வெள்ளாட்சி

“வெள்ளாட்சியம்மன் கோயிலுக்கு நாளைக்கு பொங்கல் வைக்க போகணும்.” என்றார் அம்மா. 

“என்ன பொங்கலம்மா?” என்றான் பெரிய அண்ணன்.

“சர்க்கரை பொங்கல்தான் கன்னு.”

“ஏம்மா, வெண்பொங்கல் வைக்க வேண்டியதுதான? நாட்டுக்கோழி குழம்புக்கும் வெண்பொங்கலுக்கும் ப்ச்… எப்படி இருக்கும். நினைச்சாலே நாக்குல எச்சில் ஊறுதுலாம்மா.” என்றான் பெரிய அண்ணன்.

“சாமிக்கு கார்த்திகை மாசம் வெண்பொங்கல் வைக்கக் கூடாது.”

“அது ஏம்மா ?” 

“வெண்பொங்கல் வச்சா சேவற்கோழி அறுக்கணும். கார்த்திகை மாசம் கோழி அறுத்து பொங்கல் வைக்க கூடாது.” என்றதும் அண்ணன்கள் இருவரின் முகம் வாடிப்போனதை என்னால உணர முடிந்தது. 

அப்போதைய காலகட்டத்தில் பிராய்லர் கறிக்கோழி கடைகள் எங்கள் ஊர்ப் பகுதிகளில் அவ்வளவாக அறிமுகம் இல்லாதிருந்தது. நடுத்தர குடும்பங்களில் கறி சாப்பிட வேண்டுமென்றால் தீபாவளி, தை மாத மாட்டுப்பொங்கல் போன்ற விசேஷ தினங்களில்தான் அவரவர் வீடுகளில் வளர்க்கும் கோழிகளைதான் அடித்து சாப்பிடுவார்கள். இன்னும் சொல்வதென்றால் நாட்டார் தெய்வ வழிபாடுகளில் தெய்வங்களுக்கு உரிய நேர்ச்சைகளை நிறைவேற்றும்போது கோழி அறுத்து வெண்பொங்கல் வைப்பார்கள். இது மாதிரி நேரங்கள்தான் கறிப் பிரியர்களுக்கு ஒரு வெகுமதியான நேரம் என்று சொல்லலாம். அம்மா சொன்னது அண்ணன்களுக்கு வேண்டுமானால் எமாற்றமாக இருக்கலாம், எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. எனக்கு பிடித்தது என்னவோ சர்க்கரை பொங்கல்தான். நான் எப்போதுமே கறி, மீன் சாப்பிடுவதில்லை. இதற்காகவே கறி, மீன் ஆக்குற நாட்களில் என் தந்தையிடம் நான் அடி, உதை வாங்காத நாட்களே கிடையாது. என் அண்ணன்களின் முக வாட்டத்தை நான் காண நேர்ந்ததைப்போல எனது சந்தோசத்தைக் கண்டு கொண்டவர்கள் “சர்க்கரைப் பொங்கல்னா, இந்த மண்டையனுக்கு சந்தோஷம் அப்படியே பொங்குமே.” என்று அவர்களின் ஏமாற்றத்தை என்னிடம் கோபமாக காட்ட ஆரம்பித்தார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு “மார்கழி மாசம் ஊய்க்காட்டு சுடலைக் கோவிலுக்கு பொங்கல் வைக்க வேண்டியதிருக்குது. அப்ப, வெண்பொங்கல் வச்சி கோழி அறுக்கலாம்.” என்றார் அம்மா.  

“எம்மா, தை பொங்கலுக்கு எல்லா காய்கறிகளும் வாங்கி சாமிக்கு படையல் வச்சிட்டு அப்புறம் அந்த காய்கறியெல்லாம் போட்டு சாம்பார் வைச்சி வெண்பொங்கல்ல ஊத்தி சாப்பிடுவோமே அது செம ருசியாக இருக்கும், என்னம்மா?” என்றேன் எனது பங்குக்கு.

“இப்ப, அந்த காய்கறிகளுக்கு எங்க போறது, அதெல்லாம் பருவத்துக்கு தகுந்ததுபோல விளையுற காய்கறிகள். அந்தந்த பருவத்துலதான் கிடைக்கும்.”

“இவன் ஒரு சாம்பார் பன்னி.  நம்ம வீட்டுலயும் வந்து பொறந்தான?” என்றான் சின்ன அண்ணன்.

“கொசுவுக்கு குழந்தைப் பிறந்ததுபோல நீயே பொறந்திருக்கும்போது நான் பொறந்ததுல என்ன தப்பு?”

“பாரும்மா, இவன் இப்படியே பேசிட்டு இருந்தான், ஒரு நாளில்ல, ஒரு நாள் வாய அடிச்சி, ஒடைக்கப்போறேன் பாரு.” 

“தம்பிதானய்யா… பேசிட்டான்.  அவன அடிக்கெல்லாம் கூடாது.”

“ஆம், நீ அடிக்கும்போது என் கை என்ன பூப் பறிக்க போகுமா?” 

“பேசாம இருல.” என்று அம்மா என்னை அடக்கியப்போது…

“எம்மா மார்கழி மாச ஊய்க்காட்டு சுடலைக்கு பொங்கல் வைக்கணும்னு சொன்னயே? அப்ப, இவனோட கோழியதான் அடிக்கணும்.” என்றான் சின்ன அண்ணன்.

“ஆம், ஆசை, தோசை. அஸ்கு தராங்க.” என்றபடி அம்மாவை பார்த்து “பாரும்மா, என் கோழியெல்லாம் எதுவும் பண்ண கூடாது.” என்றேன். 

“நீதான் கறி சாப்பிட மாட்டயே உனக்கு எதுக்கு கோழி?” என்றான் சின்ன அண்ணன்.

“நான் சாப்பிடலேன்னா என்ன? என் கோழிய விற்று வர்ற பணத்துல தீபாவளிக்கு புது துணி எடுப்பேன். இல்லேன்னாகூட அது  இருந்துட்டு போகுது. உங்களுக்குதான் கோழி இருக்குதுல்ல, அத அடித்து சாப்பிடுங்க.” 

என்னோட கோழி, உன்னோட கோழி என்று நாங்கள் சண்டையிட்டு   கொள்வதனால நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே கோழி வளர்க்கிறோம் என்றில்லை. எங்கள் வீட்டில் வளர்க்கிற கோழிகள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சுகள் பொறித்ததும் குஞ்சியின் நிறத்தை வைத்து ஆளுக்கு இவ்வளவு என்று பங்கிட்டு கொள்வோம். குஞ்சு பொரித்த சில தினங்களுக்கு  அவைகளுக்கு கரையான்களை உணவாக தருவோம். கறையான்களை உற்பத்தி செய்வதற்கு நல்ல காய்ந்த மாட்டு சாணத்தைச் சேகரித்து அதன் மீது சிறிய அளவில் சாரலாக தண்ணீர் தெளித்து ஒரு மண் கலயத்தில் அடைத்து கொண்டுபோயி தரையில் ஏற்கனவே கரையான் பிடித்திருக்கிற இடத்தில் கவுத்தி வைத்துவிட வேண்டும். காலையில் கவுத்தினால் மாலையில் எடுக்க வேண்டும், மாலையில் கவுத்தினால் மறுநாள் காலையில்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு கவுத்திய கலயத்தை எடுத்து வந்து சாணத்தை குஞ்சுகளுக்கு மத்தியில் வைத்து பிரிப்போம். சாணத்தில் கரையான்கள் வந்து குடி இருக்கும். அதை கோழிக் குஞ்சுகள் விரும்பி சாப்பிடும். மீண்டும் சாணத்தை எடுத்து கலசத்தில் அடைத்து அதே இடத்தில் கொண்டு போயி கவுத்திவிட்டு வருவோம். ஒரு நாளைக்கு இரு வேளை என்று உணவளிப்போம். இவ்வாறு பத்து நாட்கள் செய்வோம். இதை முறை பிரித்து செய்வோம். எனது முறை வரும் நாட்களில் எனது குஞ்சுகளை தனிப்பட்ட முறையில் நன்றாக கவனிப்பேன். எனது அண்ணன்களின் முறை வரும்போது அவர்களும் அவரது குஞ்சுகளை தனிப்பட்ட முறையில் நன்றாக கவனிப்பார்கள். குஞ்சுக்கு இரைக் கொடுப்பது சம்பந்தமாககூட எங்களுக்குள் அடிதடி வருவதுகூட உண்டு.

எங்கள் ஊரில் இரண்டே இரண்டு கோயில்கள்தான் இருந்தது. ஊருக்கு வடமேற்கு திசையில் ஊய்க்காட்டு சுடலைக் கோவிலும் ஊருக்கு தென்மேற்கு திசையில் வெள்ளாட்சியம்மன் கோவிலும். திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் குறத்தியூர் இருக்கிறது. குறத்தியூரிலிருந்து கிழக்கு முகமாக கல்யாணிபுரம் செல்லும் சாலையில் எங்கள் ஊரான ஒத்தவேம்பு இருக்கிறது. கல்யாணிபுரத்தில் இருந்து தெற்கு முகமாக கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கன்துறை இருக்கிறது.

அம்மா சொன்னது போல மறுநாள் நான், என் அப்பா, அம்மா, அண்ணன்கள், தங்கை என்று ஆறு பேர் மட்டுமே பொங்கல் வைக்க கோவிலுக்கு சென்றோம். சாமி சிலை ஒரு மிகப்பெரிய வேப்ப மரத்திற்கு அடியில் உருவம் செதுக்கப்படாத இரண்டு கல்லாக இருந்தது. மேற்கே ஒரு கல்லும் அதற்கு நேர் எதிரே அதே அளவு உள்ள மற்றொரு கல்லும் இருந்தது. இந்த கற்களில் எல்லாம் பல ஆண்டுகளாக வழிய வழிய எண்ணெய் தேய்த்து, தேய்த்து எண்ணெய் அழுக்கேறி கல் நல்ல மொழு மொழுவென்று இருந்தது. அதில் குங்கும பொட்டு வைத்து தெய்வம் என்று நெஞ்சில் பக்தியை தோற்றுவிக்கிற அளவில் தெய்வ கடாட்சமாக இருந்தது.

பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாடு கொண்ட கோவில்களில் கற்பகிரகத்தில் இருக்கும் சாமி சிலைக்கு நேர் எதிரே ஒரு சாமி சிலை இருக்கும். அவ்வாறு எதிரே இருக்கிற  சிலை எல்லா கோயில்களிலும் ஒருவராகதான் இருப்பார். அவரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுடலைமாட சுவாமி என்றும் சில இடங்களில் கருப்பசாமி என்றும் வேறு சில இடங்களில் ஐயனார் என்றும் சொல்வார்கள். என்ன பேரில் வழங்கப் பெற்றாலும் அவர் காவல்கார தெய்வமாகதான் இருப்பார்.


நான் மேற்கு திசையில் இருந்த தெய்வத்தை முக்கிய தெய்வம் என்றும் எதிர்ப்புறம் இருந்த தெய்வத்தைக் காவல்கார தெய்வம் என்றும் நினைத்துக்கொண்டு பொங்கல் வைப்பதற்கு அடுப்பு போடுவதற்கு குழித் தோண்டி கொண்டிருந்த என் தந்தையிடம் சென்று மேற்கு புறத்தில் இருந்த பெரிய சிலையைக் காட்டி “இது வெள்ளாட்சியம்மன் அதற்கு நேர் எதிரே இருக்கிறது சுடலைத் தானே?” என்றேன்.

“மேற்கு புறத்தில் இருக்கிற பெரிய சிலை வெள்ளாட்சியம்மன்தான், ஆனால், எதிரே இருக்கிறது சுடலை இல்ல. வெள்ளாட்சியம்மனோட புருஷன்.” என்றார் அப்பா.

“ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டின்னா, குறத்தியூரில் இருக்கிற முருகன், வள்ளி சிலைகள் போல பக்கத்துல பக்கத்துல ஜோடியாதான இருக்கணும். இவங்க ஏன் தனித் தனியே இருக்கிறாங்க.” என்றேன்.

“ம்… நீ கேட்கிறது வாஸ்தவம்தான். எல்லா தெய்வத்திற்கும் ஒரு கதை இருக்கிறதுபோல இந்த வெள்ளாட்சியம்மனுக்கும் ஒரு கதை இருக்குது.”

“கதையா! என்ன கதைப்பா?” என்று அண்ணன்கள் இருவரும் அப்பாவின் அருகில் வந்தார்கள்.

குழித் தோண்டுவதை நிறுத்திவிட்டு “சுமார் ஒரு நுற்றி ஐம்பது வருஷத்துக்கு முன்னால இருக்கன்துறையில ஒரு ஜமீன் குடும்பம் இருந்தது.” என்று கதையை சொல்ல அப்பா ஆரம்பித்தபோது பல மாதங்களாக துப்புரவு செய்யாததினால் சிலைகள் மூடிவிடும் அளவுக்கு வேப்ப மரத்தின் இலைகள் உதிர்ந்து கிடந்தது. அதையெல்லாம் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த அம்மா திரும்பி பார்த்துவிட்டு “ஆமா, வந்த வேலைய விட்டுட்டு அப்பன், மக்க எல்லாரும் சேர்ந்து வம்பளங்க. பொங்கல் வச்சிட்டு பொழுதோட வீட்டுக்கு போன மாதிரிதான். பச்ச பிள்ளைகளைக் கூட்டுட்டு காட்டுக்குள்ள பொங்கல் வைக்க வந்திருக்கோமே! பொங்கல வச்சிட்டு , பொழுதோட சாமிய கும்பிட்டுட்டு போவோம்கிற நெனப்பு இருந்தா இந்த மனுஷனுக்கு இப்படி வெட்டி கதைப் பேசிட்டு இருக்க  தோணும்மா? ஒரு மூனு கல்ல தூக்கிட்டுப் போட்டு அடுப்ப போடலாம். பொங்கல் வைக்க தண்ணீர் இல்ல. கிணத்துக்கு போயி தண்ணீர் கொண்டு வரலாம். அடுப்பு எரிக்க விறகு இல்ல. பக்கத்துல இருக்கிற தென்னந்தோப்புல போயி ஒரு கட்டு தென்ன ஓலைய கொண்டு வரலாம். இப்படி ஒரு பொறுப்பத்த மனுஷன எங்கயாவது பார்த்தது உண்டா?” என்றார் அம்மா.

“அடுப்புக்கு இலேசாவாது குழி தோண்டினாதான கல்ல துக்கி வச்சி அடுப்பு போட முடியும். சும்மா உனக்குத்தான் பேசத் தெரியும்னு பேசிட்டு இருக்காத. சின்ன பிள்ளைகள் கேட்டதுக்குதான பதில் சொல்லிட்டு இருக்கறேன். தெரிஞ்ச விஷயத்த தெரியாதப் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தா தானே நாலு விஷயமும் தெரியும். ஒரு தலைமுறை நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும்போது தான அனுபவ அறிவு கிடைக்கும்.”

“ஆமா, பொல்லாத விஷயத்த சொல்ல வந்துட்டய. தெரியாத விஷயத்த சொல்லி கொடுக்க வேண்டியதுதான் அதுக்குன்னு ஒரு நேரம் காலம் இல்லையா?” 

அப்பாவும் அம்மாவும் வீட்டுக்குள்ள இருக்கும் போது வெளியே நின்று யாராவது அழைத்தால் அம்மா சென்று பார்க்காமல் “யாரோ கூப்பிடுதாங்க. போயி என்னன்னு பாருங்க.” என்று அப்பாவுக்கு அம்மா உத்தரவு போடுவாரே தவிர அவர் போயி பார்க்க மாட்டார்.

“எங்ககிட்ட சொல்றதுக்குள்ள, நீ போயி யாருன்னு பார்த்துட்டு வந்தா என்ன?” என்று அப்பா சொன்னால் “ஏன், நீங்க என்ன பண்றீங்க? எனக்கு மட்டும் ஆண்டவன் எல்லாத்தையும் இரும்புலயா படைச்சிட்டான்.” என்று எதிர் கேள்வியை கேட்டு பிரச்சனையை நீட்டி கொண்டே செல்வார் அம்மா. 

வந்தவர் வெளியில் நின்று இருவர் வாதத்தையும் கேட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்ற நாள்களும் உண்டு. அதனால, ‘இவளிடம் பேச்சி கொடுத்தால் இன்னைக்கு வெட்டு குத்து ஆகிப் போயிடும்.’ என்று நினைத்ததாலோ என்னவோ அப்பா அமைதியாகி குழியைத் தோண்டி முடித்து மூன்று கல்லையும் தூக்கி வந்து அடுப்பு தயார் செய்து வைத்துவிட்டு அரிவாளை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த தென்னந்தோப்பை நோக்கி சென்றார். அம்மா சத்தம் போட்டதும் அப்பா அமைதியாகி போனது அம்மா மீது அப்பாவுக்கு பயம் என்று இல்லை திருப்பி ஏதாவது சொல்ல, அது தனக்கே செலவாக வந்து முடியும் என்ற நினைப்பில்தான் போனார்.

இப்படித்தான் ஒருமுறை தீபாவளியும் நாளுமாக அம்மா அதிகாலையிலே எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எங்களுக்காக பார்த்து பார்த்து பலகாரங்கள் செய்து கொண்டிருந்தார். நாங்களும் காலையிலே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எங்களுக்காக வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை அணிந்துகொண்டு சினிமாப் பார்க்க போகிற ஆசையில பட்டாசைத் சிறிதளவே வெடித்துவிட்டு, அம்மா எவ்வளவோ சொல்லியும் சாப்பிடாமல் பெயரளவுக்கு  ஒன்றிரண்டு பலகாரங்களை கையில எடுத்துக்கொண்டு சாப்பிட்டவாறு சென்றோம். சினிமா தியேட்டர் எங்க ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கல்யாணிபுரத்தில்தான் இருந்தது. எங்கள் ஊருக்கும் கல்யாணிபுரத்திற்கும் நினைத்த நேரத்திற்கு செல்ல பேருந்து வசதி கிடையாதென்பதால் நடந்தே சென்றோம். மதிய உணவைக்கூட சாப்பிடாமல் பதினொரு மணி காட்சி, ரெண்டு மணி காட்சி என்று இரண்டு காட்சிகளையும் தொடர்ந்து பார்த்தோம்.

சினிமா காட்சிகள் முடிந்தப் பிறகுதான் பசி வயிற்றைக் கிள்ளுவதை உணர்ந்தோம். அப்போதுதான் அம்மா செய்த பலகாரங்கள் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கக் கூடாதா! என்று நினைக்க தோன்றியது. இப்ப என்ன வீட்டுக்கு போயி ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான் என்று கொஞ்சம்கூட அசதி தட்டாது மூன்று கிலோ மீட்டர் தூரத்தை முப்பது நிமிடத்தில் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டை அடைந்தபோது யாரும் இல்லாது வீடு பூட்டிக் கிடந்தது. பசியும் நடந்து வந்த களைப்பும் சேர்ந்து உயிரைப் பிடிங்கி தின்றது. நாங்கள் சினிமாப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்ட தகவல் அறிந்து பக்கத்து வீட்டுக்கார அக்கா ஒருவர் ஓடி வந்து “நீங்கள் எல்லோரும் சினிமாவுக்குப் போனதுக்கப்புறம் உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது. கோபத்துல உங்க அம்மா அரளி விதையை அரைச்சி குடிச்சிட்டாங்க.” என்றவர். தொடர்ந்து “உங்க அம்மாவ கல்யாணிபுரம் காமராஜ் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க.” என்றவர்.  வீட்டின் சாவியைக் கொடுத்துவிட்டு “வீட்ட திறந்து சாப்பிட்டுவிட்டு இருக்கணுமாம்.” என்று சென்றார். 

எங்கள் ஊர்ப் பண்ணையாரின் வீட்டு டிவியில் சிலோன் ஒளிபரப்பு தளத்தில் ‘வைதேகிக் காத்திருந்தாள்’ படம் பார்க்கவில்லையென்றால் எங்களுக்கு அரளி விதையை சாப்பிட்டால் என்ன ஆகுமென்று தெரிந்திருக்காது. இப்பதான கல்யாணிபுரத்திலிருந்து வந்தோம். அங்கேயே தெரிந்திருந்தால் அம்மாவ பார்க்கப் போயிருக்கலாமே என்று நினைத்து வருத்தப்பட்டோம். என் தங்கை எதுவும் தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். என் பெரிய அண்ணன், சின்ன அண்ணன், நான் மூவரும் அம்மாவை நினைத்து அழுவதற்கு ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அழுவதைப் பார்த்து என் தங்கையும் அழ ஆரம்பித்துவிட்டாள். அப்பொழுது ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த அப்பா எங்களிடம் “அழ வேண்டாம். அம்மா நன்றாக இருக்கிறாள்.” என்றார். 

அப்பா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்திருக்கும் தகவல் தெரிந்து “உன் மனைவி எப்படி இருக்கறாள்?” என்று கேட்டு ஊரே வந்து வீட்டிற்கு முன் கூடி நின்றது. “ஆம், பரவாயில்லை. உயிருக்கு ஆபத்தில்லைன்னு மருத்துவர் சொல்லிட்டார்.” என்றதும் “யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாதவ, சாவு அவ்வளவு சீக்கிரம் அவள நெருங்கிடாது.” என்று ஊரார் ஆறுதல் சொல்லிவிட்டு அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.

 அப்பா எப்போதாவது நேரம் தவறி இரவில் வீட்டுக்கு வரும்போது பொழுதோட வீட்டுக்கு வருவதற்கு என்ன? என்று கேட்டு சத்தம் போடுவார். அதற்கு “நான் சுடலை ஆண்டவன் பக்தன் எனக்கு எதுவும் ஆகாது.” என்பார் அப்பா. அதற்கு “சாஸ்தா கிடான்னு ஓநாயிக்கு தெரியுமா?” என்பார் அம்மா. அது போல மரணத்திற்கு நல்லவர் கெட்டவர் தெரியுமா என்ன? வந்தால் போக வேண்டியதுதானே. அதுவரை போடாத ஆட்டமெல்லாம் போட்டுக்க வேண்டியதுதான். அப்பா எங்களை சாப்பிட்டுவிட்டு பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு அம்மாவுக்கு மாற்று உடையை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். பெரிய அண்ணனுக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் சின்ன அண்ணனுக்கு பத்து வயதிருக்கும். அம்மா ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த நாட்களில்  அண்ணன்கள்தான் சமையல் செய்தார்கள். அதே ஊரில்தான் எங்கள் பாட்டி, அப்பாவினுடைய அம்மாவும் இருந்தார். நாங்கள் சோறு மட்டும் வடித்து வைத்துவிட்டு இருக்கும் நாட்களில் குழம்பு கொண்டு வந்து தருவார். அதே ஊரில்தான் எனது பாட்டிக்கும், பாட்டியின் இரண்டாவது கணவருக்கும் பிறந்த மகன் எங்களது சித்தப்பா, மனைவி, குழந்தைகளோடு வசித்து வந்தார். அவர்கள் யாரும் நாங்கள் என்ன செய்கிறோம் என்று பார்க்க வருவதில்லை. ஒரு நாள் என் தந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்திருந்த தகவலறிந்து என் தந்தையிடம் அம்மாவின் நலம் பற்றி விசாரிப்பதற்காக சித்தப்பா வந்திருந்தார். அந்த சமயத்தில் நாங்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தோம். அன்று குழம்பு எதுவும் ஆக்கவில்லை. சோற்றுடன் கலந்து சாப்பிட துவையல் செய்திருந்தோம். வீட்டிற்கு வந்த எனது சித்தப்பா என் அப்பாவிடம் என் அம்மாவின் நலம் பற்றி விசாரித்துவிட்டு கிளம்பும்போது எங்களது சாப்பாட்டை கவனித்தவர் “ குழம்பு ஆக்கவில்லையா?” என்றார்.

“ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அழைஞ்சதுல வீட்டுல மளிகை சாமான் என்ன இருக்கு, இல்லேன்னு கவனிக்கல. அரிசிய தவிர வேற எதுவும் இல்ல. கொஞ்சம் வத்தலும் தேங்காயும்தான் இருந்தது. புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டு வந்து சோத்த மட்டும் வடிச்சி வச்சிட்டு குழம்புக்கு என்ன செய்யன்னு தெரியாம இருந்ததுங்க. நான் வந்துதான் துவையல அரைச்சேன். உடனே சாப்பிட உட்கார்ந்திருக்கோம்.”என்றார் அப்பா.

“சோத்துல கொஞ்சமாக உப்பு தண்ணிய தெளிச்சி துவையல் போட்டு விரவி சாப்பிட்டா குழம்பு ஊத்தி சாப்பிட்டது போல இருக்கும்.” என்றார் சித்தப்பா. அவர் சொல்லிவிட்டு உடனே கிளம்பிட்டார். அவர் சென்ற பின்னர் என் தந்தை “ உப்பு தண்ணீர் தெளிக்க, மயிரு எனக்கு தெரியாதா? பெருசா சொல்ல வந்துட்டான்.” என்று அவரப் பற்றி எங்களிடம் கடிந்து பேசினார். 

ஒரு வாரத்திற்கு பின் அப்பா, அம்மாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக வந்து என் அம்மாவைப் பார்த்துவிட்டு சென்றார்கள். வந்தவர்கள் எல்லோருமே “அடப் பாவி சண்டாளி. சூரிய போட்டு போல நாலு பிள்ளைகளைப் பெத்து போட்டுட்டு அதுகள விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது.” என்றனர். 

அப்போது அம்மா அவரது முட்டாள் தனத்தை உணர்ந்தார். சிலரிடம் ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் சிலரிடம் உண்மையான காரணத்தையும் பகிர்ந்து கொண்டார். 

எங்கள் ஊர்க் குளம் பராமரிப்பு பணி நடைப் பெற இருந்தது. தீபாவளிக்கு மறுநாள் வேலைக்கு செல்ல அதன் ஒப்பந்ததாரரிடம் வேலைக்கு பேரு கொடுத்தார்கள் அம்மா, அப்பாவின் பெயரை அவரக் கேட்காமலே கொடுத்துவிட்டார். அப்பாவுக்கு வேற எதோ வேலை இருந்துள்ளது. அது தெரியாமல் அம்மா பேரைக் கொடுத்துவிட்டார். “ என் பேர ஏன் கொடுத்த?” என்று பிரச்சனையை ஆரம்பித்தார் அப்பா..

“இப்ப கொடுத்தாதான் என்ன? வேலைக்குப் போகாம வீட்டுல இருந்தா பிள்ளைகளை எப்படி காப்பாத்துறது?” என்று வாதம் செய்தார் அம்மா. 

“நீதான் எனக்கு இவ்வளவு நாளும் வேலை தேடி கொடுத்தியா தே…டியா?” என்று வார்த்தையை கடத்தினார் அப்பா.

“மரியாதையா பேசு இல்ல மானம் கேட்டு போவ?” என்றபடி அம்மா மீன் கழுவி கொண்டு இருந்தார்.

“மானத்தை கெடுப்பியா? கெடுடி பார்க்கலாம்.” என்று அப்பா, அம்மா கழுவி கொண்டிருந்த மீன் கழுவிய கழிவு நீரைத்தூக்கி தலையில் ஊத்தி அடித்துவிட்டார்.  

“இனிமேல இவனோட வாழ கூடாதுன்னு நினைச்சிதான் விஷம் சாப்பிட்டேன்.” என்றார். ஆனால், என் தந்தை செய்த செயலுக்கு அபராத தொகை செலுத்தியதுபோல இருந்த ஒரு பால் மாட்டையும் ஒரு ஜோடி உழவு மாட்டையும் விற்றுதான் மருத்துவமனை செலவை கவனித்தார். இதைத்தான் நாயை அடிப்பானேன்? மலத்தைச் சுமப்பானேன்? என்பார்கள் போல.

நல்ல காய்ந்து போன ஓலையும் தென்ன மட்டையும் சேர்த்து வெட்டி எடுத்து ஒரே கட்டாக கட்டி கொண்டு வந்தார்.

அம்மா குப்பைகளை கூட்டி முடித்துவிட்டு பெரிய அண்ணனிடம் ஒரு குடத்தைக் கொடுத்து அருகில் இருந்த பம்பு செட்டிற்கு சென்று தண்ணீர்ப் பிடித்துகொண்டு வர சொன்னார். நானும் என் தங்கையும் வேப்ப மரத்தில் தாழ்வாக இருந்த கிளையில் ஏறி அமர்ந்து இராட்டினம் ஆடிக்கொண்டிருந்தோம். அண்ணன்கள் இருவரும் சென்று தண்ணீர்ப் பிடித்துகொண்டு வந்தார்கள். அம்மா கூட்டிய தரையில் புழுதி கிளம்பாமல் இருக்க தண்ணீர் தெளித்து விட்டார். அப்பா, சாமி சிலைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு பொங்கல் வைக்க வீட்டில் இருந்து வரும்போது கையோடு வாங்கிக் கொண்டு வந்திருந்த நல்லெண்ணெயை சிலைகளுக்கு தேய்த்து, குங்குமத்தில் வட்டமாக பொட்டு வைத்துவிட்டு வாங்கி வந்திருந்த பூ மாலைகளை சிலைகளுக்கு அணிவித்துவிட்டு ஒரு இலையை விரித்து பழ வகைகள், தேங்காய், உதிரி பூக்கள் சகிதம் படையல் போட்டு பூஜையை ஆரம்பித்துவிட்டார் அப்பா.

அம்மா ஒரு பித்தளை பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றிவிட்டு ஓலைகளை எடுத்து அடுப்பில் வைத்தார். அப்பா ஒரு கற்பூரத்தை அடுப்பில் வைத்து நெருப்பை ஏற்றினார். அம்மா பொங்கல் வைத்து கொண்டிருந்தார். அப்பா எங்களிடம் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

சுமார் ஒரு நூற்றி ஐம்பது வருஷத்துக்கு முன்னால இருக்கன்துறையில தில்லை நடராஜ பிள்ளைன்னு ஒரு ஜமீன்தார் இருந்தாரு. அவருக்கு ஏழு ஆம்பள பிள்ளைகளும் ஒரே ஒரு பொம்பள புள்ளையும் இருந்தாங்க. பொம்பள புள்ளதான் கடைக்குட்டி. தொடர்ந்து ஆம்பள புள்ளையா பொறக்குதே ஒரு பொம்பள புள்ளைய கொடு கடவுளேன்னு குறத்தியூரு முருகனுக்கு வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்து தங்கத்துல வேல் சாத்தினதுக்கு அப்புறம் பொம்பள புள்ள பொறந்ததாம். அந்த புள்ள மேல எல்லோருக்கும் உசுரு. அவ பேரு சவுந்தர்யா தேவி. பேருக்கு ஏத்த மாதிரி ஆளு அப்படி இருப்பாளாம். கல்யாணிபுரம் கல்யாணியம்மனை தரிசனம் பண்ண வந்தான்னா, அம்மனே பக்தர்களை ஆசீர்வதிக்க நேர்ல வந்துட்டான்னு கருவறையில இருக்கிற அம்மன தரிசிக்காம சவுந்தர்யா தேவிய தரிசனம் பண்ணிட்டு போவுமாம் ஜனங்க, அழகுன்னா அப்படி ஒரு அழகு, பேரழகு.


ஜமினுக்கு தலைமுறை தலைமுறையாக வண்டி ஒட்டுறது முத்தையா சாம்பவர். ஆளு ஆறு அடி உயரத்துல பார்க்கிறதுக்கு ஒரு வேங்கைய பார்த்தது போல இருப்பானாம்.  ஜமீன்தார் வெளியில எங்க போனாலும் அவர ரெட்டக் குதிரைப் பூட்டிய வண்டியில  அழைச்சிட்டு போறது வர்றதுன்னு எல்லாமே முத்தையன் தான்.

ஒரு முறை ஜமிந்தாரையும் அவரோட மனைவியையும் குதிரை வண்டியில குறத்தியூர் முருகன் கோவிலுக்கு சித்திரைத் திருவிழாவுக்கு அழைச்சிட்டு போயிட்டு வரும்பொழுது நல்ல இருட்டிப் போனது. வம்பளத்து பக்கத்துல வண்டி வந்துட்டு இருந்திருக்கு. வம்பளத்துகாரங்க திருட்டத் தொழிலாப் பண்ணிட்டு இருக்கறவங்க. ஜமீன் வண்டி காலையில குறத்தியூருக்குப் போனத வம்பளத்துகாரங்க பாத்திருக்காங்க. அப்ப இந்த சாலை, தார்சாலை  கிடையாது. வண்டி பாதையாதான் இருந்திருக்கு. எப்பவும் நாலு காலு பாய்ச்சலுல போற வண்டி ஜமீந்தாரயம்மா இருந்ததால நிதானமா ஓட்டிட்டு வந்திருக்கான். ஜமீன்தாரம்மா நிறைய நகை நட்டோட வர்றத தெரிஞ்சிகிட்ட கொள்ளைக்காரங்க ஒரு  பத்து, பதினைந்து பேர் சூழ்ந்துகிட்டு கொள்ளையடிக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஜாமிந்தாரையும் ஜமிந்தாரம்மாவையும் வண்டியவிட்டு இறங்க வேண்டான்னு சொல்லிட்டு வண்டியில சொருகி வச்சிருந்த ஒரு குத்து ஈட்டிய தூக்கிட்டு இறங்கின முத்தையன் பதினைந்து கொள்ளைகாரங்ககிட்டயும் தனியாளா நின்னு சண்டைப் போட்டுருக்கான். அந்த சண்டையில முத்தையனுக்கு பலமான கத்திக் குத்துப் பட்டிருக்கு. அதகூட கொள்ளைக்காரங்க நேருக்கு நேரா நின்னு குத்தல முத்தையன்கிட்ட நெருங்க முடியாததால தூரத்துல நின்னு கத்திய வீசிருக்காங்க அது முதுகுல பட்டிருக்குது. அதையும் வாங்கிகிட்டு கொள்ளைக்காரங்கள ஓட ஓட விரட்டி அடிச்சியிருக்கறான். ஜமீந்தார், ஜமீந்தாரம்மா ரெண்டு பேரையும் ஒரு காயம் இல்லாம காப்பாத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தவன். வீட்டுக்கு வந்ததும் மயங்கி விழுந்திருக்கறான். உடனே வைத்தியர வர வச்சி பார்த்ததுல ஆளு இறந்து போயிட்டான்னு தெரிஞ்சிருக்கு. கத்தியால குத்துனவங்க கத்தியில விசத்த தடவி குத்தியிருக்காங்க. முத்தையன் இறந்த பிறகு ஜமீனுக்கு அவனோட மகன் சண்முகம் அந்த பொறுப்புக்கு வந்தான். தன்னோட உயிரையும் மானத்தையும் காப்பாத்துன முத்தையனோட மகன்கிறதால சண்முகத்து மேல ஜமீந்தாருக்கு பாசம் அதிகம் தனது பிள்ளைகளுல ஒருத்தனாதான் அவனையும் பார்த்தாரு. சாதி எதுவும் பார்க்காம நடு வீடு வரைக்கும் போயி வந்து இருக்க சண்முகத்த அனுமதிச்சாரு ஜமீன்தார்.

 சண்முகமும் இலேசுபட்ட ஆள் இல்ல. ஆறடி உயரம். நல்ல மாநிறம். சிலம்பம் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. கல்யாணிபுரம் சுற்று வட்டாரத்தில கம்பு சண்டையில சண்முகத்த ஜெயிக்க ஆளே கிடையாது.

இருக்கன்துறையில இருந்த சிவன் கோவிலுக்கும் கல்யாணிபுரம் கல்யாணியம்மன் கோவிலுக்கும் சவுந்தர்யா தேவி அடிக்கடி சாமி கும்பிட போறத வழக்கம். அப்படி போகுறப்ப, அவள அழைச்சிட்டு போறது, வர்றது எல்லாம் சண்முகம்தான். அந்த சந்தர்ப்பங்கள் ரெண்டு பேருக்குள்ளும் காதல் மலர காரணமாக அமைந்தது. காதல்ல அவ கற்பமும் ஆனாள். குழந்தை வளர வளர வயிறு கொஞ்சம் கொஞ்சமா பெருசாயிட்டும் வந்தது.

சௌந்தர்யா தேவிய கல்யாணியம்மன் கோவில்ல வைத்து பார்த்துட்டு அவ அழகுல மயங்கிப்போன அம்பலம் ஜமீன் சுப்பராயலு ரெட்டியார் மகன் ரெங்கசாமி ஏழு குளத்து பத்துக்கு சொந்தக்காரன் பொண்ணு கேட்டு போயிருக்கிறான். தங்களைவிட ஜாதியிலயும் பணத்துல எந்த விதத்திலும் குறைவில்லாம இருந்தும் ஜாதிவிட்டு ஜாதிப் பொண்ணு கேட்க வந்ததுக்காக ரெங்கசாமியைப் பிடிச்சி வைத்து ஒரு பக்கத்து மீசைய எடுத்து விட்டுட்டாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் சவுந்தர்யா தேவிக்கு திருமணம் பண்ணாம வைத்திருக்க கூடாதுன்னு மாப்பிளையவும் தேட ஆரம்பிச்சாங்க. ஆஸ்தியிலும் அந்தஸ்திலும் ஒரு படிக்கு மேல இருந்தவனுக்கே இந்த நிலை என்றால் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவனை காதலிப்பது தெரிந்தால் கொன்றே போட்டுவிடுவார்கள் என்று நினைத்த சௌந்தர்யா தேவியும் சண்முகமும் ஒரு நாள் எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறம் இரவோடு இரவாக நடந்தே இந்த ஒத்தவேம்பு காட்டுக்கு வந்துட்டாங்க. அவங்க வரும்போது ஜமீன்ல உள்ள ஒரு நாயியும் கூட வந்தது. அப்ப, ஒத்தவேம்பு காடு கள்ளிச் செடியும் முள்ளுச் செடியுமா ஏகப்பட்ட புதரு மண்டி கிடக்குமாம். அதனால, இந்த இடத்தை கள்ளர்கள் களவு எடுத்துட்டு வந்து களவுப் பொருள மறைஞ்சிக்கிற கூடாரமாக பயன் படுத்தி வந்திருக்காங்க. திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி பகுதியில இருந்து கருப்பட்டி வியாபாரத்துக்கு மாட்டு வண்டியில கருப்பட்டிய ஏத்திட்டு இந்த வழியேதான் நாகர்கோவில் கோட்டார் சந்தைக்கு ஐம்பது வண்டி, நுறு வண்டின்னு வண்டி கட்டி போவாங்களாம். அப்படி போகுறப்ப, ஏதாவது வண்டி ஒத்தையா மாட்டுன்னா, கொள்ளை போட்டுருவாங்களாம்.

 அப்ப நம்ம ஊரெல்லாம் கிடையாது. இந்த வேப்ப மரம் சின்ன மரமா இருந்திருக்கு. கூட வந்த நாயி கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்படியே ஊர பார்த்து திரும்பி போயிட்டு ஊருல சவுந்தர்யா தேவியையும் சண்முகத்தையும் காணாம தேடி அழைஞ்சிருக்காங்க. வீட்டுக்கு திரும்பி போன நாயி வீட்டுல உள்ளவங்க கால ஊம்… ஊம்…ன்னபடி சுத்தி சுத்தி வரும்மாம். அப்பறம், கொஞ்ச தூரம் போகுமாம். யாரும் நாய் பின்னால வர்றாங்களான்னு திரும்பி பார்க்கும்மாம். வரலேன்ன உடனே மறுபடியும் திரும்பி வருமாம், கால சுத்துமாம், கொஞ்ச தூரம் ஓடுமாம். இப்படியே பண்ணிட்டு இருந்தத பார்த்துட்டு அந்த நாய பின் தொடர்ந்து வந்திருக்காங்க. நாயி நேரே சௌந்தர்யாதேவியும் சண்முகமும் இருந்த இடத்துக்கே கூட்டிட்டு வந்து விட்டுட்டு. வந்தவங்க நிறைமாத சூலியா இருந்த சவுந்தர்யா தேவிய மேற்கேயும் சண்முகத்தை கிழக்கேயும் வெட்டி போட்டுட்டு திரும்பி பார்க்காம போயிட்டாங்க. அந்த பொணத்த காக்கா, கழுகு கொத்தி தின்னுட்டு கிடந்திருக்கு. இது நடந்து கொஞ்ச காலத்துக்கு அப்புறம் இந்த வேப்ப மரத்துக்கு வடக்கு இருக்குதே மேட்டு நிலம் இந்த மேட்டு நிலம்தான் நம்ம ஊருக்கு வடக்கே இருக்கிற வல்கடம்பு ஊருக்காரங்களுக்கு எள்ளு, கொள்ளுன்னு தானியங்கள் அடிச்சி எடுக்கிற களமா இருந்திருக்கு. ஒரு நாள் தானியத்த கொண்டு வந்து அடிச்சி எடுக்கறதுக்குள்ள பொழுது சாய்ந்து போச்சிது. ராத்திரி கள்ள பய வந்து அள்ளிட்டு போயிட கூடாதுங்கிறதுக்காக வல்கடம்புல என் நண்பன் பழனி இருக்கானே அவனோட தாத்தா அவர் பேரு பழனியாண்டி. அவரு காவலுக்கு இருந்திருக்காரு. அந்த ராத்திரி வேளையில அசரீரியாக ஒரு குரல் கேட்டுருக்கு அவர் பயந்து வேர்த்து விறுவிறுத்து போயி இருக்கும்போது பயப்படாதன்னு சொல்லிட்டு சவுந்தர்யாதேவி அவளோட முழு கதையை சொல்லிட்டு காட்சி கொடுத்திருக்கு. கொடுத்தவ என்னை வச்சி வணங்குங்க, நான் உங்களுக்கு நல்லது பண்ணுவேன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாள். அதுக்கப்புறம் அவரு ஊருல சொல்லி ரெண்டு பேரும் இறந்து கிடந்த இடத்துல ரெண்டு கல்ல வச்சி வணங்கியிருக்காங்க. ஆனா, மேற்கே இருக்கிற சிலைக்கு பூஜை பண்றவங்க கிழக்கு இருக்கிற சிலைக்கு பூஜை பண்றது இல்லன்னு அப்ப ஒரு கட்டுப்பாடு வச்சிருக்காங்க. சௌந்தர்யா தேவி வெள்ளாளர் குடும்பத்த சேர்ந்தவங்கிறதால வெள்ளாட்சியம்மன்னு பேரு வந்துட்டு. அவங்க ரெண்டு பேரும் ஒன்னாகி இனி ஒன்னா வாழணும்னு நினைச்சிதான் ஊரவிட்டு வந்திருக்காங்க. ஆனா, இந்த மனுஷங்க சாதி பார்த்து பிரிச்சி வச்சி வணங்கியிருக்காங்க.

இப்ப அப்படி பண்றதில்ல ஒரே ஆளுதான் இரண்டு சிலைக்கும் பூஜை பண்றோம். யாருக்கும் எதுவும் ஆகல. நம்பி வணங்குறவங்களுக்கு நல்லது நடக்குது. அவ மனுஷியா இருந்தபோதே சாதி இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டவ. தெய்வமானதுக்கு அப்பறம் சாதி பார்ப்பாளா? எல்லாரையும் பிரிச்சி பார்க்கிற புத்தி உள்ளவன் மனுஷன் மட்டும்தான்.

அதுக்கப்புறம் நம்ம ஊர கந்தசாமி தேவரு  உருவாக்கினாரு. அவரோட சாதிக்காரங்க களவாடுறது, வழிப்பறி பண்றதை தொழிலா பண்ணிட்டு இருந்திருக்காங்க.  

இனிமேல இந்த ஊர்ல இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு தன் சாதிக்காரன விட்டுட்டு தனியே வந்து அடுத்த சாதிக்காரான சேர்த்துகிட்டு இந்த ஊர உருவாக்கினாரு.

வடக்கே இருக்கிற ஊய்க்காட்டு சுடலையும் வெள்ளாட்சி அம்மனும்கூட வல்கடம்பு ஊருக்காரங்க சாமிதான். இது தேவமாரு  ஊரா ஆனதால அவங்க இந்த ரெண்டு கோவிலுக்கும் வந்து வணங்குறதயே விட்டுட்டாங்க. நம்ம ஊரு குளம்னு சொல்றோமே அதுகூட வல்கடம்பு ஊருக்கு சொந்தமான குளம்தான். ஆனா, அந்த ஊருக்காரங்களுக்கு ஒரு செண்டு நிலம்கூட இந்த குளத்து பத்துல கிடையாது. இந்த வேப்ப மரம் முளைச்சி நூற்றி ஐம்பது வருஷத்துக்கு மேல இருக்கும். இந்த நூற்றி ஐம்பது வருஷம் எத்தனையோ மழை வந்திருக்கு புயல் வந்திருக்கு இந்த மரத்துக்கு எதுவும் ஆனதில்ல. எனக்கு தெரிஞ்சி ஒரு வாட்டி வந்த புயல் இதோட சின்ன சின்ன மரத்தை எல்லாம் புடுங்கி போட்டுட்டு போயிடுச்சி. ஆனா, இந்த மரத்துக்கு மட்டும் எதுவும் ஆகல. இவ்வளவு பெரிய மரம் இந்த சுற்று வட்டாரத்துல எனக்கு தெரிஞ்சி இல்ல.

ஒரு முறை இந்த வேப்ப மரத்துல இருந்து பாண்டி நாடார் மகன் மூத்தவன் சுப்பிரமணியன் இலைய வெட்டிட்டு போயி கூட்டுல கிடந்த ஆட்டுகுட்டிக்கு போட்டுருக்கான். ராத்திரி கூட்டுல கட்டினவன் காலையில போயி கூட்ட திறந்து பார்த்திருக்கிறான், குட்டி பூராம் செத்து போயி கெடந்திருக்கு. அப்புறம் மன்னிச்சிடுன்னு விழுந்து கிடந்து சாமிய கும்பிட்டிட்டு பொங்கல் வச்சிட்டு போனான். மாசமா இருக்கிற பொம்பளைங்க இந்த கோவில்ல வந்து வெந்நீர் போட்டு மஞ்சள் பொடிய போட்டு குளிச்சிட்டு போனா நிச்சயமா சுக பிரசவம் நடக்குங்கிறது ஐதிகம் என்று அப்பா சொல்லி முடிக்க பொங்கல் கொதித்தது. பொங்கல் வைத்து முடித்து தீபாராதனை காட்டி வெள்ளாட்சியை வணங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பினோம்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.