ஆகுதி

தனஞ்செயன் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா தூரத்தில் ஒரு பாலத்தில் ஓடிக் கொண்டிருந்தார். பெரிய பாலங்களாகப் பல தீவுகளை இணைத்து அவன் நினைவுகள் இருந்தன. அவரை யாரோ தாக்குவதற்குத் துரத்திக் கொண்டிருந்தார்கள். இரவு வெளிச்சத்தில் அப்பா மட்டுமே தெரிந்தார்.

இவன் கால்களில் கனமாகச் சங்கிலி ஒன்று இருந்தது. அதன் மறுநுனி பாலத்தில் எங்கேயோ இருந்தது. அதை இழுத்துக் கொண்டு ஓடுவது சிரமமாக இருந்தது. அப்பா என்னிடம் ஓடி வாருங்கள், நான் பார்த்துக் கொள்கின்றேன் எனக் கதறினான், தொண்டை முழுக்க குரல் எடுத்துக் கூவினான்.

ஓடிக் கொண்டிருந்த அப்பா நின்று திரும்பிப் பார்த்தார். இவனைப் பார்த்து நீ யார்? என் மகனைப் பார்த்தால் வர சொல் எனச் சொல்லிவிட்டுத் திரும்ப ஓட ஆரம்பித்தார். அவர் உதடுகள் மெதுவாக முணுமுணுத்தது அத்தனை தூரத்தினைக் கடந்து அவனுக்கு வந்து சேர்ந்தது.

தனஞ்ஜெயன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான், இதயம் விலா எலும்புகளில் இடித்துக் கொண்டிருந்தது. கனவு ஈரமான துணி போல அவனைச் சுற்றிக் கொண்டிருந்தது. அப்பா முடிவில்லாத நடைபாதைகளில் அலைந்து கொண்டு, அவன் பெயரைக் கூப்பிட்டுக் கொண்டே, சிறியதாகி சிறியதாகி இறுதியில் முற்றிலும் மறைந்து போனார். பக்கத்து மேசையின் கடிகாரம் இரவு 2:47 என்று ஒளிர்ந்தது.

அருகில் பிரியா அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள், அவள் மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருந்தது. அந்த அமைதிக்கு அவன் பொறாமைப்பட்டான். ஐந்து நாட்களாக, அப்பா வீட்டில் இருந்து காணாமல் போனதிலிருந்து, தூக்கம் அவனுக்கு எதிரியாகிவிட்டது. கண்களை மூடும்போதெல்லாம் கனவுகள் திரும்பி வந்தன. அப்பா தொலைந்து போய், குழப்பத்தில், ஒருபோதும் வராத உதவிக்காகக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள். ஏதோ வேகமான நெடுஞ்சாலையில் நடக்கையில், பாலத்தில் நடக்கையில், இருண்ட மிரட்டும் தெருக்களில் நடக்கும் காட்சிகள்.

தனஞ்ஜெயன் கவனமாகப் படுக்கையிலிருந்து எழுந்தான், வெறும் கால்கள் இருளில் சமையலறைக்குப் பழகிய பாதையைக் கண்டுபிடித்தன. டம்ளரில் தண்ணீர் நிரப்பும்போது கைகள் நடுங்கின, குளிர்ந்த நீர் பயத்தின் கசப்பு சுவையைக் கழுவ முடியவில்லை. 

அன்று காலை நர்சைப் பற்றி அவருடன் வாக்குவாதம் செய்திருக்க கூடாதோ? ஜிபிஎஸ் டிராக்கரை அப்பாவுக்கு முன்னதாகவே பொருத்தியிருக்க வேண்டுமோ? அவர் எங்காவது காயப்பட்டு, எனக்காக காத்திருக்கிறாரா?

அவன் சமையலறை கவுண்டரை பிடித்துக் கொண்டான். சுவர்கள் நெருங்குவது போல் தோன்றியது, அங்கிருந்த நிசப்தம் எண்ணத்தையும் பெரிதாக்கியது.

அவருடைய ஞாபக மறதி எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதை நான் ஏன் பார்க்கவில்லை? அவரை ஏதேனும் ஒரு நர்ஸிங்க் ஹோமில் சேர்த்து விட்டிருக்க வேண்டுமா?

பின்னர் அந்த எண்ணங்கள் இன்னும் ஆழமாக, இன்னும் கொடுமையாக மாறின. அவன் நெஞ்சு வலித்தது.

நான்தான் காரணமா? இந்த நோய்க்கு நான்தான் காரணமா? அவரை கவனித்துக் கொள்வதில் தவறு செய்தமையால்தான் அவருக்கு நோய் வந்ததோ?  என்ன தவறு செய்திருப்பேன்?

அவன் கைகள் நடுங்கின. வியர்வை நெற்றியில் வழிந்தது, குளிர்ச்சியான அக்டோபர் இரவில் வேர்த்தது. 

காலையில் பிபி மாத்திரை சாப்பிட்டேனா.. மகனாக இருந்து என்ன செய்தேன்? அப்பாவைப் பார்த்துக் கொள்ளத் தெரியுமா எனக்கு? பிரியா சொன்னாள் – நர்ஸிங் ஹோமில் சேர், அவர்கள் தெரிந்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நான் என் பிடிவாதத்தால் அவரை வீட்டிலேயே வைத்துக் கொண்டேன்.

அவன் பேசின் அருகே சென்று குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினான். கண்ணாடியில் தெரிந்த முகம் வெளிறியிருந்தது, கண்கள் சிவந்திருந்தன.

பொறுப்பற்று இருக்கின்றேனா? என் கவனம் அப்பாவிடத்து இல்லையா? கடை, வேலை, பணம்  இதெல்லாம் முக்கியம் என இருந்து விட்டேனா

அவன் வயிறு புரட்டியது. கைகள் உணர்விழந்தன.

அவருக்கு ஏதேனும் நடந்தால் நான்தான் காரணம். நான்தான் அவரை தனியாக விட்டேன். நான்தான் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் குழப்பத்தில் இருக்கும்போது நான் கோபப்பட்டேன். அவர் என்னை மறந்து போகும்போது நான் வருத்தப்பட்டேன். 

தொண்டை வறண்டது, மூச்சு முட்டியது. 

நான் ஒரு மோசமான மகன். நான் தவறான முடிவுகள் எடுத்தேன். நான் அவரை காயப்படுத்தினேன். அவர் தினம் தோறும் என்ன செய்ய வேண்டுமென பட்டியல் கொடுத்தேன். அவரை சிறை கைதியாக்கினேன். இப்போது அவர் எங்கேயோ, குளிரில், பயத்தில், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என் முகம் கூட நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.

அவன் சமையலறை சுவரில் சாய்ந்தான், கால்கள் நடுங்கின. எல்லா வார்த்தைகளும் அவன் நெஞ்சில் கல்லாக விழுந்தன. குற்ற உணர்வு அவனை நிறைத்தது. அவன் உடலில் ஒவ்வொரு இடத்திலும் வலியாக மாறியது.

நான் ஒரு தோல்வி. நான் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவனுக்கு ஏதாவது வேண்டும்,எதுவாயினும்,அவனை மண்ணில் நிலைநிறுத்த, அவனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த மனிதர் இன்னும் இருக்கிறார் என்றும் நினைவூட்ட ஏதேனும் தேவை எனப் பதற்றம் வந்தது.

கடை. அப்பாவின் படம் கல்லாவுக்கு பின்னால் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும், பதினைந்து ஆண்டுகளாயினும் இன்னமும் புதிதாய் இருக்கும் படம். “ஏ1 ஸ்டோர்ஸ்.” என்ற  கடைப்பெயர் கையில் பிடித்துக் கொண்டு இவனை ஒரு கையில் அணைத்துக் கொண்டு இருக்கும் படம். அவருடைய கனவுப்படி அது அமெரிக்காவில் அவர் சொந்தத் தொழில் தொடங்கிய தினம்.அதை படமாக்கி அங்கு பொறித்திருந்தார்்

போய் கார் சாவியைத் தேடி எடுத்தான்.

அந்தப் படத்தைப் பார்க்க முடிந்தால், அவருடைய இருப்பு சாம்பிராணிப் புகை போல இன்னும் மிதந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் நிற்க முடிந்தால்…

தனஞ்ஜெயன் சாவியை எடுத்துக் கொண்டு வர்ஜினியாவின் அக்டோபர் இரவில் வெளியே விரைந்தான், அப்பாவின் ஆறுதலுக்காக ஏக்கம் நிரம்பிய இரவு என அது இருந்தது.

கடையின் பூட்டைத் திறந்து, தனஞ்ஜெயன் உள்ளே நுழைந்தான். அவன் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. கடையின் மணம் அவனை வரவேற்றது, அது சின்ன வயதில் அப்பாவின் மனம். உடலில் நடுக்கம் குறைந்ததை உணர்ந்தான்.

அவன் மெதுவாக கல்லாவை நோக்கி நடந்தான். அங்கே சுவரில் தொங்கிய புகைப்படத்தைப் பார்த்தான். அப்பாவின் பெருமிதமான புன்னகை அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் அருகே போய் நின்று கொண்டான். 

அப்பா கூட இருக்கின்றார்..அப்பா நான் உங்களுடன் இருக்கின்றேன்

அந்த அமைதியான தருணத்தில், எங்கிருந்தோ ஒரு சத்தம் கேட்டது. கிரிச்… கிரிச்…தனஞ்ஜெயன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

எலி இருக்குமோ? ஆனால் எலி இவ்வளவு பெரிய சப்தம் போடுமா?

சத்தம் கடையின் நடுப்பகுதியில் இருந்து வந்தது. அவன் கவனமாக அந்தப் பக்கம் நடந்தான். அங்கே அவன் கண்கள் காட்சி ஒன்றைக் கண்டது. நாற்காலி. அந்தக் காலையில் ப்ளீ மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த பழைய ஓக் நாற்காலி கடையின் நடுவில், இரண்டு அலமாரிகளுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்தது.

என்னதிது, பொறுப்பின்மை. நடுக்கடையில் நாற்காலி..கடையை நான்தானே மூடினேன். இதை ஏன் இங்கே இழுத்து போட்டேன். கடை மூடும் போது அதைக் கடையின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால் எப்படி இங்கே வந்தது?

அதை நோக்கி நடந்தான்.

எல்லாமே மறந்து போகின்றது, நாற்காலியை இழுத்துப் போட்டதே ஞாபகம் இல்லை…. அப்பா மாதிரி நானும் மறக்க ஆரம்பித்துவிட்டேனா?

ஆனால் அவன் நெருங்கும் போது, கடையின் வெப்பநிலை குறைந்ததை உணர்ந்தான். அவன் மூச்சு வெளியில் ஆவியாகத் தெரிந்தது..

நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்து இழுக்க முயன்றான். ஆனால் அது அசையவில்லை. கனமாக இருந்தது, தரையில் வேர்கள் பாய்ந்தது போல அது ஊன்றி இருந்தது.

அவன் இன்னும் வலுவாக இழுத்தான். திடீரென்று நாற்காலியின் மறுபக்கத்தில் யாரோ அதை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பது போல் உணர்ந்தான்.

யாரோ பேசுவது போல வித்தியாசமான சத்தம் வந்தது.. அது… மனிதக் குரல் போல இருந்தது.

தனஞ்ஜெயன் உடனே கைகளை விட்டான். பயம் அவன் முதுகெலும்பில் பாய்ந்தது.

கடையில் குளிர்காற்று எங்கிருந்தோ வந்து வீசி அறை முழுவதை தொட விழைந்தது. அது அவன் இதயத்துடிப்பினை பல மடங்கு அதிகமாக்கியது. அங்கிருந்து ஓட வேண்டுமென நினைத்தான். அவன் பின்வாங்கினான், ஆனால் ஏதோ ஓர் இருப்பு அவனைச் சுற்றி இருப்பதை உணர்ந்தான். கண்ணுக்குத் தெரியாத எதுவோ அவனைக் கவனித்துக் கொண்டிருந்தது.

அவன் இதயம் வேகமாகத் துடித்தது. கைகள் நடுங்கின.

யார் அங்கே?  அவன் குரல் மின்விசிறியில் ஆடும் துணி போல நடுங்கியது.

என் ஜேம்ஸை பார்த்தாயா? குரல் அவன் காதுகளில் ஒலித்தது. ஒலி நோக்கித் திரும்பிய அவனுக்கு மிக அருகே அதைக் கண்டான். அதுவா,அவளா எதுவென தெரியவில்லை.. இருளின் வண்ணத்தில் அவன் முகத்துக்கு அருகே இருந்தும் , இல்லாமலும் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அலறி தனஞ்ஜெயன் பின்னால் சரிந்தான். கை, கால் உதறின. கதவைத் திறந்து வெளியே ஓட நினைத்தான். விழுந்தவன் எழவே முடியவில்லை.

என் ஜேம்ஸை என்ன செய்தாய். அவனை என்னிடம் கொடு! அந்த உருவம் கத்தியது, அருகில் அலமாரியிலிருந்து பொருள்களைத் தூக்கி அவன் மீது  வீசியது. அது தனஞ்ஜெயன் அருகில் மோதி உடைந்தது. பருப்பு பாக்கெட்டுகள் சிதறியது.

யார் ஜேம்ஸ்! நீங்கள் யார்? என்ன வேண்டும்?  தனஞ்செயன் தரையிலிருந்து எழ முயற்சித்தான்.

அந்த உருவம் இப்போது அவனை நெருங்கியது. அது பெண் என உணர்ந்தான். அவள் கண்களில் அழகும் கோபமும் கலந்திருந்தன.

நீ யார்? இந்த ஒக் மரத்தடியில்  என்ன செய்கின்றாய்! நான் செலஸ்டினா வந்துள்ளேன்…! அவள் குரல் எதிரொலித்தது. அது உருவமா, இல்லையா என புகையா தெரியவில்லை, கடையின் கூரை வரை உயர்ந்தாள். அதே வேகத்தில் அவன் முகத்தருகே வந்தாள். ஜேம்ஸ் என்  கணவன் அவன் எங்கே என சொல்கிறாயா , இல்லையா….  அவள் முகம் முழுமையாக அவனுக்குத் தெரிந்தது. அவளிடம் எரியும் தசையின் வீச்சம் எழுந்தது.

தரையில் கதவை நோக்கி பின்னால் நகர்ந்தவனின் காலை பிடித்துத் தூக்கி பக்கத்தில் இருந்த அலமாரியில் வீசினாள். அது சரிந்து விழ அடுத்தடுத்த அலமாரிகள் சரிய ஓவேன தனஞ்ஜெயன் கதறலோடு அதில் விழுந்தான்.

தனஞ்ஜெயனுக்கு யாரேனும் வந்து காப்பாற்றுவார்களா என ஏக்கம் வந்தது. கால்சட்டை பையிலிருந்து தொலைப்பேசியை எடுத்து அதில் அவசர அழைப்பை அழைத்தான். 

அவன் தொலைப்பேசியின் மறுமுனையில் காவல்துறை யார் அழைத்தது எனத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் சொல்ல எத்தனித்த வேளையில் அந்த உருவம் அவனருகில் வந்தது, இந்த முறை புகையாக அன்றி முழு அளவில் அழகிய பெண்ணாக இருந்தாள். அவள் அணிந்திருந்த உடை முழுதும் புகையும், கரியும் படிய நின்று இருந்தாள்.

என்னிடம் சொல்லி விடு …தயவு செய்து சொல்லி விடு…ஜேம்ஸ் எங்கே…அவள் கண்ணீருடன் மன்றாடினாள். அதே வேகத்தில் பின்னே சென்று கடை முழுதும் சுற்றினாள். அவள் எழுப்பிய சப்தத்தில் தனஞ்ஜெயனால் தொலைப்பேசியில்  பேசும் ஆற்றலே இல்லாமல் ஆனான்.

நான் தேடிக் கண்டுபிடித்துச் சொல்கின்றேன்…எப்படி இருப்பாரெனச் சொல்லுங்கள்….எங்கே இருந்தாலும் தேடித் தருகின்றேன்…தயவு செய்து எப்படி இருப்பார் எனச் சொல்லுங்கள்… அவளிடம் கெஞ்சினான். அவள் கால் இருந்திருந்தால் அதைப் பிடித்துக் கொள்ளலாம் என நினைத்தான். அவள் அலமாரி உயரத்தில் நின்றிருந்தாள்.

எனக்குத் தேடித்தருவாயா.. நிறைய நபர்கள் தேடித்தருவேன் எனச் சொல்லி ஏமாற்றி உள்ளார்கள், அவள் ஆர்வமுடன் கேட்டாள். தனஞ்ஜெயனுக்கு காவல்துறை வண்டியின் சைரன் கேட்டது.தவி வருவது நிம்மதியாக இருந்தது. இன்னமும் கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டான்.

அழகிய மோதிரம் அணிந்திருப்பான்…அதில் பூ ஒன்றின் சித்திரம் இருக்கும்….நான் செலஸ்டினா. ஜேம்ஸ் என்னுடையவன்… இந்த செலஸ்டினாவுடையவன்…  அவள் சொன்னாள்.  

கடையின் கண்ணாடிக் கதவை உடையும் சப்தம் கேட்டது. கையை உயர்த்தி ஆயுதம் தூக்கிப் போடுங்கள் என கட்டளை கேட்டது. காவல்துறை உள்ளே வந்தது என உணர்ந்தான். அவன் நிமிர்ந்து பார்க்கையில் அவள் இல்லை. அவனைப் பார்த்து துப்பாக்கியுடன் வந்து கையை தூக்கச் சொன்ன போலீஸ் மட்டுமே தெரிந்தார். 

இந்த சம்பவம் நடந்து மூன்றாம் நாள் மதியம் கடைக்கு வந்தான். உடைந்த கண்ணாடியை மாற்ற வந்த பணியாளருடன் கடைக்குள் நின்ற பொழுது அவனுக்குப் பயமாக இருந்தது. கடை இரண்டு நாட்களாக மூடி இருந்தமையால் வாடிக்கையாளர் யாரும் இல்லை.

சம்பவம் நடக்க காரணம் அவன் சாப்பிடும் பதற்றத்துக்கான மாத்திரையின் பக்கவிளைவு எனப் பிரியா காவல்துறையிடம் சொல்லியிருந்தாள். அது மட்டுமே நம்பும்படி இருந்தது. அவனுக்கே அது மட்டுமே நம்பும்படியாக இருந்து. 

ஏதோ துர்க்கனவு. 

மாமா கிடைத்து விடுவார்..  எனப் பிரியா வீட்டில் இரண்டு நாட்களாக அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தாள். அவள் சொல்லப் பதற்றம் அதிகமானது. 

கடைக்குப் போனால் இதிலிருந்து மாறுதல் வரும் என நம்பினான். இரண்டு நாளாகப் பயத்தில் பதற்றம் குறைக்கும் மாத்திரை சாப்பிடவில்லை. மாத்திரை சாப்பிடாதது இன்னமும் கொஞ்சம் கவலையாக இருந்தது. 

அப்பாவைக் காணவில்லை விளம்பரம் கொடுத்தமைக்கு ஏதேனும் பதில் வந்துள்ளதா என சமூக ஊடகத்தில் தேடினான். இன்னமும் சில வாட்ஸ் குரூப்புகளில் தகவலைப் பகிர்ந்தான்.

காவல்துறைக்கு தொலைப்பேசி செய்து ஏதேனும் தெரிந்ததா என விசாரித்தான். 

எதுவும் உதவவில்லை. பதற்றம் குறைக்கும் மாத்திரை சாப்பிட்டதும் நிம்மதியாக உணர்ந்தான். 

அப்பாவின் அறையைப் போய் எட்டிப் பார்த்தான். அப்பா உங்களை மிஸ் செய்கின்றேன் என சொல்லி அறை சுவரில் சாய்ந்து அழுதான். பிரியா வரும் ஓசை கேட்கவே கடைக்குக் கிளம்பி வந்தான்.

கடையில் கண்ணாடியை மாற்றிக் கொண்டிருந்தார்கள். பிரியா ஏற்கனவே ஆட்களைக் கொண்டு விழுந்த அலமாரியைச் சரி செய்து மீண்டும் பொருள்களை அடுக்கி வைத்து இருந்தாள். அந்த வேலையின் பொழுது அவன் வரவில்லை. இன்று வந்திருந்தான்.

அவனுக்குக் கடைக்குள் போக இருந்த பயம் பல மடங்கு அதிகரித்து இருந்தது. விடுவிடுவென நடந்து போய் அப்பாவின் படத்துக்கு அருகில் நின்று கொண்டான். கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. 

பிரியாவிடம் கடையில் அன்று இரவு  நடந்ததைச்  சொல்லியிருக்கலாம்.. இது அப்பாவின் கடை.. இது என் கடை.. என் கடையில் நானே பயப்படக் கூடாது. 

மெல்லக் கடைக்குள் நடந்தான். அந்த நாற்காலி அலமாரிகளுக்கு நடுவில் இல்லை என்பது அவனுக்கு ஓர் ஓய்வினைத் தந்தது. 

பிரியாவும்,அவனும்  ஹெர்ண்டனில் ஒரு ப்ளிமார்க்கெட்டில் அந்த நாற்காலியை வாங்கினார்கள். ஆண்டுக்கு இரு முறை கூடும் சந்தை. அது 1920ல் ஒக் மரத்தில் செய்த நாற்காலி என அதை விற்றவர் சொன்னார். விற்பனைக்குச் சொல்லும் பொய் என அவன் நினைத்தான். அழகாய் இருந்தது. உண்மையில் அத்தனை பழையது எனில் ஏலத்துக்குச் சென்று இருக்கும். இது ஏதோ கதை விடுகின்றார் என நினைத்தான். கடைக்காரர் அதை 20 ரூபாய்க்கு விற்றார். 20 ரூபாய்க்கு நாற்காலி விற்றவரின் தொலைப்பேசி எண்ணை அன்று வாங்கி வைத்திருந்தான்.

பின்னறைக்கு சென்றான்.கணக்குப் புத்தகங்கள், சிசிடிவி படக்கருவி இருந்தது.

சிசிடிவி ரெக்கார்டிங்கை பார்க்கலாமா? நேற்றே பார்த்திருக்கலாம். 

உள்ளுக்குள் பார்க்கப் பயம் இருந்தது.மூன்று நாளில் ரெக்கார்டிங் தன்னால் அழிந்து விடும்.இன்றைக்கு ரெக்கார்டிங் பார்க்க கடைசி நாள். 

அவன் கண்கள் அந்த  அறையின் மூலையில் இருந்த அந்த நாற்காலியைக் கண்டு கொண்டன.

நாற்காலியைத் தொடலாமா? 

அருகே போனான். ஏனோ தொடத் துணிச்சல் இல்லை.̀ தான் வழக்கமாக அமர்ந்து கணக்குப் பார்க்கும் வேறொரு நாற்காலியில் அமர்ந்தான். கண்ணாடியை மாற்றுபவர்களின் குரல் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. அது துணையாக இருந்தது.

கம்யூட்டரை முடுக்கி லாகின் செய்தான். அன்றைய தின காணொளிக்கு சென்றான். அந்த நேரத்திற்குச் சென்றான். அவன் கடையைத் திறந்ததும், கடைக்கு நடுவில் சென்றதும் இருந்தது. அதற்குப் பிறகு ஒன்றும் இல்லை, பல வண்ணங்களுடன் சிதறல் சிதறலாக இருந்தது, பின்னர் காவல்துறை வந்த காட்சியே இருந்தது. மீண்டும், மீண்டும் ஒட்டிப் பார்த்தான். அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. குழப்பமாக இருந்தது.

இது மாத்திரையின் பக்கவிளைவு இல்லை. வேறு என்னவோ நடந்துள்ளது. பேய் உண்மையில் இருக்கின்றதா?

அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவசரமாக வெளியில் வந்தான். கண்ணாடி மாற்றுபவர்கள் கண்ணில் படும்படி கொஞ்ச நேரம் நின்றிருந்தான். கடை முகப்பில் படத்தில் அப்பா தெரிந்தார். 

இது என் கடை..இது என் கடை.. இங்கு எனக்குப் பயம் இல்லை

திரும்ப பின்னறைக்கு உள்ளே வந்து, மெல்ல நடந்து போய் நாற்காலியை தொட்டான். அந்த நொடி பெரிய உருக் கொண்டு அறையின் கூரையை தொட்டுக் கொண்டு அவள் எழுந்து நின்றிருந்தாள். ஜேம்ஸ் எங்கே என கத்தினாள். வெளியே ஓட நினைத்தான்.திரும்பினால் அவள் அங்கேயும் இருந்தாள். எங்கே ஓடுவது எனத் தெரியவில்லை, கத்த நினைத்தான், குரல் எழவில்லை.தொலைப்பேசி மேஜை மேல் தள்ளி இருந்தது.

பின்னால் நகர்ந்து சுவருடன் ஒட்டிக் கொண்டான்.  அவள் கோபத்துடன் , கர்ஜனையுடன் அவனை நோக்கி வந்தாள். 

தேடுகின்றேன் என்றாய் ,எங்கே ஜேம்ஸ், அவள் கெஞ்சினாள். 

எங்கே தொலைத்தாய், எப்படிக் காணாமல் போனான், எனக் கேட்டான். அவன் உதடுகள் அசையவில்லை, மனதில் அவன் கேட்க நினைத்த கேள்வி. அது அவளுக்குக் கேட்டது போலத் தெரிந்தது.

இந்த மரத்தடியில்தான் என் ஜேம்ஸ் என்னை விட்டுச் சென்றார் எனச் சொல்லி நாற்காலியைக் காட்டினாள். அன்று தீ அங்கே எரிகின்றது பார், அந்தக் கடையில் என் மகள் உள்ளாள் எனத் தீயவன் சொன்னான் , என் கணவர் ஜேம்ஸ் வந்துதான் என் மகளை காப்பாற்றவேண்டும்.. அவர் எங்கே?, அவள் அழுகையும், கோபமுமாய் வெடித்துக் கொண்டிருந்தாள்.

சுவரில் மெல்ல நகர்ந்து தொலைப்பேசிக்கு அருகில் செல்ல தனஞ்ஜெயன் முயன்றான். அடி அடியாக நகர்ந்தான்.

செலஸ்டினா கின்ஸிலியை யாரும் ஏமாற்ற முடியாது, உன்னால்தான் நெருப்பு பிடித்தது எனக் கத்திக் கொண்டே அவள் முழு வேகத்துடன் அவனை நோக்கி நகர்ந்தாள். அவன் கண்ணை மூடிக் கொண்டு ஆவென கத்த நினைத்தான், தான் சரிவதை உணர்ந்தான். கண்ணை இறுக்க மூடிக் கொண்டு எவ்வளவு நேரமிருந்தான் எனத் தெரியவில்லை.

தனஞ்ஜெயன் கன்னத்தில் யாரோ தட்டினார்கள், கண்ணைத் திறவுங்கள்..எங்களைப் பாருங்கள் என யாரோ பேசும் ஒலி கேட்டது. அவன் அருகே ஆம்புலன்ஸில் வரும அவசரக்கால மருத்துவ ஊழியர்கள் நின்று இருந்தார்கள். கண்ணாடி மாற்ற வந்திருந்தவர்கள் கவலையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்துக் கடையிலிருந்து ஆட்கள் வந்து விட்டார்கள். அவனுக்கு என்ன நடக்கின்றது எனப் புரியச் சில நிமிடம் ஆனது.

பின்னறையில் கணினி மீது அவன் மயங்கிக் கிடந்ததாகக் கண்ணாடி மாற்றும் ஊழியர்கள் சொன்னார்கள். அவன் நாற்காலிக்கு அருகில் சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது அவனுக்கு ஞாபகம் இருந்தது. அவர்கள் அவனது மேஜையில் உட்கார்ந்து இருக்கும் நிலையில் மயங்கி இருந்தாகவே சொன்னார்கள்.

காலையில் இருந்து அவன் சாப்பிடாமல் இருந்தது காரணமாக இருக்கலாம், போய் மருத்துவரை ஒரு முறை பாருங்கள் என ஆம்புலன்ஸ் ஊழியர் சொன்னார். அன்று நடந்ததையும் அவன் யாரிடமும் சொல்லவில்லை. 

அன்று அத்துடன் கடையை மூடிவிட்டுக் கிளம்பி விட்டான். காரில் ஏறி அமர்ந்ததும் நாற்காலி விற்றவரின் தொலைப்பேசி எண்ணைத் தேடி எடுத்து அவரை அழைத்தான். “நீங்கள் அழைக்கும் எண் பயன்பாட்டில் இல்லை ” என்ற செய்தி வந்தது. அவன் புருவங்கள் நெரிந்தன. 

ஏன் இந்த எண் பயன்பாட்டில் இல்லை? நாற்காலிக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

காரை வீட்டு வாசலில் நிறுத்தி இறங்கும்போது, பிரியா வாசல் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்தாள். அவள் கையில் தொலைப்பேசி இருந்தது. அவள் முகத்தில் ஆர்வமும், நம்பிக்கையும் ஒட்டியிருந்தது. 

தனா! தனா! , அவளுக்கு மூச்சுத் திணறல் ஆகியிருந்தது. மாமா கிடைத்துவிட்டார்!

தனஞ்ஜெயனின் உலகம் ஒரு நிமிடம் நின்றது. என்ன… என்ன சொன்னாய்?

நியூ ஜெர்சியில் இருந்து ஶ்ரீதர் கணேசன் என ஒரு அங்கிள் தொலைப்பேசியில் அழைத்தார். உங்களுடன் பதினைந்து வருடம் முன் பேர்பேக்சில் குடியிருந்தாராம். அவர் மாமாவின் பழைய நண்பராம். உன் காணவில்லை சோஷியல் மீடியா போஸ்ட் பார்த்து அழைத்தார். மாமாவை பிரிட்ஜ்வாட்டர் கோயிலில் பார்த்திருக்கிறார்!

தனஞ்ஜெயனின் உடலெல்லாம் காற்றில் இலை போலப் பறந்தது. 

நிஜமாகவா பிரியா? உறுதியா? அவன் குரல் உற்சாகத்தில் மங்கியது.

ஆமாம் தனா! அவர் முகவரியும் அனுப்பியிருக்கிறார். உடனே வரச் சொன்னார். பிரியாவின் கண்களில் கண்ணீர்த் துளி. ஒரு வாரமா நாம தேடிக்கிட்டு இருக்கிறோம். இப்பொழுது ஒரு தகவல் வந்திருக்கிறது…

தனஞ்ஜெயன் பிரியாவை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவன் நெஞ்சில் நம்பிக்கையும், பயமும் கலந்திருந்தன. 

இது உண்மையாக இருக்க வேண்டும். தயவுசெய்து இது பொய்யாக இருக்கக் கூடாது…

பிரியா வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தாள். தனஞ்ஜெயன் பயணிகள் இருக்கையில் சாய்ந்து கொண்டான்.  அப்பாவை பற்றி ஒரு செய்தி அவனுக்கு நிம்மதி தந்தது. கண் அசந்து வந்தது.

அந்த வாரத்தில் முதல்முறையாக அவன் நெளியாமல், புரளாமல் தூங்கினான். கனவுகளில் அப்பா கடையில் விற்பனையில் இருந்தார்.

மூன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, பிரின்ஸ்டனில் ஸ்ரீதர் கணேசனின் வீட்டை அடைந்தார்கள். நல்ல பெரிய வீடு, நேர்த்தியான தோட்டம். 

தனா, வந்துவிட்டோம்,பிரியா தனஞ்ஜெயனின் தோளைத் தட்டினாள்.

தனஞ்ஜெயன் கண்விழித்தான். ஒரு கணம் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. பின்னர் நினைவு வந்தது. அப்பா… நியூ ஜெர்சி… நம்பிக்கை…

அவர்கள் காரில் இருந்து இறங்கி வீட்டு வாசலை நோக்கி விரைந்தார்கள். தனஞ்ஜெயனின் இதயம் வேகமாகத் துடித்தது. அவன் கையில் உதறல், பிரியா அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.

கதவு மணி அடித்தார்கள். தனஞ்செயனுக்கு கதவில் புகுந்து மறுபக்கம் போய் அப்பாவை பற்றிக் கேட்க வேண்டுமெனப் பரபரப்பு இருந்தது.

கதவு திறந்தது. வயதான பெண்மணி ஒருவர் வந்தார். அவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அவர் யாரையும் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

யார் நீங்கள்? அவர் கேட்டார்.

தனஞ்ஜெயன் ஆர்வமாக முன்னோக்கி நகர்ந்தான். 

வணக்கம், நான் தனஞ்ஜெயன். இது என் மனைவி பிரியா. ஸ்ரீதர் கணேசன் அங்கிள் இன்று காலையில் எங்களுக்கு போன் செய்தார். என் அப்பா ஶ்ரீதர் அங்கிளின் நண்பர். நீங்கள் பேர்பேக்ஸில் இருந்த பொழுது நாங்கள் உங்கள் பக்கத்து வீடு.  அங்கிள் நேற்று  என் அப்பாவைப் பார்த்ததாக சொன்னார்… பரபரப்புடன் சொன்னான்.

கதவை திறந்த பெண்மணியின் முகம் மாறியது. அவர் கண்களில் அதிர்ச்சி, பின்னர் வருத்தம் தெரிந்தது. அவர் தனஞ்ஜெயனை உற்றுப் பார்த்தார்.

ஓ… நான் சாருமதி…மிஸஸ்,கணேசன்…பதினைந்து வருடங்களுக்கு முன்பு. நீங்கள் சிறுவனாக இருந்தீர்கள்…உங்களை ஞாபகம் இருக்கின்றது.. உள்ளே வாருங்கள்.. அன்புடன் அழைத்தார்.

ஆமாம் ஆண்ட்டி! என் அப்பா எங்கே? அவர் நலமாக இருக்கிறாரா?  தனஞ்ஜெயனின் குரலில் ஆவல் கலந்திருந்தது.

சாருமதியின் முகம் இறுகியது. குரல் கமறியது. உள்ளே வாருங்கள்… தயவுசெய்து…”

தனஞ்ஜெயனுக்கு ஏதோ தவறு என்பது புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. பிரியாவும் சாருமதியின் முகபாவத்தைக் கண்டு கவலைப்பட்டாள்.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். சாருமதி அவர்களை அந்த வீட்டின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஒரு அறையின் கதவைத் திறந்தார்.

படுக்கையில் ஸ்ரீதர் கணேசன் படுத்திருந்தார். அவர் மிகவும் மெலிந்து, வயதானவராகத் தெரிந்தார். அவர் கண்கள் திறந்திருந்தன. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். … நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என தொலைக்காட்சி பாடிக் கொண்டிருந்தது. அவர்களைக் கண்டதும் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சினேமாக புன்னகை செய்தார்.  தனஞ்ஜெயனை கண்டதும் முகம் மலர்ந்தார். அருகில் அழைத்து அவன் முகத்தினைத் தொட்டுப்பார்த்தார். கண்களால் சாருமதியிடம் யார் என கேட்டார்.  அவரிடம் கை அமர்த்தி அப்புறம் சொல்கின்றேன், ரெஸ்ட் எடுங்கள் எனச் சொல்லி அவர்கள் இருவரையும் வெளியே கூட்டி வந்தார். அவர்கள் வெளியே வந்த அதே நொடியில் தொலைக்காட்சி மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் எனத் திரும்பப் பாட ஆரம்பித்தது.

வயதானவர், அரை நொடி கூட தனியாக இருக்க முடியவில்லை… அப்பா என்ன ஆனார்… இவர் நடமாட முடியாமல் அறையில் இருக்கின்றார்… அப்பாவை எப்படிப் பார்த்திருக்க முடியும்… கோயிலா… இல்லை, ஏதோ பொருந்தாமல் இருக்கின்றது…என தனஞ்ஜெயனின் மனம் எதை எதையோ தேடி எடுத்து லெகோ பீஸ்களை பொருத்திப் பார்க்கும் குழந்தையின் மனநிலைக்குச் சென்றது.

என் கணவர்… கடந்த வருடம் குளியலறையில் விழுந்தார்.இடுப்பில் சர்ஜரி நடந்து சில சிக்கல்கள் ஆகி விட்டது. அவர் எலும்பின் வயதுக்கு மருத்துவத்தில் அவ்வளவுதான் செய்ய முடியும்.  அவரால் நடக்க முடியவில்லை..அவர் நடக்கவும் விரும்புவதில்லை.. நான் கட்டாயப்படுத்தி  வீல்சேரில் நான் கூட்டிப் போவதுதான்.  சாருமதியின் குரல் தத்தளித்தது.

அப்படியென்றால்… அவர் கோவிலில் அப்பாவைப் பார்க்கவில்லையா?, தனஞ்ஜெயனின் குரல் உடைந்தது. 

ஶ்ரீதர் ஒரு வருடமாக வீட்டை விட்டு அதிகம் செல்லவில்லை. என்றைக்காவது கோவிலுக்கோ, கடைக்கோ போவோம், நான்தான் கூட்டிப் போவேன், சாருமதி ஒரு கணம் நிறுத்தி, கைகளைப் பின்னிக்  கொண்டார்.  

ஆனால் இரண்டு மாதமாக வீட்டுத் தோட்டத்தினைத் தாண்டி அவர் வெளியே வர மறுத்து விட்டார்…, சாருமதியின் குரல் மெல்லத் தாழ்ந்தது. தலையைத் திருப்பிக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.  

அவர் உங்கள் சோஷியல் மீடியா போஸ்ட்டைப் பார்த்திருப்பார். அவருக்கு யாரோடாவது பேச வேண்டும் என்று தோனும் போதெல்லாம்…,   சாரு  பேசுகையில் கண்களைத் துடைத்துக் கொண்டார். 

இது போல யாருக்காவது அழைத்து விடுகின்றார். தனிமை… அதனால்…அவர் வார்த்தைகள் அங்கேயே நின்று போயின. நிற்க முடியாமல் விருந்தினர் அறையில் இருந்த சோபா ஒன்றில் உட்கார்ந்தார். கைகளை மடியில் வைத்து கண்களை மூடினார்.

தனஞ்ஜெயனின் கால்கள் தள்ளாடின. அவன் அருகிலிருந்த சோபாவில் சரிந்து விழுந்தான். ஒரு வாரமாக எங்கும் கிடைக்காத நம்பிக்கை, இன்று கிடைத்த ஒரே நம்பிக்கை… அதுவும் பொய்…

இல்லை… இல்லை…, அவன் தலையைப் பிடித்துக்கொண்டு கதறினான். அப்பா… அப்பா…

அடக்கி வைத்திருந்த வலி, பயம், ஏமாற்றம் எல்லாம் கண்ணீரானது அவன் தோள்கள் அதிர்ந்தன.

மன்னிக்கவும்… மிகவும் மன்னிக்கவும்… எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் உங்களுக்கு போன் செய்துவிட்டார் என்று எனக்குத் தெரியாது…சாருமதி அவன் அருகில் அமர்ந்து அவன் தோளைத் தட்டினார். 

பிரியா தனஞ்ஜெயனின் அருகில் உட்கார்ந்து அவனை அணைத்துக்கொண்டாள். அவளும் அழுதாள்.

தயவுசெய்து… இன்றிரவு இங்கேயே தங்குங்கள். நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கீர்கள். இப்போது வண்டி ஓட்டி வீடு திரும்புவது பாதுகாப்பானதல்ல, சாருமதி கெஞ்சினார்.

தனஞ்ஜெயன் அவர் முகத்தைப் பார்த்தான். அவர் கண்களில் உண்மையான வருத்தம் இருந்தது. அவர் குடும்பத்திலும் வலி இருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.

சரி ஆண்ட்டி… இன்றிரவு இங்கேயே தங்குகிறோம், ப்ரியா சம்மதித்து பதில் சொன்னாள். தனஞ்ஜெயனை பார்த்தாள், அவனும் ஆமோதித்து தலை அசைத்தான்.

சாருமதி அவர்களுக்கு இரவு உணவு தயாரிக்கச் சென்றார். கொஞ்ச நேரம் கழித்து தனஞ்ஜெயனும் பிரியாவும் சமையலறையில் அமர்ந்து அவரை உதவி செய்துகொண்டிருந்தார்கள். 

சாருமதி வெங்காயத்தை நறுக்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் இலேசாக நடுங்கின. கத்தியை மேசையில் வைத்துவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

உங்களுக்கு… உங்களுக்குக் கோபம் வரலையா? அவர் தனஞ்ஜெயனைப் பார்க்காமல் மெல்லிய குரலில் கேட்டார்.

தனா பதில் சொல்லாமல் விட்டத்தினை வெறித்தான். பிரியா இல்லை எனத் தலை அசைத்தாள்.

சாருமதி ஒரு முறை ஏதோ சொல்ல ஆரம்பித்து ஆரம்பித்து நிறுத்தினார். பின்னர் மீண்டும் ஆரம்பித்தார். “என் கணவர்… அவர் இப்படிச் செய்வது இது முதல் தடவை இல்லை. இது மூன்றாவது தடவை..”

தனஞ்ஜெயன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

“எங்களுக்கு… எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். உனக்கு தெரியுமே தனா. மகன், மகள். இப்போ அவங்க…” அவர் குரல் தடுமாறியது. “அவர்கள் எங்களோடு பேசுவதில்லை. பல வருடங்களாக…”

அவர் அடுப்பில் எண்ணெய் ஊற்றினார். சட்டியில் எண்ணெய் சூடாகும் சத்தம் மட்டுமே கேட்டது.

ஶ்ரீதருக்கு சில நேரங்களில்… அவர் உங்கள் வயசில் இருக்கும் பசங்களைப் பார்த்தால், அவருக்கு அவரோட பிள்ளைங்க நினைவு வருது. பேசனும் என ஆசைப்படறார். முதலில் சோசியல் மீடியாவில் ஏதாவது படங்களைத் தேடி பார்த்து என் மகன் மாதிரி சாயல், மகள் மாதிரி சாயல் எனச் சொல்லுவார். இப்போதெல்லாம் படம் பார்ப்பது மட்டுமில்லாமல் பேசி குரல் கேட்கவும் ஆசைப்படுகின்றார்.

அவர் வெங்காயத்தைச் சட்டியில் போட்டார். சின்ன சின்ன சப்தம். அவர் கண்கள் பளபளத்தன.  

வெங்காயம்.., என சாருமதி கண்களைத் துடைத்துக் கொண்டார். 

அவர் சோஷியல் மீடியால பார்த்து யாருக்காவது போன் பண்ணுவார். தன்னோட பிள்ளைகள் மாதிரி இருப்பவர்களுக்கு. அவருக்கு… அவருக்குத் தெரியும் அது தப்பு. ஆனால் அவரால் பண்ணாமல்  இருக்க முடியலை, சாருவின் விரல்கள் ஒரு கணம் கொதிக்கும் சட்டியைத் தொட்டு உஷ் எனக் கையை பின்னுக்கு இழுத்து விரலை ஊதிக் கொண்டார்.

தனஞ்ஜெயனின் கண் கலங்கியது… அதை சாருமதி பார்த்தார்.

அதே வெங்காயம்… சின்ன சிரிப்புடன் சாருமதி சொன்னார்.

தனஞ்ஜெயனும் சிரித்தான்.

சாருமதி கரண்டியை வைத்துவிட்டு திரும்பினார். ஆரம்பத்தில் நான் ரொம்ப கோபப்பட்டேன். அவரைக் கடிந்தேன். இப்ப கோபப்படுவது இல்லை. அவருக்கும் என்னை விட்டால் ஆள் இல்லை. என் மேற்பார்வை இல்லாது அவரிடம் போன் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றேன்.  ஆனால் நான் என்றைக்காவது அவருக்கு அருகில் இருக்கையிலேயே தூங்கி விடுகின்றேன்.. நான் தூங்குகையில் யாருக்காவது போன் செய்து விடுகின்றார்.. எங்களை மன்னித்து விடுங்கள்,  அவர் தோள்கள் தளர்ந்தன. 

பிரியா எழுந்து சாருமதியின் கையைப் பிடித்தாள். ஆண்ட்டி… நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க? நீங்க எந்தத் தப்பும் பண்ணலை.

தனஞ்ஜெயன் ஆண்ட்டி… .விடுங்கள். இது ஒரு சாபம்..உங்களுக்கும், எனக்கும் அது இருக்கின்றது..நிறைய கவலைப்படாதிங்க, அவன் குரல் தாழ்ந்திருந்தது.

சாருமதி அவன் முகத்தைப் பார்த்தார். இது சாபம் இல்லை தனா..இது நம்ம சாய்ஸ்..ஶ்ரீதர் என் சாய்ஸ், …அப்பொழுது வெங்காயம் முடித்து பச்சை மிளகாய் நறுக்கிக் கொண்டிருந்தார். அழகாக, துல்லியமாக அளவெடுத்த சைஸில் வெட்டிக் கொண்டிருந்தார்.

அவர் கண்களில் நன்றி தெரிந்தது. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப தயாளம்பா.  உங்க அப்பா கண்டிப்பா கிடைப்பார். நம்ம பகவான் கைவிடமாட்டார். போகும் பொழுது கோவில் போயிட்டு போ… சொல்லி விட்டு மளிகைசாமான்களை எடுக்க  சென்றார்.

தனஞ்ஜெயன் சாருமதியை பார்த்துக் கொண்டிருந்தான்

மூவரும் பேச்சினைத் தாண்டிச் சமையல் வேலையில் அமைதியாக நுழைந்தார்கள். அடுப்பில் வெங்காயம், தக்காளி வதங்க ஆரம்பித்தது. சாருமதி கரண்டியை எடுத்து அதை கிளறினார். அவரது அந்த எளிய அசைவில் கூட ஒரு நுட்பம்  இருந்தது என தனஞ்செயன் நினைத்தான். அவர் வாழ்க்கையை வெறும் சுமையாகத் தாங்கவில்லை என அவனுக்குத் தோன்றியது. பிரியாவினை திரும்பிப் பார்த்தான். அவளும் சாருமதியை பார்த்துக் கொண்டிருந்தாள். 

அந்த அமைதி அவனுக்குள் கரைந்துக் கொண்டிருக்கையில் பதற்றம் ஓன்று எங்கிருந்தோ வந்து அசைத்தது. ஏன் அது வந்தது என யோசிக்கும் முன் அதில் இருந்து நகர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது. “சாரு ஆண்ட்டி.. நீங்கள் ஏன் பேர்பேக்ஸில் இருந்து நியுஜெர்சி வந்தீர்கள்…” தனஞ்ஜெயன் கேட்டான். .

ஶ்ரீதர் நியுரா சயின்ஸில் கவ்லி ப்ரைஸ் வென்றதும் இங்கு ஆய்வு பணிக்கு இடம் கிடைத்தது. நானும் எனது அமெரிக்க வரலாறு முனைவர் பட்டம் முடிந்ததும் இங்கு வந்து விட்டேன்… சாரு சட்னி அரைக்க மிக்சியை எடுத்து வைத்தார், 

வா வந்து இதை அரைத்துக் கொடு,  அவர் தனாவை அழைத்தார்.

தனா மிக்ஸியில் வெங்காயம், தக்காளியைப் போட்டு அரைத்தான். மிக்சியின் ஒலியில் பேசுவதை நிறுத்தியிருந்தான்.

சாருமதி இட்லி ஊற்ற தட்டுக்களை எடுத்து வைத்தார். அதில் பிரியா இட்லி ஊற்ற ஆரம்பித்தாள்.

ஆண்ட்டி நீங்கள் அமெரிக்கன் வரலாறு படிச்சவர்தானே, நான் உங்களுக்கு ஹெர்ண்டன் வரலாறு பற்றி ஒன்று கேட்கட்டுமா?,  தனா மெல்ல தன் உள்ளத்தில் இருந்த அடுத்த கேள்வியை வைத்தான்.

முதன் முதலாக அமெரிக்க வரலாறை பற்றி கேள்வி கேட்கும் தமிழ் இளைய தலைமுறையைக் கேட்கின்றேன்..அவசியம் கேள் , சாருமதி சிரித்தார்.

ஹெர்ண்டன் வெர்ஜினியாவுக்கு ஏதாவது கதை இருக்கா?,  மிக்சியின் சப்தத்துக்கு இடையே தனா கேட்டான்.

அமெரிக்காவில் எல்லா ஊருக்கும் வரலாறு இருக்கும், அதுவும் வெர்ஜினியாவில் உள்ள ஊருக்கு இருக்காதா என்ன?.. உனக்கு என்ன தெரியனும்..  

ஏதாவது தீ விபத்து நடந்திருக்கா….” கொஞ்சம் யோசித்தான்.. அவனிடம் அந்த நாற்காலியை விற்கையில் சொல்லப்பட்ட வருடத்தினை நினைவு படுத்தி பார்த்தான். 1920 பக்கத்தில் ஏதாவது தீ விபத்து நடந்ததா..

பிரியா இட்லி குக்கரை திறந்து இட்லி வெந்து விட்டதா என பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே ஒரு கணம் நிறுத்தி தனாவை அதிசயமாகப் பார்த்தாள். ஏதோ ஒரு சம்பவத்தினை இத்தனை ஆர்வமுடன் கேட்கின்றான். இவன் வரலாறெல்லாம் படிக்க மாட்டானே எனப் பார்த்தாள்.

சாருமதி சமைத்த பாத்திரங்களைக் கழுவி கொண்டிருந்ததை நிறுத்தி அவனை நோக்கித் திரும்பினார். ஒரு அர்பன் லெஜெண்ட் கதை உண்டு.. அது வரலாற்றுடன் தொடர்புடையது,,, ஆனால் உண்மையா, பொய்யா என தெரியாது, அதைக் கேட்கின்றாயா?

தனஞ்ஜெயன் மையமாகத் தலை அசைத்தான்.

மேலே போய் ஶ்ரீதருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வருகின்றேன்.. வந்து சாப்பிடும் பொழுது சொல்கின்றேன்.. சாருமதி சொன்னாள்.

இருக்கட்டும் ஆண்ட்டி. என்னிடம் கொடுங்கள், நான் போய் ஶ்ரீதர் அங்கிளுக்கு கொடுக்கின்றேன். என் அப்பாவை பார்க்கனும் என்ற என் ஆசைதான் நிறைவேறவில்லை.. ஶ்ரீதர் அங்கிள் என்னை பார்க்க ஆசைப்பட்டுத்தான் அழைத்தார். அவர் ஆசையாவது நிறைவேறட்டும். கொடுங்கள் நான் போய் கொடுக்கின்றேன்..” தனஞ்ஜெயன் தட்டை வாங்கிக் கொண்டு , அவன் அரைத்த சட்டினியை எடுத்து கொஞ்சம் தொட்டுக் கொள்ளப் பரிமாறி விட்டு , மிக்சி ஜாரை சாருமதியிடம் கொடுத்து விட்டு ஶ்ரீதர் இருந்த அறையை நோக்கி நடந்தான்.

அவன் போவதைப் பிரியா பார்த்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தனா நிதானமாக இருப்பதாக உணர்ந்தாள். அவள் முகத்தில் மெல்லிய முறுவல் ஒன்று வந்தது.  

என்னம்மா ஆச்சு.. என கனிவான குரலில் சாருமதி கேட்டாள்.

பிரியா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். மேஜையின் விளிம்பில் வட்டம் வரைவது போல விரலால் அசைத்துக் கொண்டாள். அவ்வப்போது வாயைத் திறந்து மூடினாள், ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது.சாருமதி அவளை அன்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆறுதலான பார்வையில் பிரியாவின் எதிர்ப்பு கரைந்தது.

ஆண்ட்டி…என ஆரம்பித்து நிறுத்தினாள். தன் கைகளை மடக்கி விரித்தாள்.

என்னம்மா? ,சாருமதியின் குரலில் தாயின் அக்கறை இருந்தது.

பிரியா தலையைச் சற்று குனிந்து, குரல் தாழ்த்தி பேசினாள். தனாவின் அப்பாவுக்கு, என் மாமாவுக்கு… என ஆரம்பித்து, வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது போல நிறுத்தினாள். சில சங்கடங்கள்… அதற்கு வைத்தியம் இல்லை..

 ஏதேனும் மாற்றம் இருக்கின்றதா என்று பார்க்க,அவள் கண்கள் சாருமதியின் முகத்தைத் தேடின. அங்கே சாருவின் கண்களில் சொல், நான் கேட்கின்றேன் என்ற தொனி மட்டுமே கண்டாள்.

தனாவுக்கு… தன்னால்தான் எல்லாமே என்ற குழப்பம். சரி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்…, அவள் குரல் மெல்ல நடுங்கியது.

அவள் கைகள் அவள் அணிந்திருந்த டீசர்டின் நுனியைப் பிசைந்தன. போன வாரம் மாமாவுக்கும் அவனுக்கும் சண்டை…, என்றாள், தலையைத் திருப்பி பார்த்தாள், தனஞ்ஜெயன் அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டாள்.

மாமா ஓவ்வொரு நிமிடமும் என்னென்ன பண்ணவேண்டும் என்று பட்டியல் எழுதிக் கொடுத்துள்ளான், அவள் குரலில் வருத்தம் இருந்தது. அந்த பட்டியலை வைத்துக் கொண்டுதான் அவர் செய்யவேண்டும் என்கின்றான். அது அவருக்கு பிடிக்கவில்லை…

நடுவில் வீட்டுக்கு வரும் நர்ஸ் வேறு ஊருக்குப் போய் விட்டார்கள். புது நர்ஸ் கிடைக்கவில்லை…, அவள் பெருமூச்சு விட்டாள். அந்த நேரத்தில் சண்டை வரவும்… மாமா நள்ளிரவில் கிளம்பி எங்கேயோ போய்விட்டார் என நினைக்கிறோம். 

அவள் குரல் கிசுகிசுப்பாக மாறியது. இரவு எப்பொழுது போனார் என்றே தெரியவில்லை. காலையில்தான் அவர் இல்லை என்பதே எங்களுக்குத் தெரிந்தது…

பெரிய மூச்சு விட்டு, முதல் முறையாக சாருமதியின் கண்களை நேராகப் பார்த்தாள்.  மாமாவுக்கு மருத்துவர் இந்த சங்கடத்தினைச் சொல்லி ஒருவருடம் ஆனது…அன்றைக்கு பதற்றப்பட ஆரம்பித்தவன்… இன்றைக்குத்தான் ஒரு வருடம் கழித்து நிதானமாக இருக்கின்றான். நன்றி ஆண்ட்டி.

அவர்கள் இருவரும் சமைத்த உணவினைச் சாப்பிடும் மேஜையில் எடுத்து வைத்து விட்டு தனஞ்ஜெயனுக்கு காத்திருந்தனர்.

அன்றிரவு உணவை முடித்து விட்டு, சமையலறையில் பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஓய்வாக அமர்ந்தார்கள். சாருமதி தனது அலுவலக அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தினை எடுத்து வந்தார். அதைப் பிரித்துக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்த ஒற்றை ஆள் அமரக்கூடிய பெரிய நாற்காலியில்  அமர்ந்து கொண்டார். அவர் அருகே தனஞ்ஜெயனும், ப்ரியாவும் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டனர். சாருமதி ஹெர்ண்டனின் அர்பன் லெஜண்ட் கதையைச் சொன்னார்.

இந்த கதை ஹெர்ண்டனில் நூறு வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் இல்லை. ஹெர்ண்டன் டவுண்டவுனில் வாய்மொழியாக உள்ள கதை எனச் சொல்லலாம். ஆனால் கதையில் சொல்லப்படும் இடங்களும், ஆட்களும் உண்மை. இது நடந்திருக்கலாம், நடந்திருக்காமலும் இருக்கலாம்.  1917ல் ஹெர்ண்டலின் செலஸ்டினா கிம்பர்லி என்ற பெண் இருந்தாள். ரொம்ப நல்ல மனசு, அன்பான மனைவி, இரண்டு பெண் குழந்தைகளின் அம்மா. ‘கிம்பர்லிஸ் ட்ரெஸ்மேக்கர்ஸ்’ என்ற கடையின் உரிமையாளர். அந்தக் காலத்தில் பெண்கள் தொழில் செய்வது அபூர்வம். அவள் மிகவும் திறமையானவள். அவள் உழைப்பில் அந்தக் கடையை உருவாக்கினாள்.

அவளுடைய கணவர் ஜேம்ஸ் கிம்பர்லி. திருமணமான போது ஜேம்ஸ் சிப்பாய். திருமணம் ஆனதும் ஐரோப்பாவில் போருக்குப் போய்விட்டார். திரும்பி வந்து ராணுவத்தை விட்டு வெளியேறி, மனைவியுடன் தையல் தொழில் செய்து கொண்டிருந்தார். அவர்கள் வாழ்வு நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. அவர்களுக்குத் திருமணம் ஆகி இருபது வருடம் ஆகியிருந்த பொழுது பிரச்சனை ஆரம்பித்தது.

1916 இலையுதிர் காலத் துவக்கத்தில், கிம்பர்லி தன் கணவரைப் பார்த்து ‘நீ யார்? என் வீட்டில் என்ன செய்கிறாய்?’ என்று கேட்டாள். ‘என் கணவர் ஐரோப்பாவில் போரில் இருக்கிறார். நீ அந்நியன்!’ என்று சொல்லி அவரை வீட்டிலிருந்து விரட்ட முயன்றாள்.

அவளுக்குத் தன் குழந்தைகளையும் அடையாளம் தெரியாமல் போனது. ‘இவர்கள் யாருடைய குழந்தைகள்? என் குழந்தைகள் எங்கே?’ என்று கேட்டாள்.

அவர்கள் இடையே சண்டை வர ஆரம்பித்தது. ஊரும், சுற்றமும் அவளுக்குப் பேய் பிடித்திருக்கின்றது என்றார்கள். அவள் யாருடனும் சமாதானம் பேசவில்லை. ஜேம்ஸ் எங்கே என்று எந்நேரமும் புலம்பினாள்.

குளிர் காலம் வந்து போனது, வசந்த காலம் வந்து போனது, கோடைக் காலத் துவக்கத்தில் தினமும் கடையிலும், வீட்டிலும் சண்டை. கடை அருகே இருந்த ஓக் மரத்தின் நிழலில் தனியே அமர்ந்து அழுது கொண்டிருக்கும் செலஸ்டினா ஹெர்ண்டன் டவுண்டவுன் அடையாளங்களில் ஓன்றானது.

செலஸ்டினா பைத்தியம் போல் ஜேம்ஸை தேடினாள். ஜேம்ஸும், குழந்தைகளும் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்கள். ஒரு நாள் கடையில் பெரிய சண்டை. அன்று கடைக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. கடை பற்றி எரிந்தது. அந்த நெருப்பு பரவி பதினாறு கடைகளும் இரண்டு வீடுகளும் எரிந்து போயின.  எட்டுப் பேர் இறந்து போனார்கள். 

ஜேம்ஸ் செலஸ்டினாவை தூக்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தார். அவள் தினந்தோறும் அழும் அதே ஓக் மரத்தடியில் அவளை மடியில் போட்டுக் கொண்டு கதறினார்.  அவள் அவர் மடியில் இறந்து போனாள். கடைசி வரை அவள் அவரை அடையாளம் தெரியாமலேயே போனாள். என் ஜேம்ஸிடம் கூட்டிப் போங்கள் என அழுது கொண்டே இறந்தாள்.

அவள் நினைவாக ஜேம்ஸ் அந்த ஓக் மரத்திலிருந்து ஒரு நாற்காலி செய்தார். ஆறே மாதம் அந்த நாற்காலியில் ஏறி நின்று தூக்கு போட்டுக் கொண்டு இறந்து போனார். அந்த நாற்காலி என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை. ஷெரிப் எடுத்துக் கொண்டு போனார் என ஒரு பேச்சு வந்தது. பின்னர் அவரும் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு இறந்து போனார்.

இன்றைக்கும் அந்த நாற்காலிக்குள் செலஸ்டினா இருக்கின்றாள் எனச் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒரு நாற்காலி உண்மையில் இருக்கின்றதா எனக் கூட யாருக்கும் தெரியாது.  யாரும் பார்த்தது இல்லை. 

இப்போதும் சில நேரங்களில் செலஸ்டினா அந்த நாற்காலியை வைத்திருப்பவர்களிடம் ஜேம்ஸை பற்றிக் கேட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். பதில் சொல்லாத ஆண்கள் இறந்து போவதாகச் சொல்வார்கள். அவள் எந்தப் பெண்களையும் தொந்தரவு செய்வதில்லை. அவளுக்கு எல்லாப் பெண்களும் அவளது மகள்களை நினைவுபடுத்துகின்றார்கள் எனவும் நம்பிக்கை உள்ளது.

சாருமதி கதை சொல்லி விட்டு,  அமைதியானார். கண்ணை மூடி நீண்ட மவுனத்தில் மூழ்கினார். தனஞ்ஜெயனுக்கு இடமும், வெளியும் மறந்தன, அவன் உடன் செலஸ்டினா அமர்ந்து கதை கேட்பதாக உணர்வு எழுந்தது. அவன் கரங்களை இறுக்க பற்றிக் கொண்ட பிரியாவின் உடல் மெல்ல அதிர்வதை கண்டான். சாருமதி கண்ணைத் திறந்து அவர் கையில் இருந்த புத்தகத்தினைத் திறந்து காட்டினார். அதில் நெருப்புக்கு முன்னர் ஹெர்ண்டன், நெருப்புக்கு அப்புறம் ஹெர்ண்டன் இருந்தது. 

நெருப்புக்கு முன்னர் டவுண்டவுனில் இருந்த ‘கிம்பர்லிஸ் ட்ரெஸ்மேக்கர்ஸ்’ கடையும்,ஓக் மரமும் அவனுக்கு இனம் புரியாத உணர்வினைக் கொடுத்தது. வரலாற்றின் மீது அவனுக்கு கேள்வியோ, ஆர்வமோ வாழ்வில் வந்ததே இல்லை, முதல் முறையாக கருப்பு வெள்ளையில் வரலாற்றின் வெளியில் கால நகர்வில் எங்கோ, யாரோ வைத்திருந்த ஒரு கடையின் புகைப்படம் அவனுக்கு தன்னை காணும் கண்ணாடி போல இருந்தது.

தான் உருவாக்கிய தொழிலை இழந்து கணவனையும், குழந்தைகளையும் கண்ணுக்கு முன்னால் கண்டு அவர்களை காணவில்லை என தேடும் செலஸ்டினாவினை நினைத்தால் அவன் உணர்வுகள் காரில் அடிப்பட்ட மான் போல துடித்தது. ஜேம்ஸ் மனைவியை பேய் பிடித்திருக்கின்றது என  பட்ட வேதனை அவனை உலுக்கியது.

ஆண்ட்டி.. செலஸ்டினா மிகுந்த சிரமம் அடைந்திருக்கின்றாள்…இந்த புகைப்படத்தில் அவள் குரலை,அழுகையை காண்கின்றேன், அவள் பதற்றத்தினை, அவள் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுவதை .. தனாவின் குரலில் கவலை இருந்தது.

அவளுக்கும் மாமா போல பிரச்சனை இருந்திருக்குமோ தனா… பிரியா தன் கண்ணைத் திறந்து கேட்டாள்.

தனஞ்ஜெயன் பதில் சொல்லவில்லை. 

சாருமதி  கையில் இருந்த ஆவணக் குறிப்புகளைப் புரட்டிப்பார்த்தார். 

அக்காலத்தில் இத்தனை மருத்துவம் இல்லை பிரியா, என பதில் சொன்னார்.

அந்த நாற்காலி கிடைத்தால் என்ன செய்வீர்கள் ஆண்ட்டி.. தனா கேட்டான்.

தெரியவில்லை, தனா..ஶ்ரீதரை என்ன செய்ய வேண்டுமெனக் கண்டுபிடிக்க எனக்கு எழுபது வயதானது எனச் சொல்லிச் சிரித்தார்.  கவலைப்படாதே தனா, போய் படு, காலையில் நீங்கள் கிளம்பலாம், நான் போய் ஶ்ரீதரை பார்த்து விட்டுத் தூங்குகின்றேன், சாருமதி எழுந்து கிளம்பினார்.

தனஞ்ஜெயன் ஆமோதிப்பாகத் தலை அசைத்தான். ஶ்ரீதரின் அறைக்குள் நுழைந்த சாருமதியை பார்த்தான். அன்பும் , புன்னகையும், சோர்வும், களைப்பும் கொண்டிருந்த முகம். அன்று கனவுகள் இல்லாமல் தூங்கினான். காலையில் உடலில் நடுக்கம், பதற்றம் இல்லை. மனதில் குழப்பம் இல்லை என அவனுக்குத் தோன்றியது.

அதிகாலையில் கிளம்பியதும் காரை நேராகக் கடைக்கு விடச் சொன்னான். பிரியாவினை அனுப்பி நாற்காலியை எடுத்து வரச் சொன்னான். காரில் ஏற்ற சொன்னான்.

என்ன இது, பிரியா கேட்டாள்.

வீட்டுக்கு வா சொல்கின்றேன், என்றான்.

அந்தக் கதை நினைவிலேயே இருக்கின்றது. இந்த நாற்காலியில் செலஸ்டினா இருப்பதாகக் கற்பனை செய்வோம், கிட்டத்தட்ட நூற்று அறுபது வருடங்களாகச் சிக்கிக் கொண்டுள்ளார், அவருக்கு…ஒரு வாரம் அப்பாவை விட்டு… , என ஏதோ சொல்ல வந்தான். என்ன சொல்ல வருகின்றோம் என சொற்களைக் கோர்க்கத் தடுமாறினான். பின் தன் சொல்லைத் தானே விழுங்கி விட்டு நின்றான். அவை தொண்டையில் நின்றன.

அவன் முகத்தில் இருந்த அமைதி பிரியாவுக்கு பிடித்திருந்தது… அவனுக்கு மறுப்பு சொல்ல விரும்பவில்லை.

சடங்காகச் செய்கின்றாயா எனக் கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. பிரியாவிடம் அதன் கால்களை, இருக்கையை, சாய்ந்து கொள்ளும் பலகையைக் கழட்டச் சொன்னான்.  நாற்காலி மீண்டு ஓக் மரத் துண்டுகளானது.

வீட்டின் பின்பக்கம் ஓய்வு நேரத்தில் அமர இருந்த பெரிய தளத்தில் நெருப்புக் குழி இருந்தது. அந்த நெருப்புக் குழியில் அதை வைக்கச் சொன்னான்.  புல் வெட்டும் கருவிக்கு வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்தான். எரிந்தது. அதன் ஜுவாலைகள் நடனமாடின. 

அந்த ஓக் மரத்துண்டுகள் தீயினால் உண்ணப்பட்டு சாம்பலாவது பிரியாவின் அகத்தினை ஊஞ்சல் போல வான் நோக்கியும், மண் நோக்கியும் அசைத்தது. சங்கல்பத்தின் தேவியான ஆகுதியே! அழகிய தேவியே! உன்னை முன்னே வைத்து வணங்குகிறேன், சித்தத்தின் தாயே நீயே, எங்களுக்கு நல்லவளாய் இருப்பாய் என பிரியா சொல்குவித்தாள். சொல்லி முடித்ததும் தனஞ்ஜெயன் தோளில் சாய்ந்து அவன் கரங்களைக் கோர்த்துக் கொண்டாள்.

நன்றி என சொல்லி விட்டு அவளுடைய கோர்த்த கரங்களை முத்தமிட்டான்.

அது முற்றிலும் எரிந்து சாம்பலாகும் வரை அங்கேயே இருந்தான். பிரியாவும் அவனை விட்டு அகலவில்லை. 

சாயங்காலம் காரை எடுத்துக் கொண்டு பொட்டாமாக் நதிக்கரைக்குச் சென்றான். அந்தச் சாம்பலை நீரில் கரைத்தான். கரமெடுத்து வானில் மறையும் சூரியனை வணங்கினான். தன்னையறியாமல் அப்பா சொல்லித் தந்த ஒரு கவிதையை நதிக்கு கேட்க வேண்டிய குரலில் பாடினான்.

செலஸ்டினா,

இந்த பூமியின் பரந்த நிலத்தில் வாழ்ந்தாய்

உன் வாழ்வில் செய்த நன்மைகள் உன்னைக் காக்கும்

இன்று யமனுடன், மூதாதையருடன் சேர்ந்து கொள்

மென்மையான காற்று உன் தோழனாகட்டும்

மழையின் குளிர்ச்சி உன்னை ஆற்றட்டும்

உன் மனதை, உயிரை, உடல் உறுப்புகளை

உன் தேஜஸையும் இங்கே விட்டுச் செல்லாதே

மூதாதையர் உலகிற்குச் செல்

முன்னோர்கள் உன் உடலையும்

உன் பிராணனையும் அபானனையும் ஒன்றாக்கட்டும்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

என்றோ எங்கோ ஏதோ ஒரு மூதாதை கண்டுணர்ந்த உண்மை, இன்று தனஞ்ஜெயன் தன் சொற்களில் பிரதிபலிப்பதை கண்டான். மெல்லிய குளிர் காற்று ஒன்று வந்து தனஞ்ஜெயனை தொட்டு அணைத்தது.அது அவன் நாற்காலியை முதலில் தொட்ட நள்ளிரவின் காற்றைப் போல இருந்தது. தனியாகத் தடுமாறும் என் அப்பாவின் இதயத்துக்கு அமைதியைக் கொடுங்கள் செலஸ்டினா என மனதில் வேண்டிக் கொண்டான். அந்தியின் நிறம் தீயின் ஜுவாலை என அவன் மனதில் இறங்கிய அந்தக் கணம் அப்பாவை பற்றிய தெளிவொன்றை அவன் கண்டான். கூப்பிய கரத்துடன் நின்றிருந்தான். மனதில் சங்கல்பம் ஒன்று கொண்டான்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.