ஜோதி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வினோத் வந்து சேரவில்லை. அவனிடம் நேற்றே நேரத்திற்கு வந்துவிடு என்று சொல்லியிருந்தாள். அவன் கிண்டியிலிருந்து கிளம்பி வருவதற்குள் எப்போதும் நேரமாகிவிடும்.
ஆனால் ஜோதிக்காகவே வேகம் வேகமாக கிளம்பி ஓடி வருவான். அவளிடம் இன்று எதாவது புதிய இசை வகைப் பற்றியோ அல்லது இசை கலைஞர்கள் பற்றியோ தெரிந்துக் கொள்ள எதாவது இருக்கும். அது போதும் அன்றைய தினம் அவனுக்கு கைக்குள் அகப்பட்டுக் கொண்ட பூனைக் குட்டியாக அடங்கிவிடும். எப்படியோ அன்றும் கடைசி நிமிடத்தில் வந்து சேர்ந்தான். ஜோதியின் நீல நிற டி சர்ட்டில் சாரங்கி ஒன்று வரையப்பட்டிருந்தது.

அவனுக்கு இந்தக் கருவியைப் பற்றி சொன்னவள் ஜோதிதான். அவளைப் பார்த்து புன்னகைத்தவாறு அதைப் பற்றிய கேள்விகள் எதுவும் எழாதது போல் அவனும் அவளுடன் சேர்ந்து மெட்ரோவில் ஏறிக்கொண்டான். எல்லாரும் தனித்திருக்கும் உலகில் அவனுக்கு ஜோதி அவனுடன் மட்டுமே இருக்கும் கடவுள் போல அவனை இரட்சிக்க வந்தவளாக தோன்றினாள். சென்னை வந்த புதிதில் யாரையும் வினோத்திற்கு தெரியாது பேசவும் தெரியாது. ஆனால் கையில் இவன் வைத்து படித்துக் கொண்டிருந்த Zorba the greek புத்தகத்தை பார்த்ததும் ஜோதி தானாகவே இவனிடம் வந்து பேசினாள். அதற்கு பிறகு எப்போதும் வினோத்திற்கு பேச்சு பேச்சு பேச்சுதான். அவள் இசையைப் பற்றி பேசத் துவங்கிய போது முறையாக இசையைப் பயின்ற ஒருத்தி என்றுதான் முதலில் இவனுக்கு தோன்றியது . இவனோ வெறுமனே இசை இரசிகன். அவனுக்கு ஆரோகணம் அவரோகணம் என்பதெல்லாம் நீச்சல் பழகுவதைப் போல பழக வேண்டிய விஷயங்கள். ஸ்வர ஜதி, தாள இலயங்கள் எல்லாம் மகா கணித சூத்திரங்கள்.
ஆனால் ஜோதி அதையெல்லாம் சென்னையின் சாலையோர கடைகளில் ஆம்லெட் போடுவதைப் போல கையாண்டதும் அதிலும் தஞ்சாவூர் திமிரோடு அதை செய்ததும் புதிதாக இருந்தது. அதுமட்டுமல்ல அவள் சங்கீதம் என்பதை பேதமற்று மானுடம் தனது சாத்தியங்களை மீறிச் செல்ல கண்டறிந்த ஒன்று என்ற அடிப்படையில் தான் பார்த்தாள். இவை அனைத்தும் இலக்கியத்தை மட்டுமே சுற்றி வந்துக் கொண்டிருந்த அவனுக்கு வேறொரு உலகத்தை கொண்டு வந்து கொடுத்தது. தினம் அந்த மெட்ரோ பயணங்கள் முடிவிலியின் எல்லைகளை துளையிட்டு கடந்து செல்வதாக இருந்தது. ஜோதிக்கு இவன் அருகாமை ஒரு புத்தகத்தோடு தனித்திருப்பது போல தோன்றியது. ஆனால் அவள் எதையும் அவ்வளவு எளிதாக வெளிக்காட்டிக் கொள்ளக் கூடியவள் இல்லை.
ஜோதிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் என்றாலும் அதன் மீதெல்லாம் பெரிய பிடிமானமோ பற்றோ இல்லை. அவள் தன் வீட்டிற்கு கூட வருடத்திற்கு ஒரு முறை எப்பவாவது போகக்கூடியவள். தன்னை ஊர், பேர் இதிலிருந்தெல்லாம் துண்டித்துக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.
அவள் சென்னை ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்தவுடன் இங்கே படிக்க வந்தவள். அதன் பிறகு அதனை ஒட்டி கிடைக்கும் வேலைகளை செய்துக் கொண்டு இங்கேயே தங்கி விட்டாள். வினோத்திற்கோ இதெல்லாம் தெரியாது. அவள் தனது பின்புலத்தைப் பற்றியோ சொந்தக் கதைகளையோ மறந்தும் சொல்லியதில்லை.
அவளுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் என்பது மட்டுமே அவனுக்கு தெரியும்.
அதைவிட அவனுக்கும் அதில் பெரிய அக்கறையில்லை. ஆனால் அவன் தனது சொந்தக் கதைகளைப் பற்றி அவளிடம் ஒன்று விடாமல் ஒப்பித்திருந்தான். அவன் அப்பாவும் காஃப்காவின் அப்பாவும் எப்படியெல்லாம் ஒத்துப் போவார்கள் ,
தானும் ஒரு நாள் ஒரு பெரிய பூச்சியாக மாறிப் போனாள் எப்படி இருக்கும் என்றெல்லாம் அவளிடம் எதையெல்லாமோ பேசிக்கொண்டே இருந்திருக்கிறான். அவள் அவன் சொல்லும் விதத்தை இரசித்துக் கேட்டபடி அவனுடைய சின்னஞ்சிறு கண்களையே பார்த்துக்கொண்டிருப்பாள்.
அன்று ஜோதி Arvo Part ன் Spigel im spigel இசைத் தொகுப்பு பற்றி பேசத் துவங்கினாள். அந்த இசைத்தொகுப்பில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களை போகிற போக்கில் சொல்லிவிட்டு தன்னிடம் இருந்த Ipad ஐ எடுத்து அந்தப் பாடலை ஒலிக்கவிட்டாள். வினோத் அதை கண்களை மூடி கேட்கத் துவங்கியதும் மெல்ல சொட்டும் பனிக்காலம் ஒன்று அப்பாவிற்கு பயந்து போர்வைக்குள் முடங்கிய அவனை மெல்ல எழுப்பி வந்து தன்னோடு அணைத்து முத்தமிட்டு அவன் கைகளைக் கோர்த்து “வா நாம் போவோம் ” என்று அழைத்தது . அவனையறியாமல் கண்கள் கலங்கியது.
வினோத்திற்கு பொதுவாகவா காலநிலை மாற்றங்கள் நடக்கும் போதெல்லாம் உள்ளுக்குள்ளும் எதுவோ ஒன்று நடப்பதாக இருக்கும். Spiegel ம் அப்படி ஒரு மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அடுத்த நொடி ஜோதியின் கைகளை பிடித்துக் கொண்டாள் தேவலாம் போலிருந்தது. அவளோ இவன் கண்களையே பார்த்தபடி எதுவும் பேசாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தாள். அவன் தன்னை அவள் முன்பாக ஒளித்துக் கொள்ள முடியாதவனாகி பல மாதங்கள் ஆகிவிட்டது . அன்றைய தினம் இருவரும் அதன் பிறகு எதையும் பேசிக்கொள்ளவில்லை. இசையும் ஜோதியும் அவனுக்குள் நடத்தும் பெரும் பாய்ச்சலில் அவன் காலம் தப்பி போனவனாக உணர்ந்தான் .
மனம் தானே தப்பிப் போகும். அது என்ன இவள் அருகில் இருக்கும் போது நிகழும் காலம் என்னுடைய கடந்தகாலமாக மாறி அதுவும் மஞ்சளும் பச்சையும் கலந்த ஓர் இளவேனிற் காலமாக மாறிவிடுகிறது என்பதெல்லாம் அவனுக்கு புரியவில்லை. அவள் அந்த Ipad ஐ அவனிடம் கொடுத்து அதில் இருப்பவற்றைக் கேட்டுவிட்டு பொறுமையாக கொடு என்று சொல்லியிருந்தாள். இரவு முழுக்க ஒவ்வொன்றாக பித்துப் பிடித்தவனாகி கேட்டுக் கொண்டிருந்தான் .
கடைசியாக துனிசிய பாடகி Emel ல் வந்து முடித்தான். எத்தனை எத்தனை சிதறுண்ட வாழ்வென்று தோன்றியது.
அவன் அன்று உணர்ந்த இசை , படித்த புத்தகங்கள் அது சொன்ன வாழ்க்கை இவை அனைத்தும் இந்தப் பூமியை அப்படியே அள்ளி எடுத்து அவரவர் ஓடி விளையாடி சந்தோஷித்து வாழும்படி பார்த்து ஆசைதீர அரவணைத்து முத்தமிட முடியாதா என்று ஏங்க வைத்தது. எங்கிருந்தோ கேட்கும் ஏக்கத்தை கேட்டு தழும்பும்
இந்த ஒரு துளி போதாதா? அது நீர் குமிழாகி உடைந்து உடைந்து உலகம் முழுக்க பெருகாதா ? என்று அழுது அரற்றிக் கொண்டிருந்தான். ஜோதி அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்திருந்தாள். அவன் பார்த்த தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்தில் தகதகத்த ஆண்டாள் போல.
அவளிடம் அப்படியெல்லாம் தனது மனதில் உள்ளதைக் கேட்க தயக்கமெல்லாம் தேவையில்லை என்று ஒரு பக்கம் உணரும் போதே மறுபக்கம் அவள் அதன் பிறகு தன்னை இப்படியே விட்டுச் சென்றாள் அதை எப்படி தாங்குவது? என்றும் அச்சமாயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை தேவநாயப் பாவணார் நூலகத்தில் ஒரு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா அதற்கு போகலாம் என்று ஏற்கனவே இருவரும் பேசியிருந்தார்கள். வினோத் காலையில் எழுந்து வேகவேகமாக கிளம்பி அவள் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே மெட்ரோவிற்கு போய்விட்டான். இன்று அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் அவ்வளவுதான். என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவள் அன்று மிக சாதாரணமாக ஒரு சுடிதார் அணிந்து வந்திருந்தாள். அப்படியெல்லாம் எப்போதும் வரக்கூடியவள் இல்லை. வந்தவுடன் அவனிடமிருந்து Ipad ஐ வாங்கி காதில் சொருகிக் கொண்டாள். இவன் கையிலிருந்த Octavia paz கவிதைகளை வாங்கி புரட்டினாள். ஓரிடத்தில் அப்படியே நின்று படிக்கத் துவங்கி இவனிடம் ஒரு பக்கத்தை கொடுத்து இதை வேகமாக எனக்கு படித்துக் காட்டு என்றாள். அது
As One Listens To The Rain என்ற கவிதை.
அவன் உரக்க வாசிக்கத் துவங்கினான் . அவன் வாசிப்பதைக் கேட்டவள் எதோ வசியத்தில் சிக்கியவள் போல
“இசையின் நுணுக்கங்களை இயற்கையின் பேரின்ப இரகசியங்களை தனது உணர்வால் இரசிக்கத் தெரிந்த ஒருவன் எளிதாக கண்டுகொள்ள முடிகிறது . அந்த நொடியே அவ்வுணர்வு புலன்களின் வரம்புகளை உடைத்து அவனை மேலெழும்பி பறக்கச் செய்கிறது.நாம் அதைப் பற்றி பேசும் மற்ற அனைத்தும் வெறும் பாவனைகள் என்றாகி முடிந்து விடுகிறது. இதை இசையும் கவிதையும் எவ்வளவு அழகாக செய்கின்றன ! பார்த்தாயா ! என்றாள். அவனுக்கு அவளை அப்படியே அள்ளி எடுத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது. சட்டென்று அவள் கையைத் தேடி பிடித்துக் கொண்டான். அத்தனை சிறிய கை!
மனதில் இத்தனை பெரிய சிறகு! ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு .
ஜோதிக்கு தெரியும் இன்று வினோத் எதையோ தன்னிடம் கேட்கப் போகிறான் என்று.
அவள் நினைத்ததைவிட வினோத் வேகமாக இருந்தான். அவள் கையைப் பிடித்த அடுத்த நொடியே கேட்டான் ” ஜோதி நாம் ஒன்னா சேர்ந்து வாழலாமா? “கேட்கக் கூடாது தான் ஆனால் கேட்காம இருக்க முடியலை அதான்” என்றான். அடுத்து நடக்கப் போகும் நடக்கக் கூடாத ஒன்றிற்காக காத்திருக்கும் நொடிகள் வேதனையானவை. அவன் அது நிகழும் தருணத்தை எதிர்கொள்ள காத்திருந்தான்.
ஆனால் ஜோதி இதை பெரிதாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அது இன்னும் இவனுக்கு வேதனையை தந்தது. ஜோதி எதுவா இருந்தாலும் சொல்லு என்றான். அவள் அவனையே கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு “உனக்கு திடீர்னு பைத்தியம் புடிச்சிட்டா” ஒழுங்கா படிக்குற வழிய பாரு என்றாள். இவனுக்கு அந்த அலட்சிய பாவணையும் அவளுடைய பதிலும் மனதைப் போட்டு உலுக்கியது. நானும் என்னுடைய இருப்பும் அவளுக்கு அத்தனை சிறியதாக பொருட்படுத்தாத அளவிற்கே தெரிகிறதா! என்று அவனுக்கு அவனே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தான். மீண்டும் அவளிடம் “ஜோதி நான் உண்மையாக தான் சொல்கிறேன் என்னால் உன்னைவிட்டு இருக்க முடியவில்லை. இப்படி கிடைத்த ஒருத்தி என் வாழ்க்கையில் இல்லாமல் போவதை நினைத்து பார்க்க முடியவில்லை என்றான்.
என்ன பேசுவது? அதன் பிறகு எப்படி வாழ்வது ?
இதைக் கடந்து வரும் தைரியம் அவனுக்கு இருக்கிறதா? எதை எதையோ யோசித்துக்கொண்டே தலையை கவிழ்த்தபடி அவள் அருகில் நின்றிருந்தான்.
ஜோதிக்கோ அவள் மனசு முழுக்க வினோத் இருப்பது அவளுக்கும் தெரியும். ஆனால் இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் சூழ்நிலை அவளுக்கு இல்லை. கொஞ்ச காலம் எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் வினோத்திற்கு அதை இப்போது சொல்லக் கூடிய தேவையில்லை என்றே நினைத்திருந்தாள். அவன் தன்னை விட்டு எங்கு போகப் போகிறான் என்று அவள் அலட்சியமாக நினைத்திருந்ததில் தவறும் இல்லை. வினோத் அவளுக்கும் பிடித்த நிறமாக எப்போதும் அவளுடைய தூரிகையில் துயின்று கொண்டிருக்கும் ஒருவனாக தான் இருந்தான்.
அவன் எப்போதும் அவளுடன் பேசியபடி இதே மெட்ரோவில் இன்னும் சிறிது காலம் பயணம் செய்யத் தானே போகிறான். பிறகென்ன அதற்குள் குடியா மூழ்கிவிடப் போகிறது? என்றே அவள் நினைத்தாள். உண்மையில் வினோத்திற்கு குடி மூழ்கியது போலாகிவிட்டது. எல்லாம் சலசலத்து அவன் நினைவுக்குள் புகுந்த பிள்ளைப் பூச்சிகளாக மாறிவிட்டது.
அவன் அதன் பிறகு ஒரு நடுக்கத்துடனே அவளை சந்திக்கத் துவங்கினான். அவள் பேசும் எதுவும் தலைக்கு போய் சேராமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பதே வேலையாக போய்விட்டது.
ஜோதி அவனை விட்டு விட்டு சீக்கிரம் எங்காவது போய்விடுவாள். இனி அவனுடன் பேசவே போவதில்லை என்று ஒரு குரல் உள்ளிருந்து கத்திக் கொண்டே இருந்தது.
அவனால் அதன் பிறகு நிம்மதியாக சாப்பிடவோ ஒரு இடத்தில் உட்காரவோ வேறு எந்த வேலையையும் செய்யவோ முடியவில்லை. “உனக்கு என்ன பைத்தியமா ” என்று அவள் சாதாரணமாக கேட்டது உண்மையாகி “நான் பைத்தியமாகி விட்டேனோ என்று அவனே அவனுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். அதன் பிறகு அவனாகவே அவளைப் பார்க்கச் செல்வதை தவிர்த்தான்.
இதெல்லாம் ஜோதிக்கு தெரியாமல் இல்லை . வினோத் அவளை தவிர்த்ததைப் பற்றி அவள் கவலைப் படாமலும் இல்லை.
வேறென்ன செய்ய முடியும் என்பதுதான் அவளை அவளே சமாதானப்படுத்த சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது. அவனை அதற்கு மேல் போனில் அழைத்து தொந்தரவு செய்யவும் அவள் விரும்பவில்லை அடுத்த சில வாரங்களில் பெங்களூர் கம்பெனி ஒன்றிற்கு விளம்பரம் டிசைன் செய்வது தொடர்பாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்கு சென்றுவிட்டாள். வினோத்திற்கு இப்போது அவள் எங்கு இருக்கிறாள் ?என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்றெல்லாம் தெரியவில்லை. ஜோதி தன்னைவிட்டு போய்விடுவாள் என்று பயந்தது போலவே நடந்துவிட்டது. அதற்கு தான் தான் காரணம் என்ற குற்றவுணர்விலும் அவள் தன்னை ஏற்றுக்கொள்ள வில்லையே என்ற அங்கலாய்ப்பிலும் அவன் அதீத உணர்ச்சிக்கு ஆளாகி தன்னை அறைக்குள்ளாகவே ஒளித்துக் கொள்ள துவங்கினான். இரண்டு மூன்று வாரங்கள் ஆனது அவன் சரியாவதற்கு. சரியாவது என்றால் சில சமயங்களில் நம்மை நாமே முழுவதும் தொலைத்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றி வாழ்வது என்று கூட அர்த்தமாகிவிடுகிறது. வினோத் அப்படி வாழத்துவங்கி தான் தன்னை மீட்டெடுத்தான். ஜோதி இல்லாமல் போன இடத்தில் எப்படியாவது யாரோ ஒருத்தி வேண்டும் அவனுக்கு. அப்போது கிடைத்தவள்தான் கீர்த்தி. அவன் தனக்குள் கேட்கும் பேரிரைச்சலை அதில் புகைந்து புகைந்து எழும் கனலை வேரோடு பிடிங்கி அவள் மீது திராவகம் போல அள்ளி ஊற்றினான். கீர்த்தியும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒவ்வொரு முறையும் அதை வாங்கிக்கொண்டாள். அவன் உடல் எத்தனை மூர்க்கமாக அவள் மீது பாய்ந்த போதும் அதை அப்படியே உள்வாங்கினாள்.
பல இரவுகள் பகல்கள் அந்த கொதிப்பின் பிரவாகம் அவள் மீது பெருகி பெருகி வழிந்தது. கீர்த்திக்கு வினோத்தின் சிதறுண்ட நினைவு ஒன்று திரண்டு உயிராகி தன்னுள் வேர்விட்டு வளர்வது தெரிந்தது . அதை அவள் அத்தனை நிதானமாக அவனிடம் சொன்னது அவனே எதிர்ப்பார்க்காதது.
வினோத்தும் கீர்த்தியும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆன பிறகு ஒரு நாள் வினோத்திற்கு பார்சலில் ஆக்டேவியா பாஸ்ஸின் முழு கவிதை தொகுப்பு ஒன்று வந்து சேர்ந்தது.
கீர்த்தி தான் அதை வாங்கி வைத்திருந்தாள். அவனிடம் சொல்வதற்கு தயங்கி தயங்கி ஒரு வித பயத்துடனே அவனிடம் அந்தப் புத்தகத்தை நீட்டினாள். அதில்
From
Jothi
என்று மட்டுமே இருந்தது
ஆனால் இப்போது வினோத்திடம் எந்த பதட்டமும் இல்லை.
மிக நிதானமாக அவளிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கி புரட்டினான். ஆக்டேவியாவின் கவிதைகள் என்றாலே அவனுக்கு மகானுபவம் தான். அது அச்சில் தற்போது இல்லாத ஒரு பழைய பதிப்பு .
அதில் சில இடங்களில் அடிகோடிட்டிருந்தது.
அவன் கீர்த்தியைப் பார்த்து புன்னகைத்தவாறே நின்றபடி சில கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தான்.அந்தப் புத்தகத்தின் கடைசி அட்டையின் முதல் பக்கத்தில் இருந்த செம்பழுப்பு நிற காகிதத்தில் ஒரு சிறிய பறவை வரையப்பட்டு அதன் கீழே சிறிய எழுத்தில் எதோ எழுதியிருந்தது.
அதை ஜோதி தான் எழுதியிருந்தாள்….
“பறவையின் அலகில் துடிக்கும் புழுவா?
அதைக் கொத்தி வந்த
அதன் அலகா?
எது நான்”
ஜோ.
படித்த வார்த்தைகள் கடந்து போகாமல் அவனுக்குள்ளே நிகழ்ந்து நிகழ்ந்து மூழ்கடிக்கத் துவங்கியது. தன் சின்னஞ்சிறு சிசுவை கண்முன்னே இழந்த தாயொருத்தியின் பேரழுகை ஓலமாக கேட்டது. ஏன் இது நடந்தது ? இப்படி அவளும் நானும் தனியாய் தவித்து துடிப்பது எதனால்? நான் தானா ? தளிர்ப்பதற்கு பொறுமையில்லாமல்
தனக்குள்ளாகவே வெம்பி பட்டுப் போன மாங்கன்றாகி இப்படி ஆகிவிட்டதா வாழ்வு? அவனுக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரிப்போட்டது.
எதையும் சொல்ல முடியாமல் தத்தளிக்கும் தன்னை மறைத்துக் கொள்ள அருகில் இருந்த கீர்த்தியை ஓடிச்சென்று கட்டிக்கொண்டான்.
அவனையும் அவன் அழுகையையும் புரிந்தவளாக கீர்த்தி அவனை அணைத்துக் கொண்டாள்.அங்கே நீண்ட பகல் பொழுதின் இரைச்சலுக்கு இடையே பெங்களூரில் ஜோதி மெட்ரோ இரயில் நிலையத்தின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்திருந்தாள். காதில் சொருகியிருந்த Ipad ல் ஒலித்துக் கொண்டிருந்த சாரங்கியிலிருந்து உஸ்தாத் சுல்தான் கான் வாசித்த தும்ரி தாரை தாரையாக அவள் கண்ணீரோடு கலந்து வழிந்துக் கொண்டிருந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
