உயிர்வளி

அதுவொரு காலம், அந்தக் கதைகளை சொன்னால் எதிர்காலத்தில் நம்பக் கூட மாட்டார்கள். அப்படியொரு  காலம். நெரிசலுக்கு பெயர்போன நகரச் சாலைகளின் ஓரத்தில் அன்றெல்லாம் கால்படாமல் புல் முளைக்க  ஆரம்பித்திருந்தது. அகலமான நெடுஞ்சாலைகளில் சிறுவர்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடினார்கள். 

மக்கள் ஒருவரை ஒருவர் கைவிட்டுக் கொண்டிருந்தார்கள்,  உயிருக்கு பயந்து வீட்டில் அடைத்துக்கொண்டு குடும்பத்தினரை சகித்து வாழப் பழகிக்கொண்டிருந்தார்கள். உலகெங்கும் சமூகத்தின் ஒரு பகுதியை அத்தியாவசியப் பணியாளர்கள் என்று அடையாளப்படுத்தி போற்றிப்புகழ்ந்து  அவர்களாகவே முன்வந்து தங்கள் உயிரை சுயபலியாக அர்ப்பணிக்க தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

வாகனங்களும் தொழில்களும் முடங்கி காற்று தெளிந்து தில்லி நகரலிருந்து பார்த்தால் இமயமலை கண்ணுக்கு தென்படுகிறது என்றார்கள், கங்கை நீர்கூட தெளியத்துவங்கியிருந்தது, நதியின் தூய்மையை கண்காணிக்கும் கருவிகள் இதுவரை கண்டிராத அளவுகளை காட்டின. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு கங்கையில் ஓங்கில் மீன்கள் நீந்துவதை காண முடிவதற்கு நீரில் பிராணவாயுவின் அளவு கூடியிருப்பதே காரணம் என்றார்கள் நிபுணர்கள். ஆனால் மனிதர்கள் ஆற்றிலிருந்து எடுத்து கரையிலிடப்பட்ட மீன்களைப்போல பிராணவாயுவுக்காக துடித்தபடி உயிரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். 

நச்சுக்கிருமியின் அசாத்திய பரவுதன்மையை  முதன்முதலாக அடையாளம்கண்டு உலகை எச்சரித்த மருத்துவர் அடுத்த சில நாட்களிலேயே  மூச்சுக்காற்றுக்காக ஏங்கியபடி இறநதுகொண்டிருக்கும் காணொலியை திரைகளில் உலகெங்கும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் மக்கள். 

காற்றில் பரவியிருந்த நச்சுக்கிருமி உடல் நுழைவதை தடுக்க அறைகளுக்குள் இருக்குபோது கூட முகக்கவசம் அணிய வேண்டியிருந்தது. அதையும் மீறி எப்படியோ மூச்சுக்காற்றுடன் உள்நுழைந்த கிருமி பல்கிப் பெருகியபடி கீழிறங்கியது. சுவாச நாளங்களை வீங்கச்செய்து நுரையீரலை எண்ணையில் முக்கிய பஞ்சுபோல ஆக்கி செயலிழக்க வைப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொன்னார்கள். கிருமிகள் பெருகும் முறையை கட்டுப்படுத்தும் பழைய மருந்து ஒன்று ஓரளவுக்கு பலனளிப்பதாகவும் சொல்லப்பட்டது. 

நான் அந்த நாட்களில் தங்கியிருந்த கோவை நகரத்தில் வழக்கமாக கண்காட்சிகள் நிகழும் மிகப்பெரிய திறந்தவெளி மைதானத்தை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் ஒதுக்கும் கூடமாக மாற்றியிருந்தது அரசு. பதுக்கி விற்கப்பட்ட மருந்துக்காகவும் மருத்துவமனை படுக்கைக்காகவும்  மக்கள் அங்கே அலைமோதினார்கள்,  ‘என் குழந்தை சுவாசத்துக்காக தவிக்கிறது, உயிர்வாழ துடிக்கிறது, மருந்து  கொடுங்கள்’ என்று முகவர்களிடம் கெஞ்சுகிற தந்தைகள், ‘என் தாய் வாழ்க்கையில் ஒரு நல்ல நாளை கூட பார்த்ததில்லை, இப்போதுதான் நான் வேலைக்கு போய் அவளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க முடிந்தது, எங்கள் குடும்பம் இப்போதுதான் வாழவே துவங்கியிருக்கிறது  அவள் இன்னும் சாகத்  தயாராகவில்லை, மருத்துவமனையில் இடம்கொடுங்கள்’ என்று அதிகாரிகளிடம் இறைஞ்சுகிற மகன்கள்.  இப்படி பல பேர். 

அனால் அந்த மருந்து நோய் முற்றுவதை தடுக்குமே ஒழிய நோயை குணப்படுத்தாது, தாக்கத்தையும் குறைக்காது.நோய் ஒரு கட்டத்தை கடந்துவிட்டால் எப்படியாவது உடலின் நோயெதிர்ப்பு சக்தி கிருமியை வெல்லும்வரை உயிர்விடாமல் இருக்க நோயாளிக்கு உதவுவதே மனிதனின் மொத்த மருத்துவ அறிவையும் உபயோகித்து செய்ய்யக்கூடிய ஒரே சிகிச்சை. உயிரை தக்க வைத்துக்கொள்ள மூச்செடுக்கவேண்டும், உள்மூச்சு, வெளிமூச்சு, அப்புறம் மறுபடியும்  உள்மூச்சு, வெளிமூச்சு என்று விடாமல்  உடல் நோயை வெல்லும் வரை மூச்சு இழுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான் சிகிச்சை.

எந்த நோயாளிக்கும் வெளிமூச்சு விடுவது பிரச்சினையாக இருக்கவில்லை, அது தானாகவே நிகழ்ந்தது. அதை எப்போதும் இயற்கை பார்த்துக்கொள்ளும், இந்த உலகில் மனித இனம் உருவான காலத்தில் இருந்து இங்கே வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் வெளிமூச்சோடுதான் உயிரை விட்டிருக்கிறார்கள், மாரடைப்போ, சாலைவிபத்தோ, நோய்களோ, யுத்தமோ, மரணம் எப்படி நிகழ்ந்தாலும் உள்மூச்சு இழுத்தபடி உயிர் விட்டவர் எவருமில்லை, மனிதன் மட்டுமல்ல விலங்குகளும் அப்படித்தான், அதேபோல ஒவ்வொரு உயிரும் கருப்பையிலிருந்து வெளிவந்தபின் தானாக செய்யும் முதல் செயல் உள்மூச்சுதான். வெளிமூச்சு மரணம்,  உள்மூச்சு உயிர். நடுவே துண்டு துண்டாக வாழ்க்கை. மூச்சால் இணைக்கப்பட்ட கண்ணி, அறுபட்டால் மறுகரை.

கனத்து திணறும் நுரையீரல் கொண்ட நோயாளிகள் ஒவ்வொரு மூச்சையும் உயிரைக்கொடுத்து உள்ளிழுத்தார்கள், அந்த மூச்சு அவர்கள் உயிரை அடுத்த மூச்சுவரை நீட்டித்தது. இந்த போராட்டத்தில் வாழ்வை தீர்மானிப்பதாக செயற்கை பிராணவாயு வசதிகள் இருந்தன, உயர் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு திரவ நிலையில் உலோக உருளைகளில் அடைக்கப்பட்ட பிராணவாயு  குழாய் இணைப்பு வழியே நோயாளியின் மூக்கை சுற்றி அமைக்கப்பட்ட காற்றுப்புகாத அடைப்புக்குள் ஆவி நிலையில் கசியவிடப்படும். அப்படி நாசியை சுற்றி செறியும் பிராண வாயு திறனிழந்த நுரையீரல்கள் உள்மூச்சு இழுப்பதை எளிதாக்கியது, கிருமியை எதிர்த்து போரிட இயற்கையிடமிருந்து காலத்தை கடன்வாங்கிக் கொடுத்து நோயாளி உயிர்பிழைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தியது. 

அப்படிப்பட்ட பிராணவாயு கலன் ஒன்று என்னிடம் இருந்தது, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக என் வீட்டு மாடியில் தண்ணீர்தொட்டி அடியில் பாதுகாப்பாக ஒளித்து வைத்திருந்தேன், அப்பா அம்மாவிடம் கூட சொல்லவில்லை, நான் பணியாற்றும் பன்னாட்டு நிறுவனம் நல்ல நிதிபலமும் செல்வாக்கும் வாய்ந்தது, நோய்க்காலத்தில் எல்லா ஊழியர்களுக்கும் ஒரு கலனை தருவித்திருந்தது. தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து திட்டங்கள் வகுத்துக்கொடுத்து வழிகாட்டும் சேவையை உலகளவில் செய்துவந்த ஒரு புராதனமான அமெரிக்க நிறுவனம் அது. நோய்க்காலம் ஆரம்பிப்பதற்கு ஒருவருடம் முன்வரை நியூயார்க்கில் அதன் தலைமையகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்,  பொறியியல் முடித்ததும் அமெரிக்க பல்கலையில் வணிக மேலாண்மை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அது முடித்ததும் சேர்ந்த முதல் வேலை, பதினைந்து வருடங்களாக பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி அங்கேயே இருந்தேன். என்னுடன் வேலைக்கு சேர்ந்தவர்கள் பலர் பெரிய நிறுவன தலைவர்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் வேலை மாறினால் வணிக இதழ்களில்  அறிவிப்புச் செய்தி வருமளவுக்கு பெரிய ஆளுமைகள். 

நான் அப்படியே வருடங்களை கடத்திவிட்டேன், எப்படி காலம் போனது என்று தெரியவில்லை, கனவிலிருந்து விழித்ததை போல ஒருநாள் உணர்ந்த போது வயது நாற்பதை நெருங்கிக்கொண்டிருந்தது,  திருமணம் செய்துகொள்ளவில்லை, பெரிய தனிமை உணர்வொன்றும் இல்லை, ஒருசில உறவுகள் இருந்தன, தற்காலிகமானவை மேலோட்டமானவை. மற்றபடி நியூயார்க் நகரில் எல்லாவற்றுக்கும் தீர்வுகள் இருந்தன, உறவுகள் நிரப்பாத தனிமையை தீர்க்க வேலை இருந்தது. ஆனால் நாற்பதை நெருங்கும் வயதில் ஏனோ வேடிக்கை பார்த்தது போதும் ஊர் திரும்ப வேண்டும் என்று தோன்றத்துவங்கியது, எதை வேடிக்கை பார்த்தேன் என்பதும் குழப்பமாக இருந்தது, என்னுடய வாழ்க்கையை நானே வேடிக்கை பார்ப்பதாக சில சமயம் நினைத்துக்கொள்வேன். 

நிறுவனம் இந்தியாவில் கிளையை ஆரம்பிப்பது அறிந்ததும் விருப்பை  தெரிவித்து வேலையை இடம் மாற்றிக்கொண்டேன்,  டெல்லியில் தான் அலுவலகம். இங்கே வந்ததுமே ஒன்று தெளிவாகியது, இந்திய நிறுவனங்கள் எல்லாமே பெயரளவில் தான்  கார்ப்பரேட் என்று சொல்லிக்கொண்டன, எவ்வளவு பெரிதானாலும் அவை என்றுமே குடும்ப வியாபாரங்கள் தான், அந்த குடும்பத்தில் செல்வாக்கு உள்ளவர் சொல்வது தான் நிறுவனம் முழுக்க கடைபிடிக்கப்படும். திறமை இரணடாம் பட்சம் தான், குடும்பத்துடனான நெருக்கமும் விசுவாசமும் தான் முதல் தகுதி. 

ஆனால் உண்மையாகவே திறமையானவர்களால் நிர்வகிக்கப்படும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டியிட அவை  முனைப்பு கொண்டிருந்தன, என் நிறுவனம் அதை பயன்படுத்திக்கொண்டது, உண்மையிலேயே அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை நாங்கள் சொல்வது அரிது, அவர்கள் எங்கள் சேவைக்காக எவ்வளவு செலவழிக்க தயாராக இருக்கிறார்கள் எதையெல்லாம் ஏற்கனவே  செய்ய மனதளவில் தயாராக இருக்கிறார்கள் என்கிற விவரங்களை எப்படியோ அறிந்துகொண்டு அதற்கான சேவைகளையும்  ஆலோசனைகளையும்  திட்டங்களையும் கார்ப்பரேட் மொழியில் உருவாக்கி அளிப்போம், எப்படியோ ஓடிக்கொண்டிருக்கிறது.

நிறுவனத்துக்கு நல்ல தொடர்புகள் இருந்தன, நோய்க்காலம்  ஆரம்பித்ததுமே அது உருவாக்கப்போகும் சந்தை மாற்றங்களை அறியவேண்டி தகவல்களை திரட்டி உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினோம், பிராணவாயு தேவையும் தட்டுப்பாடும் வரப்போகிறது என முன்பே தெரிந்துவிட்டது, ஒரு உற்பத்தியாளருடன் உடன்படிக்கை செய்துகொண்டு எல்லா ஊழியர்களுக்கும் ஒரு பிராணவாயுக் கலனை  தருவித்தது என் நிறுவனம், நான் எனக்கான கலனை கோவையில் என் பெற்றோர் வசிக்கும் இந்த வீட்டு முகவரிக்கு சேர்ப்பிக்குமாறு ஏற்பாடுகள் செய்துவிட்டு டெல்லியிலிருந்து விமானம் பிடித்து இங்கே வந்து சேர்ந்தேன். 

நான் வளர்ந்த வீடுதான், ஆனால் இப்போது அந்நியமாக இருந்தது, பங்காருநாயக்கன் பாளையம் இன்று வீடுகள் பெருகி கிட்டத்தட்ட நகர எல்லைக்குள் வந்துவிட்டது, ஆனால் நான் பள்ளி படிக்கும் காலத்தில் அது புறநகர் எல்லையை தாண்டி இருந்த ஒரு சிற்றுர், அன்று மாடியில் ஏறி நின்றால் மேற்கு தொடர்ச்சி மலை தெரியும், நகரின் மையத்திலிருந்து நான்கே நான்கு பேருந்துகள் தான்,  அப்பா வேலை செய்த மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக ஊருக்கு வெளியே இருந்த நிலத்தை வாங்கி சாலைகள் பூங்கா என்று மனைபிரித்து உருவாக்கிய குடியிருப்பு, அகலமான உள் சாலைகள், இடைவெளி விட்டு கட்டப்பட்ட வீடுகள்.

காலனியின் கிழக்கு புறம் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகே காலனி நோக்கி பிரியும் கிளைச்சாலையை ஒட்டி பூங்காவுக்காக விடப்பட்ட இடம் கிரிக்கெட் மைதானமாக மாறி இன்றும் அப்படியே கிடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் அன்று ஒரு மளிகைக்கடையும்  பேக்கரியும்  இருந்தது இன்று அது சிறிய வணிக வளாகமாக மாறி அதன் முன் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. காலனியை தாண்டி இருக்கும் பழைய ஊர் அப்படியே தான் இருக்கிறது, ஊர் மத்தியில் ஒரு பழைய பெருமாள் கோவில், அதை ஒட்டி போகும் நீலம் கலந்து சுண்ணாம்படித்த ஓட்டு வீடுகள் நிறைந்த ஊரின் மையத்தெரு, அதைத் தாண்டிப் போனால் ஊரின் ஓரத்தில் மேற்குப் பகுதியில் எப்போதுமே நீர் காணாத ஓடை, பன்றிகள் உழலும் அந்த ஓடையை ஒட்டி கொச்சை தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிற வளவு என்று சொல்லப்படும் இரண்டு சேரித்  தெருக்கள். அங்கே எந்த மாற்றமும் இல்லை. 

எங்கள் குடியிருப்பில்  இன்று ஒரு மனை கூட காலி இல்லை, ஒற்றை அடுக்காக இருந்த பல வீடுகள் மூன்றடுக்கு வீடுகளாக மாறிவிட்டன, இவ்வளவு வருடங்கள் கழித்து பார்க்கும் போது தெருக்கள் குறுகி விட்டதாக ஒரு மாயை உருவானாலும் ஓரிரு நாட்களிலேயே அது மறைந்து பழைய அகலமான தெருக்களை காணத்துவங்கினேன், ஆனால் தெருக்கள் மேடுதட்டி வீடுகள் கீழிறங்கி இருப்பது மாயை அல்ல, கண்களால் நன்றாகவே அளவிட முடிந்தது. காலனிக்கு வரும் சாலையிலிருந்து பிரியும் இரண்டாவது குறுக்கு தெருவில் இடதுபுறம் நான்காவது வீடு எங்களுடையது, அடர் பழுப்பு பார்டர் அடித்த சந்தன நிற சுவர்கள் கொண்ட ஒற்றைநிலை வீடு, கட்டி முடித்தபின் எந்த மாற்றத்தையும் சந்திக்காத வீட்டின் முன்னே வெளிர் நீல நிற ஃபைபர் பந்தலுக்கு கீழே என்னுடைய யமாஹாவும் அப்பாவின் மாருதியும் நிற்கும், இரண்டுமே மிகப் பழைய வாகனங்கள், கடைசியாக உபயோகித்து வருடங்கள் இருக்கும், ஜடம் போல காலத்தில் உறைந்து நிற்கிறது, வாகனங்கள் மட்டுமல்ல, எங்கள் வீட்டிலுள்ள எல்லாமே அப்படித்தான், பொதுவாகவே  எங்கள் வீடு எப்போதுமே இரண்டு நாட்கள் முன் மரணம் நிகழ்ந்த வீட்டைப் போல இருக்கும், ஏன் என்று தெரியவில்லை. உயிர் நிகழ்வதன் ஒரே சான்றாக கருப்பு நிற இரும்பு காம்பவுண்டு கேட்டின் இருபுறமும் நன்றாக பொசபொசவென பசுமையாக வளர்ந்து சாலையெங்கும்  நிழல் பரத்தி இலை உதிர்க்கும் இரண்டு வேப்பமரங்கள் மட்டும் இருக்கின்றன.  

எதிர்ப்புறம் மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் சண்முகம் மாமாவின் வீட்டுக்கு வருபவர்கள் நிழலுக்காக அந்த மரங்களின் முன் வாகனங்களை நிறுத்திக்கொள்வார்கள். அவர்கள் வீடு எப்போதுமே இரண்டு நாளில் கல்யாணம் நடக்கபோகிற விசேஷ வீடு போல ஆட்களும் பேச்சுச்சத்தமும் குழந்தைகளின் அழுகையொலியும்  சிரிப்புமாக நிறைந்து கிடைக்கும். அங்கு வருபவர்களின்  வாகனங்கள் எப்போதும் எங்கள் தெருவை நிறைத்து நிற்பது அப்பாவுக்கு பிடிக்காது, காலையில் வாக்கிங் முடிந்து வரும்போது தவறாமல் “ஒரு மனுஷன் தெருவில நடக்க முடியுதா? மொத்தத் தெருவையும்  பார்க்கிங் ஏரியாவா மாத்திட்டாங்க” என்கிற மாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டே செருப்பை கழற்றிவிட்டு கதவை திறந்து உள்ளே  வருவதை நான் அங்கே இருந்த  முன்று  மாதங்களில் அநேகமாக தினந்தோறும் பார்த்தேன்.

காரணம் இல்லாமலில்லை, சண்முகம் மாமா அம்மாவுடைய ஊர்க்காரர், சொல்லப்போனால் தூரத்து சொந்தம் கூட, தம்பி முறை வரும். அப்பா கள்ளக்குறிச்சியிலிருந்து அம்மாவை கல்யாணம் செய்து வெள்ளை நிற அம்பாசிடர் காரில் கோவைக்கு அழைத்து வரும்போது பின்னாலேயே சீர் சாமான்கள் ஏற்றி வந்த டெம்போவில் இவரும் வந்திருக்கிறார், இரண்டுநாள் விமரிசையாக நடந்த கல்யாணத்தில் பந்தல் போடுவதிலிருந்து, கல்யாண சமையலுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி ஸ்டார் ரூமில் பூட்டி பாதுகாப்பாக வைத்து தேவைப்படும்போது அளந்து எடுத்து கொடுப்பதில் இருந்து, பந்தி விளம்புவது, எச்சில் இலையை எடுத்து சாக்கில் போட்டு மாட்டுக்கு தீவனமாக கொடுப்பது வரை எல்லா கல்யாண வேலைகளையும் செய்திருக்கிறார், “எனக்கு மகன் இல்லாத குறையை தீர்த்துட்ட, உங்க அக்காவை நீயே மாப்பிளை வீட்டுல விட்டுட்டு வா” என்று தாத்தா சொன்ன சொல்லுக்காக  ஒரு ஜோடி மாற்றுத்துணியை மஞ்சள் பையில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார், முழு லோடு ஏற்றிய டெம்போவை மூடியிருந்த தார்பாய் மேல் கையை மடித்து தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்து, இரவுமுழுக்க தூங்கி கல்யாண வேலையின் களைப்பை போக்கியபடி ஒரு அதிகாலையில் கோவை வந்து இறங்கியிருக்கிறார். 

அப்பா அப்போது மின்சாரவாரியதுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்துவந்தார், பச்சை பூஞ்சை படிந்த இளமஞ்சள் சாயம் பூசப்பட்ட பழைய அடுக்கு மாடி கட்டிடம், இரண்டாவது தளத்தில் சிறிய வரவேற்பரையும் சமையலறையும் கொண்ட ஒற்றை படுக்கையறை வீடு, இவ்வளவு சிறிய வீடு என்பதில் அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தம் தான். 

கண்ணாடிபோட்ட தீர்க்கமான கண்களும் கூர்மையான நாசியும் கொண்ட அப்பா ஆறடி உயரம் என்றாலும் உடல் வேலைக்கு பழகினவர் அல்ல,  வெயில்படாத வெண்ணிற உடல் அவருக்கு. கரிய நிறம் கொண்ட சண்முகம் மாமா அப்பாவை விட அரையடி உயரம் குறைவு, அடர்ந்த தலைமுடியும், ஒட்டிய கன்னமும் முறுக்கின ஐயனார் மீசையும் உலோகத்தில் வார்த்தெடுத்தது போன்ற கை கால்களுடன் உறுதியான உடல் அவருக்கு,  கனமான பச்சை நிற கோத்ரெஜ் இரும்பு அலமாரி, கட்டில் முதற்கொண்டு எல்லா பொருட்களையும் அவரே மேல் தளத்துக்கு ஏற்றி அம்மா விரும்பிய இடத்தில் வைத்து,  வீட்டை கழுவி சுத்தம் செய்து, அம்மா எதிர்பார்க்கும் தரத்திற்கு மேம்படுத்தி, அப்பாவுடைய கனம் கனமான புத்தகங்கள், துணிகள், தலையணை, போர்வை போன்றவற்றை ஒழுங்காக அதனிடத்தில் வைத்து, ஒரு மாதிரி வீட்டை அமைத்துக்கொடுக்க இரண்டு நாட்கள் ஆனது. இரண்டு  நாட்களில் அந்த குடியிருப்பில் உள்ள எல்லாருக்கும் அறிமுகமாகி விட்டார், இத்தனைக்கும் மூன்று வருடமாக அங்கே குடியிருந்த  அப்பாவை யாருக்கும் தெரியாது.

எல்லா வேலைகளும் முடிந்து ஊருக்கு கிளம்பும்போது வெளிவாசல் அருகே வைத்து அவரை தடுத்து நிறுத்தி,  ‘ஊரில் என்ன வேலை?’  என்று அப்பா கேட்டிருக்கிறார். வேலை என்ன பெரிய வேலை?, விவசாய கூலி வேலை தான், ஆனால் அது வருடம் முழுக்க இருக்காது  மற்ற நாட்களில் கோயில் மாடு மாதிரி ஊரில் உள்ள வீடுகளில் தானாக போய் ஏதாவது வேலையை செய்ய வேண்டியது, ஏதாவது தருவார்கள், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு உபயோகமாக இருந்த சந்தோசஷம் மிச்சம் என்று தன்  வாழ்முறையை சுருக்கமாக சொன்னார் சண்முகம் மாமா. 

அப்பா அவர் முகத்தை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்தபடி  “ஒரு வீட்டில் வேலை செய்து கூலியா ஒண்ணும் கொடுக்கலேன்னா, திரும்ப அவங்க கூப்பிடும்போது வேலை செய்ய போவீங்களா?” என்று கேட்டார், அந்த கேள்வி புரியாமல் பதிலின்றி மெளனமாக சில நொடிகள் நின்றார் மாமா.

“அதுதான் மத்தவங்களுக்கு உபயோகமா இருந்த சந்தோஷம் மிச்சமிருக்குமே உங்களுக்கு, கூலி கிடைக்காத இடத்துக்கு மறுபடி வேலை செய்து கொடுக்க போவீங்களா?” என்று கொஞ்சம் நிதானமாக, மந்தபுத்தி கொண்டவரிடம் சிக்கலான விஷயத்தை விளக்கும் பேச்சுத்தொனியில், குனிந்து மாமாவின் முகத்தை நேரடியாக பார்த்து கேட்டார் அப்பா. 

“அப்படியில்லை, கூலியா கொடுக்கலைன்னாலும், எப்போவாவது சாப்பாடு நேரத்துக்கு அவங்க வீட்டுல போய் நின்னா சோறு போடுவாங்க”  

“அதுவும் கொடுக்கலேன்னா?  அப்படிப்பட்ட ஒருத்தங்க வீட்டுக்கு மறுபடி வேலை செய்து கொடுக்க போவீங்களா?” என்ற அப்பாவின் கேள்விக்கு புலி முன் அகப்பட்ட மான் போல திகைத்து நின்ற சண்முகம் மாமாவை காப்பாற்றுவதுபோல தற்செயலாக உள்ளறையிலிருந்து வெளிவாசலுக்கு வந்த அம்மா, “சண்முகத்துக்கு உங்க ஆபீஸ்ல ஏதாவது  வேலை கிடைக்குமா?” என்று புது மனைவியின் கொஞ்சல் தொனியுடன் கேட்டபோது,  “பாக்கலாம்” என்று சொல்லிவைத்தார் அப்பா.

மாமா ஊருக்கு போய் அவருடைய மிச்ச துணிகளையும், பத்தாம்  வகுப்பு ஃபெயில் ஆன சான்றிதழையும் எடுத்துக்கொண்டு இரண்டே நாளில் கோவை திரும்பினார். கல்யாணமாகி பிறந்த ஊரை விட்டு வந்த அம்மாவுக்கு துணையாக ஊர்வாசனையை வீடு முழுக்க நிறைத்தபடி அவர்களுடனேயே சில மாதங்கள் தங்கிவிட்டார், இரவில் வரவேற்பறையில் சோபா அருகே மின்விசிறியின் கீழிருந்த டீபாயை நகர்த்திவைத்து இடம் உருவாக்கி பாய்விரித்து படுத்துக்கொள்வார், அவருக்கு குடி சிகரெட் புகையிலை மாதிரி எந்த பழக்கங்களும் இல்லை,  சில வாரங்களுக்கு ஒருமுறை செகண்ட் ஷோ படம் பார்க்க போவதைத்தவிர, பெரும்பாலும் பழைய எம்ஜிஆர் படங்கள், கோவைக்கு வெளியே ஏதாவது பழைய சிறிய தியட்டேர்களில் ஓடும் அவற்றை தேடித்தேடி சைக்கிளில் போய் பார்ப்பார். போகும் முன் பாய் தலையணையை அவரே எடுத்து கதவுக்கு வெளியே வைத்துவிடுவார், நள்ளிரவில் வந்து கதவை தட்டாமல் வாசல்முன் இருக்கும் இடைவழியில் படுத்துக்கொள்வார். அவர் தங்கியிருந்த வரை எல்லா வேலைகளும் அவரே செய்தார், அம்மாவுக்கு சமையல் தெரியாது, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தம் பண்ண பிடிக்காது, எல்லாவற்றையும் சண்முகம் மாமா செய்தார், மெல்ல மெல்ல அம்மா அவரிடமிருந்து சமையல் கற்றுக்கொண்டார். குடியிருப்பில் எல்லா வீட்டுக்குள்ளும் அனுமதி இல்லாமலே புகுந்து வெளியேறும் அளவுக்கு எல்லாரிடமும் நன்றாக பழகிவிட்டார், கட்டிடத்தின் தரைதளத்தின் முன்புறம் வெற்றுத்தரையாக புல்முளைத்துக் கிடந்த முற்றத்தில் ஒரு பகுதியை வெட்டித்  திருத்தி செம்பருத்தியும் ரோஜா செடிகளும் வைத்தார்.

அப்பா உதவி  பொறியாளராக  வேலை பார்த்த மின்சார வாரியத்தில் தற்காலிக கூலி தொழிலாளியாக சண்முகம் மாமாவை வேலைக்கு சேர்த்துவிட்டார், வேலை கிடைத்த ஆறு மாதத்திலேயே ஊருக்கு போய் சொந்தத்தில் அவர் அம்மா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு வந்து தனியாக ஒண்டு குடித்தனம் என்று சொல்லப்படுகிற ஒரு சிறிய தொகுப்பு  வீட்டில் மிக சிக்கனமான குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த்தார். அம்மா வாங்கிக்கொடுத்த மண்ணெண்ணெய் ஸ்டவ், பாத்திரங்கள், இரண்டு பாய்கள், தலையணை தவிர வேறு ஏதும் இல்லை.  ஒரு கட்டில், அலமாரி கூட இல்லாத எளிய துவக்கம். மாமா தன் சொந்தக் காசில் ஒன்றரை அடி நீளமும் அகலமும் கொண்ட சட்டமிடப்பட்ட  எம்ஜியார் போட்டோவை வாங்கி முன்னறையில் பழனி முருகன் படமருகே மாட்டிக்கொண்டார். எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி அந்த வீட்டில் குடிபுகுந்த நாளன்று இங்கே அவர் வைத்த ரோஜாவும் செம்பருத்தியும்  பூத்து பொங்கியதை குடியிருப்பில் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். 

அம்மா இரவு உறங்கப்போகும்போது கட்டிலில் அருகே படுத்துக்கொண்டு அப்பாவிடம் அதைபற்றி வியப்புடன் சொன்னபோது, படித்துக்கொண்டிருக்கிற கனமான புத்தகத்திலிருந்து பார்வையை நகர்த்தாமல்,  “ஊர்ல அவங்க வீட்டிலயும் இப்படி பூச்செடியெல்லாம் வைச்சிருக்காரா சண்முகம்?” என்று கேட்டார்.  

சில நொடிகள் கழிந்து அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட அம்மா “உங்களுக்கு ஏன் இப்படி நாக்கில் எச்சிலுக்கு பதிலா விஷம் ஊறுது? இவ்வளவு புஸ்தகம் படிச்சு இதுதான் பலனா? ஊர்ல நிறைய மரம் செடி கொடி இருக்கு, தனியா பூச்செடி எதுவும் வைக்க வேண்டாம், இங்கே சிட்டியில் தான் அந்த தேவை இருக்கு” என்று சொல்லியபடி அப்பாவுக்கு முதுகை காட்டி படுத்துக்கொண்டார். அப்பா எந்த சலனமும் இல்லாமல் புத்தக வாசிப்பை தொடர்ந்தார்.

அவர் எப்போதும் இப்படியில்லை, இளமையில் என்னுடன் கனிவுடன் தான் இருந்தார், என்னுடைய முதல் நினைவுகளின் ஒன்று காலை வேளையில் அப்பா என்னை எடுத்துக்கொண்டு முற்றத்தில் பூத்துநிற்கும் செடிகள் அருகே மெல்ல எந்த நோக்கமும் இல்லாமல் நடைபயில்வது, பலவீனமான முள் போன்ற அவருடைய தாடைமயிர் சில சமயம் என் முகத்தில் உரசும், பெரும்பாலான  நாட்கள் மெளனமாக ஒருவரையொருவர் உடலால் உணர்ந்தபடி இருப்போம், அப்பா என்னை ஏந்தியபடி மெல்ல நடப்பார், சில நாட்கள் பெரிதாக பொருளற்ற சில சொற்கள் ஏதாவது பேசிக்கொள்வோம் என்று கலங்கலான நினைவு. நான் கையை நீட்டி பூக்களை சுட்டிக்காட்டி “ரத்தம்” என்பேன். அவர் “இல்லை, சிவப்பு, இதான் செம்பருத்திப்பூ”  என்பார்.

கிட்டத்தட்ட நான் ஐந்தாம் வகுப்பு வரும் வரை எனக்கு இரவில் கதைகள் சொல்வார், சனிக்கிழமை இரவு கதைகள் நீளமாக இருக்கும். பெரும்பாலும் அவர் பார்த்த ஆங்கிலப்படங்கள், படித்த நாவல்கள் போன்றவை. வளர்ந்து பெரிதான பிறகு அவரிடமிருந்து கேட்ட கதைகளின் மூலத்தை படித்து ஏமாந்ததுண்டு, அப்பா கற்பனையால் சேர்த்த விஷயங்கள் மூலத்தை விட பிரம்மாண்டமாக இருந்தன, இராமாயணத்தை மட்டும் ஒரு மாதம் முழுக்க சொன்னார், அவர் கதையில் ராவணனுக்கு ஒரு தலைதான் ஆனால் பத்து குணங்களையும் மிக விரிவாக சம்பவங்கள் சேர்த்து சொன்னது நினைவிருக்கிறது. கிறித்துவ பைபிள், யூதர்களின் மூல நூல்களிலிருந்தெல்லாம்  கதைகள் சொல்வார். என் வயதுக்காக எதையும் தவிர்ப்பதில்லை. குறைத்து சொல்வதும் இல்லை.

ஆனால் இந்த கதைகள் சொல்வது எல்லாமே நான் ஐந்தாம் வகுப்பு வரும்வரை தான், அந்த வருடம் ஏதோ முக்கியமான ஒன்று நிகழ்ந்தது என்று இப்போது தோன்றுகிறது, பல வருடங்களாக ஊருக்கு வெளியே வெள்ளிங்கிரி மலை அருகே உள்ள ஒரு சிறிய மடத்துக்கு மாதத்துக்கொருமுறை அப்பா அவருடைய அலுவலக நண்பர்கள் இரண்டுபேருடன் போய்வரும் வழக்கம் இருந்தது,  அங்கே ஒரு குரு இருந்ததாகவும் இவர்கள் மூவரும் அவரிடம் ஏதோ கற்றுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. பொதுவாக சனிக்கிழமை காலை இரு நண்பர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து அப்படியே மூன்று பேராக கிளம்பிப்போய் ஞாயிறு மாலை ஒன்றாகவே திரும்புவார்கள். எங்கள் வீட்டில் ஓயாத பேச்சுடன் இரவு உணவை முடித்துவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பி போவார்கள், பொதுவாக யாரிடமும் அதிகம் பேசாத அப்பா அவர்கள் இருவரையும் கண்ட முதல் கணம் முதல் பிரியும் வரை ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். 

யாரையும் மதிக்காத யாரையும் கேள்விகள் இல்லாமல் எதிர்கொள்ளாத அப்பா நெற்றிநிறைய விபூதியும் ருத்ரட்சமும் அணிந்த அந்த துறவியின் படத்தை வீட்டில் மாட்டியிருந்தார், அவர் பெயரை சொல்லும்போது எப்போதும் இல்லாத ஒரு பணிவு அவரிடம் வரும். கால் மேல் கால் போட்டு பேசிக்கொண்டிருப்பவர் அவர் பெயரைச்சொல்லும்போது தன்னியல்பாகவே கால்களை விடுவித்து நேராக  வைத்துக்கொள்வார்.  

அந்த சனிக்கிழமை நன்றாக நினைவிருக்கிறது,  வழக்கம்போல காலையில் நண்பர்களுடன் கிளம்பிச்சென்றவர் கலைந்த  தலையுடன் வழக்கத்துக்கு மாறாக அன்றிரவே திரும்பினார்,  நான் சோபாவில் அமர்ந்து இந்திப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியே செருப்பை கழட்டி விட்டுவிட்டு மெளனமாக வந்து சோபாவில் அமர்ந்து தலையை பின்னுக்கு சாய்த்துக்கொண்டார். மேலே குத்திட்டு நின்ற கண்களிலிருந்து கோடுபோல ஒரு சொட்டு நீர் கீழிறங்கியது, நான் டீவியை அணைத்துவிட்டு சமையலறையில் இருந்த அம்மாவிடம் சொன்னேன். அம்மா எவ்வளவு கேட்டும் ஒன்றும் சொல்லவில்லை. 

ஞாயிறு மாலை அவர் நண்பர்கள் வழக்கமாக திரும்பும் நேரத்துக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள், என்ன நடந்தது என்று எனக்கும் அம்மாவுக்கும் புரியவில்லை, அன்று போனவுடனேயே எந்த காரணமும் இன்றி அப்பாவை அந்த குரு வெளியே நிற்க சொன்னதாகவும், மதிய உணவுக்கு அப்புறம் அவரை அழைத்து அருகே அமரவைத்து இனிமேல் எக்காரணம் கொண்டும் இங்கே வரக்கூடாது என கோபமில்லாமல் ஆனால் தீர்மானமாக இறுதியாக சொல்லி அப்பா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் என்று அறிந்துகொண்டோம். அப்பா எவ்வளவு காரணம் கேட்டும் ஒன்றும் சொல்லப்படவில்லை. அதன்பின் அவர் இன்னும் ஒடுங்கினார், சொல்லில் இன்னும் நஞ்சுகொண்டவராக ஆனார்.

மின்வாரிய வேலையில் சேர்ந்த சண்முகம் மாமா வளமான மண்ணில் விழுந்த உயிர்விசை கொண்ட விதை போல செழித்து வளர்ந்தார், வழக்கம்போல அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லாரிடமும் விரைவிலேயே நட்பை  ஏற்படுத்திக்கொண்டார். புதிய மின்கம்பங்கள் நட்டு அதன்மேல் கடத்துகம்பிகளை பொருத்தி தொங்கவிட்டு நகரின் மின்விநியோக பரப்பை விரிவாக்குவது, ஏற்கனவே அமைக்கப்பட்ட விநியோக கட்டமைப்பை பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யும் அணியின் கடைநிலை ஊழியர், ஆனால் தன்  பொறுப்புக்கு மேலும் வேலைகளை எடுத்துபோட்டுக்கொண்டு செய்தார், மழைபெய்து கம்பிகள் அறுபட்டு மின்தடை உருவாகும் நாட்களில் முதல் ஆளாக சம்பவ இடத்துக்கு சென்று நிற்பார், கடைசி ஆளாக கிளம்புவார். 

தலைமை பொறியாளர் வீட்டில் தோட்டம் அமைக்கவேண்டும் என்ற தேவையை அறிந்துகொண்டு அவராகவே போய் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார், அவர் மனைவி வழியே அந்த விஷயம் பரவி அலுவலகத்தில் எல்லா அதிகாரிகள் வீட்டிலும் தோட்டவேலை மராமத்து வேலை இருந்தால் மனைவிகள் “சண்முகத்தை கொஞ்சம் வரச்சொல்றிங்களா?” என்று கணவரிடம் கேட்கும் வழக்கம் உருவாகியது, தோட்ட வேலையில்  துவங்கியது கார் ஷெட் அமைப்பது காம்பவுண்டு சுவர் கட்டுவது என்று வளர்ந்து உதவி பொறியாளர்  ஒருவரின் வீட்டில் மேல் தளத்தில் படுக்கை அறைகள் கட்டி வீட்டை விரிவாக்கி கட்டுவது மாதிரி பெரிய வேலைகளை சண்முகம் மாமாவே காண்ட்ராக்ட் எடுத்து செய்யும் வரை வந்து நின்றது. மின்வாரியர் ஊழியர் நல சங்கம் ஒன்று இருந்தது, அதில் உறுப்பினராக சேரமுடியாது என்றாலும்கூட  அங்கிருக்கும் வேலைகளையும் இழுத்து போட்டுகொண்டு செய்வார்.

அவர் தனி வீடெடுத்து மனைவியுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்து ஒருவருடத்தில் அலுவலகத்தில் பியூன் வேலை காலியான போது மொத்த அலுவலகமும் சேர்ந்து எப்படியோ விதிகளை வளைத்து அவருக்கு அந்த வேலையை வாங்கிக்கொடுத்தது. எந்த விதியை எப்படி வளைத்தார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டது. வேலை நிரந்தரமானதும் சம்பளப்பணத்தில் சீட்டுக்கட்ட ஆரம்பித்த சண்முகம் மாமா ஆறு மாதத்திலேயே சீட்டுத்தொகையை ஏலம் விளித்து ஒரு பழைய மெட்டடோர் டெம்போவை தரை விலைக்கு வாங்கினார், பராமரிப்பு வேலை செய்து ஒரு ட்ரைவரை வைத்து வாடகைக்கு விட்டார், பச்சை நிற உடலும் மஞ்சள் வண்ண முன்புறமும் கொண்ட அந்த வண்டியில் முகப்பு கண்ணாடியின் மேல்பாகத்தில்  தங்க நிறதிலும் பின்புறம் கருப்பு பம்பர் மேல் சிவப்பு நிறத்திலும்  “தர்மம் தலை காக்கும்” என எழுதியிருக்கும். 

அந்த வண்டியில் வரும் வருமானத்தை அப்படியே சீட்டுகட்டி அடுத்த வண்டிக்காக சேமிக்க துவங்கினார்.சிறிய கட்டிட வேலைகளை காண்ட்ராக்ட் எடுப்பதையும்  விட்டுவிடவில்லை.இதையெல்லாம் அவர் அலுவலகத்தில் பார்க்கும் பியூன் வேலைக்கு வெளியே செய்துகொண்டிருந்தார். அலுவலகத்தில் வேலை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அப்படி பியூனாக அவர் செய்யவேண்டிய வேலைகள் இருந்தாலும் யாரும் அதை சண்முகம் மாமாவே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை, அவர்களே செய்துவிடுவார்கள், அனால் எங்கேயோ  எப்படியோ அந்த சலுகைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் சண்முகம் மாமாவால் ஈடு  செய்யப்பட்டிருக்கும். 

என்னுடைய முதல் நினைவுகள் துவங்கும் போது அவருக்கு மூன்று வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன, ஒன்றிரண்டு சிறிய கட்டிட வேலைகளும் பொறுப்பெடுத்து நடத்திக்கொண்டிருந்தார்,  எங்கள் வீட்டுக்கு வருவதை எப்போதும் எந்த நிலையிலும் அவர் நிறுத்திவிடவில்லை, பெரும்பாலும் அப்பா இல்லாத மாலை வேளைகளில் தான் வருவார், டெம்போவில் இருந்து இறங்கி டிரைவரிடம் கட்டளையிடும் தொனியில் அடுத்து நடக்கவேண்டிய வேலைகளுக்கான அறிவுறுத்தல்களை சொல்லிவிட்டு, முகம் மாறி சிரிப்புடன் படியேறி எங்கள் வீட்டு வாசலை அடைந்ததும் “அக்கா” என சத்தமாக அழைத்தபடி உள்ளே வருவார்,  வந்ததும் அடுக்களைக்குள் நுழைந்து மூடி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களை திறந்து அம்மா சமைத்த உணவு வகைகளை முகர்ந்து பார்ப்பார், “சேனைக்கிழங்கு வறுவலா?, வாசனை அட்டகாசமா இருக்கு”  என்கிற மாதிரி ஏதாவது கேள்வி வரும்,அம்மாவிடம் பேசிக்கொண்டே  முன்னறைக்கு வந்து சோபாவில் மேல் போடப்பட்டிருக்கும் உறைகளை சீர் செய்வார், அதன் எதிரில் விலகிக்கிடக்கும்  நாற்காலிகளை சரியான இடத்திற்கு நகர்த்தி வைப்பார், அம்மாவுடன் ஏதாவது பேசிக்கொண்டே டீபாயிலும் சோபாவிலும் கிடக்கும் அப்பாவின் புத்தகங்களை எடுத்து அலமாரியில் அடுக்கி வைப்பார், ஜன்னல் திரைசீலைகளை இழுத்தும் ஒதுக்கியும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இப்படி சில நிமிடங்களில் அவர் இன்னும் இந்த வீட்டிலேயே வாழ்வது போன்ற ஒரு உணர்வை உருவாக்கிவிடுவார். 

இதெல்லாம் அப்பா இல்லாத நாட்களில் தான், அவர் இருக்கிற நாட்களில் வந்தால் வழக்கமாக சோபாவில் அமர்ந்திருக்கும் அப்பாவின் முன் நாற்காலியின் நுனியில் அமர்ந்து முழங்கால் மேல் கைகளை ஊன்றியபடி ஒரு செயற்கையான சிறு உரையாடல் நிகழும். அவர் அப்பாவின் கண்களை சந்திப்பதை தவிர்த்தார். “வண்டி ஓட்டமெல்லாம் எப்படி சண்முகம்?” என்று கேட்பார் அப்பா,  “தீபாவளி வரை வண்டி நிக்காம ஓடிக்கிட்டிருந்தது, இப்ப கொஞ்சம் சரியில்ல” என்று பதில் வரும், அலுவலக விஷயங்கள் பேசுவதை அப்பா கவனமாக தவிர்த்துவிடுவார்,  அவர் அதை பேசத்துவங்கிவிடுவாரோ என்கிற பதைப்பு சண்முகம் மாமாவிடம் இருப்பதாக தோன்றும். பெரும்பாலும் அம்மா வந்து காப்பாற்றி அடுக்களைக்கு அழைத்துசென்றுவிடுவார்.

அப்போதெல்லாம் சண்முகம் மாமா பெரும்பாலான நாட்கள் காலை பதினோரு மணிக்கு அலுவலகம் வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு, எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிவிடுவார், கட்டிட காண்ட்ராக்ட் தொழில் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது, மின்வாரிய வேலையை விட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு வருமானமும் வெளிவேலைகளின் பளுவும் அதிகரித்திருந்தது. அந்த பளுவை அவரிடம் வேலை செய்தவர்கள் பலவிதத்திலும் குறைத்தார்கள். அவருக்கு நல்ல வேலையாட்கள் அமைந்திருந்தார்கள், அமைத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும், கட்டிடவேலை திறமையை அவர் அதிகம் மதிப்பதில்லை, பழகிக்கொள்ளலாம் என்பார். வாழ்க்கையில் அடிபட்டவர்கள் கைவிடப்பட்டவர்களை அந்த தருணங்களில் கைகொடுத்து அரவணைத்து  எல்லா உதவிகளும் செய்து வேலை சொல்லிக்கொடுத்து தன்னுடன் இணைத்துக்கொள்வார், அது ஆயுள் பந்தமாக தொடரும். வேலையை அவர்களிடம் நம்பி விட்டுவிட்டு தொழிலை விரிவாக்குவதில் சண்முகம் மாமா கவனம் செலுத்தினார்.

அப்போது தான் ஊழியர்கள் எல்லோரும் கூட்டாக இடம் வாங்கி சொந்தமாக நிரந்தர குடியிருப்பை உருவாக்கும் திட்டம் உருவானது,  அன்று நகருக்குள் மின்வாரிய அலுவலகம் அருகே இருந்த அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வசதியானது தான், குழந்தைகள் பிறந்து குடும்பங்கள் பெரிதாகி வந்தன, கட்டிட பராமரிப்பு வேறு தரமிழந்து கொண்டே வந்தது, எப்படியிருந்தாலும் பணி ஓய்வுக்கு பிறகு சொந்தவீட்டுக்கு மாற வேண்டும், ஆகவே கூட்டாக ஒரு குடியிருப்பை அமைப்பது என ஊழியர் நலச்சங்கம் தீர்மானித்தது, சங்கத்தில் தலைமை பொறுப்பை வகித்தவர்கள் எல்லாருமே உயர் அதிகாரிகள் தான், ஆனால் ஊருக்கு வெளியே குடியிருப்பை அமைக்க பொருத்தமான இடங்களை தேடுவது, நில தரகர்களை கையாளுவது, ஊழியர்களை கூட்டாக அழைத்துச்சென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட வைப்பது என்கிற களப்பணிகளை சண்முகம் மாமா செய்யத்துவங்கினார், மெல்ல மெல்ல அந்த  செயல் திட்டத்தின் தவிர்க்கவியலாத அங்கமாக மாறினார், சங்க தலைவர்கள் கூடுதல் பொறுப்புகளை சண்முகம் மாமாவுக்கு கையளிக்க துவங்கினார்கள்.

கோவை நகருக்கு வெளியே புறநகர் எல்லையும் தாண்டி மேட்டுப்பாளையம் போகும் நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம் பிரியும் கிளைச்சாலை தான் பங்காரு நாயக்கன் பாளையத்தை சென்றடையும் வழி, நகரத்தால் விழுங்கப்பட காத்திருக்கும் சிறிய ஊர். ஊருக்கு போகும் வழியில் இடதுபுறம் கிணறு வற்றியதால் பல வருடங்களாக பயிரிடாமல் கிடந்த ஐந்து ஏக்கர் சாமை தோட்டம் மொத்தமாக விற்பனைக்கு இருப்பதை அறிந்ததும் மாமா பரபரவென செயலில் இறங்கினார், விஷயம் அறிந்த அடுத்த நாளே இடத்தை நேரில் போய் பார்த்துவிட்டு வந்தார்,  அடுத்த முறை எங்கள் வீட்டுக்கு வந்தவர் வழக்கம்போல அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களை திறந்து பார்த்து அம்மா செய்திருந்த வாழைக்காய் பொரியல் மணத்தில் மனதை இழந்து அதை ஒரு தட்டில் எடுத்து துணையாக கொஞ்சம் ரசம் சாதத்தையும் போட்டு பிசைந்தவாறே வரவேற்பறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தார். எதிரே சோபாவில் அமர்ந்திருந்த அம்மாவை பார்த்து 

“அக்கா, இந்த மனை இருக்கிற இடம்  அப்படியே  நம்ம ஊர் மாதிரி இருக்கு, அது சிட்டியா மாற எப்படியும் பத்து வருஷம் ஆகும், விலையும் குறைவா இருக்கு, தண்ணி வசதியெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கலாம், இப்ப கரண்ட் வசதி இல்லை, ஆனா அது நம்ம டிபார்ட்மென்ட், பிரச்சினை இல்லை” என்றார் 

“அப்புறம் என்ன?: எல்லாரிடமும் சொல்லி ஏற்பாடு பண்ண வேண்டியது தானே?” என்றார் அம்மா.

“எனக்கும் அங்க ஒரு மனை வாங்கலாம்னு ஆசை, ஆனா நீங்க வாங்கலைன்னா நானும் வாங்க மாட்டேன்”  

“அவர் அதுக்கெல்லாம் ஒதுக்குவாருன்னு தோணல சண்முகம், எனக்கும் ஆசை தான், எவ்வளவு நாள் தான் இந்த குருவி கூட்டுக்குள்ள இருக்கறது, ஒரு தோட்டம் வைக்க வழியில்லை”

“அதெல்லாம் ஒத்துக்குவார்,  நீங்க கட்டாயப்படுத்துங்க, நான் சீப் இன்ஜினியர் கிட்ட சொல்லி இவர் கிட்ட சொல்லச் சொல்லுறேன், பணம் குறையுதுன்னா நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லியபடி உணவை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்.

அப்பா அன்று வீட்டுக்கு வரும்போது இரண்டு வங்கி கணக்கு புத்தகங்களை கையில் வைத்திருந்தார், இரவு உணவுக்கு பின் சோபாவில் அமர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து டீபாயில் வைத்துக்கொண்டு அம்மாவை அழைத்து  “ஆபீஸ்ல எல்லாரும் சேர்ந்து இடம் வாங்க போறாங்க, விலை அதிகம் இல்லை, ஆனா நம்ம கிட்ட அவ்வ்வளவு பணம் இருக்குமான்னு தெரியலை, இரண்டு பேங்க் அக்கவுண்டும் சேர்த்து ஒண்ணரை லட்சம் இருக்கு,  நாம கடன் கொடுத்தது ஒரு முப்பதாயிரம் இருக்கு, கேட்டா திரும்ப வந்திரும், அப்படியும் இன்னும் ஒரு ஐம்பதாயிரம் இடைவெளி வருது” என்று நோட்டுப்புத்தகத்தில் வர வேண்டிய கடன் விவரங்களை குனிந்து எழுதிக்கொண்டிருந்தார்.

“பணம் பத்தலேன்னா பாத்துக்கலாம்னு சண்முகம் சொல்லியிருக்கு” என்கிற சொற்களை கேட்டதும்,  சீண்டப்பட்ட நாகம் படமெடுப்பது போல  சட்டென்று தலைநிமிர்ந்து அம்மாவை பார்த்தார், எதுவும் சொல்லாமல் சில நொடிகள் வெறித்த பார்வையில் நிலைத்த பின் கண்களை தாழ்த்தி  “ஐம்பதாயிரம் தானே?  ஒரு வருஷத்துல தேத்திடலாம், இப்போதைக்கு உன் நகையை பேங்குல வைச்சு கடன் வாங்குவோம்” என்று சொன்னபடி தலையை குனிந்து நோட்டுப் புத்தகத்தை  மூடிவைத்தார்.

சண்முகம் மாமா மின்வாரிய ஊழியர்களிடம் நிலத்தைப்பற்றி தனித்தனியாக பேசினார், எப்போதும் எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு சிலரை தனியே கூட்டிப்போய் இடத்தை காட்டினார் , எந்த இடத்தில அவர்களுடய வீடு வரும், எப்படி கட்டலாம் என்றெல்லாம் சொல்லி கனவுகளை விதைத்தார், கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடம் எல்லார் மனதிலும் அமைந்தபின் ஒரு ஞாயிற்றுக்கிழமை  பேருந்து ஏற்பாடு செய்து எல்லோரையும் கூட்டிப்போய் இடத்தை காட்டினார்.  

இடம் கிரயம் முடிந்தவுடனேயே உயர் அதிகாரிகள் பலரும் வீட்டையும் கையோடு கட்ட முடிவுசெய்தார்கள்,  சிவில் இன்ஜினியரை வைத்து அவரவர் வீடுகளுக்கான கட்டிட திட்டங்களை வரைந்து , கட்டுமான வேலையை கான்ட்ராக்ட்டில் விட தீர்மானித்த போது மிக இயல்பாக சண்முகம் மாமாவின் பெயர் எழுந்துவந்தது, அவர் தைரியமாக ஒரு முடிவெடுத்தார், மின்வாரிய வேலையை விட்டுவிட்டு வீடுகட்டும் வேலையை அவரிடம்  கொடுக்க தயாராக இருந்தவர்கள் எல்லாரிடமும் அதை ஏற்றுக்கொள்வதாக சொன்னார்.  

அந்த இரண்டு வருடங்கள் மாமாவின் வாழ்க்கையை மாற்றின, வேலைக்கு நடுவே உண்டு உறங்கினார் என்றுதான் சொல்லவேண்டும், வாரத்தில் பல நாட்கள் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்திலேயே படுத்துக்கொள்வார் கயிற்றுக்கட்டிலும் கொசுவலையும் மாற்றுத்துணிகளும் அங்கே வைத்திருந்தார். எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்தாலும் நிற்கவில்லை, ஆனால் அப்போதெல்லாம்  அப்பாவும் அவரும் கொஞ்சம் சகஜமாக பேசத்துவங்கினார்கள், இருவருக்கும் இடையில் இருந்த பனிக்கட்டி உருகி நீராக வடிந்து விட்டதுபோல் இருந்தது. அப்பா இருக்குபோது வந்தால் அவர் எதிரில் நாற்காலியில் வழக்கம்போல் அல்லாமல்  கொஞ்சம் வசதியாகவே அமர்ந்து பேசத்துவங்கினார். பெரும்பாலும் கட்டிட வேலை நடைபெறும் விதத்தை அதன் சிக்கல்களை பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பா ஆலோசனைகள் வழங்குவார். 

இரண்டு ஆண்டுகளில் மொத்தம் ஆறு வீடுகள் அவர் பொறுப்பில் கட்டப்பட்டன,  நெருக்கடியான கட்டிட வேலைகள் ஒருவழியாக முடிந்து மூச்சுவிடத்துவங்கும்பொழுது நீராழத்திலிருந்து மூழ்கி எழுந்தவர்போல புதிய மனிதராக சண்முகம் மாமா மாறிவிட்டிருந்தார். பாண்ட் போடுவதை அடியோடு நிறுத்தி வெள்ளை வேட்டிக்கு மாறி திருநீறு அணியத்துவங்கினார், பங்காரு நாயக்கன் பாளையத்தில் இருந்த பழைய பெருமாள் கோவில் அறங்காவலரை சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டார், சிறிய நன்கொடை கொடுக்கவேண்டியிருந்தது. அவர்மூலம் அந்த கோவிலை நிர்வகித்துவந்த குழுவில் உள்ளவர்களிடமும் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார். 

பொருளாதார ரீதியாக வழக்கம்போல சிக்கனமான வாழ்க்கைதான் , சைக்கிளில் இருந்து பஜாஜ் ஸ்கூட்டருக்கு மாறியதைத்தவிர வேறு எந்த புதிய செலவும் செய்யவில்லை, ஆனால் அந்த வேலைகளில் இருந்து கிடைத்த லாபம் ஒரு வீடு கட்ட தேவையான தொகையை விட அதிகமாக இருந்திருக்க வேண்டும். அம்மாவிடம் வீடு கட்டுவதை பற்றி பேசி கனவை விதைக்க துவங்கினார். வழக்கம்போல ஒருநாள் வந்து சமையலறையில் முகர்ந்துவிட்டு வந்து வரவேற்பறையில் நாற்காலியில் அமர்ந்து அம்மாவிடம் 

 “தண்ணி வசதி வந்திடுச்சு, எலக்ட்ரிசிட்டியும் வந்தாச்சு, எல்லாத்தெருவும் தார் போட்டுட்டோம், நம்ம ஆளுங்க குடியேறின பிறகு இன்னும் இரண்டு பஸ்ரூட்  அதிகமா பங்காரு நாயக்கன் பாளையத்துக்கு வருது, மெயின் ரோட்டுக்கு வந்தா கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் ரூட்டுல போகிற எந்த பஸ்ஸிலும் ஏறலாம், பையனுக்கு ஸ்கூல் கூட மாத்தவேண்டாம், நானும் அங்கேயே போயிடலாம்னு தோணுது, ஆனா நீங்க வீடு கட்டலேன்னா நானும் கட்டமாட்டேன்”  என்றார்

“நிலம் வாங்கின கடன் இப்பத்தான் முடிஞ்சிருக்கு, போன மாசம்தான் அவர் நகையை மீட்டுக் கொண்டுவந்தார், அதுக்குள்ள எங்கிருந்து வீடு கட்டறது  சண்முகம்? நீ சீக்கிரம் வீடு கட்டு, இது நடக்கும்போது நடக்கட்டும்” என்ற அம்மாவிடம் “நான் பேசிப் பாக்கட்டுமா?” என்றார்.

“இப்பத்தான் ரெண்டு பெரும் கொஞ்சம் நல்லா பேசத் தொடங்கியிருக்கறீங்க, அதை கெடுத்துக்கணுமா?, உன் இஷ்டம்” என்ற அம்மாவிடம் “நான் பேசறேன்” என்று சொல்லிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்து வேட்டியை மடித்துக்கட்டியபடி கிளம்பிச்சென்றார். அனால் அவர் வந்து பேசவில்லை. எதற்க்கோ காத்திருக்கிறார் என்று தெரிந்தது, எதையும் உடனடியாக செய்பவர் அல்ல அவர், அதற்கான காலமும் சூழலும் கனியும்போது மட்டுமே செய்பவர், எப்படி கனிய வைப்பது என்பதும் தெரிந்தவர், காலனியில் அடுத்த தவணையாக எட்டு வீடுகள் கட்டும் பணியை எடுத்துக்கொண்டார், கூடவே அவருடைய வீடும் சேர்ந்து ஒன்பது வீடுகள், தேவையான கட்டுமானப் பொருட்கள் வாங்குவது ஒன்றாகத்தான். 

கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கையில் அப்பா வீட்டில் இருக்கும் ஒருநாள் வந்தவர் “சிமெண்ட் விலை கடுமையா ஏறப்போகுதுன்னு சொல்லறாங்க, நான் எல்லா வீட்டுக்கும் சேத்துதான் சிமெண்ட், கம்பி , செங்கல்னு பொருள் வாங்கறேன், நீங்களும் எப்படியும் வீடு கட்ட ஆரம்பிச்சிருவீங்க, கன்டராக்ட் எனக்கு கொடுங்கன்னு கேக்கறதா நினைக்க வேண்டாம், கட்டுமானப்பொருள் வாங்கும்போது நம்ம வீட்டுக்கும் ஒண்ணாவே வாங்கிடறேன், உங்ககிட்ட கேட்டுட்டு செய்யலாம்னு ஐடியா” என்றார்.

“நல்ல ஐடியா, வீடு கட்டலாம்னு தான் இருக்கேன், பொருள்களை  சேர்த்து  வாங்கினா உனக்கும் விலை குறையும், புரியுது, ஆனா பண விஷயம், சரியா இன்ன தேதிக்கு இன்ன பொருள்னு கணக்கு வைக்கணும், செய்வியா?” 

கொஞ்சம் வாடிய முகத்துடன் “செய்யறேங்க” என்று சொல்லிவிட்டு மரியாதையாக எழுந்து சமையலறைக்குள் நின்றிருந்த அம்மாவிடம் போய் “இவ்வளவு கணக்கு பாக்கணுமா?” என்று கேட்டார், “நீ கண்டுக்காதே சண்முகம், உனக்கு அவரைப் பத்தி ஏற்கனவே தெரியும் இல்லையா?” என்றார் அம்மா, சண்முகம் மாமா தரையை பார்த்தபடி மெளனமாக நின்றார். ஆதூரத்துடன் அவர் தோளை மெல்ல தொட்டு  “தேங்காய் போட்டு அவரைக்காய் பொரியல், பூசணிக்காய் மோர்க்குழம்பு , அப்பளம் , சாப்பிடறயா?” என்றார், அவர் முகத்தில் சிரிப்பு வந்ததும் அம்மாவே தட்டை எடுத்து விளம்ப ஆரம்பித்தார்.

படிப்படியாக எங்கள் வீட்டுக்கு தேவையான செங்கல், மணல், கம்பிகள் என்று சண்முகம் மாமா வாங்கி இருப்பு வைக்கத்துவங்கினார், தேதி, தொகை, வாங்கியவற்றின் அளவு என்று துல்லியமாக கணக்கு போட்டு அம்மாவிடம் கொடுத்துவிடுவார். அந்த நாட்களில் தான் காலியாக கிடந்த எங்கள் வீட்டுமனை அருகே இன்று எங்கள் காம்பவுண்டு கேட் முன்னே நிற்கும் இரண்டு வேப்பமரங்களை நட்டார் சண்முகம் மாமா.

கட்டிடவேலைகள் இன்னபிற என எதிலும் ஆர்வமும் காட்டாமல் அப்பா வழக்கம்போல அலுவலகம், வீடு புத்தகங்கள், என்னுடன் சேர்ந்து டீவி பார்ப்பது  என்று பழகிய சக்கரம் போல சுழன்று சுழன்று காலத்தில் நகர்ந்துகொண்டிருந்தார், அவர் சொல்லும் கதைகள் இன்னும் சிக்கலானவைகளாக மாறிக்கொண்டிருந்தன, இந்திய புராணக் கதைகளுடன் இப்பொழுதெல்லாம் பைபிள் யூதக் கதைகளும் சேர்ந்துகொண்டிருந்தன. 

அந்த கோடை விடுமுறையில் ஒருநாள் சனியிரவு கட்டிலில் படுத்திருந்த அப்பாவுடன் ஒட்டிக்கொண்டு அவர் உடல் வாசம் என் நாசியை நிறைக்க  நரசிம்ம அவதாரத்தின் கதை சொன்னார். அந்த கதையில் இரணியன் கெட்டவன் அல்ல, அவன் முற்பிறவியில் விஷ்ணுவின் வாயில் காவலனாக இருந்தவன், முனிவர்கள் சாபத்தால் பூமியில் பிறக்க நேர்கிறது, சாபமிட்ட முனிவர்கள் அவனுக்கு ஒரு தேர்வை அளிக்கிறார்கள், நல்லவனாக பிறந்து பலபிறவிகள் வாழ்ந்து கடன் தீர்க்கலாம், ஆனால் கெட்டவனாக பிறந்தால் ஒரே பிறவியில் வாழ்க்கை கடன் முடித்து மீளலாம். இரணியன் விரைவில் திரும்பும் பொருட்டு கெட்டவனாக பிறக்கிறான், அவன் செய்தது எல்லாமே முக்திவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில்  தான், அவனை வதம் செய்தபின் வேறு இலக்குகளற்று இருந்த நரசிம்மம் என்கிற மனிதமிருகத்தின் கோபம்  அடங்க முடியாமல் வளர்ந்தது, அது இரணியனைவிட  கொடுமையான செயல்களை தன் கோபத்தால் செய்யத் துவங்கியது, சிவன் அதை அழிக்க இரண்டு சிங்கங்கள் ஒட்டிப்பிறந்தது போல கூரிய நகங்கள் கொண்ட ஏட்டு கால்களும், நான்கு கைகளும், ரத்தம் வழியும் கொலைப்பற்கள்  கொண்ட சிங்கத்தின் முகமும் கொண்ட சரப வடிவம் எடுத்தார்,  சரபம் நரசிம்ம வடிவத்தின் குடலை பிடுங்கி வெளியில் எடுத்து தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டிக்கொன்று தீர்த்தது என்று அவர் கதையை முடித்ததும் ஒருகணம் மனம் சலனமற்று நின்றது, அப்புறம் பயம் வந்து அவருடைய உடலுடன் முகம்பதிய  மேலும் ஒட்டிக்கொண்டேன்.

சில வாரங்கள் கழிந்து அப்பா பைபிளில் சொல்லப்படும் ஏழு பாவங்கள் பற்றிய கதையை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை சண்முகம்  மாமா அப்பாவிடம் வீடு கட்டுவதை பற்றி தீர்மானமாக பேசி முடிவெடுப்பதற்க்காக வந்தார், காலம் கனிந்திருக்க வேண்டும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அந்த சனிக்கிழமை பின்மதியம் மழை பெய்த வெக்கையை போக்க வரவேற்பபறையில்  மின் விசிறியை அதிவேகத்தில் சுழலவிட்டு  நானும் அப்பாவும் டீவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தோம். ஜன்னல்களை மறைத்துநின்ற இளம்பழுப்பு நிற திரைச்சீலைகள் காற்றை வாங்கி புடைத்தும் பின்னர் நழுவவிட்டு தவிர்த்தும் அலையாடிக் கொண்டிருந்தது.  வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வங்கியின் பெயரும் முத்திரையும் கொண்ட ஒரு கருப்பு ரெக்ஸின் கைப்பையை கவனமாக தூக்கியபடி செருப்பை கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் சண்முகம் மாமா. நான் எழுந்து சென்று டீவியை நிறுத்தினேன். சோபாவில் அமர்ந்திருந்த அப்பாவை பார்த்து சிரித்தபடி 

“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றபடி அவர் மின்வாரியத்தில் வேலை செய்திருந்த நாட்களில் செய்வதுபோல வேட்டியை தழையவிட்டு   நாற்காலியின் விளிம்பில் அமர்ந்தார் மாமா.

“நீங்க எப்படி நினைக்கறீங்கன்னு தெரியலை, ஆனா நான் இந்த குடும்பத்தில ஒருத்தனாத்தான் என்னை பாக்கறேன், அங்கே வீடுகட்டுற வேலை பாதி முடிச்சாச்சு, இன்னும் ஆறு மாசத்தில முடிஞ்சுடும்,  உங்களையெல்லாம் விட்டுட்டு அங்கே குடிபோக என்னால முடியாது, இப்ப தொடங்கினா கூட மத்த வீடுகளோட சேர்ந்து நம்ம வீட்டையும் கட்டி முடிச்சிடலாம், என்னை வைச்சு கட்டவேண்டாம், உங்களுக்கு விருப்பமான இன்ஜினியரை வைச்சு பண்ணலாம், தயவு செய்து பணத்துக்காக தள்ளிப்போட வேண்டாம், நான் பாத்துக்கறேன் ” என்றார் மாமா.

“கையில நிறைய பணம் சேந்திருச்சா சண்முகம்?, சந்தோஷம். கண்டிப்பா வீடு கட்டணும், அதுவும் இப்பவே கட்டத்தான் போறேன், பேங்குல லோன் அப்ப்ளிகேஷன் போட்டிருக்கேன், கொஞ்சம் சமயம் எடுக்கும், லோன் வந்தாலும் வேற கான்ட்ராக்டரை வைச்சு தான் வீடு கட்டப்போறேன்,நமக்குள்ள பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம், புரியுதா?” என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னார் அப்பா.

கையில் வைத்திருந்த ரெக்ஸின் பையின் ஜிப்பை திறந்தபடி “அப்ப நீங்க என்னை வேத்து மனுஷனாத்தான் பாக்கறீங்களா? என்கிட்டே பணம் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லறீங்க, எங்கியோ காட்டுல உழவுமாடு மாதிரி வேலை செய்துக்கிட்டிருந்தவனுக்கு நீங்க தான் கூடவே தங்கவைச்சு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்தீங்க, அந்தக் கடனை நான் எப்படி தீர்க்கறது? இப்பத்தான் பேங்கிலிருந்து வரேன், ஏற்கனவே வாங்கி வச்சிருக்கிற கட்டுமான சாமான் தவிர வீடு கட்ட தேவையான தொகை இப்ப என்கிட்டே சேர்ந்திருக்கு, இதை எடுத்துக்கங்க” என்று சொன்னபின் எழுந்துநின்று  சீராக அடுக்கப்பட்ட பணக்கட்டுகள் நிறைந்த அந்த பையை இருகைகளாலும்  காணிக்கை வைக்கும் பக்தன் போல டீபாயின் மேல் வைத்து கைகூப்பியபடி நின்றார்.

 “என்கிட்டே பணம் வாங்க மாட்டேன்னு சொல்றீங்க, இந்த வீட்டுல எத்தனை சோறு சாப்பிட்டிருக்கேன், அப்ப அதுக்கெல்லாம் கணக்கில்லயா?” என்று சொன்ன சண்முகம் மாமாவை அமர்ந்தநிலையில் பணப்பையை அர்த்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து பார்த்தார், பணிந்த முகத்துடன் கூப்பிய கைகளுடன் நின்றிருந்த சண்முகம் மாமா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அப்பாவின் கண்களை நேரடியாக சந்தித்தார். அப்பாவின் முகத்தில் வலிய வரவழைக்கப்பட்ட சிறிய புன்னகை தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அவர்கள் இருவரின் கண்களிலும் ஒருகணம் மின்னி மறைந்த உணர்வு  ஒன்றையயொன்று கொல்லவேண்டி எதிரெதிரே நிற்கும் வேட்டை மிருகங்களின் பார்வை போல இருப்பதாக எனக்கு தோன்றியது. திரைசீலைகள் அசைவை நிறுத்திவிட்டது போலவும், காற்றின் அடர்த்தி கூடி மின்விசிறி தயிர் கடையும் மத்தைப்போல விசைகுறைந்து தள்ளாடுவதாகவும் பிரமை ஏற்பட்டது. சூழலின் அழுத்தம் தாங்காமல் எனக்கு மூச்சு முட்டியது.

“இந்த வீட்டுல சோறு சாப்பிட்டிருக்க, சரிதான், ஆனா வேலையும் செஞ்சிருக்கியே சண்முகம், அப்போ கணக்கெல்லாம் சரியாத்தானே இருக்கு?, வேணும்னா ஒண்ணு பண்ணு, வேலை செய்யாமலே ரெண்டு வருஷம் சம்பளம் வங்கினயே, உன்கிட்ட இருக்கிற பணத்தை வைச்சு அந்த கணக்கை சரிபண்ணு” என்று புன்னகை மாறாமல் சொன்னார் அப்பா. அதன்பின் சண்முகம் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. அப்பாவிடம் பேசியதில்லை, ஆனால் நானும் அம்மாவும் எப்போதும்போல அவரிடம் பழகினோம்.

பின்னாளில் அந்த நாளைப் பற்றி கேட்கும்பொழுது அம்மா “உங்கப்பாவுக்கு சண்முகம் மாமா மேல பொறாமை, தனக்கு கீழே இருந்தவன் அவருக்கும் மேலே வளர்ந்ததை தாங்க முடியல” என்று விளக்குவார், ஆனால் அப்பா அன்றிரவு ஏழு பாவங்களில் ஒன்றான பெருந்தீனியை பற்றி கதை சொன்னார், அந்தக்கதையில் பெருந்தீனியில் ஈடுபடுபவர்கள் தீர்ப்பு நாளன்று நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள், அவர்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட நரகம் செர்பரஸ் என்கிற பிரம்மாண்டமான உருவம்கொண்ட பூதத்தின் வயிற்றுக்குள் இருந்தது ,  அவன் குப்புறப்படுத்து தலையுயர்த்தி வாயை முழுவட்டவடிவ குகைபோல திறந்து வைத்தபடி புதியவர்களுக்கு காத்திருப்பான். அருகே வருபவர்களை அப்படியே நாக்கை நீட்டி வாய்வழியே உறிஞ்சி ஈர்த்து உள்ளிழுத்துவிடுவான், முடிவில்லாமல் விரிந்து விரிந்து செல்லும் அவன் வயிற்றில் வரிசையாக வதைக்கூடங்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வதை மேடைகள், அந்த மேடையில் அமரவைக்கப்பட்டு அறுசுவை உணவு பரிமாறப்படும், நிறுத்தாமல் உண்டுகொண்டே இருக்கவேண்டும், நிறுத்தினால் அங்கிருக்கும் மாய விசைகள் உணவை அவர்கள் வாயில் அள்ளியள்ளித்  திணிக்கும். அதுவே பெருந்தீனிக்கான தண்டனை. மூச்சடைக்க வைப்பது போல மேலும் மேலும் தீனி.

பங்காரு நாயக்கன் பாளையத்தில் வீடு கட்டி குடி பெயர்ந்த சண்முகம் மாமா பெரும்பசி கொண்ட ஆலமரம் போல அங்கே கிளை பரப்பி வளர்ந்தார். அந்த ஊரின் அரிமா சங்க கிளையை அவர்தான் ஆரம்பித்தார். பொதுக்காரியங்களில் தன்னை வலிய ஈடுபடுத்திக்கொண்டார்,  ஊர் பெருமாள் கோவிலில் நிகழும் விசேஷங்களை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவரானார்.

மாதத்தில் ஒரு நாள் சொந்த செலவில் கோவிலில் அன்னதானம் நடத்தினார், கோயில் வெளிவளாகத்தில் நெடுக்க தலை வாழை இலைபோட்டு ஊர்கோடியில் குடிசையில் வாழும் வளவு மக்களை உக்காரவைத்து வடை பாயாசத்துடன் விருந்து நடக்கும். பந்தி விளம்புவர்களுடன் சேர்ந்து அவர் கையாலேயே பரிமாறுவார், சோறா?, ரசமா? சாம்பரா? என்னவேண்டும் என்று ஒவ்வொருவரையும் கேட்டுக்கேட்டு இலையையும் வயிற்றையும் நிரப்புவார், அந்த நாட்களில் கோயில் வாசலில் சிறிய துணிப்பதாகை தொங்கும் “ப.நா பாளையம் ரங்கநாதர் திருக்கோவில் அன்னதானம்” என்று பெரிய எழுத்திலும், அதன்கீழே கொஞ்சம் சிறிய எழுத்தில்  “உபயம் சண்முகவேல்” என்றும் எழுதப்பட்டிருக்கும்.  

வருடந்தோறும் நல்ல மதிப்பெண் வாங்கும் வசதியற்ற ஊர் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவார், பெரும்பாலும் வளவுத்தெருவில் வசிக்கும் மாணவர்கள். அடுத்த வருடத்துக்கான நோட்டுப்புத்தகங்கள், சீருடை துணி, பரிசுத்தொகை போன்றவற்றை அழகான ஒரு வெள்ளைப்பையில் போட்டு  அவரே வீடு தேடிபோய் கொடுப்பார், அந்த பையில் ‘அன்பளிப்பு  சண்முகவேல்’ என்று சிறிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். 

அப்பாவுக்கு வங்கிக்கடன் கிடைத்து நாங்கள் வீடுகட்டி முடித்து குடியேற மேலும் ஒன்றரை வருடம் ஆனது. அந்த இடைவெளியில் மாமா அந்த குடியிருப்பிலும் ஊரிலும் முக்கியமான மனிதராக மாறியிருந்தார். எங்கள் தெரு காண்ட்ராக்டர் சண்முகம் வீடு இருக்கும் தெருவாக அறியப்பட்டது, எப்போதும் ஆட்கள் வந்தும் போனபடியும் இருக்கும் அவர்கள் வீடு அந்த குடியிருப்பின் மையமாக ஆனது, கட்டுமான பொருட்களை சுமப்பதற்க்காக அவர் சொந்தமாக நான்கு டெம்போக்கள் வைத்திருந்தார், எல்லாவற்றிலும் முகப்பில் “தர்மம் தலைகாக்கும்” என எழுதியிருந்தார், அவை அவரை தொழில் விஷயமாக  பார்க்கவருபவர்களின் வாகனங்களுடன் கலந்து எங்கள் தெருவை நிறைப்பது அவ்வளவு வருடங்களுக்குமுன் அந்தக் காலத்திலேயே துவங்கிவிட்டது.

அடுத்த பகுதி:

உயிர்வளி – இறுதி பாகம் – சொல்வனம் | இதழ் 338 | 3 மார்ச் 2025

(அடுத்த இதழில் முடியும்)


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “ உயிர்வளி”

  1. சங்கர் பிரதாப். கதை உணர்வுகளை தொடுவதாக உள்ளது. அடுத்த பாகத்தில் என்ன இருக்கும் என ஆவல் உள்ளது.

    சண்முகம் கதை சொல்லியின் அப்பாவுக்கு வீடு கட்ட உதவி செய்வதாக சொல்லும் காட்சி மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    சண்முகம் மாமா கதை சொல்லியின் தந்தையிடம் திருப்பி செலுத்த முடியாத கடன் இருப்பதாக உணர்கிறார். கதையின் ஆரம்பத்தில், ஒரு கிராமத்து கூலியாக இருந்த சண்முகத்துக்கு மின்வாரியத்தில் முதல் வேலை வாய்ப்பை அவரது தூரத்து அக்கா கணவர் பெற்று தருகின்றார்.

    வேலை வாங்கிக் கொடுத்தவர் “கூலி கொடுக்காத இடத்தில் மீண்டும் வேலை செய்வீர்களா?” என்ற கேள்வியை கேட்பதாக கதையில் உள்ளது. இந்த கேள்வி ஒரு விஷக் கொடுக்காக கேட்கப்பட்டாலும் இதில் சண்முகத்தினை தனது அறிவினை கொண்டு அளக்கும் முயற்சியாக எனக்குப் பட்டது.

    சண்முகத்துக்கு அவரது தூரத்து குடும்பமும் அவருக்கு தற்காலிக வீடு கொடுத்தது, வீட்டில் அவர் கால் ஊன்றும் வரை அடைக்கலம் கொடுத்தார்கள். இந்த செயல்கள் சண்முகத்தின் வாழ்க்கையின் போக்கையே மாற்றின. கதையில் சொல்வது போல: “எங்கியோ காட்டுல உழவுமாடு மாதிரி வேலை செய்துக்கிட்டிருந்தவனுக்கு நீங்க தான் கூடவே தங்கவைச்சு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்தீங்க”.

    இதனால் சண்முகத்திடம் உளவியல் ரீதியான கட்டாய உந்துதல் உருவானது. பணத்தால் மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. அவரால் உதவாமல் இருக்க முடியவில்லை, ஏனெனில் தன்னை என்றென்றும் கடன்பட்டவராக கருதுகிறார். இது பின்வருமாறு வெளிப்படுகிறது:

    1.வீட்டுக்கு தவறாமல் வருகை தருவது
    2.வரும்போதெல்லாம் வீட்டை சுத்தம் செய்து, ஒழுங்குபடுத்துவது
    3.அக்காவுக்கு வீடு கட்ட உதவ துடிப்பது
    4.”இந்த வீட்டுல எத்தனை சோறு சாப்பிட்டிருக்கேன்” என்ற உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்

    கதை வாசகருக்கு வைக்கும் காட்சி என்னவென்றால், அக்கா கணவர் இந்த உதவியை ஏற்க மறுப்பதன் மூலம் சண்முகத்தை என்றென்றும் நன்றியுணர்வில் சிக்க வைக்கிறார், கடனை திருப்பி செலுத்த அனுமதிக்காமல் செய்கிறார். இதுதான் இந்த உறவை இவ்வளவு சிக்கலானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் ஆக்குகிறது – ஒருவர் கடனை திருப்ப முயற்சிக்க, மற்றவர் அதை ஏற்க மறுக்கிறார்.

  2. உயிர்வளி (அ ) உயிர்காற்று – தலைப்பே ஒரு உயிரோட்டத்தைத் தெரிவிக்கும் விதத்தில் ஒரு எதிர்பார்ப்பை அறிவிக்கிறது. கதையின் தொடக்கம், கொரோனா காலத்தில் தில்லி போன்று ஒரு பெரிய நகரத்தை விட்டு தொலைதூரத்திலுள்ள தனது பெற்றோர் வசிக்கும் ஒரு புறநகர் பகுதிக்கு செல்லும் பொறியிலாளனின் மனவோட்டம். அக்காலகட்டத்தில் பிராண வாயுவுக்காக போராடிய நிலையை அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார். இவருக்கு எப்படி பிராணவாயுக் கலன் கிடைத்தது என்பதை நுழைக்கும் விதம் மிகவும் சிறப்பு. பிறகு தங்கள் வீடு எப்படி வந்ததிற்கான பின்னோட்டம் . இதில் வரும் அப்பா, அம்மா மற்றும் ஷண்முகம் மாமா – ஒவ்வொரு பாத்திரங்களின் வடிவமைப்பும், அதனுடன் அமைந்த பின்னூட்டங்களும் நுணுக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. என்னை மிகவும் கவர்ந்தது ஷண்முகம் மாமா. இன்றும் கிராமங்களில் இவரைப் போல மனிதர்களை காணலாம். என்ன, ஒரு சிலரால் தான் இக்கதையைபோல் ஓர் உயரத்தை தொட முடியும்.

    பல வருடங்களுக்குப் பிறகு, நான் படிக்கும் ஒரு கதையின் போக்கு “தொடரும்” என்ற சஸ்பென்ஸ்ஸில் நின்றுள்ளது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஏற்படும் ஒரு புதிய அனுபவம். மாமிகளுக்கு கல்கி, விகடன் வாங்கிக்கொண்டு வரும் எதிர் நீச்சல் நாகேஷ் நினைவுக்கு வருகிறார். நான் கதையை சிலவாக யூகித்தாலும், எழுத்தாளரின் முடிவை வாசிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  3. நல்ல நெடுங்கதைகள் அரிதாகி விட்ட இந்த நாளில் ஒரே இதழில் இரண்டு தரமான நெடுங்கதைகள் வெளியிட்ட சொல்வனத்திற்குப் பாராட்டுதல்களும் நன்றியும். மஹேஷ் மகாதேவன்.

Leave a Reply to Ramanan_IITDCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.