எப்போதும் ஏதாவதொரு ஜன்னலில் அமர்ந்தேயிருக்கும் குருவி

அது தன் தானியங்களையோ
அல்லது
தனது கிளையையோ நினைத்துக் கொள்கிறது
மேலும்
பறந்து சென்ற கணத்தில்
திரும்பவும் வந்து அமர்கிறது
தனது
இணைக்காக அது காத்திருக்கவும் கூடும்
இங்குமங்கும்
தலை திருப்ப முயற்சிக்கிறது
சில வேளைகளில்
ஜன்னல் கண்ணாடிகளை
கொத்திப் பார்க்கிறது
வீட்டின் தானியக்காரி குவளையில்
நீரும் வைத்துவிட்டுப் போகிறாள்
இப்போது
இணையும் வந்து சேர்ந்தது
தத்தித்தத்தி விளையாடத் தொடங்குகின்றன
பின் முத்தமிட்டுக் கொள்கின்றன
தெருவில் யாரோ ஒருவன்
ஹாரன் அடித்தபடி
சுவரோரம் நிறுத்தும் சப்தத்தில்
பதற்றத்துடன்
சற்று தொலைவில் இருக்கும் மரத்தில்
அமர்ந்து கொள்கிறது
ஜன்னலில் குருவிகள் அற்ற
ஞாயிறின் நண்பகல்
மௌனம் கொண்டிருக்கிறது.
கனகாம்பரம் சூடிக் கொண்ட ஒருத்தி
ஒல்லியான தேகம் கொண்ட ஒருத்தி தலையில் கனகாம்பரம் வைத்துக்கொண்டு
புறநகர்ப் பேருந்து நிலையத்தில் அங்குமிங்குமாக அலைகிறாள்.
எப்போதும் அந்த தேநீர்க்கடடை முன் தென்படுபவளை சமீபமாகக் காணவில்லை.
யதேச்சையாக பெட்ரோல் நிரப்ப சென்றபோது
அங்கிருந்த தீ வாளியருகில்
வழமையான இறுக்கமான ஆடையில் இருந்தாள்.
விசாரிக்கையில்
அங்கு கூட்டும் பணி செய்கிறாளாம்.
முன்னதாக
ஓர் அதிகாலையில் ஆறுகண் பாலத்தில்
அவ்வழி வந்த உலகாணி பால்க்காரன்
முன்பு நிர்வாணமாக நின்று இரண்டு
கைகளால் வழி மறிக்க
மூன்று வாரங்கள் காய்ச்சலில் படுத்து
எழுந்திருக்காரன் என்பதை அறிந்ததால்
இம்முறையும் அவளிடம் பேசாது வந்துவிட்டேன்.
நேற்று கருப்பட்டிக்காபிக் கடைப்பக்கம் சென்று திரும்புகையில் ஏதோ முணுமுணுத்தபடி சாலையைக் கடடந்தாள்.
அவள் எங்கு உறங்குவாள்
எங்கு குளிப்பாள் என்பது வியப்பாகவேயிருக்குமெனக்கு.
எப்படி அவளுக்கு இந்தக் கனகாம்பரம் மட்டும் கிடைத்துவிடுகிறதென்பது மேலும் வியப்பாகவிருக்கும்.
ஒருமுறையேனும் நீண்ட நேரம் அவளிடம்
கதைக்க வேண்டுமென்று நினைததுக் கடந்துதான் மீதம்.
சமீபமாக அவளை இரவில் ஏன் பின் தொடரக்கூடாது என்று தோன்றும் இம்மனதை வைத்து என்னதான் செய்வது.
நான்
பாலைவனத்தில் உள்ளேன்.
வனம் தீர்ந்தது.
மீதமாய்ச் சில பூக்கள் மட்டும் கைவசம்
நீயொரு
மேகம் கொண்டு வா
எல்லாம் சரியாகிவிடும்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
