மதியொன்றில்லை..

“என்னடா தேச்சு இது வண்டிப்புழுதியா வந்துண்ட்ருக்கு  இதுல எப்படி நீ காரை ஓட்டிண்டுவரியாம்?” என்ற ருக்மணியின் கவலையான கேள்விக்கு தேசிகன்  முதலில்  சிரித்தான் பிறகு,” அம்மா!  நாமெல்லாம் மாறினாலும்  நாம் இருந்த ஊர் மட்டும் மாறவே இல்லைங்கிறது இதனால தெரியறது இல்லையா?” என்றான்.

“என்னவோ  போ , இத்தனை நாள்  கழிச்சிவரோம். அதுவும் உனக்கு பத்துவருஷம் கழிச்சி ஜாம்ஜாம்னு ஆம்பளப்பையன் பொறந்ததுக்கு வேண்டுதல் செலுத்த தாமரைக்கண்ணன் கோயிலுக்கு குடும்பத்தோட வந்துருக்கோம் நல்லபடியா அதை முடிச்சி ஊர் திரும்பணும். ஆமா …கோயில் பட்டாச்சாரிக்கு சொல்லிட்டியா நாம் வரப்போறதை? எங்கியாவது கோயிலை மூடிண்டு போயிடப்போறார்…..நாமும் ஊரைவிட்டுப்போய்  இருபது வருஷத்துக்கு மேலாச்சு அதே  நர்சிம்ம பட்டாச்சார் தானே இன்னமும் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கார்?” என்று ருக்மணி ஒரே மூச்சில் தன் சந்தேகங்களை தெரிவித்தாள்.

“சித்த பேசாம வாயேண்டி. சென்னைல கிளம்பினதிலேருந்து லொடலொடன்னு பேசிண்டே வரே.. குழந்தை தாம் தூங்கிண்டு இருக்கு. வசுதா வேற அமெரிக்காலேருந்து நாலுநாள் முன்னாடிவந்து ஜெட்லாக் ல திண்டாட்றா… ” என்று சீறினார் மகன் அருகில் அமர்ந்திருந்த திருமலை.

“அம்மாக்கு  அந்த நாள் ஞாபகம் வந்தா இப்படித்தாம்ப்பா.. இருபது வருஷம் முன்னாடி  வரைக்கும் நீங்களும் அம்மாவும்  வாழ்ந்த இடம் இல்லையா? பசுமையான காவிரிக்கரையை விட்டு எப்படித்தான் நீங்க உங்கஃப்ரண்ட்கூட பிசினஸ் பண்றதுக்கு பம்பாய் போனீங்களோ? அப்போ தான் நானும் பத்தாவ்து முடிச்ருந்தேன் ப்ளஸ் டூவிலிருந்து  பி ஈ வரை பம்பாய்தான்னு ஆகி எம் எஸ் படிக்க அமெரிக்காவும் போய் அங்கயே வேலையும் கிடச்சி கல்யாணமாகி செட்டிலாயிட்டேன்.அம்மா வேண்டிண்டதால இங்க  பிரார்த்தனைக்கு வரதோணித்தே ஒழிய நடுல நாம வரவேஇல்லையே!.. அது தப்புதான் , அதுக்கும் சேர்த்து தாமரைக்கண்ணனுக்கு பிராயச்சித்தம் செய்துடணம்”

”கண்டிப்பா!  பெருமாளூக்கு வஸ்திரங்கள், தாயார் தங்கக்கொடி நாச்சியாருக்கும்  புடவை வாங்கிட்டேன்..துலாபாரத்துக்கு வேண்டிண்டபடி உருண்டை வெல்லம் பைல  இருக்கு, பூ பழம் ட்ரைப்ரூட்ஸ் எல்லாம் ஏகத்துக்குக்கொண்டுவந்துட்டேன்..:

”அம்மா ! நாம் குடி இருந்த ஆத்தைப்பாக்கணும்  இடிச்சிகிடிச்சி கட்டியிருப்பா..  முதல்லகாவேரிலகுளிக்கணும்… அப்பலாம் இந்த தங்கனூர்லேருந்து ஜீயபுரம்வரைகும் நான் ஃப்ரண்ஸ் கூட நீச்சலடிச்சிண்டேபோய்டுவேன்.”

 ”அப்போ  காவேரில ஜலம் இருந்ததுடா இப்போ இருக்கோ என்னவோ  பம்பாய்மாதிரி இங்க  மழை கொட்டறதில்லையே?”

”இல்லம்மா ஆடிக்கு ஜலம் விட்டுருக்கா  கிருஷ்ண ராஜ சாகர்ல ரொம்பி வழியறதாமே? அதனால திருச்சிபக்கம் காவேரி ஓட்டமாதான் ஓடிண்டிருக்கா”

அப்போது அந்த மண் சாலையில் இடதுபுறமாக சிறிய வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருந்ததை கவனித்த வசுதா, “ஆமாம் காவேரில தண்ணி இல்லேன்னா வாய்க்கால் இப்படி ஓடுமா அங்கபாருங்கோ” என்று குதூகலமாய் கூவினாள். அந்த வாய்க்காலில்கிராமத்துச் சிறுவர்கள் சிலரும், சிறுமியர் சிலரும் குதித்து நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

தேசிகனும் அதை ரசித்துப் பார்த்தபடி ”இப்படித்தான் வசு, நான் சின்ன வயசுல வாய்க்காலை ரெண்டு பண்ணுவேன் என்கூட எல்லா நேரமும் இருந்து நான் சொல்றதையெல்லாம் கேட்பான் ஜகு என்கிற ஜகன்னாதன். அவன் தான் கோயில் பட்டாச்சாரி பையன். இப்போ இதே ஊர்ல இருக்கானோ இல்லேன்னா வேற ஊர் , வெளி தேசம்னு போய்ட்டானோ ? என்னவோ நானும் பம்பாய் போனப்றம் தங்கனூர் ஃப்ரண்ட்சையே மறந்துட்டேன் காலேஜ், புது சகவாசத்துல பழையதெல்லாம் மறந்தே போய்ட்டேன். ”

”ஆமாண்டா   அப்போல்லாம் எனக்கும் இங்க எவ்வளோ சிநேகம் ! என்னவோ போ திருச்சி டவுன்ல ஜவுளிக்கடைல வேலைபார்த்துண்டு இருந்தவனை பம்பாய்ல சொந்தமாய் டெக்ஸ்டைல் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு ஒருவடக்கத்திக்கார நண்பன் கூப்படவும் உங்க ரெண்டுபேரையும் அழைச்சிண்டு இங்கேருந்து ஓடவேண்டியதா போச்சு”

வருத்தமான குரலில் திருமலை சொல்லவும்”இப்ப என்ன குறைஞ்சு போச்சு? அங்கபோயி  பிசினஸ்ல கொடிகட்டிதானே பறக்கறேள்? திருமலை டெக்ஸ்டைல்ஸ் அப்படீன்னா மும்பைக்கே தெரியறதே! ஆனா  நடுல இங்க ஒருதடவை வந்திருக்கலாம் அதுவேணா தப்புன்னு சொல்லுவேன். அப்போதைக்கிப்போதேன்னு ஆழ்வார் சொன்னமாதிரி இன்னமும் தாமதம் பண்ணாம குழந்தைக்காகவாவது இங்கவந்தோமேன்னு நினச்சிக்ணும். சரிசரி, ஊருக்குள்ளயே வந்துட்டோம்.  அதோ கோயில் கோபுரம் தெரியறது.. யாராத்லபோய் காரை நிறுத்தறது ? அதுக்குதான் நரசிம்ம பட்டாச்சாரிக்கு போன்பண்ணி தெரிவிச்சியான்னு கேட்டேனேடா தேசிகா?” ருக்மணி பரிதவிப்புடன் கேட்டாள்.

”கூகுள்ள கோயில் நம்பர் பார்த்து பண்ணேன்மா..யாரோ பட்சிராஜன்னு பேசினார் நரசிம்மபட்டருக்கு உறவாம்,  ’வாங்கோ அதே ஆகம்’ தான்னார்”

”கோயிலை ஒட்டின ஆகம்  நேக்கு நெனவிலிருக்கு.” திருமலை உற்சாகமாய் சொல்லவும் அங்கே போய் காரை நிறுத்தினான் தேசிகன். எதிர்வீட்டிலிருந்து ஒரு தலை எட்டிப்பார்த்து உள்ளே போய்விட்டது. பசுமாட்டினை கன்றுக்குட்டியோடு ஓட்டிக்கொண்டுபோன ஒரு சிறுவன் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

 இருபது வருஷம் முன்பு பார்த்தஅதே ஓட்டு வீடு  காரைபெயர்ந்த வாசல் திண்ணை. எண்ணைக்கறை கொண்ட பிறைகள்.

கார் நின்றதும்.”வாங்கோ !வாங்கோ !    நீங்க வரப்போறீங்கோன்னு  ஆத்துல எல்லாரும் சொல்லிட்டா.. உங்க போன் வரப்போ நான் காவேரிக்கு  பெருமாளுக்கு திருமஞ்சனதீர்த்தம் கொண்டுவரப் போயிருந்தேன்”என்று வாசலில் கைகுவித்தபடி இருபது வருஷம் முன்பு பார்த்த அதே ஏழ்மைக் கோலத்தில்  குள்ளமாய், மெலிந்த தேகமுடன்  முன் வழுக்கை விழுந்த நெற்றியில் பளிச் என்ற  திருமண்ணுடன் சற்றே தூக்கிய பற்கள் தெரிய புன்னகையுடன் வரவேற்றவரை திகைப்புடன் பார்த்தான் தேசிகன்..

”அட! நரசிம்மபட்டர் மாமாவா!   இருபது வருஷம் முந்தி நான் பார்த்த மாதிரியே இருக்கேள்!” என்று   வியப்பில் கூவிவிட்டான்.

“ நரசிம்மபட்டர் பரமபதிச்சி  பல வருஷம் ஆச்சே ! அவர் பையன் ஜகன்னாதன் இவன்… நான்  நரசிம்மபட்டரோட  தம்பி பட்சிராஜன். குழந்தைகுட்டி இல்லாத என்னை ஜகுதான்  அவனோட ஏழ்மை நிலையிலும்  ரெண்டு பொண் குழந்தைகளையும் வச்சிண்டு  ஆதரிக்கிறான். நானும் ஏதோ கோயில் கைங்கர்யத்துல அவனுக்குக் கூடமாட ஹெல்ப் பண்ணுவேன்” என்று உள்ளிருந்த வாசலுக்கு வந்த நடுத்தரவயது மனிதர்  சொல்லி முடித்தார்.

 தேசிகன் கண்மலர்ந்தான்.” ஜகுவா இது? அப்படியே உங்கப்பாவை அதாவது சாட்சாத் நரசிம்மபட்டரை திரும்பப் பாக்றாப்ல இருக்கு! அதிருக்கட்டும், டேய் ஜகு,  நான் யார் தெரியறதாடா?” என்று ஆர்வமுடன் கேட்டான்.

ஜகு உடம்பைக்குறுக்கிக்கொண்டபடி தயக்கமுடன் நெளிந்தான்.தேசிகனை கூர்ந்துபார்த்துவிட்டு வெட்கத்துடன் ” தெரில்லயே மன்னிக்கணும்… வயசாச்சோல்லியோ?” என்றான் மென்மையான குரலில்.

“ முப்பத்தி ஏழு வயசெல்லாம் ஒரு வயசாடா? டேய் ஜகு!  நான் உன் உன்கூடப் படிச்சவண்டா  காவிரில நீச்சல்போட்டு ஜீயபுரம் வரை போய் வருஷம் ஒருநாள் முன்பு எப்போதோ ஒரு கிழவிக்கு அவன் பேரன் வடிவில் போய் தீந்தயிர் சோற்றுடன் கீரை   சாப்பிட எழுந்தருள்வாரே ஸ்ரீரங்கம்  ரங்கநாதர்! அவரை விழுந்து விழுந்து சேவிச்சுட்டு வருவோமே மறந்துட்டியா?”

அவ்வளவுதான்  உடனேயே ஜகு கண்மலர்ந்தான். ஒட்டிய கன்னங்களில்  உற்சாகம் கொப்பளிக்க “தேசிகா!  தேச்சுவா? என்னடா இப்படி வெளிநாட்டுக்காரா மாதிரி சேப்பா பளபளன்னு இருக்கே! அப்போவே நீ நல்ல நெறம்தான் ஆனா இப்போ ரொம்ப ஜோரா இருக்கே..அடையாளமே தெரில்லடா  ஸாரிடா தேச்சு.”

“நான் தாண்டா ஸாரி சொல்லணும்  ..இத்தனை நாளா ஊர்ப்பக்கம் வராமயே இருந்துட்டேன்  கல்யாணமாகி பலவருஷம் குழந்தையே இல்லை.ஏதேதோ வைத்தியம் பார்த்தோம் அப்பத்தான் ஞாபகம் வந்து, தாமரைக்கண்ணனை மறந்துட்டேமேன்னு உடனே  வேண்டிண்டுதான் பத்துவருஷம் கழிச்சி குழந்தை பிறந்திருக்கான் தாமரைக்கண்ணன்னுதான் பேர் வச்சிருக்கோம் .  ‘தாம்’  அப்படீன்னு அமெரிக்கால கூப்பிட சௌகர்யமா  சுருக்கினாலும்  நெல்லுல  தாமரைக்கண்ணன் தான் பெயர் எழுதி காதுலயும் மூணுதடவ  சொன்னோம்”

வந்திருப்பது பழைய நண்பன்  என்றதும் ஜகு ஓடி ஓடி உபசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான் . வந்தவர்களுடன் அவன் மனைவியும் குழந்தைகளும் பிரியமுடன் பேசினர். ஏழ்மை தாண்டவமாடும்  நிலையிலும் குசேலரைப் போல அதைப்பற்றி யாருமே பிரஸ்தாபிக்கவில்லை. .

கோயிலில் பிரார்த்தனைக்கான துலாபாரம் முடிந்தது. , திருமஞ்சன சேவை அலங்காரம் அர்ச்சனை  என்று  எல்லாம் முடிந்து ஜகுவின் இல்லத்தில் அவன் மனைவி அபிஷேகவல்லி  தளிகை செய்து போட்டஅக்கார அடிசில் தயிர்வடை புளியோதரை எனத் தரையில் அமர்ந்து தலைவாழை இலையில் விருந்தும்  சாப்பிட்டுமுடிந்தபின் தனிமையில் தேசிகன் தாசரதியிடம் கேட்டான்.

“ஏண்டா ஜகு நீ  மேலபடிச்சி நல்ல வேலைக்குப் போகலையா உன் அப்பா மாதிரியே கோயில் கைங்கர்யமே போதும்னு நீதான் முடிவெடுத்தியா?” 

”தேச்சு! என்னடா இப்படி கேக்கறே? மறந்துட்டியா? காவேரில நாம் நீச்சல் அடிச்சிண்டு இருக்கறப்போ  அன்னிக்கு ஒருநாள் அதாவது நீ ஊரைவிட்டுப்போறதுக்கு முன்னாடி  சொன்னதை நான் மறக்கலடா.”

“ ஆ..  என்ன சொன்னேன் மறந்தேபோயிட்டேனே?”

 “ ’இந்த தாமரைக்கண்ணன் லேசுப்பட்டவர் இல்லடா. பத்தாவதுல ஸ்டேட் ஃபஸ்ட் வரணும்னு வேண்டிண்டதை நிறைவேத்திட்டாரே! அவரை சேவிச்சாலே மனசு நிறைஞ்சிபோயிட்றது  அதனால உங்கப்பா மாதிரி நீயும் இதே கோயில்ல   எப்பவும் இதே பெருமாளுக்கு   ஆத்மார்த்தமாய் கைங்கர்யம் பண்ணனும்டா!  இந்த பாக்கியம் எல்லார்க்கும் கிடைக்காத, படிப்பு என்னடா  படிப்பு,..பகவானுக்கு செய்றதுதான் உசத்தி,’அப்படீன்னு சொன்னியே!  அதை நான்  சத்தியவாக்கா  ஏத்துண்டேன். அதனாலதான் நான் பத்தாவதுக்கு மேல படிக்கல.   அப்பாவும் எனக்கு  இருபத்திரண்டு வயசு இருக்கறப்போ ஹார்ட் அட்டாக்ல பரமபதிச்சுட்டார். குடும்பத்தையும் கவனிக்கற பொறுப்பு வந்தது. ஆனா, கோயிலைப்பார்த்துக்கணும்னு. எப்பவும் என்  சிநேகிதன் தேசிகன்  சொல்லைக்காப்பாத்திண்டு இதே ஊர்லயே இருக்கேன் என்கிற மனசு நிறைவா வாழ்ந்துண்டுவரேன்.”

 எப்போதோ  தான் சொன்னதை மதித்து  அதனாலேயே உத்தியோகம் தேடி வெளியூரெல்லாம் போகாமல்  ஊரோடு கிடக்கும் ஜகுவின் அந்த மெலிந்த குள்ள உருவம் தன் முன் விஸ்வரூம் எடுக்கவும் தேசிகன்  வாயடைத்துத்தான் போனான். அவனிடம் இப்படிச் சொன்னதையே மறந்து மேற்படிப்பு உயர்ந்த உத்தியோகம் அமெரிக்கா டாலரில் பணம் என்றிருந்த  தன்னை அவனுடன் ஒப்பிட்டபோது தனது ஆறடி உயரத்திற்குமுன்  வாமனனாய் வந்து ஓங்கி உலகளந்தவனாய், உத்தமனாய்  ஜகு தென்பட்டான்!’

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை
,இரும்புபோல் வலிய நெஞ்சம்* இறை-இறை உருகும் வண்ணம்,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,*
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண்ணினை களிக்கு மாறே!

ஆழ்வார் பாசுரவரிகள் தனக்காகவே எழுதினமாதிரி இருந்தது.

கண்கள் பனிக்க ஏறிட்டு அவன் தோளை ஆதரவாய்த்தட்டினான்  .

மாலை அனைவரும் காரில் கிளம்பும்போது ,”அடிக்கடி இங்க வரணும்..இந்த தாமரைக்கண்ணனை சேவிக்கணும்” என்று தேசிகனின் அருகே வந்து மென்மையாய் கேட்டுகொண்டான் ஜகு. 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மதியொன்றில்லை..”

  1. மதியொன்றில்லை

    மனதில் ஆழ்ந்த பல நினைவுகளை கிளர்ந்து எழச்செய்த உயிரோட்டமான எழுத்து.

    நன்றி 🙏

    இப்பதிவை உள்வாங்கும் பலரோடு,
    பல்பதின்ம வயது தாண்டிய அடியேனும் பழைய நினைவோட்டங்கள் ஊடாட,
    இமையோரங்களில் கண்ணீர்த் துளிகள் பனிக்க …

    அருமையான எழுத்துக்கு மீண்டும் வந்தனம். 🙏

    பாஸ்கரன்

Leave a Reply to பாஸ்கரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.