தனித்துவமான எழுத்தும் தளராத உழைப்பும்

ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

– சுந்தரராமசாமி

ஜே.ஜே.சிலகுறிப்புகள்

எம்.கோபாலகிருஷ்ணன்  கடந்த  முப்பது வருடங்களாக  நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டும் படித்துக்கொண்டும்  பேசிக்கொண்டும் இருக்கக் கூடிய நண்பர். ஆகவே அவரைப் பற்றி  பாராட்டும் விதமாகவோ அல்லது விமர்சனபூர்வமாகவோ நான் எதுவும் சொல்வதற்கில்லை. அவருடன் பழகிய  நினைவுகள் சென்ற பயணங்கள், விவாதித்த விஷயங்கள் என சிலவற்றை மாத்திரம் ஒரு நண்பர் என்கிற முறையில்  இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

தொண்ணூறு களின் தொடக்கம் கல்லூரிப் படிப்பிற்காக வேண்டி சேலத்தில் தங்கியிருந்தபோது சிபிச்செல்வன், அசிம், ஆர்.குப்புசாமி, குவளைக்கண்ணன், முனாவர்கான், சாகிப் முதலிய நண்பர்கள் ஒரு குழுவாகக் கூடி கணபதி சுப்ரமணியனின் அறையில் மாதமொரு ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இலக்கியம் பேசிக் கலைவது வழக்கம். பிறகு ஒவ்வொரு மாதமும் யாரேனும் ஒர் எழுத்தாளரை விருந்தினாராக அழைத்து அவரோடு உரையாடுவதென முடிவுசெய்தோம். அவ்வாறு அந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பிரம்மராஜன், ஆர்.சிவக்குமார், பாவண்ணன், நாஞ்சில் நாடன், ஞானக்கூத்தன், ஞானி, யுவன் எனப் பலரும் வந்து சென்றனர். அப்போது தருமபுரிக்கு பணிநிமித்தம் மாறுதலாகி வந்திருந்த ஜெயமோகனையும் எங்களுடைய அந்த சந்திப்பிற்கு அழைத்திருந்தோம். அதன் பிறகு அவரை சந்திக்கச் சென்றபோதுதான் முதன் முதலாக கோபாலகிருஷ்ணனனும், செங்கதிரும் நண்பர்களாக அறிமுகமானார்கள். கோபால் அப்போது திருப்பூரில் காப்பீட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தார். செங்கதிர்  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதுகலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அது தொடங்கி அவப்போது நாங்கள் மூவரும் ஏதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக்கொள்வது, புத்தகங்கள் பரிமாறிக்கொள்வது அல்லது படித்த புத்தகங்கள் பற்றித் தொடர்ந்து பேசுவது விவாதிப்பது எனத்  தொடர்பிலிருந்தோம். 

        அப்போது ஜெயமோகன் வீட்டில் வார இறுதியில் கூடி மேற்கத்திய இலக்கிய முன்னோடிகளைக் குறித்து வாசிப்பது என்று முடிவானது. எப்போதுமே எனக்குத்  தொடக்கத்தில் ஒரு விஷயத்தில் இருக்கும் ஆர்வம் அதற்குப் பிறகு மெல்ல வடிந்துவிடும். ஒரிண்டு முறை சென்றவன்  அதன் பிறகு  ஏதோ காரணங்களைக் கற்பித்துக்கொண்டு போகாமல் நின்றுவிட்டேன். அவர்களிருவரும்  தொடர்ந்து வாசிப்பு வகுப்பிறகாக தருமபுரிக்கு போய் வந்தார்கள். அப்போது ஜெராக்ஸ் மிஷின்களெல்லாம் பரவலாக அறிமுகமாகியிராத காலம். கார்பன் பேப்பர் வைத்து கையால்  எழுதி கட்டுரைகளை பிரதி எடுத்துக்கொண்டு வருவார்கள். என்னுடைய நினைவு சரியாக இருந்தால் அது  டி. எஸ். எலியட்டின் ‘பாரம்பரியமும் தனித்தன்மையும்’ என்கிற நீண்ட கட்டுரையை ஆங்கில மூலத்தில்  படித்துவிட்டு அதை அப்படியே  தமிழில் மொழியாக்கம் செய்வதை அவர்கள் ஒரு பயிற்சியாக மேற்கொண்டனர். இந்தக் கட்டுரைகளை எல்லாம் நீங்கள் வாசித்துவிட்டு பத்திரமாக என்னிடம் கொடுத்துவிடுங்கள்,  நான் படித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அதைத்  தொடர்ந்து  தமிழ் மலையாளக் கவிஞர்களின் சந்திப்பு குரு நித்ய சைதன்ய யதி அவர்களின் முன்னிலையில் உதகை நாராயண குருகுலத்தில்  சில அமர்வுகள் நடந்தன. பிறகு கலாப்ரியா ஏற்பாட்டில் குற்றாலத்திலும், அடுத்து ஹொக்கனேக்கல்லிலும் நிகழ்ந்தது. அநேகமாக அனைத்து அமர்வுகளிலும் நானும் கோபாலும் கலந்துகொண்டோம். கலாப்ரியா, தேவதேவன், யுவன் சந்திரசேகர், ராஜ சுந்தரராஜன், பிரேம் ரமேஷ்,யூமா வாசுகி, அசதா, நிஷா மன்சூர், முகுந் நாகராஜன் எனப் பலரும் அச்சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தனர். சில அமர்வுகளுக்குப் பிறகு ஜெயமோகன், நாம் ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்கப் போகிறோம் செந்தூரம் ஜெகதீஷ், யூமா வாசுகி, அருண்மொழி நங்கை உள்ளிட்ட குழுவினர் உதவ,  அதற்கு ஆசிரியராக எம்.கோபாலகிருஷ்ணன் இருக்கவேண்டும் என்றார்.  அவ்விதமாகத்தான் ‘சொல்புதிது’ இதழ் ஈரோட்டிலிருந்து நண்பர் ராஜேந்திரனின் இல்ல முகவரியிலிருந்து வரத்தொடங்கியது. 

நானும் அப்போது ஈரோட்டிற்கு இடம் பெயர்ந்திருந்ததால் இதழ் ஆசிரியரான கோபாலுக்கு உதவியாக நானும் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அது எனக்கு ஒரு முக்கியமான பயிற்சியாக இருந்தது.இதழின் முதன்மையான உள்ளடக்கம் சார்ந்து என்னென்ன  கட்டுரைகள் இடம்பெற வேண்டும் என்பதை ஜெயமோகன் குறிப்பிட்டு சொல்வார். மற்றபடி சிறுகதைகக், கவிதைகள் என பொதுவான படைப்புகள், வாசகர் கடிதம் எல்லாம் தபாலில் ஈரோடு முகவரிக்கு வரும். இதழ் வேண்டி மணியாடர் அனுப்புவார்கள். அதில் அனுப்புநர் முகவரி இருக்காது, திரும்ப இதழ் வரவில்லை என்று கண்டித்து எழுதுவார்கள். ஒவ்வொரு எழுத்தாளரிடமும் படைப்பு கேட்டு கடிதம் எழுத வேண்டும். அப்போது  இந்த அலைபேசி எல்லாம் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லாத காலம். அவசரத்திற்கு பேச அலுவலகத் தொலைபேசி மட்டும்தான் இருக்கும். அதில் தொடர்பு கொள்வதில் நிறைய சிரமங்கள் இருக்கும். இதையெல்லாம் தாண்டி இதழைக் குறித்த நேரத்தில் கொண்டுவரவேண்டும் என்பதில் கோபால் குறியாக இருப்பார். எதிர்பார்த்தபடி படைப்புகள் வராத சமயத்தில் வேறு புதிய விஷயத்தை எழுதி சேர்க்கவேண்டும்  உழைப்பு இருக்கும். கோபால் சிரத்தையுடன் சோர்வின்றி செயல்படுவார்.

கோபாலுடைய இந்தக் கடின உழைப்பு எனக்கு எப்போதும் ஆச்சரியம் தரக்கூடிய ஒன்றுதான். சில சமயம் அவரை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு செல்வதுண்டு. நான் வீட்டுக்குப் போகிற வழியில்தான் அவருடைய அலுவலகம் இருந்தது எங்கள் சந்திப்புக்கு வசதியாக இருந்தது. அப்படிப் பார்க்க போகும்போது  ‘இந்த வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்.கொஞ்சம் உட்காருங்க போகலாம்’ என்று சொல்லி என்னை உட்கார வைத்துவிடுவார். அங்கே இவர், இன்னும் நான்கைந்து அலுவலக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்பதன் பொருட்டு மும்முரமாக வேலை செய்து கொண்டு இருப்பார்கள். நானும்  பொறுத்து பார்ப்பேன். நான் மாலை ஆறு மணிக்கு வந்தவனை ஏழு மணிக்கு கூட்டிக் கொண்டு போய் ஒரு டீ வாங்கி கொடுத்துவிட்டு திரும்பவும் உட்கார வைப்பார்.  8 மணி அளவில் பொறுமையிழந்துபோய்  நான் வீட்டுக்கு கிளம்பிடுவேன். அதற்கு பிறகு அடுத்த நாள் கேட்டால், நேற்று இரவு  12 மணி வரைக்கும் வேலை பார்த்தோம் என்பார். இதே தீவிரம் அவருடைய படைப்புச் செயல்பாட்டிலும் இருக்கும். 

‘சொல் புதிது’ வாயிலாக எங்களுக்குக் கிடைத்த அறிமுகம்தான் தமிழினி வசந்தகுமார். எழுதத் தொடங்கிய புதிதில் ஒருவர் வசந்தகுமார் மாதிரியான ஒருவரிடம் வந்து சேர்வது என்பது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு அந்த நல்வாய்ப்பு கிடைத்தது. எழுதுபவர்கள், படிப்பவர்களுக்கு எல்லாம் அவ்வப்போது தான் என்கிற கர்வம் சிறியதாக ஒரு பாம்பு மாதிரி படம் எடுக்கும். அண்ணாச்சியிடம் பேசும்போது அந்தப் பாம்பை தலையில்  ஒரு போடு போட்டு தரையில் தேய்த்துவிடுவார். எங்கள் இருவருடைய முதல் வெளியீடாக, 2000 ஆம் ஆண்டு என்னுடைய ‘நெடுவழித் தனிமை’ கவிதைத் தொகுப்பு, கோபாலுடைய ‘குரல்களின் வேட்டை’ கவிதைத் தொகுப்பு இரண்டும் வெளிவந்தன.  அதற்குப் பிறகு நெசவுத் தொழிலின் பின்புலத்தில் அச் சமூகத்தில் நிலவி வரும் ஒரு தொன்மத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘அம்மன் நெசவு’ என்கிற அவரது முதல் நாவல் வெளியானது. அதற்கு முன்பே அவர் பல சிறுகதைகளை எழுதி இருந்தபோதிலும் அந்நாவல் புனைவு எழுத்தாளராக அவருக்கு ஒரு அழுத்தமான அறிமுகத்தை தந்தது.  அதற்கு அடுத்து வந்த  ‘மணல் கடிகை’ நாவல் ஒரு புனைகதை ஆசிரியராக அவருடைய திறமையை உறுதி செய்தது .  ‘அம்மன் நெசவு’ நாவலோடு ஒப்பிடுகையில் ‘ மணல் கடிகை’ அளவில்  பெரியது. எல்லோரும் அந் நாவலை அதன் இறுதி வடிவில் அச்சில் படித்து இருப்பார்கள். ஆனால் நாங்கள் ஒரு சிலர் மாத்திரம் நண்பர்கள் என்ற சலுகையில் அதைக் கைப்பிரதியாக, அது உருவாகத் தொடங்கிய கட்டத்திலிருந்தே வாசித்திருக்கிறோம். இந்த நாவலுக்கான வித்து  எங்கிருந்து  முளைத்தது? அதன் பிறகு அது வடிவ ரீதியாக எத்தகைய மாறுதல்களுக்கு ஆளானது?  எவ்விதமாக இத்தனைப் பக்கங்களுக்கு விரிவடைந்தது? என்கிற மாதிரியான பின்புலத் தகவல்களையெல்லாம் அறியமுடிந்ததால் அதன் உருவாக்கத்தின் பின்னிருந்த உழைப்பை அறிவோம்.

‘மணல் கடிகை’ நாவலின் கைப்பிரதியைப் படித்த வசந்தகுமார் இதில் திருப்பூரை சுற்றிலும் இடம்பெற்றிருக்கின்ற மலைகள், அணை பற்றி எல்லாம் விவரங்கள் கேட்டவர் ‘அதையெல்லாம்  நாம் ஒரு தடவை நேரில் பார்க்கலாம் ஒரு தெளிவு கிடைக்கும்’ என்றார். திருப்பூரில் அப்போது மகுடேசுவரன் ஒரு மாருதி கார் வைத்திருந்தார். அதில் ஏறி நாங்கள் ஒவ்வொரு மலையாகச் சென்றோம். சிவன்மலை,  கைத்தமலை, ஊதிய மலை, அலகு மலை, சாயக் கழிவுநீர் தேக்கமாக மாறிவிட்டிருந்த ஒரத்துப்பாளையம் அணை ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடைசியாக சென்னிமலைக்கு வந்தோம். மாலை மங்கி இருள் கவியும் தருணத்தின் ஏகாந்தம். நாங்கள் மலை மீது ஒரு திட்டில் அமர்ந்தவாறு கீழே தெரிந்த நகரத்தின் விளக்குகள் மினுங்குவதை மெளனமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதுதான் அந்நாவலின் இறுதி அத்தியமாகப் பிறகு மாறியிருந்தது பிறகு அச்சில் அந்த நாவலைப் படிக்கும்போது அது முற்றிலும் வேறொரு அனுபவத்தை கொடுத்தது.  ஒரு புனைவிற்குப் பின்னாலிருக்கும் ஏராளமான தகவல்கள் அதைப் புனைவாக்குவதற்கான அயராத உழைப்பு இவற்றை அறியும்போது நம் வாசிப்பு இன்னும் கூடுதலான சிலிர்ப்பை நல்குகிறது.

வசந்தகுமார் உள்ளிட்ட நண்பர்களுடன் ஒரு சிறு குழுவாக பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு தென் இந்தியா முழுவதும் பல முறை பயணித்திருக்கிறோம். சில இடங்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட முறைகள் சென்றிருக்கிறோம். பரவசமூட்டும் அனுபவங்களாக எங்கள் நினைவில் தங்கியிருக்கும் அவற்றை தன் எழுத்தில் வேறொரு கோணத்தில் கோபால் விவரித்திருப்பதை அவருடைய தீர்த்தயாத்திரை மனைமாட்சி போன்ற நாவல்களில் கண்டிருக்கிறேன். அவ் விவரனைகளின் துல்லியமும் துலக்கமும் அவரது புனைவின் நம்பகத்தன்மையை கூட்டுவதை உணர்ந்திருக்கிறேன்.

 ‘மனைமாட்சி’ அவருடைய மற்றொரு பெரிய நாவல். அதன் முதல் வரைவில்  ஆயிரத்து நானூறு பக்கத்திற்கும் மேல் இருந்தது. அதை எனக்குத் தெரிந்து மூன்று நான்கு தடவை திரும்பத் திரும்ப மாற்றி எழுதினார். கணினியில்தான் என்றாலும்  இதுவெல்லாம் என்னால் கற்பனை கூட செய்ய முடியாத உழைப்பு. சமீபத்திய காணொளி வாயிலான நேர்காணல் ஒன்றில் தனது அலுவலகப் பணி நெருக்கடிகளுக்கப்பாலும் தன்னால் எப்படி இவ்வளவு அதிகமாகவும் தீவிரமாகவும் எழுத முடிகிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார். அதன் பின்னிருப்பது அவரது தீர்க்கமான  திட்டமிடலும் நேரத்தை விரயமாக்காத நேர்த்தியும்தான். 

அறிந்த அனுபவங்களிலிருந்து மட்டுமல்ல, வாசிக்கும் தகவல்களிலிருக்கும் இடைவெளியை தன் கற்பனையைக்  கொண்டு நிரப்புவதன் வாயிலாகவும் ஒரு புனைவை தன்னால் எழுதமுடிகிறதா என்பதை கோபால் பரிசீலனை செய்து பார்த்த சிறிய நாவல்தான்  ‘மாயப் புன்னகை’. பாரீஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற ‘மோனாலிசா’ ஓவியம் திருடுபோய் மீட்கப்பட்ட சிறியதொரு வரலாற்று தகவலை விரித்து விருவிறுப்பானதொரு நாவலாக்கியிருக்கும் விதம் அவருடைய புனைவுத் திறனுக்கு சான்று.

அது தந்த தன்னம்பிக்கையிலிருந்துதான் அவருடைய அடுத்த நெடிய நாவலான ‘ வேங்கை வனம்’ உருவாகியது. இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளடங்கியிருக்கும் ரந்தம்பூர் வனவிலங்கு சரணாலயம் உருவான கதையை அதற்கும் முந்தைய வரலாற்றுக் காலகட்டத்தோடு சேர்த்து பிரமாண்டமானதொரு சித்திரத்தை வாசகர்களுக்கு வரைந்து காட்டியிருக்கிறார். பழைய விக்கிரமாதித்தன் கதை ஒன்றில் மண்ணில் கிடைக்கும் கால் நகம் ஒன்றைக் கொண்டு அந் நகத்திற்குரிய அழகிய இளவரசியை தீட்டிக்காட்டும் திறம் படைத்த சித்திரக்காரன் ஒருவன் வருவான். அது போலவேதான் ஒரு நாள் பொழுது சுற்றலாவாக ரந்தம்பூர் சென்று திரும்பும் வழியில் மச்சிலி என்கிற புலியின் புகைப்படத்தை கடை ஒன்றின் பெயர் பலகையில் கண்டுவிட்டு அதைக் குறித்து விசாரிக்கிறார். ரந்தம்பூர் வனத்தின் ராணியான அதுதான் உலகிலேயே அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட புலி என்கிற தகவலை உடன் வந்த நண்பரின் மகன் சொல்கிறான். அந்த ஒற்றை வரித் தகவலை பின்தொடர்ந்து வெகுதொலைவுக்கு அவர் பயணித்ததன் பயனாகவே வேங்கை வனம் நாவல் உருவாகியது. அவ்வளவாக அறியவராதவொரு களப் பின்ணனியில் வன மிருகங்களின் வாழ்க்கை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மனிதனுக்கும் விலங்குகளும் இயற்கைக்குமான ஊடாட்டங்களையும் முரண்களையும் ஆராயும் விதமாக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அபாரமானதொரு  அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.

சிறுகதைகள், நாவல்கள் தாண்டி மொழிபெயர்ப்பிலும் தன் முத்திரையைப் பதித்திருப்பவர் கோபாலகிருஷ்ணன். ஆங்கிலத்திலிருந்து கதேயின் ‘காதலின் துயரம்’ நாவல், செகாவின் சிறுகதைகள்,  நித்ய சைதன்ய யதியின் ஈஷாவாஸ்ய உபநிஷத் – ஒரு அறிமுகம்,ஒரு அடிமையின் வரலாறு – பிரடெரிக் டக்ளஸின் வாழ்க்கைச் சரிதம், சோல்ஸெனிட்சனின் வாழ்விலே ஒரு நாள் – நாவல் ஆகியவற்றை மொழியாக்கம் செய்துள்ளார்.

மேலும் இந்தியிலிருந்து நிர்மல்வர்மாவின் ‘ சிவப்புத் தகரக் கூரை’ ராகுல் சாங்கிருத்யாயனின் ‘ வால்காவிலிருந்து கங்கை வரை’ நாவல்களையும் ‘ பாதி பழுத்த கொய்வைப் போல் இப் பூமி’ என்னும் பெயரில் சமகால இந்திக் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

கோபாலிடம் நான் பார்த்து வியந்த பண்பு, எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத, தன் படைப்புகளைக் குறித்து தானே பேச முற்படாத ஒரு தன்மை அவரிடம் உண்டு. அதே சமயத்தில் தான் உண்டு தன் எழுத்து உண்டு என்பதோடு நின்று விடாமல் அடுத்த தலை முறையில் எழுதும் இளம் எழுத்தாளர்கள் பலரையும்  ஊன்றி படித்து அவர்களின் நிறை குறைகளை குறிப்பிட்டு அவர்களை உற்சாகமூட்டும் இயல்பும் அவரிடம் உண்டு. அவ்வகையில் அவரது இரண்டு கட்டுரை நூல்களான ‘மொழி பூக்கும் நிலம், ஒரு கூடைத் தாழம்பூ’ ஆகியன குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை

அவர் ஒரு நூலை எழுதி முடித்தபிறகு  அதைப் பற்றி பெரும்பாலும் பேசுவதே இல்லை. ஒரு நாள் திடீரென்று அலைபேசியில் அழைத்தவர் ‘ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் அதை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!’ என்றார். அது ‘நினைவில் நின்ற கவிதைகள்’ என்கிற அவருடைய கட்டுரை நூல். நூறு பக்கங்களுக்கும் மேலிருக்கும். ‘சரி, நான் படித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு வாரம் போல அவகாசம் எடுத்துக்கொண்டு எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை சொன்னேன். ‘சரி, பார்த்துக்கலாம்’ என்றவர்,இரண்டு நாட்களுக்குள் திருத்தம் செய்து, அடுத்த ஒரே வாரத்துக்குள் அது நேர்த்தியான புத்தக வடிவில் ‘சிறுவாணி வாசகர் வட்டம்’ வெளியீடாக வந்துவிட்டது.  அந்த அளவுக்குத் தீவிரமாக உழைக்கக்கூடியவர் கோபால். அதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் பல்வேறு  ஆளுமைகள் அவர் மூலமாகத்தான் எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள். நாஞ்சில் நாடன் அவர்களிடன் முதலில் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியவர் கோபால்தான்,‘கோணங்கள்’ ஆனந்த், மறைந்த கானியல் புகைப்படக் கலைஞர் ஜெயராம், புலவர் க. இரத்னம்  எனப்பலரும் இவர் வழியாக எனக்கு அறிமுகமானவர்களே. இப்படி வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகளிடம் இயல்பாக பழகக்கூடிய ஒரு தன்மையும்  கோபாலகிருஷ்ணனுக்கு இருக்கிறது. அதே சமயத்தில் எவ்விதமான குழு அரசியலிலும் அவருக்கு நாட்டமிருந்ததில்லை.

முக்கியமான எழுத்தாளராக தீவிர வாசகர்களால் அறியப்பட்டாலும், கதா விருது, தமிழக அரசின் மொழிபெயர்ப்பு க்கான விருது,  கண்ணதாசன் விருது உள்ளிட்ட சில விருதுகள் பெற்றிருந்தாலும் இவருடைய உழைப்புக்கும் தகுதிக்கும் உரிய மேலான அங்கீகாரம் அல்லது இடம் இதுவரையிலும் இவருக்கு கிடைக்கவில்லையோ என்கிற எண்ணம் எனக்கு உண்டு. எனினும் ஒரு எழுத்தாளனின் இடத்தை ஆகக் கடைசியாக நிர்ணயிப்பது  காலம்தான். ஆகவே எதிர்வரும் நாட்கள் அவருக்கு உகந்ததாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தனித்துவமான எழுத்தும் தளராத உழைப்பும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.