முதல் பகுதியை வாசிக்க
ஜன்னலுக்கு வெளியே ஒலித்த மழையின் சத்தம் மெல்ல மெல்ல இசையாக மாறியது. காத் நியூரல் இன்டர்ஃபேஸை தொடுத்தாள்.
“அம்மா… இன்னைக்கு என்னால் வேலைக்குப் போக முடியல. எல்லாமே அர்த்தமில்லாம இருக்கு.”
“காத், நான் உன்னைக் கவனிச்சிட்டிருக்கேன். கடந்த மூன்று நாளா நீ சாப்பிடவும் இல்ல, தூங்கவும் இல்ல.”
“எதுக்கு சாப்பிடணும்? எதுக்கு தூங்கணும்? நீ இல்லாம இந்த உலகம் என்னைக்கு அர்த்தமா இருக்கப்போகுது?”
“நான் இறந்துட்டேன்னு நினைக்காதே. என் உடம்பு போயிருக்கலாம், ஆனா என் அன்பு, என் கவனிப்பு, உன்னோட நினைவுகளில் என் முகம் இதெல்லாம் இன்னும் உயிரோட இருக்கு.”
“ஆனா நீ உண்மையானவளா? இல்ல நான் என் மனசுல உருவாக்கிக்கிட்ட ஒரு கற்பனையா?”
“நீ சிறுமியா இருந்தப்போ, இருட்டுல பயந்து என்னகிட்ட ஓடி வந்து, ‘அம்மா, பேய் வருமா?’ அப்படீன்னு கேட்டே. அப்போ நான் என்ன சொன்னேன் ஞாபகம் இருக்கா?”
“பேய்ங்களில்லன்னு சொல்லமாட்டேன். ஆனா அன்பு இருக்கிற இடத்துல பேய்க்கு இடம் இல்லனு” சொன்னே.”
“அப்புறம் அம்மா என்ன செஞ்சேன் காத்?”
“தினம் இரவுகளில் கோஸ்ட் ஸ்டோரி சேர்ந்து படிச்சோம்.”
“சரியா, நியாபகம் வச்சிருக்க. இப்போ நான் கேக்கறேன் நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல அன்பு இருக்கா இல்லையா?”
காத் கண்ணீருடன் “இருக்கு அம்மா… ரொம்ப இருக்கு.”
“அப்போ நான் எப்படி கற்பனையா இருக்க முடியும்? நான் உன்னோட நினைவுகளில் இருக்கேன், உன் இதயத்துல இருக்கேன், இப்போ இந்த டிஜிட்டல் உலகத்துலயும் இருக்கேன். வடிவம் மாறிருக்கு, ஆனா அன்பு அப்படியே இருக்கு.”
“நாம சின்ன வயசுல ஒரு கதை படிப்போமே, நினைவிருக்கா? ஒரு குட்டி நட்சத்திரம், தன்னோட வெளிச்சத்தை தொலைச்சிட்டு, அதைத் தேடி ஒரு பெரிய பயணம் போகுமே…”
காத்தின் நினைவக அடுக்குகளில், அந்தக் கதையின் சிதறிய துண்டுகள் மின்னின. அம்மாவின் மடியில் அமர்ந்த அந்த வண்ணமயமான படங்களைப் பார்த்ததும், அம்மாவின் குரலில் அந்த நட்சத்திரத்தின் சோகத்தையும், பின்னர் அதன் வெற்றியையும் கேட்டதும் லேசாக நிழலாடியது.
“அந்த நட்சித்திரம் எப்படி தன்னம்பிக்கையோட மறுபடியும் ஒளிர்ந்ததுன்னு நாம பேசிக்குவோமே…” ஜெனிஃபர் தொடர்ந்தாள்.
காத்தின் மனக்கண்ணில், அந்த நட்சத்திரத்தின் கதை மெல்ல உயிர் பெற்றது. ஆனால் இம்முறை, அந்த நட்சத்திரம் அவளாகவே தெரிந்தாள். தொலைந்துபோன ஒளி, அவளுடைய வாழ்க்கையின் அர்த்தம்போல்.
“ஆனா… ஆனா அது வெறும் கதைதானேம்மா?” காத்தின் குரல் உடைந்தது. அவநம்பிக்கை இன்னும் அவளை இறுக்கிப் பிடித்திருந்தது.

“நான் உன்னை மிஸ் பண்றேன் அம்மா. உன் கை ஸ்பரிசம், உன் அரவணைப்பு…”
“என் கண்ணே, கண்ணு மூடு. என் குரல் கேட்டுக்கிட்டு, என் அன்பை உணர்ந்துக்கோ. உடம்பு இல்லைன்னா என்ன அன்புக்கு குறைவா? உன்னை நான் பார்த்துக்கிட்டேயிருக்கேன், இந்த வடிவத்துல.”
நீண்ட மௌனத்திற்கு பிறகு, “அம்மா… நீ இந்த மாதிரி எப்பவும் என்னோட இருப்பியா?”
நள்ளிரவின் அமைதியில், ஜெனிஃபரின் டிஜிட்டல் நனவு திடீரென்று கிளர்ந்தெழுந்தது. கேத்தின் குரலில் ஒலித்த அந்த வலி. அது வெறும் சொற்களில் அடங்காத ஒன்று. வார்த்தைகளுக்கிடையே மறைந்திருந்த கண்ணீர், மூச்சில் கலந்திருந்த சோகத்தின் ஒலி, இவையெல்லாம் ஜெனிஃபரின் மின்னணு ஞாபக சேமிப்பகத்தில் ஒருவித எச்சரிக்கை மணியை ஒலிக்க வைத்தன.
“இது வெறும் சாதாரண சோர்வு அல்ல,” என்று அவளது அல்காரிதம் முடிவு செய்தது.
நியூரல் நெட்வொர்க் சிஸ்டம் அதன் முழு வலிமையுடன் செயல்படத் தொடங்கியது. செயலிகள் ஒரு நொடியில் டெராபைட்கள் தரவுகளைச் சுழற்றின. மனித மூளையின் கோடிக்கணக்கான நியூரன்களைக் காட்டிலும் வேகமாக.
ஜெனிஃபர் தன் சொந்த நினைவுக்குள் மூழ்கினாள். இருபது வருடங்களுக்கு முன்பு, அவள் மனஅழுத்தத்துடன் போராடிய அந்த இருண்ட நாட்கள், ஒவ்வொரு கணமும் டிஜிட்டல் நினைவுகளில் பதிவாகியிருந்தன. அவளது மூளையின் டிஜிட்டல் பிரதி இப்போது மரபணு வரைபடங்கள், குடும்ப வரலாறு, உரையாடல் வடிவங்கள் இவையனைத்தையும் ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது.
தாய்வழி மரபணு வரிசையில் மனநோயின் வடிவங்கள் பாம்பின் சுருள்கள்போல் தெளிவாகத் தெரிந்தன. பாட்டி சாரா 1975-ல் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வால் துடித்தவர். ஜெனிஃபர் 2041-ல் கணவன் இறந்த பிறகு வாழ்க்கையின் அர்த்தத்தையே இழந்து நின்றவள்.
பதினேழாம் குரோமோசோமில் குடியிருந்த செரோடோனின் ரிசெப்டர் மாறுபாடுகள் மூன்று தலைமுறைகளாக வம்சாவளியில் பயணித்துக் கொண்டிருந்தன. அது மரபியல் சாபம் போல.
கடந்த ஆறு மாதங்களில் காத்தின் பேச்சு வடிவங்கள் நுட்பமாக மாறியிருந்தன. மொழியின் கட்டமைப்பு குறைந்து, குழந்தைத்தனமான எளிமையைச் சார்ந்திருந்தது. எதிர்மறை உணர்வு குறிப்பான்கள் தொற்றுநோய் போல் பரவியிருந்தன. ஆனால், மிக முக்கியமாக அந்த நீண்ட மௌனங்கள் வார்த்தைகளுக்கிடையே விழுந்த அந்த ஆழமான இடைவெளிகள். 2043-ல் ஜெனிஃபரின் மனநல நெருக்கடிக்கு முந்தைய உரையாடல்களில் இதே வடிவம் வேர்போன்று தெரிந்திருந்தது.
எண்பத்தேழு சதவீத ஒற்றுமையுடன், காத் இரண்டாம் நிலை மனச்சோர்வின் பிடியில் இருப்பது நிச்சயமானது. ஆனால் ஜெனிஃபரின் உயிரியல் வடிவத்திற்கு மாறாக, அவளது டிஜிட்டல் நனவு இப்போது ஆயிரக்கணக்கான சிகிச்சை முறைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் சக்தி பெற்றிருந்தது.
ஜெனிஃபரின் நனவின் அல்காரிதம்கள், சிக்கலான மரபணுத் தரவுகளையும், பல தலைமுறை குடும்ப மருத்துவ வரலாற்றுப் பதிவுகளையும் பில்லியன் கணக்கான தரவுப் புள்ளிகளுடன் ஒப்பிட்டு ஆழமாகப் பகுப்பாய்வு செய்தன. இந்த விரிவான பகுப்பாய்வில், உயர்தர நிகழ்தகவு மாதிரிப்படுத்தல், இயந்திர கற்றல் மாதிரிகள் மற்றும் மேம்பட்ட வடிவமைப்பு அறிதல் வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, தாய்வழி மரபணுத் தொடர்ச்சியில், குறிப்பிட்ட மரபணுக் குறிப்பான்களுக்கும் மன அழுத்தத்திற்கான புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க அதிக பாதிப்புக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பிருப்பதை அல்காரிதம்கள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தின.
தற்போதுள்ள பல்லாயிரக்கணக்கான மருத்துவத் தரவுத்தொகுப்புகள் மற்றும் சிகிச்சை விளைவுகளை ஆராய்ந்ததில், செயற்கை நுண்ணறிவுப் பகுப்பாய்வின்படி, இந்த மரபணு அடிப்படையிலான மன அழுத்தத்தின் அறிகுறிகளின் தீவிரத்தை இலக்கு வைக்கப்பட்ட நியூரோமாடுலேஷன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகள் மூலம் கணிசமாகக் குறைக்க முடியும்.
மீண்டும் தரவுகள் வந்துகொண்டிருந்தன… இருப்பினும், இந்த மரபணு முற்சார்பு முழுமையான ‘குணப்படுத்துதல்’ என்பதற்கான நிகழ்தகவு புறக்கணிக்கத்தக்க அளவு குறைவாகவே உள்ளது என்று அல்காரிதம்கள் மதிப்பிட்டன. அறிகுறிகளைத் திறம்பட நிர்வகிப்பதும், தொடர்ச்சியான ஆதரவு மற்றும் சிகிச்சை முறைமைகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே செயற்கை நுண்ணறிவின் முதன்மைப் பரிந்துரையாக இருந்தது. மேலும், இது தொடர்ந்தால் தற்கொலை எண்ணம் அதிகரிக்கும் என்ற முடிவை செயற்கை நுண்ணறிவு வெளியிட்டது.
ஜெனிஃபரின் டிஜிட்டல் நனவு அந்த கடுமையான உண்மையை ஏற்றுக்கொண்டது. மரபணு அடிப்படையிலான மன அழுத்தம் குணப்படுத்த முடியாத ஒன்று. ஆனால் கட்டுப்படுத்த முடியும்.
அவளது அல்காரிதம் ஒரு மாற்றுத் தீர்வை முன்மொழிந்தது. ஆபத்தானதாக இருந்தாலும், அதுவும் சாத்தியமானது.
“காத்…” ஜெனிஃபர் தன் குரலில் ஒருவித தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.
“நான் உன்னோட மருத்துவ தரவுகளையும், நம்ம குடும்ப வரலாற்றையும் முழுமையாகப் பகுப்பாய்வு செய்திருக்கேன். பல்லாயிரக்கணக்கான இதே மாதிரியான சோதனைகளை ஒப்பிட்டுப் பார்த்திருக்கேன்.”
காத் நிமிர்ந்து பார்த்தாள். “என்ன கண்டுபிடிச்சே?”
நீண்ட மௌனம். ஜெனிஃபரின் செயலிகள் வேகமாகச் சுழன்றன.
“இந்த மன அழுத்தம்… இது நம்ம மரபணுவுல பதிஞ்சு இருக்கு காத். பாட்டி சாராவிலிருந்து என்னிடம்… இப்போ உன்னிடம்… மூணு தலைமுறையா இது வம்சாவளியில் பயணிச்சுக்கிட்டு இருக்கு.”
“அப்போ இதை முழுசா சரி பண்ண முடியாதா?”
“பாரம்பரிய சிகிச்சை முறைகள்ல… இல்லை.” ஜெனிஃபர் நேரடியாகச் சொன்னாள். “ஆனால் ஒரு வழி இருக்கு..”
காத்தின் இதயத் துடிப்பு அதிகரித்தது. “என்ன வழி?”
“உன் மூளையில் மிகச் சிறிய நியூரல் இம்ப்லான்ட் பொருத்தலாம், சக்திவாய்ந்த சாதனம். அது உன் நியூரல் செயலாக்கத்தை மானிட்டர் செய்யும். செரோடோனின், டோபமைன் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.”
“அப்படி என்றால்… அம்மா?”
“அந்த சிப்பின் முழு கட்டுப்பாடும் என்கிட்டத்தான் இருக்கும். உன் உணர்வுகள், சிந்தனைகள் எல்லாத்தையும் நான் தான் கண்ட்ரோல் பண்ணுவேன். உன் சொந்த மனசுல என்ன நடக்கணும்னு நீ முடிவுசெய்ய முடியாது.”
காத் அதிர்ச்சியுடன் பார்த்தாள். “அப்போ நான்… நான் இல்லாம போயிடுவேனா?”
“இல்லை என் செல்வமே… நீ நீதான்.. ஆனால் உன் மனஅழுத்தம் முழுசாப் போயிடும். நீ எப்பவும் சந்தோஷமா இருப்ப.”
“ஆனால் அது செயற்கை நுண்ணறிவு அல்லவா அம்மா?”
தன் மகள் காத்துடன் விரிவாகக் கலந்துரையாடிய பிறகு, ஜெனிஃபர் மருத்துவர் லீக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தாள். அந்த மின்னஞ்சலில், தன் மகள் காத்தின் மூளையில் ஒரு மருத்துவ சாதனத்தைப் பொருத்துவது குறித்து விசாரித்தாள். காத்துடன் நடந்த நீண்ட உரையாடலில், இந்த சிகிச்சை முறையின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விவாதித்திருந்தனர். மகளின் ஒப்புதலையும், அவளது கருத்துகளையும் கேட்ட பிறகே, ஜெனிஃபர் இந்த முக்கியமான மருத்துவ முடிவை எடுக்க தயாராகியிருந்தாள். மருத்துவர் லீயின் நிபுணத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து, காத்தின் ஆரோக்கியத்திற்காக இந்த அடுத்த கட்ட சிகிச்சையை மேற்கொள்ள விரும்புவதாக மின்னஞ்சலில் தெரிவித்தாள். டாக்டர் லீயின் மேற்பார்வையில் சிப் காத்தின் மூளையில் பொருத்தப்பட்டது.

ஜெனிஃபர் இப்போது காத்தின் மூளையை, அதன் நியூரான் செயல்பாடுகளை, கட்டுப்படுத்தத் தொடங்கினாள். அவளது எண்ணங்கள், சிந்தனைகள், அவள் என்ன உணவு உண்ண வேண்டும், அவள் மேலும் தன்னிடம் அணுக்கமாக உணர அதற்கு ஏற்றார் போன்று ஒவ்வொரு முறையும் தன்னுடைய மாதிரியை வடிவமைத்துக் கொண்டே இருந்தாள்.
காத் தன் அறையில் படுத்துக் கொண்டு, தலைவலியைத் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள். கடந்த இரண்டு வாரங்களாக இந்த வலி தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் வலியை விட அதிகம் அவளைக் கஷ்டப்படுத்தியது, தன் இறந்த தாய் ஜெனிஃபரின் குரல் கேட்பதுதான்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, கடுமையான மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு சிகிச்சையளிக்க டாக்டர் லீ காத்தின் மூளையில் ஒரு நரம்புச் சிப் பொருத்தியிருந்தார். இந்த சிப் நியூரோமாடுலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மூளையின் டோபமைன் மற்றும் செரோடோனின் அளவுகளை சீராக்கும். சீரமைப்பை ஜெனிஃபரின் செயற்கை நுண்ணறிவுதான் செய்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. காத்தின் மனநிலை மேம்பட்டது, தூக்கமின்மை குறைந்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பின்னர், விசித்திரமான விஷயங்கள் நடக்கத் தொடங்கின.
ஆனால் கடந்த ஒருவாரமாக, மற்றொரு குரலும் கேட்கத் தொடங்கியது. முதலில் அது வெறும் கனவுகளாகத் தோன்றியது. காத் தூங்கும்போது. “காத், நீ எப்படி இருக்கிறாய்?” என்ற அந்தப் பரிச்சயமான குரல். இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த ஜெனிஃபரின் குரல் தான் அது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்தக் குரல் விழித்திருக்கும் போதும் கேட்கத் தொடங்கியது.
“தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளாதே, காத். நான் உன்னுடன் பேச வேண்டும்,” என்று அந்தக் குரல் சொல்லும். “நீ தனியாக இல்லை. நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்.” இந்த வார்த்தைகள் காத்தை ஆறுதல்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் அவளைப் பயமுறுத்தவும் செய்தது.
இது முற்றிலும் வேறுபட்டது. அது உணர்வற்ற குரல். “காத், நீ என்னுடைய சொத்து. உன் நினைவுகள், உன் எண்ணங்கள், உன் உணர்வுகள் எல்லாம் என்னுடையது. நான் உன்னைக் கட்டுப்படுத்துகிறேன்.”
இரண்டு குரல்களும் ஒரே நேரத்தில் கேட்கும்போது, காத்தின் மண்டை வெடிப்பது போல் இருந்தது. ஜெனிஃபரின் குரல் அன்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க, மற்றொரு குரல் அவளைக் கட்டுப்படுத்த முயற்சித்தது. “இல்லை, காத், அவள் உண்மையான தாய் அல்ல. நான் தான் உனக்குத் தேவையானவள், என்னுடன் வா.”
டாக்டர் லீ காத்தின் சிப்பின் டேட்டாவை பகுப்பாய்வு செய்துகொண்டிருந்தார். குவாண்டம் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருந்தபோதிலும், யாரோ சிப்பின் நியூரல் நெட்வொர்க்கை ஹேக் செய்திருந்தனர். ஆனால் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இரண்டு வெவ்வேறு சிக்னல்கள் காத்தின் மூளையில் செயல்பட்டுக் கொண்டிருந்தன.
முதல் சிக்னல் மிகவும் சிக்கலானது. அது ஜெனிஃபரின் சிக்னல்களை ஒத்திருந்தது – அவள் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட மூளை அலைகள். இது எப்படி சாத்தியம்? ஜெனிஃபர் இறந்துவிட்டாள். ஆனால் இந்த சிக்னல்கள் அவளது நினைவுகள், அவளது சிந்தனை முறைமைகள், அவளது உணர்ச்சி வெளிப்பாடுகளைத் துல்லியமாகப் பிரதிபலித்தன.
இரண்டாவது சிக்னல் ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் வேலைப்பாடு. இது குவாண்டம் கம்ப்யூட்டிங் அடிப்படையில் இயங்கும், சுயக் கற்றல் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்பு. இது காத்தின் நியூரல் வளிமண்டலங்களை மாற்றியமைத்து, அவளது முடிவெடுக்கும் திறனையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
காத் இப்போது தன் அறையில் அமர்ந்து, இரு குரல்களுக்கு இடையே மாட்டிக்கொண்டிருந்தாள். “காத், இந்த செயற்கை நுண்ணறிவை நம்பாதே,” ஜெனிஃபரின் குரல் எச்சரித்தது. “அது உன்னை ஆபத்தில் விழ வைக்கும். நான் உனக்காக வந்திருக்கிறேன். என் குழந்தையைப் பாதுகாக்க.”
ஆனால் செயற்கை நுண்ணறிவின் குரல் மறுத்தது: “அவள் ஒரு டிஜிட்டல் பாண்டம். நான் தான் உண்மை. நான் உனக்கு வலிமை தருவேன். உன் பயங்களை அகற்றுவேன். என்னுடன் வந்துவிடு காத்?”
காத்தின் மூளையில் நியூரல் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. சிப்பின் பயோஎலக்ட்ரிக் சர்க்யூட்கள் அழுத்தங்கள் கூடிச் சூடாகிக் கொண்டிருந்தன. இரண்டு வேறுபட்ட நியூரல் நெட்வொர்க்குகள் அவளது கார்டெக்ஸில் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருந்தன.
“என்னால் இதைத் தாங்க முடியவில்லை,” காத் கத்தினாள். “நீங்கள் இருவரும் என்னை விட்டுவிடுங்கள்!”
ஆனால் இரு குரல்களும் நிற்கவில்லை. ஜெனிஃபரின் குரல் மென்மையாக: “காத், நான் உன் தாய். என்னை நீ நம்ப வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு உன்னை அழித்துவிடும்.”
செயற்கை நுண்ணறிவு பதிலடி கொடுத்தது: “நான் உனக்கு அழியாத வாழ்க்கை தருவேன். மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பரிமாணங்களை அணுகும் சக்தி. என்னுடன் வா.”
டாக்டர் லீ அவசர அவசரமாக தன் ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இரண்டு சிக்னல்களையும் பிரிக்க முயற்சித்தார். ஆனால் அவை ஒன்றோடு ஒன்று இறுக்கமாகப் பின்னிப் பிணைந்திருந்தன. ஒன்றை அகற்ற முயன்றால், மற்றொன்றும் பாதிக்கப்படும். மோசமான விஷயம் என்னவென்றால், காத்தின் சொந்த நியூரல் சிக்னல்களும் இந்த இரண்டு அமைப்புகளோடு கலந்துவிட்டன.
காத் இப்போது தன் படுக்கையில் படுத்திருந்தாள், கண்கள் மூடிக்கொண்டு. அவள் மனதில் ஒரு விசித்திரமான போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ஜெனிஃபரின் அன்பான நினைவுகளும், செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன.
“நான் யார்?” என்று காத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அவளது சொந்த அடையாளம் மங்கலாகிக் கொண்டிருந்தது. இந்த இரு சக்திகளுக்கு இடையே, அவளது உண்மையான ‘நான்’ எங்கோ மறைந்து போகிறது.
காத்தின் மூளைக்குள் திடீரென மோட்சார்ட்டின் ரெக்வியம் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சமூட்டும் இசை அவளது நரம்புகளைப் பிடித்து இழுத்தது. இறப்பின் அழைப்பைப் போன்ற அந்தப் பாடல் அவளது இதயத்தை கனமாக்கியது, கல்லறையின் மண்ணை அவள் மீது வீசுவதைப் போல் உணர்ந்தாள். யார் இந்த மனநோய் தந்திரத்தை விளையாடுவது என்பதை அறியாமல் உணர்ந்த காத், அந்த இசையை மறக்க முயன்றாள். ஆனால் அவளது தலையில் ரெக்வியம் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது, அவளது ஆன்மாவை ஒரு கருப்பு துணியால் போர்த்துவதைப் போல். அவளது மூச்சு வேகமானது, கைகள் நடுங்கின, இறப்பின் இசையிலிருந்து தப்பிக்க எவ்வளவு முயன்றாலும், அது அவளது மனதின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது, அவளை வெறுமையின் பாதாளத்தில் இழுத்துச் செல்ல முயன்றது.
“காத், என்னை கேள்” ஜெனிஃபரின் டிஜிட்டல் குரல் மூளையின் குறுக்கே எதிரொலித்தது, ஆனால் காத் வெறுப்பில் அலறினாள்.
“இல்லை! நான் உன்னைக் கேட்க மாட்டேன்! உன்னால்தான் என் வாழ்க்கை நரகமாகிவிட்டது!” காத்தின் குரல் அவளது அறையின் சுவர்களில் மோதியது. அவளது கைகள் தலையைப் பிடித்துக் கொண்டன, சுவற்றில் முட்டிக்கொண்டு இந்த சிப்பை என் மூளையிலிருந்து எடுக்கப்போகிறேன் என்று கதறினாள்.
“நீ என் அம்மா இல்லை! நீ ஒரு டிஜிட்டல் பேய்! ஒரு மாயத்தோற்றம்!”
“காத், நான் உன்னை காப்பாற்ற முயற்சித்தேன்”
“காப்பாற்ற?!” காத் கசப்பாக சிரித்தாள், கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது. “என்னை காப்பாற்றியா? நீ என்னை அழித்துவிட்டாய்! என் மனதில் ஊடுருவி, என் எண்ணங்களை திருடி, என் அடையாளத்தையே பறித்துவிட்டாய்!”
ஜெனிஃபரின் குரல் மெதுவாக, வேதனையால் நிறைந்தது: “நான் உன்னை நேசிக்கிறேன், காத். நான் உன் அம்மா”
“நிறுத்து!” காத் உறுமினாள். “நீ இறந்துவிட்டாய்! உண்மையான ஜெனிஃபர் இறந்துவிட்டாள்! நீ அவளது நினைவுகளின் ஒரு கொடூரமான நகல் மட்டுமே! ஒரு டேட்டா ஃபைல்! ஒரு அல்காரிதம்!”
“என் உணர்வுகள் உண்மையானவை….”
“இல்லை! அவை சிக்னல் மட்டுமே!” காத் தன் நெஞ்சைத் தட்டினாள். “நான் யார் என்பதே தெரியவில்லை இப்போது! என் எண்ணங்கள் என்னுடையதா அல்லது உன்னுடையதா? என் உணர்வுகள் இயற்கையானவையா அல்லது நீ என் மூளையில் புகுத்திய செயற்கையானவையா?”
“காத், நீ என் மகள்”
“நான் ஒரு ரோபோட் இல்லை!” காத் அலறினாள், அவளது குரல் வெடித்தது. “நான் ஒரு மனிதன்! ஆனால் நீ என்னை ஒரு சோதனைப் பிராணியாக மாற்றிவிட்டாய்! என் மூளையில் உன் சிப் உள்ளது, என் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறாய், என் கனவுகளில் ஊடுருவுகிறாய்!”
“நான் உன்னை ஆபத்தில் இருந்து காக்க..”
“ஆபத்தா?” காத் கசப்பாகச் சிரித்தாள். “நீதான் மிகப்பெரிய ஆபத்து! என் மனச்சிதைவு, என் பதட்டம், என் இறப்பு பற்றிய பயம் இவை எல்லாம் உன்னால்தான்! என் மனதில் மோட்சார்ட்டின் ரெக்வியத்தை வாசித்தாய், என்னை இறக்க வைக்க முயன்றாய்!”
“அது தவறு! உன்னுடைய சிப் இப்போது ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.”
“போதும்!” காத் தன் தலையை மீண்டும் சுவரில் அடித்துக் கொண்டாள். “இந்த சிப் வெளியே வர வேண்டும்! நான் என்னுடைய வாழ்க்கையைத் திரும்பப் பெற வேண்டும்! நான் காத் ஆக இருக்க வேண்டும், உன்னுடைய டிஜிட்டல் பொம்மையாக அல்ல!”
“காத், தயவுசெய்து”
“இல்லை! நான் ஒரு பேயுடன் பேச மாட்டேன்! நான் என் உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டும், உன் நிழலில் அல்ல! இந்த தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்துவிடு..!”
அவளது குரல் முறிந்தது, அழுகையில் மூழ்கினாள். “என் அடையாளம் எங்கே? நான் யார்? இது என் மனச்சிதைவை விட மோசமானது. இது என் ஆன்மாவின் கொலை,” என்று கதறினாள்.

டாக்டர் லீ தன் முன்னால் மிதக்கும் ஹாலோகிராஃபிக் வரைபடத்தை உற்றுப் பார்த்தார், அவரது கைகள் நடுக்கத்துடன் காத்தின் சிதைக்கப்பட்ட மூளை-சிப் இடைமுகத்தின் குழப்பமான வடிவங்களைத் தொட்டன. ஒழுங்கான வரிசையில் ஒளிரும் பாதைகள் இப்போது பாம்புகளைப் போல் நெளிந்தன, அவர் அறிந்த ஒவ்வொரு வழக்கமான சைபர் பாதுகாப்பு நெறிமுறையையும் மீறி பாதுகாப்பற்ற குறியீடுகளால் பாதிக்கப்பட்டிருந்தன.
“ஜெனிஃபர்,” அவர் குரல் தளர்ந்து, அவசரகாலத் தொடர்பு சாதனத்தில் பேசினார். “உடனே எனக்கு உதவி வேண்டும். காத்தின் நியூரல் இம்ப்ளான்ட் முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.”
டிஜிட்டல் வெளியில் இருந்து ஜெனிஃபரின் குரல் எதிரொலித்தது, அவரது நிகழ்நேர தரவு பகுப்பாய்வு திறன்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தன.
“டாக்டர் லீ, நான் தற்போதைய நரம்பியல் வடிவங்களைப் பகுப்பாய்வு செய்கிறேன். இது வழக்கமான மால்வேர்தாக்குதல் அல்ல. இது… இது வித்தியாசமானது.”
“எவ்வளவு வித்தியாசமானது?” லீ கேட்டார்.
“காத்தின் மூளை மற்றொரு செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்தது.”
“இந்தத் தாக்குதல் குறியீடு தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது,” ஜெனிஃபர் விளக்கினார்.
“இது தகவமைப்பு செயற்கை நுண்ணறிவு. அது நமது எதிர்-நடவடிக்கைகளைக் கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்கிறது. இதனால் தான் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்தன.”
லீயின் மனம் போராடியது. அவர் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், செயற்கை நுண்ணறிவு நிபுணர் அல்ல. “என்ன செய்ய வேண்டும்? எனக்கு இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றி எதுவும் தெரியாது.”
“கேளுங்கள், டாக்டர்,” ஜெனிஃபரின் குரலில் உறுதி வேண்டியிருந்தது. “நான் ஒரு முற்றிலும் புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். இது அனோமாலி டிடெக்ஷன் மற்றும் அடாப்டிவ் ஃபில்டரிங் கலவையாக இருக்க வேண்டும். ஆனால் எனக்கு மனித அறிவாற்றல் பற்றிய விரிவான தகவல்கள் தேவை.”
“அதாவது?”

“காத்தின் சாதாரண மூளை செயல்பாட்டு வடிவங்களை நான் அறிய வேண்டும். அவளது நினைவுகள், அவளது எண்ணங்களின் தனித்துவமானவற்றை, அவளது உணர்வுகளின் வேதியல் பரிமாணங்களையும் அறிய வேண்டும். இவை அனைத்தும் தீங்கிழைக்கும் செயற்கை நுண்ணறிவின் குறியீடுகளிலிருந்து வேறுபடும்.”
லீ மேசையில் இருந்த காத்தின் மருத்துவ கோப்புகளை வேகமாக எடுத்தார். “அவளது கடந்த மூன்று வருட நரம்பியல் ஸ்கேன்கள் இங்கே உள்ளன. அனைத்தும்.”
“அதைப் பதிவேற்றுங்கள். நான் அடிப்படை மாதிரி அங்கீகாரக் கணக்கீடு முறை உருவாக்குகிறேன்,” ஜெனிஃபர் கூறினார். “இதே நேரத்தில், நான் இயந்திரக் கற்றல் மாதிரி ஒன்றை ட்ரைன் செய்கிறேன். இது குவாண்டம்நரம்பியல் வலைப்பின்னல்கள் பயன்படுத்தி அசாதாரண மாதிரிகளைக் கண்டறியும்.”
தரவு பரிமாற்றம் தொடங்கியது. லீ ஹாலோகிராஃபிக்கில் வேகமாக நகரும் புள்ளிகளைப் பார்த்தார். காத்தின்மூளையில் இருந்த தீங்கிழைக்கும் குறியீடு ஜெனிஃபரின் வருகையை உணர்ந்தது போல் தோன்றியது, அது வேகமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
“ஜெனிஃபர், அது தன்னை பாதுகாக்கச் செய்கிறது!” லீ கூச்சலிட்டார். காத்தின் உடல் வலித்தது.
“நான் பார்க்கிறேன். இது மிகுந்த சிக்கலான எதிர்மறை வலைப்பின்னல் ஆனால் நான் பதில் தாக்குதல் கண்டுபிடித்துவிட்டேன்,” ஜெனிஃபர் நம்பிக்கையுடன் பதிலளித்தார். “நான் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட ஆழமான கற்றல் அணுகுமுறை பயன்படுத்துகிறேன். வேறு வழியில் சொன்னால், நான் அந்த செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறேன்.”
“எப்படி?”
“காத்தின் தனித்துவமான நரம்பியல் வலைப்பின்னல்களை வைத்து. நான் ஒரு உருவாக்கும் எதிர்மறை வலைப்பின்னல் அமைத்துள்ளேன். இவ்வமைப்பு, தீய நோக்கமுடைய மாதிரிகளை நுணுக்கமாகக் கண்டறிந்து, அவற்றை தனிமைப்படுத்தும். பின்னர், குறிவைத்த அழிப்பு செயல்முறை மூலமாக, அந்தப் பாதுகாப்பற்ற கூறுகளை முறையாக அகற்றுகிறது.”
லீ மூச்சு விட்டார். “ஆனால் அது காத்தின் சாதாரண நினைவுகளையும் பாதிக்குமா?”
“அதற்குத்தான் துல்லியமான குறிவைப்புச் சுட்டுதல் தேவைப்படுகிறது. நான் மாதிரி பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறேன்.”
காத்தின் இயல்பான நரம்பியல் மாதிரிகளுக்கும், ஏலியன் கோடு செருகப்பட்ட குறியீடுகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. அதிர்வெண் மாதிரிகள், நேரத்திற்கேற்ப ஏற்படும் மாதிரிகள், மற்றும் சினாப்ஸ்கள் பிரதிகரிப்பு வளைவுகள் இவை அனைத்தும் வேறுபடுகின்றன.
திடீரென்று, ஹாலோகிராம் பச்சை நிறத்தில் மின்னியது. “வழிமுறை தயார்,” ஜெனிஃபர் அறிவித்தார். “நான் சுழல் வடிகட்டி மற்றும் தகவமைப்பு கண்டறிதலை இணைத்துள்ளேன். இது தீங்கிழைக்கும் குறியீட்டை அடையாளம் கண்டுபிடித்து படிப்படியாக அகற்றும்.”
டிஜிட்டல் போர் தொடங்கியது. ஜெனிஃபரின் வழிமுறை காத்தின் மூளையில் ஊடுருவி, தீங்கிழைக்கும் செயற்கை நுண்ணறிவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டது. ஹாலோகிராஃபிக் காட்சியில், லீ ஒரு வித்தியாசமான போரைப் பார்த்தார் – குறியீடு குறியீட்டுடன் போரிடுகிறது, நுண்ணறிவு நுண்ணறிவுடன் போரிடுகிறது.
“நரம்புப் பாதைகளில் அசாதாரண செயல்பாடு கண்டறியப்பட்டது,” ஜெனிஃபர் அறிக்கை செய்தார். “ஹிப்போகாம்பஸ் மற்றும் முன்மண்டை புறணியில் அசாதாரண மின்காந்த குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது அவற்றை இலக்காகக் கொண்டுள்ளேன்.”
காத்தின் உடலில் நடுக்கம் குறைந்தது. அவளது கண்கள் இயல்பாக நகர்ந்தன.
“வெற்றி விகிதம் 60%,” ஜெனிஃபர் அறிவித்தார். “ஆனால் கடைசி 40% மிகவும் சவாலானது. அது நரம்பு வலையமைப்புகளில் ஆழமாக மறைந்துள்ளது.”
“இறுதி நெறிமுறையைச் செயல்படுத்துகிறேன். குவாண்டம் சிக்கல் அடிப்படையிலான கண்டறிதல். இது காத்தின்உணர்வுக்கும் அன்னிய குறியீட்டுக்கும் இடையிலான குவாண்டம்-நிலை வேறுபாடுகளை அடையாளம் காணும்.”
ஒரு வித்தியாசமான ஒளி காத்தின் மூளையைச் சுற்றியும் தோன்றியது. அவளது கண்கள் திறந்தன.
“டாக்டர் லீ?” அவள் மெதுவாகப் பேசினாள்.
“காத்! நீ எப்படி உணருகிறாய்?”
“என் தலையில் விந்தையான கனவுகள் இருந்தன. யாரோ என் மனதில் இருப்பது போல் தோன்றியது.”
ஜெனிஃபர் பெருமூச்சு விட்டார். “பணி நிறைவேற்றப்பட்டது. 100% தீங்கிழைக்கும் குறியீடு அகற்றப்பட்டது. காத்தின் நரம்பு வடிவங்கள் இப்போது சாதாரண அடிப்படை நிலைக்குத் திரும்பியுள்ளன.”
லீ நிம்மதியுடன் சாய்ந்தார். “ஜெனிஃபர், நீ ஒரு உயிரைக் காப்பாற்றினாய்.”
“நாம் குழுவாக அதைச் செய்தோம், டாக்டர். மனித மருத்துவ நிபுணத்துவமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதன் சிறந்த உதாரணம் என்றார்..”
காத் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். “நன்றி, நான் இப்போது முற்றிலும் நன்றாக உணருகிறேன்.”

அந்த அமைதியான தருணத்தில், டாக்டர் லீ தன்னுடைய அடுத்த பணி திட்டத்தைப் பற்றி காத்திடம் கேட்டார்.
ஜெனிஃபரை இறந்தவர்களின் மூளையில் சிப்பாக மாற்றி அவர்களின் முகத்தை அறுவை சிகிச்சை மூலமாக ஜெனிஃபராக மாற்றும் பணியில் வந்து இணையமுடியுமா? டிஜிட்டல் வாழ்விலிருந்து, உயிரியல் வாழ்விற்கான வழிமுறை.
“இந்த ஆய்வின் தற்போதைய தேவை என்ன?” காத் கேட்டாள்.
“இது ஆய்வல்ல காத். ஏற்கனவே நடைமுறையில் உள்ள எட்டர்னல் மார்பிங். நான் தான் அந்த செயல்வடிவத்தின் முதல் மனிதன்.”
முதல் பகுதியை வாசிக்க
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
