ஆடும் சுருண்ட கேசக்குழல்கள்!

ஒரு முனிபுங்கவர் இரண்டு அழகான வாலிப இளைஞர்களோடு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறார். வில்லையும் அம்பறாத்தூணியையும் தரித்த அந்த வாலிபர்களில் ஒருவன் கருநிற மேனியன், மற்றவன் அவனுடைய தம்பி. காட்டின் சப்தங்களையும் அழகுகளையும் ரசித்தபடி இருவரும் பவ்யமாகத் தமது ஆசானின் பின்பு பேசாமல் அமைதியாக நடைபயில்கிறார்கள். முனிவர் விசுவாமித்திரர்; வாலிபர்கள் இராமனும் லக்ஷ்மணனும்!

தன்னுடைய யாகசாலைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார் முனிவர். அங்கு அவரும் மற்ற முனிவர்களும் செய்யும் யாகங்களுக்கு இடையூறாக தாடகை, சுபாகு, மாரீசன் எனும் அரக்கர்கள் யாகத்தீயில் இரத்தம், மாமிசம் ஆகியவற்றை இட்டு அதன் புனிதத்தைக் கெடுக்கின்றனர். அதனைத் தடுத்து அந்த அரக்கர்களைத் தண்டித்து யாகம் முறையாக நடக்க உதவ வேண்டும் என இந்த அரசகுமாரர்களின் தந்தையான தசரத மஹாராஜாவைக் கேட்கிறார் முனிவர். அவரும் மிகுந்த தயக்கத்துடன் (மகன்கள் சிறுவர்களாதலால் – தந்தைக்கு எப்போதுமே அவர்கள் சிறுவர்கள்தான்!!) தன் மகன்களை அனுப்பிவைக்க, அவர்களைக் கூட்டிக்கொண்டு ஆசிரமத்தை வந்தடைகிறார் விசுவாமித்திரர்.

யாகம் தொடங்குகிறது. இராமனும் லக்ஷ்மணனும் ஆசிரமத்தைச் சுற்றிவந்து காவல் புரிகின்றனர். அங்கு திடீரென ஆகாயத்தில் தோன்றும் அரக்கர்களை அம்பெய்து கொல்கிறான் இராமன். இந்தக் காட்சியைக் காண்கிறார் விசுவாமித்திரர். இராமன் அரக்கர்களைத் தண்டிப்பான் என்பதில் அவருக்குத்துளிக்கூட ஐயமில்லை. ஆகவே, அந்தத் தருணத்தில் அவர் என்ன செய்கிறார்? முனைப்பாக அவன் வில்லில் அம்பைப் பொருத்தும்போது அவனுடைய பரந்த நெற்றியில் சுருள்சுருளான அவனுடைய கேசக்கற்றைகள் அசைந்தாடுவதைக் காண்கிறார். அவனுடைய முனைப்பும், இளமையும், அழகும், அவன் செய்யும் காரியத்தில் கண்ணாக இருந்ததும், இன்னும் என்னவெல்லாமோ சேர்ந்தும் அவன்பாலான முனிவரின் பிரியத்தை, பாசத்தை, கருணையை, அருளை உச்சநிலைக்கு எடுத்துச் செல்கின்றன. அவர் புளகாங்கிதம் அடைகிறார். 

பின்பு அவர் இவ்விரு இளைஞர்களுடனும் மிதிலையை அடைகிறார். அங்கு ஜனகன் தன்னிடமுள்ள யாராலும் நாணேற்ற இயலாத சிவதனுசை இவனால் நாணேற்ற முடியுமா என இராமனைப் பற்றி விசுவாமித்திரரிடம் கேட்கிறான். அவ்வாறு செய்பவனே அவனுடைய மகள் சீதைக்கு மணாளனாவான். இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள்! யாரும் காணாத அழகான காட்சி! சிவதனுசு கொண்டுவரப்படுகிறது. 

இராமன் அதனைப் பார்க்கிறான். வீரத்திற்கு இது சோதனையல்லவா? கைகள் அதனை எடுக்கப் பரபரக்கின்றன. ஆனாலும் குருவான விசுவாமித்திரரின் உத்தரவின்றி ஒன்றும் செய்யக்கூடாது எனும் கட்டுப்பாட்டில் நிற்கிறான். முனிவர் சீடனை நோக்கிக் கண்ணால் சமிக்ஞை செய்து உத்தரவு தருகிறார். கணநேரப் பொழுதுதான். அதைப் புரிந்து கொண்டு இராமன் சிவதனுசை எடுத்தான் – நாணேற்ற முயன்று சில நொடிகளில் இரண்டாக ஒடித்தும் விடுகிறான். இந்த இடைப்பட்ட சில நொடிப்பொழுதுகளில் அவனுடைய சுருள்சுருளான மயிர்க்கற்றைகள் பரந்த அழகான நெற்றியில் புரண்டு அழகாக அசைந்தாடுகின்றன. முனிவருக்கு அவன் வில்லை ஒடிப்பானா என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை. அவர் கண்கள் அவனுடைய அழகையும், முனைப்பையும், கருமமே கண்ணாயிருக்கும் தன்மையையும், அவனுடைய சுருண்ட கேசம் அசைந்தாடும் அழகையும் ஆசைதீரப் பருகுகின்றன. மயிர்க்கூச்செடுத்துப் புளகாங்கிதம் அடைகிறார் விசுவாமித்திரர். உள்ளம் பூரிக்கிறார்.

அடுத்த காட்சிக்குச் செல்லலாமா?


திருவையாறு. கோவிலில் அம்பிகையின் சந்நிதி. இங்கு தேவலோகத்திலும் காணக்கிட்டாத காட்சி மானிடர்களாகிய நமக்கு மட்டுமே கிடைக்கும். இது தர்மசம்வர்த்தனியின் தர்பார். ஒருபுறம் தேவலோக மங்கையர் நடனமாடுகிறார்கள். ஒரு புறம் இன்னிசைப்பாடல்கள் ஒலிக்கின்றன. அவரவர்கள் பதவிகளுக்கேற்ப அரசர்களும் மற்றோரும் அனைவருக்கும் அரசியான, ராஜராஜேஸ்வரி தர்மசம்வர்த்தனியின் வருகையை ஆவலாக எதிர்நோக்கி நிற்கிறார்கள். அவளும் கம்பீரமாக நடை நடந்து தோழியான மகாலக்ஷ்மியுடன் சிரித்துப் பேசியபடி உள்ளே நுழைகிறாள். மார்பில் புரளும் ரத்னஹாரங்களின் பளபளப்புடன் அவளுடைய பற்களிடையே ஒளிவீசும் புன்னகை போட்டியிடுகின்றது. விருதுகளையும் சிவச்சின்னங்களையும் ஏந்தி நிற்பவர்கள் ‘ஜய ஜய’ எனக் கோஷமிட, சமயமறிந்து பொன்மலர்கள் அவள்மீது தூவப்படுகின்றன. அவள் தம்மருகே வரும்போது தேவர்களும் அரசர்களும் மற்றவர்களும் ‘தடபட’ எனப் பூமியில் விழுந்து தண்டமிட்டு வணங்குகிறார்கள். அவற்றை, அந்த நமஸ்காரங்களை அவள் மகிழ்ச்சியுடன் தனது கடைக்கண்ணால் பார்த்து அங்கீகரித்துக் கொள்கிறாள். இந்த “சொகுசு” மனிதர்களான நம்மையன்றி வேறு யாருக்குக் காணக் கிடைக்கும்?  

திருவையாற்றின் ஒரு பரபரப்பான வீதி. பூவும் பழங்களும் விற்பவர்கள். அங்கும் இங்கும் திரள்திரளாக நிற்கும் மக்கள்; சாலையின் இருமருங்கும் வேதவிற்பன்னர்கள். திடீரெனப் பரபரப்பு. “சுவாமி வந்துவிட்டார்; ஐயாறப்பன் வருகிறார், வாருங்கள், தரிசித்து நமஸ்காரம் செய்யலாம்” என மக்கள் பேசிக்கொள்ள, அழகான ஒரு பூப்பல்லக்கில் பஞ்சநதீஸ்வரர் (ஐயாறப்பன்) விரைவாக வந்துகொண்டிருக்கிறார். வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான். நான்கு பல்லக்குத்தூக்கிகள் அவரைச் சுமந்து விரைகின்றனர். விருதுகளும் சைவச்சின்னங்களும் ஏந்திய தொண்டர் குழாம் பின்னால் வருகின்றது.

           தேவாதிதேவன் பல்லக்கில் பவனி வருவதனால் வேத விற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்ன ஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரானின் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்,’ என்கிறார் அந்த அடியார். 


என்ன இந்தக் காட்சிகள்? 

தியாகராஜர் – இராமபக்தர்; இறைபக்தர். தாம் புனையும் பாடல்களால் தமது இஷ்ட தெய்வம் இராமனையும், தாம் வசிக்கின்ற திருவையாற்றின் அம்பிகை தர்மசம்வர்த்தனியையும் போற்றிப் பாடிய திருக்காட்சிகளைப் பிரதிபலிக்கும் கீர்த்தனைகளைப் புனைந்துள்ளார்.

முதலாவது பாடல்

‘அலகலெல்ல ஆடக கனி
ஆ ராண்முனி எடு பொங்கெனோ’

(ஆடும் சுருளான குழல்கற்றைகளைக் கண்ட ராஜரிஷி மயிர்க்கூச்சமெடுத்துப் புளகாங்கிதம் அடைந்தார்.)

இதுவே மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடலின் பல்லவி;

‘மாரீசனின் மதத்தை அடக்கியபோதும்,’ ‘முனிவரின் கண் சைகையைப் புரிந்துகொண்டு சிவதனுசில் நாணேற்றியபோதும்’

எனும் அனுபல்லவி, சரணங்களைப் பாடிப் பின் திரும்பவும் முனிவர் புளகாங்கிதம் அடைவதனைத் திரும்பத் திரும்பக் கூறிப் பரவசம் அடைகிறார் தியாகராஜர். 

இப்போது நமக்கு ஒரு சந்தேகம். புளகாங்கிதம் அடைவது யார்? முனிவர் மட்டுமா? தியாகராஜரும் கூடத்தானே? அடுத்தது இந்தப் பாட்டைப் பாடும் பாடகர் பொருள்புரிந்து பாடினாரென்றால் அவரும் புளகாங்கிதம்தான் அடைகிறார். கடைசியாக  ரசிகர்களான நாம், கேட்கும்போது பொருள்புரிந்து கொண்டு அனுபவித்தால் நமக்கும் மயிர்க்கூச்செறியும் பாடல்.

இப்போது நாம் எண்ணிப்பார்க்க வேண்டியது தியாகராஜரின் மனநிலை ஒன்றினைத்தான். இப்படிப்பட்ட காட்சி / நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்ததா என்று நமக்குத் தெரியாது. ஏன், அந்தக்காலத்து அயோத்தி மக்களுக்கும், மிதிலை மக்களுக்குமே தெரியாமல் இருக்கும். முனிவர் இராமனின் நிலையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்தது அந்தப் பரப்பிரம்மத்திற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இராமனுக்கும் கூடத் தெரியுமோ என்னவோ! ஆக, அப்படியொரு நிலையைத் தனது மனக்கண்ணில் காண்கிறார் தியாகராஜர். ஏனென்றால் அவர் தனது ஒவ்வொரு சுவாசத்திலும் இராமனையே சுவாசிப்பவர். காண்பதெல்லாம் இராமன். அவனுடைய சரித்திரத்தின் ஒவ்வொரு நொடியும் நிகழ்வும் இவருடைய அதீதமான கற்பனையின் உச்சம்தான்.

இதனை இப்போது ஏன் நினைவுபடுத்திக் கொள்கிறேன்?

இசை என்றால் நம் எல்லாருக்குமே விருப்பம்தான். பாடகர்கள் கச்சேரி செய்யும் வெவ்வேறு சங்கீத சபாக்களுக்குச் சென்று நாம் கேட்பதுண்டு. பரவசமடைவதுண்டு.

அப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமநவமி சமயம் ஒரு சபா மஹாமஹோபாத்யாய ஸ்ரீ நூகல சின்னசத்யநாராயணா எனும் ஆந்திராவின் புகழ்வாய்ந்த பாடகரின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதனைப் பாடலும் விளக்கமுமாக அவர் நிகழ்த்துவார் எனக் கூறப்பட்டது. மிக அருமையான நிகழ்ச்சி. பல கிருதிகளை அருமையாக விளக்கம் கூறிப் பாடியும் காட்டினார் வித்வான். ஓரிரு கிருதிகள் மிக அழகான பொருளும் விளக்கங்களும் கொண்டமைந்து உள்ளத்தைக் கவர்ந்தன. ‘அடடா! இத்தனை நாட்களாகப் பொருளே தெரியாமல் இவற்றைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோமே, இன்று பொருளுடன் கேட்கும்போது எவ்வளவு இனிமையும் அழகும் ததும்பி வழிகின்றன என ஆச்சரியப்பட்டேன். 

அவற்றுள் ஒன்றுதான் ‘அலகலல்லலாடக கனி’. நிறுத்தி நிதானமாக அழகாக விளக்கம் கூறினார் வித்வான். இப்போது மேலே உள்ள விளக்கத்தை இங்கு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

அன்றைய தினத்திலிருந்து எனக்கு இந்தக் கிருதி மீது தனிப்பட்ட ஈர்ப்பு. அன்றைய நாட்களில் யூடியூபில் இத்தனை பதிவுகள் இருந்ததில்லை. மிகச்சிலவே. அதுவும், வித்வான்கள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பாலமுரளி கிருஷ்ணா, நூகல சின்னசத்யநாராயணா இவர்களுடையது மட்டுமே.

ஒருமுறை இளம்பாடகர் சிக்கில் குருசரணை அவர் கச்சேரி செய்ய வரப்போவதனை முன்கூட்டியே அறிந்துகொண்டு கடிதம் எழுதி, இதனை ராக ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களுடன் பாட வேண்டிக் கொண்டேன். அவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு பாடலைக் கற்றுத் தயார் செய்துகொண்டு வந்து பாடினார். என் கண்களில் ஆனந்தக்கண்ணீர். அவர் பாடிய அந்தக் கிருதி அன்றைக்கு அவருக்கு பெருத்த பாராட்டைப் பெற்றுத் தந்தது. சிவதனுசை வளைக்கும் ராமன், தன் சீடனை வாத்சல்யம் பொங்க நோக்கிப் புளகாங்கிதம் அடையும் விசுவாமித்திரர் இவர்களைக் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தினார் பாடகர் குருசரண்.

இது தியாகைய்யர் நமக்களித்த கலைச்செல்வம் தானே! ஸ்ரீராமனிடம் அவர் கொண்டது பக்தி மட்டுமல்ல. அதற்கும் அப்பாற்பட்ட ஒரு நெருக்கம்; வாத்சல்யம். ‘என் குழந்தை’ எனும் நெருக்கம் தோன்றும்போது அவனுடைய ஒவ்வொரு அசைவுமே மிகவும் ரசிக்கத்தக்கதாக மாறி விடுகிறது. பக்தர் ரசிகராகிறார்; ரசிகர் – கலைஞராகி கற்பனையின் வசப்பட்டுத் தான் விரும்பும், வழிபடும் இஷ்ட தெய்வத்தை எப்படியெல்லாமோ கற்பனைசெய்து மகிழ்கிறார். இந்தக் கிருதிகளைப் பாடுவோரும் பொருளுணர்ந்து பாடினால் பின்பு அது கேட்பவர்களுக்கு தேவானுபவம்தான்!

~o0o~

அடுத்த காட்சியும் தியாகராஜரின் அதிகமாகக் கேட்கப்படாத கிருதிதான். திருவையாறு க்ஷேத்திரக் கிருதிகள் என அம்பிகை தர்மசம்வர்த்தனி, இறைவன் பஞ்சநதீஸ்வரர் மீது மொத்தம் பதினோரு கிருதிகளை இயற்றியுள்ளார் தியாகராஜர். அவற்றுள் ஒன்றே அதிகம் பாடப்படாத (அதனால் கேட்கவும் படாத) ‘விதி சக்ராதுலகு’ எனும் யமுனாகல்யாணி ராகப் பாடல்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, இசைக்கலைஞரும் சித்திரங்கள் வரைவதில் விற்பன்னருமான வித்வான் திரு. எஸ். ராஜம் அவர்கள் Musings on Music எனும் மிக அழகான புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதைப்பற்றி அறிந்த நான் சில பிரதிகளைப்  பெற அவருடைய மயிலாப்பூர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டவர், எனக்கு விருப்பமானால் சில கிருதிகளை எனக்குக் கற்பிப்பதாகக் கூறினார். திருவையாறு க்ஷேத்திரக் கிருதிகளில் இரண்டு அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. என்னைக் கவர்ந்த அவை இரண்டினையும் நானும் கற்றுக் கொண்டேன். (படங்களை இங்கு காணலாம்).

எனக்குத் தெரிந்தவரை பம்பாய் சகோதரிகள் (CD – திருவையாறு க்ஷேத்திரக் கிருதிகள்), விஜயலக்ஷ்மி சுப்ரமண்யம் (CD – சாக்தம்) ஆகிய இசைக்கலைஞர்களே இவற்றைப் பாடிப் பதிவு செய்துள்ளார்கள். மிகச் சமீபத்தில் ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் என்பவரின் இசைப்பதிவுகள் யூடியூபில் கிடைக்கின்றன. கேட்க இனிமையாகவும் உள்ளன.     

இவற்றுள் திரு. ராஜம் அவர்கள் படமாக்கிய இரண்டும் மிகவும் அருமையான கிருதிகள். உள்ளத்தைக் கவரும் கற்பனை! வர்ணனை ரசம் வழியும் வரிகள். மேலே சென்று திரும்பப் படியுங்கள். உள்ளம் சிலிர்க்கும். எனக்கு அப்படித்தான் ஆயிற்று. பக்தராக இருப்பவர் பக்திரசம் ததும்பும் கிருதிகளை இயற்றலாம். பெரும்பாலானவை அவ்வாறே உள்ளன. ஆனால் தியாகராஜர் எனும் பக்தர், பக்தியின் வழிச்சென்று காணும் காட்சிகளை நுணுக்கமான காட்சிகளின் கலையழகு மிளிர, அற்புதமான கற்பனைத் தேரிலேற்றிக் கொண்டாடும் இந்த நயத்தை என்னென்று சொல்வது?

வெள்ளிக்கிழமை திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பிகையின் சந்நிதி தனி அழகில் மிளிரும். அங்கு பாடல் இசைப்பவர்களையும் நடனம் ஆடும் தேவ மங்கையரையும் கற்பனை செய்து கொள்கிறார். அரசரும் சாமானியரும் ஒருசேர வந்து வழிபடும் சந்நிதி அது. அன்னையின் ஷோடச உபசாரங்களின்போது காணக்கிடைக்கும் அந்த திவ்ய மங்கள வடிவத்தின் பேரழகை, மார்பில் மின்னும் வைர, ரத்தின ஹாரங்களை, பல் வரிசைகளுடன் போட்டியிடும் நவரத்தின மாலைகளை, சொரியப்படும் மலர்களை, முழங்கும் ‘ஜய, ஜய’ எனும் கோஷங்களை, அடியார்கள் ‘தட தட’ என்று வரிசையாக விழுந்து வணங்கும்போது அதனைக் கடைக்கண்ணால் கண்டு அங்கீகரித்துக் கொள்ளும் பாங்கினை, அடடா, தியாகராஜர் பரம கலாரசிகராக அல்லவோ நமக்குக் காட்சியளிக்கிறார். மேலும் அவர் அங்கு மஹாலக்ஷ்மியையும் இந்தக் காட்சியில் காண்பிக்கிறார். பார்வதிதேவி அவளுடன் உரையாடிச் சிரித்தபடியே நடைபயின்று வருகிறாள். நம் உள்ளம் துள்ளுகிறது. இந்தக் கிருதியின் பொருளை அறிந்து பின்பு கேட்டால் அந்த சுவர்க்கலோகமே இங்கு வந்துவிட்டதோ எனத்  தோன்றும்.

~o0o~

மூன்றாவதாக நான் பகிர்ந்து கொண்டதும் ‘முச்சட ப்ரஹ்மாதுலகு தொரகுணா’ எனும் மத்யமாவதி ராகக் கீர்த்தனைதான். கோவிலில் ஈசன் ஊர்வலமாகப் புறப்பட்டு வருவதனைக் கண்ணுறும் நாம் என்ன செய்வோம்? உடனே சென்று நமஸ்கரித்து கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மகிழ்வோம். அடுத்தமுறை இப்படிக் கற்பனை செய்து கொள்ளலாமே! நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலோ அல்லது ஏதாவது ஒரு வாகனத்திலோ ஈசன் வாசம் மிகுந்த மல்லிகை மாலைகள் சாற்றிக்கொண்டும், அழகான பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தும் சொகுசாக பவனி வருவதைக் கண்டால் அழகாக அலங்கரித்துக்கொண்டு சுவாமி நறுமணங்கள் சூழத் தன் காதல் மனைவியைச் சந்திக்க விரைகிறார் என தியாகராஜர் கிருதியை நினைவுகூர்ந்து ரசிக்கலாமே! 

ஆஹா! எப்பேர்ப்பட்ட கவித்துவமான கற்பனை! 

[இந்தப் பாடலின் பதிவுகள் சில கிடைக்கின்றன. இருப்பினும் அரிதாகப் பாடப்படும் கிருதிதான் இது!]

இந்தக் கவித்துவத்தைக் கண்முன் நிரந்தரமாக்க ஒரு வருடம் நவராத்திரி கொலுவில், என் கைப்பட சுவாமியையும், அம்பிகையையும், மகாலட்சுமியையும் செய்து வைத்து மகிழ்ந்தேன். (படங்களை காணலாம்).

ரசனையுடனும் அற்புதமான கற்பனையுடனும் இவற்றை எல்லாம் இயற்றிய தியாகராஜரை, அந்த மகானை விழுந்து விழுந்து வணங்கத் தோன்றியது. அடுத்தமுறை திருவையாறு செல்லும்போது இந்தக் கீர்த்தனைகளை அவர் சமாதியில் பாடி அஞ்சலி செலுத்த வேண்டும் எனத் தோன்றிற்று.

அழகுணர்ச்சி என்பது அதீதமான ரசனையில் பிறப்பது. ரசனை கற்பனையாக இருக்கலாம்; அல்லது காணும் பொருளை ஆராதிப்பதாக இருக்கலாம்; அதன்மீது எல்லையற்ற அன்பு, பிரேமை கொண்டதனால் இருக்கலாம். இந்த அன்பும் பிரேமையும் காதலாக இருக்கலாம்; பக்தியால் இருக்கலாம், பெருமதிப்பினால் உண்டாகலாம். இவற்றின் அற்புதமான கலவையே இவை, நான் அனுபவித்த இசைத்தருணங்கள். 

~o0o~

இதன் தொடர்பாக எழுந்த சில எண்ணங்கள். நமது இசைவாணர்கள், தாங்கள் பாடும் பாடல்களின் பொருளைக் கூறிவிட்டுப் பாடினால் அவற்றை ரசிப்பது இன்னும் கொஞ்சம் கூடும் எனத் தோன்றுகிறது. மிகச்சில நிகழ்ச்சிகளில் இவை செய்யப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அமைந்துள்ள பாடல்களை, பாடும் ஊருக்கு ஏற்றபடி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ விளக்கிவிட்டுப் பாடினால் ரசிகர்கள் இன்னும் அதிகமாக ரசிப்பார்கள் எனத் தோன்றுகிறது. 


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.