கு. அழகர்சாமி கவிதைகள்

தேவாலய ஜன்னல்

எவ்வளவு பெரிய
ஜன்னலாய் இருக்கிறது
தேவாலய ஜன்னல்?
எவ்வளவு பெரிய ஜன்னலும்
எப்படி போதும்
எல்லையில்லா வெட்ட வெளி
உள்நுழைவதற்கு?
ஆனால்
எல்லையில்லா வெட்டவெளி
ஒரு வெண்புறாவாய்
உள்நுழைவதைக் காண்கிற போது
இவ்வளவு பெரிய
தேவாலய ஜன்னலும்
குறைந்தபட்சமாய்த் தோன்றுகிறது.
அந்த ஒளியிரவில்
அன்பை வரவேற்கும்
தேவாலய வாசலுக்குள்
மானிடர்கள் நுழைகின்றனர்
தேவனிடம் மனந் திறக்க
மண்டியிட்டு.
உற்று நோக்க வெளியே
தேவாலய ஜன்னலே
தொலை
வானின் ஜன்னலாயும்
தோற்றம் கொள்கிறது
வானின் உடுக்களெல்லாம்
சிறகுகளுடுத்தி
சிட்டுகளாய்ப் பறந்து வந்து
தேவனின் முட்கிரீடத்தில்
ஒளி மின்னுவதாய்த்
தெரிய-
அது திறந்திருக்கும் விதத்தில்
முன்பு மூடியிருந்து
திறக்கப்பட்டு
இப்போது
திறந்திருப்பதாயில்லாமல்
எப்போதும்
திறந்திருந்தே
திறந்திருப்பதாய்க்
காட்சி கொள்கிறது அது.
எவ்வளவு விசாலமாய்
ஒரு மனிதனுக்கும்
இன்னொரு மனிதனுக்கும் இடையே
ஒரு ஜன்னல் திறந்திருக்க
வேண்டுமென்பது போல்
அவ்வளவு விசாலமாய்
அது மனம்
திறந்திருப்பதில்-
தேவாலயச் சுவரில்
வெறுமனே வசிப்பதாயில்லாமல்-
ஒரு ’திறந்த’ வாழ்வை
வாழ்வதாகவே
விகசிக்க வைக்கிறது
என்னை
அந்த
தேவாலய ஜன்னல்.


காலித் தாள்

எவ்வளவு
காலியாயிருக்கிறது
காலித் தாளென்று
காலித் தாளுக்குள்
நுழைந்தேன் நான்.
நுழைந்த பிறகே
தெரிந்தது
காலித் தாள்
காலியாய்த் தெரிவது
காலித் தாளுக்குள்
பதுங்கியிருக்கும் வார்த்தைகள்
காலித் தாளுக்கு வெளியே
கண்ணுக்கு
தெரியாததாலென்று.
எத்தனை வார்த்தைகளோ
அத்தனையும்
காலித் தாளுக்குள்
பதுங்கியிருந்தன.
பதுங்கியிருக்கும் வார்த்தைகளைப்
பதுங்கித் தேடலாமென்று
தேடப் போக
அத்தனை வார்த்தைகளும்
போட்டி போட்டு
ஒவ்வொன்றும்
என்னை எழுது எழுதென்று சூழ
ஒட்டுமொத்த நெரிசலில்
சிக்கினேன் நான்
தொலைந்து போய்.
யாராவது ஒருவர்
காலித் தாளுக்குள் நுழைந்து
பதுங்கியிருக்கும்
வார்த்தைகளைத் தேடி
என்னைப் போல்
தொலைந்து போகாமல்
என்னை மட்டும்
தேடினால் தான் உண்டு
என் மீட்பு
இனி.


அந்திமம்

உறவானாலும்
மிக நெருக்கமில்லை-
சடங்குகள் முடிந்து
பச்சைத் தென்னை மட்டையில்-
பிணத்தைக் கிடத்தி
தூக்கிய போது
கடைசியாய்க் கண்ட முகம்
விடைபெற்ற கணத்தில்-
என் விழிகளில்-
எப்படியென்று தெரியாது-
பனித்த ஒரு துளிக் கண்ணீரில்
பிரதிபலித்தது
என்றாவது வரப்போகும்
என் அந்திமம்.


கைகள் காட்டும் முகம்

கைகள்
என் முகங் காட்டுவது போல்
கண்ணாடி
என் முகங் காட்டுவதில்லை-
ஏனென்றால்
முகங் காட்ட,
வருடிக் கைகள்
என் முகத்தை ஸ்பரிசிப்பது போல்
கண்ணாடி ஸ்பரிசப்பதில்லை.
கண்ணாடி காட்டும்
என் பிம்பத்தை
என்று ஸ்பரிசித்தேன் நான்
உண்மையென்று கூற
அதை?


மையம்

(1)

விளிம்பிலிருந்து
சுருங்குகிறது
மையம்
ஒன்றுமின்மையில்.

(2)

ஒன்றுமின்மையின்
மையம்
சூன்யத்தின்
விழியா?


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.