடை. வாழ்த்துகள்

      வசதியிலும்,வறுமையிலும் மேலோட்ட உணர்ச்சிகளுக்கு மட்டும் முன்னுரிமை தருவது தவறு என்ற கருத்தையும் இளைய தலைமுறைக்கு கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  2. இது நான் படித்த சிறந்த கதைகளில் ஒன்றாகும். எப்படி அந்த 45 நிமிடங்கள் சென்றது எனக்கே தெரியவில்லை — goosebump தரும் தருணங்கள், திருப்பங்கள், உணர்ச்சிகள் அனைத்தும் நிரம்பியிருந்தது. பணம் கச்சி மரம் என்ற தலைப்பு உண்மையிலேயே சரியானது. செல்வராஜ் சொன்னது போல, அந்த வீடு மாலி குடும்பத்துக்கு ஒரு லக்கி சார்ம் போல இருந்தது. சரளா, மூர்த்தி ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பு மனதை நெகிழச்செய்தது — எல்லோருக்கும் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும்.

    வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று நிச்சயமாக காத்திருக்கிறது. கடினமான நேரங்களில் நம்மைத் தாங்கியவர்களுக்கு நம் நன்றியும் நம்பிக்கையும் எப்போதும் இருக்க வேண்டும்.

    கதை சொல்லும் பாணி அற்புதம் — நடைமுறை உணர்வும் யதார்த்தமும் அந்த “மாலி” வீட்டுக்குள்ளே எனை அழைத்துச் சென்றது போல. இரண்டு மாறுபட்ட சகோதரர்கள், பொறுப்புள்ள மனைவி, குழந்தைகள், நல்ல தோழர் — ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிரோட்டத்துடன் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.