350 ஆவது இதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 350 ஆவது இதழ் இன்று (செப்டம்பர் 14, 2025) வெளியிடப்படுகிறது. 2009 இல் துவங்கப்பட்ட பத்திரிக்கை பதினாறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. வணிக நோக்கில்லாமல், விளம்பரங்கள்/ விலை என்று ஏதுமில்லாமல், முழுதும் தன்னார்வலர்களைக் கொண்டு நடக்கும் இந்தப் பத்திரிகையில் பல பதிப்பாசிரியர்கள் பங்கெடுத்து நடத்தியிருக்கிறார்கள். சிலர் தம் சொந்த வாழ்வின் அவசியங்களால் பின்னொதுங்கிக் கொண்டு புது வரவுகளான பதிப்பாசிரியர்களிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சிலர் நீங்கிச் சென்றிருக்கிறார்கள்.

இப்போதிருக்கும் குழுவினர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நிலையாக இருக்கிறவர்கள். பல நாடுகளில் வசிக்கும் இந்தப் பதிப்பாசிரியர் குழுவினரின் இடைவிடாத பங்கெடுப்பாலும், ஊக்கத்தாலும், பத்திரிகையின் நீடிப்பில் அவர்கள் காட்டும் அக்கறையாலும்தான் இந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவருகிறது.

முந்தைய பல முக்கிய கட்டங்களில் வெளியிலிருந்து எழுத்தாளர்களைச் சிறப்புப் பதிப்பாசிரியர்களாக வரவேற்றுச் சில சிறப்பிதழ்களைப் பிரசுரித்திருக்கிறோம். இந்த முறை பத்திரிகையின் பல பதிப்பாசிரியர்களையே முன்னிறுத்தி இதழைக் கொணரத் தீர்மானித்தோம். அதன்படி இந்த இதழில் பதிப்புக் குழுவினரில் இன்று தொடர்ந்து இயங்குவோரும், பின்னிலையில் ஒதுங்கி இருக்கும் சில பதிப்பாசிரியர்களுமாக எழுதியவை, மொழி பெயர்த்தவை இடம் பெறுகின்றன. தவிர இந்தப் பதினாறாண்டுகளில் இந்தப் பத்திரிகையில் அவ்வப்போதும் அடிக்கடியும் எழுதியிருக்கிற சிலரின் படைப்புகளும் பிரசுரமாகின்றன.

துவக்கத்தில் பத்திரிகைக்குப் பரிமளம் சேர்த்த சேதுபதி அருணாசலம், ஹரி வெங்கட், வ.ஸ்ரீநிவாசன், கிரிதரன் ராஜகோபாலன் ஆகியோரின் படைப்புகள் இந்த இதழில் கிட்டுகின்றன. மைத்ரேயனின் மொழிபெயர்ப்பும் உண்டு. தொடர்ந்து பத்திரிகையில் எழுதியும், அவ்வப்போது சிறப்புப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியும் வரும் நம்பியின் மொழிபெயர்ப்புகள், பல வருடங்களாகக் கதைகள், கட்டுரைகளைக் கொடையாகத் தந்து வரும் நாஞ்சில் நாடன், அவ்வப்போது கதைகளை எழுதிக் கொடுக்கும் யுவன் சந்திரசேகர், பாவண்ணன், தொடர்ந்து நாவல்களை எழுதி வரும் இரா.முருகன் ஆகியோரின் படைப்புகள் இந்த இதழுக்கு வலு சேர்க்கின்றன. தவிர கலாப்ரியா, அவருடைய நண்பரும் விமர்சகருமான சொர்ணவேல், சம்ஸ்கிருத இலக்கியத்தைத் தமிழாக்கும் அரிய மொழிபெயர்ப்பாளர் ஜானகி க்ருஷ்ணன், தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்துத் தரும் ராஜி ரகுநாதன், பல ஆண்டுகளாகக் கதை கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொடுக்கும் மாதவன், உலகம் சுற்றிப் பயணக்கட்டுரைகளும், அமெரிக்க அரசியல் பண்பாட்டு மாறுதல்களைப் பற்றி எழுதும் லதா குப்பா, உளவியல்/ சமூகவியல் கட்டுரைகள் எழுதும் பத்மா அரவிந்த், பல்லாண்டுகளாகத் தாவர உலகைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி வாசகருக்கு வாழ்வின் வேறு பரிமாணங்களைக் காட்டித் தரும் லோகமாதேவி, அறிவியல் கட்டுரைகளை எளிதில் அறியும் விதம் உருமாற்றிக் கொடுக்கும் அருணாசலம் ரமணன், கவிதைகளின் பரிமாணங்களை நுட்பமாக விளக்கிக் காட்டும் ந.ஜயபாஸ்கரன், தென்னிந்திய மொழி மற்றும் இந்திய மொழி இலக்கியத்திலிருந்து மொழி பெயர்த்துக் கொடுக்கும் மீனாக்ஷி பாலகணேஷ் ஆகியோர் தவிர எழுத்தாளராகவும், பொறியியலாளராகவும் பங்கெடுத்து உதவும் கார்த்திக் ஆகியோரின் படைப்புகளும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பத்திரிகைக்குப் படைப்புகளாலும், தொழில் நுட்பத்தாலும் உதவும் சிவா கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன் பாலாஜி, அனுக்ரஹா சங்கரநாராயணன், ஷிவ் சங்கர், சாமிநாதன், துகாராம் ஆகியோருக்கும் பதிப்புக் குழுவின் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “350 ஆவது இதழ்”

  1. இந்தப் பெரிய மைல் கல்லை சொல்வனம் அடைந்திருக்கும் தருணத்தில், பதிப்புக் குழுவினருக்கும், படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் கூட மனமார்ந்த வாழ்த்துக்கள். விளம்பரங்களோ, tracking தலைவலிகளோ ஏதுமின்றி, வெறும் சினிமாவும் அரசியலுமாய் அரைத்த மாவையே அரைக்காமல், பற்பல துறைகளை விரிவாக அலச ஒரு நல்ல மேடையை அமைத்துக் கொடுத்திருக்கும் சொல்வனத்திற்கு வாசகர்கள் மற்றும் படைப்பாளர்கள் இரு தரப்பிலிருந்தும் நன்றி! சமீபத்தில்தான் நூறாவது இதழுக்காக கட்டுரை எழுதியது போல் இருக்கிறது! அடுத்து ஐநூறாவது, அப்புறம் ஆயிரமாவது என்று இதழ்கள் தொடரட்டும்!
    -சுந்தர் வேதாந்தம்.

Leave a Reply to சுந்தர் வேதாந்தம்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.