
போதிமரமும் முறைக்கிறது
புத்தனின் புத்தியை மழிக்கிறது
மொத்தமாய் அவனைப் பழிக்கிறது
சத்தமாய் சிரித்துக் கதைக்கிறது -அவன்
சரித்திர முடியை உதைக்கிறது . . .
பாதி இராவில் பறந்தவனே
பதவி சுகங்கள் துறந்தவனே
மோதும் துயரம் மடிந்தனவா?
மூப்பும் மரணமும் முடிந்தனவா?
சூதும் வாதும் அழித்தனையா ?
சூழும் நோயைத் தொலைத்தனையா?
யாது அறியத் துறவு கொண்டாய்
எதனைத் தொலைத்திட துறவு கண்டாய் .
ஊரும் பேரும் கடந்துவிட்டாய்
உறவுகள் அத்தனையும் தொலைத்துவிட்டாய்
பிறவிப் பயனை அடைந்தனையா?
பெற்றோர் உரிமையைக் காத்தனையா?
மனைவி மக்கள் துணை மறந்தாய்
மற்றவர் உற்றவர் தனை மறந்தாய்
கற்றவர் கூடச் சிரிக்கின்றார்
பெற்ற பெருவரம் பலிக்கலையே?
ஆசை மோகம் அறுத்துவிட
ஆரால் முடியும் உலகிலென்று.
அதற்கா துறந்தாய் உலகையென்று . . .
உடமைகள் அனைத்தையும் துறந்து சென்றாய்
உடலை உடன் ஏன் சுமந்து சென்றாய்
கடமையை மறந்தவன் நீயென்றார்
மடமையில் துறந்தவன் நீயே என்றார்.
விடலைப் பருவம் வந்த பின்னே
விரும்பிய ஒருவளை ஏன் மணந்தாய்
அரும்பிய காதலில் உறவு கண்டாய்
அழகொரு மகனின் வரவு கொண்டாய் – ஏன்
அனைத்தையும் துறந்திட முடிவு கொண்டாய்
நினைப்பிதில் ஒன்றும் தவறு இல்லை
மனையறம் நாடிய மனிதனுக்கு- இதை
நினைத்திடும் உரிமை என்றுமில்லை. .
காதின் ஓட்டை வளர்த்தவனே
மோதும் ஆசை வெறுத்தவனே
நாறும் நறுமலர் ஓவியத்தை
சாரும் உன்னுயிர்க் காவியத்தை
நாற்றச் சகதியில் விடுவதற்கா?
நங்கை அவளைத் துறந்து சென்றாய்
இராகுலன் முகத்தையும் மறந்து சென்றாய்
இரவின் நடுவில் பிரிந்தவனே
எழுப்பி அவளிடம் சொன்னதுண்டா?
எழுகென என்னுடன் என்றதுண்டா?
விடியற் காலை வேளையிலே
விரும்பி அவளிடம் கேட்டனையா?
திரும்பி வருவேன் என்றனையா?
சாரும் உறவுகள் மறந்தவனே
சரித்திர முடியைத் தரித்தவனே. . .
சேரும் இல்லறம் சேறு என்றால்
சேர்ந்திட நினைப்பதும் தவறு அன்றோ?
ஓரும் துறவற உரிமையெலாம்
சாரும் ஒருபுறம் ஆணையன்றோ? – அதைச்
சார்ந்திடப் பெண்ணை மறுப்பதுண்டோ?
சார்ந்திட அவளை நீ அழைத்த்துண்டோ?
கேசம் முற்றும் துறந்தவனே
தேசம் காத்திட மறந்தனையே
பாசம் உண்டா பிள்ளையிடம்
பரிவுடன் மனைவியைப் பார்த்ததுண்டா
போரும் பூசலும் கண்டபின்னே அவள்
பூமியில் யாரைச் சார்ந்திருப்பாள்
ஊரார் பழிக்கையில் என்ன செய்வாள்
தேரா மன்னா என்றுனையே
தேசம் நகைத்திட என்ன செய்வாள்?
மோதும் மனிதச் சாதிகளை
மோதி அழித்திட முடியுமென்றா?
காதை மூடிக் கரந்து சென்றாய்?
ஏதம் ஏதும் மறைந்தனவா?
ஏழையர் துயரம் குறைந்தனவா?
தீரா ஆசையை வென்றதுண்டா?
தீமைகள் மறையக் கண்டதுண்டா?
தீயவர் மாறிய சேதி உண்டா?
தாயவள் வாழ்ந்திட நாதியுண்டா?
சேதிகள் அறியா சித்தார்த்தா – நீ
சாதித்துக் கிழித்தது ஏதுமுண்டா? – உனைச்
சரித்திரம் மறந்ததும் நினைவிலுண்டா?
சாதியை மறுத்தாய் தொலைந்துவா? – சம
நீதியும் உலகில் நிலைத்ததுவா? – மட
வாதிகள் வளர்கிறார் தடுத்ததுண்டா?
வேதியர் வளர்த்த யாகமென்னும்
வேள்வித் தீயும் குறைந்ததுண்டா? – உயிர்
மேல்கீழ் என்பதை மறுப்பாருண்டா?
ஆதிக்கக் கொலைகளும் மறைந்ததுண்டா?
அசோகனும் மீண்டும் பிறப்பதுண்டா?
தோல்வியில் முடிந்ததுன் துறவு எனபேன் –உடன்
தோற்றிட ஏனிந்தத் துறவு என்றேன். . .
சாதிகள் பலப்பல காணுகிறேன்
சரித்திரப் பிழைக்கு நாணுகிறேன். . .
ஆதியில் உன்னைத் தடுத்திருந்தால்
பாதியில் பதவியைப் பறித்திருந்தால் – உன்
மீசையும் வருமுன் துறந்திருந்தால் – பிறர்
ஆசையை உலகில் அழித்திருந்தால் – இந்த
ஏச்சும் பேச்சும் எனக்குமுண்டா?
எந்நிழல் ஒதுங்குவார் எவருமுண்டா? . . .
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

நல்ல ஒரு பார்வை
நல்ல ஒரு துணிச்சல்