இரண்டே வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், எனக்கு வாழவே பிடிக்கவில்லை.
எப்படிப் பிடிக்கும்?
தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் பரம்பரைச் செல்வம் என்று ஏதுமில்லை. படிப்பின் மீது எனக்கும் ஆர்வமில்லை. அது ஒரு சமூக சீரமைப்பு (Social Conditioning) தான் இல்லையா? நாம் என்ன எந்திரங்களா?. அதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத மக்கு இல்லை நான். ஹாத்தி விண்கல்லில் உள்ள நீர்,மீத்தேன், எண்ணெய், இரும்பு, இன்ன பிற தாதுக்கள் என எல்லா வளங்களும் யாரோ ஒரு பணக்காரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆக ஹாத்தி விண்கல்லில் வாழவேண்டுமானால், அவர்களின் யாருக்கேனும் அடிமையாய் வேலை பார்க்க வேண்டும். அதுவும் பெரும்பான்மை நேரத்திற்கு. இங்கு தான் இந்தப் பிரச்சனை என்றால் விண்வெளியில் கதையே வேறு.
பணக்காரனிடம் செல்வம் இருக்கிறது. தன் செல்வத்தை வைத்து, கலன்கள் அமைத்து, விண்வெளியை வேவு பார்க்க அவனால் முடிகிறது. அவன் போன்ற பணக்காரர்களின் வேவு கலன்களை எல்லாம் தாண்டி ஒரு வளம் மிக்க விண்கல் என்போன்ற சாதாரணன் கண்ணில் பட்டுவிடவா போகிறது? அப்படியானால், அதிகபட்சம் ஏதாவதொரு பணக்காரனின் ஆளுகைக்குள் வரும் ஒரு விண்கல்லில் அகழாய்வுப் பணி தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் பத்து மணி நேரம் விண்கல்லில் கல்லுடைத்தால், ஆயிரம் வரவுகள் கிடைக்கும். தங்குமிடத்தின் வாடகை, பிராணவாயு, உணவு என நிறுவனமே அறுநூறு வரவுகளை எடுத்துக்கொள்ளும். எஞ்சியதில் நூறு வரவுகள் மருத்துவ காப்பீட்டிற்குப் போய்விடும். மீதம் முந்நூறு வரவுகளை வைத்து என்ன செய்வது? அடுத்த விண்கல்லில் வேலை வாய்ப்பிற்கு படிவம் அனுப்பவும், அதற்கு தகுதிப்படவும், தயாரிக்கவும் தான் அந்த முந்நூறில் பெரும்பங்கு போய்விடும். இந்த ரீதியில் நானெல்லாம் எங்கிருந்து முன்னேற?
இருத்தலிய சிக்கலில் சிக்கியிருந்த எனக்கு எத்திசையிலுமே வெளிச்சம் தெரியவில்லை. வேடிக்கை என்னவென்றால், வெளிச்சமே இல்லாத விண்கல்லில் தான் என் போல் ஆயிரம் ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். நிச்சயம் இந்த இருத்தலிய சிக்கலிலிருந்து யாருக்கும் விமோசனம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிகிறது. ஆயினும் ஏன் வேலை பார்க்கிறார்கள்? காரணம் இருக்கிறது. வேலையை விட்டுவிட்டால், சாகத்தான் வேண்டும். பல்லாண்டுகளாகப் பார்க்கும் விண்கற்களில் அகழாயும் வேலை. அதற்கெனத் தயாரான உடல் அல்ல இது. என்னதான் உடற்கூடுகள் அணிந்து வேலை செய்தாலும், தூசி எப்படியே சருமத்தை அண்டி விடுகிறது. அது எப்படி என்று எவருக்கும் தெரியவில்லை. சருமத்தினுள் ஊடுறுவும் தூசி, ரத்தத்துடன் கலந்து நச்சாகிறது. மருத்துவக் காப்பீடு மூலம் வாரம் ஒரு முறை ரத்தத்தைத் தூய்மை செய்ய வேண்டி வருகிறது. விண்கற்களில் தான் என்றல்ல, ஹாத்தியிலும் இதுதான் கதை. இன்று தூய்மை செய்யப்பட்ட ரத்தம் நாளையே ஒரு சதவிகித அளவிற்கு நச்சைப் பெற்றுவிடும். அதற்காக, நாளையும் தூய்மை செய்ய வேண்டும் தான். ஆனால் அப்படிச் செய்தால் மருத்துவக் காப்பீட்டிற்கு அதிக வரவுகள் தர வேண்டி இருக்கும். ஒரு சதவிகித நச்சு உடலை ஒன்றும் செய்யாதுதான். ஆனால், நாள்பட நாள்பட இப்படி சிறிது சிறிதாய்ச் சேரும் நச்சால், உடல் உறுப்புகள் மெல்ல மெல்ல வழுவிழக்கின்றன. அதை எப்படி யோசிக்கினும் தடுக்கவே முடியவில்லை.
இது ஒரு பிரச்சனை தான். இப்படிப் பல பிரச்சனைகள். மீளவே முடியாத ஒரு பாழும் குழியில் நாங்களெல்லாம் அகப்பட்டதைப் போல் உணர்கிறேன்.
தப்பு. தப்பு. மீளவே முடியாத ஒரு பாழும் குழியில், எங்களைப் பணக்காரர்கள் தள்ளிவிட்டுவிட்டதைப் போல் உணர்கிறேன். எல்லோருக்குமே தெரிகிறது? ஏன் வேலை செய்ய வேண்டும். பிரபஞ்சத்தில் பிறக்கிறோம். இது என் கிரகம், அது உன் கிரகம் என்பதெல்லாம் என்ன பிரபஞ்சத்தின் பிரிவினையா? இல்லையே மனிதர்கள் மனிதர்களுக்குள் இட்டுக்கொண்ட பிரிவினை தானே? எப்படியோ, மனித மனம் இந்த மாய வலையில் விழுந்துவிட்டது. எவனைக் கேட்டாலும், ‘நன்றாக வாழ வேலை வேண்டும்’ என்கிறான். ஏன் எவனுக்கோ கொத்தடிமை வேலை செய்வது பற்றியே சிந்திக்கிறது மனம்? இந்த பிரபஞ்சமே நம்முடையது அல்லவா? பிரபஞ்சத்தில் பிறக்க நேர்ந்த எல்லோருக்குமே பிரபஞ்சம் சொந்தம் அல்லவா? அந்தச் சிந்தனை ஏன் மனித மனங்களுக்கு வர மறுக்கிறது? ஒருவிதமான மரபணு ரீதியிலான சீரமைப்பாக (conditioning) இருக்குமோ?
இப்படி யோசித்துப் பாருங்கள். பிரபஞ்சமே சொந்தம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எந்த கிரகத்தில் வேண்டுமானாலும் இறங்கலாம். அங்கே என்ன கிடைக்கிறதோ அதை உண்டு வாழலாம். இப்படி ஒரு வாழ்க்கை தானே எல்லோருக்கும் கிடைத்திருக்க வேண்டும்? எங்கே தவறியது? உணவு உண்ண வேண்டுமானால், சம்பளம் வேண்டும்; சம்பளம் வேண்டுமானால், வேலை வேண்டும்; வேலை வேண்டுமானால், நிறுவனம் வேண்டும்; நிறுவனம் வேண்டுமானால், முதலாளி வேண்டும் என்பது என்ன மடத்தனமான வாதம்? என்னவிதமான கடிவாளம் இது? ஏன் மனித மனம் இப்படி ஒரு இல்லாத சட்டகத்தினுள் இயங்கப் பழகி விட்டது? எதற்குமே பதில் இல்லை.
ஆனால், அதற்காகவெல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு வாழ விரும்பவில்லை. அதற்கு பதிலாய் தற்கொலை செய்து கொள்ளலாம்.

இதோ பழுதான ஒரு விண்களனை, என்னிடமிருந்த கிரெடிட்டுகள் தந்து வாங்கியிருக்கிறேன். பிரபஞ்சத்தின் ஏதாவதொரு மூலையைக் குறி வைத்து பயணப்படுவது தான் திட்டம். எரிபொருள் முழுவதும் தீரும் வரை விண்வெளிக்குள் விரட்டுவது. அதற்கு மேல் போய்விட்டால், துவங்கிய இடம் திரும்ப எரிபொருள் இல்லாமல் விண்வெளியிலேயே தொலைய வேண்டியதுதான். அதுதான் திட்டம்.
விண்கலனின் எஞ்சினை (Engine) உசுப்பினேன். அதன் முழு சக்தியைப் பயன்படுத்தக் கட்டளையிட்டேன். ஒரு கட்டத்தில் அதன் எரிபொருள் பாதியானது. நான் நிறுத்தவில்லை. எரிபொருள் முழுமையாகத் தீர்ந்த பின்னர் எஞ்சினே நின்றுபோனது. ஆயினும் விண்வெளி அல்லவா? வெற்றிடம் அல்லவா? விண்கலன் தொடர்ந்து விண்வெளியின் ஆழத்தினுள் அமிழத்துவங்கியது. விண்கலனின் ஜன்னலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். நான் இப்போது பயணித்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு எவருமே பயணித்திருக்க மாட்டர். ஆதலால் என்னை யாரும் தேடி வரப்போவதில்லை. நான் பிரபஞ்சத்தின் ஆழத்தில் தொலையப்போவது உறுதி.
என் விதியை நொந்தபடி, அடிமைகளாக இருப்பதில் கொஞ்சம் கூட லஜ்ஜையே படாத இந்த உலகுடன் ஒத்துப்போக விரும்பாமல், தொலைதலுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்திருந்தேன். பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்து சென்று உணவுப் பெட்டகத்தைத் திறக்க முயல அது இறுக மூடிக்கிடந்தது. பழைய விண்கலன். விலை மலிவாகக் கிடைத்ததே என்று வாங்கினால், சமயம் பார்த்துக் காலை வாறுகிறது. பசி என்னை பலவீனமாக உணர வைத்தது. உடலில் சத்தே இல்லை. என் பலம் கொண்ட மட்டும் அந்தப் பெட்டகத்தின் கதவைத் திறக்க முயற்சித்தேன். முடியவில்லை.
அப்படியே சோர்ந்து விண்கலனின் தரையில் சரிந்தேன். செவிகளை அடைத்தது. அது வெற்றிடத்தில் வழுக்கிச்செல்லும் விண்கலனாலா, அல்லது உடல் தன்னைத்தானே தின்பதாலா என்று ஊர்ஜிதமாகப் பிரித்தறிந்து சொல்லத் தெரியவில்லை. எப்போது மயங்கினேன் என்பது நினைவில்லை. நான் கண்விழித்தபோது, விண்கலனில் சைரன் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. உடலில் எஞ்சியிருந்த பலத்தை ஒன்று திரட்டி எக்கி ஜன்னல் வழியே பார்த்தேன்.
‘அடக்கடவுளே! சாக வந்த இடத்தில் இது என்ன அற்புதம்!’ என் உள்மனம் கூவியது. ஜன்னல் வழியே, தொலைவில் ஒரு பாரிய நட்சத்திரம்.அதன் வாழ்க்கைச் சக்கரத்தை (life cycle) வைத்துப் பார்க்கையில் எப்போது வேண்டுமானாலும் அது சூப்பர் நோவா (Super nova) வெடிப்பு வெடிக்கலாம் போலிருந்தது.
அது உருவாக்கிய சாத்தியங்கள், வாய்ப்புகள் எல்லாமும் என் மனக்கண்ணில் ஓடின. கிட்டத்தட்ட லாட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு கிடைப்பது போலத்தான். ஆனால், என் கஷ்டகாலத்தைப் பாருங்கள்? என்னால் முழுமையாகச் சந்தோஷப்படக்கூட முடியவில்லை. ஏனெனில், நானோ தற்கொலை செய்ய வந்தவன். விண்கலனில் எரிபொருள் இல்லை. இப்போது பார்த்தா இந்த அதிர்ஷ்டம் கண்ணில் படவேண்டும்?
கடவுளே! கடவுளே! என்று மார்பிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டேன். என் துரதிருஷ்டத்தின் தீவிரம் கண் முன்னே பாரிய நட்சத்திரமாய்க் காட்சி அளித்தது.
‘ஏதாவது செய். எப்படியாவது மீள்.’ என்று ஆழ்மனது அடித்துக்கொண்டது.
ஆனால், எப்படி? எப்படி? யாருக்காவது தகவல் சொல்லலாமென்றால், விண்கலனோ மிகப்பழையது. அதில் தகவல் தொடர்புச் சாதனங்கள் வேலை செய்கிறதா என்று கூடப் பார்க்கவில்லை. அவசரமாக சென்று சோதித்ததில் அவைகள் உண்மையிலேயே வேலை செய்யவில்லை. தற்கொலை செய்யப் போகிறவனுக்கு எதற்கு தகவல் தொடர்பு என்று நான் எண்ணியது எனக்கே உலை வைத்துவிட்டிருந்தது.
‘இனி நான் என்ன செய்ய? ஐயகோ’ நான் உள்ளுக்குள்ளாக அழுதேன், அரற்றினேன்.
அப்போதுதான் அது என் கண்ணில் பட்டது. அது, என்னுடையதைப் போன்றே ஒரு பழைய விண்கலன். வந்த இடத்தில் விண்கலன் அனாதையாகியிருக்க வேண்டும். பிரபஞ்சவெளியில் எந்த அசைவுமின்றி இருந்தது.
அதிர்ஷ்டவசமாக என் அரதப்பழைய விண்கலனுக்குள் நெருப்பு பற்றிக்கொண்டால் அணைக்க தீயணைப்புக் கருவி இருந்தது. அதிலிருந்து வாயு அழுத்தமுடன் வெளியேறும். அதைக் கையில் எடுத்துக்கொண்டு என் விண்கலனின் கதவு திறந்து விண்வெளியில் குதித்தேன். தீயணைப்புக் கருவியின் வாயுவில் இருந்த அழுத்தத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த அனாதை விண்கலனை அடைந்தேன். அந்தக் கலனின் கதவு திறந்தேன். உள்ளே, ஒருவர் இருந்தார். நான் சோதித்தபோது அவர் இறந்திருப்பதை உணர்ந்துகொண்டேன். ஓட்டுனரிடமிருந்து ஆணைகள் இல்லாததால் தானியங்கி விண்கலன், அப்படியே நின்றிருந்திருக்கிறது. அவர் உடலை லாவகமாக ஒரு துணியில் சுற்றி, இறுதி மரியாதை செய்து, விண்வெளிக்குள் தள்ளினேன். விண்வெளிக்கற்களுக்கு மத்தியில் ஒரு பிரேதம். காற்றோ அழுத்தமோ இல்லாமல் உடனுக்குடன் மம்மியாகிவிட்ட பிரேதம்.
அதிர்ஷ்டவசமாக விண்கலனில் சூரியத் தகடுகள் இருந்தன. அதுகாறும் பாரிய நட்சத்திரத்தின் அருகில் இருந்ததால் முழுமையாக மின்னேறியிருந்தது. விண்ககலனின் தகவல் தொடர்புச் சாதனங்கள் உயிருடன் இருந்தன.
என் வாழ்க்கை என் கைக்குத் திரும்பியது போலிருந்தது. கண்களில் கண்ணீல் வழிந்தது. அதே நேரம் சிரிப்பும் வந்தது.
‘பொறு! பொறு! கச்சிதமான ஒரு நட்சத்திரம். எந்தப் பணக்காரன் கண்ணிலும் படாத நட்சத்திரம். அது எப்படி சாத்தியம்?’
ஆம், அதுவும் சரிதான். பாரிய நட்சத்திரத்தைச் சோதித்தேன். பணக்காரன்கள் திக்கெட்டும் செயற்கைக்கோள் கண்களால் தேடுவார்களே? அவர்களுக்கெல்லாம் கிடைக்காததா எனக்குக் கிடைத்திருக்கிறது? அது எப்படிச் சாத்தியம்?
அதனருகே எந்த ரோந்து விண்களனும் இல்லை. பாரிய தகவல் உள்ளீட்டுக் கட்டுமானங்கள் இல்லை. குறைந்தபட்சம் ஒரு உளவு விண்கலன் கூட இல்லை.
அப்படியானால்? அப்படியானால்? உண்மையிலேயே எந்தப் பணக்காரனின் கண்ணிலும் இதுகாறும் படாத நட்சத்திரம். எப்படி? நான் விண்கலனின் தொலை நோக்கிகளைத் திருப்பினேன். அங்குமிங்கும் பார்த்தேன். அந்தப் பாரிய நட்சத்திரத்தை மூடியவாறு மூன்று பெரிய நட்சத்திரங்கள் தெரிந்தது. அந்த மூன்று நட்சத்திரங்களின் வெளிச்சத்தில், இந்த நட்சத்திரத்தின் இருப்பு மறைந்திருந்திருக்கிறது. புலப்படவில்லை. கிராவிடேஷனல் லென்ஸிங் (Gravitational lensing) காரணமாக இருக்கலாம். வாயுக்கள் காரணமாக இருக்கலாம். வாவ்! எனக்கே எனக்கென்று, என் வாழ்வை ஒளிமயமாக்கவென்றே ஒரு நட்சத்திரம் அங்கே வீற்றிருப்பதைப் போல் இருந்தது.
‘வாழ்க்கை என்னைக் கைவிடவில்லை. வாழ்க்கை என்னைக் கைவிடவில்லை’ என்று பைத்தியம் போல் கூவினேன். விண்வெளி எனக்கென்ன என்பது போல் இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று விண்கலனிலிருந்து அந்தப் பாரிய நட்சத்திரத்தைப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
இனி நான் அடுத்த கட்டம் குறித்து யோசிக்க வேண்டும். என்னாலும் பணக்காரனாக முடியும் என்பது, யோசித்துப் பார்க்கவே இனிமையாக இருந்தது. அதற்கு நான் சில காரியங்கள் செய்ய வேண்டும். ஒருக்கால், இறந்தவன் என் போன்றே பாரிய நட்சத்திரத்தைக் கண்டிருக்க வேண்டும். அதீத மகிழ்வில் இதயம் அடைத்து மரணம் சம்பவித்திருக்க வேண்டும் என்பதே என்ன நடந்திருக்குமென்பதற்கான பொருத்தமான ஊகமாக இருந்தது. ஒரு முடிவில் தான் ஒரு துவக்கமும் இருக்குமல்லவா?
அப்போதுதான் நான் அடுத்த பிழையைச் செய்தேன். நான் நேரமெடுத்திருந்திருக்க வேண்டும். அவசரப்பட்டிருந்திருக்கக்கூடாது. ஆனால் எனக்கு அது அப்போது புரியவில்லை. அடுத்தடுத்த காரியங்களைச் செய்ய வேண்டுமே என்ற அவசரம், என் போல் வேறு யார் கண்ணிலும் அந்தப் பாரிய நட்சத்திரம் பட்டுவிடக்கூடாதே, அதற்குள் காரியத்தை சாதிக்க வேண்டுமே என்ற அவசரம் என்னை செலுத்திக்கொண்டிருந்தது. அதில் தான் நான் அந்தத் தவறைச் செய்தேன்.
எனக்குத் தெரிந்த தொடர்புகளையெல்லாம் வைத்து, பெரும் நிறுவனங்களிடம், அவர்களுடைய தயாரிப்புகளுக்கும், சேவைகளுக்கும் விளம்பரங்கள் பிரபஞ்சமெங்கும் செய்து தருவதாகவும் அதற்கென, சந்தை மதிப்பிலிருந்து சற்று குறைவான வரவுகள் தந்தால் போதுமென்றேன். யாராலுமே நம்ப முடியவில்லை. என்னை எல்லோரும் கிறுக்கன் என்று நினைத்திருப்பார்கள் என்பது எனக்கே புரிந்தது. உடனுக்குடன் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு அனுப்பினார்கள். நானும் சம்மதித்துக் கையோப்பமிட்டு அனுப்பினேன்.
உண்மையில் நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. சந்தை மதிப்பிலிருந்து குறைவான ஒரு விலையில், விளம்பரம் செய்து தருகிறேன் என்ற என் கோரிக்கை, பிரபஞ்ச வெடிப்பு போல் நாலாத்திசைகளிலும் பரவியிருக்க வேண்டும். பணக்காரர்களுக்கு இதன் அர்த்தம் புரிந்துவிடும். இப்படி விளம்பரம் கேட்பவன் ஏதோ ஒரு புதையலைக் கண்டடைந்துவிட்டான் என்பதை அவர்கள் ஊகித்திருக்க வேண்டும். நல்லவேளை இந்தப் புதிய விண்கலனின் இருப்பிடப் பகிர்வு (Location sharing) செய்யப்பட்டிருக்கவில்லை.
நான் துவங்கிய இடம் சென்று சேர்ந்தபோது, என் கணினிக்கு ஏகத்துக்கும் அழைப்புகள் வந்திருந்தன. நான் என் கணினியைத் திறந்ததுமே நான் எங்கிருந்து திறந்தேன் என்பதைப் போட்டியாளர்கள் கண்டுகொண்டிருந்திருப்பார்கள். கணினியில் ஏகத்துக்கும் அழைப்புகளைப் பார்த்ததும் தான் நான் செய்த தவறு எனக்கே புரிந்தது. இனி நடக்கப்போவதை என்னால் ஊகிக்க முடிந்தது. எப்படியும் ஒரு புதிய புதையலை நான் கண்டுபிடித்திருந்திருப்பின், என்னைப் பின் தொடர்ந்தால், அந்தப் புதையல் என்ன என்பதை எவரானாலும் தெரிந்துகொள்ளலாம். பிறகு அதை என்னிடமிருந்து களவாடுவதா பண முதலைகளுக்கு கடினம்?
ஆக என் குழியை நானே வெட்டிக்கொண்டுவிட்டேன் என்பது எனக்குப் புரிந்தபோது, மீண்டும் ஆழுகையும் ஆற்றாமையும் வந்தது? என் கஷ்ட ஜீவனத்துக்கு ஒரு விடிவே கிடையாதா கடவுளே என்று உள்ளுக்குள் கதறினேன். குமைந்தேன்.
ஆனால், உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டது.
இது கத்திக் கூச்சலிட்டு கூப்பாடு போடும் நேரமல்ல. சிந்தித்துச் செயல்படவேண்டிய நேரம். வாழ்க்கை யாருக்காகவும் நிற்காது, எவருக்கும் கருணையும் காட்டாது. இங்கே வாழ வேண்டுமானால், எதிர்த்துப் போராட வேண்டும். சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காய் நகர்த்த வேண்டும். அந்த சூட்சுமம் புரிந்தவன் மட்டுமே பிழைக்க முடியும்.
நான் சிந்தித்தேன். தீவிரமாக சிந்தித்தேன். எழுந்து, நான் தங்கியிருந்த விண்கல்லின் குடியிருப்பு வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தேன். வெளியே தொலை தூரத்தில், புதிதாக ஒரு சிறிய வெளிச்சப் புள்ளி தெரிந்தது. என்னிடமிருந்த தொலை நோக்கி கொண்டு பார்த்ததில் அது ஒரு பரிச்சயமில்லாத விண்கலன் என்பது தெரிந்தது. அப்படியானால் சமீபத்தில் தான் அந்த இடத்திற்கு அது வந்திருக்க வேண்டும். இதன் பொருள், என்னை வேவு பார்க்கவென எந்தப் பணக்காரனோ அனுப்பி வைத்த விண்கலன் அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆக, எனக்கு அகப்பட்ட புதையல் என்னவெனத் தெரிந்துகொள்ள யாரோ இயங்கத்துவங்கிவிட்டார்கள் என்பது எனக்குப் புரிய வந்தது.
இதை நான் விடுவதாக இல்லை.
பணக்காரன் மட்டும் தான் வாழ வேண்டுமா? ஏழை, தொழிலாளி வாழக்கூடாதா? இதை நான் நிச்சயம் விடுவதாக இல்லை. என்ன செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்திக்கலானேன். யோசித்து யோசித்து என் மூளையைக் கசக்கிப் பிழிந்ததில், விண்கலனில் எடுத்த புகைப்படம் நினைவுக்கு வந்தது. விண்கலனிலிருந்து அதைத் தரவிறக்கம் செய்து பார்த்த போதுதான் அதைக் கண்டேன். கணக்கு போட்டுப் பார்த்தேன். எல்லாமும் கச்சிதமாய் பொருந்தியது.
இதற்குள் நான் கேட்டிருந்த விளம்பரங்களைத் தரவேண்டிய நிறுவனங்கள், அவர்களின் சேவைகள், தயாரிப்புகள், விளம்பர சலனப்படங்கள், இன்ன பிற தகவல்களை என் கணினிக்கு அனுப்பியிருந்தன. எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்துகொண்டேன். எரிபொருளுக்கு இணையத்தில் வீட்டுக்கே வந்து நிரப்பச்சொல்லி விண்ணப்பித்தேன். ஒரு பாரிய எரிபொருள் நிரப்பு விண்கலன், நான் தங்கியிருந்த விண்கல்லுக்கே வந்து என் புதிய விண்கலனில் திரவ ஹைட்ரஜன் (Liquid Hydrogen) எரிபொருள் நிரப்பியது. எதற்கும் ஒரு கொள்கலனில் (Container) கூடுதலாக எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என்று கேட்டபோது, வேறொரு விண்கலனுக்கு எஞ்சியதை நிரப்பவேண்டும் என்று பதில் வந்தது.
எனக்குத் தெரியும். நான் எவ்வளவு எரிபொருள் நிரப்பினேன் என்பதை அந்த வேவு பார்க்கும் விண்கலனும் கேட்டறிந்திருக்குமென்பது. அது குறித்து நான் கவலைப்படவில்லை. என்னிடம் திட்டம் கச்சிதமாக இருந்தது. முன்னரே கணித்த அளவுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பியிருக்கிறேன். என்னை வேவு பார்க்கும் விண்கலனும் அந்த அளவை வைத்தே தான் தங்கள் வேவுகளனைத் தேர்ந்தெடுத்திருந்திருப்பார்கள் – காரணம், கஞ்சப் பணக்காரர்கள். வேறென்ன? காஸ்ட் கட்டிங் (Cost-cutting) கண்றாவி. எனக்குள் மின்னல் வெட்டியது.
மடிக்கணினியுடன் விண்கலன் ஏறினேன். விண்கலனை விண்வெளிக்குள் விரட்டினேன். என்னுடைய ராடாரில் எதுவுமே தெரியவில்லை. ஆயினும் என்னைத் தொடர்ந்து அது வந்துகொண்டிருப்பதை, அதன் மீது மோதி வெடிக்கும் விண்கற்களை வைத்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் அந்த வேவு விண்களன் என்னைப் பின் தொடர்வதை கவனியாதவன் போல் நடந்துகொண்டேன். நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து விண்வெளிக்குள்
வழுக்கிச் சென்றேன். அந்த வேவு விண்கலனும் என்னைத் தொடர்ந்து வந்தது.
நான் மிக மிகத் துல்லியமாக இயங்க வேண்டிய கட்டம் இது. விண்கலனின் திசையை ஒரு குறிப்பிட்ட பாகைக்கு (degree/angle) திருப்பினேன். என்னை எனக்குத் தெரியாமல் பின் தொடர எண்ணி, அந்த வேவு விண்கலன் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் தொடர்ந்து பயணித்தேன். பாரிய நட்சத்திரம் இப்போது கண்ணுக்குத் தெரிந்தது. அது அந்த வேவு விண்கலனின் பார்வைக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் புள்ளியில் தான் என் திட்டத்தை செயல்படுத்தினேன். இந்த இடத்தில், விண்கலனின் தொண்ணூறு சதம் எரிபொருள் தீர்ந்திருக்கும். என் விண்கலனில் தீர்கிறது என்றால், என்னை வேவு பார்க்கும் விண்கலனிலும் தீர்ந்திருக்கும். ஒரு விண்கலன் தான் சென்று கொண்டிருந்த திசையின் எதிர் திசைக்குத் திரும்ப எஞ்சிய பத்து சதம் எரிபொருள் போதாது. அதுதான் என் திட்டமும்.
மரணம் வரை சென்றவன், பிழைத்தலின் இறுதிக் கட்ட சாத்தியங்களைப் பார்த்தும் அனுபவரீதியாகப் புரிந்தும் விடுகிறான். அந்த இடத்திற்கு பெரும்பாலும் வேறு எவரும் செல்வதில்லை என்பதே அவனுக்குச் சாதகமான அம்சமாகிவிடுகிறது. அந்தப் புள்ளியில் அவன் என்ன கற்றுக்கொள்கிறானோ,அந்தக் கல்வி, அந்த ஞானம் அவனுக்கு மட்டுமே சாதகமாக வேலை செய்யும் கருவியாகிவிடுகிறது. இல்லையா? மரணத்தைத் துரத்திக்கொண்டு நான் முதன் முதலில் வந்தபோது ஒரு புகைப்படம் எடுத்திருந்தேன் அல்லவா? அது குறித்துச் சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். அந்தப் புதிய விண்கலனில் இருந்தது புவியீர்ப்பு நுண்கண்ணாடி (Gravitational microlensing) கொண்ட புகைப்படக் கருவி. அதை வைத்து எடுத்த புகைப்படத்தில் தெரிந்திருந்தது ஒரு அனாதை கிரகம். அனாதை கிரகங்கள் வெறும் கண்களுக்குப் புலப்படாது.
கச்சிதமாக, அந்த நேரத்தில் எனது விண்கலன் தானாக நான் துவங்கிய இடத்தின் திசை நோக்கித் திரும்பியது. காரணம் மிக எளிமையானது. ஏனெனில், அவ்விடத்தில் இருந்த அந்த அனாதை கிரகம்தான். அந்த கிரகம் அங்கிருப்பது எனக்கு மட்டும் தானே தெரியும். ஏனெனில், நான் மட்டும் தானே மரணத்தைத் துரத்தினேன்? எனக்கான தீர்வை, மரணத்தைத் துரத்திய அந்த நொடிகளில், அந்தப் புகைப்படம் காட்டிக்கொடுத்துவிட்டிருந்தது. விண்வெளியின் இருளில் வேவு விண்கலனுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அனாதை கிரகத்தின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திக்கொள்ள, ஒரு குறிப்பிட்ட பாகையில் நுழைய வேண்டும். கொஞ்சம் தவறினாலும், ஒன்று கிரகத்தினுள் மீட்சியற்று இழுக்கப்படவோ, அல்லது கிரகத்தினுள் ஈர்க்கப்பட வாய்ப்பமையாமல், மறுதலிக்கப்பட்டுச் விண்வெளியிலேயே தொலையவோ தான் வேண்டி இருக்கும். நான் வேலை செய்த விண்கல் நோக்கி நான் திரும்பிக் கொண்டிருக்க, அந்த வேவு விண்கலன் சரியான பாகையில் திரும்ப இயலாமல், விண்வெளியின் ஆழத்தில் மீட்சியற்று தொலைவதை நான் புன்சிரிப்புடன் பார்த்து நின்றேன்.
அவர்களுக்காக நான் பரிதாபப்பட விரும்பவில்லை. எதற்கு பரிதாபப்பட வேண்டும்? ஒரு பணக்காரனின் கைக்கூலிகள் தானே அவர்கள்? அப்படியானால், அவர்களும் அடிமைகளே அல்லவா? ஒரு பணக்காரன், அவன் கீழ் கோடிக்கணக்கான அடிமைகள், அதுவும் மூளை உள்ள, சிந்திக்கத் தெரிந்த அடிமைகள். மனிதர்களுக்கு மனம் இரங்கலாம். மடமைக்கு மனமிரங்குவது நுனிக் கிளையில் அமர்ந்தபடி அடிக்கிளையை வெட்டுவதைப் போல.
பிற்பாடு நான் துவங்கிய இடம் திரும்பிவிட்டு, மீண்டும் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, நட்சத்திரம் அடைந்து, தகவல் உள்ளீட்டுக் கருவிகள் மூலம் விளம்பரங்களை, சலனப்படங்களை, இன்ன பிற தகவல்களை நான் பதிவேற்றம் செய்துவிட்டு மீண்டும் விண்கல் திரும்பினேன். சூப்பர் நோவா வெடிக்க சில மணி நேரங்களே இருக்கையில், விண்கல்லின் காவல்துறை எண்ணுக்கு அழைத்து, சூப்பர் நோவா வெடிக்க இருப்பதைப் பகிர்ந்துவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். அவசர அவசரமாக நாங்கள் எல்லோரும் விண்கல்லில் எங்கள் இருப்பிடங்களை காலி செய்துவிட்டு ஒரு பாரிய விண்கலனுக்குள் ஏற்றப்பட்டு வேறொரு கிரகத்திற்கு அனுப்பப்பட்டோம்.
சூப்பர் நோவா வெடிப்பு வெடித்து, பிரபஞ்சத்தின் நாலா பக்கமும் தகவல்கள் பரப்பட்டன. பாரிய விண்கலனுக்குள் அமர்ந்தபடி விளம்பரங்களுக்கான முழு வரவுகளும் என் கணக்கில் வந்து சேர்வதை கணினியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கோடிக்கணக்கான வரவுகள் என் கணக்கில் வந்து சேர்ந்திருந்தன.
இனி நானும் ஒரு பணக்காரன். இந்தப் பணத்தை வைத்து ஒரு பாரிய கிரகத்தை வாங்க இருக்கிறேன். அப்படி எதுவும் விற்பனைக்கு இல்லையென்றால், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க இருக்கிறேன். பரந்த எல்லைகளற்ற விண்வெளியில் கிரகங்களுக்கா பஞ்சம்?
தொழில் நுட்பம் பயன்படுத்தி அந்த கிரகத்தை இன்னொரு பூமியாக்கப்போகிறேன். அதில் என் போன்ற உழைப்பாளிகளுக்கும், ஏழைகளுக்கும் இலவச உலகம் உருவாக்கப்போகிறேன். அந்த உலகில் பிறக்க நேர்ந்தவர்கள் அனைவருக்கும் உலகமே சொந்தம். அவர்கள் அந்த உலகில் எந்த மூலைக்கும் குடிபெயரலாம். எங்கு வேண்டுமானாலும் வாழலாம். வாழக் கிடைத்த இடத்தில் , உண்ணக்கிடைத்த உணவை உண்ணலாம். பணம் இல்லை. அதிகாரம் இல்லை. காப்பீடு இல்லை. வரவுகள் இல்லை. விசா இல்லை. கடவுச்சீட்டு இல்லை. பத்திரம் இல்லை. எதையும் யாருக்காகவும் சேமிக்க வேண்டியதில்லை. எதையும் தேக்க வேண்டியதில்லை. யாரையும் பாதுகாக்கும் நோக்கமும் இல்லை. எதையும் எளிமையாக்கவும் விருப்பமில்லை.
இயற்கையோடு இயற்கையாக எல்லோரும் இன்புற்று வாழலாம். அதுவே நான் என் போன்றவர்களுக்கு அளிக்க விரும்பும் அறுதி விடியல்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
