அனல்

அக்டோபர் 2020

நெருப்பென ஜலந்தரன் கண்கள் சிவந்தன, காதுகள் சூடாயின, தாடை இறுகி பற்கள் அறைப்பட்டன. கோபம் உடலும், உள்ளமும் ஆனது. அடிக்கடி தன் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான். வரவேற்பறை மேஜையைச் சுற்றி சுற்றி நடந்தான். வீரேந்தரின் கண்களைச் சந்திக்காமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி தன் தோள்களை இறுக்கிக் கொண்டான்.  உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது. மோட்டல் வரவேற்பறையில் வெளியில் கொட்டும் மழைச் சாரலின் குளிர் தாண்டி வெப்பம் பரவியதாகவே வீரேந்தர் காஷ்யப் உணர்ந்தார். வெளியில் பார்த்தார். ப்ளூரிட்ஜ் மலைத்தொடர்களிலிருந்து வரும் மழைமேகங்கள் மோட்டலின் முன்புறம் கவிந்திருந்தன.மெல்லத் தூறல் மீண்டும் ஆரம்பித்திருந்தது. 

ஜலந்தரனின் மோட்டல் ப்ளூரிட்ஜ் மலைத்தொடரின் மடிப்புகளில் அமைந்திருந்தது. 340-ஆம் சாலையிலிருந்து பார்க்கலாம். தொலைவில் ப்ளூரிட்ஜ் மலைத் தொடர்களின் நீலச் சிகரங்கள் மேகங்களோடு கலந்து காட்சியளித்தன. அருகில் நின்ற ஓக் மரங்கள் காற்றில் ஆடின. ப்ளூரிட்ஜ் மலையில் இலையுதிர் காலத்தின் மஞ்சள், சிவப்பு இலைகள் சுழன்று பறந்தன. மலைச்சரிவுகளில் இருந்து வரும் குளிர்ந்த காற்று மோட்டலின் சுவர்களில் மோதி ஈரத்தைப் பரப்பியது.

இது போன்ற மோட்டல்களில் ஏதேனும் சின்ன சின்ன பழுது என்றால் ஆளைக் கொண்டு வந்து வேலை செய்வது செலவெடுக்கும், ஆளும் கிடைக்க மாட்டார்கள். பெரும்பாலும் மோட்டல் உரிமையாளர்களே தங்களுக்கான வேலைகளைச் செய்து செலவை, நேரத்தை மிச்சம் பிடிப்பார்கள்.

வரவேற்பறையின் பழைய மர மேஜையில் இருந்த கம்யூட்டர் கீபோர்ட் மேல் படிந்த தூசியை ஜலந்தரன் கையால் துடைத்தான். சுவரில் தொங்கிய பழைய டிஜிட்டல் கடிகாரம் மாலை 2:30-ஐக் காட்டியது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புது விருந்தாளிகள் வருவார்கள். 340 சாலையின் திருப்பத்தில் மோட்டலின் நியான் விளக்கு பலகை மழையில் மங்கலாக ஒளிர்ந்தது.

“பேட்டா,” அவர் குரல் தளர்ந்தது. “டாக்டர் அப்பாயின்ட்மென்ட் மறந்துட்டியா? மூணு மாசம் முன்னாடியே புக் பண்ணி, போன வாரமும் சொன்னேனே…”

வீரேந்தர் ஜலந்தரனின் குடும்ப நண்பர். அதனால்தான் அவர் எழுபது வயதிலும் மோட்டலில் ஜலந்தரனிடம் வேலை செய்கின்றார்.

“போதும், போதும், ரொம்ப நடிக்காதிங்க!” ஜலந்தரன் மேஜையை ஓங்கி அறைந்தான். “இனிமே பேட்டான்னு கூப்பிடாதீங்க! இது உங்க மோட்டலா இருந்தா இப்படி அவசர நேரத்துல எல்லாத்தையும் போட்டுட்டு போவிங்களா? எனக்கு எரிச்சலா இருக்கு! ரூம் லீக் ஆகுது. நான் மேலே ரிப்பேரில் இருக்கையில் கஸ்டமர் வந்தா எம்பி குதிச்சு வந்து நானே பாத்துக்கறேன். உங்களுக்கு என்ன கவலை”

அவன் சிறிய கண்களிலிருந்து நெருப்புப் பொறி சிந்த விழித்துப் பார்த்தான்.அவன் உடல் முழுவதும் கோபத்தின் சுத்தியலாய் இதயம் அறைந்தது. “ நீங்க போங்க. போய் உங்க டாக்டர் அப்பாயிண்மெண்ட்டை பாருங்க. நான் இங்க தனியாக கிடந்து சாகறேன். நம்ம மோட்டலை கட்டிட்டு அழறேன்”.

ஜலந்தரனின் திருமணத்தினை நடத்தி வைக்க அங்கும் இங்கும் ஓடி வேலை செய்திருந்த வீரேந்தரின் பாதங்கள்  ஓர் அடி பின்னால் நகர்ந்தது. ஜலந்தரன் கோபம் அவர் அறிந்ததே,ஆனால் அவரிடம் மட்டும் இதுவரை குரலை உயர்த்தியதில்லை. மனைவி, பிள்ளைகள், வேறு ஊழியர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் எல்லாரிடமும் கோபம் வரும். அவரிடம் மட்டும் கோபம் வந்தாலும் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்வான். அவனது மனைவியிடம் இவரைத் திட்ட வேண்டிய சொற்களைக் கொட்டுவான். இன்று அதெல்லாம் இல்லாமல் போயிருந்தது. ஒருகாலத்தில் அவன் அமெரிக்கா வர விசா பேப்பர்களை பூர்த்தி செய்திருந்த அவருடைய கைகள் அவன் கோபத்தின் சூட்டில் நடுங்கின. இன்று அந்தக் கட்டும் அவிழ்ந்திருந்தது.

ஒவ்வொரு அடியும் கனத்து ஒலிக்க ஜலந்தரன் ஓங்கி அறைந்து கதவை திறந்து வெளியே சென்றான். வீரேந்தர் ஜலந்தரனின் பின்னால் ஓடினார். வெளியே செல்லாமல் கதவின் விளிம்பில் நின்று “ப்ருந்தைய கூப்பிடவா? அவ வந்தா…” வீரேந்தர் குரல் தயக்கத்துடன் வெளியே கேட்டது.

ஜலந்தரன் ஒரு நிமிடம் நின்றான். கண்ணை மூடினான், தன் மனைவி ப்ருந்தையை நினைத்தான். அவன் கோபம் இருமடங்கானது. அவனது இரண்டு கேஸ் ஸ்டேஷன்களில் ஒன்றில் வேலை செய்யும் ஸ்டோர் க்ளர்க் நவராத்திரி கர்பாவுக்கு என போய் விட்டு வரவில்லை. காலையில் ப்ருந்தை கிளம்பி அந்த ஷிப்ட்டுக்கு போய்விட்டாள். அவளுக்கு லீவு கொடுக்க கூடாது என இவன் சொன்ன பொழுது ப்ருந்தை கேட்கவில்லை. இன்று அனுபவிக்கின்றாள். பல்லைக் கடித்தான், கை நடுங்க ஆரம்பித்தது.

“அவளா? லூரேவில் கேஸ் ஸ்டேஷன்ல இருப்பா… என் சொல்லுக்கு மதிப்பே இல்ல…”  டூல் பாக்ஸின் கைப்பிடி அவன் கைகளில் நொறுங்கும் அளவுக்கு இறுக, படிக்கட்டின் இருப்புக் கைப்பிடியை மற்றொரு கையால் அழுத்திப் பிடித்தபடி கத்தினான்.

“சுபர்ணாவ கொஞ்ச நேரம் கூப்பிடலாமா? செமஸ்டர் லீவுல இருக்காளே…” வீரேந்தர் தயங்கினார்

கூரைக்கு போக ஏணியை நோக்கி சென்று கொண்டிருந்த ஜலந்தரன் டூல் பாக்ஸை  கீழே வைத்து விட்டு திரும்பினான். இடுப்பில் கைகளை வைத்து நின்றான்…

“காக்கா, சுபர்ணா ஊர்ல இல்ல… மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருக்கா… கல்யாணம் அடுத்த மாசம்தானே, இப்ப போக வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன்….. என் பேச்சுக்கு என்னைக்கு மதிப்புக் கொடுத்தாள். மாப்பிளைக்கும் அறிவு இல்லை. இருவருக்கும் டாக்டர் படிக்கின்றது என்பதால் தலையில் கொம்பு என நினைப்பு…. மெரிலேண்டில் இருக்கா… இந்த வாரம் வீட்ல இருக்கலாம்… என் பேச்சை யார் கேட்கிறா… ப்ருந்தைக்கிட்ட மட்டும் சொல்லிவிட்டு போயிருக்கா… நாந்தானே அப்பா…என்கிட்ட  கேட்கனுமா, இல்லியா..”  கோபத்தில் மூச்சு இறைத்தது.

வீரேந்தர் அடுத்து வாய் திறக்க யோசித்து உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜலந்தரன் அவனாகவே சொன்னான் “அடுத்து  உத்தம் பற்றி கேப்பிங்க. அவன் வீட்டில் இருக்கானா…இல்லையா என்றே தெரிவதில்லை,… பொழுதுக்கும்  வீடியோ கேம்….அவங்க அம்மா செல்லம்… நான் போன் பண்ணினா எடுக்கவே மாட்டான். இரண்டு பிள்ளைங்க இருந்தும் அவசரத்துக்கு புண்ணியம் இல்ல, உதவி இல்ல. காக்காவாலும் புண்ணியமில்லை. போங்க… எல்லாரும் போங்க… யாரும் வேண்டாம் எனக்கு. இந்த மோட்டல நான் தனியாதானே வாங்கினேன்? இனி மேலும் தனியாவே பார்த்துக்குவேன்… யாரு உதவியும் தேவையில்ல..உங்களை இருக்க சொன்னா ஊரில் எல்லாரையும் இழுத்து விடறிங்க. “  

அவன் பிபி மாத்திரை போட்டானா என வீரேந்தருக்கு கவலை வந்தது. அவன் கண்ணாலே எரிக்கும் முன் கதவை சாத்திக் கொண்டார். வெளியே தூறல் கொஞ்சம் வலுத்ததோ என அவருக்குத் தோன்றியது.

தூறல் வலுக்குமா என ஜலந்தரன் யோசித்தான். வெதர் ரிப்போர்ட்டில் மழை வேகம் பிடிக்க இன்னமும் 30 நிமிடங்கள் ஆகும் எனச் சொல்லியிருந்தது. ஒழுகும் இடம் எதுவென அவனுக்குத் தெரியும், இன்றைக்கு ஒரு ஒட்டுப் போட்டால் அது போதும். நாளை காலை வந்து முழு ரிப்பேர் செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான்.  மழை மேல் கோபம் வந்தது. இலையுதிர் காலத்தில் இப்படி ஆகி தொழிலைக் கெடுத்து விடுகின்றதே என்பது எரிச்சலைத் தந்தது. வானத்தினைப் பார்த்து கை உயர்த்திச் சலித்துக் கொண்டான். 

கூரையில் கால் வைத்ததும் மழைக் காற்று முகத்தில் அறைந்தது. வானத்தில் கருமேகங்கள் அவன் நெஞ்சில் புரளும் எண்ணங்கள் போல் திரண்டன. மழை பெருக்கெடுக்கப் போவதை உணர முடிந்தது. பிற்பகல் வானத்தில் கருமை கனத்தது. வானிலை அறிக்கையில் சொன்னது போல, இன்னும் ஒரு மணி நேரத்தில் காற்று தன் முழு வேகத்தைக் காட்டும். அதற்குள் கசிவைச் சரி செய்ய வேண்டும். வெளியே கார் கிளம்பும் ஒலிக் கேட்டது. காக்கா கிளம்புகின்றார்  என்பது அவனுக்கு பொறுமையின்மையை தந்தது. சொன்னால் கேட்கனும் என முணுமுணுத்துக் கொண்டான். 

ஜலந்தரன் டூல்பாக்ஸை இறுக்கப் பிடித்தபடி கூரையின் ஈரமான மேற்பரப்பில் ஒவ்வொரு அடியாக வைத்து கவனமாக நடந்தான். அவனே மாற்றிய கூரை. அதன் ஓவ்வொரு அங்குலமும் அவனுக்கு மனப்பாடம். அதற்குள் லீக் ஆகின்றது.  தூரத்தில் மலை மேல் இடி முழங்கியது. சற்று தள்ளி இருந்த கசிவைப் பார்த்தான். அதைச் சரி செய்யாவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் வரப்போகும் கடும் மழையில் அறை முழுவதும் நீராகி விடும். கசிவு ஏற்பட்ட இடத்தை நோக்கி சலிப்பும் , கசப்பும் நிரம்ப நகர்ந்தான். 

அடுத்த அரை மணி நேரம் போனதே தெரியவில்லை. வேலை முடிந்து எழுந்தான். அந்த நொடியில் கால் கூரையில் வழுக்கியது. சமநிலை தவறி முன்னோக்கிச் சாய்ந்தான். டூல்பாக்ஸ் கையிலிருந்து நழுவி தெறித்தது. கீழே உள்ள காங்கிரீட் தரையில் வலது கை முதலில் மோதியது, பின் இடது தோள். தலை மோதாமல் தடுக்க முயன்றதில் கழுத்து பின்னோக்கி வளைந்தது. முதுகெலும்பில் நரம்பு முறுக்கேறியது போல வலி எழும்பியது. வலது மணிக்கட்டில் ஊசி குத்துவது போன்ற வலி பரவியது.

கொஞ்சம் நேரம் உறைந்து கிடந்தான். எங்கே என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. மழைத்துளிகள் அவனை தட்டி எழுப்பின. எழ முயன்றான். உடல் மறுத்தது. கீழே விழுந்தால் எப்படி அடி விழும் என அவனுக்கு எண்ணமே இல்லை. முதுகெலும்பு வலி தாங்க முடியாமல் வந்தது. மூச்சு வாங்கியது. கால்கள் நகர மறுத்தன. அப்போதுதான் உண்மையான பயம் ஊர்ந்தது – இந்த வலி சாதாரணமானது அல்ல. எலும்பு முறிவா? முதுகெலும்பில் பாதிப்பா? மழையில் நனைந்த உடல் குளிரில் நடுங்கியது. யாரோ வந்து காப்பாற்றாவிட்டால்? காற்றின் வேகம் கூடினால்? தூரத்தில் கிடந்த போன் கண்ணில் பட்டது.

நான்கு காலில் தவழ ஆரம்பித்தான். கரடுமுரடான காங்கிரீட் தரை அவன் உள்ளங்கைகளைக் கிழித்தது. படி கண்ணில் தெரிந்தது. ஒவ்வொரு அங்குலமும் ஒரு யுகமாக நீண்டது. உடலை இழுத்துக்கொண்டு நகரும்போது, ஈரமான சட்டை உடலில் ஒட்டி, குளிர்காற்று எலும்புகளைத் துளைத்தது. வலி தாங்க முடியவில்லை. ஆனால் நகர வேண்டும்.

ஆறடி நகர்ந்திருப்பான். மூச்சு வாங்கியது. நிமிர்ந்து பார்த்தான். மோட்டலின் வரவேற்பறை டிவி காட்சிகள் போல அவன் மனதில் காட்சிகள் சுழன்றன. நாளை லோக்கல் டிவியில் ஒரு வார்த்தை சொல்வார்கள். குஜராத்தி கம்யுனிட்டி நியுஸ் லெட்டரில் ஒரு செய்தி வரும். “பாவம், கூரை மாற்ற சென்றவர் அதில் இருந்து விழுந்து…” பேச்சுகள் காதில் ஒலித்தன. அவன் பெயர் வெறும் எச்சரிக்கை கதையாக மாறும். “அவசரக்காரன்… கோபக்காரன்… எச்சரிக்கையா இருக்கணும்னு சொன்னா கேட்கல…” வதந்திகள் பரவும். கட்டிய பெருமை எல்லாம் ஒரே இரவில் கரைந்துவிடும்.

அவனுக்கு அஞ்சலி செலுத்த ஊர் முழுவதும் கூடி நிற்கும். ‘ஜலந்தரன்’ என்ற பெயர் மறைந்து, ‘பிணம்’ என்ற சொல் மட்டும் எஞ்சும். உடல் நெருப்பில் எரியும். அதன் சாம்பல் தண்ணீரில் கரையும். இந்த மழையே தன்னை கரைத்துவிடுமோ என பயம் வந்தது.  

ஒவ்வொரு அசைவும் முதுகெலும்பில் வலியைக் கூட்டியது. மனதின் எண்ணங்கள் அதை விட பாரமாக இருந்தன். எஞ்சுவது என்ன யோசித்தான். நினைவுகள் மட்டுமே எஞ்சும். அவன் கோபம், அவன் கட்டுப்பாடுகள், அவன் அதிகாரம் – எல்லாமே வெறும் சாம்பலாகப் போகின்றன. என்ன மிஞ்சும்? யார் அவனை நினைவில் வைப்பார்கள்?

மீண்டும் தவழ்ந்தான். கைகள் நடுங்கின. அவன் கண்களில் நீர் கசிந்தது – மழையா, கண்ணீரா? ப்ருந்தை நினைவுக்கு வந்தாள். காலையில் அவளிடம் கத்தியது… அவள் கண்களில் தெரிந்த வேதனை… அவள் துக்கப்படுவாளா? அல்லது… அவன் நெஞ்சு பதறியது. ‘இனி அவன் கத்த மாட்டான்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவாளா? பிள்ளைகள்… அவர்களிடம் காட்டிய கடுமை… கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கத்தி தீர்த்த தீர்ப்புகள்… அவர்கள் அழுவார்களா?

தவழ்ந்தபடியே பல்லைக் கடித்தான். கோபம் மீண்டும் எழுந்தது. எல்லாரும் அவனை விட்டு ஓடுகிறார்கள். சுபர்ணா மேரிலாண்டுக்கு… உத்தம் வீடியோ கேமுக்கு… ப்ருந்தை கேஸ் ஸ்டேஷனுக்கு… யாருக்கும் அவன் தேவையில்லை. யாருக்கும்…

இன்னும் இரண்டு அடி தள்ள வேண்டும். கைகள் தேய்ந்து ரத்தம் கசிந்தன. போனை கையில் எடுத்தான். 911 என அவசர உதவியை அழைத்தான், மறு முனையில் ஹலோ ஹலோ என குரல் கேட்டது. இவனுக்கு நினைவு மங்க ஆரம்பித்தது. கடைசியாக அவன் கண்களில் சுழலும் மேகங்கள் தெரிந்தன. அதே மேகங்கள் நாளை அவன் சிதையின் புகையாக மாறுமோ என்ற எண்ணத்துடன் கண்கள் மூடின. நினைவு இல்லாமல் ஆனான்.

நவம்பர்  2024

மேகங்கள் இன்னும் சுழல்வது போல் இருந்தது. மழை… மழை… . கூரை ஒழுகும்… ஜலந்தரனின் மனம் சுழன்றது. வனிலா கலந்த இனிய வாசனை… ப்ருந்தை. காலையில் கேஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பும் முன் தெளிக்கும் பாத் அண்ட் பாடி வொர்க்ஸின் “ஒரு ஆயிரம் விருப்பங்கள் ”  என்ற பெயருடைய பெர்ஃப்யூம். அந்த மணம் எப்போதும் அவளைச் சுற்றி நிற்கும். அவன் மூக்கில் அந்த மணம் நிறைந்தது. கனவா? நினைவா? ஆம்புலன்ஸில் இருக்கேனா?

ஆனால் உடல் அசையவில்லை. சப்தம் அவன் காதில் ஒலித்தது. தெளிவாக இல்லை.

கீழே விழுந்ததில் காது கேட்கவில்லையோ…  உடல் உணர்வே இல்லை. கை, காலெல்லாம் எங்கே என்றே தெரியவில்லை. பயமாக இருந்தது. கண்களைத் திறக்கப் பார்த்தான். அசைவே இல்லை.

ஒரு சீரான பீப் சத்தம். அது மட்டும்தான் – தொடர்ந்து, தொடர்ந்து. பிறகு தொலைவில் கதவு திறக்கும் சத்தம். காலடி ஓசைகள்.

“உத்தம், பேங்கில் பேப்பர் எல்லாம் கொடுத்திட்டியா…” ப்ருந்தையின் குரல் சோர்வுடன் ஒலித்தது.

“எல்லா பேப்பர் வேலையும் முடிச்சிட்டேன் அம்மா…”. உத்தமின் குரல்… நல்ல பையன் அப்பாவுக்கு விபத்து என்றதும் பார்க்க வந்துவிட்டான். இவனை ஏன் ப்ருந்தை பேங்குக்கு அனுப்பினாள். காலையில் வீடியோ கேம்தானே விளையாடிக் கொண்டிருந்தான்.

“மோட்டல் கையை விட்டு போயிடுச்சுடா கண்ணா…” ப்ருந்தையின் குரலில் தழுதழுப்பு இருந்தது

ஜலந்தரனுக்கு பதற்றமாக இருந்தது. அவன் உடலில் சூடு பரவியது…. ஏன் மோட்டல் கையை விட்டுப் போகின்றது, அவன் இல்லாமல் கொஞ்ச நேரம் கூட அவர்களால் பார்த்துக் கொள்ள முடியாதா…  விபத்து நடந்து ஆஸ்பதிரிக்கு செல்லும் முன் மோட்டல் ஏன் போனது.  இது ஏதாவது கெட்ட கனவா? அதுதான் கண்ணால் எதுவும் பார்க்க முடியவில்லையா எனப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டான். காக்கா என்ன செய்கின்றார் எனச் சந்தேகம் வந்தது.உணர்வுகள் மங்கின. வாசனை குறைந்தது. இழுத்துப் பிடிக்க நினைத்தான். கடினமாக இருந்தது. எங்கோ ஆழத்துக்குள் விழுவது போல இருந்தது. ஏதோ பேசுகின்றார்கள், சப்தம் தெரிகின்றது. வார்த்தைகள் புரியவில்லை. தன் ஆற்றல் அனைத்தையும் காதாக்க, மூக்காக முயன்றான். ப்ருந்தையின் வாசமும், குரலும் அவனுக்கு தேவைப்பட்டது.

“வீரேந்தர் தாதா குடும்பத்துக்கும் செட்டில் பண்ணனும்,.. அம்மா…அவரும் இல்லைல” உத்தமின் குரல் தடுமாறியது.

“செய்யனும்  கண்ணா… … டிசம்பர் முடியட்டும் செய்யலாம்…”

ஜலந்தரனின் உணர்வுகள் கூர்மையாகின.  காக்கா எங்கே எனக் கேட்கத் துடித்தான்.  ஆனால் உதடுகள் அசையவில்லை.  அவனுக்குத் தடுமாறியது. உத்தம் கல்லூரி முடித்து விட்டானா, மோட்டல் இல்லையா, காக்கா இல்லையா… எப்படி இத்தனையும் அவன் மாடியில் விழுவதற்குள் நடந்திருந்திருக்கும். இது கனவு, இது நிஜமில்லை எனச் சொல்லிக் கொண்டான். ஆனால் அவன் காதில் கேட்கும் ஓசை நிற்கவில்லை.

“இந்த மோட்டல் நம்ம குடும்பத்தோட உறுப்பினர் மாதிரி அம்மா…” உத்தம் பெருமூச்சு விட்டான். “நான் சின்ன பசங்களா இருக்கும்போது, அப்பா கோவப்படும்போதெல்லாம் நினைச்சுக்குவேன் – எல்லாத்துக்கும் இந்த மோட்டல்தான் காரணம்னு… ஏன்னா எப்போ பாத்தாலும் மோட்டல் பிரச்சனை. ரூம் லீக் ஆகுது, ஏசி வேல செய்யல, ஸ்டாஃப் வரல…”

ஒரு இடைவேளை இருந்தது. ப்ருந்தை எதோ சொன்னாள். ஜலந்தரனுக்கு புரியவில்லை. உத்தமின் குரல் துரத்தில் கேட்டது  “ஆனா இப்ப புரியுதுமா. அது மோட்டல் பிரச்சனை இல்லை. அப்பாவோட கோபம்… அது அப்பாவோட பயம். எல்லாம் பர்ஃபெக்டா இருக்கணும்னு. இல்லேன்னா எல்லாரும் போயிடுவாங்கன்னு.”

ஜலந்தரனின் மனதில் வலி எழுந்தது.

“நீ சொல்றது சரிதான்டா…” ப்ருந்தை சொன்னாள். “உன் அப்பா கோபப்பட்டது, கத்துனது எல்லாம்  குடும்பத்துக்காகத்தான். ஆனா அந்த கோபம்தான் எல்லாரையும் தள்ளி வெச்சுது. அவரோட கோபமெல்லாம் பயம்டா. நம்மள இழந்துடுவோமோன்னு பயம். அதான் எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ண பாத்தாரு…”

ஜலந்தரனுக்கு தன் மேல் கோபம் வழிந்தது. மோட்டலை குறை சொல்லும் மகன் மீதும் கோபம் வந்தது… கனவிலும் கோபம் வருமா என சந்தேகமும் வந்தது

“சார்…” திடீரென ஒரு பெண்ணின் குரல். “பல்ஸ் ரேட் அதிகமா ஏறிக்கிட்டே போகுது…”

“என்னாச்சு?” உத்தம் பதைபதைத்தான்.

“பதற்றப்படாதீங்க… நல்ல அறிகுறிதான்… ஏதோ ரெஸ்பான்ஸ் தெரியுது…”

சோப்பு குமிழிகளை ஊதி விளையாடும் பிள்ளைகள் குமிழிகளை பிடிக்க நினைப்பது போல ஜலந்தரன் தன் புலன்களை பிடிக்க நினைத்தான், அவை ஓவ்வொன்றாக உடைந்து இல்லாமல் ஆயின. நினைவிழந்தான்.

டிசம்பர் 2024

ஜலந்தரன் நெற்றியில் ப்ருந்தையும் கை தொடுகையை உணர்ந்தான். அவன் தோல் உணர்வினை அடைந்தது. உடலெலாம் ஏதேதோ சொருகியிருந்ததை போல் இருந்தது.. ஓசைகள் காதில் ஒலித்தன, கை விரலொன்று அசைக்க முடிந்தது. ப்ருந்தை கவனி எனக் கத்த நினைத்தான். முடியவில்லை. ப்ருந்தையில் விரல்கள் அவன் நெற்றியில் இருந்து அகன்றது என அவன் நெற்றி சொன்னது.  

“அம்மா… ஷெனன்டோவா ஆஸ்பத்திரில இருந்து கூப்பிடறாங்க. இன்னிக்கி நைட் ஷிப்ட்ல ஆள் வேணுமாம்..நான் போகட்டுமா” சுபர்ணாவின் குரலை ஜலந்தரன் கண்டு கொண்டான்.

“வேணாம்மா… நீ இன்னிக்கி ஓய்வு எடுத்துக்க. ரெண்டு நாளா தொடர்ந்து டபுள் ஷிப்ட்… உன் முகமே சோர்வா இருக்கு.”  அது ப்ருந்தை என ஜலந்தரன் உள்ளம் சொன்னது. கண்ணைத் திறந்து பார்க்கத் துடித்தான். திறக்க முடியவில்லை. இன்னொரு கனவோ, கடைசியில் கண்ட கனவு நியாபகம் வந்தது. உத்தம் குரல், மோட்டல் இல்லை, காக்காவிடம் கோபப்பட்டதற்குச் சாரி கூட சொல்ல முடியாமல் அவர் மறைந்தார்.

“சரி நான் ஹாஸ்பிடலுக்கு சொல்லிக்கின்றேன். நான் இங்கதானே இருக்கேன். நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு. புதுசா கேஸ் ஸ்டேஷனுக்கு வேலைக்கு வந்த ஆள் எப்படி?”

“ம்ம்… அதை விடு. நான் பாத்துக்கறேன்.  சேல்ஸ் நல்லாதான் போயிட்டு இருக்கு. புதுசா வச்ச ஆள் ஸ்மார்ட்டா இருக்காரு.” ப்ருந்தையின் குரலில் கவலைக் கூடியது.  “அப்புறம் குழந்தை வைச்சுக்கறதை நீயும், மாப்பிளையும் அப்பாவுக்காக தள்ளி போட்டுகிட்டே போறிங்க.. நினைக்கவே என்ன சொல்லறதுனு தெரியல…உனக்கு “

“அம்மா, ப்ளீஸ்…உங்களுக்கு தெரியாதா..அவசரம் இல்லைமா… அப்பா ரெக்கவர் ஆயிடுவார்.”

“இல்ல… இதை சொல்லிதான் ஆகணும். நீ இங்க இந்த சின்ன ஆஸ்பத்திரில டபுள் ஷிப்ட் போடறே… மாப்பிள்ளை மெரிலாண்ட்ல தனியா… ஜான் ஹாப்கின்ஸ்ல யாருக்கு ரெஸிடென்ஸி கிடைக்கும்.. உனக்கு கிடைச்சும் போகல. இதெல்லாம் அப்பாவுக்குதானே செய்யற?”

“நீங்களும் அப்பாவுக்காக மோட்டலை விற்க வேண்டி வந்துச்சு. கோவிட் டைம்ல…”

“அது வேற சுபர்ணா. மோட்டல வித்தது நல்லதா போச்சு. இல்லன்னா அப்பாவோட மருத்துவ செலவு… வெண்டிலேட்டர்… நர்சிங் கேர்… இதெல்லாம் எப்படி சமாளிச்சிருப்போம்…ஆனா உன் லைஃப்…” ப்ருந்தை நிறுத்தினாள். 

“”இன்னிக்கி நியூரோ டாக்டர்கிட்ட பேசினேன்… நாலு வருஷமா வெண்டிலேட்டர்ல இருக்காரு… டாக்டர் சொல்றாரு… நாம இனி வேற வழிகளை யோசிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு… உன்னை பத்தி நாம யோசிக்கனும்” – ப்ருந்தை தொடர்ந்தாள்.

ஜலந்தரனின் இதயம் பதைபதைத்தது.

“அம்மா…”

“”சுபர்ணா… நான் ரொம்ப யோசிச்சுட்டு இருக்கேன்… உன் அப்பா கண் திறந்தா  கேள்வியா கேப்பாரு – ஏன்டி சுபர்ணா குழந்தையை தள்ளிப் போடறா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வாய்ப்ப தூக்கி எறிஞ்சிட்டு இங்க வந்துட்டா …'”.” ப்ருந்தையின் குரல் தளர்ந்தது. “எனக்கு தெரியும் – அவரோட கோபம் எல்லாம் நம்ம நல்லதுக்குத்தான். ஆனா இப்போ நாம வேற ஏதாவது முடிவு எடுத்தாலும் அது அவரோட நல்லதுக்குத்தான்.… அம்மா சொன்னா கேட்கனும். நான் லாயர் கிட்ட WLSM பேப்பர் கொண்டு வர சொல்லியிருக்கேன்….”  .

சுபர்ணா அழ ஆரம்பித்தாள்.

ஜலந்தரனுக்கு உள்ளே ஏதோ உடைந்தது. ப்ருந்தை இப்படி பேசுவது கனவாக இருக்க வேண்டும். சுபர்ணா ஏன் ஆஸ்பத்திரியில் டபுள் ஷிப்ட் வேலை செய்கின்றாள்? அவள் படிப்பு முடிந்துவிட்டதா? எப்போது? மாப்பிள்ளை மெரிலாண்டிலா? கல்யாணம் எப்படி நடந்தது?  குழந்தை தள்ளிப் போகிறதா? இத்தனையும் எப்போது நடந்தது? கூரையில் இருந்து கீழே விழுந்தது இப்போதுதானே? இன்று காலைதானே ப்ருந்தை கேஸ் ஸ்டேஷனுக்கு சென்றாள்?

அவளிடம் எல்லாம் கேட்க வேண்டும் போல இருந்தது. கத்தி கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் தொண்டையில் ஏதோ அடைத்திருப்பது போல வார்த்தைகள் வெளியே வரவில்லை. தன் குரல் கூட தனக்குக் கேட்கவில்லை. உதடுகள் அசைந்தனவா என்றே தெரியவில்லை. 

மனதில் கலவரம் கூடியது. ப்ருந்தை மேலும் ஏதோ பேசினாள். சுபர்ணா அழுதாள். எதையும் தடுக்க முடியாத நிலையில் அவன் இருக்கிறான். தளர்ச்சி மேலிட்டது. கண்கள் கனத்தன. உணர்வுகள் மங்கின. நினைவுகள் கரைந்தன. 

“நாம இனி வேற வழிகளை யோசிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு” – ப்ருந்தையின் வார்த்தைகள் அவன் நெஞ்சைப் பிளந்தன. WLSM பேப்பர் – உயிர் பிரிப்பு ஆவணம். அவனுக்கா? ப்ருந்தை அவனைக் கொல்ல நினைக்கிறாளா? சுபர்ணாவின் வாழ்க்கைக்காக அவனை… பதற்றத்தில் இதயம் வேகமாக துடித்தது. 

“மேம்…”  ஒரு பெண்ணின் குரல். “அங்க பாருங்க, ஹார்ட் ரேட் அதிகமாகுது…”

“என்னாச்சு?” ப்ருந்தை குரல் தெரிந்தது. ப்ருந்தையின் ஸ்பரிசம் அவன் நெற்றியில் வந்தது.

“அவர்கிட்ட ஏதோ ரெஸ்பான்ஸ் தெரியுது.. போன மாசமும் இது நடந்துச்சு.”

மலை ஏறுபவன் கால் சறுக்கி விழுகையில் விளிம்பை பிடித்து தொங்குவதை போல ஜலந்தரன் தன் புலன்களை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான். மெல்ல வழுக்கி நழுவி நினைவில்லா நிலையில் நொறுங்கி விழுந்தான்.

ஜனவரி 2025

நாக்கு கனத்திருந்தது. தொண்டையில் ஏதோ அடைத்திருப்பது போல். வாய் திறக்க முடியவில்லை. மூச்சுக் குழாய் தொண்டையினுள் செருகப்பட்டிருந்தது. கழுத்தை அசைக்க முடியவில்லை. உடல் முழுவதும் குழாய்கள், வயர்கள். கைகால்கள் மரத்துப் போயிருந்தன. கண் திறக்க முடிந்தது. எல்லாமே அலை அலையாய் தெரிந்தது.

மங்கலான வெளிச்சம். அவன் வீட்டின் பேஸ்மென்ட்தான். ஆனால் மாற்றங்கள்… மருத்துவ உபகரணங்கள்… ஹாஸ்பிட்டல் படுக்கை…

“சார், நான் பேசுவது கேட்கின்றதா?” மரியாவின் குரல். “உங்களுக்கு நான் பேசுவது கேட்குதுனா, கண்களை சிமிட்டுங்கள்.”

கண்களை மூடி திறந்தான்.

“கொஞ்சம் இருங்க… நான் போய் டாக்டர்.சுபர்ணாவுக்கு போன் செய்திட்டு வந்திடறேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…” அந்தப் பெண் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

“குட்.. ‘சுபர்ணா டாக்டரா?’ குழப்பம். அவள் இன்னும் ரெசிடென்சி… அவன் மூளை சுழன்றது. எங்கே ப்ருந்தை? காக்கா? மோட்டலில் அன்று மாலை வர வேண்டிய கெஸ்ட்… ஆம்புலன்ஸில் இருக்கேனா.. ஆம்புலன்ஸ் ஏன் வீடு போல் இருக்கின்றது?  அவனுக்குள் பல கேள்விகள் ஒரே நேரத்தில் ஊற்று போல எழுந்தது.

உடலில் மெல்லிய நடுக்கம். மானிட்டரில் பீப் ஒலிகள் வேகமாகின. மூச்சு இறைத்தது..

அந்தப் பெண் ஒரு நோட்டு புத்தகத்துடன் ஓடி வந்தாள். பக்கங்களைப் புரட்டினாள்.

” சார், நான் மரியா… உங்க நர்ஸ். கவலைப்படாதீங்க… உங்களால இப்ப அசைய முடியாது, ஆனா அது சரியாயிடும்……” அவள் நோட்டை பார்த்துப் படிக்க ஆரம்பித்தாள்.  “உங்கள் பெயர் மிஸ்டர். ஜலந்தரன். நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டில் இருக்கிங்க. இது உங்க பேஸ்மெண்ட் பெட்ரூம். உங்களுக்கு 2020ல் ஆக்ஸிடெண்ட் ஆச்சு. மோட்டல் மேலேயிருந்து கீழே விழுந்துட்டிங்க. இப்ப 2025 ஆகுது. 4 வருடமாக உங்களுக்கு நினைவில்லை. உங்க பொண்ணு வந்துகிட்டு இருக்காங்க…கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எதுவும் ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெய்ன் ஆகாதிங்க. உங்கள் மூச்சினை கவனமாக கவனிங்க.”

மரியா அவள் நோட்டை மூடும் முன், ஜலந்தரனின் உடலை கவனித்தாள். நான்கு வருடங்களாகப் படுக்கையில் இருந்ததால் உண்டான மாற்றங்கள் தெளிவாகத் தெரிந்தன.அவனுடைய தசைகள் வாடிச் சுருங்கியிருந்தன. காலின் பின்புறம், இடுப்பின் கீழ்ப்பகுதி, முதுகின் கீழ் பகுதிகளில் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட புண்களின் தழும்புகள் தெரிந்தன. தினமும் இரண்டு முறை உடலைத் திருப்பி விடவேண்டும், ஃபிசியோதெரபி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியபடி செய்து வந்தாலும், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்ததன் விளைவுகளை தவிர்க்க முடியவில்லை.

கழுத்தில் இருந்த ட்ரேக்கியோஸ்டோமி ட்யூப் வழியாக மூச்சு விடுவதற்கு உதவும் வெண்டிலேட்டர், வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த பீடிங் ட்யூப், சிறுநீர்ப்பை கேதீட்டர் – எல்லாமே அவனது உடலின் ஒரு பகுதியாக மாறியிருந்தன. அவனது கை நரம்புகளில் ஊசி போட்டு எடுத்த இடங்களில் சிறு தழும்புகள். வலது கை மணிக்கட்டில் விழுந்த அடியின் தழும்பு இன்னும் தெரிந்தது.

ஆனால் அந்த உடல் சிதைவுகளுக்கிடையிலும், அவன் முகத்தில் இன்றைக்குச் சிறிய மலர்ச்சி தெரிந்தது. கண்களில்  உயிர் இருந்தது.

அந்த நோட்டை மூடிவிட்டு, இன்னொரு நோட்டை எடுத்துச் சுற்றியுள்ள கருவிகளில் இருந்து எண்களைக் குறிக்க ஆரம்பித்தாள். திடீரென ஜலந்தரன் உள்ளே ஒரு எரிச்சல் பொங்கியது. இந்த குழாய்கள்… இந்த வயர்கள்… இந்த கருவிகள்… எல்லாம் அவனைக் கட்டிப்போட்டிருக்கின்றன. விழுந்த அன்று கூட இவ்வளவு அசதி இல்லை. குறைந்தது அவனால் தவழ முடிந்தது. இப்போது… அவன் இதயத்துடிப்பு வேகமெடுத்தது. மானிட்டரின் பீப் ஒலிகள் கூடின.

“மிஸ்டர் ஜலந்தரன்… ப்ளீஸ்…” மரியா பதறினாள். ஆனால் அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் எரிச்சலைக் கூட்டின. எல்லாரும் அவனைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவன் கோபத்தை கூட வெளிப்படுத்த முடியாத அளவுக்குக் கட்டுப்படுத்துகிறார்கள். நான்கு வருடங்கள்… அவனது மோட்டல் என்னவானது? அவன் வாழ்க்கை என்னவானது? அவன் கட்டுப்பாடுகள் என்னவானது?

மூச்சுக்குழாய்  தொண்டையை அடைத்தது. பேச முடியவில்லை… கத்த முடியவில்லை… ஆனால் அவன் மனம் கத்தியது. கண்களில் கோபம் தெறித்தது. மானிட்டர் அலறியது. அவன் உடல் வியர்த்தது. கட்டிலில் துடிப்பதாக நினைத்தான். ஆனால் அசைய முடியவில்லை. உடல் மறுத்தது. மூளை மட்டும் வேகமாகச் சுழன்றது.  மறுபடியும் இருள் சூழ்ந்தது. நினைவுகள் மங்கின.

வீரேந்தர் காக்காவின் “பேட்டா” என்ற குரல் ஒலித்தது. ப்ருந்தையின் கண்களில் தெரிந்த வேதனை மீண்டும் தெரிந்தது. எல்லாம் மங்கலாக… மங்கலாக… மறைந்தது.

ப்ருந்தை மறையவும் புத்தி துடித்தது.  மனம் தவித்தது, ஆனால் கண் சோர்ந்து இமைகளைத் தூக்க முடியவில்லை, காதில் ஒலிகள் மங்கலாயின, தோலில் தொடு உணர்வில்லை, நாவில் சொல்லில்லை, சுவையில்லை- இந்தக் கோபம் எல்லாம் அவன் மனதில் மட்டும்தான். உடல் அசையவில்லை, குரல் வரவில்லை, கைகள் உயரவில்லை. ஆனால் மனதில் மட்டும் சீறிக்கொண்டிப்பதை கண்டான். விழுந்த போதும் இப்படித்தான் – வெளியே மழை பெய்தது, உள்ளே கோபம் பொங்கியது. இப்போது உடல் செயலிழந்து கிடக்கிறது, ஆனால் மனதில் அதே பழைய கோபம். 

அவன் அகங்காரம் அவனிடம் எப்பொழுதும்  கோபம் இப்படித்தானா என்றது. புத்தி அவனுக்குக் கோபம் வெளியே தெரிவது போல, உடலால் காட்டுவது போல அவ்வளவு பெரியதல்ல எனச் சோர்வுடன் சொன்னது. கோபத்தின் தலையை ஒரு சக்கரம் வெட்டியது. அனலின் சூடாக அவனைக் கொதிக்க வைத்த கோபம் இப்பொழுது ஒளியென அவனுக்கு அவனைக் காட்டியது. அதில்  அவன் மனதில் பெருக்கெடுத்த வெள்ளத்தினை அவன் பார்த்தான். எந்தப் புலனும் தொடாமல் மனம் பெருக்கிக் கொண்டே போனது. 

மரியாவின் முகம் மங்கலாகத் தெரிந்தது. அவள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் விழவில்லை. கண்கள் அசதியில் மூடத் தொடங்கின. மனதில் ஒரு குரல் கேட்டது – இந்தக் கோபம் எல்லாம் உள்ளிருக்கும் அனலா?  மனதின் ஆழத்தில் எங்கோ ப்ருந்தையின் “நாம எடுக்கிற முடிவும் அவரோட நல்லதுக்குத்தான்” என்ற வார்த்தை தெரிந்தது. கையை உதற எத்தனித்தான். கை நகர்ந்தது. காலை அசைத்தான், உடல் அவனுக்கு பிடிபட்டது.

“ப்ருந்தை மேம், உங்க கணவருக்கு நினைவு திரும்பி வருது! நான் டாக்டர் சுபர்ணாவுக்கு தகவல் சொல்லிட்டேன். ஆம்புலன்ஸ் வந்துகிட்டு இருக்கு. நீங்க நேரா ஆஸ்பத்திரிக்கு வர முடியுமா?””  அந்தக் குரலைக் கேட்க முடிந்தது. எழும் நேரம் என நினைத்தான்.கண்களில் நீர் வழிந்து குளிர ஜலந்தரன் கோபத்தினைப் பார்த்திருந்தான்.  அனலின் ஒளி கொண்ட அவனுடைய கோபத்துக்கு  ஒரு சாட்சியாக அவனிருந்தான்.அவன் கண்ணீர் கன்னங்களில் இறங்கியது அவனுக்கு புரிந்தது. ஒரு துளி. அது உதட்டைத் தொட்டது. இது என் கோபம் எனச் சொல்ல உதடசைக்க முயன்றான். அதன் மெல்லிய அசைவில் கண்ணீர் நாவில் பட்டது, உப்பின் சுவை இருந்தது.



Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.