என் சிறு வயதில் என் அம்மாவின் சேலைத் தலைப்பை பிடித்தபடி அவர் போகும் இடமெல்லாம் திரிவேன். அம்மா அடுப்பில் உலை வைத்தாலும், துணி துவைத்தாலும் வாய் ஒரு கதை கூறிய படி இருக்கும். கதைக்கு ஏற்றது போல திடீரென இனிமையாகப் பாடுவார்கள். நான் அம்மா வாயையே பார்த்துக் கொண்டிருப்பேன். திடீரென வந்து விழும் பாடல்களைக் கேட்க என் காதுகள் கூர்மையாகக் காத்துக் கொண்டிருக்கும். அம்மாவுக்கு பிடித்தமானவை சோகப் பாடல்கள்தான். ஹிந்திப் பாடல்களைப் பாடும்போது அவர் கண்கள் எங்கேயோ நோக்கியிருக்கும். அந்தக் கதாநாயகி போலவே தென்படுவார். அம்மாவைப் போல பாட வேண்டும் என்று மனம் ஆசைப்படும். சினிமாப் பாடல்கள் தவிர எதுவும் முக்கியமில்லை என்று மனம் நம்பியது என் மாமாவை பார்ப்பது வரை.
என் மாமாவை என் அம்மா அறிமுகப்படுத்தியது ஒரு திருமணத்தில்தான். அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லையென்பதால் அவரைக் குறித்து தெரியாமல் இருந்தது. அந்தக்
கல்யாணத்தில் என் அம்மா அவரிடம் அறிமுகப்படுத்தினார். மாமா மிகுந்த அன்புடன் என்னிடம் பேசினார். அம்மா என் அப்பா இருக்கிறாரா என்று சுற்றிப் பார்த்து இல்லையென்பதை உறுதி செய்தவுடன், “பள்ளியில் பாடி பரிசு எல்லாம் வாங்கியிருக்கா”, என்றார். என் மாமா, “எங்கே ஒரு பாட்டு பாடு”, என்றவுடன் நாணிக் கோணியபடி ஒரு தமிழ்ப் பாடலைப் பாடி முடித்தவுடன் மிகவும் பாராட்டினார். அடுத்த சந்திப்பில் ஒரு கேசட்டைக் கொடுத்து இதைக் கேட்டு விட்டு உன் கருத்தைக் கூறு என்றார். அந்தப் பாடல்கள் எல்லாம் ஜானி பாபு என்ற கவ்வாலி இசைக் கலைஞரால் பாடப்பட்டது. “திவானா திவானா ” என்ற பாடலைக் கேட்டவுடன் பூ நறுமணத்தை உள்ளே வைத்திருப்பதைப் போல அந்தப் பாடல்களுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு மறைந்திருந்தது. அந்த ஒரு கேசட்டை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கு வழக்கு கிடையாது. அதைப் பற்றி அவருடன் பகிர்ந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தேன். அவர் வரவில்லை. ஆனால் என் மாமா உடல்நிலை குன்றி இறந்து விட்ட செய்தி சில நாட்களில் கிடைத்தது. அவருடன் பகிர வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாத ஏக்கமாக மனதின் அடியாழத்தில் சென்று தேங்கியது. காலங்கள் மாறி யூடியூப் என்ற வரப் பிரசாதம் வந்து சேர்ந்தது. ஜானி பாபுவின் இசையைத்தான் அதிலும் தேடிக் கொண்டிருந்தேன். கம்பீரமான குரல். என் மகன் பள்ளியில் கிளாரினெட் பயிற்சி மேற்கொண்டிருந்தார் . அந்த சமயத்தில் ஷங்கர் டக்கர் என்ற அமெரிக்கர் நம் இந்திய பாடகர்களோடு கைகோர்த்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதில் “ஓரே பியா” என்ற பாடல் எங்களைக் கவர்ந்தது. அதைப் பாடியவர் ரஹத் ஃபதேஹ் அலிகான் என்னும் பாடகர். அவர் பாடிய பாடல்களைத் தேடிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் ஒரு கவ்வாலிப் பாடகர் என்பது தெரிந்தது. அவர் பாடிய பாடல்களைத் தேடும்போது நுஸ்ரத் பதே அலிகானின் “லால் மேரி பத்து” என்ற பாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. சுற்றியிருப்போர் கைகளை தாளத்திற்கு ஏற்ப தட்ட, கரகரக்கும் குரலோடு உச்சஸ்தாயியில் பாடலைக் கேட்பது சிலிர்ப்பான ஒரு ஆனந்த அனுபவமாக அமைந்தது. அப்படித் தேடி நான் தெரிந்து கொண்ட மகத்தான ஆளுமைதான் நுஸ்ரத் ஃபதேஹ் அலிகான்.

நுஸ்ரத் ஃபதேஹ் அலிகானின் முன்னோர்கள் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜலந்தரில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் முன்னோர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அவர்களுடைய குடும்பமே தலைமுறை தலைமுறையாகப் பாடிக் கொண்டிருந்தது. அவர்கள் பாடியது முதலில் “கவ்வாலி” என்று அழைக்கப்படவில்லை. “மெஹ்ஃபில்-இ- ஷமா” என்றுதான் அழைக்கப்பட்டது. நுஸ்ரத்தின் தந்தை ஃபதேஹ் அலிகான் சிறந்த பாடகராகவும் இருந்ததோடு பல இசைக்கருவிகளை இசைக்கும் திறமை உடையவராகவும், பாடல் இயற்றுபவராகவும் இருந்தார். அவருடைய தந்தை ஹிந்துஸ்தானி இசையின் “துருபத்” முறையையும் அவருடைய பெரிய தந்தை “கயால்” முறையையும் கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்கள் உண்மையான சூஃபி கவிதைகளை நிகழ்த்தி சூஃபிக்களின் செய்தியைப் பரப்பினர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் முஸ்லிம் லீகிற்கு ஆதரவாக மேடைகளில் பாட அவர்கள் குழுவினரை ஏற்பாடு செய்தனர். அவர்கள் பாடியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய தலைக்கு விலை பேசப்பட்டது. மக்கள் அவர்களைக் காப்பாற்ற எண்ணி பெட்டிகளில் அடைத்து மறைத்து வைத்து பைசலாபாத்திற்கு தப்பிச் செல்ல உதவினர். இப்படியாக ஜலந்தரிலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத்திற்கு குடியேறினர். அங்குதான் 1948 அக்டோபர் 13 அன்று நுஸ்ரத் பிறந்தார். அவருக்கு பெற்றோர் பர்வேஷ் என்று பெயரிட்டனர். சிறு வயது முதற்கொண்டு அவர் அமைதியான நபராக இருந்தார். அவருடைய தந்தைக்கு மகனை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. தன்னைப் போல் இசைக்கலைஞர் ஆகி வாழ்வாதாரத்துக்குப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அவர் தந்தை நினைத்தார். எப்பொழுதும் இசைமயமாய் இருக்கும் வீட்டில் வளரும் குழந்தைக்கு அதைத்தவிர வேறு விருப்பம் எங்ஙனம் எழும். இளவயது நுஸ்ரத் தன் தந்தை மற்ற மாணவர்களுக்கு இசை கற்பிக்கையில் யாரும் அறியாமல் மறைந்திருந்து கேட்பார். பின்னர் ரகசியமாக பாடிப் பயிற்சி செய்தார். நுஸ்ரத்தின் இசைப் பித்திற்கு முன் அவர் தந்தையால் நிற்க முடியவில்லை. மருத்துவராகா விட்டாலும் இசையால் வருங்காலத்தில் அதை விட உன்னதமான பணியை செய்யப் போகிறார் என்பது அவர் தந்தைக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை. இளைய நுஸ்ரத் முதலில் கற்றுக் கொண்டது தபேலாதான். வெகுவிரைவில் தபேலா வாசிப்பதில் திறமை கொண்டவரானார். மணிக்கணக்கில் தன் தந்தைக்குத் தபேலா வாசித்திருக்கிறார். மகத்தான கலைஞரான படே குலாம் அலிகானின் மகன் முனவர் அலிகான் அந்த சமயத்தில் கச்சேரிகளுக்காக அங்கு வந்திருந்தார். நுஸ்ரத்தின் தந்தை ஃபதேஹ் அலிகான் அவருடைய பாடலைக் கேட்க விரும்பினார். அவருக்கு தபேலா வாசித்தது சிறுவனாக இருந்த நுஸ்ரத்தேதான். “அபாரமான வாசிப்புடைய இந்த சிறுவன் இசையுலகில் உச்சங்களைத் தொடப் போகிறான்”, என்று பாராட்டினார். தபேலா, ஹார்மோனியம் திறமையுடன் வாசித்தாலும் அவருக்குப் பாடுவதில்தான் பிரேமை இருந்தது. பஞ்சாப் பகுதியில் தோன்றி செழித்த பஞ்சாப் அங் என்ற கவ்வாலி பாணியையும், ஹிந்துஸ்தானி சாஸ்திரிய இசையையும் கோர்த்த தனித்துவமான இசையை தனது குடும்பத்திலிருந்து அவர் கற்றுக் கொண்டார்..
1964 இல் அவருடைய தந்தையின் இறப்பு குடும்பத்தையே நிலைகுலைய வைத்தது. தந்தை இறந்த நாற்பதாவது நாளில் முதல் முதலாக குடும்பத்தினர் முன் அவர் ஒரு பாடல் பாடினார். அதன் பின் 1965 இல் அவருடைய முதல் கச்சேரியை ரேடியோ பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது. அந்தக் கச்சேரிக்கு சோட்டே குலாம் அலிகான், அமானத் அலிகான், ரோஷனாரா பேகம் போன்ற ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் சிறந்த பாடகர்கள் வந்திருந்தனர். அவருடைய முதல் பாடல் ஒரு சூஃபியின் அலைக்கழியும் மனதின் போராட்டங்களைக் கூறும் “மன் பந்தா ஏ ஆன் ரூஹே” என்ற அமீர் குஸ்ரோவின் பாடலாகும். அவர் பாடி முடித்ததும் கலைஞர்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்பும் கைத்தட்டலும் நுஸ்ரத் அலிகானுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. பின்னாளில் அதை நினைவு கூறும் போது அந்நாளில் வாழ்விலேயே தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
நுஸ்ரத் பாடிய அந்த பாடல் இப்போது கிடைப்பதில்லை. அதே பாடல் மெஹதி ஹசனின் குரலில் கேட்கலாம்.
அந்த கச்சேரி முடிந்ததும் நுஸ்ரத் அலிகான் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள், பலமணி நேரங்கள் சிறிய தந்தையரின் வழிகாட்டுதலுடன் இடையறாத,கடினமான பயிற்சியை மேற்கொண்டார். ஏனென்றால் அந்த சமயத்தில் கவாலியில் சபரி பிரதர்ஸ் மற்றும் மன்சூர் ரியாஜ், உஸ்தாத் பஹாவுத்தீன் கான் ஆகியோர் புகழின் உச்சத்தில் இருந்தனர்.
நுஸ்ரத்தின் கவாலியைப் புரிந்து கொள்ள நாம் கவாலியின் இரண்டு பாணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். கவ்வாலி, கஜல் இசை வடிவங்களை உருவாக்கியவர் அமீர்குஸ்ரோ. அவர் காலத்திற்குப் பின் டெல்லி அங், பஞ்சாப் அங் என இரண்டு தனித்துவமான பாணிகள் காலத்தால் உருவாகி வந்தன. டில்லி பாணியில் ராகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருது மொழியில் பாடல்கள் பாடப்படும். டில்லி அங் பாணியில் தாளத்திற்கு பெரிய தோலக்கைப் பயன்படுத்திப் பாடுவார்கள். கவ்வாலியின் பிறப்பிடமாகக் கருதப்படும் நிஜாமுதீன் அவுலியாவின் புனிதத்தலத்துடன் தில்லி ஆங் பாணி தொடர்புடையதாகும். நுஸ்ரத்தின் பஞ்சாப் பாணியில் கூடுதலாக தாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. போல்பந்த் (தாள மேம்பாட்டிற்கான பாடல் வரிகளின் பயன்பாடு), தான்களின் விரிவான பயன்பாடு, சிக்கலான லயகாரி (தாள மேம்பாடுடன் ராகத்தைப் பற்றிய சரியான அறிவு), அதிதீவிரமான பால்டாஸ், சர்கம் ஆகியவற்றோடு உச்சஸ்தாயியில் பாடுகிறார்கள். பஞ்சாப் பாணியில் கவிதையின் சூழலுக்கு ஏற்ப கிராவைப் (gira) பயன்படுத்துதல் மற்றும் விரைவான தாளக் கட்டமைப்பு இடைவெளியின்றி ஒலிக்கப்படுகிறது. பஞ்சாப் பாடகர்களுக்கு பஞ்சாப் மொழியில்தான் பாட வரும், மென்மையான உருது, பெர்ஷிய மொழிகள் உச்சரித்துப் பாட வராது, முரடாக பேசிப் பழக்கப்பட்டவர்கள் என்று நிலவி வந்த பேச்சை நுஸ்ரத்தின் தந்தையும், சிற்றப்பாவும் தங்களுடைய பாடலால் மாற்றியமைத்து அவமதித்தவர்கள் வாயாலேயே புகழும்படி செய்தவர்கள். அதிலிருந்து ஒரு படி மேலாக நுஸ்ரத் பஞ்சாப் நாட்டுப்புற இசை, ஹிந்துஸ்தானியின் துருபத், கயால் இசை, தும்ரி, அவருடைய முன்னோர்கள் மூலம் வந்து சேர்ந்த பாரம்பரிய இசை ஆகியவற்றைச் சேர்த்து பல வண்ணங்கள் சேர்ந்த ஓர் அபூர்வக் கலவையாகப் பாடினார். இறைவனை எண்ணி உருகிப் பாடும் சுஃபிக் கவிதைகளுடன், அஜ்மீர் க்வாஜா ஷெரீப், புல்லேஷா போன்ற எண்ணற்ற இறையடியார்களைப் பாடும் கவிதைகளையும் தன் கச்சேரியில் பாடி பஞ்சாப் அங் கவ்வாலியின் மாதிரியை நிறுவினார். ஹார்மோனியமும், தபேலாவும் அவருடைய கச்சேரியில் தவறாமல் இடம் பெற்றன. கவிதைகளை ஹிந்துஸ்தானி ராகங்களில் இசையமைக்கும் திறமை கொண்டவராயிருந்தார். ஒரு கவிதையின் சில அடிகள் பாடி முடித்து தொடர்புள்ள வேறொரு கவிதையின் வரிகளையும் முத்துக் கோர்ப்பது போல கோர்த்துப் பாடுவார். எடுத்துக்காட்டாக “கருநிறக் கூந்தல் கொண்டு என்னைக் கட்டிப் போட எண்ணாதே” (Kali kali zulfon key)என்ற பாடல் நுஸ்ரத்தால் எழுதப்பட்டது. அப்பாடலின் இடையில், “ஏற்கனவே எம் இதயம் உடைந்துள்ளது, தயை கூர்ந்து எம்மைக் காயப்படுத்தாதீர்கள்“ (na chero humain hum sataye huyeye hain) என்று ஆரம்பிக்கும் சில வரிகள் நதீம் சலாமத் கவ்வால் அவர்களால் எழுதப்பட்ட கிரா(Gira) என்னும் கவிதை வரிகள் ஆகும். இவ்வாறு பாடலுக்குத் தொடர்புடைய வேறு கவிதை வரிகளைச் சேர்ப்பதால் அந்தப் பாடலின் பொருள் இன்னும் ஆழ்ந்து ஒலிக்கிறது.
கவ்வாலியின் கவிதை வரிகள் , பிரிவின் வலியையும் மீண்டும் இணைவதன் பரவசத்தையும் விளக்குவதற்காக குறியீட்டு உருவகங்களால் நிரம்பியுள்ளன. பெரும்பாலும் தோல்வியடைந்த காதலனாக, காதலியை அயராது தேடுபவராக நுஸ்ரத் பாடும் சூஃபி பாடல்கள் பல நிலைகளில் ஆழமானவை. அதே நேரத்தில் அந்தப் பாடல் ஒரு குறியீடாக, கடவுளிடமிருந்து விலகி நிற்கும் ஒரு ஆன்மா உணரும் வலியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அவர் தன் தந்தையைப் போலவே சிறிய தந்தையருடனும் அவர்களுடைய பிள்ளைகளுடனும் கச்சேரி செய்தார். குடும்பம் மட்டுமல்லாமல் திறமையுள்ள குடும்பம் சாராத பாடகர்களையும் இசைக்கருவி வாசிப்பவர்களையும் சேர்த்துக் கொண்டார். புதுமையை மரபுடன் சேர்ப்பது அவருக்கு மிகவும் பிடித்தமானது. தனது கச்சேரியில் கோரஸையும் கைதட்டல்களையும் நிகழ்த்தும் இசைக்கலைஞர்களின் எண்ணிக்கையை எட்டு முதல் பதினொன்று அல்லது பன்னிரண்டாக உயர்த்தினார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் தனது குழுவை மாற்றியமைத்துக்கொண்டே இருந்தார். பாடலில் புதிய அம்சங்களைப் புகுத்திக் கொண்டே இருந்தார். கவ்வாலி மட்டுமல்லாமல் கஜல், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய இசை என பலவாறு பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். நுஸ்ரத்தின் கச்சேரியில் பஞ்சாபி தோஹா, உருது, ஹிந்தி, பெர்ஷியனில் உள்ள சூஃபிக் கவிதைகள் பாடப்பட்டன. அமீர் குஸ்ரோ, குருநானக், ரூமி, மீராபாய், அல்லாமா இக்பால் மற்றும் பலரின் கவிதைகள் அவரால் மக்களைச் சென்றடைந்தன. அவருடைய கச்சேரி அமைக்கப்படும் விதம் எல்லோரையும் கவர்வது. கச்சேரிக்கு முன்னால் கச்சேரி நடைபெறப் போகும் சூழலைக் கருத்தில் கொண்டு பாடல் தேர்வு செய்யப் படுகிறது. பாடலுக்கேற்ப பேஹாக், கமாஜ், காபி, மேக், யமன் மற்றும் பல ராகங்களில் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுப்பார். முதலில் கானின் சகோதரர் பாரூக் அலிகான் ஹார்மோனியம் இசைத்து அன்று பாடப் போகும் பாடலின் ஒரு துளியை நுணுக்கமாகக் காட்டிச் செல்வார். உடனே கூட்டத்தின் ஆரவாரக் குரல்களைக் கேட்கலாம். நுஸ்ரத் அகாரத்தில் ஆரம்பித்து “போல் ஆலாப்” எனப்படும் விருத்தத்தைப் பாடுகிறார். அந்தப் பாடல் வரப் போகும் பாடலின் உணர்வு நிலையை கேட்பவர்களிடையே தட்டி எழுப்புகிறது. அத்துடன் அந்த இடத்தின் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார். அடுத்து அவருடன் தாளம் இணைந்து கொள்கிறது. அவர் தாளத்துடன் நிதானமாக விளையாடுவார். தாளத்தின் மீது அவருக்கு மிகப்பெரிய கட்டுப்பாடு இருந்தது. சிக்கலான தாள அமைப்பு கேட்பவர்களுக்கு உற்சாகத்தை உருவாக்கும். அவருடைய குழுவில் இருந்த ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு தக்ரர்/டோஹ்ரானா சர்கங்களுக்கு இடையே (பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் பாடுதல்) ஆலாபனையைப் பாடி அவர்களுடைய திறமையை வெளிக்காட்டுவர். மக்களை மிகுவாகக் கவர்ந்த அம்சம் இது. பாடலில் இசையின் உற்சாகம் அதிகரிக்கும் போது, கானின் உற்சாகம் எப்போதும் போல லேசாக அதிகரிக்கிறது. கான் இப்போது தனது பெரிய, கம்பீரமான உடற்பகுதியை முன்னும் பின்னுமாக அசைக்க, அவரது இடது கை அவருக்கு முன்னால் அசைந்து சிணுங்குகிறது. ஹிப்னாடிஸம் செய்யப்பட்டவர்கள் போல பார்வையாளர்கள் அவரது வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்திலும் மெய்ம்மறந்திருக்கின்றனர். ரசிகர்கள் மேடையில் நடனமாடி, அவர் மீது கைநிறைய ரூபாய் நோட்டுகளை வழக்கமாக வீசுகிறார்கள். அவர் சர்கத்தை தீவிரமாகவும், லயகாரியை ஆக்ரோஷமான அங்கமாகவும் பாடினார். துள்ளியோடும் மானைப் போல தபேலாவின் தாளத்தில் விரைவு அதிகரிக்கும். நுஸ்ரத்தும் சளைப்பதில்லை.
“சுவாசத்தையே முத்து மாலையாகக் கோர்த்து அதில் உன் பெயர் எழுதினேன்” என்று ஆழமான காதல் பொருள்படும் படி உள்ள பாடலான “சாஸோன் கி மாலா பே” என்ற நுஸ்ரத் இயற்றிய இந்த பாடலைக் கேளுங்கள்.
அவர் தாளத்துடன், கைத்தட்டலுடன் இயைந்து பாடும்போது பொங்கி எழும் தெய்வீகக் காதல் கேட்பவர்களை மெய்மறக்க வைக்கிறது. கான் மக்களின் பக்தி உணர்வைப் பெருக்க இசையமைப்பின் அசல் தாளத்தை விட நான்கு மடங்கு வேகமான தாளத்தில் பாடுவது வழக்கம். “அல்லாஹு” என்ற பாடலை லண்டன் இசைக்கச்சேரியில் ஒரு முறை பாடினார்.
“கோயிலிலும் மசூதியிலும்
இறைவனைத் தேடும் மனிதர்களே
ஓரிடத்தில் இறையைக்
கட்டுப்படுத்த முடியுமா?
அந்த எல்லைகளற்றவனை
எங்கும் காணலாம்!” என்ற பொருள்படும் வரிகளை அவர் பாடும்போது அங்குள்ளவர் உணர்ச்சி மேலீட்டால் கரகோஷம் செய்வதைக் காணலாம்.
அவர் பாடல் பாடுவதைக் கேட்கும் போது ஸ்வரங்களை பூப்பந்து ஆக்கி விரைந்து விளையாடுபவராகவும் சில சமயம் தான்களை அங்கொரு கண்ணி இங்கொரு கண்ணி என்று பூமாலை தொடுப்பவராகவும் தோன்றுவார். பாடலை வானில் எய்து அந்த உச்சத்திலேயே அவரும் குழுவினரும் நீண்ட நேரம் பாடலால் உலாவிக் கொண்டிருப்பார்கள். பறவை வானிலிருந்து சில்லென்று தரை இறங்குவது போல யாரும் எதிர்பாரா நேரத்தில் கீழே இறங்கி மந்திரஸ்தாயியிலும் நெடுநேரம் பாடி நிற்பார். லயகாரி மற்றும் சர்கம் மீதான கானின் ஆளுமை அற்புதமானது, அசுரத்தனமானது. அவருடைய பாடல்களைக் கேட்பவர் மிகப்பெரும் சூஃபியாக மாறி, தன்னை மறந்து எழுந்து ஆடுவதையும் நிலை அழிந்து கண்ணீர் பெருக்கி நிற்பதையும் காணலாம். இதன் உணர்வு நிலையை ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் காஸ்பல்(Gospel Music) இசையுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
அவர் சிறுவயதிலிருந்து இயல்பிலேயே உடல் பருமனாக இருந்தார் அதனால் பல முறை உருவக்கேலிகளுக்கு ஆளாகியிருக்கிறார். ஒரு முறை இந்தியாவில் பாடல்களைப் பதிவு செய்யும் நிறுவனம் ஒன்றில் பாடுவதற்கு அவருடைய குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த ஸ்டூடியோவில் இசைக்கருவிகளை இசைப்பவர்கள் லதா மங்கேஷ்கர், முகமது ரபி, கிஷோர் குமார் போன்ற ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர்கள். அவர்கள் யாருக்கும் நுஸ்ரத் பற்றிய அறிமுகமில்லை. அதனால் நுஸ்ரத் அலி கான் மற்றும் குழுவினர் அனைவரையும் கேலி செய்து சிரித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் நுஸ்ரத் குழுவினரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் பஞ்சாப்பில் இருந்தா என்று பேசினாலும் பேச்சின் தொனி கேலி செய்வதாகவே இருந்தது. நுஸ்ரத் பருமனாக இருப்பதை பார்த்து நீங்க லாகூரிலிருந்தா வருகிறீர்கள். உங்களைப் பார்த்தால் அங்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று நினைக்கிறோம்”,என்று பலவாறாகக் கேலி செய்து பேசினார்கள். நுஸ்ரத் அலிகான் இதைக்கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தார் அவர் தன் குழுவினரிடம் ,” என்ன இப்படி கேலி செய்கிறார்களே! சரி போகட்டும்! நாம் பாட்டாலேயே பதில் சொல்லி விடுவோம்”, என்று கூறினார். நுஸ்ரத் அன்று பாடலை இப்படி ஆரம்பித்தார்,” கெஹெனா கலத்து கலத்து” (தவறாகப் பேசாதே பேசாதே). கேலி பேசியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நுஸ்ரத் அலி கானின் ஆகர்ஷிக்கும் குரலையும், உருக்கும் பாடலையும் கேட்டு அவரைக் கேலி செய்தோமே என்று வெட்கி மன்னிப்பு கேட்டனர். அவருடன் பல வருடங்கள் பாடிய அடி அத்தா ஃபரீத் அலி இந்த நிகழ்ச்சியைக் கூறி நுஸ்ரத்தை நினைவு கூர்கிறார்.
நுஸ்ரத் அலிகான் இந்தியாவில் பல கச்சேரிகள் செய்துள்ளார். இந்திய இசை ரசிகர்களுக்கு அவருடைய இசை மேல் இன்றளவும் பிரேமை இருப்பதைக் காணலாம். இசைக் கலைஞர்களை அரசியலோ, மதமோ தடுக்கக் கூடாது என்றும் இந்திய இசைக்கலைஞர்கள்
பாகிஸ்தானுக்குள்ளும், பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவிற்கும் தங்கு தடையின்றி சென்று வர வேண்டும் என்று பலமுறை அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். 1985 இல் கான் லண்டனில் “WOMAD” என்று அழைக்கப்படும் உலக இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தும் அமைப்பின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அவருக்கு முப்பது நிமிடங்கள் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தனர், ஆனால் பார்வையாளர்கள் அவருடைய பாடல்களை விரும்பியதால் அவர் தொடர்ந்து நான்கு மணி நேரம் நிகழ்ச்சி நடத்தினார். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அவருடைய கச்சேரி மட்டுமல்லாமல் பாடல்களைப் பதிவு செய்யவும், திரைப்பட பாடல்களைப் பாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்ட்” திரைப்படத்தின் பீட்டர் கேப்ரியல் மற்றும் மைக்கேல் புரூக், உடன் இணைந்து பணியாற்றினார். பீட்டர் கேபிரியல், “உண்மையில் கான் உலகத்தின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர்” என்று புகழ்கிறார். “சொர்க்கத்தில் இருந்து ஒரு குரல்” என்ற ஆல்பம் வெளியிடப்பட்டது. ஒருமுறை ஜப்பானில் அவருடைய நிகழ்ச்சி நடந்தது. கடல் எழுந்து முழங்கினால் எப்படி இருக்குமோ அப்படி கேட்பவர்களை அவருடைய தெய்வீகக் குரல் ஆட்கொண்டதுடன் தூய இறை பக்தியையும் தூண்டுவதாக இருந்தது. அடுத்த நாள் ஜப்பான் நாளிதழ்களில் “பாடும் புத்தர்” (singing buddha) என்று தலையங்கம் எழுதி அவரை சிறப்பித்தனர். இந்தியாவில் பாலிவுட்டில் “பாண்டிட் குயின்” (1994) போன்ற சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும் பாடவும் செய்திருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் (1997) ஆல்பம், உஸ்தாத் சுல்தான் கானின் புகார் ஆல்பம் போன்றவை அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டன. ஓரியண்டல் ஸ்டார் வெளியிட்ட ஆல்பம் கவாலியை மின்னணு மற்றும் உலக இசையுடன் இணைத்தது.
அவருடைய காலத்தில் கவ்வாலியில் மிகப் புகழ் பெற்ற சபரி சகோதரர்களில் ஒருவரான குலாம் ஃபரீத் சபரி,“நுஸ்ரத் நீ இந்த உலகத்தை பாடலால் என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று உணர்வாயா!!”, என்று கேட்டதை அவருக்கு நீண்ட காலம் தபேலா வாசித்த தில்தார் ஹுசேன் நினைவு கூறுகிறார்.
சக பாடகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவிலும் அவரைப் பற்றி பாடகர்கள் புகழ்ந்து உள்ளனர். பாடல்களைத் தவிர அவர் சிறு வயதிலிருந்தே உணவுப் பிரியர். இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்பதும், வட இந்திய பாரம்பரிய இசையைக் கேட்பதும், கிரிக்கெட் பார்ப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது.
நுஸ்ரத் அலிகானுக்கு “பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ்” என்ற விருது பாகிஸ்தான் அரசால் வழங்கப் பட்டது. அவருடைய “Chain of Light” என்ற ஆல்பம் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. மக்கள் இன்னும் நுஸ்ரத்தின் இசையைக் கேட்டு அவரது சிறந்த படைப்புகள் மூலம் அவரை நினைவில் கொள்கிறார்கள். கவ்வால் மரபைப் பின்பற்றுவதன் மூலம், கான் சூஃபித்துவ இசைக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டார். அவரது ரசிகர்கள் அவரை அன்புடன் அவரை “தி மாஸ்டர்”, “ஷாஹென்-ஷா”,மற்றும் “பிரகாசிக்கும் நட்சத்திரம்” என்று அழைக்கிறார்கள். ஆனாலும், அவர் கடவுளுக்கு தான் ஒரு பணிவான ஊழியராகவே இருக்க விரும்புவதாகவும், புகழ் என் தலைக்குச் செல்ல தான் தன்னை ஒருபோதும் அனுமதிக்க விரும்பியதில்லை, முடியவே முடியாது,” என ஒரு நேர்காணலில் கூறுகிறார். உலகம் முழுவதும் பயணம் செய்து, சூஃபி பாடல்களால் இசை ரசிகர்களின் இதயங்களைத் திறப்பதில் மகிழ்ச்சியடைவதாக மேலும் கூறினார். வெறித்தனமான ரசிகர்கள், முடிவில்லாத சுற்றுப்பயணங்கள் செய்து கேட்பவருக்கு சூஃபி இசை மற்றும் அனுபவத்தின் மூலம் அல்லாஹ்வை அடைவதை தான் வாழும் நாட்களில் வாழ்ந்து பார்த்த ஒரு துறவியைப் போலதான் கான் வாழ்ந்தார்.
அவர் பாடிய கவ்வாலி என்பது பாடல் மட்டுமல்ல, அது ஒரு ஞானம். சூஃபிப் பாடல்கள் மூலம் மெய்யான இறையனுபவத்தைப் பெற ஒருவர் தன் மனத்தையும், காமக் குரோத மோகங்களையும் தன்னிலிருந்து விடுவிக்கத் தயாராக இருக்க வேண்டும். கவ்வாலி என்பது கேட்கக் கூடிய அனைவருக்குமான ஞானம். நுஸ்ரத் அலிகானின் மனைவி நஹீத் நுஸ்ரத் ஆவார். அவர்களுக்கு பிறந்த ஒரே மகள் நிடா (Nida) தற்போது கனடாவில் வசிக்கிறார். கவ்வாலி போன்று ஆண்கள் மட்டுமே பரம்பரையாகப் பாடிக் கொண்டிருந்த இசைக்குழுவில் அவர் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதால் தன் மகளைப் பாட வைக்க இயலவில்லை என்று ஒருமுறை கூறினார். தன் தம்பியின் மகனான ரஹத் ஃபதே அலிகானை தன் வாரிசாக கச்சேரிகளில் முன் வைத்தார். ஆனாலும் நுஸ்ரத் போன்ற மகா கலைஞனின் கவ்வாலி இசைக்கு ஒப்புமை சொல்லத் தக்க இசைக்கலைஞர் யாரும் இல்லை என்பதே கவ்வாலி ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றிருந்த கான் 1997 ஆகஸ்ட் 16 அன்று தனது 48 வது வயதில் மாரடைப்பால் இறந்தது உண்மையில் மிகப் பெரிய இழப்பாகும்.
என் அம்மாவிடம் நுஸ்ரத் பதே அலி கானின் பாடலை போட்டுக் காண்பித்தேன். எப்படி இருக்கிறது என்று கேட்டேன். “நல்லா பாடுறார்” என்றவர், திடீரென அவர் முகம் மலர “என் அப்பாவும் கவ்வாலி பாடுவார், அவர் பாடினால் தெருவே எங்க வீட்டின் முன் கூடி விடும். அப்படி கணீர் என்று இருக்கும் என்றார்”. என்று கேட்டதும் ஆச்சரியமாக அவரைப் பார்த்தேன். “ஒரு பாடலாவது நினைவிருக்கிறதா”, என்று கேட்டேன். இரண்டொரு வரிகளை வாய்க்குள் முணுமுணுத்தவர் ஏதோ நினைவில் அடித்துச் செல்லப்பட்டவர் போல உறைந்தார். அவர் நினைவில் அவருடைய அப்பா பாடிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ!!
Bibliography:
https://edwebproject.org/nusrat.html
Natural Mystics: The Prophetic Lives of Bob Marley and Nusrat Fateh Ali Khan
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
