சவிதா ஸ்ரீவத்சாவை நான் முதலில் பார்த்தபோது அவர் ஐ.சி.பி.எஸ் கான்டீனில் தனியாக அமர்ந்து தேநீர் குடித்து கொண்டிருந்தார்.
பெங்களூரு வந்த ஒரு வாரத்தில், எனக்கும் காலையில் தனிமையில் அமர்ந்து காபி குடிப்பது பழக்கம் ஆகி இருந்தது. விடுதியில் இருந்து எனது ஆய்வுகூடம் இருபது நிமிட நடை, வாசலில் இருந்து கத்தி கருவேல மரங்கள் வரிசை ஆரம்பிக்கும், அது முடியும் இடத்தில் கிழக்கு நோக்கி திரும்பி வலப்பக்கம் மந்தாரையையும், இடப்பக்கம் மரமல்லியையும் சுவாசித்துக்கொண்டே வந்தால் ஒற்றை பனைமரத்தை ஒட்டி நிற்கும் கட்டிடம் தான் கான்டீன். மரமல்லியை விஞ்சி வரும் அந்த காப்பி வாசனையை தாண்டி அவ்வளவு எளிதாக என்னால் செல்லமுடிந்ததில்லை. எனது வழக்கமான இடத்தில் அமர்ந்து காப்பி குடித்து கொண்டிருந்தபோதுதான், கைநீட்டி என்னை அழைத்தார்.
“நீ தானே பியூஷ் சார் லேப்ல புதுசா ஜாய்ன் பண்ணிருக்க?” என பேச தொடங்கினார்
“எஸ் மேம், ஐம் கீர்த்தனா”
“மேம் லாம் வேண்டாம், சவிதானே கூப்பிடு. நான் பியூஷ் சார் லாப்ல சயின்டிஸ்ட்”
“தெரியும் மேம், ம்ம்.. ங்க” என்று நிறுத்திக்கொண்டேன்.
சென்னைதானே என்றார், ஆமாம் என்று மெல்ல தலையசைத்தேன்.
“நான் குவாலியர்”, என்றவர், என் நெற்றி சுருங்குவதை கண்டபின் மத்திய பிரதேஷ் என்றார்.
உன்னுடைய நேர்முகத்தேர்வுக்கு என்னால வரமுடியல, நான் என் பையனோட கல்லூரிக்கு போய் இருந்தேன்.
கேம்பஸ் சுத்திபார்த்தியா? என்றார்
இன்னும் ஒரு தெருவையே நான் பார்த்து முடிக்கல, அத்தனை மரங்கள் இருக்கு. அண்ணாந்து பார்த்தா கூட, மரங்கள் தான் தெரியுது. சில சமயம் நான் ஒரு டெர்ராரியம் உள்ள இருக்கிறமாதிரி பிரமையா இருக்கு என்றேன்
மெல்ல சிரித்தபடி, நீ தாவரவியல் படிச்சிருக்க இல்ல? என்றார்
ஆமாம், மாஸ்டர்ஸ் முடிச்சிருக்கேன், பி.எச்டி பண்ணனும்னு ஆசை.
இந்த வளாகத்துள்ள எக்கச்சக்க மரங்கள் உண்டு, உன் ஆராய்ச்சிய இங்கிருந்தே தொடங்கலாம் என புன்னகைத்தார்.
அந்த சிரிப்பை பார்க்கையிலேயே அவர் எப்போதாவது தான் சிரிப்பார் என்று தோன்றியது. காதோர நரையும், கண்ணுக்கு கீழே சுருக்கமும் வயது ஐம்பது இருக்கும் என்றது. சிரிக்கும் போது இன்னும் சில வயது குறைவாக தெரிந்தார். சற்றே குறைய என் அம்மாவின் வயது, ஆனால் அம்மா இவரை போல இல்லை, அவர் சற்று குண்டு, அதனாலேயே வயது அதிகமாக தெரிவார்.
அவரே எதோ நினைவுவந்தவர் போல, “எனக்கு இங்க குல்மோஹர் தான் தான் மிகவும் பிடிக்கும். நம்ம ஆய்வகத்துக்கு அடுத்து உள்ள ஹோமி பாபா பாதை முழுக்க அது மட்டும் தான் நெறஞ்சு இருக்கும். அதுவும் இந்த மார்ச் ஏப்ரல் சமயத்துல அந்த பாதை வழியா மட்டும் தான் நான் வீட்டுக்கு கிளம்பிப்போவேன், கிட்டத்தட்ட அந்தியில் நடந்து மறையற மாதிரி” என்று சிரித்தார்.
நானும் பதில் புன்னகை புரிந்துவிட்டு, அவரது ஆராய்ச்சியை பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த இந்திய உயிரியல் அறிவியல் மையத்தில், ஆய்வு உதவியாளர் வேலைக்கான எனது நேர்முக தேர்வாளர்கள் பட்டியலில் அவரது பெயரும் இருந்தது, அதனால் அவரை பற்றியும் அவரது ஆராய்ச்சி பற்றியும் முன்னமே இணையத்தில் படித்திருந்தேன். அவர், மூலக்கூற்று உயிரியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்போது தற்போது விஞ்ஞானியாக இருக்கிறார். கடந்த பத்து வருடங்களில் பியூஸ் சார் லாபில் இருந்து வெளிவந்த அத்தனை கட்டுரைகளிலும் இவரது பெயர் உள்ளது.
அதன் பின் அவரை அவ்வப்போது பியூஸ் சார் ஆய்வகத்தில் பார்ப்பேன். ஆய்வகம் என்றாலும், கிட்டத்தட்ட அது ஒரு மத்திய அரசு அலுவலகம் போலதான் இருக்கும். நாங்கள் இருந்தது முதல் மாடியில். ஒரு செவ்வக வடிவ கூடம், அதற்கு வலப்புறத்தில் மூன்று அறைகள். அவருக்கு கண்ணாடி சட்டமிடப்பட்ட தனியறை, பியூஸ் சார் அறைக்கு அடுத்ததாக, அவருக்கு அடுத்த அறை டாக்டர் ஷர்மிளா. முனைவர் ஆய்வு செய்யும் மாணவர்களும், ஆராய்ச்சி உதவியாளர்களாகிய நாங்களும் அவரது அறையில் இருந்து தெரியும்படி அமைக்கப்பட்டிருந்த மேசைகளில் அமர்ந்திருப்போம். எனது இடம் ஜன்னலை ஒட்டி, ஜக்கராண்டா மரத்தின் கிளைகளை கை நீட்டி தொட்டுவிடும் தூரம்.
ஆராய்ச்சி உதவியாளர்கள் அனைவரும், அங்கு முனைவர் அல்லது பின் முனைவர் ஆய்வு செய்யும் ஒருவருடன் இணைந்து பணிசெய்வது வழக்கம். சுழற்சி முறையில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஒருவருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். நான் முதலில் டாக்டர் ஷர்மிளாவுடன் இணைந்து வேலை செய்தேன்,அவர் பாலக்காட்டில் முதுகலை படித்தபின் ஐ.சி.பி.எஸ் ல் இணைந்து முனைவர் ஆய்வை நிறைவு செய்துவிட்டு, இப்போது இங்கு வேலை செய்கிறார். அவருடன் தினமும் மாலை ஐந்து மணிக்கு கேன்டீனில் தேநீர் அருந்த செல்வது வழக்கம். காண்டீனுக்கு செல்ல மூன்று வெவ்வேறு வழிகள் உள்ளது. எனக்கு சி.வி.ராமன் சாலை வழியே செல்வது தான் பிடிக்கும், கன்னத்தில் கைவைத்து கொண்டு கதை கேட்கும் கிராமத்து பாட்டிகளை நினைவுபடுத்தும் நெட்டிலிங்க மரங்களின் அணிவகுப்புகளை இருபக்கமும் கொண்ட நீண்ட சாலை அது. அவருடனான என் வேலை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் ஒருநாள், அந்த சாலையில் செல்லும்போதுதான் என்னுடைய அடுத்த ஆய்வை பற்றி பேசினார்.
அதற்குள் நான்கு மாதங்கள் ஓடிவிட்டது, நம்முடைய ஆய்வின் முடிவை, டிசம்பரில் சென்னையில் நடக்கவிருக்கும் தாவரவியல் மாநாட்டிற்கு அனுப்பி வைப்போம்.
அடுத்து யாருடன் இணைந்து வேலை செய்ய போகிறாய் என பியூஷ் சாரிடம் பேசிவிட்டாயா?
இன்னும் இல்லை என்றேன்
அடுத்த வாரம் நமது மாதாந்திர கூடுகையின் போது, நீ நம்முடைய ஆய்வு முடிவுகள் பற்றி ஒரு பத்து நிமிட உரை தயாரித்து கொள், அது முடிந்த பின் அவரிடம் பேசு. சமீபத்தில் இந்திய அரசின் உயிரித்தொழில்நுட்ப துறையில் இருந்து சவிதாவிற்கு நிதி வந்தது. எனக்கு தெரிந்து அவர் சவிதாவுடன் இணைந்து வேலை செய்ய சொல்வார் என என தொடர்ந்தார். சவிதாவின் ஆய்வுகள் தொடர்ந்து தரமான இதழ்களில் பிரசுரமாகி இருக்கிறது, ஒருவேளை உனது பெயரும் அப்படிப்பட்ட இதழ்களில் வந்தால், உனது முனைவர் விண்ணப்பத்திற்கும் உதவும். எனக்கு தெரிந்து இதுவரை ஒரு ஐந்து பேராவது அவ்வாறு பிரசுரித்து தங்கள் முனைவர் ஆய்வையே முடித்து உள்ளனர் என்றார். இதில் முரண் என்னவென்றால், அவர்கள் பலரும் இன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் வேலை செய்கிறார், ஆனால் அவர் இன்னுமும் இங்குதான் இருக்கிறார். சென்ற வருடம் கூட பூனேவில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் தனிதுறை அமைக்கும் வாய்ப்பு அமைந்தும் போகவில்லை, பியூஷ் சாரிடம் சொல்லி இங்கேயே ஒரு வேலையை உருவாக்கி கொண்டார். என்னக்கெல்லாம் கிடைத்திருந்தால் இவ்வளவு நேரம் கிளம்பி இருப்பேன் என்றார்.
ஏன் அவர் போகவில்லை என்றதற்கு.
சிலர் அப்படிதான், அவரது கணவர் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இவர் அமெரிக்காவிற்கே போகவில்லை, புனேக்கு ஏன் போகவில்லை என்பது அவ்வளவு ஆச்சர்யமில்லை. அவரது மகன் அனிருத்தும் ஒரு காரணம், மருத்துவ கல்லூரி இரண்டாமாண்டு மாணவன். ஐ.சி.பி.எஸ் ல் சீனியர் சயின்டிஸ்ட் ஆக இருப்பதோடு மட்டும் அல்லாமல், தனி ஆளாக நின்று மகனையும் மருத்துவராக்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. அவரும் அவர் கணவரும் பிரிந்து விட்டார்கள் என்று கூட நான் கேள்விப்பட்டேன் ஆனால் அதை பற்றி எதுவும் சரியாக தெரியவில்லை, சிலர் கிளப்பிவிட்ட புரளியாக கூட இருக்கலாம் என்று நிறுத்தி கொண்டார்.
என்னுடைய ஆய்வின் அடுத்த கட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்ற வழிகாட்டுதலுக்கு பேசுகிறாரா, இல்லை சவிதாவை பற்றி பேசுவதில் அவருக்கு ஒரு சுவாரசியம் இருக்கிறதா என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
எங்களுடைய அடுத்த மாதாந்திர கூடுகை முடிந்தபின், டாக்டர் ஷர்மிளா சொன்னது போலவே , பியூஸ் சாரும் டாக்டர் சவிதாவுடன் சேர்ந்து வேலை செய்ய சொன்னார்.
அவருடன் வேலை செய்ய தொடங்கிய அன்றுதான் முதன் முதலில் அவரது அறைக்கு சென்றேன். நாற்காலியில் அமர்ந்து செல் ரிப்போர்ட்ஸ் ஆய்வேட்டை புரட்டி கொண்டிருந்தார். சிறிய அறை, மேற்கு பார்த்து ஒரு ஜன்னல், அதை ஒட்டி புத்தக அலமாரி. அதன் மேல் ஒரு சிறிய மஞ்சள் நிற பூந்தொட்டி, அதன் வயிற்றில் “You help me grow” என்ற வாசகம். அந்த அறையின் அளவுக்கு ஏற்ப மேசை, அதில் பத்து வருட பழைய ஆப்பிள் மடிக்கணினி, பெரிய கணினி திரையோடு இணைக்கப்பட்டிருந்தது. திரைக்கு வலது புறம் கிட்டார் வாசிக்கும் தனது மகனை அணைத்தபடி இருக்கும் டாக்டர் சவிதாவின் புகைப்படம். சிறிய அறையில் எல்லாமே கச்சிதமாக பொருந்தி இருந்தது. அந்த பொருளை வேறு எந்த இடத்தில் வைத்தாலும் சரியாக இருக்காது என்பது போல. புகைப்படத்தை நான் பார்த்து கொண்டிருப்பதை கண்டபின்,
அது என் பையன் அனிருத், மருத்துவம் படிக்கிறான், கிட்டாரும் நன்றாகவே வாசிப்பான் என்றார்.
உங்க முக சாயல் அப்படியே இருக்கு, பார்த்த உடனே தெரிந்தது என்றேன்.
புகைப்படத்தை பார்த்தபடியே மெல்ல புன்னகைத்தார்.
எந்த கல்லூரி?
பி.ஜி.எஸ், இங்கிருந்து இரண்டு மணி நேரம். வார இறுதிக்கு பெரும்பாலும் வந்துவிடுவான்.ஒரு முறை கூட தவறவிட்டதில்லை. பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்றுதான் அவனுக்கும் விருப்பம், ஆனால் அவ்வளவு நல்ல கல்லூரியை விட்டு வர எனக்கு உடன்பாடில்லை.
விட்டால் அவனை பற்றி பேசிக்கொண்டே இருப்பேன், நான் செய்துகொண்டிருக்கும் ஆய்வை பற்றி உன்னிடம் பேசலாம் என நினைத்தேன், இப்போது உனக்கு நேரமிருந்தால், வா ஒரு நடை செல்லலாம் என்றார்.
ஆய்வகத்திலிருந்து மேற்கு நோக்கி விரிந்திருந்த ராஜா ராமண்ணா சாலை வழியே நடக்க தொடங்கினோம். இருப்பக்கமும் நின்றிருந்த ஜக்கராண்டா மரங்களின் கிளைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மே மாத பெங்களூரு சூரியனை முடிந்தவரை மறைந்திருந்தது. அதையும் மீறி, சூரியனின் கிரணங்கள் லேசர் விளக்குகளின் நடனம் போல இலைகளினூடே விட்டு விட்டு பொழிந்து கொண்டிருந்தது. அவ்வப்போது வந்து விழும் ஒளியில் சாலை முழுதும் நிறைந்திருந்த ஊதா பூக்கள் மின்னி கொண்டிருந்தன.
சிறிது நேரம் மெளனமாக நடந்து வந்தவர், ஊதா நிறத்திற்கு ஒரு அதிகார தோரணை இருந்தாலும், எனக்கு என்னவோ எப்போதும் அது ஒரு மிஸ்டிக் தன்மையை தான் தருகிறது என்றார்
எனக்கு அவை எப்போதும் ஏன் துக்கமாக காட்சி அளிக்கிறது என எண்ணிக்கொண்டேன்
அந்த அடர் நிறத்தில் தன்னை மறந்தவராக, இவை எனக்கு லாவெண்டரை நினைவு படுத்துகிறது, ஆனால் இதில் வாசமே இல்லை என்பது சற்று ஏமாற்றம்தான் இல்லையா எனக் கேட்டார்
உண்மைதான், ஆனால் ஜக்கராண்டா என்ற சொல்லுக்கு “வாசம்” என்றுதான் பொருள் என்றேன்.
அப்படியா என்றார் ஆச்சர்யமாக
ஆமாம், இது அர்ஜென்டினாவை சேர்ந்தது, இதன் வாசத்தை வைத்து பாடல்கள் எல்லாம் பாட பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்கள் தென் ஆப்ரிக்கா வழியாக இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர்களால் அந்த வாசத்தை கொண்டுவர முடியவில்லை என்றேன்.
இன்டெரெஸ்ட்டிங் என்றபடி ஒரு பூவை எடுத்து முகர்ந்தார்
இங்கு வந்தபின் இதற்கு பல பெயர்கள் உண்டு. வட இந்தியாவில் “நீலி குல்மோஹர்” என்கிறார்கள், கேரளத்தில் இது “நீல வாகா” என்றேன்.

“நீல வாகா” என்றபடி தன் கையில் இருந்த பூவை மெல்ல உதிர்த்தவர், நிறத்தை மட்டுமாவது தக்கவைத்து கொண்டதே என்றார்.
தன் நிறத்தை தக்கவைத்து கொண்டாலும், இதன் தனித்தன்மை அதன் வாசம் தானே, அதை இழந்து நிற்பதனால்தான் எனக்கு சில சமயம் இவை துக்கத்தை நினைவுபடுத்துகிறது என்றேன்
ம்ம் என்றவர், தனது ஆய்வை பற்றி பேச தொடங்கினார். தாவரவியலில் நான் எதுவும் தற்போது ஆய்வு செய்யவில்லை. CYP என்ற மரபணுவை பற்றிய ஆராய்ச்சியில் உள்ளேன், குறிப்பாக புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை செரிக்க அது எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி. இந்த ஆய்வில் நீ ஜெல் எலக்ட்ரோபோரேசிஸ், பாலிமரேஸ் தொடர் வினை போன்ற சில அடிப்படை மூலக்கூற்று உயிரியில் தொழிநுட்பங்களை கற்றுக்கொள்வாய். அதன் பின் இதை நீ வேறு ஆரய்ச்சிகளிலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
அவர் சொன்னது அத்தனையும் புதுமையாக இருந்தாலும், மெல்ல தலையை மட்டும் ஆட்டிகொண்டேன்
அவருடன் வேலை செய்ய தொடங்கி முதல் இரண்டு மாதங்களில் எனது ஆய்வுக்கு தேவையான மாதிரிகளை வரவழைப்பது, ஆய்வுக்கட்டுரைகள் படிப்பது என படபடவென பல வேலைகள் செய்தேன். ஒவ்வொரு வாரமும் சிறய அளவில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. ஆனால், ஒப்பீடு செய்வதற்கு பாலிமரேஸ் தொடர் வினை தொழில்நுட்பம் மூலம், உயிரியல் மூலக்கூறின் ஒரு சிறுபகுதியை பன்மடங்காக பெருக்கும் இடத்தில் தடைபட்டு நின்றுவிட்டேன். முதல் முறை செய்வதால் ஒரு வித பதற்றம் இருந்து கொண்டே இருந்தது. தொடர் வினையை உருவாக்குவதற்கு தேவையான வினையூக்கியை சரியான அளவில் சேர்ப்பது, மற்றும் அந்த மாற்றத்திற்கு தகுந்த வெப்பநிலையை கண்டடைவது என இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
என்னுடைய பிரச்னையை அவரிடம் சொன்னபோது, சில சமயம் அது அப்படிதான், சிறு மாறுதல்களுடன் தொடர்ந்து செய்வதுதான் வழி என சொல்லிவிட்டார். தினம் பத்து மணிக்கு ஸ்டேட்டஸ் மீட்டிங், அப்போதுதான் பெரும்பாலும் அவரிடம் எனது சந்தேகங்களை கேட்பேன். அடுத்து பனிரெண்டு மணிக்கு மதிய உணவு, அதன் பின் பெரும்பாலும் அவரது அறையிலேயே தான் இருப்பார். எனது இருக்கையை ஒட்டியுள்ள ஸ்கை வாக்கிற்கு கைபேசியுடன் செல்கிறார் என்றால் மணி நான்கு. குறைந்தது ஒரு மணி நேரமாவது அனிருத்துடன் பேசிக்கொண்டிருப்பார். அப்போது அவரை பார்க்கையில் எல்லாம், ஊருக்கு அம்மாவுக்கு போன் பண்ண வேண்டும் என்பது நினைவு வரும். ஆனால் அம்மாவிடம் பேசுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு என்ன இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் புரிந்ததில்லை.
ஆனால் அந்த நாட்களில் அம்மாவிடம் அடிக்கடி பேசியது நினைவிருக்கிறது. நான் பேசும் விஷயம் புரியவில்லை என்றாலும், எல்லாம் நல்லபடியா நடக்கும், பயப்படாதே என சொல்வதற்கு ஆள் தேவைப்பட்டார்கள். ஆனால், தொடர்ந்து என்னால் அதையும் செய்து கொண்டிருக்க முடியவில்லை. என் அம்மாவின் குணம் எனக்கு நன்றாக தெரியும். வெளியில் நான் சந்திக்கும் எல்லா பிரச்சனைக்கும் அவரது தீர்வு, நீ வீட்டுக்கு வந்துடு என்பதாக தான் இருக்கும். நான் முனைவர் ஆய்வு செல்ல சொல்வது, அதுவும் திருச்சியை விட்டு வெளியே போவது என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்போதும் அவருக்கு பக்கத்திலேயே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு, நான் சொன்னது போல இங்கேயே ஏதாவது கல்லூரியில் ஆசிரியர் வேலையில் சேர்ந்துகொள் என சொல்லிவிடுவார், இல்லை கல்யாண பேச்சை தொடங்கிவிடுவார். அதனால் அவரிடமும் தொடர்ந்து என்னால் பேசி கொண்டிருக்க முடியவில்லை.
வேலை முன்னேறாததும், பெங்களூரு வானிலையும் சேர்ந்து, அந்த நாட்கள் அனைத்தும் எனக்கு ஒன்றுபோலவே மனதில் பதிந்துள்ளது. ஓரு நீண்ட நாளின் சிறு பகுதிகளென. சிறு சிறு மாறுதல்களுடன் அதே வேலையை செய்து கொண்டிருந்தேன், கிட்டத்தட்ட சவிதா அணிந்து வந்த சேலைகள் போல, பல வண்ணங்களாலான ஒரே வடிவமைப்பு.
அவ்வப்போது அதில் வரும் மாறுதல் என்பது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் பியூஸ் சார் அளிக்கும் விருந்தும், சில பிறந்தநாள் ட்ரீட்களும்தான். பொதுவாக இந்த நிகழ்வுகளுக்கு ஆய்வுகூடத்தில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் செல்வது வழக்கம். ஆனால், அனிருத் இல்லாமல் சவிதா வரமாட்டார் என்பதால், அவனும் எங்களுடன் கலந்து கொள்வான். அந்த நாட்களில் மட்டும் அவர் இன்னும் சற்று பூரிப்போடு இருப்பது போல தோன்றும். எப்போதும் அவர் ஒட்டி வரும் இருசக்கர வாகனத்திற்கு பதில், அன்றுதான் அவருடைய ஹ்யுண்டாய் சான்றோ காரை எடுப்பார், புதிய புடவை அணிந்து கொள்வார். இயல்பை சற்று அதிகமாகவே எல்லாரிடமும் சிரித்து பேசுவார்.
அப்படியான ஒரு விருந்தில் தான் அனிருத்தை முதலில் நேரில் பார்த்தேன், நீல நிற வி கழுத்துடைய டீ-ஷர்ட் அணிந்து, புகைப்படத்தில் இருப்பதை விட சற்று மெலிந்திருந்தான். முடியை வலது பக்கம் வகிடு எடுத்து வாரி இருந்தான், அதனாலேயே சற்று நீண்ட முகம் என தோன்றியது. அமைதியாக இருந்தாலும், மிக இயல்பாக இருந்தான். உணவு முடிந்து, எல்லாரும் வட்டமாக அமர்ந்த பின் தன் கிடாரை மீட்டினான். அது எப்போதும் உள்ள வழக்கம் என தெரிந்துகொண்டேன். முதல் பாடல் அவனே பாடினான்,
“சுன் ரஹி ஹூன் சுதுப்புது கோ கே
கோயி மெயின் கஹானி
பூரி கஹானி ஹை க்யா
கிசே ஹே பதா”
திடீரென்று எதோ ஒரு பாட்டின் மத்தியில் தொடங்கும் வரி என தோன்றியது, சிறிது நேரத்தில் அனைவரும் அவனுடன் சேர்ந்த “இஃதாரா இஃதாரா” என பாட தொடங்கிய உடன் எனக்கு அதை கேட்ட ஞாபகம் வந்தது. பாடல் முடிந்தபின் அனைவரும் ஒரு சேர கைதட்டிய போது, மெல்ல கிடாரை உயர்த்தி அந்த பாராட்டை வாங்கிக்கொண்டான். பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மா மெல்ல அவன் மேல் சாய, இருக்க அணைத்துக்கொண்டான்.
கையில் மதுக்கோப்பையுடன் சற்று தள்ளாடியபடி வந்த பியூஷ் சார் அவனை தோளில் தட்டி,
நான் முன்னமே சொன்னதுதான், நீ கூடிய சீக்கிரம் ஒரு பேண்ட் அமைக்கவேண்டும். இங்கு இத்தனை டாக்டர்ஸ் இருக்கிறோம், நீ ஒருத்தன்தானே கலைஞன், இந்த விரல் எப்படி கத்தி பிடிக்கும், இது கிட்டார் கை இல்லையா என்று சத்தமாக சிரித்தார்.
மெல்ல டாக்டர் சவிதா அவன் கையை பிடித்து, கார் சாவியை பார்த்தாயா என கேட்டுக்கொண்டு அவனை கூட்டி சென்றார்.
அந்த நிகழ்வுக்கு பின் பல நாட்கள் அந்த பாட்டை முணுமுணுத்து கொண்டிருந்தேன். ஜக்கராண்டா பூத்த பருவத்தில் தான் நான் அவனது பாடலையும் கேட்டேன், இரண்டும் சேர்ந்தே என் மனதில் பதிந்துவிட்டிருந்தது. சில சமயம் ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது, என்னையும் அறியாமல் அந்த பாடலை பாடி கொண்டிருந்திருக்கிறேன். அப்படியான ஒருநாளில் தான், என்னுடைய முதல் வெற்றிகரமான PCR செய்து முடித்தேன். அன்று செய்ததற்கும் அதற்கு முன்பு செய்ததற்கும் வேறு எதுவும் மாறுதல் இல்லை, அந்த பாடலை தவிர.
அடுத்து மூன்று மாதங்கள் எங்கள் ஆய்வை செல் ரிப்போர்ட்ஸ் ஆய்விதழுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தேன். எப்போதும் போல அவர் அனிருத்துடன் போனில் பேசிவிட்டு தன் அறைக்கு சென்ற பின் அவரை காண சென்றேன். உள்ளே வரலாமா என்ற என்னை சற்று நேரம் யாரோ போல பார்த்துவிட்டு, வா வா என்றார்.
அவர் சோர்வாக இருப்பதை கவனித்துவிட்டு, சாரி, நீங்கள் ஒரு முறை வடிவத்தை சரிபார்த்துவிட்டால், நான் நமது ஆய்வு முடிவுகளின் புகைப்படங்களை இணைத்துவிடுவேன் என்றேன்.
நான் கொண்டு சென்ற பிரிண்ட் அவுட்களை புரட்டியவர், நன்றாக வந்து கொண்டிருக்கிறது என்று திருப்பி அளித்தார் .
அதை வாங்கி கொண்டு வெளியே செல்லும் முன், நீங்கள் மிகவும் யோசனையில் உள்ளது போல தோன்றுகிறது, எல்லாம் ஓகே வா என்றேன்.
ம்ம் என்று மெல்ல பெருமூச்சு விட்டு தன் நாற்காலியில் இன்னும் சற்று சுருங்கி போனார்.
அனிருத்துக்கு தேர்வு வருகிறது, நன்றாக படிக்க கூடியவன், ஆனால் கடந்த சில மாதங்களாகவே எதிலும் சற்று பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். தேர்வு சமயத்தில், தேவை இல்லாமல் அதிகம் பதட்ட படுகிறான். ஒருவருடம் இடைவெளி விட்டு மருத்துவம் தொடரட்டுமா என்கிறான். ஒருவேளை சரியாக படிக்கவில்லை என்றாலும் வேறு யோசனை செய்வேன், சென்ற ஆண்டு தேர்வில் என்பத்தி நான்கு சதவிகிதம் எடுத்திருந்தான்.
ஒரு வருடம் அப்படி விடுப்பு எடுப்பது சாத்தியமா? என்றேன் எதோ ஆர்வத்துடன்
என்னை சற்று உற்றுப்பார்த்தவர், இன்னும் மூன்று வருடம் சமாளித்துவிட்டால், எம்.டி படிப்பதற்கு முன் வேண்டுமானால் ஒரு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ படிப்புக்கு நடுவில் அப்படி எடுப்பது படிப்பில் ஒரு தொடர்ச்சியை தராது என்றார்.
எல்லாம் சரியாகவே நடக்கும் என்றேன்
ம்ம், என்றபடி அவரும் நாற்காலியில் இருந்து எழ, நாளை பார்க்கலாம் என்று விடுதிக்கு கிளம்பினேன்.
மறுநாள், நான் ஆய்வகத்திற்குள் என் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு திரும்புகையில், கூட்டமாக நின்று யார், யாருடன் போவது என்று கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். குழப்பத்துடன் அவர்களை நெருங்கி என்ன விஷயம் என்றேன். உன்னுடைய போன் என்ன ஆச்சு, என்னால் உன்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றார் டாக்டர் ஷர்மிளா. என் போனில் பேட்டரி தீர்ந்திருந்தது.
நேற்று இரவு விடுதியில், அனிருத் தற்கொலை செய்துகொண்டான், பி.ஜி.எஸ் மருத்துவமனைக்கு செல்கிறோம். நீயும் வருகிறாயா என்றார். சார்ஜ் இல்லாத செல்போனை பிடுங்கி கொண்டு அவருடன் விரைந்தேன். மருத்துவமனையில் பியூஸ் சார் டாக்டர் சவிதாவுடன் நின்றிருந்தார், அவர் முன்னின்று செய்த உதவியால் அன்று மாலைக்குள் அவனது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். மறுநாள் மதியம் அனிருத்தின் தந்தை அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார். அப்போதுதான் அவரை நான் முதலில் பார்த்தேன், அவரது வலது கண்ணுக்கு அருகில் இருந்த சின்ன தழும்பை தவிர மற்றவை எல்லாம் ஒரு பேராசிரியருக்கான முகத்தோடு ஒன்றிப்போனது. அன்று மாலை எல்லா இறுதி சடங்குகளும் முடிந்தபின் மெல்ல டாக்டர் சவிதாவை அணைத்து விடைபெற்று கொண்டு வந்தேன்.
அடுத்து மூன்று மாதங்களில் பியூஸ் சார் மேற்பார்வையில், எங்களுடைய ஆய்வு முடிவுகளை செல் ரிப்போர்ட்ஸ் இதழுக்கு எழுதி அனுப்பினோம். ஒரு மாதத்திற்குள், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மின்னஞ்சல் வந்தது. அந்த ஒரு கட்டுரை, எனக்கு கலிபோர்னியா மாநிலத்தின் யு.சி.எஸ்.எப் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆய்வையும் பெற்றுத்தந்தது. எல்லாம் வெகு விரைவில் நடந்துவிட்டது.
அமெரிக்கா வந்த முதல் வருடம் இந்த அந்நிய மண்ணில் என்னை பொருத்திக்கொள்வதிலேயே சென்றது. பல்கலைக்கழகத்திற்கு மிதிவண்டியிலேயே செல்லும் அளவுக்கு பழகியிருந்தேன். தினமும் எட்டு மைல் பயணம், எனது ஆய்வகத்திலிருந்து வெளியே வந்து, இடது பக்கம் திரும்பியவுடன் சான் யாக்கின் நதி ஒருபுறமும், டெசர்ட் வில்லோ, கலிபோர்னியா சிகாமோர் மரவரிசை மறுபுறமும் கொண்ட நடைபாதையில் வந்தால் பத்து நிமிடத்திற்குள் ஜக்கராண்டா வாசம் சாலையை நிறைத்திருக்கும் ஸ்டூட்பேக்கர் சாலைக்கு வந்துவிடலாம். அங்குதான் ஒரு ஸ்டூடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். இங்கு வந்த ஒரு வருடத்தில், டாக்டர் சவிதாவிற்கு இரண்டு முறை மின்னஞ்சல் அனுப்பினேன், முதல் மின்னஞ்சலுக்கு பதில் வரவில்லை, இரண்டாவது மின்னஞ்சல் அவரை சென்று சேரவில்லை. டாக்டர் ஷர்மிளாவிற்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு, நான் விரைவில் உன்னிடம் பேசுகிறேன் என்று மட்டும் பதில் அளித்து இருந்தார். என்னுடைய வழக்கமான மிதிவண்டி பயணத்தின் போதுதான் டாக்டர் ஷர்மிளா அழைத்தார்.
உனக்கு நேரம் இப்போ மாலை ஆறு தானே? பேசலாமா என்றார்,
பயணத்திலேயே அவரிடம் பேசி கொண்டு வந்தேன். அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும், விரைவில் சான் பிரான்சிஸ்கோ வர இருப்பதையும் தெரிவித்தார். விசா சம்மந்தமான சில சந்தேகங்களை பற்றி பேசிவிட்டு, உன்னிடம் முன்னமே பேசவேண்டும் என நினைத்தேன், இந்த வேலைகளால் தான் போன் செய்ய முடியவில்லை என்றார். பரவாயில்லை இங்கு வந்த பின்பு நேரிலேயே சந்திக்கலாம் என்ற பின் நமது கேம்பஸ் எப்படி உள்ளது , டாக்டர் சவிதா எப்படி இருக்கிறார் என கேட்டதற்கு,
உனக்கு விஷயம் தெரியாதில்லையா, அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என சொன்னார்
அப்படிதான் இருக்கும் என நினைத்தேன் என்றேன்.
கடைசியாக சில ஆவணங்களை வாங்கி செல்வதற்காக ஒரு ஆறு மாதம் முன்பு இங்கு வந்திருந்தார். அப்போதுதான் அவரை பார்த்தேன். அப்போதே அவர் அயோவா வருவதற்கான முயற்சியில் இருந்தார், செகண்ட் ட்ரைமெஸ்டர்க்குள் பயணம் செய்து விட வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார், எனக்கு தெரிந்தது இந்நேரம் அவர் வந்து சேர்ந்திருக்க கூடும் என்றார்
சற்று ஆச்சரியமாக இருந்தாலும், புரிந்து கொள்ளமுடிகிறது. தனியாக அங்கே என பேச ஆரம்பித்து, அவர் பேசியது சட்டென உரைக்க
செகண்ட் ட்ரைமெஸ்டரா? என்றேன்
ஆமாம், அவர் கணவர், அனிருத் தின் இறுதி சடங்கிற்கு வந்தபோது அவருடன் பேசி அவரை செயற்கை கருத்தரிப்பிற்கு சம்மதிக்க வைத்ததாக கேள்விப்பட்டேன் என முடித்தார்.
சடாரென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தும்போது, ஸ்டூட்பேக்கர் சாலைக்கு வந்து சேர்ந்திருந்தேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

மரங்களின் வர்ணணைகள் அபாரம்.
அனிருத்தின் குரல் ஒரே ஒரு பாடலில்தான் கதையில் வருகின்றது. அந்த பாடலும் அர்த்தப்படுகின்றது. யாருடைய கதையில் தான் இருக்கின்றோம் என அவனுக்குள்ள மகிழ்ச்சியும், கேள்வியும் கலந்த பார்வையை சொல்கின்றது. அம்மா மகனின் தோளில் சாயும் காட்சியெல்லாம் கதைக்கு மேலும் அர்த்தம் தருகின்றது.
தனது ஆராய்ச்சியில் தடுமாறும் மாணவியிடம் ஸ்ட்ரிக்டான தாயாக நடந்துக் கொள்கின்றாரா, மெடிக்கல் ஸ்கூலில் படிக்கும் மகனிடம் ஆய்வாளர் மனநிலையில் மன அழுத்தம் இருந்தாலும் படி என்கின்றாரா போன்ற முரண்கள் கதாபாத்திரத்தினை மேலும் வலுப்படுத்துகின்றது.
நல்ல வினையூக்கியா, வினை நிகழ தக்க சூழலா போன்ற கீர்த்தனாவின் விளக்கம் கூட சவிதாவின் நடத்தைக்கு கேள்வியாக உள்ளது
மதன் தீவிரமாக ஆழமாக வாசிப்பவர் அவருடைய கதையை ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்தேன். பாடலுக்கு பின்னணி இசை போல இந்தக் கதைக்கு மரங்களின், பூக்களின் வர்ணனை கச்சிதமாக இருக்கிறது.
வர்ணனையிலிருந்து எல்லா நிகழ்ச்சிகளும் ஒரு மையத்தையே சுற்றி வருவது இந்தக் கதையில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்று நீல வாகா போல முக்கியமான எல்லா கதா பாத்திரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். சவிதா திரும்ப குழந்தை பெற்றுக் கொண்டு பூவைப் போல பொலிந்தாலும் வாசனை இழந்து நிற்கும் மரமேதான். அதுவே கீர்த்தனா வாசனையுள்ள நீல வாகா. ஆனாலும் தன் அன்னையை எதிர்த்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருப்பது துயர மதுவை தன்னுள் கொண்டிருக்கும் இன்னொரு நீல வாகாவேதான். அதுவே அனிருத்துக்கு இசையை விட்டு விட்டு மருத்துவம் படிக்கச் சென்று அந்நிய மண்ணில் வேர்விட இயலாமல் அழிந்த நீல வாகா. ஆனால் எனக்கு திகைப்பளித்தது கதையின் இறுதியில் சொல்லப் படும் வார்த்தைகள். சவிதாவின் கணவர் அனிருத்தின் இறுதிச் சடங்கு முடிந்தவுடன் சவிதாவை செயற்கை கருத்தரிப்புக்கு சம்மதிக்க வைத்தார் என்பது. பாசமான மகனை தன்னுடனே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மகனை இழந்து நிற்கும் சவிதா கொஞ்ச காலம் கழித்து மனமாற்றம் அடைந்திருந்தால் அது இயற்கை. ஆனால் இறந்த கொஞ்ச நாட்களும் ஆகாத நிலையில் சம்மதிக்கிறார் என்றால் அது திகைப்பளிக்கிறது. நீலப் பூக்களைப் பார்த்தால் mystic தன்மை நினைவுக்கு வருவதாக கீர்த்தனாவிடம் சொல்வார் அது சவிதாவேதான். அறிய முடியாமையின் இன்னொரு பெயர்தானே நீலம்!!
வெளியே என்ன பிரச்சினை என்றாலும் அம்மா சொல்லும் ஒரே தீர்வு வீட்டுக்கு வந்துவிடு என்பது தான். 👏👏👏👏. எவ்வளவு அர்த்தங்கள் நிறைந்த வரிகள். வீடு ஒன்றே அரண். பாதுகாப்பு, ஆதரவு, உதவி என அனைத்தும் உரிமையுடன் கிடைக்கும் ஒரே இடம். ஊதா நிறம் பற்றிய உணர்வு அற்புதம் – பிரமிளா ஸ்ரீதர்