மூலம் : சாதத் ஹசன் மண்டொ
தமிழாக்கம் : வீ . மணி
அமிர்தசரசில் மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்ட சிறப்பு ரயில், முகல்புராவிற்கு எட்டு மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தது. வழியில், ஏராளமான பிரயாணிகள் கொல்லப்பட்டார்கள், நிறையப் பேருக்குப் படுகாயம், பலரைக் காணவில்லை.
அடுத்த நாள் காலையில், சிராசுதின் கண்ணை விழித்துப் பார்த்தபோது, அகதிகள் முகாமின் சில்லிட்டத் தரையில் படுத்துக் கிடப்பதை உணர்ந்தான். அவனைச் சுற்றிலும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக அலைமோதிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலைக் கண்டு மிரண்டு போனவனாய், தூசு படிந்த ஆகாயத்தை படுத்தபடியே ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். முகாமில் ஒரே இரைச்சலாக இருந்தது. வயதாகிப்போன சிராசுதின் எதையும் காதில் வாங்கவில்லை. அவன் காதில் எதுவும் விழவில்லை. அவனைப் பார்த்தவர்கள், அவன் வலியோடு எதைப்பற்றியோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகத்தான் எண்ணியிருப்பார்கள். ஆனால் அவனுடைய மனது வெறுமையாகக் கிடந்தது.
மனம் போனவாக்கில் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டு படுத்திருந்த சிராசுதினின் கண்ணில் சட்டென்று சூரியன் பட்டது. சூரியனின் இதமான வெப்பம், அவன் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் புகுந்தது. திடுக்கிட்டு எழுந்தான். கோரமானக் காட்சிகள் அவன் கண்முன்னால் விரிந்தன — தீக்கொழுந்துகள், கொள்ளைகள்… பதறியோடும் மக்கள்… ரயில் நிலையம்… துப்பாக்கிச்சூடு… கும்மிருட்டு. அப்புறம் சகினா.

பயமும் கவலையும் மேலோங்க, அந்த கும்பலில் பயித்தியம் பிடித்தவனைப்போல் சகினாவைத் தேடத் தொடங்கினான்.
”சகினா…. சகினா…“ என்று மூன்று மணி நேரமாகக் கூவியழைத்தான். முகாமின் ஒவ்வொரு மூலையிலும் தேடினான். ஆனால் அவனின் ஒரே இளம் மகளின் தடையமேத் தெரியவில்லை. எல்லாப் பக்கத்திலும் ஒரே கூச்சலாக இருந்தது —- அங்கிருந்த அகதிகளில் பலர், தங்களின் குழந்தைகளையும், பெற்றோர்களையும், மனைவியரையும் தேடி அலைந்துக் கொண்டிருந்தார்கள்.
விரக்தியும் களைப்புமாக கீழே அமர்ந்த சிராசுதின், எங்கே எப்படி சகினாவைத் தொலைத்தோமென்று நினைவுப்படுத்திப் பார்க்க முயற்சி செய்தான். சடாரென அவன் மனைவியினுடைய உடலின் கோரமானக் காட்சி அவன் கண் முன்னால் பளீரிட்டது — குடல் சரிந்து கீழேக் கிடந்த அவளைப் பார்த்தான். அதோடு அவனின் நினைவுகள் நின்று விட்டன.
சகினாவின் அம்மா இறந்து விட்டாள். அவன் கண் முன்னாலேயே அவள் கொல்லப்பட்டாள் — ஆனால் சகினா எங்கே? இறுதியாகக் கண்ணை மூடுவதற்கு முன்னால், சகினாவின் அம்மா அவனை அவசரப்படுத்தினாள், “என்னப்பத்தி கவலப் படாத — ஓடு, சகினாவக் கூட்டிகிட்டு ஒடனே போயிடு…”
சகினா அவனுடன்தான் இருந்தாள் — வெறும் காலோடு இருவரும்தான் ஒன்றாக ஓடினார்கள். ஓடும்போது சகினாவின் துப்பட்டா கீழே விழுந்தது. அதை எடுக்க அவன் குனிந்தபோது, அவள் அலறினாள், “அப்பா, போகட்டும் விடு!” ஆனால் அவன் துப்பட்டாவை எடுத்துக் கொண்டான். அந்த நினைவு வந்தவுடன், தன்னுடைய மேலங்கியின் பையில் கையை விட்டு அதிலிருந்த துப்பட்டாவை வெளியில் எடுத்தான். துப்பட்டா அவனிடம்தான் இருக்கிறது — ஆனால் சகினா எங்கே?
நினைத்துப் பார்க்க சிராசுதின் முயற்சி செய்தான், முடியவில்லை. அவனோடு சேர்ந்து சகினாவும் ரயில் நிலையத்திற்கு வரமுடிந்ததா? அவனுடன் அவளும் ரயிலில் ஏறினாளா? கலவரக்காரர்கள் ரயிலைத் தாக்கியபோது மயக்கமாகி விட்டானா? அவர்கள்தான் அவளை தூக்கிக்கொண்டு போய்விட்டார்களா?
இந்த கேள்விகளில் எதற்குமே அவனால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிராசுதினுக்கு அனுதாபமும் உதவியும் தேவைப்பட்டன. ஆனால் அங்கே அவனைச் சுற்றியிருந்த எல்லாருக்குமே அவை தேவைப்பட்டன. அவனுக்கு அழ வேண்டும்போல இருந்தது, ஆனால் கண்ணில் கண்ணீர் இல்லை. துயரப்படும் சக்தியையும் இழந்துபோயிருந்தான்.
சில தினங்கள் கழித்து, ஒருவாறு தன்னைத் தேற்றிகொண்ட சிராசுதின், அவனுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்ன சிலரிடம் பேசினான். அவர்கள் மொத்தம் எட்டு இளைஞர்கள். துப்பாக்கிகளும் ஒரு ட்ரக்கும் வைத்திருந்தார்கள்.
அவர்கள்மீது தன்னுடைய ஆசீர்வாதங்களை பொழிந்த சிராசுதின், சகினாவின் அடையாளங்களை அவர்களிடம் சொன்னான். “அவள் நல்ல நிறம், ரொம்ப அழகா இருப்பா – என்ன மாதிரி இல்ல, அவளோட அம்மாவப்போல — பெரிய கண்ணு, கருப்பா முடி, அப்புறம் அவளோட வலது கன்னத்தில பெரிசா ஒரு மச்சம் இருக்கும். என்னோட ஒரே பொண்ணு. அவள நீங்க கண்டுபிடிச்சுக் குடுத்தா, ஆண்டவன் உங்களுக்கு அருள் செய்வான்.”
தாங்களாகவே நியமித்துக்கொண்ட அந்த சமூக சேவகர்கள், அவனுடைய மகள் உயிரோடு இருந்தால் சில நாட்களிலேயே கண்டுபிடித்து அவனிடம் சேர்ப்பதாக மிகுந்த அக்கறையோடும் நம்பிக்கையோடும் உறுதி கொடுத்தார்கள்.
சகினாவைக் கண்டுபிடிக்க தங்களால் முடிந்தவரையிலும் அந்த இளைஞர்கள் முயற்சி செய்தார்கள். தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அமிர்தசரசுக்கு சென்றார்கள். பல மனிதர்கள், பெண்கள், குழந்தைகளை காப்பாற்றி அவர்களின் குடும்பத்தாரோடு சேருவதற்கு உதவினார்கள். ஆனால் பத்து நாட்களாகத் தேடியும், அவர்களால் சகினாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நாள், இன்னும் சில அகதிகளுக்கு உதவுவதற்காக அவர்கள் அமிர்தசரசுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ஒரு பெண் நிற்பதைப் பார்த்தார்கள். ட்ரக் வருகின்ற சத்தத்தை கேட்டவுடன் அவள் ஓடத் தொடங்கினாள்.
அந்த சமூக சேவகர்களும் ட்ரக்கை நிறுத்திவிட்டு, அவள் பின்னாலேயே ஓடினார்கள்.
வயல் வெளியில் அவளைப் பிடித்தார்கள் – அவள் அழகாக இருந்தாள், அவளின் வலது கன்னத்தில் பெரிய மச்சம் ஒன்று இருந்தது.
இளைஞர்களில் ஒருவன், “பயப்படாத, ஒன்னோடப் பேரு சகினாவா?” என்று கேட்டான்.
அவளின் முகம் இன்னும் வெளிறியது. அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. மற்ற இளைஞர்கள் அவளுக்குத் தைரியம் சொல்லித் தேற்றியபிறகே, தான் சிராசுதினின் மகள்தான் என்று ஒத்துக்கொண்டாள்.
எட்டு இளைஞர்களும் சகினாவிடம் மிகுந்த பரிவு காட்டினார்கள். அவளுக்குப் பாலும் உணவும் கொடுத்து, ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார்கள் – அவளிடம் துப்பட்டா இல்லாதது அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அடிக்கடி தன்னுடைய மார்பை கைகளால் மூடிமறைத்துக்கொள்ள முயன்றாள்.
மேலும் பல நாட்கள் கழிந்தன. சிராசுதினுக்கு சகினாவைப்பற்றிய எந்த செய்தியும் வரவில்லை.
ஒவ்வொரு நாள் காலையிலும், பல முகாம்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று சகினாவைத் தேடினான். அவளைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. சகினா உயிருடன் இருந்தால் சில நாட்களிலேயே அவனிடம் கொண்டுவந்து சேர்ப்பதாக உறுதியளித்த அந்த இளம் சமூக சேவகர்கள் வெற்றிபெற வேண்டுமென்று தினம் இரவில் ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டான்.
ஒரு நாள் அந்த சமூகசேவகர்களை முகாமில் கண்டான். அவர்களுடைய ட்ரக்கில் அமர்ந்திருந்தார்கள். ட்ரக் கிளம்புகிற சமயமாக இருந்தது. வேகமாக ஓடிச்சென்று அவர்களில் ஒருவனிடம் கேட்டான், “மகனே… என் சகினாவக் கண்டுபிடிச்சீங்களா?”
“கண்டுபிடிப்போம், கண்டுபிடிப்போம்,” என்று எல்லோரும் மொத்தமாகச் சொல்லிவிட்டு, கிளம்பிப் போய்விட்டார்கள்.
அவர்களின் வெற்றிக்காக சிராசுதின் ஆண்டவனை மீண்டும் வேண்டிக்கொண்டான். அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அன்று மாலை, முகாமில் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வெகு அருகாமையில் ஏதோ பரபரப்பாக இருந்தது. நான்கு பேர்கள் யாரையோ தூக்கிக்கொண்டு அவனை தாண்டிபோனார்கள்.
என்னவென்று விசாரித்தபோது, ரயில் பாதைக்கு அருகில் ஒரு பெண் மயங்கிக் கிடந்ததாகவும் அவளை அவர்கள் முகாமிற்கு தூக்கிவந்திருப்பதாகவும் தெரிந்துகொண்டான்.
அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
அந்தப் பெண்ணை அவர்கள் மருத்துவமனையில் ஒப்படைத்தார்கள். சிராசுதின் மருத்துவமனைக்கு வெளியில் இருந்த தூணில் சாய்ந்துக்கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான். பிறகு மெதுவாக உள்ளே போனான்.
அறையின் உள்ளே யாரும் இல்லை. அந்தப் பெண்ணின் உடல் மட்டும் ஸ்டெரச்சரில் கிடந்தது.
அந்தப் பெண்ணிற்கு அருகில் சென்றான்.
திடீரென்று யாரோ மின்விளக்கை எரியவிட்டார்கள்.
அவள் முகத்தில் இருந்த பெரிய மச்சத்தைப் பார்த்துவிட்டு அலறினான், “சகினா!”
மின் விளக்கை எரியவிட்டு வந்த மருத்துவர் கேட்டார். ”என்ன விஷயம்?”
அவனால் முணுமுணுக்கத்தான் முடிந்தது. “நான்… நான் அவளோட அப்பா.”
அந்த பெண்ணின் அருகில் சென்ற மருத்துவர், அவளின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். பிறகு அவனிடம் சொன்னார்.
“ஜன்னலை திறந்து விடு.”
ஸ்டெரச்சரில் கிடந்த பெண் சிறிது அசைந்தாள்.
கைகளை மிகுந்த சிரமத்தோடு நகர்த்தி, சல்வாரை இடுப்போடு கட்டியிருந்த நாடாவை நோக்கி மெல்ல கொண்டுபோனாள்.
மெதுவாக சல்வாரைத் திறந்து, இடுப்பிலிருந்து கீழே இறக்கினாள்.
அவளின் வயோதிகத் தந்தை, ஆனந்தத்தில் கூவினான், “அவளுக்கு உயிரிருக்கு. எம் மக உயிரோடிருக்கா.”
மருத்துவருக்கு சிலீரென்று வியர்த்தது.

சாதத் ஹசன் மண்டொ: மிக அதிகமாக வாசிக்கப் பெற்றவரும் மிக அதிகமான சர்ச்சைக்கு உள்ளானவருமான இந்த உருது சிறுகதை எழுத்தாளர், 1912-ம் ஆண்டு மே மாதம் 12-ம் நாள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ரலா என்ற ஊரில் பிறந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலான அவரின் இலக்கிய, பத்திரிக்கை, வானொலி, திரைப்பட எழுத்துப்பணிகளில், இருபத்து இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், ஒரு புதினமும், ஐந்து வானொலி நாடகத் தொகுதிகளும், மூன்று கட்டுரை தொகுதிகளும், இரண்டு சுயசரிதத் தொகுதிகளும், பல திரைப்பட கதை வசனங்களும் வெளிவந்தன. ஆபாசமிக்க எழுத்துக்கள் என்று சுதந்திரத்திற்கு முன்பு மூன்று முறையும், சுதந்திரத்திற்கு பின்பு மூன்று முறையும் வழக்குகளை சந்தித்தார். மன உளைச்சலும் பணக் கஷ்டமும் நிறைந்த இறுதி ஏழு ஆண்டுகளில்தான் அவருடைய மிகச்சிறந்த படைப்புகள் உருவாயின. அவருடைய நாற்பத்து மூன்றாம் பிறந்த நாளுக்கு பல மாதங்களுக்கு முன்பே, 1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் லாகூரில் மரணமுற்றார்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
