டாப் கியர் (Top Gear) – வாகன ப்ரேமிகளின் உயிர்த்துடிப்பு

சில சமயம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு எஜமான் – கருவி என்ற நிலை மாறி அவற்றின்மேல் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை உளவியலால் விளக்கமுடிவதில்லை. ஒரு பொருளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது, அதன் மேல் காதல் கொள்வது, அதனைப் பேணி காக்கும்போது அந்தப் பொருள் ஒருவரின் சிந்தனை பிரதிபலிப்பாகவும், ஆளுமையின் ஒரு அங்கமாகவும் மாறிவிட்டதென்றே பொருள். இந்த உயர்ந்த  அந்தஸ்தை எல்லா பொருட்களாலும் அடைந்துவிட முடியாது. காலஞ்சென்ற  ஒருவரின் நினைவுச்சின்னங்களைத் தவிர வீடு, வாகனம் இவை இரண்டிற்கும்தான் இந்த இடம் கிடைக்கிறது. 

பண்டைய தமிழ் பாரம்பரியத்தில், வாகனங்கள் முக்கிய பங்கு வகுத்தன. அரசனின் தேர்ப்படைகள் மற்றும் கோவில் தேர்களைப் பற்றிய மேற்கோள்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. குதிரை பூட்டிய தேர்கள் அக்காலகட்டங்களிலேயே அந்தஸ்தின் சின்னமாகப் பார்க்கப்பட்டது. முழு அலங்காரத்துடன் பொலிவாக நகர்ந்துவரும் கோவில் தேர், தங்க ஆபரணங்களுடன் நடந்துவரும் நங்கைகளுடன் ஒப்பிடப்பட்டது. 

‘வாகனம், இளம் பெண்ணைப் போல இன்பமும் துன்பமும் சமமாய் கொடுக்கும்”

-இத்தாலிய வாய்மொழி. 

கார்களைப் பெண்களுடன் (அதுவும் கன்னிகளுடன்) ஒப்பிடுவது நவீன கவிதை உருவகம். ஆடவர்களின் மோகப்பார்வையில் இயற்றப்பட்டதெனினும், பெண்ணிற்கான சகல குணாதிசயங்களும் கார்களுக்கு உண்டு. பார்த்தவுடனே மயக்கம் கொள்ளல், மங்களகரமான ஆரம்பத்தைக் கோருதல், தனிமை காலங்களுக்காக ஏங்குதல், குறைந்த வருமானத்திலும் அதிகம் செலவிடுதல், பிரிவினால் துயருறச் செய்தல்  போன்ற உணர்ச்சிகள் வாகனத்திற்கும் இளம் பெண்ணிற்கும் பொதுவானவை. இது ஒருபுறமிருக்க, ஆயுதங்களுக்காகவே ஆண்டின் ஒரு திருநாளைக் குறித்துக் கொண்டாடும் இந்தியக் கலாச்சாரத்தில், வாகனம் வாழ்வாதாரத்தின்  அடிப்படையாகவும், அந்தஸ்தின் பிரதிபலிப்பாகவும், ஆளுமையின் வெளிப்பாடாகவும் விளங்குவதில் ஆச்சரியமில்லை. 

வாகனங்கள், அதிலும் மோட்டார் வாகனங்களில் பலவகை இருப்பினும் தனிப்பட்ட உபயோகத்திற்காக உருவாக்கப்பட்ட கார்களும், மோட்டார் சைக்கிள்களும் மனிதனின் (குறிப்பாக ஆடவர்களின்) அடையாள சின்னங்களாகிவிட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பான இன்ஜின், தொழிற்புரட்சி வெடிக்கப் பெரும்பங்கு வகுத்ததில் சந்தேகமில்லை. ஃபோர்ட் (Ford) நிறுவனம் தயாரித்த வகை ‘டி’ (Model T)யைத்தொடர்ந்து வெகு விரைவாக வாகன வடிவமைப்பு மற்றும் நுட்பம் வளர்ந்து அறுபதுகளில் வீட்டிற்குக் குறைந்தது ஒரு கார் என்பது மேற்கத்திய நாடுகளில் முறையானது. வாகனங்களின் பெருக்கம் மற்றும் நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சியினால் எழுபதுகளில் வாகன நிறுவனங்கள் பல புதிய  படைப்புக்களை நுகர்வுக்கு வழங்கினர். அத்தகைய வழங்கலில் தேவைக்கேற்ப வாங்க, மோசம் போகாமல் காக்க, பணத்திற்கான மதிப்பைப்பெற நம்பிக்கைக்கு உகந்த வழிகாட்டித் தேவைப்பட்டது. இந்தத் தேவையின் பொருட்டே இங்கிலாந்தில் 1977யில் பிரத்தியேகமாக வாகனங்களைப் பற்றிய செய்திகளையும், சாலை விதிகளைப் பற்றியும், வாகன விமர்சனத்திற்காகவும், நுகர்வோரின் வசதிக்காகத் துவக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி, டாப் கியர் (சுருக்கமாக – டிஜி). 

கார்களை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவது மிகக் கடுமையான விஷயம். சராசரி மனிதன் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றிற்குப் போக உதவும் இயந்திரமாகத்தான் அறிவான். இன்ஜின் மற்றும் ஆயிரக்கணக்கான உபகரணங்களின் தேவை, வடிவமைப்பு, செயல்படும் கோட்பாடு, தேர்வு போன்ற நுட்பம் சம்பந்தமான கேள்விகளை நூற்றில் தொன்னூற்றி ஒன்பது பேர் கற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்று புள்ளி மூன்று லிட்டர் இயற்கை சுவாச இன்ஜினும் (Naturally Aspirated Engine), ஒன்று லிட்டர் டர்போ சுவாச இன்ஜினும் ஏன் ஒரே அளவு சக்தியைக் கொடுப்பவை என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம், பொறுமை, பொறியியல் அறிவு சாமானிய நுகர்வோரிடம் இருக்காது,  அதனை எதிர்பார்க்கவும் கூடாது. விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மேற்கண்ட இயற்கை சுவாச இன்ஜின்,  காற்று-எரிபொருள் கலவையை இயற்கை அழுத்தத்தில் (At Atmospheric Pressure , 1Bar) இன்ஜினின் ஏரி உருளை (Combustion Chamber) க்குள் சேர்த்துக்கொள்ளும். ஆதற்கு நேர்மாறாக வேகத்தைப் பொறுத்து டர்போ இன்ஜினுள் காற்று-எரிபொருள் கலவையை இயற்கை அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத்தில் டர்போ இயந்திரம் வலுக்கட்டாயமாக அடைக்கும். சக்தி, அழுத்தத்தின் பின்விளைவென்பதால் அதே அளவு இன்ஜினில் டர்போ இயந்திர சேர்க்கை அதிக சக்தியைக் கொடுக்கும்.இன்னொரு உதாரணம் சக்திக்கும் (Horsepower) முருகிற்குமான (Torque) வித்யாசம். கியர்களை மாற்றும்போது முறுக்கும், வேகமும்  மாற்றிக்கொண்டே போகும். முதலாம் கியரில் வேகம் குறைவாகவும் முறுக்கு அதிகமாகவும், கடைசி கியரில் வேகம் அதிகமாகவும் முறுக்கு குறைவாகவும் இருக்கும். ஆனால் முதல் கியரில் உச்சபட்ச முறுக்கு கிடைக்கும் என்ற தப்பான முடிவிற்கு வரக்கூடாது. ஒவ்வொரு கார் வகையும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் உச்சபட்ச  முறுக்கை அடையும். இன்ஜின் உச்ச சக்தியைக் கொடுக்கும்போது முறுக்கு உட்சத்தில் இருக்காது. இது ஒரு நுட்பம் சம்பந்தமான விஷயம். இந்த விவரமறிந்தவுடன் எல்லா வாகனங்களிலும் சக்திக்கும் முறுகிற்கும் இடையே இருக்கும் சம்பந்தம்  இப்படித்தான் என்ற முடிவிற்கும் வரக்கூடாது. எரிபொருள் இன்ஜின்கள் (Combustion Engines ) போல இல்லாமல் மின் – மோட்டார் வாகனங்கள் (Electric Vehicles) வேகம் பூஜ்யமாக இருக்கும்போதுகூட முறுக்கை உருவாக்கக்கூடியவை. கியர்களை பற்றிப்  பேசும்போது அதன் வகைகளைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. பொதுவாக வாகன கியர்கள் இரண்டுவகைப்படும் முதலாவது ஆள் இயக்கி வகை (Manual) இரண்டாவது தானியங்கி வகை (Automatic). தானியங்கிகளுள் முறுக்கு மாற்றான் (Torque Converter), தொடர் மாற்றான் (Continuous Variable Transmission) போன்ற உட்பிரிவுகளும் உள்ளன. 

மேற்கண்ட விவரம் பொறியியலாளர்கள் , வாகன விசிறிகள் மட்டுமே அறிவர் என்பதால் நுட்பத்தை மட்டுமே மையப்படுத்தி நிகழ்ச்சியில் பேசினால் அத்தகைய வழங்கல் வர்த்தக நுகர்விற்கு எடுபடாது. இந்நிலையில் கார்களைப் பற்றிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகச் செயல்படுபவர் கார்களைப் பற்றி விவரமறிந்தவராக இருப்பதுமட்டுமின்றி, அந்த அறிவை நுகர்வோரின் சாமானிய மொழியில் வழங்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். வெகுஜனருக்கு புரியும் விதத்தில் கார்களைப் பற்றிப் பேசவும், அவற்றின் குணாதிசயங்களை விளக்கவும், பாரபட்சமின்றி குறை நிறைகளை எடுத்துச் சொல்லவும், அதே சமயம் வாகனங்களுடன் சம்பந்தப்பட்ட பயணங்கள், பார்வை இடங்கள், பாதையில் அமைந்திருக்கும் உணவகங்கள் போன்றவற்றைப்  பற்றியும் தொகுப்பில்  இடை இடையே தக்க இடங்கொடுத்துப் பேசத் தனித்திறமை தேவை. ஆரம்பத்திலிருந்து பலரால் தொகுத்து வழங்கப்பட்ட டிஜி நிகழ்ச்சி, ஜெரிமி கிளர்க்சன் (Jeremy Clarkson), 1986யில் தொகுப்பாளராகச் சேர்ந்ததும் முகம் மாற ஆரம்பித்தது. டிஜியின் தனித்துவ வழங்கலில்  நுகர்விற்குத் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இத்தகைய வழங்கலுக்கு ஆங்கில குதிரைப்படை பயிற்சியில் அடிப்படை இருந்ததெனப் புரளி. குதிரையைப்பற்றி வீரர்களுக்கு விளக்கம் கொடுத்த  ஒரு அதிகாரி,

“வீரர்களே !, இது ஒரு குதிரை. வாய் இங்கே முன்னே இருக்கிறது. புல்லும் தவிடும் தின்றபின் பின் வழி வெளியேறும். நடுவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி  நீங்கள் கவலைப்பட வேண்டாம் ” என்றாராம்.  

கேட்பதற்குப் பகடியெனினும் கார்களும் குதிரைகள் போலத்தான்.  நுட்பங்களை (பெயர்களைக் கடந்து) டிஜி நிகழ்ச்சி வரைபடம் போட்டு என்றுமே காட்டியதில்லை. புகாட்டி வேய்றோன் (Bugatti Veyron ) என்ற அதிநவீன காரைப்பற்றி பேசும்போது  ” எட்டு லிட்டர், பதினாறு சிலிண்டர் , ஆயிரம் ஹார்ஸ்பவர், ஆயிரத்தியிருநூறு நியூட்டன் மீட்டர் டார்க் கொண்டது. இப்போது இவை உங்களுக்கு அவசியமில்லை. உங்களுக்கு தேவனுயான விஷயம் முதலாவது இது மிக வேகமான கார், இரண்டாவது  ஒண்ணேமுக்கால் மில்லியன் பவுண்ட் விலை, மூன்றாவது  ஒரு நிமிடத்திற்கு மூன்று லிட்டர் பெட்ரோல் குடிக்கக்கூடியது. இதனால் ஒரு முழு டாங்க்குடன் முக்கால் மணிநேரம் பயணிக்கலாம்.” என விவரித்தது வித்தியாசமான அணுகுமுறை. 

ஜெரிமியின் ஆளுமை, பகடி மற்றும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களுக்காகவே நேயர்கள் டிஜியை பார்க்கத்தொடங்கினர். இதே போன்று, அமெரிக்காவின் NPR வானொலி நிகழ்ச்சியான ‘Car Talk’, கார்களைப் பற்றிய அறிவியலை நகைச்சுவையான கலந்துரையாடலாக மாற்றியது. இது ஒரு புதிய வகை ஊடக அணுகுமுறையாகும். ஜெரிமியின் பகடிகளில் சிலவை, 

“கார்களைப் பற்றி எதுவும் தெரியாத குருட்டுப் பயலுக்கும் இதைவிட நல்ல கற்பனை இருக்குமென்பது மறுக்கமுடியாத உண்மை”

“வேகம் மற்றும் சக்தி, அதுவே என்  கொள்கை”

“வேகம் என்றுமே கொன்றதில்லை. திடீர் அமைதி…அதுவே நிஜ கொல்லி”

” நிஜ பைத்தியங்களுக்கே, அதாவது காலையில் எழுந்ததும் ‘நான் ஒரு வெங்காயம்’ என நினைப்பவர்கள் இருக்கிறார்களே…அவர்களுக்கே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட கார் இது” BMW  X3 காரைப் பற்றி. 

“இத்தாலியர்கள் போப்பாண்டவரை இழந்தாலும் இழப்பார்கள்  ஆனால் பேய் பிடித்ததைப் போலக் கார் ஓட்டுவதை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்”

“உலகத்தின் ஐந்து மாபெரும் அபத்தங்களைப் பட்டியலிட்டால் ஐந்தாம் இடத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, நான்காமிடத்தில் எய்ட்ஸ் நோய், மூன்றாமிடத்தில் ஈரானின் அணுகுண்டு தயாரிப்பு முயற்சி, இரண்டாமிடத்தில் கார்டன் பிரவுன் (Gordon Brown – அப்போதைய ஆங்கிலேயப் பிரதமர்) மற்றும் முதலிடத்தில் மஸராட்டியின் (Maserati – இத்தாலிய கார் வகை) கியர் பேட்டி. இது அவ்வளவு மோசமானது”

“குதிரையின் பின்புறத்தைப் பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டுவதைவிட இது சற்றே மேன்மையானதென்றாலும் இதை வடிவமைத்தவர் மூன்று கை, ஒரு கால் மனிதனை மனதில் நிறுத்தி வடிவமைத்திருக்க வேண்டும். ” 1903 வருட காரின் விமர்சனம். 

2001 யில் ஜெரிமியுடன் ஜேம்ஸ் மே (James May) மற்றும் ரிச்சர்ட் ஹேம்மோன்ட் (Richard Hammond) சேர்ந்ததும்தான் டாப் கியர் களைகட்டியது எனலாம். அடுத்த இருபத்தி இரண்டு ஆண்டுகள் உலகெங்கும் ஒரு கட்டத்தில் முப்பத்து ஐந்து லட்சம் கட்டணம் செலுத்தும் வாசகர்கள் பெற்று தொலைக்காட்சி நுகர்வின் இமயத்தைத் தொட்டது டிஜி. ஜெரிமியின் “வேகம் மற்றும் சக்தி” ஆளுமைக்கு நிகராக ஜேம்ஸ்சின் “பொறுமை மற்றும் பொலிவு”  சித்தாந்தம், நிகழ்ச்சி தொகுப்பில் எதிர்முகத்தை  அறிமுகப்படுத்தியது. இரு சிகரங்களுக்கு மத்தியில் நடைமுறைக்கேற்ப வாதங்களை முன்வைக்கும் ரிச்சர்டின் யதார்த்தவாதம் நேயர்களை டிஜி என்றவுடனேயே இம்மூவரின் முகங்களை நினைவுபடுத்த உதவியது. டாப் கியர் முதல் பாகத்தில் (1977-2001) இருந்த ஆர்ப்பாட்டமில்லா வாகன விமர்சன முறை மாறி, கார்கள் அங்கம்வகுக்கும் சாகச தொடராகவே பார்க்கப்பட்டது. அத்தகைய சாகசத்தில் கேளிக்கைக்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக் கொடுத்ததிற்கு   இம்மூவரின் கற்பனைத் திறனே காரணம். 

டாப் கியர் நிகழ்ச்சியின் பல்நாட்டு அனுபவங்கள் தொடர், தி கிராண்ட் டூர் (The Grand Tour) 2016 யில் ஆரம்பித்து 2024 ல் முடிந்தபோது ஒரு முழு சகாப்தமே முடிந்ததெனலாம். டிஜியின் பிரபலம், வெகுஜன அபிமானத்திற்குத் தொகுப்பாளர்களின் திறமை, அதி நவீன கார்களின் அணிவகுப்பு மட்டுமின்றி நிகழ்ச்சியின் கருத்தரிப்பும் ஒரு காரணம் எனலாம். அதி நவீன, சக்திவாய்ந்த கார்களைப் பந்தய தடங்களில் ஓட்டிக் காண்பிப்பது பலருக்கு அசிரத்தை கொடுக்கும் விஷயம். ஒரு சிலருக்குத்தான் கார் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபாடு இருக்கும். ஆனால் டிஜி  நிகழ்ச்சியில் காட்டப்படும் கார்களைப் பார்த்து, நம்மால் அந்தக் கார்களை வாங்க முடியாதா என்ற ஏக்கம் உண்டானது உண்மையே. 

கார் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற டிஜி சர்ச்சைக்குப் புதிதல்ல. போதையில் தயாரிப்பாளரை அறைந்ததால் ஜெரிமி ஆங்கில ஒளிபரப்பு கழகத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டார். அர்ஜென்டினா (Argentina) நாட்டுப் பயணத்தின்போது  ஃபாக்லாண்ட் (Falkland) போரை நினைவூட்டும் வகையில் பயணக் காரின் அடையாள பலகை இருந்ததால் கல்லடி வாங்கினார் டிஜி குழுவினர். அல்பேனியா (Albania) பயணத்தில்,  சவத்தை கார்பின் பெட்டிக்குள் அடைத்துச் செல்ல எந்தக் கார் வகை சிறந்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்க முயன்றது, அல்பேனியா முழுவதும் மாஃபியா (Mafia) கூட்டங்களின் கைப்பிடியில் உள்ளதென்று சொல்ல முயன்றதாகப் புகார் எழுந்தது. இவற்றையெல்லாம் தாண்டி டிஜி நிகழ்ச்சியில் ஒரு சராசரி மனிதன் ஓட்டும் கார்களுக்கு இடமில்லை, அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய கார்களைப் பற்றி மட்டும்தான் டிஜி நிகழ்ச்சியில் பேசப்படும் என்றும்,  மின் – மோட்டார் வாகனங்கள் ஸ்வாரஸ்யமற்றவை என்றும் (” மின் – மோட்டார் வண்டி ஒரு சலவை இயந்திரம் , அவ்வளவுதான்” – ஜெரிமி), வேலையாளர் வர்க்கத்தினர் ஓட்டும் கார்களுக்கு இடமில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் இருந்தன, அதில் உண்மையும் உண்டு. 

டிஜி நிகழ்ச்சியின் புகழ் ஆண்வர்க்கத்தின் தோள்களில் மட்டுமே நிற்கிறதென்ற பேச்சை , பெண்கள் டிஜி நிகழ்ச்சியில் அதிகம் இடம்பெறவில்லை என்ற பொதுக் கருத்தை எதிர்கொள்ள டிஜி பாணியில் இளம்பெண்களை கார்களை கொண்டு கவருவது எப்படி? வயதான தாய்மார்களின் வேகத்திற்கு ஏற்ப ஓடும் கார் வகை எது? என்ற ஆண் புத்தி அபத்தங்களின் மூலம் ஊர்ஜித்தப்படுத்திய அதே நிகழ்ச்சியில் , சபினே ஷ்மிட் (Sabine Schmidt) போன்ற பெண் கார் ஓட்டப் பந்தய வீராங்கனைக்கும்  இடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. முடிவில் டிஜி நிகழ்ச்சி கண்ட உலகளாவிய வெற்றிக்குக் காரணம் தொகுப்பாளர்கள் மூவரின் திறமை என்பதில் சந்தேகமில்லை. மனிதன் நகர்வைப் பற்றிய ஆசை தீராதவரை, இன்ஜின்கள் ஓய்ந்தாலும், டிஜி போன்ற யந்திரங்களோடு பேசும் நிகழ்ச்சிகள் நமது கலாசாரத்தில் தொடரும் என்பதிலும் சந்தேகமில்லை. 


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.