வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்

காற்றில் பிளாஸ்டிக் கூடாரத்தின் சுவர்கள் பட பட வென்று அடிக்கும் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். சூழ்ந்திருந்த இருள் கனமாக என்னை அழுத்தி மூச்சு முட்ட வைத்தது. தடாரென்று எழுந்த போது கூடாரத்தின் குளிர்ந்திருந்த மேற் கூரை நெற்றியைத் தடவி எங்கிருக்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்பியது. நோவா தீஹிங் நதிக் கரையில் முகாமிட்டுருக்கிறோம் என்று அகம் அறிந்து கொண்டு மூச்சு சீரானது. ஒரு ஆள் நீளத்திற்கு பை போல இருந்த படுக்கையில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு கூடாரத்தின் துணிக் கதவுகளை இணைத்து மூடியிருந்த ஜிப்பரை திறந்து வெளியே வந்தேன். சில்லிடும் குளிர் கை விரல் நுனிகளை பதம் பார்க்க கனமான குளிர் மேலாடையின் சட்டைப்பைக்குள் அவற்றைப் பதுக்கினேன். வானம் முழுவதும் நட்சத்திரத் தூவல். அடுப்பங்கரை மேடையில் வழிந்து ஓடியப் பாலின் தடம் போல வான் நடுவே பால்வெளியின் மெலிதானக் கறை படிந்திருந்தது. 

சட்டென்று கூரிய டார்ச் வெளிச்சம் நதியின் கரையில் ஓங்கி இருந்த மரங்களில் ஒளி ஜன்னல் ஒன்றைத் திறந்தது. அந்த வெளிச்சச் சதுரம் காட்டிக் கொடுத்த கிளை ஒன்றில் இரு ஒளிப் புள்ளிகள் மிளிர்ந்தன. ‘பெடௌரிஸ்டா பெடௌரிஸ்டா’ என்று ரகசியமாகக் காதில் ஒரு குரல் கிசு கிசுத்தது. குளிர் முதுகெலும்பில் இறங்கியது போல அதிர்ந்து பின்னால் பார்த்தேன். அருகில் நின்று கொண்டிருந்தவர் சக பயணி. இயற்கை ஆர்வலர். கையில் டார்ச் விளக்குடன் இந்தக் குளிரெல்லாம் எம்மாத்திரம் என்பது போல வெற்றுப் பருத்தி மேலாடையுடன்  நின்று கொண்டிருந்தார். பகலில் வானத்தில் கரும் புள்ளி போல தோன்றும் பறவையின் அங்க அடையாளங்களை நிலத்தில் நின்று கொண்டே அனாயசமாக விவரிப்பவர். இரவிலும் தன் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்து மீண்டும் ‘பெடௌரிஸ்டா பெடௌரிஸ்டா’ என்று மரத்தில் இருந்த ஒளிப் புள்ளிகளை ஒரு கையால் சுட்டினார். நவீன காபி விடுதிகளில் கிடைக்கும் பானத்தை நினைவுபடுத்தும் பெயர் பறக்கும் அணிலுடையது என்பது குளிர் படிந்த என் மூளைக்குள் மெதுவாக உதித்தது. 

டார்ச்சின் வெளிச்சத்தில் மரத்தில் இருந்த அணிலின் இரு விழிகள் தான் ஒளிப் புள்ளிகள் என்று புரிந்தது. மெலிதான வெளிச்சத்திற்கு என் கண்கள் சற்று பழக அணிலின் மற்ற அங்கங்கள் உரு கொண்டன. புசு புசுவென்ற அதன் வால் காற்றில் ஆடுவது தெரிந்தது. உடல் முழுதும் சிவப்பு ரோமங்கள் டார்ச் ஒளியில் தாமிரம் போல ஜொலித்தது. நீ என்ன தான் லைட் அடிச்சு தொந்தரவு பண்ணாலும் டூட்டில நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்பது போல மரத்தில் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்த ஏதோ சிறு பழங்களை தின்று கொண்டிருந்தது அணில். 

‘இப்ப டேக் ஆப் ஆகும் பாருங்க’ என்று ஏதோ அணில் தனது அடுத்தக் கட்டத் நடவடிக்கைகளை அவருக்கு மட்டும் சொல்லி அனுப்பியதைப் போன்ற குரலில் ஆர்வலர் கூறினார். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அணில் தாவியது. அதன் கைகளுக்கும் கால்களுக்கும் இடையே இருந்த சவ்வு இறக்கைப் போல விரிந்து, சிறுவர்கள் விளையாடும் பிரிஸ்பீ போல, அணில் காற்றில் மிதந்து மரம் தாவி மறைந்தது.  

‘சொன்னேன் இல்ல’ என்றார் ஆர்வலர்.


அருணாச்சல் பிரதேசத்தின் கிழக்கு மூலையில், இந்திய, மியன்மார் மற்றும் சீனாவின் நிலப்பரப்புகள் சந்திக்கும் முச்சந்தியில் உள்ளது நம்தபா (Namdapha) வனவிலங்குச் சரணாலயம். ஏறக்குறைய இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் அளவிற்கு விரிந்திருக்கும் இந்த வனப் பிரதேசம் மழைக்காடுகள் நிறைந்திருக்கும் பூமி; சுவர் போல காத்திரமான அடி பாகம் தாங்கிப் பிடிக்க வானத்தை இலை மண்டிய கிளைகளால் துழாவும் மரங்கள்; அவற்றைத் தழுவி இன்னொரு மரம் போலவே படரும் லியானா என்றழைக்கப்படும் கொடிகள்; பெருத்த மரக்கிளைகளுக்கு இடையே வேர் விட்டு ஒரு சிறு காடு போல முளைத்திருக்கும் செடிகள்; மரங்கள் தோன்றுவதற்கு முன்பே நிலத்தில் வேர் பதித்து தன் விசிறி போன்ற இலைகளால் மண்ணைத் தடவும் fern தாவரங்கள்; சிறு இறக்கைகள் கொண்டு ஹெலிகாப்டர் போலே மரத்தில் இருந்து தரையில் இறங்கும் விதைகள் என்று பல்லுயிர்கள் செழிக்கும் ஒரு ஜுராசிக் உலகம் தான்  நம்தபா. ஆனால், காலத்தில் உறைந்திருக்கும் இந்தக் காட்டை அடைவதற்கு தொழில்மயமாக்கம், முன்னேற்றம் ஆகியவற்றின் அடையாளங்களை சுமந்து நிற்கும் நிகழ்கால நிலப்பரப்பின் வழியே தான் வர வேண்டியிருக்கிறது. 

அசாம் மாநிலத்தின் திப்ருகர் (Dibrugarh) நகர விமான நிலையத்தில் இருந்து ஏறக்குறைய நான்கு மணி நேரம் பயணத் தொலைவில் உள்ளது நம்தபா. கார் ஜன்னல் வழியே விரைந்து செல்லும் காட்சிகள் வட கிழக்கு மாநிலங்கள் நகர்ந்து செல்லும் பாதையின் ஒரு சிறு பகுதியை நமக்கு காட்டுகிறது. சில வருடங்களுக்கு முன் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா ஆலயத்திற்கு சென்ற போது நான் கண்ட கட்டமைப்பு விஸ்தாரங்கள் இப்பொழுது அஸ்ஸாமில் பரவலாக காணக் கிடைக்கின்றன. 

பெரு ஊர்களை இணைக்கும் சாலைகள் அகலமாக்கப்பட்டு வருகின்றன. புதிதாகச் சாலைகள் அமைக்கப்படுவதாலா அல்லது பொதுவாகவே வாகன ஓட்டிகளின் குணாதிசயமா என்று   தெரியவில்லை, சாலை விதிகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத்  தெரியவில்லை. மண் லாரிகளும், கார்களும் வேகம் எடுக்கும் பிரதான சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் தாறு மாறாக செல்கின்றன. குழந்தை குட்டிகள் சகிதம் பைக்கில் செல்லும் ஒருவர், ‘டேய் மாப்பிள’ என்று நடந்து செல்லும் ஒருவரை விளித்து, பின்னே திரும்பிக் கூட பார்க்காமல், சட்டென்று வளைத்து சாலையின் அப்புறத்திற்கு விரைகிறார். சாலையில் எழுந்த பிரேக்குகளின் கிரீச்சொலியை அவர் கேட்டதாகவேத் தெரியவில்லை. குட்டையான ஆடுகளும், மெலிந்த மாடுகளும், மனிதர்களும் நினைத்த பொழுது நிதானமாகச் சாலையைக் கடக்கின்றனர். காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த எனக்கு அவ்வப்போது இதயத்துடிப்பு வேகமெடுத்தது. ஆனால், கார் ஓட்டுநர் ஸ்திதப்ரக்ஞன். ஒரு சிறு புன்னகையைத் தவிர அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. 

ஆசியாவில் தோண்டப்பட்ட முதல் எண்ணைக் கிணறும் அதைச் சுற்றி வளர்ந்த டிக்பாய் (Digboy) நகரும் போகும் வழியில் தான் இருக்கின்றன. ஊரைக் கடக்கும் பொழுது சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெயின் வாடை கார் ஜன்னலை ஊடுருவி உள்ளே சுழன்றது. இங்கே நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் பொருளின் திட வடிவத்தை கரியாகப் பக்கத்தில் இருக்கும் ஊரான மார்கரிட்டாவில் (Margherita) தோண்டி எடுக்கிறார்கள். 

ஒரு பக்கத்தில் இந்த பெரும் தொழிற்சாலைகள்  நிலத்தை உறிஞ்சி, ஏப்பம் விட்டு, கரும் புகையை காற்றில் வெளியிட்டுக் கொண்டிருக்க, மறு பக்கம் சாலையின் இரு புறங்களிலும் பச்சை படர்ந்திருக்கிறது. ஆனால், இது கட்டற்ற காட்டின் பச்சை அல்ல. செதுக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, ஒரு குழந்தையைப் போல வளர்க்கப்படும் தேயிலைச் செடிகள். அஸ்ஸாமில் தேயிலை சமவெளியிலேயே பயிரிடப்படுகிறது. குட்டையான இந்தப் புதர்களில் இருந்து பறிக்கப்படும் தேயிலையின் மணமும், ருசியும் அலாதியானது என்பது தேயிலை பிரியர்களின் கூற்று. எண்ணைக் கிணறுகள், தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை எல்லாமே ஆங்கிலேயர்கள் ஆரம்பித்தது. இன்று வரை இவையே அசாம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு அடித்தளம்.  

அருணாச்சல் பிரதேசத்தில் நுழைந்து விட்டோம் என்பதை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டப் பதாகைகள் சுட்டின. பல ஆதிவாசி மொழிகள் புழங்கினாலும் ஆங்கிலமே இம் மாநிலத்தின் ஆட்சிமொழி.  சிறு நகரமான மியாவ் (Miao) தான் நம்தபா சரணாலயத்திற்கான வாயில். நாங்கள் அங்கே சென்ற போது மாலை ஐந்து மணி. ஆனால், இந்தியாவின் கிழக்குக் கோடியில் இருக்கிறோம் என்பதை எங்களை சூழ்ந்த இருள் உணர்த்தியது. 

மியாவ் ஜன நெருக்கடி ஏதும் இல்லாத ஒர் ஊர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எல்லா இடங்களிலும் விளக்குகள் பளிச்சிட்டன. அவற்றின் பிம்பங்கள் வண்ணப் பின்னல்களாக மழை நனைத்த தார் சாலையில் தரை விரிப்பு போல படர்ந்திருந்தது. திபெத்திலிருந்து வந்த அகதிகள் முகாம் ஒன்று இங்குண்டு. சோபெலிங் (Choepheling) என்று அழைக்கப்படும் அந்த முகாமில் வேயப்படும் தரை விரிப்புகள் மிகப் பிரபலம். மியாவ் சாலையில் கண்ட நிறங்களின் கலவை இணையத்தில் நான் கண்ட அந்த விரிப்புகளை நினைவூட்டின. திபெத் அகதிகள் முகாமிற்கு சென்று வர ஆவல் இருந்தாலும் நம்தபா என்ற ஜுராசிக் உலகம் எங்களை விடாப்பிடியாக இழுத்தது. அகதிகளும், தரை விரிப்புகளும் மற்றொரு முறை என்று ஆறுதல் சொல்லிக் கொண்டு வனத்திற்குள் நுழைந்தோம்.

நதியின் ஆழம் முட்டி வரையே இருந்தாலும் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. டைனோசர் முட்டைகள் போல இருந்த பாசி படர்ந்த பாறைகளின் மேல் கவனமாக கால் பதித்து நதியின் நடுவில் சென்று அமர்ந்து கொண்டேன். இங்கிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள தபா பூம் (Dapha Bum) மலைத் தொடரின் பனிக்கட்டிகள் உருகி நதிகளாகத் திரண்டு  நம்தபா காட்டின் உள்ளே பாய்கின்றன. பின்னர் அங்கிருந்து பல கிலோமீட்டர்கள் பயணித்து பெரும் நதியான பிரம்மபுத்ராவில் சங்கமிக்கின்றன. படிகம் போல என்னை சுற்றி நீர். நீல வானம் மேகங்களற்று கிடக்க, மென்மையான வெயில் கரையில் நின்ற மரங்களைப் பச்சையால் குளிப்பாட்டியது. நீரில் மூழ்கி இருக்கும் முட்டைப் பாறைகள் மீது தங்கக் கோடுகள் நெளிந்தன. மீன்கள் எதுவும் தென்படவில்லை. ஆனால், இருக்கிறது என்று கரையில் இருந்த பறவைகள் உணர்த்தின. 

சிறு பறவைகள். பென்சில் ஊக்கு நிறம், செம்மண்ணில் தோய்த்தது போன்று இருந்த சிறு வாலை ஆட்டியபடியே பாறைகளைத் தாண்டி கொண்டிருந்தன. சட்டென்று ஓரிடத்தில் நின்று நீரில் அலகை நனைத்து எதையோத் தின்றன. குதிப்பதும், வாலை விரித்து ஆட்டுவதும், தண்ணீரில் பாய்வதும் என்று ஓய்வின்றி சுற்றிக் கொண்டிருந்தன. ப்ளம்பஸ் வாட்டர் ரெட்ஸ்டார்ட் (Plumbeous Water Redstart) என்று இவற்றிற்கு பெயர் என்று பின்னர் அறிந்து கொண்டேன். இதன் உறவினர்களும் அருகேயே தென்பட்டனர். கழுத்திற்கு கீழே துரு பிடித்தது போன்ற வண்ணமும் தலைக்கு மேலே சுண்ணாம்பு தீற்றும் கொண்ட வைட் கேப்ட் ரெட்ஸ்டார்ட் (White-capped Redstart). இமயமலைச் சாரல் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் மட்டுமே இவ்வகையானப் பறவைகள் காணக்கிடைக்கின்றன.  

பறவைகளின் கீச்சுச் சத்தம், நீர் பாறைகளைத் தொட்டு எழுப்பும் தொடர் நாதம், காற்று காது மடலை உரசிச் சொல்லும் ரகசியம் என்னை ஏறக்குறைய ஒரு மோன நிலைக்கு இட்டுச் சென்றன. சுற்றி உள்ள சிறு தெய்வங்களுக்கு அது பிடிக்கவில்லை போலும், சில நிமிடங்களில் அந்தச் சூழலுக்கு  சற்றும் பொருத்தமில்லாத ஒரு ஒலி என் பாதி தியானத்தைக் கலைத்தது. சிறுவர்கள் விளையாடும் ரிமோட் கார் வேகமெடுக்கும் இயந்திர சத்தம் எங்கிருந்தோ எழுந்தது. தலையை உயர்த்திப் பார்த்ததில் ட்ரோன் ஒன்று தெரிந்தது. அதுவும் என் தலைக்கு மேலே, நான்கு இறக்கைகளையும் விர்ர் என்று சுழற்றியபடி, என்னையே நோட்டம் விட்டபடி மிதந்து கொண்டிருந்தது. சற்று திகைத்துப் போனேன். ஏனென்றால் புகைப்படங்கள் எடுக்க இது போன்ற உபகாரணங்களுக்கு வனப் பகுதிகளில், அதுவும் எல்லைப் பகுதிகளில், தடை உண்டு என்று எண்ணியிருந்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு சென்னை வந்த போது தான் ட்ரோன் அன்று பறந்த காரணம் புரிந்தது. 

என்னோடு நம்தபா வந்த நண்பர் ஒருவர் செய்திக் குறிப்பு ஒன்றை பகிர்ந்திருந்தார். முன்பு முனைப்போடு இருந்த அருணாச்சல பிரதேசத்தை சார்ந்த தீவிரவாத கும்பல்கள் நம்தபா காடுகளில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை தேடும் பணியில் ராணுவம் கடந்த வாரம் ஈடுபட்டது. ட்ரோன் போன்ற உபகரணங்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் உபயோகிக்கப்பட்டன என்று அந்த செய்தி விவரித்திருந்தது.  

அன்று நம்தபா நதியில் அரை நிர்வாணமாக உட்கார்ந்திருந்த போது இதைப் பற்றி கிஞ்சித்தும் தெரியாமல் இருந்ததால் ட்ரோனில் தெரிந்த புகைப்படக் கருவியைப்  பார்த்து கைகள் அசைத்து, காற்றிலேயே என் முத்தங்களை ட்ரோனோடு பகிர்ந்துக் கொண்டேன். ட்ரோனை செலுத்திய அந்தப் பெயர் தெரியாத ராணுவ அதிகாரி ‘இன்னும் என் சர்வீஸ்ல என்னெல்லாம் பாக்கணுமோ’ என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டிருப்பார். சில நிமிடங்களில் ட்ரோன் விலகிச் சென்றது.

‘என்ன சார் சின்ன சின்ன ரெட்ஸ்டார்ட் பறவைகளேயே எவ்வளவு நேரம் பாப்பிங்க…பெருசா பாக்கலாம் வாங்க’ என்று நதியருகே வந்த இயற்கை ஆர்வலர் கூறினார். தொப்பி, கருப்பு கண்ணாடி, நடக்க சவுகரியமாக கனமான சப்பாத்துகள், அட்டைகளைத் தவிர்க்க காற்சட்டையின் அடிப்பாகத்தைக் காலுறையின் உள்ளே திணித்து, முதுகில் தொங்கும் சிறு பையுடன் காட்டிற்குள் நடை பயணம் செய்யத் தயாராக இருந்தார். இதோ வருகிறேன் என்று அவருடன் கிளம்பினேன்.


பொதி சுமக்கும் யானைகளும், மனிதர்களும் உருவாக்கியப் பாதைகள் மட்டுமே நம்தபா காட்டில் உள்ளன. பாதையில் விழுந்து கிடக்கும் மரங்களையும், சேற்றில் பள்ளம் போல பதிந்திருக்கும் யானையின் கால் தடங்களையும் தாண்டி தான் நடை பயணம். அவ்வப்போது மழை சற்று தூவி விட்டுப் போகிறது. இந்த நான்கு அடிப் பாதையைத் தாண்டி எங்கும் செல்ல நினைக்காதே என்று கூறுவது போல இரு புறமும் மரங்களும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இந்த வாழும் சுவற்றைத் தாண்டி, எங்கோ தொலைவில்,  வள் என்று நாய் குறைப்பது போல Barking Deer என்று அறியப்படும் கேளையாட்டின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. 

‘அலாரம் கால்…ஏதாவது லேபர்ட் பார்த்திருக்கும்’ என்றார் ஆர்வலர். இந்த வனச் சரணாலயத்தில் சிறுத்தைப்புலிகள் உண்டு. உடலில் மேகம் போல கருந் திட்டுகள் கொண்ட படைசிறுத்தை என்று அறியப்படும் Clouded Leopard. அரிதாகவே தென்படும் பனிசிறுத்தை (Snow Leopard) போன்றவை இங்குண்டு. ஆனால், இவற்றை நேரில் காண்பது அத்தனை எளிதல்ல. எப்போதேனும் மிருதுவான மண்ணில் அவற்றின் கால் தடங்களைக் காணலாம். ஆர்வலரின் கூரான கண்களுக்கு அப்படி ஒன்று சிக்கியது. 

காட்டுப் பாதையின் ஓரத்தில் ஸ்பூன் அளவு சிறு பள்ளத்தை சுற்றி, ஒரு அரை வட்ட வடிவில், மண்ணில் அமிழ்ந்து தேய்ந்து இருந்த நான்கு சிறு வட்டங்கள். கைப்பையில் இருந்த பேனாவை அருகே வைத்து தடத்தின் அளவை அனுமானிக்க முயன்றார் ஆர்வலர். நீர் நிலைகளில் நீந்தி மீன் பிடித்து உண்ணும் காட்டுப் பூனை (Fishing Cat)  வகையும் இந்தக் காடுகளில் உண்டு. அதன் தடயமாகக் கூட அது இருக்க வாய்ப்புண்டு என்பது அவரின் கருத்து.

‘என் நண்பர் ஒருத்தர் இருக்காரு, தடயத்தை பார்த்த உடனே எந்த பிராணி, எப்ப நடந்து போச்சு அப்படிங்கிற எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுருவாரு’ என்றார் ஆர்வலர். அந்த அளவுக்கு அவரின் திறமை வளரவில்லை என்ற ஆதங்கம் அவர் குரலில் தெரிந்தது. வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவன் பள்ளியிலேயே சிறந்த மாணவனைப் பற்றி பேசுவது போல பட்டது கடைசி வரிசை மாணவனான எனக்கு. 

சூரிய வெளிச்சத்தில், பாதையில் நீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் எல்லாம் வண்ணங்கள் பறந்தன. அத்தனையும் வண்ணத்துப்பூச்சிகள். நம்தபா காடுகளில் மட்டும் ஏறக்குறைய 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ஒரு மூலையில் அமைக்கப்பட்ட பூங்காவில் அன்னாசிப் பழ துண்டுகள் மேல் அமர்ந்திருக்கும் பல வடிவ பட்டாம்பூச்சிகளைப் பார்த்தே வியந்த எனக்கு இங்கு கண்களை எங்கே பதிப்பது என்றே பிடிபடவில்லை. திரும்பிய இடங்களிலெல்லாம் வண்ணச் சுழற்காற்று. சில வினாடிகள் மட்டுமே உட்கார்ந்து, செதிலிறகுகளை மென்மையாக அசைத்து, மீண்டும் அடுத்த இடத்திற்கு பறக்கும் இவற்றிற்கு எத்தகையப் பெயர்கள். 

மரப் பட்டையின் சீவல் போல இறகுகளைக் கொண்ட Grand Yeoman, கருந்திட்டு படர்ந்த இறக்கைகளின் அடியில் சிறு நீல நியான் கோடு கொண்ட Great Archduke, நீண்ட வால்கள் தொடர்ந்து வர தன் கண்ணாடிக் காகித இறகுகளை விரித்து பறக்கும் Common Imperial என்று பூச்சிகளை போலவே பெயர்களும் அழகாக இருக்கின்றன. 

‘இதற்கு பெயர் கைஸர் ஐ ஹிந்த், அருணாச்சல் பிரதேசத்தின் ஸ்டேட் பட்டர்பிளை’ என்றார் ஆர்வலர். ஒரு பட்டாம்பூச்சியின் புகைப்படம் அவர் கைபேசியின் திரையில் ஒளிர்ந்தது.  பச்சையும், மயில் கழுத்து நீலமும் கலந்த வண்ணத்தில் சிறகுகள் விரிய, பனிபடர்ந்த முகடுகள் கொண்ட ஒரு சிறு மலைத்தொடரின் கோட்டோவியம் அதன் சிறகுகளை இணைத்தது. நம்தபா நிலப்பரப்பின் சிறு வடிவத்தை Kaiser-i-hind தன் முதுகில் சுமப்பது போலவே எனக்கு தோன்றியது. 


நம்தபா காடுகளில் இருக்கும் பல பறவைகள் ஒரு குழுவாகத் தான் பயணிக்கின்றன. அதுவும் கலப்பினக் கூட்டமாக. காட்டில் மரங்கள் விழுந்து கிடக்கும் ஒரு திறந்த வெளியில் நின்று மேல் நோக்கினால் இந்தப் பறவை கூட்டங்களின் இயல்பை ரசிக்கலாம். அவற்றைக் காண்பது பல கட்டங்களை உள்ளடக்கியது என்று அன்று தான் எனக்கு விளங்கியது. 

முதலில் மரத்தின் உச்சியில் எழும்பும் பறவைகளின் சத்தமும், கிளைகளின் அசைவும்  மட்டுமே அவற்றின் இருப்பை காட்டிக் கொடுக்கும். தொலைநோக்கியால் சற்று உற்று நோக்கினால் கிளைகளின் நடுவே அலகும் இறக்கைகளும் சேர்ந்த சிறு நிழல்கள் தோன்றி மறையும். பின்னர் அவை கொத்தி போடும் சிறு பழங்களும், விதைகளும் தரையில் படர்ந்திருக்கும் இலைகளில் மழைத்துளிகள் பட்டுத் தெறிக்கும் ஓசையுடன் விழும். நாம் ஆவலுடன் மரத்தின் உச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கீச் என்ற ஒரு சத்தத்துடன் ஒரு பறவை அந்த மரத்தை விட்டு வேறொரு மரம் நோக்கி பறக்கும். சில வினாடிகளில் மீதம் இருக்கும் பறவைகளும் அதைத் தொடர்ந்து செல்லும். அந்தக் கட்டத்தில் தான் என் சக பயணி போன்ற இயற்கை ஆர்வலர்கள் தங்களின் அசாத்தியத் திறமையை வெளிப்படுத்துவர். 

நம் கண்களுக்கு பறக்கும் சிவப்பு டென்னிஸ் பந்து போன்ற ஜீவன் அவர்களுக்கு Scarlet Minivet ஆகக் காட்சிக் கொடுக்கும். வானில் ஒரு மஞ்சள் கீற்று போல மிளிர்ந்து மறையும் குருவி Sultan tit ஆக அவர்களுக்கு பரிமளிக்கும். ஈர்குச்சிகளின் முனையில் சிறு கருப்பு கொடிகள் போல வாலை கொண்டுள்ள பட்சி Racket tailed drongo வாக அவர்களுக்கு பிரத்யட்சமாகும். அதுவும் சாதாரண Racket tailed drongo இல்லை Greater Racket tailed drongo! இத்தகைய பாண்டித்யத்திற்கு முன்னால்  ‘ஏ எப்புட்றா’ என்று யு டியூபில் வைரல் ஆன  அந்தச் சிறுவனை போல வாய் பிளந்து நிற்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை. 

ஆனால் சில பறவைகள் என்னை போல உள்ளவர்களுக்கு ‘சரி போ பாத்துக்கோ’ என்ற நல்லெண்ணத்துடன் மரத்தில் இருந்து துருத்திக் கொண்டிருக்கும் கிளையில் சில வினாடிகளுக்கு அமர்ந்து தரிசனம் கொடுக்கும். அந்தப் பறவைகள் அருளிய கொடையால் தான் ஒரு பத்து, பன்னிரண்டு இறக்கையுள்ள ஜீவன்களை நன்கு மனதில் பதிக்க முடிந்தது.

‘இங்கே சற்று நேரம் உட்காருவோம்’ என்றார் ஆர்வலர். குருவிடம் ஏன்? எதற்கு? போன்ற கேள்விகள் கேட்கக்கூடாது என்று எனக்கு புகட்டப் பட்டிருந்ததால் பாதையின் ஓரத்தில் உள்ள பாறையில் அமர்ந்தேன். நிலத்தின் அருகே இலைகளின் மேல் அமர்ந்து கொண்டு காற்றை ரத்தத்திற்காகத் துழாவும் அட்டைப் பூச்சிகள் எதுவும் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்துக் கொண்டு காலை சற்று நீட்டிக் கொண்டேன். எங்களுக்கு முன் இருந்த திறந்த வெளியை விட்டு சிறு பறவைகள் பறந்து விட்டன. மிதமான வெயிலை தடவியபடி மெல்லிய காற்று வீசியது. மரங்களில் இருந்து சில பழுத்த இலைகள் காற்றில் கோலமிட்டபடி இறங்கின. ஒரு வித மயக்கமான நேரம்.

சில நிமிடங்களில் தூரத்தில் யாரோ மரம் வெட்டும் இயந்திர ரம்பத்தை முடுக்க முயற்சிக்கும் ஓசை ஒன்று விட்டு விட்டு கேட்டது. ஆர்வலர் மெதுவாக என் தோளைத் தொட்டு விட்டு எழுந்து நின்று கொண்டார். சற்று நேரத்தில் புகைவண்டி கிளம்புவது போல ஒரு சத்தம் எழுந்தது. சுற்று முற்றும் பார்த்து நானும் எழுந்து நின்று கொண்டேன். சில வினாடிகளில் மூன்று பறவைகள் என் தலை மேல் பறந்தன. இன்று வரை நான் கண்ட பறவைகளில் அன்று நான் கண்டவையே பெரியது. அவற்றின் குரலை தான் இயந்திர ரம்பத்தோடும், இறக்கைகள் காற்றை அடிப்பதை புகைவண்டியின் ஓசையாகவும் என் மனம் வரித்திருந்தது. நடுவில் மஞ்சள் திட்டும், ஓரங்களில் வெள்ளை நிறமும் கொண்ட பெரும் இறக்கைகள் அசைய, நீண்டு வளைந்த மஞ்சள் நிற அலகு காற்றைக் கிழிக்க அப் பறவைகள் மிக ஒய்யாரமாக நீல வானில் பறந்து எங்களைக் கடந்தன.

‘Great Hornbill’ என்றார் ஆர்வலர். அவரின் கண்கள் அவை பறந்து சென்ற திசையை ஒரு வித மரியாதைக் கலந்த உவகையுடன் நோக்கி நின்றன.

‘ச…எவ்வளவு அழகு. இத கொல்ல எப்படி மனசு வரது’ என்றார் ஆதங்கத்துடன். அதற்கானக் காரணங்களை பின்னர் படித்து தெரிந்து கொண்டேன். சில வடகிழக்கு மாகாணங்களில் இவைப் பரவலாக வேட்டையாடப் படுகின்றன. இறைச்சிக்காக அல்ல இறகுகளுக்காக. இவற்றின் நீண்ட, வண்ண இறகுகள் இங்குள்ள பல சமூகங்களின் சடங்குகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஹார்ன்பில் களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தாவரங்களையும், விலங்கினங்களையும் அவற்றிற்கு உருவாகும் அச்சுறுத்தல்களையும் கண்காணிக்கும் IUCN (The International Union for Conservation of Nature) அமைப்பு இருவாட்சி என்று அழைக்கப்படும் ஹார்ன்பில் பறவைகள் வெகு சீக்கிரத்தில் அழியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.  நம்தபா போன்ற காடுகள் இவ் வகையான சிறப்பினங்கள் பூமியில் இருந்து முற்றும் அற்றுப்போகாமல் இருக்க உதவும் புகலிடங்கள்.


பயணத்தின் கடைசி நாளில் விஜயநகர் சாலையில் சிறிது நேரம் நடந்து போகலாம் என்றார் நண்பர். நாங்கள் தங்கியிருக்கும் தெபான் (Deban) வன விருந்தினர் மாளிகையில் இருந்து விஜயநகர் ஏறக்குறைய நூறு கிலோமீட்டர். ஆர்வலர் சொன்ன சாலை என்பது மலைச் சரிவுகளை சற்று சுரண்டி உருவாக்கப்பட்டது. மேடும், பள்ளமும், அவ்வப்போது சரிவுகளில் இருந்து சரிந்து வரும் பாறைகளும் விரவிக் கிடக்கும் சில மீட்டர்கள் அகலமே கொண்ட மண் பாதை. இந்தியாவின் கிழக்கு பகுதியின் கடைசி ஊரான விஜயநகரத்தை இணைக்கும் சாலை இது தான். 

அந்தக் குறுகிய மலைப் பாதையில் தான் இரும்புக் கம்பிகள், சிமெண்ட், பிளாஸ்டிக் நாற்காலிகள், தகரம் போன்ற பொருட்களால் பிதுங்கி வழியும் லாரிகள் விரைகின்றன. விஜயநகரில் ஏலக்காய் சாகுபடி செய்து பெரும் பொருள் ஈட்டிய வணிகர்கள் புது கார்களில் இந்தப் பாதையில் தான் பவனி வருகிறார்கள். வண்டி எதுவாக இருந்தாலும் சரி ஓட்டுபவர்கள் எதற்கும் கவலைப்படாதவர்கள். அந்தப் பாதையில் ஓடும் சிறு நதிகளின் தகடுகளால் ஆன பாலங்கள் மீது தட தட என்று ரயில்கள் இரும்புப் பாலத்தை கடக்கும் சத்தத்துடன், ஏறக்குறைய அதே வேகத்துடன், கடக்கிறார்கள். வன விலங்குகள் நடமாடும் பகுதி கவனமாக வண்டியை ஒட்டவும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை சாலையின் ஓரத்தில் சரிந்துக் கிடக்கிறது. 

இந்தக் களேபரத்திற்கு நடுவே இந்தியாவிலேயே எங்கும் பார்க்க முடியாத ஒரு அதிசயத்தைக் கண்டோம். பாதையிலிருந்து சற்று தள்ளி நீண்டு வளர்ந்திருந்த ஒரு மரத்தில் மூன்று வாலில்லாக் குரங்குகள் கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்தன. 

‘Hoolock Gibbons’ என்று சொல்லி விட்டு தொலைநோக்கியை என்னிடம் தந்தார் ஆர்வலர். அவருடைய வர்ணனையும் தொடர்ந்தது. முற்றிலும் கருப்பு ரோமமும், நெற்றியில் சிவ பக்தர் போல வெள்ளைக் கோடுடன் காணப்படுவது ஆண். பழுப்பு ரோமங்கள் கொண்டது பெண். அதன் நடுப் பகுதியை இறுகி அணைத்தபடி இருப்பது குட்டி. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே பெண் குரங்கு தன நீண்ட கரங்களால் இரு கிளைகள் இடையே ஒரு பாலம் அமைத்தது. குட்டி மெதுவாக அன்னையின் உடம்பை விட்டு கிளையைப் பற்றி மறு பக்கம் சென்றது. ‘பியுடிபுல்’ என்று வர்ணனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்வலர்.

இந்தியாவில் இயற்கை சூழலில் காணக்கிடைக்கும் ஒரே வாலில்லாக் குரங்கு இந்த ஹூலாக் குரங்குகள். பிரம்மபுத்ரா நதியின் வடக்கு பகுதியில் சில மாகாணங்களில் மட்டுமே இவை தென்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பகுதிகளின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்படும் பல மனித முயற்சிகள் இந்தக் குரங்களுக்கு அடிக்கப்படும் சாவு மணியாக மாறியுள்ளது. 

மின்சாரக் கம்பிகள், எண்ணைக் கிணறுகள், மரம் விட்டு மரம் தாவத் தடையாக காட்டின் நடுவே அமைக்கப்படும் ரயில் இரும்புப் பாதைகள், வாகனங்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட சாலைகள் என்று இதில் பலதும் அடக்கம். குரங்குகளின் நலனுக்காக இவை எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று என் நண்பர் இயற்கை ஆர்வலர் சொல்வது, என்னை பொருத்தவரை, ஒரு எளிமையான நிலைப்பாடு. நிலைமை கொஞ்சம் சிக்கலானது. 

நாங்கள் நின்று கொண்டிருந்த பாதை பத்து ஆண்டுகளுக்கு முன் கிடையாது. விஜயநகருக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் கூட ஆட்கள் தான் சுமந்து செல்ல வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரில் ஒரு கிலோ உப்பின் விலை நூறு ரூபாயாக இருந்தது என்று வனக் காவலர் எங்களிடம் கூறினார். அன்று அவசரத்திற்கு ஆஸ்பத்திரி செல்வது  என்பது பழங் காலத்தில் காசி யாத்திரை செல்வதற்குச் சமானம். நாட்கள் பல பிடிக்கும். போய் சேர்வோமா அல்லது போயேச் சேர்ந்து விடுவோமா என்பதை விதி தான் தீர்மானிக்கும். 

முன்னேற்றம் மற்றும் சூழலியல் சீர்கெடல் ஆகியவற்றிற்கு நடுவே ஒரு தீர்க்கமான கோடு இடுவது அவ்வளவு எளிதல்ல. இந்தத் தராசின் ஒரே தட்டில் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடிப்பதைக் காட்டிலும் அந்தப் பெண் ஹூலாக் வாலில்லாக் குரங்கு போல இந்த இரு துருவங்களுக்கு இடையே பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். கடினம் தான், ஆனால் அடையக் கூடியதே. 

மாலையில் நம்தபாவிலிருந்து கிளம்புவதற்கு முன் விருந்தினர் மாளிகைக்கு அருகே மேடாக இருந்த நோவா தீஹிங் கரையில் நின்று சற்று தொலைவில் ஓடும் நதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இடம் தெபானை சுற்றி உள்ள கிராமங்களுக்கு ஒரு சுற்றுலாத் தலம். சிறு குடும்பங்கள் ஆங்காங்கு நதிக்கரையில் அமர்ந்து வெய்யிலை உறிஞ்சிக் கொண்டிருந்தன. சிலர் ஆற்றின் மேலே அமைக்கப்பட்டத் தற்காலிக மூங்கில் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

இந்தக் கூட்டத்திலிருந்து விலகி சற்று தூரத்தில் ஜோடி ஒன்று அவர்களின் பிராந்திய மொழிப் பாடலுக்கு ஆடி கொண்டிருந்தது. தோள்களைப் பிடித்து, முகத்தைத் திருப்பி, முன்னும் பின்னும் நகர்ந்து, ஆண் ஒரு பாறையில் சாய்ந்து நிற்க பெண் ஓடி வந்து அவன் தோள்களில் சாய என்று எண்பதுகளில் வெளியான ஹிந்தி பட நடன பாணியில் ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்த அசைவுகளை கேமரா மட்டும் அல்லாது கேமரா ஸ்டேபிலைசர், வயர்களற்ற ஒலிப்பெருக்கி போன்ற அத்தனை நூதன சமாச்சாரங்களையும் வைத்து கொண்டு ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அடிக்கடி இசையை நிறுத்தி, லொகேஷனை மாற்றி, நடன அசைவுகளைத் திருத்தி அடுத்த பாலிவுட் ஹிட் படத்தை இயக்கும் ஒரு இயக்குனரின் முனைப்பு அவரிடம் தெரிந்தது. வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

என்னை கடந்து சென்ற நாயகன் என்னை பார்த்து சிரித்தான். அவன் கன்னங்களில் அப்பிய ரோஜா வண்ணம் வேர்வையில் கரைந்திருந்தது. பேச்சுக் கொடுத்தேன். அந்தப் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் ஒரு யூ ட்யூப் சேனலுக்கு தான் இத்தனை பிரயாசமும். எங்கிருந்து வருகிறீர்கள் என்றான் ஆங்கிலத்தில். சென்னையிலிருந்து என்றேன். ஓ பல முறை வந்திருக்கிறேன், ரங்கநாதன் தெரு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றான் ரோஜாக் கன்ன நாயகன். பரவாயில்லையே தி நகரின் பெருமை இந்தியாவின் கிழக்குக் கோடி வரை பரவியிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டேன். 

சூரியன் மரங்களுக்கு பின் மறையத் தொடங்கியது. அருணாச்சல் பிரதேசத்தில் குளிர் காலத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நதியிலிருந்து ஓடி வந்த காற்று நினைவூட்டியது. நதியோரம் பழுப்பு நிறத்தில் ஒரு சிறு குருவி கிளையை விட்டு பறந்து அதன் கண்களில் மட்டுமே பட்ட ஒரு பூச்சியைப் பிடித்து தின்று விட்டு மீண்டும் வந்து அதே இடத்தில் அமர்ந்தது. என் பக்கத்தில் ஆர்வலர் இல்லை. இருந்திருந்தால் அந்தப் பறவையை Siberian Stonechat என்று நாமகரணம் இட்டு அந்தப் புள்ளினத்தைப் பற்றிய பல விவரங்களைப் பகிர்ந்திருப்பார்.   


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்”

Leave a Reply to ரகுCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.