நாள்: 02. 05. 2025
நேரம்: 9:24 AM
காலை விழித்ததும் கடும் பசி.
அம்மாவை நினைத்துக்கொண்டேன். அம்பத்தூரில் அரசு பூங்காவை ஒட்டினாற்போல் இருக்கும் சிறிய சந்தில் இரண்டே அறைகள் கொண்ட இந்த மாடிவீட்டில் நானும் அவளும் வாழ்ந்த காலங்கள் சித்திரத் துணுக்குகளாக கண்முன் வருகிறது. கிழிசல் புடவைகளை அழகாக மடித்துத் தைத்து அவள் உருவாக்கும் தலையணைகளை, எஞ்சியிருக்கும் காய்கறிகளை நறுக்கிப்போட்டு அவள் செய்யும் அவியல் குழம்பை எண்ணும்பொழுது எனது தற்போதைய வாழ்வின் மேல் கடும் அதிருப்தி உண்டாகிறது.
கொடைக்கானலில் மாளிகைபோல் இருக்கும் வீட்டை பெரியப் பூட்டைக் கொண்டு பூட்டிவிட்டு, தேவையான புத்தகங்களும், நான்கைந்து துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு எனது பழைய வாழ்வின் சின்னமாக இருக்கும் இந்த வீட்டை தேடிவந்தது ஏன்?
சிறிய நினைவொன்றை அகழ்ந்து அளிக்கிறது மனம்.
ஒருநாள் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மிளகாயை கடித்துவிட்டேன். நாக்கில் அமிலம் பட்டதைப்போல், “உஸ்! உஸ்!” என்று நான் தவித்துக்கொண்டிருந்தபோது அடுக்களையில் இருந்து சிரித்துக்கொண்டே வெளியேறினாள் அம்மா.
“சிரிக்க என்ன இருக்கு இதுல?” என்று நான் ஆங்காரத்துடன் கேட்டேன்.
“விதைச்ச வினை எப்படியெல்லாம் திரும்ப வருது பாரு!” என்றாள் அவள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சாப்பிட்டு முடித்த பிறகு என்னை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று அவள் வளர்க்கும் மிளகாய்ச் செடியைக் காண்பித்து, “விளங்குதா?” என்று கேட்டாள்.
நான் சில நொடிகள் முழித்தேன். கொஞ்சம் உற்று நோக்கியபோது எல்லாம் புரிந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஏதோ ஆத்திரத்தில் நான் எட்டி மிதித்து உதைத்த வாளிதான் அந்த மிளகாய்ச் செடியை ஏந்தியிருந்தது.
அக்கணம் என்னுள் தெறித்த பொறியை, ஊதித் தணலாக்கி நீண்ட நாவல் ஒன்றையே எழுதிவிட்டேன். அதன் செறிவாக்கப்படாத வடிவத்தை வாசித்துவிட்டு என்னை வெகுவாக பாராட்டினாள் அம்மா.
நான் மெல்லிய முறுவலுடன், “இதுவும் நீ விதைச்சதுதான்” என்றேன்.
நேரம்: 11:07 AM
மாளிகைபோன்ற எனது வீட்டிற்கும், அதனை எனக்கு அமைத்துக்கொடுத்த திரைத்துறைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இந்த குருவிக்கூட்டிற்குத் திரும்பிய காரணம் இதுதான்.
எனக்கு எழுதவேண்டும்.
மேற்படி குறிப்பிட்ட நாவல்தான் நான் கடைசியாக எழுதியது. பிரசுரமான சில நாட்களிலேயே இலக்கியச் சூழலில் அது பேசுபொருள் ஆனது. நான் மதிக்கும் சக எழுத்தாளர்கள் அதை சிலாகித்துக் கட்டுரைகள் எழுதினர். நூலும் விற்றது. ஆனால் அந்தப் பணத்தை வைத்து இரண்டு பேருக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் கூட வாங்க முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் பிரபல இயக்குனர் ஒருவரின் மேனேஜர் என்னை தொடர்புகொண்டார்.
இரண்டு வருடங்கள் கழித்து எனது நாவலை மையமாக வைத்து அந்த இயக்குனர் இயக்கியத் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. அதே கதையை கொஞ்சம் புரட்டிப்போட்டு அவர் எடுத்த தொடர் தேசிய அளவில் பாராட்டுக்கள் பெற்றது.
அதன் பிறகு எனக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் துவங்கின. என்னை தொடர்புகொண்ட அனைவரும் அதே சாயல்கொண்ட கதைகளையே கோரினார்கள். நானும் அதை சளைக்காமல் கொடுத்தேன். ஒரே கதை, அதில் வெவ்வேறு வண்ணம் பூசி, பத்து பதினைந்து திரைக்கதைகள் எழுதி விற்றேன். அனைத்தும் ஹிட்.
கொடைக்கானலில் வீடு வந்தது. மார்க்கெட் இழக்கத் துவங்கியிருந்த நடிகை ஒருத்தி எனக்கு மனைவியானாள். மகன் பிறந்தான்.
நான் முழுநேர திரைக்கதை எழுத்தாளரான கொஞ்ச காலத்தில் அம்மா இறந்துபோனாள். பின்வந்த கொரோனா மனைவி மற்றும் மகனை எடுத்துக்கொண்டு வீட்டை மட்டும் மிச்சம் வைத்துச் சென்றது.
இதை ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இலக்கியத்தில் மும்முரமாக இருந்த காலகட்டத்தில் தினசரி நாட்குறிப்பு எழுதுவேன். பெருநாவல்கள் எழுதும்போதெல்லாம் அதில் உள்ள சிறிய சிந்தனைத் துணுக்குகள் பல முக்கியமான காட்சிகளின் விதைகளாக அமைந்திருக்கின்றன. ஆனால் பழைய சோற்றை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் திரையுலகில் கதாசிரியனாக மாறியபிறகு இந்தப் பழக்கம் அப்படியே நின்றுபோனது. மொழி அறிவும் கணிசமாக மட்டுப்பட்டுவிட்டது.
எழுதவேண்டும் என்று அமர்ந்து, இக்கணம் தோன்றும் புதிய சிந்தனைகளை, இன்று கண்ட நிகழ்ச்சிகளை எழுதாமல் மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளில் உழல்வது சலிப்பு தருகிறது.
கொஞ்சம் நேரம் நடந்துவிட்டு வருகிறேன்.
நேரம்: 12:51 PM
என்னிடம் மொத்தம் நான்கு கதைச்சுருக்கங்கள் இருந்தன. அதில் மூன்றே தற்போது நினைவிலிருக்கிறது. அந்த நான்காம் கதைக்கருவை மறந்தமைக்காக கடந்த ஒருமணி நேரமாய் என்னை நானே சபித்துக்கொண்டிருக்கிறேன்.
ரீல்ஸ் தலைமுறையை கவரும்பொருட்டு சினிமா எடுத்து எனது நினைவாற்றலும், அவதானிக்கும் திறனும் மழுங்கிவிட்டது. அல்ல வயதாவதை என்னிடம் இருந்தே மறைத்துக்கொள்ள இப்படி ஒரு வாதத்தைக் கட்டமைக்கிறேனா என்றும் தெரியவில்லை.
சரி, எஞ்சியிருக்கும் மூன்று கருக்களும் மறந்துபோகும் முன்பு இங்கு குறித்துவைத்துக் கொள்ளலாம் என்கிற உத்தேசத்துடன் பேனாவை எடுக்கிறேன்…
கதைச்சுருக்கம் – 1
இதைக் கரு என்று சொல்லிவிட முடியாதுதான். இது ஒரு தருணம். பல ஆண்டுகளுக்கு முன்பு இதை நான் கேள்விப்பட்டபோது ஒருவித எழுச்சிக்குள்ளானேன். அதற்கு இரண்டு காரணங்கள்:
- இதில் திருடனாக வரும் “மனோகர்” என்பவனை நான் நன்கு அறிவேன்.
- சம்பவத்தில் மூக்கு உடைபட்டு ரத்தவெள்ளத்தில் நினைவிழந்து கிடந்த சுப்பம்மா கிழவியிடம் ஒன்று அல்லது இரண்டு முறை நான் சாராயம் வாங்கிக் குடித்திருக்கிறேன்.
நடந்தது இதுதான்.
டீக்கடை நடத்திக்கொண்டிருந்த மனோகர் திடீரென்று ஒருநாள் காணாமல்போனான். என்ன ஏது என்று விசாரித்தபொழுது அவனுக்கு கடன்தொல்லை அதிகமாகிவிட்டது என்று சொன்னார்கள்.
அதற்கு மூன்று மாதங்கள் கழித்து, ஊரில் சாராயம் விற்கும் கிழவியான சுப்பம்மா சாலையில் நடந்துகொண்டிருக்கும்பொழுது முகமூடி அணிந்த ஒருவன் அவள் கழுத்துச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடுகிறான்.
“டேய்! அது கவரிங்டா!” என்று கிழவி கத்தியதும் திரும்பி வந்த திருடன் விரக்தியுடன் அதை வீசிவிட்டு, அவளை கேவலமாக வசைபாடிவிட்டு திரும்பி ஓடுகிறான். ஏதோ நினைத்தவன், மீண்டும் அவளை அணுகி வந்து, ஓங்கி அவள் முகத்தில் ஒரு குத்து விடுகிறான்.
கடன்தொல்லையால் மாயமான டீக்கடை மனோகர் சங்கிலித்திருடனாய் அன்று மாலையே போலீசிடம் பிடிபட்டான்.
கூன்விழுந்த அந்த மூதாட்டியை எதற்காகத் தாக்கினான் என்று விசாரித்ததற்கு, “அவ சாராயம் விக்கற சனியன்தானே… எத்தன குடிய கெடுத்துருப்பா!” என்று நியாயம் சொன்னானாம்.
சுப்பம்மா கிழவி அதன் பிறகு சாராயம் காச்சவில்லை. ஊர் எல்லையில் இருந்த சிவன் கோவிலே கதியென்று கிடக்க ஆரம்பித்தாள்.
துப்பற்ற இந்த நிகழ்வு அன்று என்னை அத்தனை கிளர்ச்சிகொள்ளச் செய்ததற்கு நான் அப்போது தஸ்தாயெவ்ஸ்கியின், “குற்றமும் தண்டனையும்” படித்துக்கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இப்போது படுகிறது.
கதைச்சுருக்கம் – 2
இது இரண்டு முதிய சகோதரிகளைப் பற்றியது. ஒரு வசதிக்காக அவர்களை தங்கம் மற்றும் வெள்ளி என்று அழைக்கலாம்.
தங்கம் மூத்தவள். கள்ளமற்றவள். செல்லும் இடத்திலெல்லாம் அனைவராலும் போற்றப்படுபவள். குடும்பத்தில் எழும் சச்சரவுகளுக்கெல்லாம் அவள் சொல்வதே இறுதித் தீர்ப்பு.
வெள்ளி கொஞ்சம் குதர்க்கம் பிடித்தவள். அக்காவைப்போல் தனக்கும் மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்கிற ஆசைகொண்டவள். பல தருணங்களில் தன்னை அக்காவாகவே எண்ணிக்கொண்டு நடிப்பவள். ஆனால் அக்காவின் நேர்மை அவளிடம் அறவே இருக்கவில்லை. வாயைத் திறந்தால் வெள்ளம்போல் பொய்கள் கொட்டும். தங்கத்தின் தயாளகுணம், அறவுணர்வு, சமமான பார்வை என எதையும் பெற்றிராத அவள் கூடிய விரைவில் குடும்பத்தினரால் போலி என்று அடையாளம் காணப் படுகிறாள்.
ஆனால் வாழ்க்கை தங்கத்தை சோதிக்கிறது. வெள்ளிக்கு அள்ளிக் கொடுக்கிறது. தங்கத்தின் வாரிசுகள் இழிந்த நிலையில் திளைக்கிறார்கள். வெள்ளியின் வாரிசுகள் பலதுறைகளில் உச்சநிலை அடைகிறார்கள். ஆனால் அனைத்தையும் இழக்க இழக்க தங்கம் மேலும் மேலும் ஜொலித்துக்கொண்டே இருக்கிறாள். வெள்ளி மேலும் மேலும் மலிவாகிறாள்.
ஒருநாள் தங்கத்தின் பெயர்த்தியின் கணவன் சாலை விபத்தில் காலமாகிறான். செல்லமாக வளர்ந்த பெயர்த்தியை விதவைக் கோலத்தில் பார்த்தால் தங்கத்தின் இதயம் தாங்காது என்று எண்ணிய குடும்பத்தினர் அவளுக்குத் துணையாக வெள்ளியை அமர்த்துகிறார்கள். விஷயத்தை இப்போதைக்கு தங்கத்திடம் தெரிவிக்கவேண்டாம் என்று வெள்ளியிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.
அக்காவுடன் வீட்டில் இருக்கும் வெள்ளி தன்னை அறியாமலே தனது குழந்தைகளின் சாகசங்களைப் பற்றிப் பேசுகிறாள். அவற்றை துளி சலனமோ, பொறாமையோ இல்லாமல் கேட்டு மகிழ்கிறாள் தங்கம். இத்தனை அகவையிலும், இத்தனை துயரங்கள் மற்றும் மரணங்களைப் பார்த்தபிறகும் தங்கத்திடம் இருக்கும் அந்த நிமிர்வும் கம்பீரமும் வெள்ளியை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
உணவுகொடுக்க வரும் பக்கத்துவீட்டுக் கிழவி வெள்ளியை தனியாக அழைத்து தங்கத்தின் நிலை குறித்து விசாரிக்கிறாள்.
வெள்ளி, “அக்காவுக்கு என்ன, இப்பவும் கிழங்குபோலத்தான் இருக்கு” என்று சலிப்புடன் சொல்கிறாள்.
கிழவி கணநேரம் தயங்காமல், “வாக்குல நேர்மை இருக்கவ முதுகுத்தண்டு தாளாது” என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள்.
இருண்ட முகத்துடன் உள்ளே வரும் வெள்ளி, தங்கத்திற்கு உணவு பரிமாறுகிறாள். அக்கா சோற்றில் கைவைக்கும்போது உள்ளுக்குள் ஏதோ பொங்குவதை உணரும் வெள்ளி சட்டென, “உன் பேத்தி விதவை ஆயிட்டா!” என்று நேரடியாக அறிவிக்கிறாள்.
தங்கம் இடிந்துபோகிறாள்.
ஆனால் தன்னுள்ளும் ஏதோ உடைபடுவதை வலியுடன் உணரும் வெள்ளி தனக்கு நிம்மதி என்ற ஒன்று இருக்குமானால் அது இந்த அக்காவின் காலடியில் அவளுக்கு சேவை செய்தபடி கிடப்பதில்தான் என்று அக்கணத்தில் முடிவுசெய்கிறாள்.
நான் எழுதும் வெகுஜன சினிமாக்களை ரசிக்கும் ஒருவன் இந்தக் கதையை “கிரிஞ்சு” என்று காரித் துப்பக்கூடும். ஆனால் அவன் ஒருபோதும் இலக்கியம் படிக்கப்போவதில்லை என்பதால் சற்று பாதுகாப்பாக உணர்கிறேன்.
கதைச்சுருக்கம் – 3:
இது வெகுநாட்களாக என்னுள் ஊறிக்கொண்டிருக்கும் ஒரு கரு. கருக்கூட இல்லை. ஒரு கதாபாத்திரம்.
இவரையும் மறந்துதான் போயிருந்தேன். சமீபத்தில் முடிதிருத்துபவரைப் பற்றிய ஒரு கதையைப் படித்தபோது பட்டென நினைவுக்கு வந்துவிட்டார்.
முன்பு இவரை மையமாக வைத்து ஒரு நாவல் எழுத உத்தேசித்திருந்தேன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த இவர் குடும்பம் இங்கு வேரூன்றி தொழில் செய்வதில் துவங்கி, சாதிய ஒடுக்குமுறை, சமூக நிலை என அனைத்தையும் விவாதித்து, எலீட் (elite) சலோன்களின் வருகையினால் ட்ரெடிஷனல் பார்பர்கள் அடைந்துவிட்ட அவலநிலையில் முடிப்பதைப்போல் ஒரு வடிவம் வைத்திருந்தேன்.
பிறகு அவருக்கும் அவர் தம்பிக்கும் இருந்த உறவை வைத்தே பாரம்பரியத்திற்கும், நவீனத்துவத்திற்குமான முரண்பாடுகளை விவரிப்பதைப்போல் ஒரு வடிவத்தை யோசித்தேன். அதற்கு மறுநாள்தான் அந்த சினிமா இயக்குனரின் மேனேஜர் போன் செய்து என் வாழ்வின் வடிவத்தை மாற்றியமைத்தார்.
வடிவம் எதுவாக இருந்தாலும், இதன் மையம் என நான் கருதும் ஒரு நிகழ்வு இருக்கிறது. இதை வைத்து ஒரு நாவல் எழுதவேண்டும் என்று என்னுள் பொறிகிளப்பிய தருணமும் அதுதான். அதைத்தான் முக்கியமாக குறித்துவைத்துக் கொள்ளவேண்டும்.
சாமானியர்களும் எலீட் சலோன்களை நோக்கி நகர்ந்துவிட்ட காலம்.
வழக்கம்போல் ஓர் சனிக்கிழமை அன்று முடிவெட்டிக்கொள்ள அவர் கடைக்குச் சென்றிருந்தேன். எத்தனை துயரத்தில் இருந்தாலும் மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்கும் அவர் அன்று பார்ப்பதற்கே எப்படியோ இருந்தார்.
அவரது பொருளாதார நிலைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒருகாலத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் ருபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தவர், விலைவாசி தாறுமாறாக ஏறிவிட்ட இந்தக் காலத்தில் நூறு ரூபாய் சம்பாதிக்க திண்டாடிக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு என்றும், அன்று மட்டும் அறுநூறு, எழுநூறு ருபாய் வரை தேறுவதாகவும் சொல்லுவார்.
“இதை வச்சுட்டு கடைக்கு வாடகை, வீட்டுச் சாமான், பிள்ளைகளுக்கு ஃபீஸ், வண்டிக்கு பெட்ரோலுன்னு அளக்கணும்… நெஞ்செல்லாம் வலிக்கு” என்று அவர் பெருமூச்செறியும்போது எனக்கும் லேசாக நெஞ்சு வலிக்கும். அவரது பல கஷ்டங்களுக்கு மெத்தப் படித்தவனான என்னால் தீர்வுசொல்ல முடிந்ததேயில்லை. பெரும்பாலான நேரங்களில், “விடுங்க, மவன் நிமுந்துறுவான் ரெண்டு வருஷத்துல… அப்பறம் ஒரு பிரச்சனை இருக்காது” என்றே கூறுவேன்.
அவரும் அதை ஏற்றுக்கொள்வார்.
அரசு கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது மகனின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் அவர்.
ஒரே ஒரு முறை, “நீங்க பேசாம அந்த பெரிய கடைகள்ல வேலைக்கு போயிற வேண்டிதான… மாசம் இம்புட்டுன்னு ஒரு அமௌன்ட் வரும்” என்று சொன்னேன்.
அவர் அதை உடனே மறுத்தார். மேலும் கண்டவனெல்லாம் தன்னை அதிகாரம் செய்யாத ஒரு வாழ்க்கை அவருக்கு இப்போதே கிட்டியிருக்கிறது என்றும், ஒருபோதும் அதை தன்னால் இழக்கமுடியாது என்றும் சொன்னார்.
சாதிய ரீதியாக அவர் அனுபவித்த துயரில் கொஞ்சத்தைக் கூட அனுபவித்திராத நான் அதன் பிறகு அந்தப் பேச்சை எடுக்கவேயில்லை.
நெடுங்காலமாக அவரை அறிந்திருந்த எனக்கு அன்று அவர் முகத்தை, அதில் படிந்திருந்த நிழலைக் காண அச்சமாக இருந்தது. ஓரிரு முறை என்ன என்று விசாரித்தேன். அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளாமலே வேலையில் கவனமாக இருந்தார்.
இதற்குமேல் அழுத்தவேண்டாம் என்று நானும் விட்டுவிட்டேன்.
பத்து நிமிடம் கழித்து திடீரென என் தோளைப் பற்றிய மனிதர், “என் மவன் கஞ்சா அடிக்கான் தம்பி… எல்லாம் போச்சு!” என்று சொல்லி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வீட்டின் உரிமையாளர் வீட்டை காலிசெய்ய சொல்லிவிட்டதாகவும், மகளுக்கு சென்ற இரவு அம்மை போட்டிருக்கிறது என்றும் சொன்னார். கடை வாடகை ஏறிவிட்டது, மகளுக்கு மருந்து செலவு, வீடு மாறினால் அட்வான்ஸ் பணம் என்று அடுக்கிக்கொண்டே போனார். அவர் விழிகளை அத்தனை சிகப்பாக நான் பார்த்ததேயில்லை.
ஒரு மனிதரால் எத்தனை தாங்க முடியும்?
நிச்சயம் அந்த இரவை அவர் தாண்டமாட்டார் என்று எனது உள்ளுணர்வு சொல்லியது. பதறிப்போனேன். ஏதேனும் ஆறுதல் சொல்லி அவரை அந்த இரவை தாண்டவைக்க முடியாதா என்று ஏங்கினேன். நான் படித்த அத்தனை இலக்கியமும், தத்துவமும் தோற்றுப்போன தருணம் அது.
ஐந்தே நிமிடத்தில் நான் அஞ்சிக்கொண்டிருந்த வார்த்தைகளைப் பேசினார் அவர்.
“செத்து போறேன் தம்பி… போதும்… எல்லாம் போதும்… இனி என்ன வழி இருக்கு எனக்கு!” என்று சொல்லி, ஒருவித உறுதியுடன் கண்களைத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு கடையைத் தாண்டிப் போனவர்களை, உள்ளே வந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தவர்களை, ஒலித்துக்கொண்டிருந்த ரேடியோவில் பேசிய தொகுப்பாளரை என அனைவரையும் மிகவும் தரக்குறைவாக வசைபாடினார். ஒருவேளை இந்த இரவைத் தாண்டினாலும் அவர் இனி மிகவும் கசப்பான மனிதராக மாறிவிடுவார் என்று நினைத்துக்கொண்டேன். நல்லுள்ளம் கொண்ட ஒருவர் வறுமையினால் கொடியவராக மாறுவது மரணத்தைவிடவும் மோசமான முடிவாக பட்டது எனக்கு.
ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் விசும்பி அழ ஆரம்பித்தார் அவர்.
எனக்கு அங்கு அமர்ந்திருக்கவே அசௌகரியமாக இருந்தது. இத்தனை அருகாமையில், உச்சகட்டத் துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதரை ஆறுதல்படுத்த ஒரு சொல்கூட இல்லையென்றால் மனிதனுக்கு மொழி எதற்கு?
நான் நெளியத் துவங்கினேன்.
அப்போது திடீரென அவர் லேசாய் அதிர்ந்தார். மூக்கை உரிந்தபடி விறுவிறுவென விலகி நடந்து, நுழைவு அருகே தொங்கிக்கொண்டிருந்த காலண்டர் அருகே சென்று, அதிலிருந்த சாஸ்தா படத்தைச் சுட்டிக்காட்டி, “இது என் குலசாமி… இவன் என்ன கைவிடமாட்டான்லா?” என்றார்.
நாஸ்திகனாகிய நான் அதை ஆமோதிக்க கொஞ்சம் தயங்கினேன்.
“சொல்லு தம்பி, கைவிட மாட்டான்லா?” என்றார்.
ஒருகணம் அவர் கண்களைப் பார்த்தேன். பிறகு திடமான குரலில், “கைவிட மாட்டான்” என்றேன்.
“போதும் தம்பி… பாத்துக்கிடுவோம், என்ன? அவன் அவன் என்னலாமோ அனுபவிச்சிட்டு வாழுதான், நமக்கென்ன, சொல்லுங்க? உடம்புல வலு இருக்கு, கையில தொழில் இருக்கு… பாத்துக்கிடுவோம்!” என்று சொல்லியபடி உற்சாகத்துடன் பணியைத் தொடர்ந்தார்.
நான் மௌனமாக இருந்தேன். ஆனால் மனதின் எழுச்சி என் விரல்களில் நடுக்கமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
எனக்கு பின்னால் வந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கும் அதே உற்சாகத்துடன் ஷேவிங் செய்தார். வேலை முடிந்ததும் அந்த நபர் நூறு ரூபாய் வேலைக்கு இருபது ரூபாய் மட்டும் குடுத்துவிட்டு விடைபெற்றார்.
“ஷேவிங் நூறு ரூபால்ல?” என்று நான் கேட்டதற்கு, “விடு தம்பி, அவனே கால் விளங்காம கடக்கான்… அவன்கிட்ட என்னத்த கூட ரூபாத்தான்னு கேக்க” என்றார் அவர்.
கடையிலிருந்து வெளியேறும்போது காலண்டரில் இருந்த சாஸ்தாவை ஒருகணம் பார்த்துவிட்டு படியிறங்கினேன்.
நேரம்: 3:18 PM:
கீழிருந்து யாரோ பெயர்சொல்லி அழைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இங்கு வந்திருப்பவனை இத்தனை உரிமையாக அழைப்பது யார் என்கிற கேள்வியுடன் எழுந்து ஜன்னலைத் திறந்து நோக்குகிறேன்.
அடடே, மூக்காண்டி அண்ணன்!
“தம்பி வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்… ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா!” என்கிறார்.
ஆள் பாதியாகிவிட்டார். ஆனால் குரலில் அதே கணீர்.
நான் சிரிக்க மட்டும் செய்கிறேன்.
“சரி, வீட்டுலதான இருப்பீங்க, நான் அப்பறம் வரேன்… ஒரு சமாச்சாரம் பேசணும்… எல்லாம் நல்ல விஷயம்தான்” என்று சொல்லிவிட்டு தனது ஆட்டோவில் ஒரு “யு” டர்ன் அடித்து விடைபெறுகிறார்.
புன்னகைமாறாத முகத்துடன் மேஜைக்குத் திரும்பியபோது பளீரென தலைக்குள் ஒரு மின்னல்.
நான்காவது கதைச்சுருக்கம் நினைவுக்கு வந்துவிட்டது!
கதைச்சுருக்கம் – 4
மூக்காண்டி அண்ணனை எனக்கு இருபது வருடத்திற்கும் மேலாக தெரியும். கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் ஆட்டோ ஓட்டுபவர்.
இப்போது மிகவும் கனிந்துவிட்டார். ஆனால் ஒரு காலத்தில் எனக்கு அவரைக் கண்டாலே ஆகாது.
காய்த்துப்போன அவரது உள்ளங்கைகளும், முறுக்கு மீசையும், எப்போதும் சிவந்திருக்கும் கண்களும், மூக்குப்பொடி நெடியும், அவர் வந்துபோனால் வாஷ் பேசினில் தென்படும் பச்சை சளியும் என்னுள் அருவருப்பையும் ஆத்திரத்தையும் தருவிப்பவை. தோற்றத்திற்கு ஏற்றாற்போல் குணத்திலும் முரடன். மனைவி கனகாம்பாளுக்கு கிடைக்கும் அடி உதைகள் விகிதம் மாறாமல் மகள் அருளேஸ்வரிக்கும் கிடைக்கும். கொரட்டூரில் இருக்கும் அவர்களது வீட்டில் எப்போதும் கூச்சல்களும், அழுகையும் கேட்டவண்ணம் இருக்கும்.
ஆனால் எப்படியோ அம்மாவுக்கும் அவருக்கும் அழகாக ஒத்துப்போகும். அம்மாவிடம் ஒரு சகோதரன்போல் பழகுவார். அவருக்குள் பதுங்கியிருக்கும் ஈரம் அம்மாவிடம் மட்டும்தான் லேசாய் கசியும். காசிமேட்டில் இருந்து மீனும், கோயம்பேட்டில் இருந்து அவ்வப்போது காய்கறிகளும் வாங்கி வந்து வீட்டில் கொட்டுவார்.
“ஏண்டா மூக்காண்டி, இங்க செய்யறத பாதிய உன் வீட்டுல செய்யக் கூடாதா?” என்று அம்மா ஒருமுறை கேட்டதற்கு, முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, “அவ கடக்கா செத்தவ… ராணி மாதிரி வாழ்ந்தாள்ல அப்பன் வூட்டுல, இங்க கொஞ்சம் தவிக்கட்டும்!” என்பார்.
அம்மா யாருக்குமே ஒரு அளவிற்கு மீறி அறிவுரைகள் வழங்குவதில்லை. அவரவர் இயல்புபோல் இருக்க அனுமதிப்பவள். ஒத்துவராதவர்களை பாரபட்சம் பார்க்காமல் ஒதுக்கிவைப்பவள். மளிகை சாமான் வாங்க உடன் வரும் கனகாம்பாள் அக்காவிடமும் அம்மா ஆறுதல் மட்டுமே சொல்வாள். பிறகு அந்தப் பேச்சை நீட்டிக்காமல் பிற இனிமையான சங்கதிகளில் உரையாடலை நீந்தச் செய்வாள். தான் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு லயத்தைப் பேணிப் பாதுக்காப்பவள் அவள்.
சின்னதாய் பிடிகிடைத்தால் கூட பின்னோக்கிச் சென்றுவிடுகிறது மனம். கதையின் கருவை எழுதாமல் அம்மாவைப் பற்றி எழுதிக்கொண்டே செல்கிறேன். நல்லவேளையாக உடனே சுதாரித்துக்கொண்டேன்.
விஷயம் இவ்வளவுதான்… தன் குடும்பத்திடம் ஏறக்குறைய ஒரு வில்லனைப்போல் நடந்துகொள்ளும் மூக்காண்டி, எங்களிடம் மட்டும் அதீத அன்பைக் கொட்டினார்… அதன் காரணமாகத்தான் அவர்கள் வீட்டில் நிகழ்ந்த அந்த கொடிய சம்பவத்தன்று அம்மா, அவர்களுக்கு உறுதுணையாக என்னை அனுப்பி வைத்தாள்…
இரவு பதினோரு மணிக்குமேல் இருக்கும். வீட்டுக் கதவுகள் திடீரென இடிந்துவிழும் அளவிற்கு அதிர்ந்தன. அறையில் அரையிருளில் படுத்துக்கொண்டு ஆங்கில மர்மக் கதை ஒன்றை படித்துக்கொண்டிருந்த நான் ஒருகணம் பதறினேன். வடஇந்திய கொள்ளையர்கள் மாநிலத்தினுள் உலவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. வெளியே அம்மா கதவை நோக்கிச் செல்லும் சத்தம் கேட்டதும் தடதடவென ஓடி, “அம்மா! நீ இரு!” என்று அவளை நிறுத்தினேன்.
“டேய், சும்மா இருடா… மூக்காண்டிதான்… இந்நேரத்துல வந்திருக்கான்… என்ன பிரச்சனைன்னு கேக்கணும்” என்று சொல்லிக்கொண்டே என்னை விலக்கிவிட்டுக் கதவைத் திறந்தாள்.
அவர்தான்.
கழுத்துமுட்டக் குடித்திருந்தார்.
ரெண்டே எட்டில் நடுக்கூடத்தை அடைந்து தரையில் தொப்பென்று விழுந்து தலையில் பலமாக, தொடர்ச்சியாக அடித்துக்கொண்டார். பிறகு அரக்கத்தனமாக கர்ஜித்தபடி, “யக்கா, எல்லாம் போச்சுக்கா… மோசம் போயிட்டேன்க்கா… மோசம் போயிட்டேன்!!” என்றார்.
அம்மா சலனப்படவேயில்லை. என்னிடம் கண்காட்டி தண்ணி எடுத்துவரச் சொன்னாள். எனக்கு அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்போல் இருந்தது. நேரங்கெட்ட நேரத்தில் இப்படி போதையில் வீடு நுழைவதை நான் சற்றும் விரும்பவில்லை.
தண்ணீர் சீசாவை எடுத்து அவரிடம் நீட்டினேன். பட்டென்று அதைத் தட்டிவிட்டு, “என் புள்ள எவன்கூடையோ படுத்து வயித்துல புள்ளைய வாங்கிட்டு வந்திருக்காக்கா… அவள கொல்லனும்… அப்பறம் நான் குடும்பத்தோடச் சாவணும்” என்றார்.
நான் அதிர்ந்துபோனேன்.
நெற்றி வியர்வையை முழங்கையால் துடைத்தபடி, “கிறுக்கா உனக்கு? ம்? உன் புள்ளைக்கு பன்னெண்டு வயசு!” என்று சொன்னாள் அம்மா.
“பன்னெண்டு மாதிரி வீட்ல அடங்கியா கடந்தா? அவ அம்மா வீட்டு மனுசன், தெருக்காரன் எவன் மிட்டாய் வாங்கி தரேன்னு சொன்னாலும் இளிச்சுட்டு போயிருவா… ஓடுகாலிக்குப் பொறந்தவ… அவ அம்மாள மாதிரிதானே இருப்பா!” என்று சொல்லி மீண்டும் தலையில் அடித்துக்கொண்டார் அவர்.
அம்மா கைகட்டி நின்று எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாள்.
சட்டென திமிறியெழுந்த மூக்காண்டி, “அவளக் கொல்லத்தான் போறேன்… ஆமா… நாங்களும் போறோம்… சொல்லத்தான் வந்தேன்!” என்று கூறிவிட்டு வெளியே ஓடினார்.
“அமுதா, கூடப் போ!” என்று ஆணையிடும் தொனியில் என்னிடம் சொன்னாள் அம்மா.
நான் மறுப்பேதும் தெரிவிக்காமல் சட்டையை அணிந்துகொண்டேன்.
“அங்க எல்லாம் சரியானதும் திரும்பி வா” என்று சொல்லி என்னை வழியனுப்பிவிட்டு கதவை பூட்டிக்கொண்டாள் அம்மா.
மூக்காண்டியின் வீட்டில் தலைவிரிகோலமாய் அமர்ந்திருந்தாள் கனகாம்பாள். அறையின் இருண்ட மூளை ஒன்றில் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கி அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தாள் அருளேஸ்வரி.
வீட்டுத் திண்ணையில் மல்லாந்திருந்த மூக்காண்டி சாராயத்தை வாயில் ஊற்றிக்கொண்டே இருந்தார்.
பக்கத்தில் இருந்த பி.சி.ஓவில் இருந்து அரசு மருத்துவராக இருக்கும் என் தோழி ஒருத்தியைத் தொடர்புகொண்டு விஷயத்தை விளக்கினேன். பிறகு கனகாம்பாளிடம் எடுத்துச் சொல்லி சமாதானப் படுத்தினேன். அவர்கள் கவலையெல்லாம் மானம் பற்றியதாகவே இருந்தது. அருளேஸ்வரியின் மனநிலை பற்றியோ ஆரோக்கியம் பற்றியோ கரிசனம் காட்டியதாகவே தெரியவில்லை. விஷயம் வெளியே கசியாது என்று நூறு முறை உத்திரவாதம் அளித்த பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வர ஒத்துக்கொண்டாள் கனகாம்பாள்.
அருளேஸ்வரி முகம் கழுவாமல், உடை மாற்றாமல் அதே கந்தல் ஆடையுடன் வந்தாள். அவளிடம் ஒருவித உறைவு தென்பட்டது. அதைக் காணும்போதெல்லாம் என் உள்ளம் சில்லிட்டுப்போனது. ஆனால் அதை சற்றும் கருத்தில் கொள்ளாமல் மருத்துவமனை வளாகத்தில் இறங்குவது வரை அவளை வசைபாடிக்கொண்டே வந்தாள் கனகாம்பாள்.
உள்ளே எனது தோழியுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அங்கு எப்படியோ வந்துசேர்ந்த மூக்காண்டி, சுற்றுச்சூழல் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், மிகவும் முரட்டுத்தனமாக அருளேஸ்வரியை எட்டி மிதித்தார். “அண்ணே, வேண்டாம்!” என்று நான் தடுக்க முற்பட்டபோது எனக்கும் ஒரு அறை கிடைத்தது.
என் தோழியைப் பார்த்து, “யம்மா, உங்க வைத்தியம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்… ஆள விடுங்க… இதை நாங்க பாத்துக்கறோம்… போதும்… எல்லாம் போதும்!” என்றார் மூக்காண்டி. பிறகு கனகாம்பாளின் கொண்டையைப் பற்றி, “நாயே… எவன கேட்டுடி இங்க வந்த? அவன் கூப்பிட்டா வந்திருவியோ? எவன் கூப்பிட்டாலும் போயிருவியோ? உன் புத்தி தானடி உன் புள்ளைக்கும் இருக்கு… ஓடுகாளி நாயே!” என்றார்.
பெரும்பாலான வேளைகளில் எதிர்த்துப் பேசாத கனகாம்பாள் அப்போது சட்டென, “நீயும் தானயா இழுத்துட்டு ஓடி வந்த…” என்று சொல்லிவிட்டாள்.
அவள் வயிற்றில் எட்டி மிதித்தார் மூக்காண்டி.
மருத்துவமனைப் பணியாளர்களுடன் சேர்ந்துகொண்டு மூக்காண்டி மற்றும் கனகாம்பாளை சமாதானப்படுத்தி தனியாக அழைத்துச் சென்றேன். என் தோழி அருளேஸ்வரியை சிகிச்சைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
சில நிமிடங்கள் கழித்து வாய் திறந்து ஒரு பெயரைச் சொன்னாள் அருளேஸ்வரி. அதன் அடிப்படையில் காவலர்கள் அடுத்த அரைமணி நேரத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவனை கைது செய்தார்கள். நான் காவல்துறையில் பணிபுரியும் மற்றொரு நண்பனிடம் பேசி விஷயத்தை கூடுமானவரையில் ரகசியமாக வைத்துக்கொள்ள வழிசெய்தேன்.
பெற்றோர்களை தனியறைக்கு அழைத்தாள் தோழி. நானும் உடன் சென்றேன். கருக்கலைப்பைப் பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தபோது உறுமிய மூக்காண்டி, “அந்த சனியன் எங்க?” என்றார்.
தோழி “சார், நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க… ஆக வேண்டியத பாப்போம்” என்று பொறுமையாக பேசினாள்.
“இனி ஆறதுக்கு என்ன இருக்கு… அவள எங்க? நான் அவட்ட பேசணும்”
“ரூம்ல தான் இருக்கா… நீங்க கொஞ்சம்…” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது திபுதிபுவென ஓடிய மூக்காண்டி அருளேஸ்வரியை கூந்தலைப் பிடித்து இழுத்துவந்து தரையில் தள்ளிவிட்டார்.
கொஞ்சம் தேறிக்கொண்டு வந்த குழந்தை மீண்டும் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கிக்கொண்டு வெடவெடக்க ஆரம்பித்தது. சிஸ்டர் ஒருத்தி அதை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். நானும் தோழியும் சேர்ந்து மூக்காண்டியை சமாதானப்படுத்தி அமர்த்தி விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் எதுவும் அவருக்குள் நுழையவேயில்லை. வரம்பை மீறிய வசைச் சொற்களை முணுமுணுத்துக்கொண்டே இருந்தார். மேஜை மீதிருந்த பொருட்களை அவ்வப்போது எடுத்து அருளேஸ்வரியின் மேல் வீசுவதைப்போல் பாவனை செய்தார். கனகாம்பாள் செய்வதறியாமல் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

அருளேஸ்வரி வெறித்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தாள். திடீரென செவிலியின் கையை உதறிவிட்டு மூக்காண்டியின் அருகே வந்தவள், மழலை மாறாத குரலில், “யப்பா, பிள்ளைய கொல்லவேண்டாம்ப்பா… பாவம்ப்பா… நம்ம வீட்டு புள்ளப்பா… ப்ளீஸ்ப்பா” என்று தனது வயிற்றைக் காட்டிச் சொன்னாள். “அம்மா… பாப்பாம்மா… பாவம்ம்மா” என்று கனகாம்பாளைப் பார்த்துச் சொன்னாள்.
நாங்கள் அனைவரும் அதிர்ந்துபோனோம்.
மூக்காண்டி விழியோரங்களில் நீர் வழிய அவளை வெறித்துப் பார்த்தார். அவரே அறிந்திராத கணம் ஒன்றில் அவரது வலதுகை உயர்ந்து அவள் உச்சி வருடியது. மறுநொடி உயர்ந்த கனகாம்பாளின் கை அந்தக் குழந்தையின் முதுகைத் தொட்டது.
ஒருகணம் தான்.
மறுகணம் கனவிலிருந்தேன விழித்துக்கொண்ட மூக்காண்டி அவளை பளீரென அறைந்து, “என்ன பேசறா பாரு!” என்றார். ஆனால் அந்த அடியில் முன்பிருந்த வலுவும், வெறியும் இருக்கவில்லை.
“கோட்டிக்காரி… கோட்டிக்காரி… ஒழிஞ்சு போயேண்டி!” என்றாள் கனகாம்பாள். ஆனால் அந்தச் சொற்களில் முன்பிருந்த கடுமை தொனிக்கவில்லை.
அருளேஸ்வரியும் கூட என்ன சொன்னோம் என்பதையே மறந்தவளைப்போல “ஓ!” என்று அழுது, “அடிக்காதப்பா… அடிக்காதப்பா!” என்று அழ ஆரம்பித்தாள்.
எல்லாம் ஒருவழியாக முடிந்து நான் வீட்டிற்கு வந்தபோது அம்மா, “ஒகே தான?” என்று மட்டும் கேட்டாள்.
நான், “ம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன்.
அந்த இரவு முழுவதும் என் அகத்திரையில் அந்தத் தருணம் ஓடிக்கொண்டே இருந்தது. அங்கு அக்கணம் வரை மரணம் மட்டுமே இருந்தது. சாவு அதன் கரிய திரவத்தை அக்குடும்பத்தின் மீது பொழிந்துகொண்டிருந்தது. ஆத்திரமும், காழ்ப்பும் அவர்களது இதயங்களைப் பொசுக்கிக்கொண்டிருந்தது.
திடீரென எங்கிருந்து ஜனித்தது அந்தச் சிறு ஒளி?
விடாய்கொண்டவன் நீர்துளியை என அந்த ஒருசொட்டு உயிர்ப்பை, கனிவை அக்குடும்பம் இருகரங்களால் பற்றிக்கொண்டதை என்னும்போது என் கண்கள் கலங்கிப்போனது.
நேரம்: 6:15 PM:
இந்த நிகழ்வு ஏன், எப்படி என் நினைவிலிருந்து தப்பியது என்று மண்டையை உடைத்துப் பார்த்துவிட்டேன். பிடிபடவில்லை.
ஆனால் மனைவி மற்றும் மகனை இழந்து, மாளிகைபோன்ற அந்த வீட்டில் அனாதையாக வாழ்ந்த காலங்களில் உணவை மறந்த நாட்கள் உண்டு. உறங்காமல் தவித்த இரவுகள் ஏராளம். இதில் கதை என்ன, கரு என்ன?
வெறுமையின் உச்சத்தில் எத்தனை முறை குதித்துவிடலாம் என்கிற உத்தேசத்துடன் அந்த மலைவிளிம்பிற்குச் சென்றிருக்கிறேன்?
ஏதோ தோன்றியது… சரி எழுதித்தான் பார்ப்போமே என்று இங்கு கிளம்பி வந்துவிட்டேன்…
நேரம்: 9:48 PM:
மூக்காண்டி இப்போதுதான் கிளம்பினார்.
அருளேஸ்வரிக்கு வருகிற தை மாதத்தில் கல்யாணமாம். பத்திரிக்கை தந்திருக்கிறார். எனக்கு அவரை இப்போது மிகவும் பிடித்திருக்கிறது. அனேகமாக இனி அவரை அடிக்கடி சந்திப்பேன் என்று நினைக்கிறேன். படுகுழியில் இருந்து மீண்டு வந்தவர்களிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. சொல்லத் தெரியவில்லை.
அம்மாவைப் பற்றி நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். நான் திரைத்துறையில் மூழ்கியபிறகு இங்கு அவள் தனிமையில் வாடிய நாட்களைப் பற்றியெல்லாம் பேசினார். நான் குறுகினேன்.
பிறகு அவர் இப்போது மாறிவிட்டதாகச் சொன்னார். அந்த இருட்டான சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து குடும்பமாக குலதெய்வ கோவிலுக்குச் சென்றார்களாம். அன்றுடன் அவர்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதாகச் சொன்னார்.
நான் நம்பவில்லை. அருளேஸ்வரியின் ஆழுள்ளத்தில் கணநேரத்திற்கு ஊற்றெடுத்த அந்தச் சொற்களில் தான் எல்லாம் துவங்கியது என்பது எனது அபிப்ராயம். ஆனால் இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லவில்லை. ஒரு மனிதன் ஒன்றைப் பிடித்து மேலெழும்பொழுது அதைத் தட்டிவிடக் கூடாது என்று முடிதிருத்துபவருடனான அந்த சம்பாஷணை எனக்கு உணர்த்தியிருந்தது. அதைப் பற்றிக்கொண்டு கீழே இறங்குகிறார் என்றால் கேள்வி கேட்கலாம். தவறில்லை.
நடந்துசென்று அருகில் இருந்த உணவகத்தில் இருவரும் கொத்துப் பரோட்டா சாப்பிட்டோம். சிகரெட் புகைத்தோம்.
வீடு திரும்பியதும் பையில் வைத்திருந்த பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தார். அட்டையில் அம்மாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. என் கண்கள் லேசாய் ஈரமாகின.
பத்திரிக்கையைப் பிரித்தேன். உள்ளே அருளேஸ்வரி என்கிற பெயரையும் அதன் அருகே இருந்த “M.E” என்கிற பட்டத்தையும் பார்த்தபோது எனக்கு புல்லரித்தது.
கிளம்பலாம் என்று எழுந்துகொண்டவர், “தம்பி கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்… தெய்வம்தான் உங்கள சரியான நேரம் பாத்து இங்க கூட்டிட்டு வந்திருக்கு… இது இனி நீங்க நடத்தி வைக்கிற கல்யாணம்… கண்டிப்பா வரணும்” என்று சொன்னார்.
நான் சரி என்று சொன்னேன்.
வாசல் வரைச் சென்றவர் சட்டென நின்று விறுவிறுவென என் அருகே வந்து, “அம்மா இங்குட்டுதான் இருக்காங்க தம்பி… உங்ககூட தான் நிக்காங்க… இனி எப்போதும் இருப்பாங்க, என்ன?” என்றார்.
அக்கணம் என்னுள் ஏதோ நிகழ்ந்தது. உடம்பெல்லாம் சிலிர்த்துக்கொண்டு ஒருநொடி விழுந்துவிடுவேனோ என்று பயந்தேன். மூக்காண்டி என்ன நினைத்தாரோ, சட்டென என் தோள்களைப் பிடித்து ஒரு மூத்த சகோதரனைப்போல் என்னை தழுவிக்கொண்டார்.
அவர் உடற்சூட்டில் நான் ஏதோ ஒன்றை உணர்ந்தேன். கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயச்சரடு என்னையும், இவரையும், சாராயக்கடைச் சுப்பம்மாக் கிழவியையும், வெள்ளி ஆச்சியையும், முடிதிருத்தும் அண்ணனையும், மூக்காண்டியையும் கோர்த்து மாலையாக்கியதைப்போல் இருந்தது.
ஏனோ என்னால் இனி சரளமாக எழுதமுடியும் என்று தோன்றியது.
அவரை வழியனுப்பி வைக்க கீழே சென்றேன். வண்டியை அவர் ஸ்டார்ட் செய்ததும் ஏதோ எண்ணம் தோன்ற, “குடியெல்லாம் நிறுத்தியாச்சுன்ன?” என்று கேட்டேன்.
“ஆமா தம்பி… நமக்கு டாஸ்மாக் ஒத்துக்கிடாது… முன்னாடி நம்ம தோஸ்து ஒருத்தன் அவன் ஊருல இருந்து நமக்குன்னு ஸ்டாக் இறக்குவான்… போக போக டேஸ்ட் கண்றாவியா மாறிட்டு வந்துச்சு… என்னான்னு கேட்டா ஆள் மாறிட்டு, முன்னாடி ஒரு கிழவி காச்சினா, இப்போ அவ நிறுத்திட்டான்னு சொன்னான்… சரி கழுத காச்சறவளே நிறுத்திட்டா, எனக்கென்னன்னு நானும் நிறுத்திட்டேன்…”
நான் அந்தக் கிழவியின் பெயர் தெரியுமா என்று கேட்டேன்.
சொன்னார்.
நாள்: 03. 05. 2025
நேரம்: 6:36 AM
நேற்று எழுதியதைப் பிழை திருத்தி முடித்தேன். ஏதோ வகையில் இதில் ஒரு கதைக்கான முழுமை இருப்பதாகப் பட்டதால் தற்காலிகமாக ஒரு தலைப்பை மட்டும் வைத்து முதல் பக்கத்தில் இணைத்து விட்டேன்.
விடியல் ஒளி வீட்டினுள் பிரவேசிக்கிறது. எழுதி முடித்தபின் ஒருகணம் அறையைச் சுற்றிப் பார்த்தபோது இல்லமே சிரிப்பதைப்போல் இருக்கிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

சிறுகதைக்குள் ஒரு நெடுங்கதை… நிறைவு ! ❤