ஜோன்ஸ் டாக்டர் புரூக்கின் அறையின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வான் கோவின் “நட்சத்திர இரவு” ஓவியத்தின் அச்சுப் படத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அறையில் இருந்த மற்றவர்களிடமிருந்து தனது உடலை திருப்பியபடி நின்றான். டாக்டர் அவனிடம் கேள்விகள் கேட்டபோதும், அவனது பார்வை ஓவியத்தின் சுழன்றடிக்கும் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களிலேயே பதிந்திருந்தது. தனது தொடையில் விரல்களால் தாளம் போட்டபடி இருந்தான். “நட்சத்திரங்கள் கணித ரீதியாக தவறானவை,” என்று முணுமுணுத்தான். அங்கு வந்ததிலிருந்து அவன் பேசிய முதல் வார்த்தைகள் அவை.
எச்சரிக்கையின்றி எழுந்து ஓவியத்திற்கு அருகில் சென்றான். அசாதாரண கவனத்துடன் ஓவியத்தின் வடிவங்களை ஆராய்ந்தான். அவனது பெற்றோர் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ஜோன்ஸ்,” டாக்டர் புரூக் மெதுவாக கூறினார், “நான் உன் பெற்றோருடன் பேசும் வரை நீ வெளியே காத்திருக்கிறாயா?” அவன் அவரது வார்த்தைகளை கவனிக்காமல், கலைப்படைப்பின் ஆய்வை தொடர்ந்தான். இறுதியாக ஜான்சன் தனது மகனின் தோளில் தொட்டு, கதவை நோக்கி அவனை வழிநடத்தினார். ஜோன்ஸ் தயக்கத்துடன் வெளியேறிய பிறகு, டாக்டர் புரூக் ஜான்சன் தம்பதியினரை அமர்ந்துகொள்ள சைகை செய்தார்.
“எங்கள் விரிவான மதிப்பீட்டின் பிறகு, ஜோன்ஸுக்கு ஆஸ்பெர்கர் நோய்க்குறி இருப்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று அவர் தொடங்கினார்.
வெர்னா ஜான்சன் தனது கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள், அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“ஆனால் அவன் முன்பு மிகவும் வித்தியாசமாக இருந்தான், இப்போது பதினைந்து வயதில், திடீரென்று தனிமைப்படுத்திக் கொண்டு, தன் நண்பர்களுடன் கூட பேசுவதில்லை. வீட்டிலும் கிட்டத்தட்ட பேசாமல் இருக்கிறான்.”
ஜான்சன் முன்னோக்கி சாய்ந்தார், அவரது குரலில் கவலை தெரிந்தது. “கடந்த ஆண்டு அவன் போட்டுக் கொண்ட தடுப்பூசிகளுடன் இதற்கு தொடர்பு இருக்குமா? நாங்கள் ஆன்லைனில் சில விஷயங்களைப் படித்திருக்கிறோம்…”
டாக்டர் புரூக் மெதுவாக தலையை அசைத்தார்.
“உங்கள் கவலையை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் ஆஸ்பெர்கர் நோய்க்குறி என்பது பிறப்பிலிருந்தே இருக்கும் ஒரு நரம்பியல் வளர்ச்சி நிலைமை. வயதுக்கு ஏற்ப சமூக தேவைகள் அதிகரிக்கும்போது அறிகுறிகள் அடிக்கடி வெளிப்படையாகத் தெரியும். தடுப்பூசிகளை ஆஸ்பெர்கர் போன்ற ஆஸ்பெர்கர் கோளாறுகளுடன் தொடர்புபடுத்தும் எந்த அறிவியல் இல்லை. ஜோன்ஸுக்கு இப்போது தேவையானது நம்முடைய புரிதலும் ஆதரவும்தான்.”
“ஜோன்ஸை நெனச்சா எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கு. மத்த பசங்க மாதிரி இயல்பா இல்லையே.. அவனோட எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு.”
“முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கோங்க, ஜோன்ஸோட நிலைமை ஒரு குறைபாடே கிடையாது. அவனோட மூளை மற்றவர்களை விட கொஞ்சம் வித்தியாசமா இயங்குது, அவன் இந்த உலகத்தப் பாக்குறது வேறு கோணத்திலே அவ்வளவுதான். சொல்லப்போனா, இந்த வித்தியாசமான அமைப்புதான் அவனுக்கு சில தனித்துவமான பலங்களைக் கொடுக்குது.”
“பலங்களா? புரியலையே டாக்டர். அவன் எதையாவது ஒண்ணைப் பிடிச்சுக்கிட்டா, அதுலேயே மூழ்கிப் போயிடுறான். சின்ன சின்ன விஷயத்தைக் கூட விடாமப் பார்க்குறான். இது எப்படி பலமாகும்?”
“நீங்க சொல்றதுதான் அவனோட முதல் பலம்! அவன் மூளை, விவரங்களுக்கு அதிக கவனம் கொடுக்கும். அதனாலதான் அவனால வடிவங்களை சுலபமா கண்டுபிடிக்கவும், விஷயங்களை நல்லா ஞாபகம் வெச்சுக்கவும் முடியுது. நீங்க சொல்ற அந்த ‘மூழ்கிப் போறது’ தான், நாளைக்கு அவனை ஒரு துறையில பெரிய நிபுணனா மாத்தப்போகுது.”
“ஆனா, எப்பவுமே ஒரே மாதிரிதான் இருக்கணும்னு எதிர்பார்க்கிறான். கொஞ்சம் மாறினா கூட, பதட்டமாயிடுறான். அவனைச் சமாளிக்கவே கஷ்டமா இருக்கு.”
“அந்த ஒழுங்குமுறை அவனுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்குது. அதுமட்டுமில்ல, ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்யும்போது, அவனோட திறமை அபாரமா வளரும். இசை, கணக்கு, சதுரங்கம் மாதிரியான துறைகள்ல இது அவனுக்கு ரொம்ப உதவும். ஒரே வேலையை சலிக்காம செய்யுறது ஒரு வரம் மாதிரி.”
“நீங்க சொல்றது ஒரு பக்கம் ஆறுதலா இருந்தாலும், அவன் தனியாவே இருக்கானே டாக்டர். யார்கூடவும் சரியா சேர்றதில்லை. அதைப் பார்க்கும்போதுதான் மனசு கஷ்டமா இருக்கு.”
“அவனுக்கு சமூகப் பழக்கவழக்கங்கள்ல கவனம் கம்மியா இருக்கலாம். ஆனா அதனால என்ன நன்மை தெரியுமா? மத்த பசங்களுக்கு வர்ற கவனச் சிதறல்கள் அவனுக்கு வராது. தன்னோட முழு சக்தியையும் அவன் செய்யுற வேலையில போடுவான். அவனோட தர்க்கரீதியான சிந்தனைக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். அதனாலதான் சில கடினமான கணக்குகளைக் கூட அவனால சுலபமா புரிஞ்சுக்க முடியுது.”
“நிச்சயமா நம்பிக்கையோட இருங்க. நாம அவனைப் புரிஞ்சுக்கிட்டு, அவனுக்குத் தேவையான ஆதரவைக் கொடுத்தா போதும். அவனுக்கு இப்ப தேவைப்படுறது நம்மளோட புரிதலும், அன்பும்தான்”
“ஆனா இன்னொன்னும் நீங்க கவனிக்கணும், இதுப் போன்றவர்களுக்கு எளிதில் மனச்சோர்வு வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது, அது மட்டும் எப்போன்னு சொல்லமுடியாது, ஹார்மோன் சேஞ், பூபெர்ட்டி எதுவேனாலும் இருக்கலாம்.”
அப்புறம் இன்னொன்று “அவனை நீங்கள் ஹோம் ஸ்கூல் மூலமாக படிக்க வையுங்கள்!”
மருத்துவமனையின் வெள்ளை சுவர்களிலிருந்து விடுபட்டு, ஸ்டார்பக்ஸின் பழுப்பு நிற அரவணைப்பில் அமர்ந்திருந்தனர் பெற்றோர். “ஜோன்ஸுக்கு ஆஸ்பர்கர் நோய்க்குறி” என்ற மருத்துவரின் வார்த்தைகள் இன்னும் அவர்கள் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தன.
“இரண்டு கபுசினோ, ஒரு ஹாட் சாக்லேட்,” என்று அப்பா ஆர்டர் செய்தார். ஜோன்ஸ் கழிவறைக்குப் போனபின், அம்மா மெல்லிய குரலில் பேசினாள்.
“இன்னொரு குழந்தை நமக்கு வேண்டுமா.. மார்ட்கேஜ், வேலை உத்திரவாதம், இன்சூரன்ஸ், ஜோன்ஸ்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது கண்களில் நீர் வழிந்தது”
கணவர் அவள் கைகளை இருக்க அணைத்து “எல்லாவற்றையும் எதிர்கொள்வோம்” என்றார்.

நவம்பர் மாத இறுதியில் இலையுதிர்காலத்தின் கடைசி வண்ணங்களையும் வடக்கு கரோலினாவின் பனிக்காற்று இரக்கமின்றித் திருடிக்கொள்கிறது. மரக்கிளைகளில் வாழ்வைப் பற்றிக்கொண்டிருந்த கடைசி சிவப்பு இலையும், தன் பிடியை மெல்லத் தளர்த்தி, சுழன்று சுழன்று குளிர்ந்த தரையில் சரணடைந்தது. மாலை ஐந்து மணிக்கே, பகல் தன் கணக்கை அவசரமாக முடித்துக்கொண்டு அடிவானத்தில் விடைபெற, இரவு தன் கருப்புப் போர்வையை அபெக்ஸ் நகரின் மீது மெதுவாகப் போர்த்துகிறது. அந்தி வானம், ஊதா மற்றும் ஆரஞ்சு நிறக் கீற்றுகளால் ஒரு நொடி தீப்பற்றி எரிந்து, பின் சாம்பல் நிறத்திற்குள் தன்னை முழுமையாக இழந்தது. அப்போது, நகரமே ஒரு வயோதிகத் துறவியைப் போல தன்னுள் ஒடுங்கி, வெளி உலகின் ஆரவாரங்களைத் துறந்துவிடுகிறது. கடைகளின் முகப்பில் தொங்கிய ‘திறந்துள்ளது’ என்ற பலகை, ‘மூடப்பட்டது’ எனத் தன்னை மாற்றிக்கொண்டது.
அந்த வெளிப்புற அமைதிக்கு நேர்மாறாக, வீடுகளின் ஜன்னல்களில் ஒளிரும் தங்கநிற விளக்குகள், ஒரு புதிய கதையைச் சொல்லத் தொடங்கின. அவை, ‘வெளியே குளிர், உள்ளே வாருங்கள், உங்கள் உறவுகளின் கதகதப்பில் தஞ்சமடையுங்கள்’ என மௌனமாய் அழைப்பது போல் தோன்றும். ஒவ்வொரு ஜன்னலும் ஒரு பாதுகாப்பான தீவு; வெளியுலகின் குளிரும், தனிமையும் அண்ட முடியாத ஒரு கதகதப்பான நிமித்தங்கள். நகரம், இரவில் நன்றி நவிலல் பெருவிழாவிற்காக தன்னைத் தாயார்படுத்திக்கொண்டது. சில வீடுகளில் இருந்து வந்த இலவங்கப்பட்டையின் மெல்லிய நறுமணமும், அடுமனையில் வேகும் பூசணியின் இனிமையான வாசனையும், வரவிருக்கும் விழாவின் மகிழ்ச்சியை காற்றில் கலந்தன. ஜன்னல் வழியாக ஒரு குழந்தை, தெருவிளக்கின் ஒளியில் பளபளக்கும் காலிச் சாலையைப் பார்ப்பதும், உள்ளே இருந்து எழும் தன் பாட்டியின் சிரிப்பொலியைக் கேட்டுத் திரும்புவதுமாக இருந்தது. அந்த இரவு, அபெக்ஸ் நகருக்கு ஒரு நினைவூட்டலாக அமைந்தது. குளிரும் இருளும் தற்காலிகமானவை, உள்ளிருக்கும் உறவின் கதகதப்பு நிரந்தரமானது என்பதை அந்த இரவு மெல்லச் சொன்னது.
ஜோன்ஸ் கததகப்பான ஜாக்கட்டை அணிந்துகொண்டு இரவு நடைக்கு சென்றான், பகல் நேரத்து சத்தமும் கொந்தளிப்பும் அவனை அசௌகரியப்படுத்தியது. என்றுமே செல்லாத வீட்டிற்கு அருகில் இருந்த சிறிய காட்டின் பசுமை அவனை அழைப்பது போல் தோன்றியது. மரங்களின் நிழல், காற்றின் சலசலப்பு, பறவைகளின் இனிய ஒலி இவையெல்லாம் அவன் மனதை அமைதிப்படுத்தின. காட்டுக்குள் நுழைந்தவுடன், ஜோன்ஸின் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை படர்ந்தது. ஒவ்வொரு இலையின் வடிவமும், மரப்பட்டையின் அமைப்பும், முன்னிரவில் நிலவில் ஒளி இலைகளின் ஊடே வீழும் விதமும் அவனை வசீகரித்தன. அவன் ஒரு பெரிய ஏன்ஜெல் ஓக் மரத்தின் அடியில் அமர்ந்து, இயற்கையின் இந்த அழகான சூழலில் எதிர்திசையில் இருக்கும் காட்டை நோக்கியவாரு தன்னை இழந்துகொண்டிருந்தான்.
காடு முடிந்த இடத்தில் மலைத்தொடரின் கிராமப்புறத்தின் இரவின் நிலவு வெளிச்சத்தில் விரிந்தது. வெள்ளி நிறத்தில் மின்னும் புல்வெளிகள் இருளில் மறைந்த மலைகள் வரை பரவியிருந்தன. பழைய கல்லால் கட்டப்பட்ட தேவாலயத்தின் உயரமான கோபுரம் நிலாவொளியில் வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்தது. வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிருந்து வரும் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் நீலம், சிவப்பு, பச்சை நிறங்களாக மாறி மாறி மின்னின. தேவாலயத்தைச் சுற்றியுள்ள கல்லறைக் கட்டிடங்களின் சிலுவைகள் நிழல்களாக நிலத்தில் விழுந்திருந்தன. இரவின் நிசப்தத்தில் தேவாலயத்திலிருந்து மாலை பிரார்த்தனையின் மெல்லிய முணுமுணுப்பும், அங்கங்கே பக்தர்களின் “ஆமென்” என்ற ஒன்றுகூடிய குரலும் மட்டுமே கேட்டன। நட்சத்திரங்கள் மிளிரும் அந்த அமைதியான இரவே ஜோன்ஸின் கலங்கிய மனதுக்கு ஆழ்ந்த அமைதியை அளித்தன.
ஜோன்ஸ் காட்டின் விளிம்பில் நின்று தேவாலயத்தை வேடிக்கை பார்த்தான். மெல்லிய காற்று அவன் முகத்தில் தழுவியது. இங்கே நேரம் வேறுவிதமாக ஓடுவது போல் குறிப்பாக நின்றுவிட்டது தோன்றியது. அவன் மெதுவாக அந்த புனித இடத்தை நோக்கி நடந்தான். தேவாலயத்தின் முற்றத்தில் வெள்ளை லில்லி மலர்களும், ரோஜாக்களும் நட்டப்பட்டிருந்தன. மல்லிகை, சாமந்தி வாசனைகள் காற்றில் கலந்திருந்தன. பழைய கால கோதிக் பாணியில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் முன் கல்லாலான படிகள் மற்றும் கல் பெஞ்சுகள் இருந்தன. மாலை பிரார்த்தனையின் ஒலிகள் ஜோன்ஸின் காதுகளைத் தொட்டு, அவன் உள்ளத்தின் ஆழத்தில் ஏதோவொன்றை அசைத்தது. அவன் அந்த பிரார்த்தனையின் ஒலியை நோக்கி மெதுவாக நடந்தான். தேவாலயத்தின் பக்கமுகக் ஜன்னல் சிறிது திறந்திருந்தது. ஜோன்ஸ் அமைதியாக அதற்கு அருகில் சென்றான். உள்ளே பாதிரியாரின் தாழ்ந்த குரல் மாலை பிரார்த்தனையின் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தது.
“…நம் இதயங்களில் இருளில் தவிக்கும் அனைத்தையும், உம் ஒளியால் அழைத்துச் செல்லுங்கள்…” பாதிரியாரின் குரல் தேவாலயத்தின் கோதிக் சுவர்களில் எதிரொலித்தது.
ஜோன்ஸின் மூச்சு ஒரு கணம் நின்றது. அந்த வார்த்தைகள் அவன் மனதில் ஏதோவொரு மூலையில் ஒளிந்திருந்த உணர்வை தொட்டன. அவன் வெளியே நின்று கொண்டிருந்தாலும், அந்த பிரார்த்தனை அவன் உள்ளத்திற்குள் நுழைந்து அவன் தனிமையின் இருளை வெளிச்சத்தால் நிரப்புவது போல் உணர்ந்தான்.
“…நம் இதயத்தின் மௌனத்தில் கூட, உம் அன்பு நம்முடன் பேசுகிறது…” பாதிரியார் தொடர்ந்தார்.
ஜோன்ஸின் கண்களில் கண்ணீர் பெருகியது. ஏன் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த பிரார்த்தனையின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் உள்ளத்தின் பகுதிகளை தொட்டன. அவன் என்றும் உணர்ந்திருந்த தனிமை, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கும் உணர்வு , அவை எல்லாம் இந்த பிரார்த்தனையில் இடம்பெற்றிருந்தன.
உள்ளே பக்தர்கள் மெல்லிய “ஆமென்” என்று சொன்னார்கள். அவர்களின் குரல்கள் ஒரு சேர ஒலித்தபோது, ஜோன்ஸுக்கு அவனும் அந்த ஒன்றுபட்ட குரலின் ஒரு பகுதியாக இருப்பது போல் உணர்ந்தான்.
“…நம் வலிகளையும் சந்தோஷங்களையும் ஒரே மனதாக உம்மிடம் ஒப்படைக்கிறோம்…” பாதிரியார் சொல்ல, ஜோன்ஸ் தலையாட்டினான். அவன் உதடுகளிலிருந்து கேட்காத குரலில் “ஆமென்” வெளிப்பட்டது.
அவன் கால்களை மடக்கி, ஜன்னலுக்கு அருகில் முழுவதுமாக அமர்ந்துகொண்டான். கிராமத்தின் நிசப்தம், மலர்களின் வாசனை, பிரார்த்தனையின் வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து ஒரு மாயக் காட்சியை உருவாக்கின. வண்ணக் கண்ணாடி ஜன்னல்களில் மெல்லிய விளக்கு ஒளி வீசிக்கொண்டிருந்தது. எல்லோரும் மெதுவாக வெளியேறத் தொடங்கினார்கள். ஆனால் ஜோன்ஸ் அங்கேயே அமர்ந்திருந்தான், அந்த நிசப்தத்தில் ஆழ்ந்து, தான் தேடிக்கொண்டிருந்த அமைதியை கண்டெடுத்துக் கொண்டிருந்தான்.
தேவாலய கீழ்தளத்திலிருந்து பியானோ இசை ஜோன்ஸின் காதுகளைத் தொட்டு, அவன் உள்ளத்தின் ஆழத்தில் ஏதோவொன்றை அசைத்தது. அவன் அந்த ஒலியை நோக்கி மெதுவாக நடந்து தேவாலயத்தின் கீழ்த்தளத்தை அடைந்தான். அறுபதுகளில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியர், வெள்ளை நிற முடியும் கண்ணாடியும், மெல்லிய குரலில் தன் மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
“ஷோபான் நாக்டர்ன் இ-ஃபிளாட் மேஜரில் 1830களில் எழுதப்பட்டது. இந்த இசையில் இருக்கும் தனிமையும், சோகத்தையும் கவனியுங்கள்,” என்றார் ஆசிரியர்.
ஜன்னலுக்கு வெளியே நிலவொளி, தூரத்தில் கேட்கும் இரவின் மெல்லிய ஓசைகளைப் போல, அந்த இசை தொடங்குகிறது.இன்று உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு இரவுக்குப் பயணிப்போம். இரவின் ஒளியில் ஒரு பியானோ மெல்லிசையை எழுப்புகிறது. போலந்தின் அந்த மாபெரும் கலைஞன், ஃபிரடெரிக் ஷோபான், தன் விரல்களால் ஒரு இரவின் கதையைச் சொல்கிறான்.இசைக்குறிப்புகளின் கோர்வையாக ஒலிக்காமல், சொற்களில் சொல்லமுடியதா உணர்வுகளுக்கா, எழுதப்பட்ட இசைக்கோவை, மொழியற்ற கவிதை போன்றதொரு உணர்வை ஜோன்ஸிற்கு அளித்தது
அவருடைய விரல்கள் பியானோ மீது மெதுவாக நடனமாடின. ஒவ்வொரு ஸ்வரங்களுக்குள் இடையில் கால்கள் மெல்லிதாக பியானோவின் கீழிருக்கும் பெடலை அழுத்தியது. முதல் குறிப்புகள் வெளிப்பட்டதும், ஜோன்ஸிற்கு அதிர்ச்சியில் மூச்சு நின்றது. அந்த இசை அவன் இதுவரை கேட்டிராத ஏதோவொரு உணர்வை சொல்வது போல் இருந்தது. முதல் சில நொடிகளிலேயே, ஜோன்ஸ் ஒரு புதிய உலகத்தின் வாசல் திறப்பதை உணர்ந்தான். ஒவ்வொரு ஸ்வரமும் அவன் நெஞ்சில் அதிர்ந்தது, அவன் இதுவரை அறியாத ஒரு மொழியின் முதல் வார்த்தைகளாக. அவன் மனதில் அதிர்ச்சியின் அலைகள் எழுந்தன, ஒவ்வொன்றும் அவன் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்தது.
ஆழமான சுவரங்கள் வரும்போது, ஜோன்ஸின் இதயத்துடிப்பு வேகமானது. அவன் கால்களுக்கு கீழே பூமியை அதிர வைத்தது போல் உணர்ந்தான். அவன் இதுவரை கேட்ட பாடல்களும் இசையும் திடீரென சிறியதாக, மேலோட்டமானதாகத் தோன்றின. இது வேறொரு வகையான கலை ஆழமான, வலிமையான, உயிருள்ள, உயிரற்ற வடிவம்.. அவன் கண்களை மூடிக்கொண்டான். இசை உயர்ந்து, பின் மெதுவாக இறங்குகிறது கூக்குரல் போல. மகிழ்ச்சியான நினைவுகள் வந்து, பின் சோகத்தில் மூழ்குவது போல் இசையின் வேகம் சீராக இல்லை. ஒரு கணத்தில் தயங்கி, மறுகணமே உணர்ச்சிப் பெருக்கில் வேகமாகிறது.
… சில கணங்கள் பியானோ மௌனமாகிறது.
அந்த நிசப்தம் அவன் காதுகளில் ஒலித்தது. மௌனமும் ஏதோ சொல்கிறது என்பதை அவன் உணர்ந்தான். மொழிக்கு தான் அர்த்தம் உள்ளதா என்ன? மௌனங்களும் அர்த்தங்களால் நிரம்பியுள்ளது. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் ஒரு ஆழ்ந்த மௌனம் போல. சொல்லப்படாத உணர்வுகள், கேட்கப்படாத கேள்விகள், கிடைக்காத பதில்கள் என அனைத்தையும் அந்த மௌனம் சுமந்து நிற்கிறது
வலது கை வாசிக்கும் மெலடி, இரவில் தனிமையில் பேசிக்கொள்ளும் காதலனின் குரல் போல ஒலிக்கிறது. அதில் காதல், பிரிவு, ஏக்கம் என ஆயிரம் கதைகள் உள்ளன. அதே சமயம், இடது கை வாசிக்கும் மெல்லிய பின்னணி இசை, சீராகத் துடிக்கும் இதயத்தைப் போல, அந்த உணர்வுகளுக்கு ஒரு நிலையான ஆதாரத்தைக் கொடுக்கிறது.
ஜோன்ஸ் அந்த ஜன்னலுக்கு அருகில் குனிந்து அமர்ந்தான். அவன் கண்ணீர் துளிகள் கன்னங்களில் வழிந்தோடின. அந்த இசை அவன் மனதில் ஒளிந்திருந்த உணர்வுகளை வெளிக்கொணர்ந்தது. மற்ற குழந்தைகள் போல் அவனால் எளிதாக பேச முடியவில்லை. உலகம் அவனுக்கு வேறுவிதமாக தெரிந்தது. ஆனால் இந்த இசை அவன் மொழி. இது அவன் உணர்வுகளின் மொழி.
நாக்டர்னின் மத்தியப் பகுதியில், இசை கிட்டத்தட்ட பேசுவது போல் இருக்கிறது. அவன் தலையை குனிந்து அமர்ந்துகொண்டான். கிராமத்தின் நிசப்தம், மலர்களின் வாசனை, பியானோவின் இசை எல்லாம் சேர்ந்து ஒரு மாயக் காட்சியை உருவாக்கின. இசை முடிவுறும்போது, ஜோன்ஸின் கண்ணீர்த் துளிகள் நின்றுவிட்டன, அவன் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை படர்ந்தது. முதல்முறையாக, அவனுக்கு தன்னை புரிந்துகொள்ளும் ஏதோவொன்று கிடைத்திருந்தது.
“அடுத்த வாரம் நாம் இந்த நாக்டர்னை பயிற்சி செய்வோம். வீட்டில் போய் மீண்டும் மீண்டும் இதை கேளுங்கள்,” என்று ஆசிரியர் சொன்னார்.
ஜோன்ஸ் மெதுவாக எழுந்து, வீட்டிற்கு திரும்பினான். அவன் மனதில் அந்த இசை இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்வரங்களும் அவனுடைய உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்தது போல் இருந்தது. அவன் மீண்டும் காட்டின் வழியாக நடந்தான், இப்போது அவன் மனம் இலகுவாக இருந்தது. பறவைகளின் ஒலி, மரங்களின் நிழல் இவை இப்போது அவனுக்கு ஒரு புதிய பொருளைத் தந்தன. அவை இசையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
வீட்டில், இரவு உணவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்தன. வெர்னா, மேசையில் தட்டுகளை அடுக்கிக்கொண்டே, “ஜோன்ஸ் எங்கே?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீண்ட நிழல்களையும், அமைதியான தெருவையும் தவிர அங்கே யாருமில்லை. “இந்த நேரம் தனியாக எங்கே போயிருப்பான்?” என்ற சிறு கவலை அவர் மனதில் எழுந்தது.
கதவு பலமாக திறக்கும் சத்தம் கேட்டது, வெர்னா அவனைப் பார்த்து கவலையுடன் கேட்டார்,
“ஜோன்ஸ், எங்கே போயிருந்தாய்?”
ஜோன்ஸ் தயங்கினான். அவனால் வார்த்தைகளில் தன் அனுபவத்தை விளக்க முடியவில்லை. ஆனால் அவன் மெதுவாக புன்னகைத்து, “நான்… ஒரு இசையைக் கேட்டேன்,” என்றான்.
வெர்னா ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தார். அவனுடைய கண்களில் ஒரு புதிய ஒளியைக் கண்டார். “என்ன இசை?” என்று மென்மையாகக் கேட்டார்.
“ஷோபான்… நாக்டர்ன்,” என்று ஜோன்ஸ் மெதுவாகச் சொன்னான். அவன் குரலில் புதிய தன்னம்பிக்கை இருந்தது.
வெர்னா ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார். “நாக்டர்ன்? எங்கே அதைக் கேட்டாய்?” என்று கேட்டார்.
ஜோன்ஸ் தலையசைத்தான். “அது… என்னைப் புரிந்து கொள்கிறது,” என்று மெதுவாகச் சொன்னான்.
அன்று இரவு, ஜோன்ஸ் தன் அறையில் படுத்திருந்தபோது, ஷோபானின் நாக்டர்ன் இசை அவன் மனதில் தொடர்ந்து ஒலித்தது. கண்களை மூடியவுடன், அந்த இசையின் மென்மையான, ஆழமான ஸ்வரங்கள் அவனை ஒரு இருண்ட கனவு உலகத்திற்கு இழுத்துச் சென்றன. அடர்ந்த காடுகளில் தொலைந்து, மூடுபனியால் மூடப்பட்ட பாதைகளில் அலைவது போலவும், அவனைச் சூழ்ந்து மரங்களின் நிழல்கள் அச்சுறுத்துவது போலவும் தோன்றியது. நாக்டர்னின் தாளங்கள் அவன் மனதில் ஒளிந்திருந்த பயங்களை வெளிக்கொணர்ந்தன, அவனது இதயத்தை பதற்றத்தில் ஆழ்த்தின.
திடீரென, கனவில் அவனைப் பற்றிய அமைதியற்ற உணர்வு அவனை உரத்த குரலில் கூச்சலிட வைத்தது. “விடு! என்னை விடு!” என்று அவன் அறையில் கத்தினான், அவனது குரல் இரவின் நிசப்தத்தில் திகிலுடன் எதிரொலித்தது, ஆனால் அந்த இசை அவனை இன்னும் அந்த கனவின் பிடியில் வைத்திருந்தது.
மறுநாள் காலை, ஜோன்ஸ் பியானோ ஆசிரியை சந்திப்பதற்காக தேவாலயத்தின் வராந்தாவில் அமர்ந்திருந்தான். வெயிலின் கீற்றுகள் அவன் முகத்தில் சாய்ந்தாலும், நேற்றிரவின் நாக்டர்னின் நிழல் அவன் மனதில் இன்னும் அலைந்து கொண்டிருந்தது. கைகளில் கதவு திறந்தபோது, கார்டனரின் சிரிக்கும் முகம் தெரிந்தது, ஆனால் ஜோன்ஸின் கண்களில் இருந்த கலக்கத்தைக் கண்டதும் அவள் முகம் கவலையுடன் மாறியது.
“என்ன விஷயம், யார் நீ?” என்றார்
“நான் ஜோன்ஸ், நேற்று நீங்கள் அந்த… அந்த நாக்டர்ன்… அது…”
ஜோன்ஸ் தடுமாறினான். “அது என்னை பயமுறுத்துகிறது. அது பிசாசின் இசை போல் இருக்கிறது.”
கார்டனர் மெல்லிய சிரிப்புடன், “ஆ, அப்படியா? ஷோபானின் நாக்டர்ன் பிசாசின் இசையா?” என்று கேட்டாள். அவள் சிரிப்பு காற்றில் மிதந்தது.
“உண்மையில், அந்த இசை உன் இதயத்தின் ஆழமான உணர்வுகளை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டது, ஜோன்ஸ். அது பிசாசு அல்ல.”
ஜோன்ஸ் அவரின் முகத்தை பார்க்காமல், “இல்லை அது பிசாசின் இசை.. பிசாசின் இசை..” என்றான்
“ஏன் ஷோபான் அதை இப்படி எழுதினார்? அவரும் உடைந்தவரா?” ஜோன்ஸின் குரலில் ஆழமான ஆர்வம் தொனித்தது.
கார்டனரின் கண்கள் தூரத்தில் ஏதோ ஒன்றைப் பார்ப்பது போல் மாறின. “ஷோபான்… அவர் தன் சொந்த நாட்டை விட்டு வெகு தூரம் போக வேண்டியதாயிற்று. போலந்து என்ற அவரது தாய்நாடு அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. நுரையீரல் நோயால் வாடி, மூச்சுவிட சிரமப்பட்டு, பாரிஸின் இருண்ட அறைகளில் தனிமையில் வாழ்ந்தார்.”
அவள் குரல் மெதுவாக ஆழ்ந்து சென்றது. “அவரது காதலி ஜார்ஜ் சாண்ட்… அவளும் அவரை விட்டுச் சென்றாள்.. மரணத்திற்கு முன்பு அவர் அமைதியாக இருந்தார், ஆனால் அவரது பியானோ பேசிக் கொண்டே இருந்தது.”
ஜோன்ஸ் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான், அவன் கண்களில் புரிதலின் மெல்லிய ஒளி தோன்றியது.
“சில சமயங்களில்,” கார்டனர் மெதுவாக சொன்னாள், “நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் இசைதான்… நாம் யார் என்பதை நமக்குக் கற்றுத் தர முயற்சிக்கிறது. அந்த இருண்ட கீதங்கள் உன் மனதின் மறைந்த அறைகளைத் திறக்கின்றன, ஜோன்ஸ். அதுதான் உண்மையான இசை.”
“இசை என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, ஜோன்ஸ். அது ஒரு ஆன்மீக பயணம். உண்மையான இசை நம்மை வசதியான இடத்திலிருந்து வெளியே இழுத்து, நம் உள்ளுணர்வுகளுடன் நேருக்கு நேர் நிறுத்துகிறது. அது நம்மை கேள்விகள் கேட்க வைக்கிறது நாம் தவிர்க்க விரும்பும் கேள்விகளை.”
கார்டனரின் வார்த்தைகள் ஜோன்ஸின் மனதில் ஆழமாகப் பதிந்தன.அன்று முதல், அவன் கார்டனரிடம் பியானோ கற்கத் தொடங்கினான்.
அவனுடைய கற்றல் முறை மற்ற மாணவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அவனுக்கு எளிமையான பாடல்களிலோ, குழந்தைகளின் பாடல்களிலோ நாட்டமில்லை. ஷோபான், பீத்தோவன், பாக் போன்றோரின் சிக்கலான, உணர்வுபூர்வமான இசையை நோக்கியே அவனது மனம் ஈர்க்கப்பட்டது. அவனது ஆஸ்பெர்கர் பண்புகளான அதீத கவனம் மற்றும் வடிவங்களை அறிவதில் இருந்த திறமை, அவனுக்கு இசையின் கணித அமைப்பைப் புரிந்துகொள்ள உதவியது. அவனால் இசைக் குறிப்புகளை மிக வேகமாக நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது.
“பாக் இசையில் உள்ள வடிவங்களைப் பார், ஜோன்ஸ்,” என்று கார்டனர் விளக்குவார். “ஒவ்வொரு இசைக் குறிப்பும் ஒரு தர்க்கரீதியான தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. இது ஒரு கணித சமன்பாட்டைத் தீர்ப்பது போல.” இந்த விளக்கம் ஜோன்ஸுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்குப் புரியாத சமூக விதிகளுக்கு மத்தியில், இசையின் தர்க்கம் அவனுக்கு ஒரு புகலிடமாக இருந்தது.
ஜோன்ஸின் பெற்றோர், அவன் ஒரு புதிய ஆர்வத்தைக் கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவனுக்காக ஒரு பழைய பியானோவை வாங்கித் தந்தனர். பழைய பாணி பியானோவை 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் அதன் நாண்களை மீட்டுக்கொடுத்தார், ஜோன்ஸ் இதோ இந்த சோஃபியா உன் கைகளில் என்று அவன் முதுகை தட்டிக் கொடுத்தார். ஆனால், ஜோன்ஸ் எப்போதும் சோகமான, தீவிரமான இசையை மட்டுமே வாசிப்பது அவர்களுக்குக் கவலையை அளித்தது.
“ஜோன்ஸ், கொஞ்சம் மகிழ்ச்சியான சங்கீதத்தை வாசிக்கக் கூடாதா?” என்று வெர்னா ஜான்சன் ஒரு நாள் கேட்டார். “எப்பப் பார்த்தாலும் இந்த சோகமான இசை… கேட்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு.”
ஜோன்ஸால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அந்த இசை ஏன் அவனுக்கு முக்கியம் என்பதை வார்த்தைகளால் விளக்க அவனுக்குத் தெரியவில்லை. அது அவனுக்கு சோகமாகத் தெரியவில்லை; அது உண்மையாகத் தெரிந்தது.
அடுத்த முறை டாக்டர் புரூக்கை சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டனர். டாக்டர் புரூக் புன்னகையுடன் விளக்கினார், “ஜோன்ஸுக்கு, அந்த இசை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி. நம்மால் எளிதாகப் பேசிவிடும் விஷயங்களை, அவன் இசையின் மூலம் உணர்கிறான். அந்த இசை சோகமானது அல்ல, அது ஆழமானது. அவனது உலகைப் புரிந்துகொள்ள அவன் கண்டறிந்த மொழி அது. அவனைத் தடுக்காதீர்கள்”
கார்டனர் ஜோன்ஸுக்கு ஒரு புதிய சவாலைக் கொடுத்தார். “ஜோன்ஸ், நீயே ஒரு சிறிய இசைக்கோர்வையை உருவாக்க முயற்சி செய்.”
ஜோன்ஸ் திகைத்தான். “நான் எப்படி உருவாக்குவது?”
“சந்தோஷமாகவோ சோகமாகவோ உருவாக்க முயற்சிக்காதே,” என்றார் கார்டனர்.
“உனக்கு எப்படித் தோன்றுகிறதோ, அப்படி உருவாக்கு. வான்கோவின் ‘நட்சத்திர இரவில்’ நீ கண்ட சுழல்களைப் பற்றி யோசி. மரத்தின் இலைகளின் ஊடே வரும் ஒளியின் தாளத்தைப் பற்றி யோசி. அதை இசையாக மாற்று.”
அந்த யோசனை ஜோன்ஸின் மனதைத் தொட்டது. அவன் பியானோவின் முன் அமர்ந்தான். அவன் உணர்ச்சிகளைப் பற்றி யோசிக்கவில்லை. அவன் வடிவங்களைப் பற்றி யோசித்தான். அவனது விரல்கள் தாளம் போடும் ஒழுங்கைப் பற்றி யோசித்தான். மெதுவாக, அவன் விரல்கள் பியானோவின் கட்டைகளில் நகரத் தொடங்கின.
அவன் உருவாக்கிய இசை வித்தியாசமாக இருந்தது. அதில் திரும்பத் திரும்ப வரும் தாளங்கள் இருந்தன, எதிர்பாராத திருப்பங்கள் இருந்தன, அதன் மையத்தில் ஒரு தர்க்கரீதியான அமைப்பு இருந்தது. அது கேட்பதற்கு விசித்திரமாக இருந்தது. அன்று இரவு, ஜோன்ஸ் தனது அறையில் அமர்ந்து ஷோபானின் நாக்டர்ன் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தான். இப்போது இசை அவனைப் பயமுறுத்தவில்லை. அதன் சோகத்தில் ஒரு அழகைக் கண்டான். அது ஒரு பிசாசின் இசையல்ல. அது தனிமையில் வாடிய ஒரு கலைஞனின் ஆன்மாவின் குரல்.
ஜன்னலுக்கு வெளியே, நட்சத்திரங்கள் வானில் சுழன்று கொண்டிருந்தன. இப்போது ஜோன்ஸுக்கு அவை கணித ரீதியாக தவறானவையாகத் தெரியவில்லை. அவை ஒரு பெரிய, பிரபஞ்ச இசையின் குறிப்புகளாகத் தெரிந்தன. அந்த இசையை இப்போது அவனாலும் வாசிக்க முடிந்தது.
ஒரு இரவு, ஜோன்ஸ் தன் அறையில் பாக் இசையின் தர்க்கரீதியான உலகில் மூழ்கியிருந்தபோது, கீழே சமையலறையிலிருந்து அவனது பெற்றோரின் குரல்கள் கேட்டன.
“எவ்வளவு காலம் இதை நம்மால் தாங்க முடியும், ஜான்?” வெர்னா ஜான்சனின் குரல் உடைந்து ஒலித்தது. “அவனுடைய சிகிச்சைக்காக நம் சேமிப்பு முழுவதும் கரைகிறது. என் வேலை நேரம் குறைந்துவிட்டது. அவன் ஒரு… அவன் ஒரு பாரமாக மாறிக்கொண்டிருக்கிறான்.”
அந்த ‘பாரம்’ என்ற வார்த்தை ஆழமாக ஜோன்ஸின் இதயத்தில் குத்தியது. பியானோவின் கட்டைகள் திடீரென்று அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தன. அவன் வாசித்துக் கொண்டிருந்த இசை, அவனது குடும்பத்தின் மகிழ்ச்சியை உறிஞ்சும் ஒரு கருந்துளை போலத் தோன்றியது. அவன் மெதுவாக பியானோவின் மூடியை இறக்கினான். அதன் ஒலி, ஒரு சவப்பெட்டியை மூடுவது போல் கேட்டது.அடுத்த சில நாட்கள், அவன் பியானோவைத் தொடவே இல்லை. அவனது ஒரே புகலிடம் அவனுக்கு எதிராகத் திரும்பியது போல் உணர்ந்தான்.
இந்த மனநிலையில் அவன் கார்டனரின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் கால்களை நீட்டி அருகில் இருக்கும் நாற்காலியில் வைத்திருந்தார். கார்டனரின் விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. அவர் ஒரு கோப்பை தேநீரை எடுக்கும்போது, அது லேசாகத் தள்ளாடியது.
” கார்டனர், உங்கள் கைகளுக்கு என்ன ஆனது?” என்று ஜோன்ஸ் மெதுவாகக் கேட்டான்.
கார்டனர் சோகமான புன்னகையுடன் அவனைப் பார்த்தார். “இது ஆர்த்ரைட்டிஸ், ஜோன்ஸ். என் விரல்களில் உள்ள மூட்டுகள் தேய்ந்து வருகின்றன. ஒரு பியானோ கலைஞருக்கு இது ஒரு கொடூரமான சாபம், இல்லையா?”
அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். “என் விரல்கள் என் குரலாக இருந்தன. இப்போது அந்தக் குரல் மெல்ல மெல்ல மௌனமாகிக் கொண்டிருக்கிறது.”
ஜோன்ஸின் உலகம் நொறுங்கியது. அவனுக்கு வழிகாட்டிய ஒரே ஒளி அணைந்து கொண்டிருந்தது. அவனது இசையின் பிசாசு இப்போது நிஜமாகி, அவன் நேசித்த அனைத்தையும் பறித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். அந்தப் பயம் அவனை முழுவதுமாக ஆட்கொண்டது.
மறுநாள் அருகில் இருக்கும் பூங்காவில், சிறுவர்களின் விளையாட்டு ஜோன்சிற்கு சத்தமும் குழப்பமுமாக இருந்தது. ஒரு பையன் தவறுதலாக அவன் மீது பந்தை எறிந்துவிட, அன்று, அவனது மனதில் இருந்த பாரம், பயம், துக்கம் எல்லாம் சேர்ந்து வெடித்தது.
அவன் கத்தத் தொடங்கினான். பொருளற்ற, வார்த்தைகளற்ற, மிருகத்தனமான ஒரு அலறல். தரையில் விழுந்து தன் காதுகளைப் பொத்திக்கொண்டு அழுதான். அந்த சத்தம், அந்த தொடுதல், அந்த பார்வை எல்லாம் அவனைத் தாக்கியது. எல்லோரும் விலகி ஓட, அருகில் நடைக்கு சென்றிந்த வெர்னா அவனைச் சமாதானப்படுத்த முயன்றபோது, அவன் மேலும் மூர்க்கமாக அலறினான். அதன் பிறகு, அவன் பேசுவதையே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டான். அவன் பியானோ இருந்த அறைப்பக்கம் கூட செல்லவில்லை. இசை ஒரு நஞ்சு என்று நம்பினான். அது அவனைக் கட்டுப்படுத்தி, அவனது வாழ்க்கையையும், அவனைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டிருந்தது.
ஒரு மாதம் கழித்து, கார்டனரின் நிலை மோசமடைந்தது, என்ற தகவல் வந்தது. அவர் படுக்கையில் இருந்தார். ஜோன்ஸின் பெற்றோர், அவனை வற்புறுத்தி அவரைப் பார்க்க அழைத்துச் சென்றனர்.
அவர் அறை அமைதியாக இருந்தது. கார்டனர் மிகவும் பலவீனமாகத் தெரிந்தார். அவர் ஜோன்ஸைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தார். “ஜோன்ஸ்… எனக்காக வாசிப்பாயா?” என்று அவரது குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.
ஜோன்ஸின் இதயம் பயத்தில் உறைந்தது. “இல்லை,” என்று அவன் தலை அசைத்தான். “அந்த இசை… அது பிசாசின் இசை. அது உங்களையும் காயப்படுத்தும்.”
கார்டனர் மெதுவாக தன் நடுங்கும் கையை நீட்டினார். “இல்லை, ஜோன்ஸ். இசை ஒருபோதும் காயப்படுத்தாது. அது நம் வலியைப் பகிர்ந்து கொள்ளும். என் விரல்களால் இப்போது வாசிக்க முடியாது. நீ தான் என் விரல்களாக இருக்க வேண்டும். எனக்காக வாசி. சோபினை வாசி. அந்த நாக்டர்னை…”
ஜோன்ஸின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் தயங்கினான். ஒரு பக்கம் பயம், மறுபக்கம் தன் ஆசிரியை மீதான அன்பு.
அவன் மெதுவாக அவர் அறையில் இருந்த பியானோவை நோக்கி நடந்தான். அவன் விரல்கள் நடுங்கின. பியானோவின் கட்டைகள் குளிர்ச்சியாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தன. அவன் கண்களை மூடிக்கொண்டு, முதல் குறிப்பை வாசித்தான்.
அது நாக்டர்னின் இசை. ஆனால் இந்த முறை, அவன் அதை வேறுவிதமாக வாசித்தான். அது வெறும் சோகமான இசையாக இல்லை. அது கார்டனரின் வலியாக, அவனது பெற்றோரின் சண்டையாக, அவனது சொந்த அலறலாக ஒலித்தது. ஒவ்வொரு குறிப்பும் ஒரு கண்ணீர்த் துளியாக விழுந்தது. அவன் வாசிக்க வாசிக்க, அவன் மனதில் இருந்த பாரம் குறைவது போல் இருந்தது. அவன் தன் வலியை இசைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
இசை முடியும் தருவாயில், அவன் வாசிப்பது அவனுக்காகவோ, அவனது பிசாசுகளுக்காகவோ அல்ல என்பதை உணர்ந்தான். அவன் கார்டனருக்காக வாசித்துக் கொண்டிருந்தான். அவளது தனிமையைப் போக்க, அவளது வலியைப் பகிர்ந்து கொள்ள.
அவன் வாசித்து முடித்தபோது, அறை நிசப்தமாக இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தான். கார்டனரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால், அவர் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை இருந்தது. வாசலில் நின்றுகொண்டிருந்த அவனது பெற்றோர், ஒருவரையொருவர் பிடித்தபடி அழுதுகொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் மகனின் இசையைக் கேட்கவில்லை; அவர்கள் அவனது ஆன்மாவைக் கேட்டிருந்தனர்.
ஜன்னலுக்கு வெளியே, நட்சத்திரங்கள் வானில் சுழன்று கொண்டிருந்தன. இப்போது ஜோன்ஸுக்கு அவை கணித ரீதியாக தவறானவையாகத் தெரியவில்லை. அவை ஒரு பெரிய, பிரபஞ்ச இசையின் குறிப்புகளாகத் தெரிந்தன. அந்த இசையை இப்போது அவனாலும் வாசிக்க முடிந்தது. அவன் வாசித்து முடித்தபோது, அறையில் ஒரு புதிய அமைதி நிலவியது. கார்டனர் கண்களை மூடி, சாந்தமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் வலி மறைந்திருந்தது; அதற்கு பதிலாக ஒரு அங்கீகாரம் தெரிந்தது அவர் பொறுப்பேற்று வழிகாட்டிய ஒரு ஆன்மா இப்போது தன் சொந்த ஒளியைக் கண்டறிந்துவிட்டது என்ற நிறைவு.
ஜோன்ஸ் பியானோவிலிருந்து எழுந்து, ஜன்னலுக்குச் சென்றான். அவன் விரல்கள் இன்னும் இசையின் எதிரொலியை உணர்ந்துகொண்டிருந்தன. வெளியே, உலகம் அதே போல் இருந்தது , அதே மரங்கள், அதே தெருவிளக்குகள், அதே அமைதியான வீதிகள். ஆனால் எதோ ஆழமான மாற்றம் நிகழ்ந்திருந்தது. அவன் இப்போது உலகைப் பார்ப்பது பங்கேற்பாளராக. அவனுக்குள் இருந்த அந்த பயம் , அந்த உறைந்த பனிக்கட்டி போன்ற தனிமை , இனி அவனை முழுவதுமாக ஆட்கொள்ளாது என்பதை அவன் அறிந்திருந்தான். அது மறைந்துவிடவில்லை; அது வேறொரு உருவம் பெற்றிருந்தது.
பின்னால் இருந்து வெர்னா ஜான்சனின் தொடுதலை உணர்ந்தான் . அவள் அவன் தோளில் மெதுவாக கை வைத்தாள். இந்த முறை அவன் வெட்கி விலகவில்லை.
“ஜோன்ஸ்,” அவள் கிசுகிசுத்தாள், “நீ வாசித்த இசை… அது மிக அழகாக இருந்தது.”
ஜோன்ஸ் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளது தயக்கத்தை அவன் கண்டான். ஆனால் அவன் விலகவில்லை. அவன் கண்களில் முன்பு இருந்த பயமோ, வெறுமையோ இல்லை. ஒரு நீண்ட, இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் முதல்முறையாக ஒளியின் கீற்றைக் கண்ட ஒருவனின் களைப்பு அவன் பார்வையில் தெரிந்தது. அவன் வெகுதூரம் பயணம் செய்திருந்தான், இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது.
“போகலாம், மகனே,” அவனது தந்தை மெதுவாகக் கூறினார். அவரது குரலில் இருந்த கண்டிப்பை விட, கனிவு அதிகமாக இருந்தது.
வெளியே, வான்கோவின் நட்சத்திரங்கள் சுழன்றுகொண்டே இருந்தன, மேலும் ஒரு சிறுவன் இறுதியாகத் தன் இடத்தை அந்த எல்லையற்ற வட்டத்தில் கண்டறிந்திருந்தான்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
