உயிர்வளி – இறுதி பாகம்

முந்தைய பகுதியைப் படிக்க

அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் முகக்கவசம் அணிந்தபடி அப்பா நடக்கப் போகும்போது தெருவை நிறைந்திருக்கும் வாகனங்கள் நாள்முழுக்க அங்கேயேதான் இருக்கும், தொற்றுநோய் காலத்தில் எல்லா கட்டிட வேலைகளும் நின்றுபோயிருந்தன, சண்முகம் மாமாவின் ஒன்றிரண்டு வாகனங்கள் பொதுக் காரியத்துக்காகக் கிளம்பிச் செல்வதை பார்த்திருக்கிறேன், மற்றபடி அசைவற்ற நாட்கள்.  நாங்கள் எங்கேயும் வெளியே செல்வதில்லை, தொற்று ஆரம்பித்தவுடனேயே வீட்டு வேலைக்கு வருபவர்களை நிறுத்திவிட்டோம், மளிகை சாமான்களை இணையத்தில் ஆணையிட்டு தருவித்துக் கொண்டோம், தட்டுப்பாடு நிலவிய சமயங்களில் சண்முகம் மாமா எங்களுக்கும் சேர்த்து அத்யாவசிய பொருள்களை வாங்கிவருவது அப்பாவுக்கு பிடிக்காது. ஆகவே அம்மாவுக்கும் மாமாவுக்கும் இடையே அது ரகசியமாக நடக்கும். 

அப்பா நடை முடித்து வந்து தெருவை அடைத்து நின்றிருக்கும் வாகனங்களைப்பற்றி சலிப்புடன் ஏதாவது சொன்னபடி வீட்டுக்குள் நுழையும்போது விழித்துக்கொண்டு என் நாளை துவங்கியிருப்பேன், அவர் கதவு திறந்து வரும் சத்தம் கேட்டதும் எழுந்து பல்துலக்கி பிற உடல்கடன்களை முடித்தபின் அப்படியே சமயலறைக்கு போய் காபி தயாரிப்பேன். இரண்டுவகையானவை, சிக்கரி கலந்த காபித்தூள் டிகாஷனுடன் பால் கலந்த காபி அம்மாவுக்கு, சர்க்கரை போட்டு ஆற்றி நுரைக்கவைத்து அவர் எழுவதற்கு முன் தனியே ஊற்றிவைப்பேன்.  

எனக்கும் அப்பாவுக்கும் சிக்கரி, பால், சர்க்கரை என்று எதுவும் கலக்காத காபி. அப்பா  நியூயோர்க்குக்கு வந்தபோது அமெரிக்க காபி முதல்முறை நாக்கில் பட்டதும்  “இதுதான் உண்மையான காபி” என்றார். எங்கள் இருவருக்குமே அந்த மென் கசப்பும், திரிபடையாத காபியின் மணமும், அதன் சமரசமற்ற தூய கருமையும் பிடிக்கும்.  நான் காபி தயாரிக்கும் அந்த கொதிகலன் குடுவையை பத்தாண்டுகளுக்கும் மேல் வைத்திருக்கிறேன், ஒருமுறை இத்தாலிக்கு சென்றபொழுது சிசிலி தீவில் பெயர் மறந்துவிட்ட நகரின் கடைத்தெரு ஒன்றில் வாங்கினேன். மூன்றடுக்கு கொண்டது. கீழடுக்கில் நீர்விட்டு அடுப்பில் வைப்பேன், கொதிநீர் உருவாக்கும் நீராவி காற்றுபுகும் நுண்துளைகள் கொண்ட இடையடுக்கில் நிரப்பப்பட்ட காபித் துகள்களூடே ஏறிச்சென்று குளிர்ந்து திரவமாக மேலடுக்கில் சேகரமாகும், சரியான சமயத்தில் அடுப்பை அணைக்க வேண்டும், நொடி பிசகினால் எல்லாமே கெட்டுவிடும். இரைமீனுக்காக  நீரில் தியானித்து நிற்கும் நாரை போல சரியான கணத்துக்காக காத்திருந்து அடுப்பை அணைப்பேன். குடுவையை சரித்து அதன் வாய்வழியே உருக்கிய கருந்தங்கம் போல வழியும் காபியை எனக்கும் அப்பாவுக்கும் என இரண்டு கனத்த வெள்ளைநிற பீங்கான் கோப்பைகளில் ஊற்றிக்கொள்வேன், கூடவே கொஞ்சம் வெந்நீர் சேர்க்கவேண்டியிருக்கும்.  

ஒரு கோப்பையை செய்தித்தாளுடன் சோபாவில் அமர்ந்திருக்கும் அப்பாவிடம் நீட்டிவிட்டு என்னுடைய கோப்பையை கைகளில் ஏந்தியபடி அவர் முகம்நோக்கி அங்கேயே காத்து நிற்பேன், ஒரு மிடறு குடித்து அந்த தேன்கசப்பை கண்மூடி அனுபவித்தபின் தலையை உயர்த்தி சிறிய ஆமோதிப்பை வெளிப்படுத்துவார். வேறு எந்த வார்த்தைகளும் நாங்கள் பேசிக்கொள்வதில்லை. நான் என் அறைக்கு சென்று மின்னஞ்சல்கள் பார்க்க ஆரம்பிப்பேன், உடனடி பதில் அளிக்கவேண்டிய ஏதேனும் இருந்தால் அதை செய்வேன், இல்லாவிட்டால் வணிகச்செய்திகள் மேயத்துவங்குவேன், முதலில் பொதுவானவை, அப்புறம் நான் நேரடியாக ஈடுபட்டிருக்கும் சந்தைப் பொருட்களின் விலைநிர்ணயம் தொடர்பான செய்திகள். தொற்றுநோய் செய்திகளை கறாராக தவிர்த்துவிடுவேன். 

நான் வழிநடத்தும் அணி நாடெங்கிலும் விற்கப்படும் அன்றாட நுகர்பொருட்களுக்கான சந்தை விலையை நிர்ணயிக்கும் சேவைகளை பெருநிறுவனங்களுக்கு அளித்துவந்தது, விலைகளை தொடர்ந்து கண்காணித்து வருவோம், நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள எல்லா  சந்தைகளிலிருந்தும் விற்பனை குறித்த பல தரவுகள் பலவழிகளில் களமாடும் அணிகளால் திரட்டி சேகரிக்கப்படும்.  அந்த உதிரித் தரவுகள் கணித புள்ளியியல் மென்பொருட்களால் இணைத்துக் கோர்க்கப்பட்டு உபயோகமான தகவல்களாக தொழில்நுட்ப அணியினால் மாற்றப்படும்,  அதன்மேல் தர்க்கத்தையும் அனுபவ அறிவையம் தொழில்படுத்தி அவ்வப்போதைய தேவைக்கேற்ப செயல் திட்டங்கள் ஆலோசனைகள் போன்றவற்றை தயாரித்து அளிப்போம். பெரும்பாலும்  விலையேற்றம் அல்லது விலையழிப்பு பரிந்துரைகள். 

செய்திகளை அலசி முடித்தவுடன் அன்றைய நாளுக்கான முதல் மீட்டிங் துவங்கும்போது அம்மா சமையலறையில் வேலை செய்யும் சத்தம் கேட்கத் துவங்கும். ஓசையை தடுக்க உள்கதவை மூடிக்கொண்டு சாலை நோக்கி திறக்கும் வெளிஜன்னலை திறந்துவிட்டு காதில் ஒலிப்பொறியை மாட்டிக்கொள்வேன்.  

அப்புறம் ஒவ்வொன்றாக வேலைகள், என் அணியினருடன் செயல்திட்டங்கள் பற்றிய உரையாடல்கள், அவர்கள் உருவாக்கிய அறிக்கைகள், ஆலோசனை கோப்புகளை பார்வையிட்டு திருத்தங்கள் செய்வது, சந்தை நிகழ்வுகளின்   தகவல்களை புதிய நகர்வுகளை கண்டுகொள்ளும் பொருட்டு ஆராய்ந்து கொண்டிருப்பது என்று ஒவ்வொன்றாக வேலைகள் இருக்கும், விதவிதமான நிகழ்வுகள், ஆனால் ஒரே மாதிரியான  நாட்கள், நாளின் பெரும்பகுதி கணினி திரையில் இறைந்து கிடக்கும் தரவுகளை கண்களால் அளைந்தபடி கழியும். 

சூரியன் மேலெழுந்து காம்பவுண்டு சுவருக்கு வெளியே நிற்கும் வேம்பின் நிழல் என் ஜன்னல் வழியே உள்வரும்போது காலை உணவுக்காக எழுந்துகொள்வேன். அம்மா சமைத்து உணவுமேசைமேல் எனக்கானவற்றை பரிமாறி மூடி வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருப்பாள், அப்பா ஒன்றோ உறங்கிக்கொண்டிருப்பார் அல்லது மேலே மாடியில் வேப்பமர நிழலில் நாற்காலி போட்டு ஏதாவது படித்துக்கொண்டிருப்பார், அல்லது புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எதுவும் நடக்காத தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார், சில சமயம் அவர் அப்படி உட்கார்ந்திருக்குபோது அவருடைய வாழ்க்கையை அவரே வேடிக்கை பார்ப்பதாக எனக்கு தோன்றும். 

நான் சாப்பிட்டு தட்டை கழுவிவைத்துவிட்டு வந்து அம்மாவிடம் “ஏதாவது வாங்கணுமாம்மா? “ என்பேன், பெரும்பாலும் ஒன்றும் தேவையிருக்காது, நான் முகக்கவசம் மாட்டி வெளியேறி ஷூ அணிந்துகொண்டு படியேறி மாடிக்கு போவேன், தென்மேற்கு மூலையில் ஆளுயர மேடைமேல் இருக்கும் பெரிய கருப்புநிற பிளாஸ்டிக் நீர்த்தேக்க தொட்டிக்கு கீழே ஒரு சுவர் மறைப்பு இருக்கிறது. உதிரி செங்கல்கள், உபயோகமற்ற சாக்குகள், மண்வெட்டி, இரும்பு குழாய் துண்டுகள் என்று கலவையாக சாமான்கள் குவிந்து கிடைக்கும். அங்கே வெள்ளை நிற சிமெண்ட் பையில் சுற்றி கட்டப்பட்டு வெயில் படாத ஆனால் எப்போதும் உலர்ந்திருக்கும் வலது மூலையில் மறைவாக செங்குத்தாக வைத்திருக்கும் ஒற்றையடி உயர கிரையோஜெனிக்  பிராணவாயுக்கலனை சூடாகிவிட்டதா என ஒருமுறை தொட்டுப்பார்ப்பேன்,  அப்பா இருந்தாலும் அதை கவனித்ததாக தெரியவில்லை. அப்படியே கீழிறங்கி வாசலைக்கடந்து வெளிவந்து தார்ரோட்டில் ஏறி நடக்கபோவேன். 

அன்று நடைமுடித்து திரும்பும்போது சண்முகம் மாமாவை பார்க்க நேர்ந்தது, வழக்கம்போல அன்றும் அவர் வீட்டுக்கு எதிர்திசையில் தான் நடக்க ஆரம்பித்தேன், மே மாத வெயில் இதமாக கழுத்தை சுட்டது, எதுவும் நிகழாத வாழ்வில் இப்படி சிறிய சிரமங்கள் எதையோ நிகர்செய்தன. என் காலனியிலிருந்து வெளியேறி ஊரை அடைந்து ஒரு சுற்று சுற்றுவேன். அப்படியே வளவு தெருவை அடைந்து அங்கே ஓடையை ஒட்டி போகும் ஒற்றடையடி பாதை  வழியாக எங்கள் காலனியின் பின்பக்கம் வந்து சேருவேன், அங்கிருந்து சண்முகம் மாமாவின் வீட்டை கடந்துதான் என் வீட்டுக்கு வரவேண்டும். 

தெருவில் நடப்பவர்கள் யாரும் எதிர்ப்படுவதில்லை, தொற்றுக்காலத்தில் தெருக்கள் வறண்ட ஆறுபோல கிடந்தன. வரிசையாக டிவி சத்தம் கேட்கும் மூடிய வீடுகள், நடந்து என் தெருவிலிருந்து வெளியேறி ஊருக்கு போகும் சாலையை அடைந்ததும் சில வாகனங்களை பார்க்க முடிந்தது, மூடப்பட்ட கடைகள், அத்தியாவசிய பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், தெருநாய்கள், நான் எதையும் கவனிப்பதில்லை. ஊர் மத்தியை அடைந்து பெருமாள் கோவிலை கடந்து வீடுகள் நிறைந்த மையத்தெருவை அடைந்ததும் முகக்கவசத்தை ஒருமுறை ஏற்றி சரிசெய்துகொண்டேன்.  

தெரிந்த முகங்களை எதிர்கொள்வதை பற்றிய பதற்றம் ஏற்பட்டது, சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டிய இந்த காலத்தில் கூட முகம் பார்த்ததும் அருகில் வந்து பேசுகிறார்கள், சொல்வது சரியாக கேட்பதற்காக முகக்கவசத்தை வேறு கீழே இறக்கி விட்டுக்கொள்கிறார்கள். சாவதற்கு தகுதியான மனிதர்கள் என்று சொல்லிக்கொண்டேன், இந்த தொற்றுநோய் காலம் வாழத்தகுதியற்ற மனிதர்களை களையெடுப்பதாக சில சமயம் கற்பனை செய்துகொள்வேன், என்னைப்போல பாதுகாப்பாக வாழத்தெரியாத முட்டாளர்கள் என்று சமாதானம் செய்துகொள்வேன், விதவிதமாக ஏதேதோ சொல்லி ஒன்றை கடக்க நினைத்தேன், காரணங்களை அள்ளியள்ளி போட்டு எதேயோ நிறைக்க முயன்றேன்.   

ஆனால் அந்த வீட்டை தாண்டும்போது நீரில் அமுக்கிவைக்கப்பட்ட பந்து விடுபட்டு மேலெழுவதுபோல ஒரு அசௌகரியத்தை வழக்கம்போல அன்றும் உணர்ந்தேன், பச்சைக்கதவும் தெருநோக்கி திறக்கும் ஒற்றைச்சன்னலும் திண்ணையும் கொண்ட சாலையையொட்டிய வீடு. மொத்தமாக தகரத் தகடுகளால் மூடப்பட்டு  வீட்டைச்சுற்றி வெளுப்புக் காரம் தூவப்பட்டிருந்தது, ஒரு பெரிய சவப்பெட்டிபோல என நினைத்துக்கொண்டேன். அந்த வீட்டிலிருப்பவர்களை தெரியும், மின்சாதன கடை வைத்திருக்கும் கணவன், நர்ஸாக வேலைபார்க்கிற மனைவியும் நான்குவயது குழந்தையும் கொண்ட குடும்பம். இரண்டுநாள் முன்வரை கூட முகக்கவசம் அணிந்தபடி திண்ணையில் அந்த குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும். ராதாகிருஷ்ணா மருத்துவமனை தொற்றுநோய் வார்டில் வேலைபார்த்துவந்த அந்தப்பெண் இறந்தபொழுது சடலம் வீட்டுக்கு கொண்டுவரப்படவில்லை, அங்கிருந்தே பல அடுக்குகளாக சுற்றிமூடப்பட்டு நேராக இடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது, அரசு சுகாதாரத்துறை பணியாளர்கள் வந்து வீட்டை தட்டி போட்டு மூடி தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அறிவித்தார்கள். 

மருத்துவத்துறையில் எப்போதுமே இந்த மாதிரி ஆபத்துகள் உண்டு, அது அவர்களை கடமை, தெரிந்தேதான் அந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள், தடுப்புமருந்து புழக்கத்துக்கு வரும்போது இவர்களுக்கு தானே முன்னுரிமை. ஆகவே இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, மண்ணை அள்ளியள்ளி குழிமேல் போட்டபடி, பந்தை இன்னும் இன்னும் அழுத்தி நீருக்கடியில் அமுக்கியபடி நடையை வேகப்படுத்தியபோது தான் பின்னிலிருந்து வந்த அந்த மஞ்சள் முகப்பு கொண்ட டெம்போ என்னை தொடும்படி வந்து நின்றது. திரும்பிப் பார்த்தபோது “தர்மம் தலைகாக்கும்” என்று எழுதி ஒட்டப்பட்ட கண்ணாடி வழியே உள்ளே ஸ்டியரிங் சக்கரத்துக்கு பின்னே அமர்ந்திருந்த சண்முகம் மாமா என்னை நோக்கி நட்பாக சிரிப்பது அவர் அணிந்திருந்த நீலநிற முகக்கவசத்தையும் மீறி கண்களில் தெரிந்தது. 

வண்டிக்கு வெளியே தலை நீட்டி “தம்பி, ஒரு வேலை இருக்கு வாரீங்களா?”  என்றார், அவர் முகத்தையே பார்த்தபடி புரியாத பாவனையில் நின்றேன். 

“நம்ம வளவுக்கு போய் அத்தியாவசிய பொருள் விநியோகம் செய்யனும்,  ஆளில்லை , போகலாமா?” என்று விளக்கினார். பட்டென்று வண்டியில் ஏறி அவரருகில் அமர்ந்துகொண்டேன், ஆசுவாசமாக இருந்தது. வேகமெடுத்து தெருவைவிட்டு வெளியேறி வளவைநோக்கி போய்க்கொண்டிருந்த வண்டியிலிருந்து அந்த மாதிரி மேலும் வீடுகளை பார்க்க முடிந்தது, தகடுகளால் மூடப்பட்டு சுற்றிலும் வெள்ளைக்காரம் தூவப்பட்ட வீடுகள்.  

“ஊரெல்லாம் மனுசங்க ஈசல் மாதிரி செத்து விழுந்துகிட்டிருக்காங்க, இல்லையா?” என் பார்வையை புரிந்துகொண்டதுபோல சண்முகம் மாமா கேட்டார். 

“நான் இதைப்பற்றிய எந்த நியூஸையும், கவனிக்கறதில்லை மாமா” என்றேன்  

“அப்பா எப்படி? அவரும் கவனிக்கமாட்டாரே?” 

“ஆமாம், நாங்க இரண்டுபேரும் இதை கவனிப்பதுமில்லை, இதைப்பற்றி பேசுவதுமில்லை” என்றேன். 

சண்முகம் மாமா அர்த்தத்துடன் புன்னகைத்தபடி மெளனமாக வண்டியை குறுகலான வளவு தெருவுக்குள் கவனமாக ஒடித்து திருப்பினார்.  

“தம்பி என்ன செய்யப்போறீங்க?” நான் புரியாமல் பார்த்தேன்  

“இது வரலாற்றிலே ஒரு முறை நடக்கிற விஷயம், எதிர்காலத்துல உங்களுக்கு பிள்ளை குட்டி பிறந்து அவங்க இதைப்பத்தி படிச்சு தெரிஞ்சுக்கிட்டு உங்ககிட்ட கேட்டா என்ன சொல்வீங்க? ஈசல் மாதிரி மனுஷங்க செத்து விழுந்த காலத்தில நீங்க என்ன செய்துக்கிட்டிருந்தீங்க அப்பா? அப்படின்னு உங்க குழந்தைங்க கேட்டா என்ன சொல்லப்போறீங்க?” 

என்னிடம் பதில் இல்லை, நான் எங்கேயோ ஆழமாக சீண்டப்பட்டது போல உணர்ந்தேன். மாமா வண்டியை மெதுவாக உருட்டிச்சென்று தெருவின் மத்தியில் இருந்த அரச மரத்துக்கு அடியில் நிறுத்தினார். அவர் இறங்கினதும் நானும் இறங்கிக்கொண்டேன். வண்டியின் பின்னே சுமையேற்றும் பகுதியின் தடுப்புக்கதவை அதன் கொக்கியை அவிழ்த்து இறக்கினார், அரிசி பருப்பு வகைகள் இதர அத்தியாவசிய சாமான்கள் நிரப்பப்பட்ட இரண்டடி உயர  வெள்ளைநிற சாக்குகள் ஒன்றன்மீது ஒன்றாக அழுந்திக்கிடந்தன, அவற்றின்மேல் பச்சை நிறத்தில் ‘அன்பளிப்பு சண்முகவேல்’ என்று அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களை கண்டதும் என் ஆழத்தில் ஏதோ ஒன்று புரண்டது. இன்னதென்று தொட்டுச்சொல்ல முடியாத ஒரு அசைவு, பூட்டுக்குள் தவறான சாவியை விட்டு குடையும்போது ஏற்படும் ஒருவித அசௌகரியம். 

சாக்குப்பைகளை கீழிறக்கி வைத்தோம், ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று விநியோகித்தோம், மாமாவுக்கு எல்லோரையும் பழக்கமிருந்தது, எல்லா சாக்குகளையும் என்னிடமிருந்து வாங்கி அவர் கையாலேயே கொடுத்தார், சிரித்தபடி சில வார்த்தைகள் பேசினார், சில வீடுகளில் வேண்டாம் என்று மறுத்தபோதும் “எவ்வளவு நாள் லாக்டவுன் தொடரும் என்று தெரியாது, வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று கட்டாயப்படுத்தி வாங்கிக்கொள்ள வைத்தார்.  மூடப்பட்டிருந்த வீடுகளில் சாக்கை வைத்துவிட்டு போகலாம் என்று நான் யோசனை சொன்னபோது மறுத்தார், நான்கு பைகளை தவிர எல்லாமே செலவாகிவிட்டன. அவற்றை டெம்போவில் திரும்ப ஏற்றிவிட்டு வண்டியில் ஏறி கிளம்பினோம். 

வளவுத்தெருவை விட்டு வெளியேறும்போது விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல ஆரம்பித்தார் “தம்பி என்ன நினைக்கறீங்க? மனசுக்குள்ள ஓடறதெல்லாம் முகத்தை பார்த்தாலே தெரியுதே” என்றார், நான் எதுவும் சொல்லாமல் மெல்ல சிரித்தேன். எந்த அளவு குறைவாக பேசி எதிராளியை அதிகமாக பேச  வைக்கிறோமோ அந்த அளவுக்கு உரையாடல் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தொழில் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று.  

“உங்க அப்பா எல்லாவற்றுக்கும் கணக்கு பார்ப்பார், நான் சின்ன வயசுல ஊருக்காக உழைத்ததை சோத்துக்காக வேலை செய்யறேன் என்று புரிந்துகொண்டார், ஆமாம் அப்போ வயித்துக்கு அடிமையாகத்தான் இருந்தேன், எந்நேரமும் பசிதான், ஆனா பசிச்சவன் மத்தவங்களுக்கு எந்த உபகாரமும் செய்யக்கூடாதுன்னு சொல்லறது, அவன்கிட்ட மத்தவங்களுக்கு கொடுக்க ஒண்ணுமில்லைன்னு சொல்லறது எவ்வளவு பெரிய அவமரியாதை தெரியுமா? அவனோட மனிததன்மையை மறுக்கிறதுக்கு சமம், அவனை வெறும் பசித்தவிலங்கு என்று சொல்வதற்கு சமம் ” மாமாவின் குரல் உயர்ந்தது. எனக்கு எரிச்சலாக இருந்தது. 

“மாஸ்க்கை மேல ஏத்தி விட்டுக்கோங்க மாமா” என்றேன். எதிராளிகள் உணர்ச்சிவசப்பட்டு என்னைவிட மேலான இடத்தில தங்களை வைத்து பேசும்போது இப்படி பொய்யான அக்கறையுடன் சாதாரணமாக எதையாவது சொல்லி இடறிவிடுவது என்  வழக்கம், சண்முகம் மாமா அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இதையெல்லாம் சொல்ல காத்திருந்திருக்கிறார் என்று பட்டது. சன்னதம் வந்தது போல பேசிக்கொண்டிருந்தார், அவர் பேசுவது என்னுடனா இல்லை எங்களை சுற்றியுள்ள காற்றுடனா என சந்தேகம் வந்தது. 

“எல்லாத்துக்கும் கணக்கு பாக்கிறவங்களுக்கு, வயித்துபசி மட்டும்தான் கண்ணுக்கு தெரியும், ஆனா மனுஷனுக்கு பல பசிகள் இருக்கு தம்பி. விலங்குகள் கிட்ட இல்லாத பசிகள். வயித்துப்பசியை மாதிரி இந்த உலகத்திலிருந்து எடுத்து தீர்க்கிற பசி இல்லை, கொடுத்து தீர்க்கிற பசி. ஆமாம், அன்றைக்கு எனக்கு சோத்துக்கு வழியில்லை, வயித்துபசி பெரும்பாடா இருந்தது, ஆனா என்னைக்குமே அந்த பசி மத்த பசிகளை அணைக்க நான் அனுமதிச்சதில்லை, தீபம் மாதிரி ஆணையவிடாம அந்தப் பசிகளை கைபொத்தி காத்து வச்சிருக்கேன், ஒரு துளியானாலும் ஒருதுளி நெய்விட்டு என் நெஞ்சுக்குள்ள விளக்கேத்தி வைத்திருக்கிறேன், அணையாவிளக்கு” நிலைத்த கரும்பாறைமேல் ஒழுகிச்செல்லும் கலங்கிய ஆற்றுநீர் போல அர்த்தமற்ற அவர்சொற்கள் என்னை மூழ்கடித்து கடந்துசென்றன. மாமாவின் கண்கள் கலங்கியிருக்கிறதா என சந்தேகம் வந்தது. மெல்ல அமைதியடைய துவங்கினார். 

“இதுல ஒரு சுயநலம் இருக்கு, மறுக்கலை. நாம ஒருத்தருக்கு ஒரு உதவி செய்தா, ஒரு பொருளை கொடுத்தா, கண்ணுக்கு தெரியாத வேற ஏதோ ஒண்ணு நமக்கு எப்படியோ திரும்பி வருது, ஒத்துக்கறேன். நாம் செய்யற உதவி நமக்குள்ள இருக்கிற பசியை நிறைக்கிறது. நாம செய்யறது எல்லாமே நம்ம பசிக்காகத்தான். ஆனா இது இல்லாம இந்த உலகத்துல எதுவுமே நடக்காது தம்பி, கொடுக்கறது வெளிமூச்சு மாதிரின்னா வாங்கிக்கறவங்களுடைய நன்றி நமக்கு உள்மூச்சு மாதிரி, இந்த கொடுக்கல் வாங்கல் இல்லாம எதுவுமே நடக்காது, இதுக்கு பயந்துகிட்டு ஒண்ணுமே செய்யாம இருக்கறது மூச்சை பிடிச்சு வைத்துக்கொள்வது மாதிரி. எதுக்கு பயப்படணும்? தைரியமா ஆழமா மூச்சு விடணும். அப்பத்தான் மனுஷன் உயிரோட இருப்பான், இல்லன்னா அவன்  வாழற பிணம் மட்டும்தான், இப்போ பாக்கிற இல்லையா? எத்தனை பேர் பிராண வாயு கிடைக்காம உள்மூச்சு எடுக்க முடியாம சாகிறங்க” 

பெருமாள் கோவிலைத்தாண்டி ஊருக்குள் வண்டியை ஓட்டியபடியே மெல்ல பேசி அடங்கினார் சண்முகம் மாமா, நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் வீட்டு முன்னே வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டேன். ஒரு பையன் வாசலிலேயே அவருக்காக காத்திருந்தான், மலிவான நீல நிற ஜீன்ஸ் பேண்டும் சம்பந்தமில்லாத பெரிய ஆங்கில வாசகங்கள் கொண்ட டிஷர்ட்டும்  அணிந்த  ஒல்லியான இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க முகக்கவசம் அணிந்த பையன். நான் இறங்கியதும் ஏறி காலியான இருக்கையில் அமர்ந்துகொண்டான்.அவர் வண்டியை அணைக்கவில்லை, ஸ்டியரிங் சக்கரத்திலிருந்து கையை எடுக்காமல்  அமைதியான குரலில் என்னிடம் சொன்னார் சண்முகம் மாமா. 

“தம்பி நான் சொன்னதெல்லாம் ஏதும் தப்பா நெனைச்சுக்காதீங்க, உங்க அப்பாகிட்ட பேசுற தைரியம் எனக்கில்லை, ஒத்தை வார்த்தையிலே வெட்டிப்போட்டு விடுவார், ஏதோ உங்களை விட வயசுல பெரியவன் அப்படிங்கற உரிமையில சொன்னேன், தப்புன்னா மன்னிச்சுக்குங்க, ஆனா ஒண்ணு  மட்டும் யோசிச்சு பாருங்க, நானும் நம்ம ஆட்களும் லயன்ஸ் கிளப் கூட சேர்ந்து ராதா கிருஷ்ணா ஹாஸ்பிடல்ல அவங்களுக்கு வேண்டியதை செய்துக்கிட்டிருக்கோம்…” என்று சொல்லி நிறுத்தி ஏதோ வார்த்தைகளை தேடுவதுபோல  தயங்கினார்  

“அதுக்கு என்னடா பேரு கதிரேசா?” என்று வண்டியில் அவர் அருகே அமர்ந்திருந்த பையனிடம் நெற்றியை சுருக்கிக்கொண்டு  கேட்டார் 

கதிரேசன் பேச்சு தெளிவாக கேட்பதற்காக முகக்கவசத்தை கீழிறக்கி “வாலண்டியரிங் அண்ணா, நாங்க எல்லாம் ஹாஸ்பிடல்ல வாலண்டியரிங் வேலை செய்யறோம்” என்றான், பலமுறை சொல்லி பழகியிருப்பான் என தோன்றியது. சொல்வதை மட்டுமே திரும்பி சொல்பவன் என்றும் பட்டது. 

சண்முகம் மாமா என்னைப்பார்த்து “ஆமாம், அங்கே ஹாஸ்பிடல்ல படுக்கை, பிணவறை எல்லாம் நிறைஞ்சு வழியுது, செத்த பிணத்தை எடுத்து சுடுகாட்டுக்கு கொண்டுபோக ஆள் இல்லாம திண்டாடுறாங்க, பாதி பிணங்களை எடுக்க குடும்பத்தாருங்க யாரும் வர்றதில்லை, அவங்களுக்கும் உயிர்பயம். நாம பிணத்தை தூக்க வேண்டாம்,  வைத்தியம் பாக்க வேண்டாம், தொற்றுநோய் வார்டு பக்கமே போக வேண்டாம், அது தனி பில்டிங்ல நடக்குது, ஹாஸ்பிடல்ல இருக்கிற மத்த வேலைகளை நாம பாத்துக்கிட்டா அவங்க தொற்றுநோய்  வார்டுல செய்கிற வேலை எளிதாகும். நிறைய ஆள் தேவை இருக்கு, ஆனா என்னைமாதிரி கதிரேசன் மாதிரி படிக்காத முட்டாள் பசங்க தான் இறங்கி வேலை செய்யறோம், படிச்சவங்க எல்லாம் பாதுகாப்பா வீட்டுக்குள்ளேயே இருக்காங்க. நீங்க கொஞ்ச நாள் வந்து அங்கே நடக்கிற வேலைகளை பார்த்து அதை கொஞ்சம் சரிபண்ணி முறைப்படுத்தி கொடுத்தா பெரிய உபயோகமா இருக்கும், யோசிச்சு பாருங்க”  என்றார். 

நான் “யோசிக்கிறேன் மாமா” என்று தலையாட்டியபடி பதிலளித்தேன், அவர் கதிரேசனிடம் திரும்பி, “வண்டியில ஏறி உக்காந்துட்டா ஆச்சா? லோடு காலியா இருக்குதான்னு பாத்தியா? நாலு சாக்கு மீதி இருக்குது பின்னால, உங்க அப்பனா வந்து இறக்கி வைப்பான்?” என்றார். 

கதிரேசன் படபடவென்று இறங்கி வண்டியின் பின்புறம் சென்று கொக்கிகளை கழற்றி கதவை இறக்கி வண்டியில் ஏறினான். அங்கே வளவுத்தெருவுக்கு எடுத்துச்சென்றதில் கொடுக்காமல் மீதமிருந்த நான்கு சாக்குகளை எடுத்து கீழே தரையில் இறக்கி  “எங்க வைக்கிறது சார்?” என்று கத்தினான். 

“என் தலையில வை, வந்து வாய்ச்சிருக்கு பாரு, கொண்டுபோய் கார் ஷெட்டுக்கு அடியில ஏணிக்கு பக்கத்துல வைடா” என்று சிரித்தபடி உரக்க சொன்னார். கதிரேசன் இரண்டு பைகளை தூக்கிக்கொண்டு சண்முகம் மாமாவின் வீட்டை நோக்கி நடக்க துவங்கியதும் சண்முகம் மாமா என்னை பார்த்து சிரித்தபடியே “மூளை மட்டும்தான் தான் இல்லை, மத்தபடி நல்ல நம்பிக்கையான பையன், எவ்வளவு பணத்தை வேணும்னாலும் நம்பி அவன் கையில கொடுக்கலாம், ஒத்த பைசா சாப்பிட மாட்டான், பாவம் அவனுக்கு அப்பா இல்லை, நாலு வருசமா எங்கிட்ட இருக்கான், சாப்பாடு படுக்கை எல்லாம் நம்ம வீட்டிலேயே தான்”  என்றார்.  

அந்த டெம்போவை போலவே அவனையும் தரை விலைக்கு வாங்கியிருக்கிறார் என நினைத்தபடி வண்டிக்கு பின்னால் கண்ணை கூசவைக்கும் பச்சைநிற இரும்பு காம்பவுண்டு கதவை திறந்து  சண்முகம் மாமாவின் வீட்டுக்குள் போகும் கதிரேசனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன், அடிக்கும் இளம் சிவப்பு வண்ணம் பூசி ஒன்றுடன் ஒன்று பொருத்தமில்லாமல் ரசனையற்று கட்டப்பட்ட வீடு. எல்லா கதவுகளும் ஜன்னல்களும் திறந்து போடப்பட்டிருந்தன, பாத்திரங்கள் விழும் சத்தமும்  டீவியிலிருந்து வரும் ஒலியும்  உள்ளிருப்பவர்கள் உரத்த பேச்சுஓசையுடன் கலந்து இங்கே வீதிவரை கேட்டது, கல்யாண வீடு போல. சீராக மூச்செடுக்கும் நுரையீரல் போல. 

சாக்குகளை உள்ளேவைத்துவிட்டு காம்பவுண்டு கேட்டை மூட மறந்து கதிரேசன் வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டான், சண்முகம் மாமா என்னைப்பார்த்து “அப்போ  சரி” என்கிற பாவனையில் தலையாட்டிவிட்டு வண்டியை கிளப்பினார்.  

நான் மெல்ல நடந்து தெருவை அடைத்து நிற்கும் வாகனங்களை கடந்து என் வீட்டை அடைந்தேன். கண்ணை உறுத்தாத கருப்பு நிற காம்பவுண்டு கதவை திறக்குமபோது ஒரு நொடி நின்றேன். எல்லா ஜன்னல் வாயில்களும் அடைக்கப்பட்டு மரணநிசப்தத்துடன் திறனிழந்த நுரையீரல் போல நிற்கும் என் வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தப்போது இயல்பாக ஒரு முடிவை அடைந்தேன். உள்ளே  சென்று தூங்கிக்கொண்டிருந்த கணினியை எழுப்பி விடுப்புக்கான மின்னஞ்சல்களை  அனுப்பினேன். 

அடுத்தநாள் காலையில் காபியுடன் அப்பாவிடம் முன் நின்றபோது விஷயத்தை சொன்னேன்,  முதல் வார்த்தையாக “சண்முகத்தை பார்த்தியா?” என்றார், “ஆமாம். ஆனா நானே தான் முடிவெடுத்தேன், ஒரு வாரம் போய் வாலண்டியரிங் பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்” என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை, காபியின் கசப்பில் கண்மூடி அமிழ்ந்திருந்தார். நான் சண்முகம் மாமாவை செல்பேசியில் அழைத்து சொல்லிவிட்டு உடைமாற்றி ஹெல்மெட்டும் ஷூவும் முகக்கவசமும் அணிந்து என்னுடைய யமஹாவை உதைத்து கிளப்பினேன், ஒரே உதையில் விழித்துக்கொண்டான், என்னை அவன் என்றுமே கைவிட்டதில்லை, ஏறி அமர்ந்தபோது என்னுடைய பழைய கல்லூரி நாட்களை போலவே ஈருடல் ஓருயிராக உணர்ந்தோம். குடியிருப்பிலிருந்து வெளிவந்து ஆட்களும் வாகனங்களுக்கும் அற்ற நெடுஞ்சாலையில் ஏறி  கோவை நோக்கி செல்லும் திசையில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மருத்துவமனையை அடையும்போது காலை பத்துமணி இருக்கும். 

நான் செய்திகளில் வரும் தினசரி சாவு எண்ணிக்கைகளை கவனிப்பதில்லை, இந்தியாவில் தொற்றுப்பரவலின் இரண்டாம் அலை வரப்போகிறது என்றும், ஆரம்பித்துவிட்டது , இன்னும் தீவிரமடையப்போகிறது என்றெல்லாம் கவனத்துக்கு வரும் செய்திகளில் இருந்து ஒரு சித்திரத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்தேன். தமிழ் நாட்டில் கோவை பற்றியெரியப்போகிறது என தெரிந்திருந்தது, நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி ராதாகிருஷ்ணா மருத்துவமனையின் பழைய கான்கிரீட் தோரணவாயிலை கடந்ததுமே உண்மையான சித்திரம் முகத்தை அறைந்தது.  

வாயிலிலிருந்து மருத்துவமனை முகப்புக்கு போகும் சாலையின் வலதுபுறம் கார் பார்க்கிங் முழுக்க மக்கள் அங்கங்கே சிதறி கூடியிருந்தார்கள், மடித்துக்கட்டிய வெள்ளை வேட்டியும் கலைந்த தலையும் கரிய உடலும் கொண்ட ஆண்கள், வாடிய பூவும் கசங்கிய சேலையும் கண்களில் தூக்கமும் கொண்ட ஒல்லியான பெண்கள்,  கோவையை சுற்றியிருந்த எல்லா கிராமங்களிலிருந்தும் நோயாளிகள் வந்து குவிந்திருந்தாலொழிய இவ்வளவு கூட்டம் இருக்க முடியாது, பைக்கை செலுத்தி கார் பார்க்கிங்கை ஒட்டிய அரசமரத்தடியில் குவிந்து கிடந்த வாகனங்களிடையே இடம் கண்டுபிடித்து ஸ்டான்ட் போட்டு நிறுத்தினேன், ஒரு எண்ணம் தோன்றியது. இது நோய் தீர்க்கும் இடமல்ல, இங்கிருந்துதான் நோய் பரவுகிறது. உடனே வெளியேறி விடவேண்டும். 

ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி நிமிர்ந்தபொழுது மலையுச்சியிலிருந்து குதிக்கப்போவதுபோல, நரம்புகளும் நாளங்களும் வீங்கியதுபோல உணர்ந்தேன். ஆழமாக மூச்சுவிட்டு உள்ளே கலைந்தவற்றை சமன்படுத்திக்கொண்டேன். புற்றிலிருந்து வெளியேறி சிதறிப் பரவும் எறும்புகளைபோல மனிதர்கள் எந்த ஒழுங்கும் இலக்கும் இல்லாமல்  நகர்ந்துகொண்டிருந்தார்கள். காலையில் சண்முகம் மாமாவை அழைத்து முடிவை சொன்னபொழுது நேராக இங்கே வரச்சொல்லியிருந்தார். இப்போதைக்கு காத்திருப்பதை தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. பிறப்பையும் இறப்பையும் நாள்தோறும் நிகழ்த்தியபடி அசையாது என்முன் நின்றிருந்த கட்டிடங்களில்  மனதை படியவைத்து சமநிலையை மீட்க  முயன்றேன். 

ராதாகிருஷ்ணா மருத்துவமனைக்கு பள்ளிக்காலத்தில் பலதடவை வந்திருக்கிறேன், அதன் முகப்புத்தளம் செயல்படும் முதன்மைக் கட்டிடம் அரை நூற்றாண்டுக்கும் மேல்  பழமையானது, மழுங்கடிக்கப்பட்ட விளிம்புகள் கொண்ட கனமான பழைய சுவர்கள், மேற்புறம் வளைவுகள் கொண்ட மர ஜன்னல்கள். மொசைக் தரை என்று பரிச்சயமான கட்டிடம், அதைச்சுற்றி அன்று காலியான சோளக்காடு இருந்த இடத்தில இப்பொழுது கத்திமுனை போன்ற விளிம்புகள் கொண்ட கனகிரீட் சுவர்களும், ஒளியை பிரதிபலிக்கும் தாள்கள் ஒட்டப்பட்ட கண்ணாடி சுவர்களும் கலந்து, பலஅடுக்குகளாக கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடம் நிற்கிறது. 

ரிசப்ஷன் பகுதியும், அதன் இடதுபுறத்தில் இரண்டு ஆம்புலன்சுகளும், இறைந்ததுபோல சக்கர நாற்காலிகளும், கைவிடப்பட்ட ஸ்ட்ரெச்சர்களுமாக அவசர சிகிச்சை பிரிவு இன்னும் பழையகட்டிடத்தில் இயங்குவதை காண முடிந்தது, நடுவே கேன்டீன் வளாகம் இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும்படி நின்றது. தாதிகளுக்கான வெள்ளை சீருடையில் உடைந்து விழுந்துவிவிடுவது போல ஒடிசலான ஆரோக்கியமற்ற உடலுடன் இளம் பெண்கள் நடமாடுவதை காண முடிந்தது. சிறுமிகள், இவர்களா நோயாளிகளை காப்பாற்றப் போகிறார்கள்? அபத்தமாக இருந்தது, அலைபேசியை எடுத்து சண்முகம் மாமாவை அழைத்தேன், யாருக்குமே கிடைக்காத, எங்குமே கையிருப்பற்ற, நோய்த்தொற்றுத் தடுப்பூசியை கட்டாயம்  எடுத்துக்கொள்ளுமாறு மக்களை மன்றாடி வற்புறுத்தும் அரசின் விளம்பரம் காலர் ட்யூனாக ஒலித்து அடங்கியது. சண்முகம் மாமா அழைப்பை எடுக்கவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை, அலைபேசியை பாக்கெட்டில் போட்டுகொண்டு கட்டிட முகப்பை நோக்கி நடக்கத்துவங்கினேன். 

முகப்பருகே அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் கைவிடப்பட்ட சக்கர நாற்காலியில் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் தலையை அண்ணாந்தபடி சிரமத்துடன் மூச்சிழுத்தபடி அமர்ந்திருந்தான், சிகப்பு அரைக்கை சட்டை, கலைந்த தலை, எண்ணெய் வடியும் முகம், கரிய திண்மையான உடல், அவன் பின்னே மஞ்சள் சேலையும் முகக்கவசமும்  அணிந்த அவனுடைய இளம் மனைவி ஒருகையை இடுப்பில் வைத்து இன்னொரு கையால் சேலைத்தலைப்பில் பாதி முகத்தை மறைத்து அழுதபடி நின்றிருந்தாள். பூமியெங்கும் வானெங்கும் நிறைந்திருக்கும் பிராணவாயுவை ஒருதுளி உடலுக்குள் செலுத்திக் கொள்வதற்க்காக அவன் ஏங்கி ஏங்கி மூச்செடுப்பதை கண்ணில் நீர்வழிய பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். 

நான் அவர்களை கவனமாக  தவிர்த்து போதிய இடைவெளி விட்டு முகக்கவசத்தை சரிப்படுத்தியபடியே படிகளில் ஏறி வரவேற்பு மேசையை அடைந்தேன், ஆளற்ற மேசைத்தடுப்புக்கு பின் கரிய விளிம்புகளுடன் ஒளிரும் கணிப்பொறி திரையும் யாருமற்ற சிவப்பு இருக்கையும் இருந்தது, மேசைமேல் காலியான சானிடைசர் புட்டிகள், பார்வையாளர்களுக்காக முகக்கவசம் அடுக்கி வைக்கும் தட்டும் காலியாக இருந்தது. மெல்ல மெல்ல எல்லா கட்டமைப்புகளும் உடைபட்டு சரிவதை போலத் தோன்றியது. புதிதாக கட்டுவதற்காக குண்டுவைத்து தகர்க்கப்படும் பழைய கட்டிடங்கள் தூசியை கிளப்பியபடி உள்பக்கமாக சரிவது போல.  

“ரிசப்ஷனில் காத்திருக்கிறேன்” என சண்முகம் மாமாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அங்கே ஓரத்தில் வரிசையாக போடப்பட்டிருந்த சாம்பல்நிற பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்ததும் உள்ளிருந்து ஏதோ ஒன்றால் தாக்கப்பட்டது போல பட்டென்று எழுந்துகொண்டேன், இந்த நாற்காலியில் நான் அமர்ந்த்தேகூட என் மரணத்துக்கு காரணமாக அதன் துவக்கப்புள்ளியாக இருக்கலாம். இங்கே எனக்கு முன்னே ஒரு நோயாளியோ அல்லது நோய்  தொற்று இருந்தும் அதன் அறிகுறி தென்படாத ஒருவரோ அமர்ந்திருக்கலாம், அவர்கள் மூச்சுக்காற்று இதன்மேல் படிந்திருக்கும்,  அதன் கைப்பிடியில் அவர்கள் கை வைத்திருக்கலாம், அங்கிருந்து நான் எனக்கான கிருமிகளை ஒப்பி எடுத்துக்கொண்டிருக்கலாம், இதோ என் மரணம் துவங்கிவிட்டது, அவ்வளவுதான். மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கடைசியில் இவ்வளவு எளிதாகவா வாழ்க்கை முடியும்?, இங்கே இறந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இவ்வளவு எளிதாகவா தங்கள் மரணத்தை தருவித்துக் கொண்டார்கள்?, இருக்கலாம், ஆனால் நான் அப்படியில்லை, எனக்கும் குடும்பத்துக்கும் தேவையான ஆக்சிஜனை சேகரித்து வைத்திருக்கிறேன், அப்படி எளிதில் சரணடைய மாட்டேன். 

சும்மா உட்கார்ந்து இருப்பதை விட ஒரு சுற்று நடந்து சூழலை  அறிந்துகொள்ளலாம் என்று தோன்றியது, எந்த தரவுகளும் பயனற்றவை அல்ல, எப்போதாவது உதவும். இடப்பக்கமாக நடந்து அவசர சிகிச்சை பிரிவின் உள்பகுதியின் அருகே போய் எட்டிப்பார்த்தேன், பச்சை திரை தடுப்புகளால் மறைக்கப்பட்ட காலியான இரு படுக்கைகள், சிகப்பு, மஞ்சள், பச்சை என நோயாளிகளின் நிலையை வகைப்படுத்தும் முறையை விளக்கும் பெரிய சுவரொட்டியும், கடிகாரமும், காலண்டரும் தொங்கிய சுவர்கள்.  வெப்பமானி, ஸ்டெதஸ்ஸ்கோப், ரத்தஅழுத்த மானி, கைமுனையில் மாட்டி ரத்தத்தில் கலந்திருக்கும் பிராண வாயுவின் அளவை சோதிக்கும் கருவிகள் என வகை வகையாக உபகரணங்கள் இறைந்து கிடந்த மேசை. அதன் பின்னிலிருந்த நாற்காலியில் அமர்ந்து மேஜையில் தலைகவிழ்த்து உறங்கிக்கொண்டிருக்கும் வெள்ளை சீருடை அணிந்த சிறுமியின் உடல்கொண்ட பெண், என் காலடிச்சத்தம் கேட்டு தலை உயர்த்தி பார்த்தாள். மின்னும் கரிய நிற முகம், செப்பு போல குவிந்த உதடுகள், புருவங்களின் மத்தியில் சிகப்பு ஓட்டுப்பொட்டு, மூக்குத்தி அணிந்த தட்டையான மூக்கு, சோகையான உருவம். கடுமையான வறுமையில் வாழ்நாள் முழுக்க ஊட்டச்சத்தற்ற உணவை மட்டுமே உண்டு வளர்ந்த உடல். ஆனால் அதற்கு முற்றிலும் தொடர்பற்றபடி உயிர்விசை திகழும் விரிந்த ஒளிமிக்க கண்கள். நல்ல உணவும் படிக்க வாய்ப்பும் கிடைத்திருந்தால் நல்ல மருத்துவராக ஆகியிருப்பாள் என ஏனோ தோன்றியது. 

முகத்தை துடைத்துக்கொண்டு “பேஷண்ட்டை முன்வழியா கூட்டிகிட்டு வாங்க சார்” என்றாள். 

“இங்கே தான் கொரோனா தொற்று நோயாளிகளை அட்மிட் செய்வதா?” என்று இந்தியாவில் திறக்காத கதவுகளையும் திறக்கவைக்கும் வல்லமை கொண்ட அமெரிக்க உச்சரிப்பு கலந்த ஆங்கிலத்தில் கேட்டேன்.  

“சாதாரண பேஷண்ட் மட்டும்தான் சார் அட்மிஷன் பண்ணறோம், கொரோனா வார்டு நிரம்பிடுச்சு, இருக்கிற நோயாளிகளுக்கே ஆக்சிஜன் இல்லை, வெண்டிலேட்டர் இல்லை, ஒண்ணுமே இல்லை, கொரோனா அறிகுறியோட வருபவர்களை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போகச்சொல்லி அனுப்பி வைக்கணும்னு ப்ரோட்டோகால் சார், வெளியே பாத்திருப்பீங்களே, இடம் கிடைக்காம உட்காந்திருக்காங்க” என்றாள். வெளியே மூச்சுக்கு தவித்தபடி சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்தவனை சொல்வதாக புரிந்துகொண்டேன். 

“கொரோனா வார்டு எங்கம்மா இருக்கு?” 

“அட்மிஷின் இல்லை சார், நீங்க வேணும்னா மேனேஜ்மென்ட்ல யார்கிட்டயாவது பேசிப் பாருங்க, ரொம்ப வேண்டியவங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும். கொரோனாவான்னு கண்டுபிடிக்கற டெஸ்ட் கூட தீர்ந்திடுச்சு, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுத்து பாப்போம், நுரையீரல் பாதிச்சிருக்குன்னா அப்படியே கொரோனா வார்டுக்கு அனுப்பிக்கிட்டிருந்தோம், போன வாரத்திலிருந்து சிடி ஸ்கேன் மெஷின்ல கூட ஏதோ பிரச்சினைன்னு சொல்லறாங்க, இப்ப எம்ஆர்ஐ மெஷின்ல ஸ்கேன் பண்ணறோம் ” 

“அட்மிஷன் வேணாம்மா, நான் லயன்ஸ் கிளப் வாலன்டியர் கோஆர்டினேட்டர், தினசரி ஒவ்வொரு டிபார்ட்மெண்டா போய் என்ன தேவை அப்படின்னு பார்ப்போம்” 

எழுந்து நின்று சீருடையை சரிபடுத்திக்கொண்டு “கொரோனா வார்டை நானே காமிக்கறேன் சார்” என்று வெளிவந்தாள். தனிமையில் பேச்சுத்துணையை நாடுபவள் என நினைத்துக்கொண்டேன், மரணம் கண்முன் நிழலாடும் இந்த நாட்களில் எல்லோரும் ஏதோ வகையில் பிறரின் கையை பற்றிக்கொள்ள நினைக்கிறார்கள்.  

கேன்டீன் வளாகத்தை நோக்கி நிறுத்தாமல் பேசிக்கொண்டே நடக்கத்துவங்கியவளை பின்தொடர்ந்தேன்.  

 “ஒரு ட்ரீட்மெண்டும் இல்லை சார், ஸ்டெராய்டு கொடுத்து பாப்போம் அது நுரையீரல் சுவாச நாளத்தில் வீக்கத்தை குறைக்கும்,  மூச்சுஎடுப்பது கொஞ்சம் எளிதாகும்,  ஆனால் அது  நோயெதிர்ப்பு சக்தியை குறைச்சிடும், நல்லா யோசிச்சு செய்யனும். ஏற்கனவே சோகையான நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறவங்களுக்கு கொடுக்க முடியாது. இன்னொரு மருந்து சொல்லறாங்க, அது அந்த கிருமி உருவாக்கற நொதிகளை அழிச்சு அது தன்னை காப்பி பண்ணி பெருக்கிக்க முடியாம ஆக்குது..” 

“நோய்கிருமி மனுஷங்களை மூச்சு முட்ட வைக்கிற மாதிரி, இந்த மருந்து அந்த கிருமியை மூச்சு முட்ட வைக்குது , இல்லையா?” என்றேன். 

அவள் நடையை நிறுத்தி என்னை திரும்பி பார்த்தாள். “நீங்க மருத்துவ துறைல இருக்கீங்களா சார்?” என்றாள். 

“இல்லை சிஸ்டர், சும்மா இன்டர்நெட்டுல படிப்பேன்” 

“ஆமாம், ஆனா யார் கிருமின்னு தெரியலை, மனுஷங்க தான் இந்த பூமி மேல கிருமி மாதிரி பரவி அழிச்சுக்கிட்டிருக்கோம், பூமியைச்சுத்தி கரியமில வாயுவை நிரப்பி, ஆக்சிஜன் இல்லாம ஆக்கி, கொரோனா நோயாளியுடைய நுரையீரல் மாதிரி பூமியை மூச்சுவிடாம ஆக்கிகிட்டிருக்கோம், நம்மை கட்டுப்படுத்த பூமி உருவாக்கின நோயெதிர்ப்பு சக்திதான் இந்த கிருமி அப்படின்னு சில சமயம் தோணும்” 

நான் மெல்லிய சிரிப்புடன்  “நல்ல கற்பனை, தடுப்பூசி எடுத்துக்கிட்டிங்களா?” என்று கேட்டேன்.  

காண்டீனை கடந்து சீராக செதுக்கி பராமரிக்கப்பட்ட செடிகள் நிறைந்த புல்வெளிகளினூடே புதிய கட்டிடத்தை நோக்கி நடந்துகொண்டே சொன்னாள்  

“முதல் டோஸ் எடுத்துக்கிட்டேன் சார், இரண்டாவது டோஸ் யாருக்குமே  கிடைக்கலை” 

புதிய கட்டிடத்தை அடைந்தோம், நடைபாதை அந்த கட்டிடத்தின் முகப்புதள  படிக்கட்டுகளில் சென்று முடிந்தது, நீர்பரப்புபோல பளபளக்கும் சலவைக்கல் தரையில் நடந்து செல்பவர்களின் உருவம் கண்ணாடிபோல பிரதிபலித்தது. இந்த கட்டிடத்திற்கு  தனியாக வரவேற்பு மேசை இருந்தது. 

“இதுதான் சார் கொரோனா வார்டு, ஆனா நோயாளிங்க மெயின் கட்டிடத்துக்கு தான் முதலில் வந்து அட்மிட் ஆகணும், அதுவும் காலி பெட் இருந்தாத் தான் ” 

“இது என்ன இடம் ?” என்று கட்டிடத்தின் இடப்புறத்தில் தர்ப்பாய் பந்தல் போட்டு இடுப்பளவு பச்சை வண்ணம் பூசப்பட்ட தகர ஷீட்டுகளால் மறைக்கப்பட்ட பகுதியை பற்றி கேட்டேன்  

“இது கொரோனா ஓவர்ஃப்ளோ வார்ட் சார்”   மெல்ல இரண்டடி எடுத்துவைத்து  எட்டிப்பார்த்தேன், வரிசையாக போடப்பட்ட வெள்ளை நிற குறுகலான இரும்புக்கட்டில்கள் மேல் பச்சை படுக்கைவிரிப்புகள். விதவிதமான நோயாளிகள், முப்பது வயதுக்கு கீழே யாரும் இல்லை, நிறைய வயசாளிகள், ஒருசிலர் அருகே தரையில் பிராணவாயுக்கலன் வைக்கப்பட்டு வெண்டிலேட்டர் வழியாக மூச்சு இழுத்துக் கொண்டிருந்தார்கள், சிலர் குப்புறப்படுத்து நெஞ்சுக்கு தலையணை வைத்துக்கொண்டிருந்தார்கள். 

“நுரையீரல் உண்மையில் நம்ம நெஞ்சுப் பகுதியை விட முதுகுக்கு பக்கத்தில் தான் இருக்குது, குப்புற படுக்கும்போது ஏற்கனவே வீங்கியிருக்கிற நுரையீரல் பகுதிகள் நசுங்காமல் இருக்கும், சுவாசம் எடுக்கறது கொஞ்சம் வசதியா இருக்கும்” என்றாள். நீரிலிருந்து எடுத்து கரையிலிடப்பட்ட மீன்கள் புரண்டு புரண்டு காற்றுக்காக தவித்து உயிரை வெளியேற்றும் சித்திரம் மனதில் வந்துபோனது. 

“ஆனால் குப்புற படுத்து மூச்சு விடுவதெல்லாம் ஒரு அளவுக்கு தான் சார், ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கலைன்னா உயிர் பிழைக்கறது கஷ்டம், அது எங்கேயுமே கெடைக்கறதில்லை, வசதி இருக்கிறவங்க அவங்களே ஆக்சிஜன் ஏற்பாடு செய்துக்கறாங்க, அப்படி ஆக்சிஜன் சிலிண்டரோடு வரவங்களை அட்மிட் பண்ணிக்கலாம்னு மேனேஜ்மென்ட் சொல்லியிருக்கு” என்றாள். 

தொடர்ந்து “நீங்க உள்ளே போகணும்னா, தலையிலிருந்து கால்வரை மூடும் தடுப்புக்கவசம் போட வேண்டியிருக்கும், அனுமதி வாங்கணும்” 

“இல்லை, இடம் எங்கேன்னு தெரிஞ்சா போதும், அப்புறமா நான் முறையா அனுமதி வாங்கினபிறகு உள்ளே போகிறேன்” என்றவாறு திரும்ப நடந்தேன். என்னை பின்தொடர்ந்தாள்.  

“உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்றேன். 

“நிறைய பேர் கொரோனா அறிகுறியோட வராங்க அவங்களை திருப்பி அனுப்பணும் அதுதான் பெரிய வேலை, அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும்” என்றாள். 

அவளுடைய அறையை அடைந்ததும் விடைபெற்றுக்கொண்டு ரிஷப்சன் பகுதிக்கு வந்தபோது கதிரேசன் எனக்காக அங்கே காத்திருந்தான். “சண்முகம் சார் நீங்க இங்கே இருப்பிங்க கூட்டிட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சார்” என்றவனிடம் “ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டு ரிசப்ஷனுக்கு அருகே வரிசையாக அமைந்திருந்த ஆய்வறைகளை நோக்கி சென்றேன். ஒரு பிரிச்சினையை தீர்க்கும்முன் கிடைக்கும் எல்லா தகவல்களையும் எந்த தீர்மானங்களும் முடிவுகளும் இல்லாமல் திரட்டிக்கொள்ளவேண்டும், அதை வைத்து என்ன செய்வது என்பதெல்ல்லாம் அப்புறம்தான். 

அலைபேசியில் நோய்த்தொற்று கண்டுபிடிப்பதற்கு என்ன வழிகளெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று தேடினேன், முதலில் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கணக்கெடுக்க வேண்டும். அது ஆபத்தான அளவுக்கு கீழே போயிருந்தால், நுரையீரல் எந்தளவுக்கு பதிப்பப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும், மூன்று வழிகள் இருந்தன, ஊடுகதிர்களை உடல்வழியே செலுத்தி நுரையீரல் கனமற்று இருப்பதை எக்ஸ்ரே வழியாக உறுதிப்படுத்தலாம்,.அது இரு பரிமாண சித்திரத்தை மட்டுமே அளிக்கும், சிடி ஸ்கேன் அதே வேலையை முப்பரிமாணத்தில் செய்யும், அதுவே பரவலாக முதன்மை சோதனையாக உபயோகப்படுத்தப் படுகிறது, அது முடியாத பட்சத்தில் மின்காந்த கதிர்களை உடலை ஊடுருவச்செய்து நுரையீரல் பாதிப்பை  எம்ஆர்ஐ கருவிகளை கொண்டு கண்டுபிடிக்கலாம்.  அதைத்தான் இங்கே ஒரு வாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். 

எக்ஸ்ரே எடுக்கும் அறை திறந்து கிடந்தது, உள்ளே யாருமில்லை, சிடி ஸ்கேன் அறையின் கதவை திறந்து உள்ளே பார்த்தேன், வெள்ளைநிற குகைவாயில் போல வட்டவடிவ இயந்திரத்தின் முன் நாக்கு போல நோயாளியை கிடத்தும்  படுக்கை காலியாக கிடந்தது. எம்ஆர்ஐ இயந்திரம் இருந்த அறையை திறந்தேன், அங்கே இயந்திரத்தின் முன்னே நின்றிருந்த சீருடை அணிந்த பணியாளன், “கதவை மூடுங்க மெஷின் ஆன்ல இருக்கு” என்று கத்தினான், கொஞ்சம் பெரிய வெள்ளை நிற குகை என்றுபட்டது, நோயாளியும் படுத்திருந்தார்,  கதவை உடனே அடைத்தேன், அறையை மூடாமல்  சோதனை நடப்பது நியாயமாக எனக்கு அதிர்ச்சி அளித்திருக்கவேண்டும், ஆனால் அந்த சூழலில் அப்படி தோன்றவில்லை. 

கட்டிட முகப்பை ஒட்டிய படிக்கட்டு அருகிலிருந்து பெண்குரலில் பெரிய அழுகைச்சத்தம் எழுந்து வந்தது, கதிரேசன் எழுந்து சென்று பார்த்துவிட்டு வந்தான். 

“ஆளு பயில்வான் மாதிரி ஆரோக்கியமாத்தான் இருந்தான் சார், போயிட்டான், இனி கார்பரேஷனுக்கு சொல்ல வேண்டியது தான், அது சீக்கிரம் வந்திருவாங்க, இல்லேன்னா பெரிய பிரச்சினை, மனுஷன் செத்தாலும் உள்ளே இருக்கிற கிருமிகள் சாவறதில்லை ”.  

நான் படியேறும்போது கவனமாக தவிர்த்த அவன் முகத்தை கண்ணில் கொண்டுவந்தேன், ஒருபோதும் என்னிடம் இருக்கும் பிராணவாயு கலனை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு உயிரும் தனக்காகவே வாழ்கிறது, அதுவே அதன் முதல் கடமை, அப்படியானால் அப்பாவுக்கு தேவைப்பட்டால்? அம்மாவுக்கு தேவையானால்? அந்த கேள்வியை பதில் சொல்லாமல் எங்கோ ஆழத்தில் அழுத்தி வைத்தேன். கண்களை மூடி நெற்றியை தடவிக்கொண்டேன். ஒரு காபி குடித்தால் இந்த வதையிலிருந்து தப்பிக்கலாம் என்று தோன்றியது. 

“நீங்க கவலைப்படாதீங்க சார், நமக்கெல்லாம் நோய் வந்திச்சுன்னா இடம் கிடைக்கும், கொஞ்சம் படுக்கைகளை ரகசியமா வேண்டியவுகளுக்கு ஒதுக்கி காலியா வைச்சிருக்காங்க, அதுமட்டுமில்லை, இன்னொன்னு சொல்லறேன் , ஆனா நீங்க யார்கிட்டயும் சொல்லக்கூடாது..” 

என்று நிறுத்தியவனை திரும்பி பார்த்தேன் “இன்னும் சில நாள்ல படுக்கைகள் சீக்கிரம் காலியாகிடும், ஏன்னா ரொம்ப வயசானவங்க , பெரிய வசதி இல்லாதவங்களையெல்லாம் ரொம்ப நாள் இங்கே இருக்க விடுறதில்லை இவங்க” 

“என்ன செய்வாங்க?, பேஷண்டை எப்படி குணமாகம திருப்பி அனுப்புவாங்க?” என்றேன்  

கதிரேசன் என் அருகே வந்து ரகசியமான குரலில் கிசுகிசுத்தான் “ரெண்டு மூணு நாள் பாக்கிறாங்க, தேறாதுன்னு தோணினா ஊசி போட்டுடறாங்க, போட்டு மூணு மணி நேரத்தில ஜோலி முடிஞ்சிடுது” 

“நீ மாஸ்க்கை ஒழுங்கா போடுடா” என்றபடி அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றேன். கதிரேசனின் முகம் சுருங்கிவிட்டது. பல திசைகளிலும் இருந்து இழுக்கப்படும் ரப்பர் போல என் அகம் இழுபட்டு சிதைந்து கொண்டிருந்தது, எப்படியாவது இங்கிருந்து விடுபட்டு  என்னுடைய கூட்டுக்குள் போய்  அடைந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. 

“சண்முகம் மாமா எங்கே? வா போகலாம்” என்று கதிரேசனிடம் சொன்னேன். மாமா கட்டிடத்துக்கு வெளியே தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட திருமண மண்டபத்தில் இருந்தார், நேராக அவரிடம் போய் என்னால் இங்கே இருந்துகொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்றும், வேண்டுமானால் என் நிர்வாக தொடர்புகளை உபயோகித்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பேசிப்பார்க்கிறேன் என்றேன். 

“அதை செய்ய்யுங்க தம்பி, அதுதான் இங்கே இப்போ முக்கியம், கேக்கறதுக்கு விளையாட்டா இருக்கு, உலகம் முழுக்க இண்டு இடுக்கெல்லாம் காத்து நெறைஞ்சிருக்கு, ஆனா காத்து கிடைக்காம மனுஷங்க சாகறாங்க, கடல் நடுவில குடிதண்ணி கிடைக்காம சாகற மாதிரி”  

“உங்களுக்கு பயமா இல்லையா? ”  என்று கேட்டேன்,  

“தம்பி , நாம எவ்வளவு தான தர்மம் பண்ணியிருப்போம், அது நம்மள காப்பாத்தாதா?, நீங்க வீட்டுக்கு போங்க, அங்க இருந்து முடிஞ்சதை செய்ய்யுங்க”  என்றார். 

நான் அங்கிருந்தவர்கள் தொலைபேசி எண்களை அலைபேசியில் குறித்துக்கொண்டு வேகமாக என் வண்டியை நோக்கி நடந்தேன், ஹெல்மட் அணிந்து வண்டியை உதைத்து கிளப்பி கட்டிட முகப்பருகே அவசர சிகிச்சை பிரிவை தாண்டும்பொழுது அங்கே கறுப்பு பிணவண்டி நின்றிருந்தது, தலை முதல் கால்வரை கவசம் அணிந்த மாநகராட்சி பணியாளர்கள் உடலை சக்கர நாற்காலியிலிருந்து கீழிறக்கி கிடத்தி துணிகளால் சுற்றிக்கொண்டிருந்தார்கள், மஞ்சள் சேலை அணிந்த அந்தபெண் அழுது ஓய்ந்து பிணத்தருகே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள், என்னுடைய பிராணவாயு கலனை கொடுத்திருந்தால் அவனுக்கு படுக்கை கிடைத்திருக்கும், அவனுக்கு சிறிய குழந்தைகள் இருக்கலாம், குணமாகியிருந்தால் இன்னும் சில நாட்களில் அவனுடைய எளிய வீட்டின் குறுகலான படுக்கையில் அவர்கள் அனைவரும் நெருக்கி படுத்து ஒருவரை ஒருவர் உடலால் உணர்ந்தபடி உறங்கியிருப்பார்கள், ஏற்கனவே குழந்தைகள் உறங்கும்போது அவன் உடல்வாசனைக்கு பழகியிருக்கலாம்,  இனி நள்ளிரவில் விழித்து தந்தையை தேடும் குழந்தைகளுக்காக அவள் அவனுடைய சட்டைகளை முகரக் கொடுப்பாளாயிருக்கும். 

கால்களிடையே வாலை சுருட்டிக்கொண்டு பின்வாங்கி ஓடும் நாயை போல உணர்ந்தபடி வீட்டை நோக்கி வண்டியை ஓட்டினேன், மே மாத வெயில் உடலை எரித்தது, உடலில் எங்கோ மலம் ஒட்டியிருப்பது போல உணர்ந்தேன், உடலில் அல்ல ஆன்மாவில், எங்கோ ஆழத்தில், உடலை எரித்தாலும் தொட முடியாத ஆழத்தில் என்னில்  மலம் ஒட்டியிருக்கிறது, அப்பாவுக்கும் தான், அவரிடமிருந்து தான் எனக்கு ஒட்டிக்கொண்டதா?  

வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தி, நேரே குளியலறைக்கு போய் நீண்டநேரம் என்னை நீராலும் சோப்பாலும் கழுவினேன், மனம் தெளிந்தது போல இருந்தது. வீட்டுக்குள் வந்து உடை மாற்றியபோது மெல்ல சிரித்துக்கொண்டேன். யார் கண்டது சண்முகம் மாமா தடுப்புஊசி போட்டுக் கொண்டிருக்கலாம், அதை ரகசியமாக வைத்துக்கொண்டிருக்கலாம். இரண்டாம் அலை துவங்குவதற்கு சில நாட்கள் முன்வரை தடையில்லாமல் தடுப்புஊசி  கிடைத்துக்கொண்டிருந்தது, அப்போதுதான் அரசாங்கம் தடுப்புஊசி  போட்டுக்கொள்ளும்படி தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து மக்களிடம் மன்றாட ஆரம்பித்தது, ஆஸ்பத்திரியில் இறந்தவன் அப்போது அதை கேட்கவில்லை அவன் மரணம் அங்கேதான் துவங்கியது, அவனுடைய முட்டாள்தனத்துக்கு என்னை பலிகொடுக்க முடியாது. சண்முகம் மாமா தினந்தோறும் மருத்துவமனைக்கு போனாலும் நோய் தொற்றாமலிருப்பதை பார்த்தால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். மெல்ல மெல்ல காரணங்களை உருவாக்கி சமநிலையை ஏற்படுத்திக்கொண்டேன். 

நான் நினைத்ததைவிட ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரமாக இருந்தது, என் நிறுவனத்தின் தகவல் கிடங்கிலிருந்து பிராணவாயு உற்பத்தியாளர் விவரங்களை எடுத்து முதலில் கோவையில் இருந்தவர்களிடம் தொடர்புகொண்டு பேசினேன், அப்புறம் மொத்த மாநிலத்துக்கும் என் எல்லையை விஸ்தரித்துக்கொண்டேன், நிஜமாகவே கடுமையான தட்டுப்பாடு இருந்தது, உலோகங்களை உருக்கி இணைக்கும்போது நெருப்பை உருவாக்க பிராணவாயு உபயோகிக்கப்படும், அதை உற்பத்தி செய்பவர்களையும் தொடர்புகொண்டேன், எல்லா இடங்களிலும் கைவிரித்தார்கள்.  

நான் சில நாட்களுக்கு பின் எல்லாவற்றையும் கைவிடத் துவங்கினேன், மெல்ல மெல்ல என் கூட்டுக்குள் வசதியாக பின்னிழுத்து ஒடுங்கிக் கொண்டேன், சண்முகம் மாமாவின் தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் அவரை   முற்றாக தவிர்த்தேன். மூன்று நாட்கள் கழித்து விடுப்பை ரத்துசெய்து வேலைக்கு திரும்பினேன். காலையில் எழுந்து எனக்கும் அப்பாவுக்கும் பால் கலக்காத காபி தயாரித்தேன். தினமும் மாடிக்கு போய் பிராணவாயு கலன் இருக்கிறதா என பார்த்துக்கொண்டேன். நடை பயிற்சி செய்வதை நிறுத்திக்கொண்டேன், நிபுணர்கள் கணித்தபடியே கோவை பற்றி எரிந்தது, மின் மயானங்கள் இருபத்திநாலு மணிநேரமும்  இயங்கத்துவங்கியது, அப்படியிருந்தும் பிணங்களை எரிக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. எல்லா தர்க்கங்களையும் அறங்களையும் மீறிய ஒன்று உயிர் விடாய் கொண்டு மனிதர்களை பாரபட்சமின்றி வாழ்க்கையிலிருந்து பறித்துத் தின்று பசியாறிக் களித்து  நகரெங்கும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதன் காலடி எங்கள் தெருவிலும் விழத்துவங்கியது, எனக்கு வலதுபுறம் இருந்த வீட்டை தகடுகளால் மூடி வெளுப்புக்காரம் தூவி தனிமைப்படுத்தினார்கள். நாங்கள் வெளியே வருவதை நிறுத்திக்கொண்டோம்.  

சண்முகம் மாமா தன்னுடைய பணிகளை ஒருபோதும் நிறுத்தவில்லை, ஒவ்வொரு நாளும் அவரும் கதிரேசனும் கிளம்பி மருத்துவமனைக்குப்  போவதை என் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நோய் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதை நிறுத்திக்கொண்டேன், இசை கேட்க துவங்கினேன். இரவில் நெடுநேரம்  விழித்திருக்காமல் சீக்கிரம் படுக்கைக்கு போகத்துவங்கினேன்,  நாட்கள் சீராக நகரத்துவங்கிய போதுதான் ஒருநாள் அது நிகழ்ந்தது. 

கதவு தட்டப்படும் ஓசையை கேட்டு விழித்தபோது இரவு ஒருமணி இருக்கும், அம்மாவோ அப்பாவோ எழுவதற்கு முன் எழுந்து கதவை திறந்தபோது கதிரேசன் கதவருகே நெருங்கி நின்றிருந்தான்.  

“சண்முகம் சாருக்கு சரியான மூச்சுத்திணறல், ஆம்புலன்ஸ் வந்து ராதா கிருஷ்ணா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்கு” என்றான் 

“முதல்ல நீ தூரமா நில், மாஸ்க்கை மேலே ஏற்று“ என்றேன். கதிரேசன் அதிர்ச்சியுடன் தள்ளி நின்றான்.  

“எப்போதிலிருந்து மூச்சுத்திணறல்?” என்று கேட்டேன் 

 “ரெண்டு நாள் முன்னாலே  இருந்தே சளியும் லேசா விட்டு விட்டு காய்ச்சலும் இருந்தது, வேற பிரச்சினை ஒன்னும் இல்லை ஆனா இண்ணைக்கு திடீர்னு மூச்சு வாங்க முடியாம ஆயிட்டது, இப்போதான் அவரை ஏத்திக்கிட்டு  அம்புலன்ஸ் கிளம்பிச்சு, லயன்ஸ் கிளப் காரங்க கூட போயிருக்காங்க, உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன், அங்கே ஆஸ்பத்திரியில சரியான ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஒரு சிலிண்டர் கூட இல்லை, நீங்க ஏதாவது செய்ய முடியுமா? ” என்றான். 

“எல்லாரையும் கூப்பிட்டு பாக்கறேன், நீ கிளம்பு நான் வரேன்” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தேன். எங்கேயும் ஆக்சிஜன் இருக்காது, கேட்க வேண்டிய அவசியமே இல்லை. மனம் சலனமற்று இருந்தது, என் ஆன்மாவில் இருக்கும் அழுக்கை களைய மேலும் ஒரு வாய்ப்பு, ஆம் அதுதான் இது, மெல்ல எழுந்து உடை மாற்றி கதவை திறந்து வெளியேறி மாடிக்கு ஏறினேன்.  

நீர் தொட்டிக்கு கீழிருந்த சுவர் மறைப்பிலிருந்து ஆக்சிஜன் கலனை வெளியே எடுத்ததும், உள்ளிருந்து மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன்?, முட்டாள்தனம், இதே போல நாளை நான் நோயில் விழுந்தால் என்ன செய்வது? அப்பா விழுந்தால் ? அம்மா விழுந்தால்? கேள்விக்கு விடை தெரியாமல் கலனை எடுத்த இடத்தில வைத்துவிட்டு கீழே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன், மலக்கிடங்கில் அமர்ந்திருப்பது போல  உணர்ந்தேன். ஏன் எங்கள் வீடு எப்பொழுதும் இரண்டு நாள் முன் மரணம் நிகழ்ந்த வீட்டைப்போல இருக்கிறது என மனதின் ஆழத்தில் தெளிந்து வந்தது. 

விருட்டென்று எழுந்து படியேறி சென்று கலனை வெளியே எடுத்தேன், மீண்டும் ஒருகணம் தயங்கி என்னை கேட்டுக்கொண்டேன், சண்முகம் மாமாவுக்காக நான் ஏன் சாக வேண்டும்? என்னைவிட பல வயது மூத்தவர், திருமணம் குழந்தைகள் எல்லாம் அனுபவித்துவிட்டார், அவர் தான தர்மம் செய்திருக்கிறாரே, அதுவே அவரை காப்பாற்றட்டும், கலனை அங்கேயே போட்டுவிட்டு கீழே வந்து வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே சாக்கடையில் முங்கியது போல.உணர்ந்தேன், திரும்பி அப்படியே மாடிக்கு படியேறினேன். 

ஆக்சிஜன் கலனை தொட்டதும் முதலில் நடந்தது போல அதே உணர்வுகள் வேறு வார்த்தைகளில் கேள்விகளாக எழுந்தன, கலனை விட்டுவிட்டு கீழே வந்தேன், வீட்டுக்குள் போக முடியாமல் அங்கேயே தயங்கி நின்று மாடிக்கு ஏறினேன். கலனை பார்த்ததுமே முட்டாளை போல உணர்வேன்.மாடியிலிருந்து கீழே இறங்கியவுடன் இழிவாக உணர்ந்து மறுபடியும் மேலே மாடிக்கு வேகமாக ஏறுவேன், மேல்படியிலிருந்து மாடிக்கு கால் வைத்ததுமே அப்படியே திரும்பி கீழிறக்கினேன், கீழே கடைசிப்படியை மிதித்ததுமே திரும்பி மேலேறத் துவங்கினேன். அதே எண்ணச்சுழல் ஆனால் வேறு வேறு வார்த்தைகள். அப்புறம் அதே வார்த்தைகள் அதே சுழல், பெரிய வட்டமாக ஆரம்பித்த அந்தச்சுழல் நேரம் போகப்போக சிறிதாகியிருக்கவேண்டும், அப்படி அந்த எண்ணச்சுழல் வட்டம் சிறிதாகும்தோறும் நான் ஏறி இறங்கிய படிகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்திருக்க வேண்டும், எல்லாம் கலங்கலாகத்தான் நினைவிருக்கிறது,  எத்தனை முறை மாடிப்படிகளில் மேலும் கீழுமாக ஏறி இறங்கியிருப்பேன் என தெரியாது, அப்பா வந்து என் தோளில் கைவைத்து பிடித்து நிறுத்தியபோது வெறும் மூன்று படிகளை மேலும் கீழுமாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். அவர் கை பட்டதும் எதிலிருந்தோ விழித்துக்கொண்டேன், என்ன நடந்தது என்று தெரிய சில நிமிடங்கள் பிடித்தது, தோளை தொட்டு என்னை படியிலேயே உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலை நீட்டினார். 

“கதிரேசனை வந்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துப்போக சொல், முடிஞ்சதும் வந்து சீக்கிரம் படு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனார், நான் சில நிமிடங்கள் தலையில் கைவைத்து மாடிப்படியில் உட்கார்ந்தபடி என்னை அள்ளித் தொகுத்துக்கொண்டேன், அலைபேசியை எடுத்து கதிரேசனை அழைத்தேன், சண்முகம் மாமாவின் ஸ்கூட்டரில் வந்தான், ஆக்சிஜன் சிலிண்டரை மாடியிலிருந்து  கீழிறக்கி அவன் கையில் கொடுத்தேன், “என்ன சார் இவ்வளவு கனக்குது, இரும்பா? அலுமினிய சிலிண்டர் கிடைக்கலியா?” என்றான். அவனுக்கு பதில் சொல்லாமல் ஸ்கூட்டரில் கால் வைக்கும் இடைவெளியில் குறுக்காக அதை அவன் வைப்பதை பார்த்துக்கொண்டு நின்றேன். 

 “இந்த சிலிண்டரை பத்திரமா வைச்சிருக்கணும், இதை விட்டுட்டு எங்கேயும் நகரக்கூடாது, சண்முகம் மாமாவுக்கு மட்டும் தான் உபயோகிக்கணும், புரியுதா ? நீ சிலிண்டரோடு வந்துக்கிட்டிருக்கிற விஷயத்தை ஆம்புலன்சில் அவர் கூட இருக்கிறவங்களுக்கு இப்பவே கூப்பிட்டு சொல் ” என்று சொல்லி அவன் அழைத்துப்பேசுவதை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அனுப்பி வைத்தேன். மனம் தெளிந்திருந்தது, வீட்டுக்குள் வந்து கதவை தாளிட்டு என் அறைக்கு போய்  தாக்கப்பட்டதுபோல படுக்கையில் சரிந்து மறுகணமே உறங்கத்துவங்கினேன். 

காலையில் சண்முகம் மாமாவின் வீட்டிலிருந்து வந்த அழுகையும் ஓலமும் கேட்டு எழுந்த போதே என்ன என்று ஊகித்துவிட்டேன். இந்தியாவில் மரண வீடுகளில் நிகழும் அழுகையின் ஆபாசத்தை என்னால் என்றுமே சகிக்க முடிந்ததில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் கையில் இருந்தும் இவ்வளவு சீக்கிரம் எப்படி மரணம் நடந்தது என்றுமட்டும் தெரியவேண்டும்.  எழுந்து காபி போடாமல் வெளியே வந்தேன். அம்மாவும் அப்பாவும் கேட்டுக்கு உள்ளேயே சாலையோரம் முகக்கவசம் அணிந்தபடி வேப்பமர நிழலில் சண்முகம் மாமாவின் வீட்டை பார்த்தபடி நின்றிருந்தார்கள். நான் ரோட்டில் ஏறி மர நிழலை கடந்து அவர்  வீட்டை அடைந்தேன், கதிரேசனை பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமாக விசாரித்து தகவல்களை சேர்த்து நிகழ்ந்ததை தொகுத்து முழு சித்திரமாக ஆக்கிக்கொண்டேன்.  

பிராணவாயுக் கலனுடன்  கதிரேசன் மருத்துவமனையை அடைந்தபொழுது, சண்முகம் மாமா நோயாளியாக உள்ளே அனுமதிக்கப் பட்டிருந்தார், வீட்டிலிருந்து கிளம்பியபோதே மூச்சு எடுப்பதற்காக ஒவ்வொரு முறையும் நெஞ்சு விம்ம ஏங்கும் நிலையில் தான் இருந்திருக்கிறார். கொரோனா என்று தெரிந்தாலும் நெறிமுறைப்படி அதற்கான சோதனைகள் செய்யவேண்டியிருந்தது,  சிடி ஸ்கேன் இயந்திரம் பழுதான நிலையிலேயே இருந்ததால் எம்ஆர்ஐ இயந்திரம் உள்ள அறைக்கு எடுத்து செல்லப் பட்டிருக்கிறார்,  ஸ்கூட்டரை நிறுத்தி சண்முகம் மாமாவை  தேடிக்கொண்டு ஆக்சிஜன் சிலிண்டரை குழந்தைபோல ஏந்திக்கொண்டு வந்த கதிரேசன் மூடப்படாத அந்த அறைக்குள் நுழைந்திருக்கிறான். வந்த வேகத்தில் வளையத்துக்குள் நுழைய தயாராக கிடத்தப்பட்டிருந்த சண்முகம் மாமாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தபின் தான் இயந்திரத்தை இயக்குபவர் அவனை கவனித்திருக்கிறார், ஆனால் அதற்குள் இயந்திரத்தின் காந்தப்புலம் பிராணவாயுக் கலனை கதிரேசனின் கைகளில் இருந்து  பிய்ப்பதுபோல விசையுடன் தன்னை நோக்கி இழுத்து குகை வாயில் போல இருந்த வட்ட வடிவ காந்தத்துடன் ஒட்டவைத்துக்கொண்டது. அம்புபோல அவன் கைகளில் இருந்து விடுபட்ட கலன் இயந்திரத்தில் மோதிய வேகத்தில் நெளிந்து உடைந்து திரவ நிலையில் இருந்த ஆக்சிஜனை வெளித்தள்ளியது, இயந்திரத்துக்குள் நுழைய  தயாராக கிடத்தப்பட்டிருந்த சண்முகம் மாமாவின் முகத்தில் விழுந்த திரவ ஆக்ஸிஜனை மூச்சுக்காக ஏங்கிக்கொண்டிருந்த அவர் உள்ளிழுத்துக்கொண்டார்.  

என்னால் இது எதையுமே நம்ப முடியவில்லை, உறுதிப்படுத்திக்  கொள்வதற்காக கதிரேசனை தேடினேன், அவனை யாருமே பார்க்கவில்லை என்றார்கள். சண்முகம் மாமாவின் உடல் நேரடியாக மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது, சமூகஇடைவெளி கடைப்பிடிக்கப்பட்ட அந்த நாட்களிலும் அவருடைய  இறுதி ஊர்வலத்தில் நிறைய கூட்டம் சேர்ந்துவிட்டது, நான் கலந்துகொள்ளவில்லை, அதை பொறுப்பேற்று நடத்திய அரிமா சங்க நண்பர்கள் கடைசியாக முகம் பார்ப்பவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என அறிவித்தபோது சண்முகம் மாமாவின் தொலைபேசி அழைப்புகளை போலவே அதையும் தவிர்த்தேன்.  சடலங்களை பார்ப்பதை நான் எப்போதுமே தவிர்ப்பேன். ஆனால் உடலை பார்த்தவர்கள் கடுங்குளிர் நிலையில் இருந்த திரவவாயு பட்ட இடமெல்லாம் தீக்காயம் போல கருகியிருந்ததாக சொன்னார்கள். எல்லாம்  முடிந்து சில  நாட்கள் கழிந்து இது தினசரிகளில் செய்தியாக வந்தது, பிராணவாயுவால் மூச்சுத்திணறி மரணம் நிகழ்ந்ததாக காவல்துறை நிகழ்த்திய  மருத்துவ புலனாய்வு அறிவிக்கை தெரிவித்தது. இதைப்போல வினோத மரணம் மருத்துவ வரலாற்றிலேயே ஒன்றிரண்டு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டது.  

நானே கூட இதையெல்லாம் மறந்துவிட்டேன். ஒன்றைத்தவிர, மரணம் நிகழ்ந்த விதத்தை அப்பாவிடம் விவரித்தபோது  அவர் கண்களில் மின்னல் போல ஒருகணம் வெட்டி மறைந்த  உணர்வை, நான் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியது அது. 

இந்த விஷயத்தையெல்லாம்  நான் அதிகம் வெளியே சொல்வதில்லை. கட்டுக்கதை என்பார்கள், நம்பமாட்டார்கள், ஆனால் அன்று அப்படி பல விஷயங்கள் நடந்தன. நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, அது ஒரு காலம், அந்தக் கதைகளை சொன்னால் எதிர்காலத்தில் நம்பக் கூட மாட்டார்கள். அப்படியொரு  காலம்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “உயிர்வளி – இறுதி பாகம்”

  1. டைலர் மிஷின் வைத்துக்கொண்டு தைக்கும்போது, நூல் ஊசிவழியாக மிகவேகத்தில் செல்லும். அந்த வேகத்துக்கான தனித்த அழகு உண்டு. மாறாக, தரையில் அமர்ந்து கையில் தைக்கப்படவேண்டிய துணியை எடுத்துவைத்து, நூற்கண்டைத் தேர்வுசெய்து, அதில் குத்திவைத்திருக்கும் ஊசியை விடுவித்து, நூலை ஊசிக்கண்ணில் சேர்த்து, துணியை ஆற அமர தைக்கும் ஒரு அழகு இந்தக் குறுநாவலின் எழுத்தில் வெளிபட்டுள்ளது. ஐன்ஸ்டீன் காந்தியைப் பற்றி சொல்லியதைப் போல முதல் வரி காலத்தைப் பற்றி தொடங்குகிறது. அதுவொரு காலம் என்ற இருவார்த்தைகளிலேயே, கதை நம்மை நிமிரவைத்து உள்ளே இழுத்துவிடுகிறது.

    கதை அந்தக் கால தற்கால விவரிப்பைத் தொடர்ந்து, அதற்கும் பின்னே சென்று மாமா கதாபாத்திரத்தின் அறிமுகம் மிக இயல்பாக வந்துள்ளது. கதையில் இருவேறு கதாபாத்திரங்கள். அப்பா-மாமா என்று இருமுனை பாத்திரங்கள் என்று முதலில் தோன்றினாலும், கதைசொல்லி கதை சொல்லி என்பதனாலேயே இன்னும் கூராகத் தெரிகிறார். கதைசொல்லி தனக்கென ஒரு வட்டத்தைக் கற்பனைசெய்துகொண்டு வாழ்பவன், நம் பெரும்பாலோரைப் போல. எந்த ஒரு முடிவுக்கும் ஒரு நூறு செக்லிஸ்ட் பாய்ண்ட்கள் வைத்துக்கொண்டு — எல்லாம் தன்னையும் தன் நெருங்கிய சுற்றத்தைக் கணக்கில் வைத்து– டிக் செய்து அதற்கேற்றால் போல் முடிவெடுப்பவன். அதற்கு மாறாக, மாமா, வட்டத்துக்கு வெளியே வாழ்பவர். சுயநலமற்றவர் என்று கூறமுடியாது, ஆனால் ”எவ்வளவு தான தர்மம் பண்ணியிருப்போம், அது நம்மள காப்பாத்தாதா” என்ற ஒரு கர்மா சார்ந்த சுயநலமுள்ளவர் என்று கூறலாம்.

    குறுநாவல் இக் கதாபாத்திரங்களின் இயல்புகளின் ஊடாக, தன்னுடைய அறம் என்றால் என்ன, சமூகத்தின் அறம் என்ன என்று விரிந்து செல்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய உலக நிகழ்வாக மாறியிருக்கும் பெருந்தொற்றின் பின்னணியில் ஊசிமுனை போல நம்மையே குத்தி, தைத்தபடி கிழித்துச்செல்கிறது.

    எழுத்தாளர் ஷங்கர் பிரதாப்பிற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.