கரு

ஆங்கில மூலம் : ஆன்டி வியர்

தமிழாக்கம் :  பி. வெங்கட பிரசாத்

நீ வீட்டுக்கு போய் கொண்டிருக்கும் போது தான் இறந்துவிட்டாய்  

அது ஒரு கார் விபத்து. தனியாக சொல்ல எதுவும் இல்லை.  ஆனா உனக்கு அதுவே  முடிவாக மாறியது. உனக்கு ஒரு மனைவி, இரண்டு  பிள்ளைகள். உன்னுடையது வலி இல்லாத மரணம். மருத்துவர்கள் உன்னை காப்பாற்ற முடிந்த அளவு முயற்சி செய்தார்கள். ஆனால் பயன் இல்லை. உன் உடம்பு சுக்குநூறாக நொறுங்கி போயிருந்தது. பிழைக்க துளியும் வாய்ப்பு இல்லை, என்னை நம்பு! 

பிறகு தான் நீ என்னை சந்தித்தாய்.   

“என்ன… என்ன நடந்துச்சு?” என்று  நீ கேட்டாய், “நான் இப்ப எங்க இருக்கேன்?”

“நீ இறந்துவிட்டாய்”, சுற்றி வளைக்க விரும்பாமல், நேரடியாக விஷயத்தை சொன்னேன். 

“ஒரு… ஒரு லாரி இருந்தது, அது நிலை தடுமாறி…”

“ஆமாம்,” என்றேன் நான்.

“நான்… நான் செத்துட்டேனா  ?”

“ஆமாம். ஆனால் அதைப் பற்றி வருத்தப்படாதே. எல்லோரும் ஒரு நாள் சாக தானே போறாங்க,” என்று நான் சொன்னேன்.

நீ சுற்றிப் பார்த்தாய். வெறும் சூனியம். நீயும் நானும் மட்டும்தான் இருந்தோம். “இது என்ன இடம்?” என்று நீ கேட்டாய். “இதுதான் மறு உலகமா ?”

“ஏறக்குறைய அப்படித்தான்,” என்று நான் சொன்னேன்.

“நீங்க கடவுளா?” என்று கேட்டாய்.  

“ஆமாம், நான் கடவுள் “ என்று சொன்னேன் 

“என் பசங்க, என் மனைவி”, என்று நீ சொன்னாய்

“அவர்களைப் பற்றி என்ன?” 

“இனி அவங்க எப்படி இருப்பாங்க?  நல்லா இருப்பாங்க தானே ?” 

“அதைத்தான் நான் பார்க்க விரும்புகிறேன்,” என்று நான் சொன்னேன். “நீ இப்போது தான்  இறந்தாய் , ஆனால் உன் முக்கிய கவலை உன் குடும்பத்தைப் பற்றியதாக இருக்கு. அது நல்ல விஷயம்.”

நீ என்னை வியப்புடன் பார்த்தாய். உனக்கு நான் கடவுளைப் போல் தெரியவில்லை. நான் ஒரு சாதாரண மனிதனைப் போல் இருந்தேன். அல்லது ஒரு பெண்ணாக இருக்கலாம். ஒரு தெளிவற்ற அதிகாரம் உள்ள உருவம் அவ்வளவுதான். எல்லாம் வல்ல இறைவன் என்றில்லாமல்  பள்ளியில் இலக்கணம் எடுக்கிற ஒரு ஆசிரியர் போல உனக்கு நான் இருந்தேன் 

“கவலைப்படாதே,” என்று நான் சொன்னேன். “அவர்கள் நன்றாக இருப்பார்கள்.. உன் பிள்ளைகள்  உன்னை எல்லா வகையிலும் சிறந்த ஒருவனாக நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் உன்னை வெறுக்கிற நேரம் வருவதற்கு  முன்னால்  நீ வந்துவிட்டாய் . உன் மனைவி வெளியில் அழுவாள், ஆனால் உள்ளுக்குளே நிம்மதியாக இருப்பாள். நியாயமாக சொன்னால், உங்கள் மண வாழ்க்கை முறிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓர் ஒரு ஆறுதலுக்காக சொல்கிறேன், அவள்  நிம்மதி அடைந்ததற்காக மிகவும் குற்ற உணர்வு கொள்வாள்.”

“ஓ,” என்று நீ சொன்னாய். “இனி என்ன நடக்கும்? நான் சொர்க்கத்திற்குப் போவேனா அல்லது நரகத்திற்குப் போவேனா?”

“இரண்டும் இல்லை,” என்று நான் சொன்னேன். “நீ மீண்டும் பிறப்பாய்.”

“ஆ,” என்று நீ சொன்னாய். “அப்படியானால் இந்துக்கள் சொல்வது சரிதான்.”

“எல்லா மதங்களும் அவரவர் வழியில் சரியானவைதான்,” என்று நான் சொன்னேன். “என்னுடன் வா.”

வெறுமையின் பாதையில் நாம் செல்ல, நீ தொடர்ந்து வந்தாய். “நாம எங்கே போறோம்?” 

“குறிப்பா எங்கேயும் இல்லை.”  நான் சொன்னேன். “பேசிக்கொண்டே நடப்பது இனிமையான ஒன்று”

“ம்ம்.. அப்ப இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்கு?”  நீ கேட்டாய். “ மீண்டும் நான் பிறக்கும் போது,  எதுவும் எழுதாத வெற்றுத் தாள் மாதிரி வாழக்கை முதலில் இருந்து தொடங்கும், இந்த வாழ்க்கையில கிடைச்ச அனுபவமோ இல்ல வேற எதுக்குமே ஒரு பயனும் இல்லை.” 

“அப்படியெல்லாம் இல்லை!” நான் சொன்னேன். “உனக்குள் உன் கடந்த கால வாழ்க்கையின் அனைத்து அறிவும் அனுபவங்களும் உள்ளன. இப்போது உனக்கு அவை நினைவில் இல்லை என்பதுதான் உண்மை.”

நான் நடப்பதை நிறுத்தி உன் தோள்களைப் பிடித்துக் கொண்டேன். “ உன் ஆன்மா மிகப் பெரியது, அழகானது, பிரம்மாண்டமானது, உன்னுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஒரு மனித மனம் உன்னில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள  முடியும். உதாரணத்திற்கு,  ஒரு கோப்பைத் கிளாஸ் தண்ணீரில் உன் விரலை வைத்து அது சூடாக இருக்கிறதா அல்லது குளிர்ச்சியாக இருக்கிறதா என்று பார்ப்பது போல. நீ உன்னுடைய ஒரு சிறிய பகுதியை பாத்திரத்தில் வைக்கிறாய்.  அதை வெளியே எடுக்கும்போது, அது அடைந்த  எல்லா அனுபவங்களையும் நீ அடைந்திருப்பாய்”

“நீ கடந்த 48 ஆண்டுகளாக ஒரு மனிதனாக இருந்திருக்கிறாய், அதனால் நீ இன்னும் விரிவடையாது, உன்னுடைய முழுமையின் பேரறிவை உணர முடியாமல் இருக்கிறாய் . நாம் இன்னும்  நீண்ட நேரம் இங்கே இருந்தால், உனக்கு எல்லாமே நினைவுக்கு வரத் தொடங்கும். ஆனால் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் இடையில் அதைச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.”

“அப்படியானால் நான் எத்தனை முறை பிறவி எடுத்திருக்கேன்?”

“ஓ நிறைய. நிறைய.. கணக்கில்லாத வாழ்க்கைகள்,  வித்தியாசமான வாழ்க்கைகள்,”  என்று நான் சொன்னேன். “இந்த முறை, பொ.யு  540 இல் ஒரு சீன விவசாயப் பெண்ணாகப் நீ பிறப்பாய்.”

“ஒரு நிமிஷம்.. என்ன சொன்னீங்க?” – உன் குரல் தடுமாறியது, “என்னை காலத்தில் முன்னோக்கி அனுப்ப போறீங்களா?”

“ம்ம், பார்க்க போனால், அப்படித்தான்”. உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன், உங்களோட பிரபஞ்சத்தில் தான் காலம் என்ற ஒன்று உள்ளது.. நான் இருக்கிற இடத்தில இதெல்லாம் வேற மாதிரி”   

“நீங்க எங்கிருந்து வரீங்க? – நீ கேட்டாய். சொன்னாய் 

“கண்டிப்பா”, நான் விளக்கினேன். “நான் எங்கிருந்தோ வருகிறேன். ஏதோ ஒரு இடத்தில இருந்து. மேலும், என்னை மாதிரி சிலர் இருக்கிறார்கள். அங்கே எப்படி இருக்கும் என்று நீ தெரிந்துகொள்ள விரும்புகிறாய் என்று எனக்கு தெளிவாக புரிகிறது. உண்மையைச் சொன்னால், உன்னால் அதை புரிந்துக்கொள்ள முடியாது”  

“ஓ “, உன்னுடைய குரலில் சுருதி குறைந்தது. “ஆனா,  வேற வேற காலங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறந்து இருந்தா, ஏதோ ஒரு சமயத்தில் நான் என்னோட பேசி இருப்பேன். இல்லையா?”

“நிச்சயமா, எப்பவும் நடப்பது தான். தன்னுடைய வாழ்க்கையை தவிர வேற எதுவும் ஒருவருக்கு ஞாபகம் இல்லாததால் அந்த மாதிரி ஒன்று நிகழ்வதை நீ உணர கூட முடியாது “ 

“அப்ப, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” 

“உண்மையாவா?” நான் கேட்டேன். “உண்மையாவா?, வாழ்க்கையின் பொருள் என்ன என்று என்னிடம் கேக்கறியா? கொஞ்சம் பழைய வாடை அடிப்பது மாதிரி இருக்கே?”

“ஆனா,  அவசியமான கேள்வி” நீ விடாப்பிடியாக இருந்தாய். 

நான் உன் கண்களை உற்றுநோக்கினேன். “வாழ்க்கையின் பொருள், இந்த பிரபஞ்சத்தை நான் படைத்ததற்கான ஒரே காரணம், நீ கனிந்து, பக்குவப்பட்டு முழுமை அடைய  வேண்டும் என்றுதான்” 

“இந்த மனித இனமா? நாங்க முழுமை அடையணுமா?” 

“இல்லை, நீ மட்டும் தான். இந்த அகண்ட பிரபஞ்சத்தை உனக்காக தான் படைத்தேன். ஒவ்வொரு புது வாழ்க்கையிலும் நீ வளர்ந்து, கனிந்து, பேரறிவின் அம்சமாக மாறுகிறாய். 

“நான் மட்டுமா? அப்ப , மற்றவங்க?” 

“மற்றவர்கள் என்று எதுவும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில், நீயும் நானும் மட்டும் தான்” 

ஒன்றும் புரியாமல் என்னை வெறித்து பார்த்தாய். “ஆனா, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும்” 

“எல்லாம் நீ தான். உன்னுடைய வெவ்வேறு தோற்றங்கள்” 

“இருங்க!  மத்தவங்க எல்லாருமே நானா ?” 

“இப்ப, உனக்கு புரிய தொடங்குகிறது”, முதுகில் செல்லமாக தட்டியப்படி நான் சொன்னேன். 

“இது வரைக்கும் வாழ்ந்த ஒவ்வொருவரும் நானா?

“இனி வாழப் போற ஒவ்வொருவரும் நீ தான்”

“நான் ஆபிரகாம்  லிங்கனா ?

“ஜான் வில்க்ஸ் பூத் கூட நீ தான்” , நான் சொன்னேன் 

“நான் ஹிட்லர் ஆ ?” அதிர்ச்சியோடு கேட்டாய் 

“அவரால் கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் மக்களும் நீ தான்”

“அப்படின்னா,  நான் மனித குமாரன் ஏசுவா?”

“அவரை பின்பற்றிய ஒவ்வொருவரும் கூட  நீ தான்”  

நீ அமைதியில் உறைந்தாய் 

“ஒவ்வொரு முறையும் நீ மற்றவர்களை காயப்படுத்தும் போது”, நான் சொன்னேன், “நீ உன்னையே காயப்படுத்துகிறாய்.  பிறர்க்கு அளித்த கருணை  ஒவ்வொன்றும் உனக்கு நீயே அளித்துக்த கொண்டாய். எந்தவொரு மனிதன் அனுபவித்த, அனுபவிக்க போகும் மகிழ்ச்சியும் துக்கமும் உன்னால் உணரப்படும்” 

நீண்ட நேரம் நீ யோசனையில் ஆழ்ந்திருந்தாய் 

“ஏன்?, ஏன் இதெல்லாம்?” நீ கேட்டாய்  

“ ஒரு நாள் நீ என்னைப் போல் ஆவாய். ஏனென்றால்  அது தான் நீ. நீ என்னுடைய அம்சம். என்னுடைய குழந்தை நீ”    

“என்ன?” நம்ப முடியாத குரலோடு  “நான் கடவுளா?” என்றாய்.

“இல்லை. இப்பவே இல்லை. நீ முளைக்கும் தளிர். நீ இன்னும் வளர்ந்து வரும் நிலையில தான் இருக்கிறாய். ஒவ்வொரு மனித வாழ்க்கையையும் முழுதாக  நீ வாழ்ந்து முடிக்கும் போது, கடவுள் நிலைக்கு தயாராக இருப்பாய்” 

“அப்படின்னா, இந்த முழு பிரபஞ்சமும், வெறும் ஒரு…” என்று நீ இழுக்க..   

“ஒரு கரு”, நான் வாக்கியத்தை முழுதாக்கினேன். “உன்னுடைய அடுத்த வாழக்கையை நீ தொடங்கும் நேரம் வந்து விட்டது”  

உன்னை உன் பாதையில் அனுப்பினேன். 

***

மூலம் – The Egg  – by Andy weir  https://www.galactanet.com/oneoff/theegg.html


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “கரு”

  1. நல்ல அருமையான மொழிப்பெயர்ப்பு. அளவில் சிறிய கதை. ஆனால் பேசுபொருள் காத்திரமானது, கதையில் கதாநாயகன் எதிர் கொள்ளும் புதிய புரிதலை உரையாடல் வடிவில் அமைத்துள்ளார்கள். கதை முடிவில் அதன் ஆங்கில் ஆக்கத்துக்கான லிங்கை விபி கொடுத்துள்ளார். நான் ஆங்கிலத்தில் கதையினை முதலில் வாசிக்கையில் இதை “அண்டம்” என மனதுக்குள் மொழிப்பெயர்த்திருந்தேன். விபி கரு என மொழிப்பெயர்த்துள்ளார். சிறுகதை மொழிப்பெயர்ப்பில் விபி தனக்கென பாதை ஒன்றை அமைத்து சிறப்பாக செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply to நிர்மல்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.