பேய்ச்சி – பேரன்பும் பெருவெறியும்

ம.நவீனின் நாவல் பற்றி

“மழலைச் சொல் கேட்கவே செவிகள். அவர்களிடம் கொஞ்சிக் குழையவே குரல். அன்னையன்றி பிறிதாக ஒருகணமும் இருந்ததில்லை அவள். 

பித்தியென்றும் பேய்ச்சியென்றும் பாழ்நிலத்துப் பாவையென்றும், முலைகொண்ட அன்னையில் எழுந்தது பலிகொண்டு கூத்தாடும் பெரும்பேய்வடிவம்”  – நீலம்[வெண்முரசு]

நீலம் நாவலில் வரும் இந்த வரிகளில் அன்னை எனக் கனிந்துருகி நிற்பதும், பேய்ச்சியென  வெறிகொண்டு பழிவாங்கி நிற்பதும் பூதனை என்னும் ஒரே பெண்மையின் இருவேறு முகங்களே. பெண்மையின் இந்த இருமைக் குணம் நம் மரபில் என்றுமிருப்பது. காத்தலும், தன்னறம் காக்க கொடுவாளேந்தி அழித்தலும் பெண்மையின் உள்ளுறையும் ஆதாரவிசை. அது இனம், மொழி, காலம், பண்பாடு, சமூக நெறிகள் என அனைத்தையும் கடந்து என்றும் இங்கு நின்றிருக்கும் என்னும் மையத்தரிசனத்தை  முன்வைக்கும் சிறந்த படைப்பாக எழுத்தாளர் ம.நவீனின் பேய்ச்சி அமைந்திருக்கிறது.    

நாவல் என்பது அடிப்படையான தரிசனம் அல்லது எதிர்தரிசனம் ஒன்றை முன்வைக்கும். வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் தொட்டு அதை விவாதித்து, அதற்குரிய  தொகுப்புத் தன்மையும் உள்விரிவும் கொண்டதாக அது இருக்கும் என்று நாவலுக்கான அடிப்படையை வரையறுக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழின் ஆசிரியருமான ம.நவீனின் முதல் நாவலான பேய்ச்சி. இந்நாவல் 1980-களில் மலேசியாவின் லூனாஸ் தோட்டப் பகுதியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களின் பின்னணியில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற மக்கள் புதிய மண்ணில் நிலைகொண்ட வரலாற்றையும், அவர்களின் நாட்டார் தெய்வ வழிபாடு, மரபு மற்றும் சமூக நெறிகள் புதிய சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு மாற்றமடைந்தும் தொடர்ந்தும் வரும் சித்திரத்தையும் மூன்று தலைமுறை கதைகள் வழியாக நமக்குச் சொல்கிறது. மலேசியாவின் காடுகளைத் திருத்தித் தோட்டம் அமைத்து அங்கு நிலைகொள்ளப்  போராடும் மக்கள், ரப்பர் தோட்டங்கள் அழிந்து செம்பனைப் பண்ணைகளாகும் வரலாற்று பொருளாதார மாற்றங்களினால் தோட்டம், கம்பம், நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். புலம் பெயர்ந்து வந்து சேர்ந்த மக்கள் இனி இது தான்  தங்களுக்கான மண், இங்குள்ளதே சுற்றம் என நினைத்து அங்கு வேரூன்ற போராடும் சூழலில், வேறுபட்ட பின்னணி கொண்ட வெவ்வேறு வாழ்க்கைப்பார்வைகளின் மோதல்களாக அவர்களின் கதையை சொல்கிறது பேய்ச்சி. 

நாவல் 1981,1999 மற்றும் 2019 என மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலாக நடக்கும் கதையை, காலத்தில் முன்னும் பின்னும் சென்று நமக்குச் சொல்கிறது. 1999ல் ராமசாமியின் வீட்டில் ஓலம்மாவின் பேரன் அப்போய்க்கான வழிபாட்டுடனும் சிகிச்சையுடனும் துவங்கும் கதை, 2019ல் அதே ராமசாமியின் வீடு பேய்ச்சியின் கோயிலாக மாறி அங்கு குழந்தை வேண்டி வந்து வழிபடும் அப்போய் மற்றும் அவன் மனைவி மாலதியுடன் முடிகிறது.  ஓலம்மாவும் ராமசாமியும் நாவலின் மையக் கதாபாத்திரங்கள். ராமசாமியின் தந்தை கொப்பேரன், தாய் காத்தாயி, ஓலம்மாவின் கணவன் மணியம், மகள் முனியம்மா, பேரன் அப்போய், அவனுடைய நாய் கருப்பன் மற்றும் அவர்களோடு இணைந்து மலேசிய காடுகளின் பசுமையும் கித்தா மரங்களும் பூனியா கம்பமுமென அத்தனை கதாபாத்திரங்களும், சூழலும் நம்மை கதைமாந்தரோடும் கதைக்களத்தோடும் உணர்ச்சிப்பூர்வமாக பிணைத்து விடுகின்றன.

தமிழகத்தில் தள்ளுருக்கெவ எனும் மலைகிராமத்தில் மருத்துவராக வாழும் கொப்பேரன் பேய்ச்சியின் மீது உண்மையான பக்திகொண்டவர். கனிவான அன்னையின் வடிவாகவே பேய்ச்சியைக் கண்டவர். கழுகுமலையிலிருந்து மருத்துவத்திற்காக வரும் காத்தாயியை அவர் மணந்து கொள்கிறார். அவர்களின் ஐந்து பெண் குழந்தைகளுமே பிறந்து சில நாட்களிலேயே மர்மமாக இறந்துவிடுவதால் கடும் மனவேதனை கொள்ளும் கொப்பேரன், காத்தாயியின் சொந்த ஊருக்குச் சென்று அவளைப் பற்றி அறிய முற்படுகிறார். வாயில் பச்சிளங்குழந்தையைக் கடித்தபடி வீற்றிருக்கும் பேய்ச்சியின் இன்னொரு முகத்தைக் கண்டு அஞ்சி, காத்தாயியை அந்தப் பேய்ச்சியெனவே எண்ணுகிறார். ஆறாவது குழந்தையாக  ராமசாமி பிறந்ததும், யாருக்கும் தெரியாமல் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு தப்பியோடி, எங்கெங்கோ பயணம் செய்து மலேசியாவிற்கு வந்து சேர்கிறார். காட்டில் ஒருநாள் தன்முன்னே பத்தி விரித்து நின்றிருக்கும் ராஜநாகத்தைக் கண்டு, அது பேச்சியின் ஆணையெனக்கொண்டு மீண்டும் மருத்துவத்தைத் தொடங்குகிறார். ராமசாமி சிறுவயது முதலே அவரது பெண்தன்மையினால் பொட்டை என்று அனைவராலும் கேலிசெய்யப்படுவதால் தனிமையிலேயே இருக்கிறார். தன் தந்தையிடமிருந்து மூலிகைகளையும் மருத்துவ சூத்திரங்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலமாகவே தனக்கான மதிப்பை ஈட்டிக்கொள்கிறார்.

ஓலம்மா தமிழகத்திலிருந்து பஞ்சம்பிழைக்கப் புறப்பட்டு வரும் தன் தாய் தந்தையுடன் கப்பல் வழியே மலேசியா வந்து சேர்கிறாள். வரும் வழியிலேயே கப்பலில் நோயுற்று இறந்துவிட்ட தந்தையின் சடலம் அவள் கண்ணெதிரே கடலில் வீசப்படுவது என்றென்றைக்கும் கடல் மீது அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆதரவற்ற சிறுமியாக மலேசியா வந்திறங்குவதில் தொடங்கி இறுதிவரை தன் உழைப்பை மட்டுமே நம்பி அவள் வாழ்கிறாள். எவனோ ஒரு யாழ்ப்பாணத்து மேனேஜரால் ஏமாற்றப்பட்டு அறியாத வயதில் கர்ப்பமாகும் அவள், எப்படியோ லூனாஸ் கம்பத்தின் ஆயெர் தோட்டத்தை வந்தடைந்து, அந்த தோட்ட மக்களின் அன்பையும், ராமசாயின் நட்பையும்  பெற்று அங்கு தன் மகன் குமரனைப் பெற்றெடுக்கிறாள். தன் கடும் உழைப்பால் அங்கு காலூன்றி நின்று சொந்தமாக ஒரு வீட்டையும் தோட்டத்தையும் அமைத்துக்கொள்கிறாள். குமரன் மனவளர்ச்சியில்லாத குழந்தையாக இருந்த போதிலும், “அதனாலென்ன, அவன் எப்பவுமே எனக்கிட்ட குழந்தை மாதிரி இருந்துட்டு போறான்” என்று அவனை மகிழ்வோடு வளர்க்கிறாள். பின்னர் மணியத்தோடு திருமணமாகி முனியம்மாவைப் பெற்றெடுத்து, அவன் இறப்பிற்குப் பின்னர்  தனி ஆளாக அவளை வளர்த்து திருமணம் செய்துவைக்கிறாள்.  

நாவலின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் மணியம். தன் குலத்தொழிலான வெட்டியான் வேலையை வெறுத்து அங்கிருந்து ஓடி வந்து, தன் குருவைக் கண்டடைந்து சிலம்பம் கற்றுக்கொள்கிறார். அங்கிருந்து தோட்ட முதலாளியிடம் சேர்ந்து, எவ்வாறோ அவரும் ஓலம்மாவின் அதே தோட்டத்திற்கு வந்து சேர்ந்து, அவளை மணந்துகொண்டு வாழத்துவங்கிறார். மணியத்தின் வீரம், குருவின் சொல்லுக்காக மதுவைத் தொடாதிருப்பது,    பெரியார் மீதுள்ள பற்று, தோட்டத்து மக்களின் நலனுக்காக நீதி கேட்டுப் போராடுவது என அவரது வெளித்தோற்றம் இளைஞர்களின் தலைவனாக அவரை ஆக்குகிறது. ஆனால் அவருக்குள் உறையும் உடலிச்சை அவரை முதலாளிக்குத் துரோகம் செய்ய வைக்கிறது. ஓலம்மாவை ஏற்றுக்கொண்டாலும் எவனுக்கோ பிறந்த குமரனை வெறுக்க வைக்கிறது. தோட்டத்தில் நடக்கும் அத்தனை துர்மரணங்களுக்கு மத்தியில் சின்னியிடம் வல்லுறவு கொள்ள வைத்து இறுதியில் அதுவே அவர் மரணத்திற்கு காரணமாக அமைகிறது.         

ராமசாமியின் பெண்தன்மையை அவருள் உறையும் தாய்மையின் வெளிப்பாடே என்று உணரும் ஓலம்மாவின் மீது பெரும் பற்று கொண்டவராகிறார் ராமசாமி. தன் அன்னையின் வடிவில் ஓலம்மாவைக் கண்டு அவளுக்காக எதையும் செய்பவராகி விடுகிறார். வாழ்வின் எல்லா இக்கட்டுகளிலும் தன் குழந்தைகளைப் பற்றி எண்ணுகையிலேயே தனக்காகவும் சேர்த்துக் கவலைப்படும் ஓலம்மாவின் மீது கொண்ட பற்று, அவளது நலனுக்கென்று நம்பி அவரை கொலைகளுக்கும் துணையாக நிற்கச் செய்கிறது. இறுதியில் அந்த குற்ற உணர்ச்சியின் எடையைத் தாளமுடியாமல் பூனியா கம்பத்தின் அருவியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

ஓலம்மாவின் பேரனாக வரும் அப்போய் என்ற குமரனும் அவனது நாய்க்குட்டியான கருப்பனும் நாவலுக்கு வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுக்கின்றனர். நாவலாசிரியர் அந்த சிறுவனின் பார்வையில் மலேசிய காடுகள், அங்கு வளரும் மூலிகை செடிகள், ஆங்சா பறவைகள் என ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துகையில் கதை நடக்கும் களம் வாசகர்களாகிய நமக்கும் பரிச்சயமாகி நம்மை கதையோட்டத்தோடு ஒன்றவைத்து விடுகிறது. நிலத்தில் நெளியும் மண்புழு, பயத்தில் சுருண்டு கொள்ளும் மரவட்டை, பூக்களில் அமர்ந்து குழாயை நீட்டி தென் உறிஞ்சும் வண்ணத்திப்பூச்சி என உயிரினங்களை நுட்பமாகப் பார்த்து அறிந்துகொள்ளும்    அப்போய் தன் உண்டிவில்லால் விளையாட்டாக ஒரு பறவையை அடிக்க அது இறந்துவிடுகிறது.அதன் ரத்தத்தை கண்டு வருந்தி, மற்ற உயிர்களின் மீதான கருணையை அவன் தானே அறிந்துகொள்ளும் இடம் சிறப்பான ஒன்று. சிறுவர்களின் பார்வையில் சுருக்கமாகவும் எளிமையாகவும் கதையைச் சொல்லும் நடையில், வாசகர்கள் மேற்கொண்டு அதை விரித்து எடுக்கும் வாய்ப்பை அநேக இடங்களில் படைத்திருக்கிறார் நவீன்.    

இவர்களைத் தவிர, எல்லாவற்றிலும் லாபம் மட்டுமே பார்க்கும் சாராயம் காய்ச்சி விற்கும் சின்னி, தீராத வலியின் பொருட்டு மருந்தென மதுவருந்தி இறுதியில் அதற்கே பலியாகும் வாத்தியார், பெரியார் தொண்டர் படையில் இருந்து பின்னாளில் பேய்ச்சியின் பூசாரியாகும் சம்பு சாமி, “அந்த நான்கு பேரின் உயிருக்கு உன் ஒற்றை உயிர் சமானமா? அவ்வளவு பெரியவனா நீ?” என்று கேட்டு ராமசாமியை தற்கொலையிலிருந்து காப்பாற்றும் தோக் குரு என நாவல் நெடுகிலும் வரும் பல்வேறு கதாபாத்திரங்களும் கதைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். நாவலுக்குண்டான மைய தரிசனம், வேறுபட்ட மனஓட்டங்களின் மோதல், வரலாற்று உணர்வோடு கதை சொல்லும் பாங்கு என ஒரு சிறந்த நாவலுக்குண்டான அனைத்தும் அமையப்பெற்றிருக்கிறது ம.நவீனின் பேய்ச்சி. அவற்றை தாண்டியும் வெள்ளைக்கார, ஜப்பானிய அரசுகளின் காலம், கள்ளுக்குத் தடை விதித்து சீனச்சாராயத்தை புகுத்தும் தந்திரம், சீனர்களின் கடும் உழைப்பு மற்றும் பணம் மட்டுமே குறியாக இருப்பது பற்றிய அவதானிப்பு, ‘இனி இது தான் உங்கள் மண்’ என மலேசிய மக்களுக்குச் கூறிச்சென்ற பெரியார் வார்த்தைகளின் தாக்கம்,  எம்.ஜி.ஆரிலிருந்து ரஜினிக்குத் தாவும் இளைஞர்களின் மனமாற்றம் என பல சுவாரசியமான பகுதிகளை விரித்துச் சொல்கிறது. காலத்தில் முன்னும் பின்னும் மாறி மாறி செல்லும் போதும், தெளிவான நடையில் குழப்பமில்லாமல் நம்மை வாசிக்க வைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார் நவீன். 

ராமசாமி, ஓலம்மா, மணியம், சின்னி என ஒவ்வொருவரும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணியும் தங்களுக்கே உண்டான நியாயங்களும் கொண்டு வாழ்க்கையில் மோதிக்கொண்டாலும், அவர்கள் அனைவரையும் ஒரு சரட்டில் இணைப்பது அவர்கள் கொண்ட பற்றும் விழைவும் தான். தன் மகள் மீது கொண்ட பற்று சின்னியை ஊர் மக்கள் மரணத்திற்கு காரணமாக்குகிறது. உடல் மீது கொண்ட பற்று மணியத்தை முதலாளிக்கும் ஓலம்மாவுக்கும் துரோகம் செய்ய வைக்கிறது. ஓலம்மாவின் மீது கொண்ட தாய்ப்பற்று ராமசாமியை குமரன், மணியம், சின்னி ஆகியோர் மரணத்திற்கு காரணமாக்குகிறது. பேய்ச்சியென எழுந்து வரும்  ஓலம்மாவிற்கோ தன்னால் படைக்கப்பட்ட அனைத்தின் மீதான பற்று அவை எல்லாவற்றையும் அழிக்க வைக்கிறது. சாராயம் மட்டுமே போதை அல்ல என்று மணியத்தின் குரு சொல்வது எல்லாருக்குமே பொருந்தும் என்று தோன்றுகிறது.  

இன்னொரு பார்வையில் வாழ்வின் அபத்தமான முரண்களின் தொகையாகவே இந்த நாவலின் கதைமாந்தர் அனைவரும் அமைந்துள்ளனர் என்றும் கொள்ளலாம். தன் குலம் தழைத்து நின்று வேரூன்ற வேண்டுமென்பதற்காகவே, காத்தாயியை விட்டு ஓடிவந்து ராமசாமியோடு கடல் கடந்து வந்து வாழ்கிறார் கொப்பேரன். ஆனால் ராமசாமியோ பெண்தன்மையோடு தனித்து வாழ்ந்து, குற்ற உணர்ச்சிக்கு பலியாகி யாருமின்றி இறந்து போகிறார்.  வீடென்பது சுவருக்கு உட்புறம் மட்டுமல்ல என்று தோட்டமும் சுற்றமுமாகப் பெருகி வாழ்ந்த ஓலம்மா, இறுதியில் தன் கையாலேயே தான் உருவாக்கிய அத்தனையையும் அழிக்கிறாள். தன் மகளின் நல்வாழ்விற்கு பணம் ஈட்ட சாராயம் விற்கும் சின்னியைக் கொல்லும் ஓலம்மா, தன்னுடைய மகனின் மரணத்திற்கு தானும் காரணமென்பதை அறிந்து சின்னியைக் கொன்ற அதே கல்லின் முன்பாக, சாராயத்தைக் குடித்துத் தன் கழுத்தை தானே அறுத்துக்கொள்கிறாள்.  இவை எல்லாவற்றிலும் உச்சமென்பது பலபேருடைய மரணத்திற்கு காரணமாகும் சீனப்பெண் சின்னி,  தன்னை கொன்ற  அதே கல்லின் வடிவில் பேய்ச்சியென உருமாறி அமைவதும், அந்த சாராயமே அவளுக்கான படையலாவதும் தான். 

அந்த முரண்களின் தொடர்ச்சியாக எப்போதும் குழந்தைத்தனத்தோடு, எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும் அப்போயின் மனைவி மாலதி, முதலில் அஞ்சினாலும் பின்னர் தன் குழந்தையின் பொருட்டு சேவலின் கழுத்தை துணிந்து அறுக்குமிடத்தில் அவளுள் இருக்கும் பேய்ச்சியை குமரனுக்குக் காட்டுகிறாள். மூன்று தலைமுறைக் காலம் அங்கு ஓங்கி வளர்ந்து எல்லாவற்றிற்கும் சாட்சியென நின்றிருக்கும் அந்த ரம்புத்தான் மரம், இனிமேலும் எழுந்து வரப்போகும் பேய்ச்சிகளையும் காணக் காத்துக்கொண்டிருக்கும்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “பேய்ச்சி – பேரன்பும் பெருவெறியும்”

  1. வாசிப்பனுவம் நாவலை படிக்க தூண்டுகின்றது.

    /*காத்தலும், தன்னறம் காக்க கொடுவாளேந்தி அழித்தலும் பெண்மையின் உள்ளுறையும் ஆதாரவிசை. அது இனம், மொழி, காலம், பண்பாடு, சமூக நெறிகள் என அனைத்தையும் கடந்து என்றும் இங்கு நின்றிருக்கும் என்னும் மையத்தரிசனத்தை முன்வைக்கும் சிறந்த படைப்பாக எழுத்தாளர் ம.நவீனின் பேய்ச்சி அமைந்திருக்கிறது. */

    இந்த வரிகள் நாவலை உடனே வாங்கி வாசிக்கச் சொல்கின்றது.

Leave a Reply to நிர்மல்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.