கிங் காங்

பனி மூட்டம் பார்வையை மறைக்கும் அந்தக் காலை வேளையில் இந்தோனேஷியாவின் கமோடோ தீவில் காலடி எடுத்து வைத்தார் டச்சு லெப்டினட் வான் ஸ்டைன் வான் ஹேன்ஸ்ப்ரோக் (Lieutenant van Steyn van Hensbroek)

17 ம் நூற்றாண்டில் வியாபாரம் செய்யவந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி (Dutch East India Company ) மூலம் 20 ம் நூற்றாண்டில் டச்சுக்கார்கள் இந்தோனேஷியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தார்கள்.

‘முதலைத் தீவு’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்ட காமோடோ தீவுகள் பற்றிய பல கதைகளைக் கேள்விப்பட்டிருந்த வான் ஸ்டைனுக்கு, அந்தத் தீவைப் பார்ப்பதற்கான ஆர்வம் தீவிரமாகி இருந்தது. கிளர்ந்தெழும் மனத்துடன், மனிதக் காலடிகள் பட்டிராத அடர்ந்த காட்டில், தன் முகத்தில் வந்து மோதும் அடர்ந்த இலைக் கொப்புகளை விலக்கியபடி நடந்து கொண்டிருந்தார் வான் ஸ்டைன். காட்டின் காற்றில் கலந்திருந்த ரகசியமும், வான் ஸ்டைனின் மனதில் உருவாக்கிக் கொண்டிருந்த எதிர்பார்ப்பும், நெருக்கமாய் நின்றிருந்த உயர்ந்த மரங்கள் ஒன்றோடொன்று உரசுவதைப் போல உரசிக்கொண்டன.  அன்றுதான்,  வான் ஸ்டைன் இந்தோனேஷியாவின் பழங்கதைகளில் உலவி வந்த, அந்த  ஆள்விழுங்கும் கமோடோ ட்ராகனை (Comodo dragon ) நேருக்கு நேர் சந்தித்தார்.

பத்து அடி நீளமும் பெரும் எடையும் கொண்ட, குத்திக் கிழிக்கும் கூர்மையான பற்களைக் கொண்ட ஒரு ராட்சதப் பல்லி வான் ஸ்டைன் முன் நடந்து வந்து கொண்டிருந்தது. அவரது முதுகு சிலிரத்தது. அதற்கு முன் உலகம் அப்படி ஒரு விலங்கை அறிந்திருக்கவில்லை.

இந்த அதிசய காமோடோ டிராகன் பற்றிய செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. 

சாகசக் கதைகள் மேல் தீராத காதல் கொண்டிருந்த மெரியன் கூப்பர்என்ற ஹாலிவுட் இயக்குநரின் காதுகளை எட்டியது இந்தக்  காமோடோ டிராகன் கண்டுபிடிக்கப்பட்ட கதை. கூப்பரின் கனவுகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத விலங்குகளால் நிறைந்தது.

கூப்பரின் நண்பரான, சாகச வீரர் வில்லியம் டக்ளஸ் பர்டன் (William Douglas Burden), கமாடோ ட்ராகனைக் காட்டில் சந்திக்க விரும்பி இந்தோனேஷியா நோக்கிப் பயணம் செய்ய முடிவு செய்தார். 1926 ல் கமோடோ ட்ராகனைத் தேடி கமோடோ தீவுக்குச் சென்ற வில்லியம் அமேரிக்கா திரும்பும்போது சில காமோடோ உயிருடன் பிடித்து வந்தார். அவற்றைப் பார்ப்பதற்கு நியூயார்க்கின் பிரான்ஸ் (Bronx) விலங்கு காட்சி சாலையில் மக்கள் ஆர்வத்துடன் கூடினர்.

கூப்பர் தன் நண்பர் வில்லியமிடம் காமோடா தீவு அனுபவங்களைக் கேட்டறிந்தார். அந்தப் பயணத்தின் ஆபத்துகளும், சாகசங்களும் அவரைக் கவர்ந்தன. அவை ஒரு மண்டை ஓட்டுத் தீவில் கண்டறியப்பட்டு, நியூயார்க் நகருக்குக் கொண்டுவரப்படும் ஒரு ராட்சதக் குரங்கின் கதை கூப்பரின் மனதில் கருக்கொள்ளத் தொடங்கியது.  திரைப்பட வரலாற்றில் அழியாத புகழைப் பெற்ற கிங் காங் (king kong )ன் கதை இப்படித்தான் உருவானது.

இந்தப் படத்தின் திரைக்கதையைத் தயார் செய்த கூப்பர், தனது நண்பர் டீலோஸ் (Delos W. Lovelace) என்ற எழுத்தாளரைக் கொண்டு தான் உருவாக்கி இருக்கும் கிங் காங் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுத வைத்தார். இந்த நாவல் கிங் காங் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பு பதிப்பிக்கப்பட்டது. இந்த நாவலால் அடுத்து வெளிவரும் தனது கிங்காங் படத்தின் மேல் ஒரு எதிர்பார்ப்பு உருவாகும் என்று நினத்தார் கூப்பர்.  அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது அந்த நாவல் திரைப்படத்திற்கு நல்ல விளம்பரமும் ஆனது.

1933 ம் ஆண்டு கூப்பரின் “ கிங் காங் “ திரைக்கு வந்தது. பெரிதும் கொண்டாடப்பட்ட இந்தத் திரைப்படம் கிங் காங் பாத்திரத்தை ஒரு கலாச்சார அடையாளமாகியது. 

கூப்பர் தந்து ஆறாவது வயதில் இருந்தே கொரில்லா குரங்குகள் மேல் ஆச்சரியம் கொண்டவராக விளங்கினார். ஒருமுறை ஆப்ரிக்காவில் படப்பிடிப்பு நடத்தியபோது பபூன் குரங்குகளுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவம், ஒரு குரங்கைப் பாத்திரமாகக் கொண்டு திரைப்படம் எடுக்கும் எண்ணத்தை அவருக்கு கொடுத்தது. 

காமோடா  தீவில் கமோடா டிராகன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்,  மனிதன் காலடி பட்டிருக்காத ஒரு தீவில் கண்டறியப்பட்ட ஒரு ராட்சதக் கொரில்லா குறித்த கதை அவர் மனதில் உருவானது. “காங்” (Kang ) என்ற பெயரில் ஒரு வசீகரம் இருந்த காரணத்தால் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததாக அவர் பின்னாட்களில் கூறினார். 

கிங் காங் vs காட்ஸில்லா  

தான் அணு அணுவாக ரசித்து ரசித்து உருவாக்கிய கிங் காங் பாத்திரத்தின் மீதான உரிமை தன்னிடமே இருப்பதாக கூப்பர் நினைத்துக் கொண்டிருந்தார், 1962 ம் ஆண்டின் அந்த ஒரு நாள் வரை.

அன்று காலைச் செய்தித் தாள் விளம்பரத்தைப் பார்த்தபோது கூப்பரின் கண்கள் விரிந்தன. அந்தப் பக்கத்தில்  “கிங் காங் vs காட்ஸில்லா” என்று ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. அதனைப் பார்த்த கூப்பரின் மனதில் அதிர்ச்சி ஏற்பட்டது. தனது கிங் காங், எப்படி தனக்குத் தெரியாமல் காட்ஸில்லாவுடன் மோத முடியும் என்ற கேள்வி எழுந்தது அவர் மனதில். சிறிது நேரத்தில் அதிர்ச்சி குறைந்த பின் மனது கோபத்தால் கொந்தளித்தது. படபடப்பில் நடுங்கும் விரல்களுடன் தொலைபேசியைப் பற்றிப்படி   தனது வழக்கறிஞரை அழைத்தார்.

அடுத்த சில நாட்களில் தனது கிங் காங் திரைப்படத்தைத் தயாரித்த RKO நிறுவனம் தனக்குத் தெரியாமல் கிங் காங் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை ஜப்பானைச் சேர்ந்த டோஹா ஸ்டுடியோஸ் (Toho Studios) நிறுவனத்திற்கு விற்றிருப்பதை அறிந்து கொண்டார். அதுமட்டும் அல்லாமல் கிங் காங் பாத்திரத்தைப் பயன்படுத்தி காமிக்ஸ் புத்தகங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றுக்கான உரிமையைம் RKO நிறுவனம் விற்று லாபம் பெற்று இருந்தது என்பதையும் தெரிந்து கொண்டார். 

திரைப்படம் தயாரிக்கும் போது கூப்பர் அந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு ஒரு சம்பளம் பெற்றுக் கொள்வது என்றும், கிங் காங் பாத்திரத்தின் மீதான தனது உரிமையை தன்னிடமே வைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்து RKO நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தின்படி கூப்பரின் அனுமதி பெறாமல் RKO நிறுவனம் கிங் காங் பாத்திரத்தைக் கொண்டு திரைப்படம் தயாரிக்கும் உரிமையை வேறு ஒருவருக்குக் கொடுக்க முடியாது.

நீதிமன்றத்தில் RKO நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்த கூப்பருக்கு இறுதியில் கிடைத்தது ஏமாற்றமும் மனக்கசப்புமே. 

கூப்பர் கிங் காங் படம் வெளிவந்த பின்னர், இரண்டாம் உலகப் போரில் ஒரு விமானியாகப் பணியாற்றினார். அந்த நாட்களில் அவரிடமிருந்து தொலைந்து போன முக்கியமான ஆவணங்களோடுஅவருக்கு  கிங் காங் பாத்திரத்தின் மேல் இருந்த உரிமையும் தொலைந்து போயிருந்தது.

கிங் காங் : ரீ மேக் உரிமை யாருக்கு?

1975 ம் ஆண்டு. ஹாலிவுட் பெருமளவு மாறியிருந்தது. ஆனால், நியூயார்க் நகரை துவம்சம் செய்யும் கிங் காங் ன் புகழ் சிறிதும் குறைந்திருக்கவில்லை. டீனோ டெலாரன்டிஸ் (Dino De Laurentiis) என்ற இத்தாலிய அமெரிக்க தயாரிப்பாளர் கிங் காங் திரைப்படத்தை ரீமேக் செய்தால் அது மீண்டும் ஒரு ஹிட் திரைப்படமாக அமையும் என்று கருதினார். அவர் ஒரு பெரும் தொகை கொடுத்து RKO நிறுவனத்திடம் இருந்து ரீமேக் உரிமையைப் பெற்றுக்கொண்டார். 

ஆனால் கிங் காங் ன் ரீமேக் உரிமையைப் பெற போட்டி போட்டுத் தோற்று இருந்த  யூனிவர்சல் ஸ்டுடியோஸ் (Universal Studios) நிறுவனத்தால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “கிங் காங் ரீமேக் உரிமை எங்களுக்குக் கிடைக்கும் என்று பேச்சளவில் சொல்லப்பட்டது” என்ற மிகவும் பலவீனமான வாதத்தை வைத்தது யூனிவர்சல் ஸ்டுடியோஸ். 

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வாதங்கள் வைக்கப்பட்டன. அப்போது யூனிவர்சல் ஸ்டுடியோஸ் தங்கள் வெற்றிக்கான முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தனர்.  மற்ற அனைவரும் மறந்து போயிருந்த, கூப்பரின்  நண்பர் டீலோஸ் எழுதி இருந்த  நாவல்தான் அது. அந்த நாவலின் காப்பிரைட் காலாவதி ஆனபின்னர் அது அன்றைய சட்டப்படி புதுப்பிக்கப் படவில்லை. இதனால் அந்த நாவலை காப்பிரைட் பாதுகாப்பு இல்லாமல் பொதுச் சொத்து (Public domain ) ஆகிவிட்டிருந்தது.

இந்த பொதுவுடைமை ஆகிவிட்டிருந்த நாவலைத் தழுவி  தாங்கள் The Legend of King Kong  என்ற பெயரில் அடுத்த திரைப்படத்தைத் தயாரிக்கப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நாவல் பொதுவுடைமை ஆகியிருப்பதால், தங்கள் திரைப்படத்தை காபிரைட்டை கட்டுப்படுத்தாது என்பது அவர்கள் வாதம்.

அதற்கான  தயாரிப்பு வேலைகளையும் தொடங்கினர். யுனிவர்சலின் இந்த முடிவு, பெரும் தொகை கொடுத்து கிங் காங்  ரீமேக் உரிமையை வாங்கி இருந்த டீனோ டெலாரன்டிஸ் க்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

ஆனால் 1976 ல் நீதிமன்றத்திற்கு வெளியே சமரச முடிவு எடுக்கப்பட்டு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. யூனிவர்சல் ஸ்டுடியோஸ் தங்கள் திரைப்படத் தயாரிப்பை அப்போதைக்குக் கைவிட்டனர். டீனோ தனது ரீமேக் படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அந்த கிங் காங் திரைப்படம் வெற்றியும் பெற்றது. 

கூப்பர் வாரிசின் வழக்கு 1976

கூப்பர் 1973 ம் ஆண்டு மறைந்தார். அவரது மகன் ரிச்சர்ட் கூப்பர் (Richard Cooper ) தனது தந்தை இழந்திருந்த உரிமையை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். 

புதிய வாதங்கள் வைக்கப்பட்டன. சாட்சிகள் கொண்டுவரப்பட்டனர். ரிச்சர்டின் தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் நீதிமன்றம் பின்வருமாறு  தன் தீர்பைச் சொன்னது. 

கூப்பர் RKO நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் “கிங் காங்” மற்றும் அதனைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட “சன் ஆப் காங்” (Son of Kong ) திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பின்னாட்களில் RKO நிறுவனம் பிறருக்கு விற்ற கிங் காங் உரிமை கூப்பரின் அனுமதி இன்றி செய்யப்பட்டவை. அத்தகைய அனுமதி வழகிவற்றில் கிடைத்த லாபத் தொகை கூப்பரின் வாரிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

ஏற்கனவே பொதுத் தளத்திற்கு வந்துவிட்ட கிங் காங் நாவல் பொதுச் சொத்தாகவே இருக்கும். ஆனால் கிங் காங் பாத்திரத்தின் மீதான உரிமை கூப்பர் வாரிசுகக்கு உரித்தானது.

பின்னாட்களில் கிங் காங் ன் உரிமையை ரிச்சர்ட் கூப்பர் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் க்கு விற்றார். 

டாங்கி காங் (Donkey Kong) வழக்கு 1983

1980. ஆர்கேட் கேம்ஸ் (Arcade games ) எனப்படும் வீடியோ கேம் விளையாட்டுக்கள் வேகமாக வளர்ந்து வந்தன. நியூயார்க் முதல் டோக்கியோ வரை பொது இடங்கள், பார்கள் ஆகியவற்றில் நின்று கொண்டு இருந்த வண்ணப் பெட்டிகள் முன் வீடியோ கேம் விளையாடும் இளம் தலைமுறை அதிகரித்து வந்தது.

நின்டென்டோ  (Nintendo) என்ற ஜப்பானிய நிறுவனம் உருவாக்கிய டாங்கி காங் (Donkey Kong) என்ற கேம்,, சிவப்பு நிறக் கழுத்துப் பட்டை அணிந்த குரங்கு ஒன்றை மையப் பாத்திரமாகக் கொண்டது. இந்த குரங்கு பாத்திரத்தின் பெயரும் தோற்றமும் கிங் காங் ஐ நினைவுபடுத்தின. புகழ்பெற்ற திரைப்படப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு வீடியோ கேம்ஸ் உருவாக்குவது வழக்கமே. ஆனால்,  கிங் காங் ன் உரிமையை கூப்பரின் மகன் ரிச்சர்ட் கூப்பரிடமிருந்து வாங்கியிருந்த  யூனிவர்சல் ஸ்டுடியோஸ். 

கிங் காங் ன் உரிமை தங்களுடையது என்றும் டாங்கி காங் வீடியோ கேம் தங்கள் காப்பிரைட் உரிமைக்கு எதிரானது என்று வாதிட்டது யூனிவர்சல் ஸ்டுடியோஸ்.  இந்த வழக்கில் நின்டென்டோ சார்பாக வாதாடிய ஜான் கிர்பி (John Kirby ) சிறப்பான முறையில் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.

இந்த வழக்கில் கைக்கொண்ட வழிமுறை சுவாரசியமானது. பழைய கிங் காங் ரீமேக் தொடர்பான  வழக்கில் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் கிங் காங் நாவல் பொதுத் தளத்தில் இருப்பதால் தாங்கள் எடுக்கவிருக்கும் திரைப்படம் காப்பிரைட் மீறல் அல்ல வாதிட்டனர் அல்லவா? அந்த வாதங்களை சுட்டிக்காட்டி, அது நின்டென்டோ நிறுவனத்திற்குப் பொருந்தும் என்றார்.

இந்த வழக்கில் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் தங்களது முந்தைய வழக்கின் வாதங்களுக்கு எதிராக தாங்களே வாதாடியதை நீதிமன்றம் கண்டித்தது. 

கிங் காங் என்ற பெயர் டாங்கி காங் என்ற பெயரில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் கூறி வழக்கை நின்டென்டோ நிறுவனத்திற்கு சாதகமாக முடித்து வைத்தது.

இந்த வழக்கில் வாதாடிய ஜான் கிர்பிக்கு நின்டென்டோ நிறுவனம் “டாங்கி காங்” என்று பெயரிடப்பட்ட சொகுசுப் படகு ஒன்றைப் பரிசாக அளித்தது. 

கிங் காங் யாருக்குச் சொந்தம்?

இன்று யூனிவர்சல் ஸ்டுடியோஸ் ரிச்சரட் கூப்பரிடம் இருந்து பெற்றிருக்கும் சில உரிமைகள் அவர்கள் கிங் காங் தீம் பார்க் அமைத்து தங்கள் படங்களை விளம்பரம் செய்ய உதவுகிறது. 

கூப்பர் வாரிசுகள் சில பதிப்பு உரிமையை தங்கள் வசம் வைத்திருப்பதால் கிங் காங் காமிக்ஸ் புத்தகங்கள் போன்றவற்றைப் பதிப்பிக்கும் உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

பல நிறுவனங்களை விலைக்கு வாங்கியதன் மூலம் RKO நிறுவனத்திடம் இருந்துவந்த கிங் காங் திரைப்படங்கள் மீதான உரிமையை வார்னர் நிறுவனத்தினர் (Warner Bros.)  இப்போது தங்கள் வசமாக்கி இருக்கிராரகள். 

யூனிவர்சல் நிறுவனம் பெற்ற உரிமைகள் என்னவென்பது பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை.

கிங் காங் ன் காப்பிரைட் உரிமை குரங்கு ஒன்று பிய்த்துப் போட்டது போல சிதறிக்கிடப்பதாகவே தோன்றுகிறது. 


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.