நைஷதம் வித்வத் ஔஷதம் என்பர். – நிஷத என்ற பிரதேச அரசனுடைய சரித்திரம்- நைஷதம் அது வித்வான்களுக்கு மருந்து போன்று நன்மை செய்வது அல்லது பயனுள்ளது என்பது இதன் பொருள். இதன் கவி ஸ்ரீ ஹர்ஷர் என்பவர். பலவிதத்திலும் உயர்வாக கொண்டாடப் பட்ட நூல். இவரது காலம் – 12 வது நூற்றாண்டு. சம்ஸ்க்ருத இலக்கியங்களின் கடைசி, மிக நீண்ட காவியம் என்பதும் இதன் சிறப்பு. சிறப்பாக இந்த மொழியைக் கற்றவர்களே முழுவதும் ரசிக்க முடியும் என்பர். காரணம் இதன் அமைப்பும், கொள்கைகளும். வேதாந்தியான கவி, தானும் வேத சாஸ்திரங்களைக் கற்றவர், kaNdana kandaka – எதிர் மறையான விமரிசனங்களையும் கேட்டு, அதற்கான நியாயமான விடைகளையும் விளக்கங்களையும் சொல்லி வேதாந்த கொள்கைகளை நிலை நாட்டுவது என்பது அவர் காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். அதில் இவர் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது. பௌத்தமும், ஜைனமும் பரவ ஆரம்பித்திருந்த காலம் என்பதால்.
முழுவதும் கையெழுத்திலேயே இருந்த இவரது நூலை,உரையுடன் தானும் கையெழுத்திலேயே எழுதியவர் Caṇḍūpaṇḍita (चण्डूपण्डित) – கண்டு பண்டிதர் என்பவர். அதன் முடிவில் 1420 என்று குறிப்பிட்டிருக்கிறார். உரை ஆசிரியர். இது இந்த முழு நூலின் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொகுப்பு. Candupandita– கண்டு பண்டிதர் என்பவர், இந்த நூலை – கவிதை அதன் சுருக்கமான விரிவுரை என்றே எழுதி இருந்தாராம், கையெழுத்து பிரிதியாக. அது இன்னமும் Bhandarkar Insitute -ல் பத்திரமாக உள்ளது என்று சொல்கிறார். அவரே முடிவில் குறிப்பிட்டிருக்கும் காலம் சம்வத் 1353 (AD. 1623) இவர் அஹமதாபாதுக்கு அருகில் தோல்கா என்ற ஊரைச் சேர்ந்தவர். இவருடைய சுய சரித்திரத்திலிருந்து சில விவரங்கள்: ஸங்க என்பவர் அரசனாகவும், மாதவா என்பவர் முதன் மந்திரியாகவும் இருந்தனர். இவர் சாரங்க தேவர் என்ற அரசருக்குப் பின் பட்டத்துக்கு வந்த கர்ணதேவா என்பவரின் சமகாலத்தவர். அந்த சமயம் தான் அலாவுதீன் கில்ஜி அஹமதாபாதை வென்று டில்லி சுல்தான் (sulatanate of Delhi) உடன் இணைத்தான். இதன் பின் உள்ள கதை: கர்ணதேவன் மாதவனுடைய மனைவியை அபகரித்தான். மாதவன் இதற்கு பழி வாங்க முஸ்லிம் அரச படைகளின் உதவியை நாடினான். கர்ன தேவன் தோற்று தென்னாட்டில், தேவ கிரியின் யாதவ அரசன் ராம சந்திரனிடம் அடைக்கலம் அடைந்தான். (History of Gujarat) இது தான் குஜராத்தின் அரசியல் மாற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் ஆரம்பமாக இருந்து விட்டது. இதை இந்த உரையாசிரியர் சொல்லக் காரணம் இவருடைய முதல் காண்டத்தின் உரையை அந்த முகம்மதியர் எரித்து விட்டனர். நல்ல காலமாக, கண்டு பண்டிதரின் உடன் பிறந்த தஹ்லானா என்பவன் அதை தனக்காக ஒரு பிரதி எடுத்திருந்தான்.
கண்டு பண்டிதரின் தந்தை ஆலிகபண்டிதர் (Aligfapandita), தாய் கௌரி தேவி, என்பவர்கள். இவர் கற்றது வைத்யனாதன் என்பவரிடம். அவர் நைஷதத்தை முனிதேவா என்பவரிடம் கற்றதாகவும் அவர் சிறந்த மஹாபாரத அறிஞரான நரசிம்ஹபண்டிதர் என்பவரின் மாணவன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவரிடம் தான் பல விதமான philosophical – தத்துவ சிந்தனைகளை அறிந்து கொண்டார். இந்த அளவு அவர் தானே சொல்லாமலே, இவருடைய உரை அவருடைய மொழி அறிவு, எழுதும் திறன், எல்லையற்ற கல்வி , அறிவு நுட்பம் என்பவைகளுக்கு எடுத்துக் காட்டாக உள்ளன என்று பின்னால் வந்த அறிஞர்கள் போற்றுகின்றனர்.

வருந்தத் தக்க ஒரு விஷயம் இவர் சாயனராக சில காலம் (ஜைனராக) இருந்து எழுதிய நூல்கள், ருக்வேதம் முழுவதும் எழுதிய உரைகள் மற்றும் பல பதிவுகள் முஹம்மதியர்களின் வரவால் அழிக்கப் பட்டன. வேதங்களின் யாகங்கள், அதில் பலி என்பது பற்றிய விவரங்களுக்கும், ஸ்ரௌத சூத்ரம் (வேத சாஸ்திரங்களின் ஒரு அங்கம்) இவைகளை எளிதாக புரியும் படி எழுதியவர் என்று புகழப்படுகிறார். அவையும் பஸ்மமாகின. ஒரு உரையாசியர் அங்கலாய்க்கிறார்- ‘இந்த கடுமையான விஷயங்களையே காவ்ய நயத்தோடு சொல்லியிருந்தார்’ கண்டு பண்டிதர். தானே சோம யாகம் என்பதைச் செய்தார். ப்ருஹஸ்பதிசவ- என்ற விசேஷமான ஒரு யாகம் அதைச் செய்து ஸ்தபதி என்ற பட்டம் பெற்றவர். 13வது நூறாண்டு வரை குஜராத் மாநிலம் பல விதமான யாகங்களையும் வேத நெறியும் தழைக்க வளமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
இவர், தன் உரையில், காளிதாசன், பாரவி, மாக என்பவர்களையும், அவர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்களும் காட்டியிருக்கிறார். காவ்ய ப்ரகாச என்ற யாப்பிலக்கண நூல்கள், மேலும் பல. நுண் கலைகளையும் விடவில்லை. தவிர, சம்ஸ்க்ருத இலக்கண நூல்கள் பல. பாணினி என்ற முதல் இலக்கண ஆசிரியர் முதல், அதன் பல பிரிவுகளுடனும் விவரித்து மாணவர்களுக்காகவே எழுதியது போல எழுதியிருக்கிறார். கத்யாயனின அல்லது காத்யாயினிய என்று அழைக்கப் படுகின்றன. இதில் அவர் பல அறிஞர்கள் பெயரையும் அவர்களது பங்களிப்பையும் குறிப்பிட்டு எழுதியிருப்பதாகச் சொல்லப் படுகிறது.
அடுத்து வித்யாதரர் என்பவர், தன் உரையை நல்ல தடிமனான காகிதத்தில் எழுதியிருக்கிறார். கையெழுத்து பிரதியே. பல இடங்களில் இவர் கண்டு பண்டிதரின் உரையையே எழுதி, அதற்கு உடன்படுவதாக எழுதியது முன்னவரின் எழுத்துக்களை வகைப் படுத்த உதவியது என்று அறிகிறோம். இவர் மூலம் நைஷத காவியத்தின் ஒரு நகல் குஜராத் அரசனான விசால தேவன், தனது அரண்மனை நூலகத்தில் கையெழுத்து பிரதியாக வைத்திருந்ததாக தெரிகிறது. அவரை அபரார்ஜுனா என்றும் அழைப்பார்களாம். பிற்கால உரையாசிரியர்கள், இந்த நூலக பிரதியை பயன்படுத்திக் கொண்டு தங்கள் உரையை எழுதியதாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள். வித்யாதரரின் சிறப்பான ஒரு பாடல் ஸ்ரீ ஹர்ஷரின் பரந்த அறிவைச் சொல்வதாக அமைந்துள்ளது. ‘ஸ்ரீ ஹர்ஷர், பதினெட்டு இலக்கண நூல்கள், தர்க்கம், சாதித்ய சாரம், வேதங்களின் பொருள்கள் புது புது பொருள்களுடன் சொல்ல அறிந்தவர், புராணங்கள், மற்ற சாஸ்திரங்கள் இவைகளையும் கசடறக் கற்றவர், தினமும் புதியதான ஒரு விஷயம் இவர் மனதில் உதிக்கும், அதன் ஒளியில், அதுவே தீபமாக அறியாமை என்ற இருட்டை விலக்கும், இதை படிக்கவும், உரை எழுதவும் முயலுபவர்கள் பெரும் அறிவாளிகள் மட்டுமல்ல பாக்யசாலிகள். ‘
மற்றும் ஒருவர் வங்காளத்திலிருந்து வந்த ஈசான தேவர். இவர் சற்று தெளிவாகவும், விவரமாகவும் எழுதியிருக்கிறார். 14 தவிர மற்ற அனைத்து காண்டங்களுக்கும் இவரது உரை கிடைத்துள்ளது. கிடைத்த மற்ற ஓலைச் சுவடிகளும் சில காலத்தால் மடங்கியும் உடைந்தும் உள்ளன. (30-706)
தனித் தனியாக ஒவ்வொரு காண்டத்திற்கும் வெவ்வேறு உரைகள், பாட பேதங்கள் இவைகளை ஒன்றாக அமர்ந்து பல பிற்கால கவிகள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். பத்து பன்னிரெண்டு உரைகள் பத்தாவது காண்டத்திற்கு மட்டுமே. எனவே இவை முடிந்து வெளிட்ட காலம் 1420 என்று ஒருவர் முடிவில் எழுதியிருப்பதைச் சொல்கிறார். ஓலைகளில் சிறிய எழுத்துக்களில் இருந்த உரைகளைப் படித்து மூலத்தோடு ஒப்பிட்டு அதன் பின்னே அங்கீகரித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த மகத்தான செயலை செய்தவர்கள் மிகவும் சிரமப்பட்டிருக்க வேண்டும்.
இவரது மொழியின் வளமும், அழகும், வர்ணனைகளும் யாப்பிலக்கணம், தமிழில் எழுத்து, அசை,சீர், தளை, அடி , தொடை என்ற சொற்கள் கவிதைகள், எழுதும் செய்யுள்களின் அமைப்பை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு இலக்கணம். அதே போல சமஸ்க்ருதத்திலும் காவ்யாலங்காரம் என்ற நூல், கவிதையின் அல்லது வசன கவிதையின் இலக்கணங்கள் விளக்கப் பட்டிருக்கின்றன. காயத்ரி, அனுஷ்டுப் என்று சில நமக்கு பரிச்சயமானவை. பலவிதமான செய்யுள் அமைப்புகள், பல பெயருடன் உள்ளன- இவை கீதமாக இசைத்து, தாளத்துடனும் பாட ஏதுவாக அமைந்தவை. ஸ்ரீ ஹர்ஷர் என்ற இந்த கவி தன் காவியத்தில் பலவிதமான யாப்பிலக்கண முறைகளை கையாண்டிருக்கிறார். சொற்களின் பலதரப்பட்ட பிரயோகங்கள். தவிர, காவியத்திற்கு ஒரு பொதுவான குறிக்கோள் வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. இவர் தன் காவியத்தில் அந்த நாட்களில் இருந்த பலவிதமான தத்துவ கோட்பாடுகளை தன் கதையின் ஊடே விளக்கிக் கொண்டே போகிறார். ஓரளவு எழுதியபின் என்ன காரணத்தாலோ, சுபமாக முடித்து விட்டார்.
காவியத்தின் கதை மகா பாரதத்தில் வரும் உரையாடலாக வரும் ஒரு பகுதி. வெகு ஜன பிரியமாக ஆன கதை. சித்திரங்களும், நாடகங்களுமாக இந்த கதை நாட்டில் பலரும் அறிந்த கதையே.
அவரது தத்துவ சிந்தனைகளைப் பார்ப்போம்.
நைஷத
1, நைஷத – என்ற இந்த நூல் பிரதானமாக நிஷத அரசனான நளன் என்ற நாயகனின் கதையைச் சொல்கிறது. நடு நடுவில் சில தத்துவ விசாரனைகளைச் செய்து வேதாந்தத்தின் உயர்வை சொல்ல வருகிறார் கவி ஸ்ரீ ஹர்ஷர்.
நியாய வைசேஷிக கொள்கைகள்:
இமைகள் தாழ்ந்து இருந்து கண்களை மூடியிருக்கும் சமயம் எதிரில் உள்ள பொருளை அறிய முடியுமா?
முன் கண்டறியாத நளன் மனதில் தமயந்தியின் உருவம் எப்படிதோன்றியிருக்க முடியும்? தமயந்திக்கு தோழிகள் விவரித்துக் கொண்டிருந்தனர். அதனால் யாரோ ஒருவன் அரசன் என்ற வரைத் தெரியும். நளனிடம் ஒருவரும் எதுவும் சொல்லவில்லையே. மனதில் தோற்றம் வரக் காரணம் ?
ஸ்ரீ ஹர்ஷ கவிக்கும் முன் பல வைசேஷிக என்பவரின் கொள்கையை ஏற்றவர்கள், விமரிசித்தவர்கள் இருந்தனர். வியோம சிவாசார்யா, ஸ்ரீதர, உதயன என்ப்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் இருட்டு என்பதும் ஒரு பொருளின் நிழலும் ஒன்றா என்று விவாதித்தனர். அபாவம்- இருப்பது போலத் தோன்றும் மாயை என்பதை கனவில் தெரிவது போல என்று ஒரு உலகின் இருப்பை வேதாந்திகள் சொல்வர். அதன் தொடர்ச்சியாக இந்த விவாதம்.
முதல்வர், ஒரு பொருளின் நிழலே இருட்டு என்பதையே ஆக்ஷேபித்தார். ஏனெனில் நிழல் அசையும். இந்த அசைவு நிழலின் தன் முயற்சியால் அல்ல. எந்த பொருளின் நிழலோ அது அசைந்தால் இதுவும் அசையும். தவிர நிழல் உள்ள இடத்தில் குளுமை போன்ற மூல உருவத்துக்கு இல்லாத குணங்களும் இருக்கும். அடுத்து ஸ்ரீதர் என்பவரும் இருட்டு என்பது ஒரு பொருளல்ல என்றார். ஆனால் இதற்கு ஒரு தனித்வமான வண்ணம்-கருமை உள்ளது. இது பொருளல்ல என்றால் இது சாத்யமில்லை. அதே சமயம் பொருளுமல்ல. இதை பரமாணுக்களால் உருவாக்க முடியாது. இதை கலைத்துப் பார்த்தால் அணுவோ எதுவும் இல்லை -அதனால் இல்லாத ஒன்று அபாவம் – வண்ணம் மட்டுமே பரவி தான் இருக்கும் இடத்தை நிரப்பும். ஒளி வந்தால் மறையும். அதனால் இருட்டு என்பதும் ஒரு குணம் என்றார்.
அபாவம்- எதுவுமில்லை என்று தள்ள முடியாது என்றார் அடுத்து வந்த உதயணன் என்பவர்.
உதயணர் சொல்வது, இந்த இருட்டு சாமான்ய (பொதுவானது) , விசேஷ (தனித்தன்மையுடையது), சமவாய -மற்றொன்றில் தோன்றியது) அதாவது ஒரு பொருள் தோன்றக் காரணம், ஏதோ ஒரு செயல், குணம், இடம், காலம்,, மனம், தான்- ஜீவன், வானம், வாயு- இவை தேவை. இருட்டுக்கு நிறமோ, உருவமோ கிடையாது. கண்கள் மூடியிருந்தால் இருட்டு தெரியாது –
த்வயனுக
த்வயனுக: இரண்டு அணுக்களின் சேர்க்கை. द्वयणुक कृत् परमाणुयुग्मम् – இரு பரமாணுக்கள் – ஒன்றிற்கும் மேற்பட்ட பரமாணுக்களின் சேர்க்கையால் உண்டான பிறவியைக் குறிக்கும். இதை கவி ஆந்தை யுடன் ஒப்பிடுகிறார். இந்த கொள்கையை இருட்டுடன் ஒப்பிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆந்தைக்குத்தானே இருட்டின் விவரங்கள் தெரியும் என்பதால். காணாத गाणाद – என்பவர் இதன் ஆசிரியர் அல்லது இந்த கொள்கையை அறிமுகப் படுத்தியவர். இருட்டு- இல்லாமை -அபாவம் என்பதற்கு மறு பெயராக பயன்படுத்துகிறார். செயலோ, குணமோ, பொருளோ இதன் அடிப்படை அல்ல. இருட்டின் நிறம் என்பது கூட பொருத்தமில்லை. கருமை தான் இருட்டு என்றால் நாம் ஒரு கரு நிற துணியையோ, கருப்பு நிறத்தில் உள்ள உருவத்தையோ இருட்டு என்று சொல்ல வேண்டியிருக்கும். வெளிச்சம் வந்தால் மறைந்து விடும் இருட்டு என்பதால் அது நிரந்தரமல்ல, கண்கள் தான் காரணம். கனவு என்பது போல இருட்டும் மனதை பொறுத்தது. ரூபம் இல்லாதது – கண்களுக்கு புலனாகாதது – ஏனெனில் கண்கள் ஒளி இன்றி எதையும் காண சக்தியற்றது என்பதே அடிப்படை காரணம். கனவு என்பதும் முற்றிலும் சரியல்ல. கண்களுக்கு அதில் வேலையில்லை என்பதால் மட்டும் இருட்டு கனவுக்கு சமமாகாது. ஏனெனில் கண்களை மூடிக் கொண்டிருக்கும் சமயம் அறையில் இருட்டா, ஒளியா என்பது மனதால் கண்டு கொள்ள முடியாது. இருட்டு என்பது கருமை நிறம் உடையது என்பதை மட்டும் சொல்லி விளங்க வைக்க முடியாது – ஒரு விளக்கம் – ஒளி வந்தவுடன் இருட்டு மறைகிறது என்பதும் ஒருவனுடைய உடல் வலியும், அதனால் படும் துன்பம் வலி தீர்ந்தவுடன் மறைவது போல என ஒரு வாதம். சுமையை தூக்கிக் கொண்டிருப்பவன் அந்த சுமையை இறக்கியவுடன் பெறும் மகிழ்ச்சிக்கு இணையானது. ஒளி வந்தவுடன் இருட்டு மறைவதை ஒரு நன்மையாக உணருவதைச் சொல்கிறார்.
இருட்டு கருமையாக இருக்கலாம் ஆனால் கருமையாக இருப்பது எல்லாமே இருட்டு என்ற சொல்லால் விளக்க முடியாது. இந்த கருமை உண்மையோ, மனதின் கற்பனையோ, இருட்டை விளக்க கருமை என்ற ஒரு விவரம் மட்டும் போதாது. அதனால் தான் ஒளி இல்லாமல் இருந்தால் இருட்டு என்று சொல்கிறோம். அவ்வளவே. तमो नीलं न तु नीलिमा तम इति- இருட்டு கருமை, ஆனால் கருமை என்றாலே இருட்டு மட்டுமல்ல.
இதன் தொடர்ச்சியாக குமரில என்பவரின் கொள்கை இருட்டும் ஒரு பொருளே என்பது. கண்ணின் சக்தி ஒளியின்றி தெரிவதில்லை என்பதால் அதன் இருப்பு தெரிவதில்லை. இதை ஸ்ரீஹர்ஷ கவி ஏன் சொல்கிறார் என்றால், அவர் காலத்திலும் அவருக்குப் பின் பல காலம் வரை இந்த கொள்கை பிரபலமாக நம்பப்பட்டது என்பதால். உதயணர் சொல்வது, கண்கள் மூடியிருந்தால் இருட்டு தெரியாது – இதை ஸ்ரீதரன் என்பவர் மறுக்கிறார். இருட்டு என்று ஒன்று இல்லவே இல்லையெனில், இருட்டு என்பதன் சில குணங்களும் இல்லையென்று ஆகும்.
மாயை, தோற்றம் மட்டுமே என்றால், எங்கிருந்து எப்படி வந்தது? தோற்றத்தின் பிரதி பிம்பமா? பிரதி பிம்பம் என்றால் நிழலா? தோற்றம் ஒளியானால் இருட்டு மாயையா?
நியாயம்
2) நியாயம் என்ற கொள்கை:
கௌதமர் என்ற முனிவரின் ( गोतम- காளை) கொள்கைகள். இந்த நியாய சித்தாந்தம் என்பது மனிதர்கள் அனுபவிக்கும் இருபத்தோரு விதமான துன்பங்கள் – அவைகளிலிருந்து விடுபடுவதே முக்தி என்பது. அறிவும், அனுபவமும் கூட துன்பங்களே- மனிதனின் மனதை பாதிப்பவையே – என்கிறார். மற்றொரு நியாய அறிஞர் வாத்ஸ்யாயனர் என்பவர். முக்தி மகிழ்ச்சி என்பது அல்ல – மகிழ்ச்சி தேனும், விடமும் கலந்தது போன்ற உணர்வு. இதை கவனமாக கையாள தெரியாதவர்கள் முடிவில் வருந்த நேரிடும். இந்த உடனடியான மகிழ்ச்சி என்பதைக் கடந்து சென்று, சாதனைகளைத் தொடர்ந்து முக்தியை அடைய வேண்டும். இந்த கருத்தை ஆதரிப்பவர்கள், வாசஸ்பதி, உத்யோகாரர், போன்றவர்கள். கல் போல – எந்த வித வண்ணமோ, குணமோ இல்லாத கல்.
ஓரளவு குமரில பட்டரும், பார்த்த சாரதி என்பவரும் இந்த முக்தி நிலையை கல் போன்ற உறுதி உடையது என்றே வர்ணித்திருக்கின்றனர். இந்த இருவரும் வைசேஷ என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீஹர்ஷர் என்ற இந்த கவி இந்த கொள்கையின் பல விதமான வாத ப்ரதி வாதங்களை முன் வைத்த பல ஆசிரியர்களில், வாத்ஸ்யாயனரையே அனுசரிக்கிறார் என்று உரையாசிரியர் குறிப்பிடுகிறார். ஏனெனின் இதன் பின் பல திருத்தங்களுடன் இதே கொள்கை பின்னால் வந்தவர்கள், ஸ்ரீ ஹர்ஷ கவிக்கும் சம காலத்தவரோ, வாத்ஸ்யாயணருக்குப் பின் இவர் காலம் வரை இடைப்பட்ட காலத்தினரோ என்று விவரித்திருக்கின்றனர்.
அவர்களில் பாச ஸர்வஞ என்பவர் வானம் போல நிர்மலமானது முக்தி என்கிறார். எந்த வித பந்தமும் இல்லாத சுதந்திரமே முக்தி. நியாய தத்வம் – முக்தியிலும் ஆனந்தம் என்ற நிலையை சாதகன் உணருவதாக ஏற்றுக் கொள்வதாகவும், கல் போன்று உணர்வற்ற நிலை அல்ல என்று பின்னால் வந்த அறிஞர்களின் வாதம். ஸ்ரீ ராமானுஜ வழியில் வந்த வேங்கட நாதர் என்பவர் நியாய பரிசுத்தி என்ற தன் நூலில் பாச சர்வக்ஞ, என்றவரின் கொள்கையை ஆதரித்து விளக்கி இருப்பதாக சொல்லப் படுகிறது. ஆயினும் நியாயம் என்ற கொள்கையை மறுக்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது போல இந்த கவி போன்றவர்கள், இதன் ஆதியில் விவரித்த அறிஞர்களின் கொள்கையை முற்றிலும் புறக்கணிக்காமல் இந்த கொள்கையின் முன்னோடிகளாக வாத்ஸ்யனர் முதலானோரையே சொல்கின்றனர்.
வாசஸ்பதி என்பவர், முடிந்த முடிவாக முக்தி ஆனந்தமே என்று வாதிடுகிறார். அவருடைய சொல்படி, சாதகன் சுவர்கத்தை கூட வேண்டுவதில்லை. இந்த நியாயம் என்ற தத்துவம் பின்னால் வந்த வாதங்களையும் சொல்லி, ஆதி ஆசிரியர்களின் கொள்கைகளையே வலியுறுத்துவதாகவே இருந்ததால், ஸ்ரீ ஹர்ஷ கவியும் அதையே பின் பற்றி தன் காவியத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்று உரையாசிரியர் கருத்து.
நைஷத ஸ்லோகம் – ஒருவர் உலகியல் சுகங்களை துறக்க விரும்பாமல் முக்தி அடைய முடியாதா என்றகேள்வியுடன் வாதத்தை துவக்குகிறார். ஸ்ரீ ஹர்ஷரோ, வேதாந்தி- வேதங்கள் சொல்வதை நம்புபவர்- அதனால் அவர் இந்த நியாய என்ற கொள்கையை ஏற்கவில்லை என்பதோடு எதிர்த்தும் பேசுகிறார்.
24- ननु सुखाभिव्यक्ति मुक्थिरिति …… இது வேதாந்தம் சொல்லும் நிரந்தரமான ஆனந்தம் என்ற அனுபவத்தை மறுப்பதால் அவர் தான் ஏற்கவில்லை என்று தெளிவு படுத்துகிறார். நியாய மதத்தினரும் வேதங்களை அறிந்தவர்களே. அவர்கள் ஆனந்தம் என்று வேதம் சொல்வதை, வலி அல்லது துன்பம் இல்லாத நிலை என்ற வரையில் பொருள் கொண்டு, தங்களுடைய முக்தி என்ற நிலையை அதற்கும் மேலான உணர்வற்ற நிலை என்று சொல்கிறார்கள். இந்த இரு கொள்கையினரும் வலியற்ற, துன்பம் என்ற உணர்வற்ற நிலையே முக்தி शिलात्व – silai-கல் – போன்ற என்பதை வலியுறுத்துகிறார்கள். வேங்கடனாதர் போன்ற ஸ்ரீ ராமானுஜ மதத்தினர் இதை வெகுவாக மறுக்கிறார்கள்.
நியாய. வைசேஷிகர்கள் கொள்கை படி- மனம் என்பது ஒரு அணு- எங்கும் பரவி இருப்பது, இதற்கு தனித் தன்மை என்பது இல்லை. மனம் புலன் கள் மூலமாக அந்தந்த சமயங்களில் அனுபவிக்கிறது. வண்ணமோ, குணமோ மனதிற்கும் கிடையாது, புலன் களின் ஆதிக்கத்தால், மனம் இவைகளை உணருகிறது. உதாகரணமாக: நியாய சித்தாந்தம் சொல்கிறது: மனிதனுடைய கண்களின் பார்வை- அதன் கிரணங்கள், பூணைக்கும் உள்ளன. ஒரு பொருளைக் கண்டவுடன், அது என்ன என்பதும், அதன் லக்ஷணங்கள் – அறிமுகம் அல்லது இது தான் என்ற அறிவை மனிதனின் மனது உணருகிறது. இதை விளக்க பதினாறு விதமான உவமைகளும், விவரங்களும் நியாய மதத்தினர் சொல்வர் என்கிறார். அதை யார் தீர்மானிப்பது?
கடைக் கண்ணால் கூட காணாத நளனிடம் பைமீ- பீமனுடைய புத்ரி, எப்படி உணர்ந்தாள் – என்பது கேள்வி. இதை விளக்கவே இந்த நியாய கொள்கைகள்.
மீமாம்ச
3) அடுத்து மீமாம்ச கொள்கைகள்
(மீமாம்ச என்ற சொல்லின் பொருள்- ஆராய்ந்து தன் கொள்கைகளை ஆதாரங்களுடன் விளக்குவது)
மீமாம்சை என்பது மந்திரங்கள் மட்டுமே, செயல் மட்டுமே பலனளிக்கும். கடவுள் என்ற உருவ வழிபாட்டை மீமாம்சை மறுக்கிறது. மந்திரங்கள் மூலம் சக்தி பெறலாம். கடவுளைக் கண்டவர் எவருமில்லை. இதை நைஷதம் பல இடங்களில் விவாதிக்கிறது. உருவ வழிபாடு என்றும் கடவுளுக்கு உருவம் என்றும் சொன்னால், பல இடங்களிலும் தனித் தனியாக பலவித விருப்பங்கள் நிறைவேற என்று செய்யப் படும் யாகங்கள் அனைத்திலும் எந்த உருவத்தில் எப்படி வருவார் என்பது கேள்வி. கர்ம மார்கிகள் என்பவர்கள் வேத மந்திரங்களை ஒத்துக் கொண்டு யாகங்கள் செய்வர். அதற்கு பலன் அந்த செயலின் விளைவே. (யாகங்கள் செய்வதால் வெட்ட வெளியில் அதன் தாக்கம் மேகங்களை வளர்க்கிறது, அதன் பின் இயற்கையின் செயல்பாடு, மேகம் மழையாக பொழிகிறது, பூமி வளமாகிறது, பயிர்கள் முளைக்கின்றன, உணவினால் உயிரினங்கள் தோன்றுகின்றன, வளருகின்றன, முடிகின்றன, என்று அந்த சங்கிலி தொடரும்)
உருவம் என்று இருந்தால் அது ஒரு நாள் மறையத்தான் வேண்டும். மனிதர்கள் போலவே பிறந்தும் மறைவதுமான வாழ்வா அவர்களுக்கும். வேதங்கள் மிக உயர்வாக வர்ணிக்கும் குணங்களுடைய உருவமே ஆனாலும் அவர்களையும் பூ உலகில் பிறந்த மனிதன் போலவே என்று ஒப்பிடுவது சரியா? ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் போன்றவர்களும் இந்த மீமாம்ச கொள்கையை கண்டித்து இருக்கிறார்கள். அவர்கள் தொன்று தொட்டு வந்த கடவுள் இருக்கிறார் என்பதை ஆதரித்தனர். ஒரு சக்தி, ஒரு அடிப்படை ஆதாரம். பிடிமானமாக உருவம் – அது தான் கடவுள். அவரவருக்கு தோன்றும் விதத்தில் உருவமாக வைத்துக் கொண்டால், அதைக் காணவும், வழிபடவும் மனம் ஒருமைப்படும். அதனால் உருவம் தேவை என்பதும் அதனிடம் மனம் ஒன்றி வழிபட கடவுள் என்ற நம்பிக்கையும், உருவமும் தேவை என்பது இவர்கள் வாதம்.
ஸ்ரீஹர்ஷர் தன் காவியத்தில் இவர்களை (மீமாம்சகர்களை) स्वत:प्रामाण्य – தன்னைத் தானே அறிந்தவன் – தன்னம்பிக்கை உள்ளவன் என்கிறார். நளன் அந்த அன்னப்பறவையிடம் சொல்வது போல:- நன்மையோ, தீமையோ தன் செயல்களின் விளைவே. மனசாட்சி என்பது ஒருவனை எந்த வழியிலும் செலுத்தலாம். உலகில் பொருளின் மதிப்பை, அல்லது பயனை அறிந்து கொள்வது மனதின் மேம்பட்ட செயல். இதற்கு அறிவு உதவும்., அதற்கும் அதிகமாக உள்மனது அறியும். தன் மனதினால் உணரவோ, அறியவோ முடியாத பொழுது மற்றவர்களின் அறிவுரையை பரிசீலிக்கலாம் – அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. தன் சக்தியை,அறிவை வளர்த்துக் கொள்வதில் திறமை இல்லாதவர்களே, மற்றவர் சொல்லை ஏற்பர். ஒரு பொருளை தானே அறிந்து உணர்ந்து கொள்ள அந்த பொருளை முழுவதுமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். கால தாமதம் ஒரு தடை. இரண்டாவது தானே ஆராய்ந்து பெற்றதை சரிதானா என்று தெரிந்து கொள்ள மற்றொரு சாதனம் தேவையாகும். கால விரயம் தவிர சரி பார்க்க அதே பொருளில் தேவைபடும் மிகையான அறிவு எங்கிருந்து வரும்? இந்த உறுதி அளிக்கும் வெளி சக்தி எதுவாக இருக்க முடியும்? முதல் வினா, அதற்கு விடை என்று தானாக உணர்ந்தது அந்த முதல் வினாவை ஆதரித்து இருக்குமா, மாற்றாக இருக்குமா? கண்டு அறிந்தது தனக்கு சாதகமாக இல்லாவிடில் முதல் வினாவிற்கு விடை என்ன? இப்படியே முதல் வினாவிற்கு மாற்றாக மற்றொரு வினா என்று தொடரும் சங்கிலியாக முடிவின்றி போகலாம். அதனால் மீமாம்சகர்கள் புத்தி – இயல்பான அறிவை மேம்படுத்திக் கொண்டு அதையே ஸ்திரமான ஆதாரமாக சொல்கிறார்கள். மற்ற விடைகளுடன் ஒப்பிட்டு கண்டு கொள்ள முடியாததை சுய புத்தியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றாகும். இந்த புத்தியை வளர்ப்பது எது? அல்லது எப்படி? தன்னைத் தானே அறிதல்- தன் உள் மனதின். தூண்டுதல் மட்டுமே பிரமாணம் என்பது மீமாம்சகர்கள் பொதுவாக ஏற்றுக் கொண்ட கொள்கை. பல விதமான விவாதங்கள், எது சரி என்பதை எப்படி தீர்மானிப்பாய் என்பதை விளக்க என்ன ஆதாரம்? நைஷதம் சொல்வது, யதார்ததா- உள்ளது உள்ளபடி- அதாவது உண்மைத் தோற்றம். அனைத்து முடிவுகளும் சரியே என்று ப்ரபாகரர் என்பவரின் முடிவு. ஏனெனில் அறிவு என்பது, தானே பிரகாசமாக்கும். புலன் களுக்கு இயல்பாகவே அந்த உணர்வு, எது சரி என்பதை அறியும் திறன் உள்ளது. பிறவிகளின் புலன்கள் தங்களுக்கு நன்மை தருவதையும், எது தீமை என்பதையும் அறிந்து கொள்ளவும் ஆற்றல் பெற்றவையே. பெரும்பாலும் அவை சரியாகவே இருக்கும்.
இந்த வாதம் சரி என்று\வைத்துக் கொண்டாலும் இதற்கு பல அத்து மீறல்கள் உள்ளன என்று நைஷதக்காரரான ஸ்ரீ ஹர்ஷர் சொல்கிறார்.
ஆறாவது காண்டத்தில் நளன் தன் உருவை மறைத்துக் கொண்டு தமயந்தியின் அந்த:புரம் செல்கிறான். தான் தமயந்தியை காணவும், கேட்கவும் செய்கிறான். அவளுக்கு அவனைத் தெரிவதில்லை. அவள் மனதில் தானாக கற்பனை செய்த உருவமே – இருவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் வெகு தூரத்தில் இருப்பது போன்ற மன நிலையே இருவருக்கும். நளனுக்கு நிர்பந்தம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத நிலை, தமயந்திக்கு அன்னப் பறவை சொல்லிக் கேட்டது மட்டுமே. ஒருவருக்கொருவரை நெருங்கி இருந்து அணைப்பது போலவும், காண்பது போலவும் வரும் உணர்வே உண்மையில்லை, மனதின் ஒரு தோற்றமே என்றாகிறது. பிரபாகரர் என்பவர் இந்த அனுபவமும் உண்மையே என்கிறார். இதில் நிறைவு எப்படி வரும்? இங்கு வழக்கமான உவமை, சிப்பியில் வெள்ளியைக் காண்பது போல – சிப்பியின் ஓடு வெளிச்சத்தில் பள பளக்கிறது. வெள்ளி போல தோற்றமே- உண்மையல்ல என்பது ஒரு வாதம். வெள்ளியை அறியாதவன் சிப்பியின் பள பளப்பை எப்படி வெள்ளியோடு ஒப்பிடுவான்? அதற்கு முன் அவன் வெள்ளியை கண்டிருந்தால் மட்டுமே இந்த ஒப்பிடுதல் சாத்யம் ஆகும். வெண்மை , பள பளப்பு என்ற ஒற்றுமைகள் அவன் மனதில் கண்டவுடனே தோன்றுவது எதனால்? அதனால் பிரபாகர் சொல்வது போல உள்ளுர்ணவு அறிவதற்கும் ஒரு அளவு கோல் வருகிறது. ஆனால் வெள்ளியை முன்பே அறிந்திருப்பவன், சிப்பியின் பள பளப்பை வைத்து வெள்ளி என்று நினைத்தவரை உண்மைதான், அதன் பின் அருகில் நெருங்கி அது வெள்ளி இல்லை என்று சுய அறிவினால் அறிகிறான். அந்த அறிவு எங்கிருந்து வரும்?
திரும்பவும் இந்த நைஷத பாடலுக்கு வருகிறார். இருவரும் இதற்கு முன் அறியாதவர்கள், ஒருவரையொருவர் கண்டதில்லை, பேசிக் கேட்டதில்லை எனும் பொழுது இருவரும் இதற்கு முன் வேறு எவரையோ, கண்டும், கேட்டும் அறிந்ததை இந்த உருவெளித் தோற்றத்தில் உணர முடியுமா? அது முழுமையானதாக எப்படிச் சொல்வோம்.
ஒரு உரையாசிரியர் இதற்கான பதிலைச் சொல்கிறார். இருவருக்கும் இடையில் அணைப்பது போன்ற தொடு உணர்வு சாத்யமே, வெறும் தோற்றமில்லை. நளன் கண்களுக்கு புலனாகாமல் இருந்தான், ஆனால் தொடு உணர்ச்சி இருவருக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கலாம், காரணம் அவன் இருப்பை அறியாமல் நெருங்கி வந்தவள் எதேச்சையாக அந்த தோற்ற உருவை அணைத்திருக்கலாம்- உண்மையாக நடந்ததா என்பது அல்ல இங்கு கேள்வி- அதற்கு சாத்யம்- வாய்ப்பு இருக்க முடியும் என்பது மட்டுமே பிரபாகரரின் வாதத்திற்கு பிரதி வாதமாக வைக்கிறார். மனதளவில் இருவரும் நெருங்கியவர்கள் என்பது அவரவது வாதத்திற்கு அடிப்படை. புலனாகாமல் இருந்தான் ஆனால் உருவமாக இருந்தான் என்பதை நைஷத பாடலில் சுட்டிக் காட்டுகிறார்.
மீமாம்சகர்களின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஸ்ரீ ஹர்ஷர் ஏற்றுக் கொள்ளாத காரணம் அவர் தீவிரமான சிவ பக்தர்.
வேதங்கள் போற்றுகின்றன. தன்னலம் கருதாமல் யாரானாலும் அருள் செய்வது அவர் இயல்பு. அவர் சிவபெருமான் என்று நினைப்பது பரம் பொருளான ப்ரும்ம ஸ்வரூபமே. ஒரே கடவுள் பலவாக வெளிப்படுகிறார் என்று வேதம் சொல்லும் உண்மையை அவர் உணர்ந்து கொண்டவர். நியாய கொள்கைக் காரர்கள் பொதுவாக சைவர்கள். அவர்கள் மனதில் உருவேற்றிக் கொண்ட உருவம், சிவ பெருமான் என்ற பர தத்துவம், அவருடைய எல்லையற்ற சக்தியே உலகில் பலவாறாக வெளிப்படுகிறது என்பது நம்பிக்கை. இந்த சிவ தத்துவத்தை அறிவது தான் மோக்ஷம் அதாவது முக்தி என்றவர் பாச சர்வஞர் – என்பவர் தான் முடிந்த முடிவாக நியாய கொள்கைகளை நிறுவியவர். சிவ தத்துவம் தான் முக்திக்கு வழி காட்டும். சங்கர- நன்மை செய்பவன் என்பது சிவ பெருமானுடைய பெயர். ஸ்ரீ ஹர்ஷன் என்ற இந்த கவி, மன்மதனை அவர் எரித்த நிகழ்வை வர்ணிக்கிறார். அவர் உருவும் அருவுமானவர் என்று வர்ணிக்கிறார். மீமாம்சகர்கள் பலர் தங்கள் கொள்கைகளை வலியுறுத்தியதைப் போலவே, அதற்கு பின் . வந்தவர்கள் அதை ஏற்காமல் நியாயம் என்ற கொள்கைகளைச் சொன்னார்கள். அவர் காலத்திற்கு சற்றே முந்தியவர்கள் ஆனாலும் கவி –
वेदैर् वचोभिरखिलै: कृत कीर्तिरते हेतुम् विनैव धृत नित्य परार्थ यत्ने | मीमाम्सयेव बगवत्यमृतांशु मौलौ तस्मिन् मही भुजि हयानुमतिर् न भेजे ||
ஆதியிலிருந்து வேதம் சொன்ன வழியில் நம்பிக்கையுடன் நடந்து சிவ பெருமானை பூஜிப்பவன் நான். என் மனம் பிறை ஸூடிய பெருமானை மனதில் பூஜிப்பதால், மீமாம்ச கொள்கையை அது ஏற்க மறுக்கிறது என்கிறார். என் மனம் அனுமதிக்கவில்லை.
மண்டனமிஸ்ர என்பவர் தான் மீமாம்ச கொள்கைக்கு ஆதார பூர்வமான அதிகாரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டவர். விதி விவேக என்ற நூலை எழுதியவர். இதில் நியாய கொள்கையை அனுசரித்த வாசஸ்பதி எழுதிய நியாய கணிகா என்ற நூலையும், உதயணர் என்பவரின் நியாய குசுமாஞ்சலி என்ற நூலையும் விமரிசித்தும், ஏற்றுக் கொண்டும் தன் முடிவான கொள்கையை விளக்கியிருக்கிறார். விதிவிவேக என்ற தன் நூலில் கடவுள் நம்பிக்கையை வெறும் புரளி, என்று ஒதுக்கி விட்டிருந்தார். பர ப்ரும்மம் என்றோ ஈஸ்வரன் என்றோ பகவான் என்றோ (பகவான் – ஆறு விதமான நற்குணங்கள் உடையவர் என்று பொருள்) என்றோ ஒன்று இருப்பதாகவே நியாய கணிகா மறுத்தாலும், உதயணன் தன் நூலில் சிவ பெருமானை, பவன் என்றும், பரம சிவன் என்றும் , அவரே பரம் பொருள் என்றும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரும் மீமாம்சையை மறுக்கிறார். என்றாலும், பல பெயர்களில், ஈசான, ஈஸ்வர, மகேஸ்வரன் என்ற பெயர்களை பரம் பொருளாக ஏற்றுக் கொள்பவராகத் தெரிகிறார். இவை சிவபெருமானைக் குறிப்பதே என்பதால். உதயணன் , கடவுள் அருவமாக, இருப்பவர், கருத்துரு மட்டுமே (abstrct). தேவையானால் உருவம் எடுத்துக் கொண்டு அவதாரம் செய்வதையும் ஏற்றுக் கொள்கிறார். மீமாம்சகர்கள் மஹேஸ்வரனையும், உருவாய், அருவாய் என்ற கொள்கையையும் கூட மறுக்கின்றனர் என்பதால், அவர்களுக்கு ஆறு நற்குணங்கள் பற்றிச் சொல்லி விளக்குகிறார். வேண்டியவர்களுக்கு வேண்டிய உடனே அருள் என்பதையும் மீமாம்சகர்கள் முற்றிலும் மறுக்கின்றனர்.
கடவுள், என்றும் பரம் பொருள் என்று சிவ பெருமானைச் சொல்வதை ஒட்டு மொத்தமாக மறுக்கும் மீமாம்சகர்கள், அவருடைய உருவ வர்ணனையை எப்படி ஏற்பர்? இவர்களின் ஆதரவாளர்களுல் ஒருவரான மித்யா சுக்லா என்பவர் ஒரு படி மேலே போய், ஒரு பரிகசிக்கும் நாடகத்தை எழுதியிருக்கிறார். காபாலிகர்கள் அதிகமாக இருந்த காலம் அது என்பதால், அவர்கள் சிவ பெருமானை காபாலி என்று அழைப்பதை வைத்து அந்த பரிகாசமான நாடகத்தை எழுதியதாகச் சொல்வர். “
ஒரு சிலர் மீமாம்சகர்கர்கள் அருவமான, ஞான ரூபம் உடையவராக கடவுள் என்ற தத்துவத்தை ஏற்கின்றனர் என்பர். குமரில பட்டர் தான் ஸ்லோகவார்திக என்ற நூலை எழுதியவர். தான் ஏன் முழு முதற் பொருள் என்பதை ஏற்கவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கி இருக்கிறார். உருவமோ, அருவமோ, அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று சொல்கிறார். உருவம் என்று இருந்தால் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அருவம் என்றால் அந்த கடவுள் என்ற பெயர் மட்டுமே மற்றவர்களின் குறை தீர்க்க எதுவுமே செய்யும் நிலையில் இருக்க முடியாது. விஸ்வேஸ்வரன் என்ற பெயரையும் ஏற்காவிட்டாலும் மீமாம்சகர்கள் ஒட்டு மொத்தமாக அவர் கடவுள் கொள்கையை மறுக்கவும் இல்லை என்று தெளிவு படுத்துகிறார், நாராயணன் என்ற மற்றொரு மீமாம்சகர். குமரில பட்டரே தன் நூலின் ஆரம்பத்தில், சிவ பெருமானை துதிக்கிறார் என்பதை சுட்டுகிறார். ஆனால் இந்த ஸ்லோகத்தையும் யாகத்தை குறிப்பதாக பொருள் கொள்கிறார் மற்றவர். குமரில பட்டர் சிவபெருமானை வேண்டிக் கொண்டு தன் நூலை அரம்பித்து இருக்கலாம். ஆனாலும் அவர் முழு முதற் பொருள் என்பதை தன் கொள்கைகளில் கடுமையாக மறுத்து பேசியிருக்கிறார் என்பதும் உண்மையே. அவரை நாஸ்திகர் என்று சிவ பெருமானை வணங்கும் நியாய வாதிகள் சொல்வர்.
பிற்கால அறிஞர்கள் மீமாம்சகம் ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு கொள்கையல்ல என்றே அறிந்து தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக சங்கர விஜயம் மண்டன மிஸ்ரரைப் பற்றி குறிப்பிடும் பொழுத்து அவரை நாஸ்திகராகச் சொல்வதில்லை. அதற்கு காரணம் மண்டன மிஸ்ரரின் குரு ஜைமினி என்ற ரிஷி. அவர் வியாசபகவானின் முதல் மாணாக்கராவார். வியாசரின் கருத்துகளுக்கு எதிராக அவர் எதுவும் சொல்ல மாட்டார். அதற்கு ஏற்றவாறு பிற்காலத்தவர் அந்த அளவு கடவுள் மறுப்பு கொள்கையை சொல்லவும் இல்லை, கோவிந்தா என்ற பெயரில் பரம் பொருளிடம் அவர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆபோ தேவர் என்பவர் இந்த இரண்டையும், மீமாம்சா, நியாயம் என்ற கொள்கைகளையும் விமரிசித்து எழுதியவர். நாளடைவில் இந்த கொள்கை வெகு ஜன மத்தியில் எடுபடாமல் போய் இருக்கலாம். அதனால் பல அறிவாளிகளான பிற்கால எழுத்தாளர்கள், நாராயண பட்டர் போன்றவர்களும் வேத புருஷனாக கடவுள் கொள்கையை ஆதரித்தே எழுதலாயினர். அழிவில்லாத பரம பவித்ரமாக கருதப் படும் வேத மந்திரங்கள் சொல்வதை மட்டுமே நம்பும் மீமாம்சகர்கள் உபநிஷதுக்கள் என்பவைகளையும் நம்புவதில்லை. வேத மந்திரங்கள் அனாதி என்றும் அதை யாரும் இயற்றவில்லை, ரிஷிகள் கண்டு கொண்டனர் என்று சொல்லும் அறிஞர்கள் தான் இவர்களின் முன்னோடி.
இந்த மீமாம்சகர்களின் கொள்கையை வன்மையாக கண்டிக்கிறார் நைஷத கவியான ஸ்ரீ ஹர்ஷர். அவர் சொல்வதாவது: மனித மனம் எந்த ஆதாரத்தில் இயங்குகிறது – ஏதோ ஒன்று தொடர்ந்து காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. அந்தம் இருந்தால் ஆதி இருந்து தானே ஆக வேண்டும் என்பது ஒரு வாதம். செடி முளைத்தால் அடியில் விதை இருந்திருக்கிறது என்பது போல இது நிதர்சனமான உண்மை.
அந்த ஆரம்பம் கடவுள் தத்துவமாக இருக்கலாம் அல்லது பரம்பரையாக வந்திருக்கலாம். விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து விதையும் போல. இதற்கும் மூலப்பொருள் எதுவாகவோ இருந்திருக்கத் தானே வேண்டும். மீமாம்சகர்கள் இந்த சங்கிலித் தொடர் நிரந்தரமானது, இயற்கையின் செயல் என்பர். தர்ம அதர்மங்கள் காரணமாக பிறவியும், மறு பிறவியும் என்றும் இதை நிர்வகிப்பது அபூர்வ என்ற சக்தி என்றும் சொல்வர். செயலின் பலனை, உதாகரணமாக, யாகத் தீ தொடர்ந்து பல செயல்களுக்கு ஆதாரமாக இருப்பதாகச் சொன்னதைப் பார்த்தோம். நிலையான இயற்கை தத்துவங்கள் நியமத்துடன் செயல் படுகின்றன, அதன் போக்கில் பிறப்புகள் பிறப்பதும் மறைவதும் ஒரு கண்ணுக்கு புலனாகாத சக்தியின் தூண்டுதலால் தான், அவையே தர்ம அதர்மங்கள். இதற்கு ஒரு உருவத்துடன் எதுவும் தேவையில்லை என்பர். குமரிலர் அப்படி ஒரு உருவம் கடவுள் என்ற பெயரில் பிறவிகளையும் அதன் முடிவுகளையும் செய்ய முடியுமானால், பிறந்த ஒருவன் அல்லது ஒன்று தன் சந்ததியை உருவாக்கிக் கொள்வது எப்படி சாத்யம் என்ற கேள்வியை எழுப்புகிறார்.
ஈஸ்வரனும் இல்லை, உபநிஷதங்களையும் நம்பவில்லை என்பவர்கள் உடலை நிலம் என்றும் (அடிப்படை) என்றும் அந்த நிலத்துக்கு உரியவன் அல்லது நிர்வகிப்பவன் ஈஸ்வரன் என்ற உபநிஷத் களின் நிரூபணத்தையும் நம்புவதில்லை. கர்மாவே, செயலே உடலை உடையவர்களுக்கு பலனை தருவதையோ, பலனை மறுப்பதையோ செய்து விட முடியும் என்பர் கர்மவாதிகள். இதைச் செய்பவர் கடவுள் என்பவர்களுக்கு பிரமாணமாக சொல்ல எதுவும் இல்லை என்பது இவர்கள் வாதம். வெளிப்படையானது அல்ல என்று சொல்கிறார்கள்.
செயலும்- கர்மாவும், அத்ருஷ்ட- தானாக தோன்றும் காணக் கிடைக்காத ஒன்று – என்ற இரண்டையும் நியாயமும், வேதாந்தமும் மறுக்கின்றனர். ஸ்ரீ சங்கரர் இந்த கொள்கையை ஒரு மரத்துண்டு அல்லது ஒரு துண்டுத் துணி போல என்றார். அவர் சொல்கிறார், இவர்கள் இருவருமே, கர்மாவே பலன் தரும் என்றால் அதற்கு என்ன ஆதாரம், எந்த செயலுக்கு என்ன பலன் என்பதை கணிப்பவர் யார் அல்லது எது? அத்ருஷ்டம் என்பது நிரந்தரமானதா ? அதற்கு தகுதி அல்லது விலக்கு என்ற கணக்குகள் உண்டா? அவர்களையறியாமலேயே, இவைகளுக்கு பின்னால் ஒரு இயக்கும் சக்தி உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டனர். அதைத்தான் ஈஸ்வரன் என்று நாங்கள் சொல்கிறோம் என்றார். இந்த சக்தியும் கர்மாவும் இணைந்து தான் பலன் என்று நிரூபித்தார். சுதந்திரமாக இயற்கை சக்திகள் செயல் பட முடியாது, பின்னின்று இயக்கும் சக்தி – அதை -கடவுள் -என்று கொண்டால் இந்த இயற்கையின் செயல்பாடுகளும் தங்கள் சுதந்திரத்தை இழப்பதும் இல்லை. ஒரு ஒழுங்கிலும் அமையும். தனி மனிதனின் முயற்சிகளின் சாதனைகள் நற்பலனை தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும் என்ற கருத்தையே அவர் தன் வேதாந்த ஸூத்ரங்களிலும் விவரமாக சொல்லி இருக்கிறார். மீமாம்சகர்கள் இந்த இரட்டை கர்மாவும், கடவுளும் சேர்ந்து தான் இயக்கம் என்பதை தெளிவு படுத்த இயலாமல், அந்த கொள்கை முழுமையாக இல்லை என்று மட்டுமே சொல்ல முடிந்தது. கடவுள் தான் முழு முதற் பொருள், அவர் விருப்பப்படி தான் உலகம் இயங்கும் என்றால் எதற்காக இந்த கர்மாக்கள்- யாகம் போன்ற காரியங்களை செய்யச் சொல்லி அறிவுறுத்த வேண்டும். அதற்கு மாறாக அந்த முழு முதற் பொருள், தர்ம அதர்ம என்பவைகளையும் நிர்வகிக்கும் சக்தி என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவில் மகா பாரத நூலில் வரும் பிறந்த உயிரினங்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அறிவுடையதோ, இல்லையோ, சுவர்க்கமோ, நரகமோ, அதன் பிறவிப்பயனை தீர்மானிப்பவர் கடவுளே என்ற கூற்றை பரிந்துரைக்கின்றனர். இந்த ஸ்லோகத்தை ஸ்ரீ ஹர்ஷர் சொல்வதை, ‘மனித மனம் கடவுளின் அருளாலேயே, செயல்படுகிறது’ என்ற கூற்றை விளக்க பயன் படுத்துகின்றனர். (581-706)
சாங்க்யம்
3) சாங்க்யம் மற்றும் யோகம்
இந்த கொள்கைகள் அதிகமாக வர்ணிக்கப் படவில்லை. கவி ஸ்ரீ ஹர்ஷர், காரணம் விளைவு என்பவைகளின் இடையில் அதிக இடைவெளி இல்லை என்ற தன் எண்ணத்தைச் சொல்கிறார். கண்டு பண்டிதர் என்பவர் வேதங்களில் சொல்லப் படும் யாகங்களின் பலி என்பது ஒரு இழுக்கு என்று வாதாடுகிறார். யோக முறைகள் பற்றியும் விவரங்கள் 21-87 ல் பார்க்கவும்.
வேதாந்தம்
4) வேதாந்தம் – கொள்கைகள்
வேதாந்தம் ப ல இடங்களில் முக்தி பற்றியும் தன்னை அறிவது பற்றியும் பேசுகிறது
आनन्द रूपत्वं मुक्तदशा ‘आनन्दो ब्रह्मणो रूपम् ‘ इति श्रुते: வேதம் சொல்வது: முக்தியின் நிலை என்பது பரிபூர்ணமான ஆனந்தமே. ப்ரும்மா – படிப்பவன், அல்லது முழு முதல் பொருள் என்று வேதாந்திகள் சொல்வது ஆனந்தமே.
இந்த காவியத்தில் ஒரு இடத்தில் லிங்க சரீரம்- அல்லது Subtle body – என்ற குறிப்பும், அதன் விளக்கமாக மனதின் செயல்பாடுகள் என்றும் சொல்லப் பட்டு இருக்கிறது.
தமயந்தி சொல்வதாக: என் மனம் நளனிடம் அடைக்கலமாகி உள்ளது, அதனால் என் எண்ணங்கள் அனைத்தும் நளனைச் சுற்றியே உள்ளன. பிராணன்கள் ஐந்தும் அவனிடம், இருப்பதால் நான் மரிக்க மாட்டேன். ‘ இங்கு அவள் என் மனம் என்று சொல்வது உள்ளுறையும் லிங்க சரீரம்- வெளியில் தெரியாத ஸூக்ஷ்ம உடல். மனம் இந்த ஸூக்ஷ்ம உடலை ஆட்டுவிக்கிறது அல்லது நிர்வகிக்கிறது. கவி உபனிஷதுக்களை ஆதாரமாக காட்டுகிறார். லிங்க சரீரம் , மரணத்துக்குப் பின்னும் உடலில் சற்று நேரம் இருப்பதாக அதன் விவரங்களை உபநிஷத் சொல்வதாக
லிங்க சரீரம் பஞ்ச பிராணன்களும், மனமும் சேர்ந்து புலன்களுடன் செயல் படும்.
மரணம் சம்பவிக்கும் சமயம் ஆத்மா பஞ்ச ப்ராணன்களுடன் வெளியேறும்.- மனம் ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து என்ற பத்துடன், இவை ஸூக்ஷ்ம சரீரத்துடன் சம்பந்தப் பட்டவை என்பதால் தங்கி யிருக்கும்.
11-காண்டத்தில் விவரமான வர்ணனை – உபனிஷதுக்கள் பக்தி பற்றியும், முழு முதற் பொருளான ஈஸ்வரனைப் பற்றியும் விளக்கங்கள் கொடுத்துள்ளார். ஒரு வ்யக்தி- உருவம் அல்லது பொருள்- வார்த்தைகளுக்குள் அடங்காது, உணர்வுகளே கடலாக, எல்லையிலாத ஆனந்தமாக, பஞ்ச பூதங்கள் என்படும், வான்,புனல், பார், கனல், மாருதம், என்ற ஐந்து- இவைகளைக் கடந்து மனதையும் கடந்து, நம் கற்பனைக்கு எட்டாத இடத்தில் உள்ளது. ஆத்மா தவிர மற்றவைகளை வைசேஷிகம் ஏற்கிறது. பூமி, நீர்,தேஜஸ் என்ற அக்னி, வாயு, ஆகாசம், திசைகள், ஆத்மா, மனம் என்ற அடிப்படை தாதுக்கள். இவைகளை அந்த பரம் பொருள் மனதின் செயல்களையும் சேர்த்து தன் வசமாக்கிக் கொண்டுள்ளது.
நாரத- சனத்குமார உரையாடல் என்ற உபனிஷத் பகுதி விரிவாக சொல்லப் படுகிறது.
9-காண்டம் (121 – 99 ) தன்னை அறிவது என்பது பற்றியும், ப்ரக்ருதி- புருஷன் என்பவைகளையும்
21- காண்த்தின் 108 -ல் வைஷ்ணவ சம்ப்ரதாயங்களையும்- மாயை என்பது மகா விஷ்ணுவின் செயல் படுத்தும் கருவி என்பதை விவரிக்கிறது.
முக்கியமான வேதாந்த செய்திகள் 13 காண்டத்தில் 36 வது பகுதியில் காணலாம். தமயந்தி நிஜமான நளனைக் காண முடியாமல் திகைப்பதாக சொல்லும் இடத்தில் கவி சொல்வது
பொதுவாக ஜனங்கள், பலவிதமான கொள்கைகளுக்கு இடையில் அத்வைத சித்தாந்தத்தை , அது தான் உண்மை என்று இருந்த பொழுதிலும் அறியாமையால், மற்ற நான்கையும் நம்புகின்றனர். தமயந்திக்கு இன்னமும் இந்த ஐந்தாவது கொள்கை பிடிபடவில்லை. மற்றவைகளை விட இந்த அத்வைத கொள்கைதான் உயர்ந்தது என்று அறியாத பொது மக்கள் போல, மற்ற நான்கு கொள்கைகளை நம்புபவர்களைப் போல தடுமாறுகிறாள். – என வர்ணிக்கும் சமயத்தில் சொல்வது.
ஸ்ரீஹர்ஷ கவி நாலு விதமான ஆதர்சங்கள் பற்றி சொல்கிறார். இது உள்ளது, இது என்பது இல்லை, இருந்தும் இல்லாது போல, இல்லவே இல்லை – என்றும், ஆத்மா பாதிக்கப் படுவதில்லை என்றும் மற்ற கொள்கைகளை நிராகரிக்க பயன் படுப்பத்தப் பட்டவை.
ஸ்ரீ சங்கரின் – ஆனந்தகிரி என்பவரின் விளக்கத்துடன் – முதல் கொள்கை வைசேஷிக மதத்தை கண்டிக்கிறது. இரண்டாவது விக்ஞானம் என்று சொல்லும் புத்த மதத்தை, மூன்றாவது ஜைன மதத்தை, நான்காவது ஸூன்ய வாதம் சொல்லும் பௌத்தர்கள், வேதாந்த கொள்கை ஆத்மாவை மனதில் எண்ணங்களுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்டது என்று சொல்வதால் ஐந்தாவது முனை.
புத்த மதத்தை ஸ்ரீ சங்கரர் கண்டிப்பது . மாத்யமிகா என்ற புத்தருடைய சித்தாந்தத்தை. கார்கா என்பவை புத்த மத கோட்பாடுகள் அடங்கிய நூல் என்று தெரிகிறது.
1) न सत् இது உள்ளது 2) नासत् -இது என்பது இல்லை 3) न सतसतत् இருந்தும் இல்லாதது போலவே 4) न च अनुभवात्मकम् – இல்லவே இல்லை – மற்ற நான்கு சித்தந்தங்களும் வரிசையாக.
ஸ்ரீ சங்கரர் நான்கு விதமான சிந்தனைகள் என்று மட்டுமே இவைகளைச் சொல்கிறார். கொள்கை அல்ல. கௌட பாதர் என்பவரைப் போலவே அத்வைத சித்தாந்தத்தை ஏற்ற ஸ்ரீ ஹர்ஷர்,
பின்னால் புத்தரே மற்ற நான்கு கொள்கைகளை நிராகரித்து விட்டார் – மற்ற அத்வைத கண்டனம் செய்பவர்கள் செய்பவை அவை. அத்வைதமே அவருடையதும். மாத்யமிகா என்ற கொள்கை அத்வைதம் போலவே முழு முதற் பொருளை அறிவது தான் ஞானம் என்று சொல்வதாக ஸ்ரீஹர்ஷர் சொல்கிறார். மனதிற்கும், வாக்குக்கும் எட்டாத பரம் பொருள் என்பதை இந்த இருவரும் ஏற்றுக் கொண்டனர். பல ஒற்றுமைகள் சொல்கிறார்.
நாகர்ஜுன: இவருடைய கொள்கை நாஸ்திகம் அல்ல, அபாவம் என்ற இல்லாது போன்ற தோற்றமும் அல்ல, ஸூன்யம் என்ற நிலை – எதுவுமில்லாத என்ற பொருளில் அல்ல – அது ‘தா’ என்ற தத்வம்- புதகோடி (bhutakOti) உண்மையான எல்லை – தர்ம தாது (பொருட்களின் ஒட்டு மொத்தமும்) என்ற பொருளில் .
பல விஷயங்களில் புத்தருடைய கொள்கைகள் வேதாந்த கொள்கைகளை பிரதி பலிக்கிறது. கனவில் உள்ளது போல என்ற உவமானம் இருவருக்கும் பொது. ஸ்ரீ ஹர்ஷர் இரண்டு கொள்கைகளையும் அறிந்தவராக தெரிகிறார். அவர் அனுசரிப்பது கௌடபாதருடைய காரிகா என்ற நூல், அது புத்தருடைய மாத்யமிகா என்ற பிரிவினரின் கொள்கைகளுடன் ஒத்துப் போவதாக உள்ளன என்று உரையாசிரியர் சொல்கிறார்.
பௌத்தம்
5) புத்த மத கொள்கைகள்
நைஷதம் புத்தருடைய கொள்கைகளை பல இடங்களில் விமரிசித்து உள்ளது. பௌத்த கொள்கைகளைச் சொல்லும் மூன்று பிரிவுகள் – ஸூன்யாத்மக வாதம், விக்ஞான சமஸ்த்ய, சகாராத சித்தி என்பவை. மாத்யமிகா சொல்லும் ஸூன்யவாதம். விக்ஞானவாதிகள் என்பவர்கள் யோகாரா எனப்படுவர். இவர்கள் சொல்வது உலகமே உள் உணர்வுகளால் ஆனது. வெளி சாதனம் எதுவுமில்லை. இந்த பூ மண்டலமே மனதால் எண்ணுவதே. வெளி பாதிப்புகள் என்பதும் மனதின் எண்ணங்களே. ஸ்ரீ ஹர்ஷர் அவர்களுடைய சாகாரத சித்தி என்பதை – ஒரு பிரிவினர் நம்பும் சாகார -உருவமுடையது என்ற நம்பிக்கை. அதை விவரிக்கிறார்.
அவர்கள் சௌதந்த்ரிகர்கள் எனப்படுவர். உடல் வளர்ச்சிக்கு உதவுவதை ஆகாரம் என்பது போலவும், ஒரே மொழி பேசுபவர்கள் இருக்கும் இடம் நாடு என்பது போலவும், ஒத்த குணம், ஈடுபாடு என்பவை பாசம் என்றும் நெருக்கத்தைக் குறிப்பதாகவும், வெளி உலக பொருட்கள் மனதில் ஒரு உருவை அளிப்பதும் கண்ணால் கண்டது மனதில் பதிவதால் – ஒரு பொருள் நம் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகளே, உருவ அமைப்புகளாக , வெளியில் காண்கிறோம். நமது முகத்தை கண்ணாடியில் காண்பது போல.
21-காண்டத்தில் ட88 – புத்தரை அத்வய வாதி என்றே குறிப்பிடுகிறார். அனைத்தும் மாயையே என்ற கொள்கை மாத்யமிகா என்ற புத்தர்களுக்கும் உள்ளது. வெறும் தோற்றம் அல்லது கனவில் காண்பது என்ற சொற்கள். ஒரு மந்திரவாதி கண் முன் காட்டும் மாயா ஜாலம் போன்றவையே. கண் முன் தெரியும் வரை அது உண்மையாக தோன்றுவது போல. கண்ணாடி அருகில் இருந்தால் பிரதி பிம்பம் தெரிவது போலவும், கண்ணாடியை அகற்றினால் அந்த பிரதி பிம்பம் மறைவது போலவும் – எந்த சமயம் இந்த தோற்றம் வரும் என்றோ, எந்த சமயம் மறையும் என்றோ சொல்ல முடியாதது போல, தோன்றுவதும் இல்லை மறைவதும் இல்லை என்ற வேதாந்த கொள்கைகளே அந்த முழு முதற் பொருளுக்கு சொல்லப் படுகிறது.
முன் சொன்ன நான்கு கோடிகள்-முனைகள் – இவற்றை கடந்தவராக புத்தரை சொல்கிறார். இவரும் ஐந்தாவதான அத்வைத கொள்கையை ஆதரிப்பதாகச் சொல்கிறார். அவர் சொல்லும் ஸூன்யவாதம் என்பதும் இரண்டற்றது, ஒன்றே என்ற அத்வைத கொள்கையே வேறு சொற்களில் என்பது ஸ்ரீ ஹர்ஷரின் வாதம். அமர கோசம் என்பது சொற்களுக்கு பொருள் கூறும் நூல். அதில் புத்தருடைய பல பெயர்களில் அத்வயவாதின் என்பதும் ஒன்று. ஸ்ரீ ஹர்ஷர் அதை பரமார்த்த சப்தமாக எடுத்துக் கொண்டு, வேதாந்த பரமாக பொருள் சொல்கிறார். ஸ்ரீஹர்ஷர் போன்ற வேதாந்த மதத்தினர், வாசஸ்பதி என்பவரின் பாமதி எனும் நூலையும் அறிவர். (2.2.18) ஸ்ரீஹர்ஷர் மஹாயன பிரிவினரின், மூன்று நூல்கள், சௌதந்த்ரிக, மாத்யமிக, யோக காரா – மட்டுமே புத்த மத கொள்கைகளாக ஏற்கிறார். நாலாவது வைப்ஹாசிக என்பது ஹீன யானம் என்ற புத்த மத பிரிவை உயர்வாகச் சொல்வது. ஸ்ரீஹர்ஷரின் காலத்தில் புத்த மதம் பல மாறுதல்களை அடைந்தது என்பது வரை நாம் அறிகிறோம்.
சமணம்
6) ஜைன மதம்:- மூன்று நகைகள் என்பதாக ஒரு விஷயம் சொல்லப் படுகிறது. இந்த மூன்று நகைகள் அல்லது உயர் மணிகள் என்ற சொல் புத்த மதத்திலும், ஜைன மதத்திலும் காணப்படுகிறது. ஆனால் உரையாசிரியர்கள் இந்த சொல்லை ஜைன மத கோட்பாடாக சொல்கின்றனர். சம்யக் தர்சனா, சம்யக் ஞான, சம்யக் சரித்திர – நல்ல தத்துவம், நல்ல அறிவு, நல்ல நடத்தை என்று பொருள் படுபவை. ஜைன மத கோட்பாடுகளை நன்றாக அறிந்து கொள்வது நல்ல தரிசனம், முழுமையாக இந்த மதத்தை அறிந்து கொள்வது, தவறு என்ற எதையுமே செய்யாமல் இருத்தல். ஐந்து விரதங்கள்: அஹிம்சை, திருட்டு, பொய், உடல் அனுபவங்களில் அதிக ஈடுபாடு, , பேராசை, என்ற ஐந்தையும் கண்டிப்பாக தவிர்ப்பதாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். குந்தகுந்தாசார்யா என்பவர் இவர்களின் ப்ரசாரகர்களில் ஒருவர். அவருடைய நூல் ப்ரவசன சாரம் என்பது. சரித்திர -நல்ல நடத்தை – ஒழுக்கம்- என்பது தர்மம். சம பாவம் அல்லது அனைவரும் ஒன்றே என்ற கொள்கை. ஆத்மா அனைவருக்கும் ஒன்றே- ஒரே விதமாக உள்ளதே. இதில் வேற்றுமை அல்லது குறைகளை சொல்லக் கூடாது. ஜயசேனா என்ற மற்றொரு ஜைன அறிஞர் சம- என்ற சொல்லால், நெருப்பு போன்றது பாசம் அல்லது பொருள்களில் அதிகமான பற்றுதல் – இதை நீக்குவதே ‘சம’ என்ற சொல்லால் சொல்லப் படுகிறது. சரித்திரம் மனதின் ஒழுக்கம். உலகியலில் செயல்கள் ஓரளவுக்கு மேல் நோய் பரப்பும் கிருமிகள் போல பாதிக்க கூடியவை.
இந்த மூன்று உயர் மணிகள் அல்லது நகைகளும் ஜைன எழுத்தாளர்களின் காவியங்களில் பல விதமாக விவரிக்கப் பட்டுள்ளன. ஸ்ரீஹர்ஷர் இவர்களுக்குப் பின்னால் வந்தவர். சோம தேவர் எழுதிய யசஸ்திலக என்ற நூலில் காணலாம். இந்த விவரங்களை பொதுவாக போதி என்ற சொல்லால் அழைக்கிறார்கள். உபமிட ப்ரபஞ்ச கதா என்ற நூலில் இவைகள் பல விதமாக விளக்கிச் சொல்லி இவை மூன்றும் மூன்று மிக முக்கியமான மருந்துகள் என வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இரு காவியங்கள் சந்திர பிரபா சரிதம் – தர்மாஸ்ரமாப்யுதயம் – இவைகளில் இந்தமூன்று உயர் மணிகளும் முக்தி அடைய வழி என்பது பற்றிய விவரங்கள் வலியுறுத்தப் பட்டுள்ளன.
சார்வாகம்
7. சார்வாகம் : சார்வாகம் வெகுவாக விமரிசக்கப்பட்ட கோட்பாடு. இது நியாய என்ற கொள்கையினரின் முக்தி என்பதை கண்டிக்கிறது. வேதாந்தத்தின் கடவுள் கொள்கையை எதிர்க்கிறது. வேதாந்தம் சொல்லும் தன்னை உணருதல் என்பதை மறுக்கிறது. மொத்தமாக பணக்காரத்தனமான , பொருளே. செல்வமே அனைத்தும் என்ற கொள்கையை ஆதரிப்பதால், ஆத்மா, மறு பிறவி என்பதில் நம்பிக்கை வைப்பதில்லை. மரணமடைந்த பிறவியை எரித்து சாம்பலாக்கிய பின் அது திரும்பி ஏன், எப்படி வருகிறது? என்ற கேள்வியை முன் வைக்கிறது. சாம்பலான பின் எப்படி உயிர் எதில் வரும்? ஆர்யாசுரன் என்பவருடைய ஜாதகமாலா ((மஹா போதி ஜாதக) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதை வைத்து இந்த கேள்வியை எழுப்புவதாகத் தெரிகிறது. எந்த விதமான கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்பது, மறு பிறவியையும் மறுப்பதால் அவர்களுக்கு இக லோக வாழ்க்கையில் முடிந்த அளவு அனுபவிக்க மட்டுமே வாழ்க்கை என்பதும், எந்த வித கடமையோ, பொறுப்பும் இல்லாத தன்னலமே பெரிதான வாழ்வு முறையே உயர்வாக சொல்வது சார்வாகம். இதில் புலனடக்கமோ, எந்த ஒரு சட்டமோ, ஒழுங்கு முறைகளோ கூட தேவையில்லை என்பர். கவிகளின் சந்தஸ், எதுகை மோனைகள் வரை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பாணினியின் இலக்கண விதி முறைகளைக் கூட தவறாக பொருள் சொல்லி, விதி மீறல் என்ற தங்கள் அதிகாரத்தைக் காட்டவே முனைவர் என்பது ஸ்ரீஹர்ஷ கவியின் கூற்று.
(மேலும் தெளிவோம்)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஸ்ரீ ஹர்ஷ கவியின் நைஷத நூலில் தத்துவங்கள்”