சைவ சமய நாயன்மார் அறுபத்து மூவரில் முடிசூடும் அரசு துறந்து சிவன் திருவடி சூடும் அரசே சிறப்பெனக் கொண்டவர் கூற்றுவ நாயனார். சற்றேறக் குறைய 18,000 பாடல்களைக் கொண்ட பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையான சுந்தரர் தேவாரம் 100 பதிகங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. இவை 84 திருத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றவை. மொத்தம் 1026 பாடல்கள்.
சுந்தரர் தேவாரத்தில் ஏழாவது பதிகம் திருத்தொண்டத்தொகை. திரு ஆரூர் எனும் தலத்தில் பாடப்பெற்றது. அறுபத்து மூன்று நாயன்மாரையும் அட்டவணைப்படுத்தித் தொகுத்துச் சிறப்பித்துப் பாடப்பெற்றது. சுந்தரரின் திருத்தொண்டத் தொகைதான் சேக்கிழாரின் பெரியபுராணம் என்று அறியப்படுகிற திருத்தொண்டர் புராணத்துக்கான மூலப்பிரதி.
‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்றும்,
‘திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்’ என்றும்,
‘இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்’ என்றும்,
‘செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்’ என்றும்,
‘திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்றும் தொகுத்தவர்.
பதினோராம் திருமுறையின் சேத்திரத் திருவெண்பா என்று இருபத்து நான்கே பாடல்கள் கொண்ட நூலை அளித்தவரை, ‘ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்’ என்றார்.
கூற்றுவ நாயனாரைப் பாடும்போது, சுந்தரமூர்த்தி நாயனார், ‘ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தைக் கோன் அடியேன்’ என்பார். கூற்றுவ நாயனாரை, திருத்தொண்டர் திருவந்தாதி பாடுகிறது.
‘நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல
போதம் கருத்தில் பொறித்தமையால் அது கைகொடும்ப
ஓதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோலின் வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே’
எனப் பூரித்துப் பாடுவார் நம்பியாண்டார் நம்பி, பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்.
சேக்கிழார் இயற்றிய, 4253 பாடல்கள் கொண்ட, ‘பெரிய புராணம்’ எனப்படும் ‘திருத்தொண்டர் புராணம்’ ஏழு பாடல்களால் கூற்றுவ நாயனார் புகழைப் பாடுகிறது.
திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் காலம் ஏழாம் நூற்றாண்டு என்பதால் கூற்றுவ நாயனார் காலம் அதற்கும் முந்தியதுதானே! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக நின்றிருக்கிறார்தானே, அரசு கட்டில் துறந்து ஆன்மீகக் கட்டில் அகப்பட்டு? அவ்விதம் சித்தனாகவும் பித்தனாகவும் முத்தனாகவும் இறைப் பத்தனாகவும் நின்றோர் பலர்.
உதாரணத்துக்குப் பத்திரகிரியார்.
‘உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்?’
என்பதவர் மெய்ஞ்ஞானப் புலம்பல்.
அஃதே போல் சேரமன்னன் குலசேகரன். அவர் காலம் எட்டாம் நூற்றாண்டு. முடிசூடிய மன்னன் திருமாலின் அடிசூடிய தொண்டரானார். குலசேகர ஆழ்வாரும் ஆயினார். இன்றைய கேரளத்தின்பாற்பட்ட திருவஞ்சிக்களம் எனும் ஊரில் அவதரித்தவர். திருவஞ்சிக்களம் கொடுங்கல்லூர் பக்கம் அமைந்த ஊர். கொடுங்கல்லூர் பகவதி வழிபாட்டுச் சிறப்புக்குரியவர். குளத்துப்புழை பகவதி, ஆற்றுகால் பகவதி. மண்டைக்காடு பகவதி. முப்பந்தல் பகவதி. கன்னியாகுமரி பகவதி. பூக்குளத்தி பகவதி. மீன்குளத்தி பகவதி. சோட்டாணிக்கரை பகவதி. மேலாங்கோடு பகவதி, காடம்புழை பகவதி போன்ற பல பகவதிகளும் சிறப்புக்குரியவர்.
கொடுங்கல்லூர் பகவதி கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திருவஞ்சிக்களம் சிவன் கோயில். சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களில் இத்தலம் திருஅஞ்சைக்களம் எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. சுந்தரர் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்.
“தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைந்தது என்னே
அதன்மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கும் நிகர் ஒப்பன வன்திரைகள் வரித்து
எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலம் கரைமேல் மகோதை
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே!”
என்பது முதற்பாடல். கதநாகம் என்றால் சினமுடைய நச்சரவம்.
திருவஞ்சிக்களத்து குலசேகர ஆழ்வார் பாடிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் 105. அவை பெருமாள் திருமொழி எனப்படும். பெருமாள் திருமொழியில் குலசேகரப் பெருமானின் பாடல்கள் அற்புதமான கவித்துவம் கொண்டவை. தமிழ்ச் சொற்களின் நுட்பமான செல்வாக்கு மிகுந்தவை.
குலசேகர ஆழ்வார் பாடிய ஒரு பாடல், நீலாம்பரி ராகம், திரிபுடை தாளம், பாவினம் – தரவு கொச்சக் கலிப்பா.
“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய், செம்பொன்சேர்
கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”
என்பது முழுப்பாடல்.

இந்தப் பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அற்புதமாகப் பாடக் கேட்டிருக்கிறேன். அதற்கும் முன்பு சஞ்சய் சுப்பிரமணியம் பாடியும் ஐதராபாத் சகோதரர்கள் பாடியும் கேட்டதுண்டு.
பெருமாள் திருமொழியில் ‘திருவேங்கட மலைத்தொடர்பு வேண்டல்’ பகுதியில் 11 பாடல்கள். முன்பு சொன்ன பாவினம், இராகம், தாளம்.
“ஊனேறு செல்வத்து உடற் பிறவியான் வேண்டேன்’ என்பது முதற்பாடலின் முதல்வரி. “கோன் ஏரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே” என்பது நான்காம் அடி. செல்வத்தை ஊனேறு செல்வம் எனத் துச்சமாகக் கருதுகிறார். ஒரு குருகாய்ப் பறப்பது அதைவிட ஆனந்தம் என்கிறார்.
“ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!”
என்பார் இரண்டாவது பாடலில்.
ஐந்தாவது பாடலில்,
“கம்ப மதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே”
என்று இறைஞ்சுகிறார். கம்ப மதயானை எனில் இரைந்து பிளிறும், நடுக்கம் தரும் ஓசை எழுப்பும் மதம் பிடித்த யானை எனப் பொருள். மேல் விபரம் வேண்டுவோர் எனது ‘கம்பலை’ எனும் கட்டுரை காண்க!
அடுத்த பாடலில் மொழிவார் –
“மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்”
என்று தெளிவாக.
“தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே”
என்பார் ஏழாவது பாடலில்.
“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியவனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே”
என்கிறார் ஒன்பதாவது பாடலில். ஆழ்வார்கள் பாடலைத் தொழில் நிமித்தம் எடுத்தியம்பும் எவரும் இப்பாடலைக் கடந்து செல்ல மாட்டார்கள்.
செடியாய வல்வினைகள் என்றொரு கட்டுரை உண்டு எமது தொகுப்பு ஒன்றில். செடி எனும் சொல்லின் பொருள் இங்கு தாவரம் அல்ல. Negative Energy என்பது பொருள்.
“உருப்பசிதன் அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்” என்பார் பத்தாம் பாடலில். ஊர்வசியின் பொன்னால் செய்தது போன்ற கலைநயமுள்ள அழகான அல்குல் கிடைத்தாலும் வேண்டேன் என்று பொருள். அல்குல் எனும் சொல்லுக்குப் பொருளறியாதவர் நாஞ்சில் நாடனை வாசிக்கத் துணியமாட்டார்கள்.
இப்படியும் ஞானியர், புலவர், அடியார் இருந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. செத்ததற்குப் பின்னர் கடற்கரையில் ஐந்து ஏக்கர் நிலமும் சமாதியும் அழகிய மணிமண்டபமும் கேட்கவில்லை. பலான நடிகையுடன் ஓரிரவு படுத்து எழுந்துவர வேண்டவில்லை. பசிபிக் மகா சமுத்திரத்தில் இருநூறு ஏக்கர் பரப்புள்ள தீவும் ஆங்கோர் மாளிகையும் விசைப்படகும் கணிகையரும் சொந்த விமானமும் கேட்கவில்லை. சில லட்சம் கோடிகள் சொத்துக் கேட்கவில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரும்பினார் இல்லை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் என்று அறியாமல் சேவடி தொழுது சேவகம் செய்து செல்வாக்குப் பெற முனைந்தாரில்லை.
என்ன ஆச்சரியம் எனில், மாமன்னர்கள் சிற்றரசர்கள் ஜமீன்கள் பலரும், பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காடுகளும் மலைகளும் வயல்வெளிகளும் ஆறுகளும் ஏரிகளும் உடமையாகக் கொண்டிருந்தாலும் இன்று எங்கே அவர்? எரி தின்று, புழுத்தின்று, முகவரி அற்றுப் போனார்கள். சவம், பிணம், பிரேதம், உடல், அல்லது பாடி எனப் பெயரிடப்பட்டனர்.
ஆனால் குலசேகர ஆழ்வார் போன்றவர், ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர், தனது பாடல்கள் மூலம் இன்றும் வாழ்கிறார். பக்தி மார்க்கத்திலும், இலக்கிய வரிசையிலும் அவர் வேண்டியது எல்லாம் – திருவேங்கடத்து ஏரியில் மீனாக, கானகத்தில் குருகாக, மலைமேல் பெரு விருட்சமாக, காட்டாறாக, திருவேங்கடவன் கோயில் வாசலில் படியாக… அவற்றைப் பெரும் பேறாகக் கருதித் தொழுதிருக்கிறார்.
நாமோ இப்பிறப்பு போனால் ஏழேழ் பிறவிக்கும் எம்முயிர்த் தமிழ்நாட்டில் நடிகனாய், நடிகையாய், இயக்குநராய், தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய் பிற அல்லறை சில்லறை ஆட்களாய் ஆகும் தவத்தில் இருக்கிறோம்.
அமைச்சர் கூட ஆகவேண்டாம், வார்டு கவுன்சிலர் பதவியாவது கிட்டினால் போதும் என்ற நோன்பில் கிடக்கிறோம்.
“செத்தாலும் சினிமாவில் நடித்துச் சாதல் வேண்டும்
எத்தாலும் தலைவராகிச் சொத்து சேர்க்க வேண்டும்”
என்று எங்காவது பக்திப் பாடல் எழுதுவார் அதிவிரைவில்!
உருகிப் பாடுவார் சுந்தரர் –
“வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்”
என்று.
அறிந்திருந்தே கொள்ளை அடித்துக் குலம் பெருக்குகிறார்கள்!
அப்பர் பெருமான் பாடினார்,
“பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே!”
என்று.
பெருமான்கள் சொன்னதைத் திரும்பச் சொல்வதன்றி நம்மால் ஆவதென்ன?
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

கடற்கரை சமாதி – மணிமண்டபம் அழுது அரற்றி அடி பணிந்து தொழுதேத்தி பெறப்பட்டு, … அவரெல்லாம் நீரில் மூழ்கிடுவர் நாளதில்…
அரனடி தொழுதார் – அல்குல் மறுத்தார் – அவனருளாலே
அவன் தாள் வணங்கி, அமரர் ஆயிடுவர். என்னே உருக்கம்:
நயப்புடன் – நகைவர நாஞ்சிலாரின் – நடைச் சிறப்பை நவில்வது எஞ்ஞனம்?