சால்மோனெல்லோசிஸ்

அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு   பெட்டிகளில்  பழுப்புத் திரவத்தை  எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.

அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின்  பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள்.  செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர்  அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.

உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும்  கலக்கப்பட்டது.  சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும்  சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள்.  சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.

 Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும்  நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல்  நடந்தது முதலும் கடைசியுமாக  அதுதான்.

அமெரிக்காவின்  CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த  மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.

1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு  வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி  உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை  கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.

தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.

நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.   

அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை  நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.

ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால்  மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும்  ரஜனீஷ்  தெரிவித்தார்.

FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு  விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து  சாலட்களில்  கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.

ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த  மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.

அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.

1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல்  தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார். 

1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா  எனப்பெயர் சூட்டி  1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.

மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு  ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 

அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார். 

 இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து  நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela  என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே  தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.

சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonella typhimurium  பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான்  பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).

இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.

Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.

சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால்  2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.

1989-ல் லண்டனில்  சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4  என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.

2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.

1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.

2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா  இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும்  இருக்குமென்பது உறுதியாயிற்று.

2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால்  உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு. 

இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.

உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு  உணர்த்தியிருக்கிறது.

உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது,  இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “சால்மோனெல்லோசிஸ்”

  1. 40 வருடத்திற்கு பிறகு, ஒரு இடத்திலிருக்கும் பாக்டீயாக்கள்தான் மற்றொரு இடத்திலும் மனிதரிலும் உள்ளது என்பதனை 100 சதவிகிதம், சந்தேகதிற்கிடமின்றி, ஆறு மணிநேரத்தில் நிருபிக்கமுடியுமென்ற அளவிற்கு தொழிநுட்பங்கள் வளர்ந்துள்ளது. உதாரணமாக, ஒரு 100 பேருக்கு ஏறபடும் உணவு ஒவ்வாமை/நஞ்சிற்க்கு காரணமானது, அவர்கள் உண்ட இந்த உணவகத்திலும் உள்ளது என்று 4-6 மணிநேரத்தில் நிருபிக்கமுடியும். ஆனால், நடைமுறையில் இச்சோதனைகளை, ஆய்வகங்களை உருவாக்கி, அதனை சட்டபூர்வமாக்கும் நடைமுறைகள் – சரியான துறைச் செயலாளர்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.