நாள் – 28-ம் திகதி டிசம்பர் மாதம்
நேரம் – அதிகாலை மணி 3.00-லிருந்து 4.00-வரை
நான், நாளை அதிகாலையில் என் மனைவியுடன் உரையாடப் போகிறேன்.
என் மனைவி இறந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அவளுடன் பேச அதுதான் உகந்த நேரமென்று சிலாகித்து, ஃபாதர் எனக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டார். அவரின் சம்மதத்திற்கு என் நண்பன் கோபாலின் வேண்டுகோளே முக்கிய காரணம்!.
கோபால், என்னுடன் PMR (ஓன்பதாவது) வரை ஒன்றாகவே படித்த உயிர்த்தோழன். எனது கல்யாணத்தில் கலந்துகொண்ட ஒரே பள்ளித் தோழனும்கூட. பின்னர், பல வருடங்களுக்குத் தொடர்பற்று, நினைத்துக்கொள்வதுகூட இல்லாமல் தொலைந்து போனோம். ஆனால், பொதுவான நண்பன் ஒருவனின் அகால மரணத்தில் எதிர்ப்பாராமல் சந்தித்துக்கொண்டபோது, இருவரின் கண்களிலும் சுரந்த கண்ணீரில் தோழமையின் உயிர் இன்னும் அப்படியே துடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனே, எண்களைப் பரிமாறிக்கொண்டோம். அவன் இப்போது மதம் மாறிவிட்டதாகச் சொன்னான். லூர்துசாமி, அவனுடைய புதிய அடையாளமாக இருந்தது.
என்னைப் பற்றிச் சொல்வதற்கு என் மனைவியின் கோர மரணத்தைத் தவிர வேறு செய்தி இருக்கவில்லை!.
“சேசுவே!.. பெட்ரோல ஊத்தி தற்கொல பண்ணிக்கிற அளவுக்கு உங்களுக்குள்ள என்னடா பிரச்சின?” லூர்து பதறிப் போனான்.
“எங்க அம்மா மேல சத்தியமா சொல்றண்டா. எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்ல!. ரொம்ப சந்தோஷமாதான் இருந்தோம். என்னா, புள்ள இல்லாத ஒரே கொறதான். டாக்டர பாத்தப்ப ஏங்கிட்டதான் கொற இருக்குன்னு சொன்னாரு. அவளுக்கோ புள்ளிங்கின்னா உசுரு!. ரொம்ப ஒடஞ்சி போயிட்டா. என்னாதான் ‘தத்து எடுத்தாலும் பெத்த புள்ள ஆவுமா?. உலகத்துக்கு நா மலடிதானேன்னு அழுதா.” என்று சொன்னபோது மனைவியின் அழுகை இன்னும் என்னிடம் இருப்பது தெரிந்தது.
“இப்படி கேக்கறேன்னு ஏதும் நெனச்சிக்காத. ஒனக்கு வேற பொம்பள தொடர்பு ஏதும்..”
“என்னடா அப்பிடி கேக்குற?. அப்படியெல்லாம் செய்யிற ஆளா நானு?”
“உம் பொண்டாட்டிக்கு ஏதும்..” முழுமையாகக் கேட்கவே அவன் சங்கடப்பட்டான்.
“சேச்சே!. அப்படியெல்லாம் சந்தேகமா படறதுகூட மகாபாவம்டா.”
“ம்.. அப்ப ஏன் இப்படி ஒரு சாவு? அதுக்கு என்னா ஒரு தெகிரியம் வேணும் தெரியுமா?”
“அதாண்டா, எனக்கும் ஒரே கொழப்பமா இருக்கு. இப்படி எரிஞ்சி சாம்பலாவ எப்பிடி துணிஞ்சா?.. தெனமும் அத நெனச்சாலே ஒடம்பு பதறுது. நல்ல வேள, அந்தக் கொடுமைய நா எங் கண்ணால பாக்கல. தோ, அவ போயி ஒரு வருஷம் ஆவுது. ஆனா, ஒரு நாளுகூட நிம்மதியா தூங்கனது கெடையாது.” – அழுதுக்கொண்டே சொன்னேன்.
லூர்து, நெகிழ்ந்து போனான். என்னைத் தோளோடு அணைத்துக்கொண்டு கேட்டான்.
“உன்னிய பாக்கவே பாவமா இருக்குடா. சரி, நா ஒன்னு சொன்னா கேப்பியா?.”
“சொல்லுடா..”
“எனக்கு ஒரு ஃபாதர தெரியும்.. ரொம்ப நல்ல மனுஷன்!. நீ விருப்பப்பட்டா அவர போய் பாக்கலாம்..”
எனக்குப் பொதுவாகவே சமய, சம்பிரதாயங்களில் கொஞ்சமும் நம்பிக்கை இருந்ததில்லை. எனவே, ஆர்வமேதும் காட்டாமல்,
“அவுரு இன்னா, சாமி ஏதும் ஆடி குறி சொல்லுவாரா? ஃபாதருன்னு வேற சொல்றியே?” என்றேன்.
“அப்படியெல்லாம் ஒன்னும் கெடையாதுடா. இதே மாதிரியான கேசு ஒன்ன அவுரு செலசாய் பண்ணி வெச்சத என்னோட இந்த ரெண்டு கண்ணால பாத்தன். அதனால சொல்றன்..” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு, நான் கொஞ்சம் சலனமுற்றுத்தான் போனேன்.
அவனே தொடர்ந்து சொன்னான்.
“உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் பாருடா. நா உன்ன வற்புருத்தல. உம் மனைவியோட சாவுக்கு நீ காரணமில்லன்னு தெரிஞ்சா உனக்குதானடா மனசு ஆறுதலா இருக்கும். ஏதோ அவசரப்பட்டு இப்பிடி செஞ்சிக்கிட்டான்னு நீயும் நிம்மதியா இருக்குலாமில்ல!. ஆனா ஒன்னு!. ஃபாதரு நிச்சயமா ஒனக்கு ஒதவுவாருன்னு என்னால சொல்ல முடியாது. ஏன்னா, சர்ச்சுல இதுக்கெல்லாம் அனுமதி கெடையாது. மேலிடத்துக்கு தெரிஞ்ஜா பிரச்சினை ஆயிரும். அதுனால, அவுருக்கே ஒதவுனுன்னு தோனுனா மட்டுந்தான் ரகசியமா ஒதவுவாரு. எனக்கு தெரிஞ்சி இதுவரிக்கும் ரெண்டே ரெண்டு பேருக்குதான் அவுரு ஒதவியிருக்காருன்னா பாத்துக்கியேன்..”
நண்பன் சொன்னததைக் கேட்க இணக்கமாகத்தான் இருந்தது. மனது இளகிக்கொண்டிருந்தது.
‘அதையும் பார்த்துவிட்டால்தான் என்ன?. எத்தனைக் காலத்திற்கு என்னால்தான் தற்கொலைச் செய்துக்கொண்டாளோ என்று தினமும் மறுகிக்கொண்டே சாவது?’
சனிக்கிழமை மாலை நண்பன் ஃபாதரிடன் என்னை அழைத்துச் சென்றான்.
பாதிரியாருக்கான அங்கியில் அவரைப் பார்த்தபோது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஏசுநாதரின் முகத்தில் தவழும் சாந்தத்தை அவரிடம் கண்டேன். தனது கரங்களைக் கோர்த்துக்கொண்டு மிகவும் கனிவாக என்னிடம் பேசினார். நான், என் மனைவியின் மரணத்தைப் பற்றிச் சொல்லி, கண்கள் கலங்கியதில் அவர் நெகிழ்ந்து போனார்.
‘மே ஜீசஸ் பிளஸ் யூ மை சன்!.’ என்று ஜெபித்து, என் மனைவியின் முதலாமாண்டு நினைவு நாள் முடிந்த பிறகு, ஒரு அதிகாலை தன் வீட்டிற்கு அழைத்து வரும்படி நண்பனிடம் சொல்லிவிட்டு, எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தச் சந்திப்பைப் பற்றி யாரிடமும் பகிரலாகாது என்பதைத் தனது குரலுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதக் கண்டிப்பில் நண்பனைப் பார்த்துக்கொண்டே என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
வழக்கம்போல் நான், மனைவியின் நினைவுகளில் ஆழ்ந்து போனேன். தற்கொலைச் செய்துக்கொள்ளும் நாள்வரை அவளால் எப்படி சிறு சலனத்தைக்கூட காட்டாமல் இருக்க முடிந்தது?. நான் கூட ஒரு முறை, அவளுடைய அன்பில் மூச்சுத் திணறி, ‘நீ இல்லாட்டி நா எப்பிடித்தான் இருப்பேனோ தெரியில ‘சுவீட் ஹார்ட்’ என்று கேட்டு வைத்தேனே!. அதற்கு அவள், ‘நீங்க, அழுக்கு அண்டாத பளிங்கு. உங்களுக்கு ஆயுசு கெட்டியாக்கும்!. நாந்தான் மொதல்ல செத்து போவன்..’ என்று சொல்லி, முத்தத்தால் வாயை அடைத்து உடலுறவு கொண்டு திளைத்தாளே? அதுதான் அவள் காட்டிய சமிக்ஞையோ?. அது ஒரு வெள்ளி இரவு!. அவளுக்கு விரதத்திற்கான நாள்!. உடல் உறவுக்கு உடன்படவே மாட்டாளே?. ம்.. அவள் சமிக்ஞையைக் காட்டித்தான் இருக்கிறாள். நான்தான் பார்க்கத் தவறியிருக்கிறேன் என்று என்றும்போல் அன்றும் அதையே நினைத்துக்கொண்டு மறுகலானேன்.
அவள் உத்தமி!. தனது தற்கொலையால் எனக்கேதும் சிக்கல் வந்துவிடக்கூடாதென்று, ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. எனக்குதான் வாழப் பிடிக்கவில்லை.’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு செத்துப் போய் என்னைக் காப்பாற்றினாள்.
டிசம்பர் 28, வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 3.00!.
ஃபாதர் வாசலிலேயே காத்திருந்து, இருவருக்கும் ஸ்தோத்திரம் சொல்லி, மாதா கோவிலை ஒட்டியே இருந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். மாதா கோவில், மயான அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. தேவாலயத்தின் உச்சியில் சிலுவை, டியூப் லைட்டில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. குளிரில் அதன் ஒளி, ஓர் எல்லைக்குள் சரணாகதியாகிக் கிடப்பதுபோல் தெரிந்தது. வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மெழுகுவர்த்திகள் எரிந்து, இரவிற்கு வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தன. சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் ஓவியம் ஒன்று, வரவேற்பறையில் கம்மிய வெளிச்சத்தில் துயரம் தோய்ந்து காணப்பட்டது.
ஃபாதர், தனது நாசியைத் தேய்த்துவிட்டுக்கொண்டார்.
“மனைவி என்னோட பொறந்நாளுக்கு வங்கிக்கொடுத்த ஃபர்ஃபியும் ஃபாதர். இந்த வாசத்திலதான் நான் இப்ப அவளோடு வாழ்ந்துகிட்டு இருக்கன்” என்றேன்.
அவர், கனிவுடன் என்னைப் பார்த்தார்.
“வெல் டன். திஸ் மே ஹெல்ப் அவுர் ஃபுரோசஸ்..” – ஃபாதர் என்னை மெச்சிவிட்டு, லூர்துவிடம் கேட்டார்.
“லூட்ஸ், வீஜா போர்ட் கேம பத்தி இவுருக்கு ஏதும் தெரியுமா?.”
“தெரியாதாம்!. மேலோட்டமா கொஞ்சம் சொன்னன். டீடேய்லா ஏதும் சொல்லல ஃபாதர்.” என்றான்.
ஃபாதர், ஆமோதித்துக்கொண்டே இரண்டாக மடிக்கப்பட்டிருந்த பரமபதம் போன்ற அட்டையை எடுத்து மேசைமேல் விரித்தார்.
நான், அட்டையைப் பார்த்தேன்.

‘OUIJA’ என்ற பெயர், அட்டையின் மேற்கோடியின் நடுவில் வானவில் வடிவில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. அதைத்தான் ஃபாதர் ‘வீஜா’ என்று உச்சரித்தார் என்று தெரிந்துகொண்டேன். பெயருக்கு இடதுபுற மேற்கோடியில் ‘YES’ என்றும், அதனையொட்டி மேகப் பின்னணியில் சிரிக்கும் முக சூரியனும், வலதுபுற மேற்கோடியில் ‘NO’ விற்குப் பக்கத்தில் இரவு நேர பின்னணியில் கவலைத் தோய்ந்த முகத்தை காட்டும் பிறை நிலாவும் காணப்பட்டன. ‘வீஜா’விற்கு கீழே, 26 ஆங்கில எழுத்துகள் ‘A’ லிருந்து ‘M’ வை ஒரு வரிசையாகவும், ‘N’ லிருந்து ‘Z’ வரை இன்னொரு வரிசையாகவும் வானவில் வடிவில் அச்சிடப்பட்டிருந்தன. அதற்குக் கீழே, ‘1’-லிருந்து ‘0’ வரையிலான பத்து எண்களும் இடமிருந்து வலமாக நேராக எழுதப்பட்டிருந்தன. அதற்குக் கீழே ‘GOOD BYE’ இருந்தது. அட்டையின் அடிப்பக்க வலது, இடது கோடிகளில் ஆவி உருவத்தில் ஓர் ஆண் மற்றும் பெண்ணின் கரங்களும், அவற்றுக்கு நேர் எதிரே உருமற்ற இரண்டு கரங்களும் இருதய வடிவிலான ஒரு வில்லையைத் தொட்டுக்கொண்டிருந்தன.
அட்டையில் வரையப்பட்டிருந்த படங்களைப் பார்க்க ஏதோ ஓர் ஆவியுலகைப் பின்னணியை நினைவூட்டுவது போலிருந்தது!. கருப்பு நிறப் பின்னணியில் அதைக் கூர்ந்து பார்க்கச் சங்கடமாய் இருந்தது.
“மை சன்! இது, இறந்துபோன நமது முன்னோரின் ஆவிகளுடன் பேசும் ஒரு கேம்!. பலரும் பல காரணங்களுக்காக இறந்துவிட்ட உறவினர்களுடன் பேச விரும்புகின்றனர். சில குழப்பங்களுக்கும், சோதனைகளுக்கும் விடையே தெரியாமல் மனிதர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வழி இருப்பது தெரிந்தால் உடனே அதை நாடி ஓடுகிறார்கள்; சில தகவல்களில் சாந்தி பெறுகிறார்கள். சரி, இதையெல்லாம் நம்பலாமா என்றால், இதனால் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன, பலர் ஆறுதல் அடைந்துள்ளனர் என்பதுதான் அதற்கான பதில்!. சிலர், ‘பேய் விளையாட்டு’ என்று சொல்லி இதை ஒதுக்கிவிடுவதும் உண்டு!. இறந்து போன நமது உறவுகளை நாம் பேய்களாகவாப் பார்க்கிறோம்? கல்லறைத் திருநாள், தீபாவளி போன்ற நாட்களில் இறந்தவர்களுக்குப் படையல் வைத்து, வணங்குவதில்லையா? ஆசீர்வதிக்கச் சொல்லி அவர்களின் படங்களின் முன் விழுந்து, எழுகிறோமே?” ஃபாதரின் பேச்சு எனக்கு நியாயமாகவே பட்டது.
தீபாவளிதோரும் அம்மா, அப்பாவிற்கு படையல் வைத்து வணங்கி வரும் வழக்கத்தை எண்ணிக் கொண்டேன்.
‘இந்த வருட தீபாவளிக்கு மனைவிக்கும்கூட சேலை எடுத்துப் படையல் வைத்தேனே!.’
ஃபாதர் ஏதோ தியானத்தில் ஆழ்ந்து, ஞானத்தால் பெற்றத் தீட்சையில் எனது குழப்பத்தைத் தீர்த்து வைப்பார் என்று நம்பியிருந்த நான், அவர் ஆவிகளுடன் பேசுவார் என்பதைக் கேட்டதும் திடுக்கிட்டேன். கிலியில் உடல் சில்லிட்டுப் போனது. ஆமானுஷ்ய விஷயங்களுக்கு எளிதில் அடிமைப்பட்டுப் போகும் பலஹீனம் எனக்கிருப்பதாக ஒருவித அச்சம் ஆழ்மனதில் படிந்து போயிருந்தது. அதனால் அத்தகைய விஷயங்களிலிருந்து விலகியிருக்கவே விரும்பினேன். ஆனால், இப்போது நானே வலிந்து அப்படியொரு ஏற்பாட்டிற்குள் சிக்கிக்கொண்டது என்னைப் பதற்றம்கொள்ள வைத்தது. எனது கவலையை உணர்ந்தவன்போல் நண்பன் என் கரங்களை அழுத்திப் பற்றி, ஆறுதல் தந்தான்.
ஃபாதர் தொடர்ந்து சொன்னார்.
“மை சன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், விளையாட்டின் விதிமுறைகள் தெரியாதவர்களும் வேடிக்கைக்காக இந்த விளையாட்டை விளையாடினால் தவறுதலாக துர்த்தேவதைகளின் கட்டுப்பாட்டிற்கு ஆளாகிப் போகும் அபாயம் இதில் இருக்கிறது. அதோடு, மனோதிடம் அற்றவர்கள்; கோழைகள் இதனால் எளிதில் மனநல பாதிப்பிற்குள்ளாகிப் போகும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் சைத்தானின் விளையாட்டு என்று சொல்லி, எங்களின் மார்க்கம் இதைத் தடைச் செய்திருக்கிறது. நான் உனக்கு உதவுவதுகூட எனது மார்க்கத்திற்கு விரோதமான செயல்தான். லூட்ஸ் வேண்டிக் கேட்டுக்கொண்டான் என்பதற்காக ஒப்புக்கொண்டேன்.. ஆயினும், என்னைப்போல் ஆழமான கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், விளையாட்டின் விதிமுறைகளில் நன்கு பரிச்சயமுள்ளவர்களைக் கொண்டு விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதும் உண்மைதான்.” என்றார்.
அதைக் கேட்க எனக்குக் கலவரமாய் இருந்தது. துர்த்தேவதைகளின் கட்டுப்பாடு மற்றும் புத்தி பிறழ்ந்துவிடக்கூடிய அபாயம் எல்லாம் கேட்கவே திகிலூட்டியது. நண்பன் செய்தது உதவியா அல்லது உபத்திரவமா என்று குழம்பித் தவித்தேன். மனைவி தற்கொலைச் செய்துக்கொண்டதை அவனிடம் சொல்லாமலிருந்திருந்தால் இந்தச் சிக்கலே வந்திருக்காதே என்று வருந்தினேன்.
“ஒரு முக்கியமான விஷயம் மை சன். நாம் அழைக்க விரும்பும் ஆவி, வரலாம் அல்லது வராமலும் போகலாம். அதே போல் வந்த ஆவி எந்த நேரத்திலும் விளையாட விரும்பமில்லாமல் வெளியாகியும் விடலாம். அதைத் தடுக்க நமக்கு அதிகாரம் இல்லை!. ஆனால், ஆவி வந்த பிறகு அனுமதி இல்லாமல் யாரும் விளையாட்டிலிருந்து வெளியேற முடியாது. மீறி வெளியேறினால் ஆவி, அழைத்தவரின் பின்னாலேயே சுற்றித் திரிந்து அவரைப் பல தொந்தரவுகளுக்கு ஆளாக்கலாம்.” என்று எச்சரித்தார்.
நான், இதில் இவ்வளவு நிபந்தனைகள் இருக்குமென்று எதிர்ப்பார்க்கவேயில்லை. ஆவியின் அதிகாரத்திற்குட்பட்ட விளையாட்டாய் அது பீதியுற வைத்தது. பின்வாங்க முடியாத சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டதுபோல் உணர்ந்து, பரிதாபமாய் நண்பனைப் பார்த்தேன்.
“வழி காட்டறதுக்குதான் ஃபதர் இருக்காரேடா!. பயப்படறதுக்கு ஒன்னுமில்ல.” என்று தைரியமூட்டினான்.
ஃபாதரின் அறை, ஆவிகளின் உலகைப்போல் மங்கிய ஒளியில் இருண்டுக் கிடந்தது. அவர், கூரையில் தொங்கிய குடைப் போன்ற கண்ணாடிக்குள் எரியும் மின்சார வெழுகுவர்த்தியை அதனோடு தொங்கிய கயிற்றால் கீழ் நோக்கி இழுக்க, அது மேசைக்கு அரையடி உயரத்தில் வந்து நின்று, அசைந்தது. அதன் ஒளி, ‘வீஜா’ அட்டையில் குவிந்து, ஒளிர்ந்தது. அதன் வெளிச்சம் கட்டுப்படுத்தக்கூடியது என்பதை ஃபாதர் அதன் ஒளியை மங்கிப் போக வைத்ததிலிருந்து தெரிந்தது.
ஃபாதரும் நானும் எதிரெதிரே அமர்ந்துகொண்டோம். நடுவில் ‘வீஜா’ அட்டை!. எனக்கு வலது புறம் பேப்பர், பேனாவுடன் நண்பன். அவன் என்ன எழுதப் போகிறான் என்று யோசனையாக இருந்தது. நிழல்கள், எங்களின் அசைவிற்கேற்ப ஆவிகளைப்போல் சுவர்களில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன.
ஃபாதர், எங்கள் இருவரையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு, தனது ஆட்காட்டி மற்றும் நடு விரலை இதய வடிவ வில்லையின் மேல் வைத்தார். விரல்கள், வில்லையைத் தொட்டும் தொடாமலும் இருந்தன. நானும் எனது விரல்களை அதன் மேல் வைத்தேன். ஃபாதர் மெல்ல வில்லையை நகர்த்த நானும் அவரைத் தொடர்ந்தேன். அவர், வில்லையால் மூன்று முறை அட்டையை வலம் வந்து, நடுவில் நின்றார்.
“வணக்கம். நேர்மறையான ஆவிகள் யாரும் இருந்தால் அதனுடன் பேச விரும்புகிறோம்… தயவு செய்து வரவும்..” ஃபாதர் மிகவும் பணிவுடன் ஆங்கிலத்தில் கோரிக்கையை வைத்தார். லூர்து, உடனே அந்தக் கோரிக்கையைத் தாளில் குறித்துக்கொண்டான்.
நான் கட்டியிருந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ நிமிடத்திற்கு ஒரு முறை ஒளி பெற்று, மணியைக் காட்டிவிட்டு மடிந்து போனது. ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
“இவர் எனது நண்பர் ராம். இறந்து போன தனது மனைவியை எண்ணி நிம்மதி இல்லாமல் மிகவும் வாடுகிறார். அவருக்கு யாராவது உதவி செய்ய முன் வருவீர்களா பிளீஸ்..” ஃபாதர் மன்றாடினார்.
அவரின் கேள்விகள் யாவும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், அதுவே அதற்கான தொடர்பு மொழி என்று எண்ணிக்கொண்டேன். அவர், ஆவிகளிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் பேசினார்.
“ராமின் மனைவியின் ஆவி தொடர்புக்குள் வந்தால் மிகவும் நன்றி உடையவர்களாய் இருப்போம்! ஐ பிளீட்!. பிளீஸ்.”
ஃபாதர், இப்போது எனது மனைவியின் ஆவியையே நேரடியாக தொடர்புக்குள் வர மன்றாடியதைக் கேட்டுப் பதறிப் போனேன். கலவரத்துடன் நண்பனைப் பார்த்தேன். அவன், இமைகளைச் சிமிட்டி பயப்பட ஒன்றுமில்லையென்றான். ஆயினும், நான் மிகவும் சஞ்சலத்திற்குள்ளாகித் தவித்தேன். இறந்து போன மனைவியின் ஆவியுடன் உரையாடுவதை நினைத்த உடனேயே உடல் சிலிர்த்து உதறிக்கொண்டது. ஃபாதர், ஜெபத்தில் இருப்பதுபோல் இமைகள் மூடிக் காணப்பட்டார். அடிக்கடி எனது மனைவியின் ஆவியை தொடர்புக்குள் வரும்படி அழைத்துக்கொண்டிருந்தார்.
முப்பது நிமிடங்கள் கடந்துவிட்டதை எனது ‘வாட்ச்’ அறிவித்து அணைந்தது. என் மனைவி தீயூட்டி இறந்துபோனதால் அவளின் ஆவி வர தாமதமாகும் என்று ஃபாதர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஆயினும் இதெல்லாம் நேர விரயமாகவே எனக்குப் பட்டது. எரிச்சலாய் இருந்தது!.
அடுத்தக் கேள்வியைக் கேட்க, ஃபாதர் எத்தனித்தத் தருணம், மெழுகுவர்த்தி திடீரென்று ஒரு முறை அணைந்து ஒளிர்ந்தது. அவர், பார்வையால் எங்களை உஷார் படுத்தினார்.
“வணக்கம்!. யாராவது வந்திருக்கிறீர்களா?..”
அடுத்த விநாடி, வில்லை நகர்ந்தது. வில்லையின் நடுவிலிருந்த கண்ணாடி ‘YES’-சை பெரிதாகக் காட்டியது. ஆவி, இப்போது வில்லையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. நண்பன் உடனே குறிப்பெடுக்க ஆரம்பித்தான்.
நான், மிகுந்த அச்சத்துடனும் ஆச்சரியத்துடனும் வில்லையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் மேலிருந்த எனது விரல்கள் நடுங்கத் தொடங்கின.
“மிக்க நன்றி!. நாங்கள் யாருடன் தொடர்பிலிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளலாமா?..”
வில்லை, முதலில் “K’, பிறகு ‘A’, தொடர்ந்து ‘M’, மீண்டும் ‘A’, அடுத்து ‘L’, இறுதியாக ‘A’ என்ற எழுத்துகளைக் காட்டி நின்றது.
‘KAMALA’.
எனக்கு உடல் உதறிச் சிலிர்த்தது. ஃபாதரைப் பார்த்து ஆமோதித்தேன். ஆவியைத் தேடுவதுபோல் என் பார்வை உடனே சுவர் மற்றும் கூரையின் பக்கம் போனது. கழுத்துப் பட்டையில் சில்லென்று காற்றின் உரசலை உணர்ந்து திடுக்கிட்டு பின்னால் திரும்பினேன். நண்பன், உடனே என் கரத்தை அழுத்தி, ‘வேண்டாமென’ தலையசைத்தான். நான், பதற்றத்திற்குள்ளாகி நடுங்கினேன்.
“கமலா என்ற பெயரில் நிறைய ஆவிகள் இருக்குமே. உன்னை எப்படி அடையாளம் தெரிந்துகொள்வது?”
ஆவி, யோசிப்பதுபோல் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. ‘இது வேறொரு கமலாவோ’ என்று நான் சந்தேகிக்கத் தொடங்கிய நேரம், வில்லை நகர்ந்தது.
“S… W… E…. E… T… H… E… A… R… T…”
‘யெஸ்..’ என்று ஆமோதித்து நான் உணர்ச்சிவயமாகிப் போனேன். கண்களில் கண்ணீர் திரண்டது.
‘நான் என் மனைவியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்!.’ நினைக்கவே உடல் புல்லரித்தது.
“இன்னும் ஒரே ஒரு விஷயம்! ராமின் பிறந்த நாளுக்கு நீ பரிசளித்த பொருள் ஞாபகம் இருக்கிறதா?..”
வில்லை உடனே பதில் சொல்லத் தொடங்கியது.
“R… O… C… C… O… B… A… R… O… C… C… O…”
நான், கன்னங்களில் கண்ணீர் வடிய, தலையசைத்து ஒப்புக்கொண்டேன். என்னையும் மீறி ‘சுவீட் ஹார்ட்’ என்று என் உதடுகள் முணுமுணுத்தன. பிறந்த நாளன்று, நள்ளிரவு 12 மணிக்கு அம்மணமாய் நடந்து வந்து, ஒரு முத்தத்தில் வாழ்த்துச் சொல்லி ஃபர்ஃபியூமைப் பரிசளித்துவிட்டு, அவளே என்னை உடலுறவிற்குத் தூண்டிக் கொண்டாடி மகிழ்ந்த அந்த இரவை நினைத்துக்கொண்டேன். உடன்படும் பெண்ணிலும் ஆணை புணர்ச்சிக்குத் தூண்டி, ஆக்கிரமித்துத் திளைக்கும் உடலுறவு, பெண்ணுக்கானது என்பதை உணர்ந்துகொண்ட இரவு அது!.
ஆவியான அவளை நினைவில் ஓர் அடையாளத்திற்குள் கொண்டுவர முயன்றேன். சாத்தியப்படவில்லை!. சிறு எண்ணச் சலனத்திலும்கூட அவள் கலைந்து போகலானாள்!.
“மிக்க நன்றி!. நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்தீர்களா?..”
“YES..”
“இதனால்தான் ராமிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. சந்தோஷமாக வாழ்ந்த நீ திடீரென்று ஏன் அப்படியொரு முடிவை எடுத்து, மீள முடியாத துன்பத்திற்கு அவனை ஆளாக்கிவிட்டுப் போனாய்?.”
நீண்ட நேரம் பதிலில்லை!
“ராமிற்காக வருத்தப்படுகிறாயா?..”
“YES”
இதைக் கேட்டதும் நான் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டுப் போனேன். கண்ணீரை அடக்க முடியவில்லை.
“நீ ஏன் அப்படியொரு முடிவை எடுத்தாய் என்பது தெரியாமல் அவன் எவ்வளவு துன்பப்படுகிறான் தெரியுமா?.” என்று கேட்டு, ஃபாதர் என்னைப் பார்த்தார்.
பதிலில்லை!.
“அவன் அப்படி துன்பப்பட வேண்டுமென்று நீ விரும்புகிறாயா?..”
“NO”
“நீ ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தாயென்று தயவு செய்து சொல்ல முடியுமா?.”
நீண்ட நேரம் பதிலில்லை!..
“காரணம் மட்டும் தெரிந்துகொண்டால் போதும், இருக்கின்ற நாட்களை அவன் உன்னை நினைத்துக்கொண்டே நிம்மதியாக வாழ்ந்து சாவான்” என்று கேட்டு, ஃபாதர் என்னைப் பார்த்தார்.
என் தலை தானாகவே அவரை ஆமோதித்தது.
“NO..”
“நோ?. புரியவில்லை!. தயவு செய்து விளக்கமாக சொல்ல முடியுமா?.” ஃபாதரின் நெற்றி சுருங்கியது.
பதிலில்லை!. பத்து நிமிடங்கள் கடந்திருந்தன.
“நீ இன்னும் இங்கேதான் இருக்கிறாயா?.”
“YES”
“நீ அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிகிறது. பரவாயில்லை!. இவ்வளவு நேரமாக எங்களுடன் தொடர்பில் இருந்ததற்கு மிக்க நன்றி. ராமை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது. அவனுக்கு என்னால் உதவ முடியுமென்று நம்பினேன். முடியவில்லை! எனி வே தெங்க் யூ!. குட் பை..” – ஃபாதர் நன்றி கூறி விளையாட்டை முடித்துவிட்டு, அட்டையையே பார்த்துக்கொண்டிருந்தார்.
நான், ‘விரலை எடுக்கலாமா’ என்று ஃபாதரிடம் கேட்டேன். அவருக்கு கேட்கவில்லை. வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்து போய்க் காணப்பட்டார். அவரின் விரல்கள் வில்லையிலேயே இருந்ததால் நானும் அப்படியே வைத்திருந்தேன். எனது ‘வாட்ச்’ ‘போதும் விளையாடியது.’ என்பதுபோல் சமிக்ஞையைக் காட்டி அணைந்த அடுத்த விநாடி, திடீரென்று வில்லை நகரத் தொடங்கியது. ஃபாதர் வியப்புடன் வில்லையைப் பார்த்தார். நான், ஃபாதர் விளையாட்டை முடித்துவிட்டிருந்ததை எண்ணி, ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன். நண்பன், தடுமாற்றத்துடன் பேனாவை எடுத்து, எழுதத் தயாரானான்.
‘I… N… F… A… N… T… I… C… I… D… E…’
ஃபாதர் ஒரு கணம் திகைத்துப் போனார். இந்தப் பதில் அவரே எதிர்ப்பார்க்காத ஒன்று என்று அவருடைய முகம் காட்டியது. நான், கலவரத்துடன் அவரைப் பார்த்தேன்.
“இது யார்? இப்போது, யார் வந்திருப்பதென்று நான் தெரிந்துகொள்ளலாமா?” அவரின் குரல் நிதானமிழந்து தயக்கமும், பதற்றமும் கொண்டு தடுமாறியது.
‘I… N… N… O… C… E… N… T…’
ஃபாதர், ஸ்தம்பித்துப் போய் நின்றார். பார்வை, அட்டையையே பார்த்துக்கொண்டிருந்தது. அது கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீழ அவருக்கு அவகாசம் தேவைப்பட்டதுபோல் காணப்பட்டார். நண்பன், அவரையே திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்!.
“உனது தகவலுக்கு மிக்க நன்றி. குட் பை” ஃபாதர் முறையாக விளையாட்டை நிறுத்தி, வீஜா அட்டையை மூடி வைத்துவிட்டு லூர்துவிடம், கடைசியாக ‘நோ’ சொல்லப்பட்ட கேள்வியை ஒரு முறை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். நண்பன் வாசித்தான்.
“காரணம் மட்டும் தெரிந்துகொண்டால் போதும், இருக்கின்ற நாட்களை அவன் உன்னை நினைத்துக்கொண்டே நிம்மதியாக வாழ்ந்து சாவான்”
ஃபாதர், தலையை இடமும் வலமும் மெல்ல அசைத்துக்கொண்டே இரக்கத்துடன் என்னைப் பார்த்தார். பின்னர்,
“இன்றைய தினமான டிசம்பர் 28, விவிலியத்தில் ‘Massacre of Innocents’ என்ற நிகழ்வின் நினைவு நாள்!. எனவே, இடையில் நமக்கு சம்பந்தமில்லாத வேறோரு ஆவியின் குறுக்கீடு நிகழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!. உனது கேள்விக்கு உனது மனைவியின் ஆவி பதில் சொல்ல விரும்பவில்லை.. மே காட் பிளஸ் யூ மை சன்..” என்று ஆசி வழங்கிவிட்டு, அவசரமாய் அங்கிருந்து அகன்றார்..
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

கதையில் மர்மமும் பீதியும் நின்று பிடிக்கிறது.