திரிபுரை

காத்திருந்தேன். பிரமாண்டமாய், வரலாற்றை நினைவு படுத்தி , ஓங்கி நின்றிருந்த கிரேக்க ஐயானிக் தூண்களால் தாங்கப்பட்டுள்ள வாசலில் நின்றிருந்தேன். எத்தனையோ விஷயங்களுக்குக் காத்திருந்து இருக்கின்றேன், அதில் இது ஒன்று, ஆனால் இன்று இனித்தது. வாழ்வின் மறு பாதி என வர வாய்ப்புள்ளவளைக் காணக் காத்திருப்பதை விட இனிப்பது எது? மதுரம்… தேன்…

 அது ப்ரிடிஷ் ம்யூசியம்.  அப்போது  என் கையளவு போனுக்குள் , சோசியல் மீடியாவுக்குள் என உள்ளே உள்ளே சென்றிருந்தேன். எட்டு வழிச்சாலை, திரைப்படத்தில் பெண்கள் அவமதிப்பு, அமைச்சரின் பேச்சு, புத்தக வெளியீட்டாளர்கள் சர்ச்சை. என்னைத் தேடி வந்த விவாதங்கள். ஒவ்வொரு நொடியும் புதிய அறிவிப்புகள். என் சொற்கள் கிளப்பிய அலைகள். இந்த டிஜிட்டல் உலகத்தில் நான் ஒரு குரல். முகம் தெரியாத ரசிகர்கள் கூட்டம். என் கவனம் கையடக்கமான போனுக்கும், கிரேக்கத் தூண்களுக்குப் பின்னால் விரிந்திருந்த தெருக்களில் செல்வி வருவதைத் தேடும் என் எதிர்பார்ப்புக்கும் இடையே முன்னும் பின்னும் நகர்ந்தது. மனம் அடுத்தடுத்து திறந்து கிடக்கும் க்ரோம் பிரவுசரின் டேப் போல நூறு உள்ளடக்கங்களோடு பரவி இருந்தது.

லண்டனின் மழைச்சாரல் தூரத்தில் சுழன்றடித்தது – அது புதிய வசந்தத்தின் வாசலில், பழைய குளிரின் கடைசி சுவாசம் போல ஏப்ரலைக் காட்டியது.  ஒவ்வொரு மழைத்துளியும் வரப்போகும் எனக்கான மணப்பெண்ணைக் காண வானத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. எந்தத் துளிக்கு வாய்ப்போ? வாய்ப்பை இழந்த துளிகள் பல. 

செல்வியை நான் பெண் பார்க்கவும், செல்வி என்னை மாப்பிள்ளை பார்க்கவும் ஏற்பாடு. அவள் கொஞ்சம் தாமதம்.. 20 நிமிடம் இருக்குமா, 30 நிமிடம் இருக்குமா…

 தேனைப் பாதுகாக்கும் தேனீ போலப் பதற்றமாகத் தூரத்தில் தெரியும் அனைவரிலும் செல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அடுத்த பத்து நிமிடங்களில் என்னைச் சுற்றி செல்வியின் புகைப்படத்தில் இருந்த முகத்தினைக் கொண்டு அனைத்தையும் நிரப்பினேன்.

” நான் செல்வியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயிட் பண்ணு”. செய்தி திரையில் மின்னியது.  மணி என் சகோதரன். அவன் வழியாகவே இந்த வரன் அமைந்தது. 

தொடர்பு கொள்ள முடியவில்லை என்னும் வரி ஓராயிரம் கேள்விகளை எடையாக்கின. அதன் வலுவில் கைவிரல்கள் செல்பேசியின் மேற்பரப்பில் எடைத்தாங்காமல் நசுங்கிப் போயின. முன்பு உறுதியாகத் தெரிந்த பிரம்மாண்ட ஐயானிக் தூண்கள் இப்போது தளர்ந்து நின்றன. அந்த நொடியில் சோசியல் மீடியாவின் புகழ், விவாதங்களின் வெற்றி எல்லாம் ஆளில்லா நிழலாகத் தெரிந்தது. 

என் இதயத்துடிப்பு காதுகளில் எதிரொலித்தது. சுற்றுலாப் பயணிகளின் பாதங்கள் மார்பிள் படிகளில் படும் சத்தத்தை விழுங்கியது. விசாலமான நுழைவாயில் திடீரென மிகப் பெரிய பூதமாக என்னை விழுங்க வருவதாகத் தோன்றியது. கடந்து செல்லும் ஒவ்வொரு முகமும் மெதுவாக நகர்வது போலத் தெரிந்தது – தெளிவற்ற முகங்கள், ஆனால் ஏதோ குற்றம் சாட்டுவது போல. காத்திருப்பு. அந்த வார்த்தை என் மனதின் கீறல்களிலிருந்து மெல்ல எழுந்தது. 

என் மனம் துண்டுகளாகச் சிதறிய எதையோ பிடிக்க முயன்றது. இந்த லண்டன் நகரம், இந்த வசந்தம் முளைக்கும் ஏப்ரல் மாதம், என்னில் சரிபாதி என வரக்கூடியவளின் தாமதம், அது என் முன் வைக்கும் பதற்றம், வேறு யாரிடம் இந்தப் பதற்றம் இருந்தது.. மனம் அலை பாய்ந்தது.. எதையாவது பிடித்துக் கொண்டால் பரவாயில்லை என இருந்தது. எலியட்டின் வரிகள்…. தோள்பட்டைகளுக்கு இடையில் இறுக்கம் கூடியது – 

April is the cruellest month, breeding

Lilacs out of the dead land, mixing

Memory and desire, stirring

Dull roots with spring rain.

“எலியட்டின் கவிதையில் உள்ள desire சொல்லும் கதை இங்கு வரப் போகும் மணப்பெண். எலியட் சொன்ன memoryஇல் என்ன?”  என் புத்தி , என் மனதைக் கேள்வி கேட்டது. 

என் அகங்காரம் மீது மெல்லிய நகக் கீறல் போலத் தாமதங்களின் வெம்மை பரவியது. அந்த வலி நகர்ந்து ஞாபகங்களின் நிழல் ஒன்றில் வெம்மைக்கு இதம் தேடி ஒடுங்கியது. அங்கு வேறொரு காத்திருப்பின் தடம் தெரிந்தது – பன்னிரண்டு ஆண்டுகள் திரிபுரையை நோக்கிக் காத்திருந்த பரசுராமனின் கதை. அந்தப் பழைய கதை.

மிக  நீண்ட காத்திருப்பின் கதை ஒன்று…..ஒரு பரசுராமன் கதை… அவன் திரிபுரை தேவிக்குக் காத்திருந்தது பற்றி ஆழ்மனச் சுவடுகளில் படிந்திருந்த கதை ஒன்றைத் தட்டி எழுப்பியது. போனில் எழுந்த சோசியல் மீடியா இரைச்சல்களில் புதைக்கலாமா என நினைத்தேன்.

எலியட்டின் வரிகளில் கடந்து சென்ற ஒவ்வொரு நிமிடமும் நுழைவாயில் படிகளில் விழுந்த தூண்களின் நிழல்கள் போல நீண்டது – நேரம் மிக வேகமாகவும், தாங்க முடியாத அளவிற்கு மெதுவாகவும் நகர்ந்தது. பிடித்துக் கொண்டு மீள வேண்டுமென அடைந்தவை வேகமாய் பொங்கும் எண்ணங்களை ஆர்ப்பரிக்கும் நீர் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன.

மனதை நகர்த்த வேண்டும். தாமதங்கள் எளியவை.  இது வெறும் லண்டனின் ட்ராபிக், ரயில் ப்ராப்ளங்கள், செல்போன் சிக்னல் கிடைக்காதது போல அன்றாடப் பிரச்சனைகளால் உருவாகும் சலனம். இதில் இத்தனை அர்த்தம் ஏன் ஏற்ற வேண்டும்….. விலகவேண்டும்…. 

மணியின் செய்தி  குறுக்கிட்டது. “ சனிக்கிழமைகளில் செண்ட்ரல் லைன் இப்படித்தான். கன்ப்யூஸ் ஆகாதே.”. நான் என்னிடம் சொல்லிக் கொண்டதைத்தான் மணி மீண்டும் சொல்கின்றான். ஆனால் நான் சொல்வதைக் கேட்க சுலபமாக இருந்தது, அதே விஷயத்தினை என்னைத் தவிர வேறொருவன் சொல்கையில் சுலபமாக இல்லை.

மீண்டும் சோசியல் மீடியாவில் முழுகி மறக்க முயன்றேன். அரசியல், சினிமா, டிவி விவாதம், அரட்டை என நாள் முழுக்க என்னால் மூழ்கி இருக்க முடியும். அங்குக் காத்திருக்கவே வேண்டியதில்லை. வலுக்கட்டாயமாக சோசியல் மீடியாவில் திணித்துக் கொண்டேன். 

பெண்ணியனாக அந்த மந்திரி சொன்னது ஏன் தவறு என மார்க்சியப் பார்வையில் அதிகாரத்தினை எதிர்க்கும் குரலாக பதிலிட்டேன். அது போதவில்லை. சினிமா நடிகைகள் படங்களை வெளியிடும் தமிழ் சினிமா தளம் போய் வழக்கம் போலப் பார்த்தேன். அதுவும் போதவில்லை. ஒன்றும் அடங்கவில்லை. புத்தி திரும்பத் திரும்ப ஏதோ சொல்லியது. ஒவ்வொரு கணமும் காத்திருப்பின் நினைவு என்னைத் துரத்தியது. 

சமாளிக்க அகநானூறு வரிகள் சில தேடிப் போய் படித்தேன். கொஞ்சம் செவ்வியல் ரொமான்ஸ். அங்கும் ஏக்கம், தலைவனுக்குக் காத்திருக்கும் தலைவி. அது மீண்டும் காத்திருப்பின் கதையில் போய் தட்டியது. முயன்று முயன்று தப்பிக்க நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முயற்சியும் என்னை மீண்டும் அதே இடத்திற்குக் கொண்டு வந்தது. சோஷியல் மீடியா விவாதங்கள், சினிமா செய்திகள், சங்க கவிதைகள் – எல்லாமே காத்திருப்பின் கதையாக மாறிக்கொண்டிருந்தன.

தூரத்தில் இருந்த கதை ம்யூசியத்தினை விட அருகில் வந்தது. சித்தப்பாவுடன் திருப்பராய்த்துறை போனது இந்த நொடி போல இருந்தது. கதை சொன்ன சாமியார், அவரை சுற்றி இருந்த குழந்தைகள். அங்கு மரங்களில் வீசிய காற்று. முண்டாசு கட்டிய விவேகானந்தர் சிலை. எல்லாம் கண் முன் நின்றது. எனக்குப் புத்தகங்களில் கேட்ட படித்த கதைகள், கதையெனக் கேட்ட சொற்கள் மிகப்பிடிக்கும். அவை நீர் மேல் எழுத்து அல்ல, எனக்குக் கல் மேல் தடம்.

கண்ணை மூடி சாமியார் சொன்ன கதையை மனதில் சித்திரமாக்கினேன்.

பரசுராமர் என்றும் குறையாத மகிழ்ச்சியை கேட்டு திரிபுரையிடம் பன்னிரெண்டு வருடம் நின்றார். தினமும் திரிபுரையிடம் கேட்டார். பரசுராமர் மாறாத மகிழ்ச்சி என்பது மனுஷன் போகக் கூடிய ஓர் ஊர் போல  நினைத்துக் கேட்டார். ஒரு நாள் கூட தவறவில்லை. பன்னிரண்டு வருஷம் ஆனது. பரசுராமருக்குத் திரிபுரை பதில் சொன்னாள். மாறாத மகிழ்ச்சி வாங்கக் கூடிய பொருள் இல்லை, செல்ல வேண்டிய இடம் இல்லை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களே என ஆனது. அதுவே அவருக்கு வழியாக மாறியிருந்தது. தேடல் வந்தது. 

எனக்குக் கதையில் உடன்பாடில்லை.  “எதற்குப் பன்னிரண்டு வருஷம்? இதை உடனே சொல்லியிருக்கலாமே” சாமியாரிடம் நேரடியாகக் கேட்டேன்.

சாமியார் கண்களில் ஏதோ மின்னியது. “பரசுராமரே காத்திருந்தார். நீ ஏன் அவசரப்படுகிறாய்?” சிரித்தார்.

பன்னிரண்டு வருடம்.. வாவ். நான் ஒரு மணி நேரம் ப்ரிடிஷ் மீயூசிய வாசலில் காத்திருந்ததில் எலியட்டின் வேஸ்ட்லேண்ட் போய் விட்டு வந்து விட்டேன். உண்மையில் நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?  வரப்போகும் மணப்பெண்ணுக்காக  மட்டுமா? இல்லை.  வேறு எதற்கெல்லாம் காத்திருந்தேன்? ஒரு காலத்தில் கதைகளை புனைவாக்க காத்திருந்தேன்….அந்த காத்திருப்பு முடிந்து விட்டதா என்ன… எப்பொழுது ஆரம்பித்தது…

கதை சொல்லப் பிடிக்கும், இப்பொழுது கூட கதையாகத்தான் சோசியல் மீடியாவில் எழுதுவேன். சின்னதில் மணியிடம் மட்டும் கதை சொல்வேன். அவன் என் தர்மன், நான் அவன் நகுலன். ஆகவே பிரச்சனை இல்லை.  ஆனால் கிரிக்கெட் ஆடினால்தான் ஹீரோ இமேஜ் என்பதால் கதை சொல்வதைத் தள்ளினேன். பிடிக்கும், ஆனால் இமேஜ்.

“எழுதினா எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி எழுதனும். பெரிய கதையா, அற்புதமான கவிதையா எழுதவேண்டும்..மாஸ்டர் பீஸ்” – நான் எனக்குச் சொல்லிக் கொண்ட சமாதானங்களுக்கு அர்த்தம் உள்ளதா?

போனை பார்த்தேன். கிட்டத்தட்ட 200, 300 சோசியல் மீடியா லைக்குகள். இவை எண்களா, ரசனையா?

 ‘What shall I do now? What shall I do?’ எலியட்டின் குரல் மீண்டும் என்னுள் எழுந்தது. 

கல்லூரியில் தொலைந்த காதல், எழுதாமல் போன கதைகள், சொல்லாமல் போன வார்த்தைகள் – எல்லாம் ஒரே நேரத்தில் என்னைத் தாக்கின. கல்லூரி நாட்களின் கற்பனை வறட்சி மீண்டும் நினைவுக்கு வந்தது – ‘What are the roots that clutch, what branches grow out of this stony rubbish?’. Wasteland பயமுறுத்தியது.

அன்று நான் எழுத நினைத்த காலச்சுவடு, உயிர்மை, விகடன், குமுதம் கதைகள் – அவை இன்னும் என்னுள் முடிவில்லாமல் கிடக்கின்றன. ‘Living nor dead, and I knew nothing, Looking into the heart of light, the silence.’ அந்த வெற்றிடம் இன்னும் என்னுள் இருக்கிறது. ‘I shall rush out as I am, and walk the street. HURRY UP PLEASE ITS TIME’ – எலியட்டின் வரிகள் பாம்பின் விஷமாக இறங்கின.

தூரத்தில் கண்கள் பல வேண்டுதல்களுடன் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியானவனா என  அளக்க இருப்பவள் தெரிகின்றாளா எனத் தாவியது. இங்குதான் இருக்கின்றாளா,  புகைப்படத்தில் பார்த்தவளை நேரில் பார்த்து அடையாளம் தெரியவில்லையோ?  

இங்கேயே காத்திருந்தால் ம்யூசியத்தின் பிரம்மாண்டமான சுவர்கள் என்னை வளைத்து விடுமா, இங்குள்ள சுற்றுலாப் பயணிகளின் நெரிசலில் காணாமல் போவேனா…. இதென்ன அர்த்தமற்ற பேச்சு.. பயமா . இந்த காத்திருப்பு, இந்த வெற்றிடம் – HURRY UP PLEASE ITS TIME’. 

கிரேக்க சிலைகள், சிற்பங்கள், புராணக் கதைகள் – அவை காலம் காலமாகத் தேடல்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அழகுடன் காத்திருக்கின்றன. சரி, அங்கே போகலாம்.

செல்விக்கு டெக்ஸ்ட் அனுப்பினேன். அவள் தேர்வுதான் ம்யூசியம். ஆனால் இப்போது அது எனக்குப் புகலிடமாய் இருந்தது. “மணி நான் உள்ளே கிரேக்க செக்‌ஷனுக்கு போகிறேன். செல்விக்கும் செய்தி அனுப்பி உள்ளேன்” என மணிக்குத் தகவல் அனுப்பினேன்.

மெதுவாக உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.  பிரிட்டிஷ் ம்யூசியம் கட்டிடம் பிரம்மாண்டமானது. வெளியே பார்க்கும்போது கிரேக்கத் தூண்கள், பெடிமென்ட் அலங்காரங்கள் – பழமையின் உணர்வு. ஆனால் உள்ளே நுழைந்ததும் வேறொரு உலகம். நவீனக் கண்ணாடி கூரை, எஃகு கட்டுமானம். மைய முற்றத்தில் வட்டவடிவப் படிக்கட்டுகள். 

கிரேக்க அறைக்குள் நுழைந்தேன். வரலாறு சுமந்த சுவர்கள். மேல்நோக்கி உயர்ந்து செல்லும் தூண்களின் வரிசை. தெய்வங்களின் சிலைகள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. வெள்ளை மார்பிள் கற்களில் வெட்டப்பட்ட உருவங்கள் ஒவ்வொன்றும் ஏதோ சொல்ல நினைப்பது போல. சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளின் குரல்கள் ஒலித்தாலும், அறையின் உயரம் அவற்றை விழுங்கி, ஒரு தனி அமைதியை உருவாக்கியது. இந்த இடத்தின் காலம் வேறு – எந்த செல்போனும், சமூக ஊடகமும் தொடாத காலம். பார்தினான் கோயிலின் பிரம்மாண்டச் சிற்ப துண்டுகள் காட்சி கொடுத்தன. மேலே உள்ள skylight வழியே விழும் இயற்கை வெளிச்சம் சிலைகளின் மேல் படிந்து, அவற்றுக்கு உயிரூட்டியது. இங்கே காலம் வேறு விதமாக நகர்கிறது – நிமிடங்களால் அல்ல, யுகங்களால். பாம்புக்கு அஞ்சி இங்கும் அங்கும் ஓடும் தவளையைப் போல் தவ்வி முடித்து தாமரை இலை மேல் அமர்ந்து ஓய்வெடுப்பது போல இருந்தது.

பார்தினான் கோயில் பெடிமெண்ட்  சிற்பங்களுக்கு முன்பு நின்றேன். கிரேக்க மரபின் கதைகள் லண்டனில் அமர்ந்து கொண்டு என்னுடன் பேச அழைத்தன.  

“Excuse me” ஒரு குரல் அழைத்தது.

யாரோ ஓர் இந்தியப்  பெண் பார்தினான் கோயில் பெடிமெண்ட்  சிற்பங்களைக்  கைப்பேசியில் படம் எடுக்க முயன்று கொண்டிருந்தாள். என் வயதுதான் இருக்கும். நான் குறுக்கே நின்றிருந்தேன்.

இன்னொரு ஐடி தொழிலாளியோ….. 

நகர்ந்து நின்று கொண்டிருந்தேன். தவளை தாவ ஆரம்பித்தது. பாம்பு துரத்தியது.

“Light may not be good there”  கேட்டேன். அவளிடம் பேச வேண்டுமெனக் குரல் மனதில் சொன்னது.

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள்.கேமரா கொடுக்கவில்லை. அவளே வேண்டுமென்பதை எடுத்தாள்.

“India…”  கேட்டாள்.

“Yes….Tamil”

“ஓ. நானும்..” 

 அவள் குரல் ரொம்ப கனிவுடன்  ஒலித்தது. சொந்த ஊர் மொழியைக் கேட்டு எனக்கு அப்படிப் பிரமையோ?

“டூர் வந்திருக்கிங்களா”  கேட்டேன். புகைப்படம் எடுப்பதைக் கண்டதும் எனக்கு அப்படித் தோன்றியது.

“இல்லிங்க. நீங்க”  

தடுமாறினேன். என்னில் பாதி என நம்பியவள் வரவில்லை என்பதையா சொல்வது? “டூரிஸ்ட் மாதிரி” .. முணுமுணுத்தேன். தவளையைத் துரத்தும் பாம்பு. எண்ணம் இன்னொரு முறை தாவ தயாரானது.  

அவளிடம் ஏதாவது கேட்டு ஒரு படி கீழே கொண்டு வரத் துடிப்பு வந்தது.

“அது என்னனு தெரியுமா?”  பொதுவாக சுற்றுலாப்பயணியாக இருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எல்லாமே மார்பிள் சிற்பங்கள்தான். 

“பார்தினான் கோயில்  சிற்பம். என் அப்பாவுக்கு அனுப்பனும். அவருக்குக் கிரேக்கக் கட்டிடக்கலை மிகப் பிடிக்கும்.”

“பார்தினான் கோயில் பத்தி தெரியுமா?”  ஆச்சரியத்துடன்.

” யெஸ்? ”.. எனக்குத் தெரியக் கூடாதா என்ற கேள்வி அவள் கண்ணில் இருந்தது.

“இது பெர்செபோன்” நான் பேச்சை மாற்றினேன். “ஹேடிஸ்னு ஒரு பாதாள உலக தெய்வம் பெர்செபோனை கடத்திச் சென்றார். டெமெட்டர் மகளுக்காகத் துயரத்தில் பூமியைப் பனிக்காலமாக மாற்றினார். கடைசியில் ஆறு மாதம் மகள் மேலுலகில், ஆறு மாதம் கீழுலகில் என ஒப்பந்தமானது”

அவள் புருவம் உயர்த்தினாள். “சம ஸ்டோரி. இது அதீனா கோவில் பெடிமெண்ட்ல இருந்த சிற்பம். அதீனா தெரியும்ல”

“தெரியுமே. சரஸ்வதி மாதிரி”

“ஆனா அதீனா வீணை வாசிக்க மாட்டாங்க. ஈட்டி பிடிப்பாங்க, கொற்றவை மாதிரி” சிரித்தாள்.

நாங்கள் பார்தினான் கோவில் சுவர் உச்சியில் இருந்த குதிரை வீரர்களைப் பார்த்தோம். “இது தெரியுமா?  இது குதிரை வீரர்கள் ஊர்வலம். இது தெய்வம் இல்லை. இது ஏதேன்ஸ் நகரின் பெருமையை காட்டறது” என்றேன்.

“திருவாரூர் போனிங்கனா அங்க ஓவியர் சிங்காதனம் வரைஞ்ச மராத்தியர் ராஜா கால வீரர்களின் ஊர்வலம் இருக்கு? எவ்வளவு செஞ்சுரி தாண்டியும் வெவ்வேறு கலைஞர்களாக இருந்தாலும் ஒற்றுமை பாருங்க ” அவள் கண்கள் அந்தக் குதிரை வீரர்களை ரசித்தன. டக்கென ஒரு ஸ்கெட்ச் புக் நோட்டை எடுத்து பென்சிலில்   அவுட்லைன் வரைய ஆரம்பித்தாள். பார்க்கவே அழகாக இருந்தது.  தொந்தரவு செய்ய விரும்பவில்லை. மெல்ல நகர்ந்து கேலரியின் அடுத்த சிற்பங்களைக் காணச் சென்றேன்.

சோசியல் மீடியா தொடர்ந்து அழைத்தது. உள்ளுக்குள் செல்போன் சிக்னல் வீக்காக இருந்தது. அதைச் சமாளித்து எனக்கு வந்த விவாதப் பதில்களுக்குப் பதில் அனுப்பினேன். 

மணியிடம் இருந்து “வெய்ட், நான் வரக் கொஞ்சம் தாமதம் ஆகும். நான் வந்து சொல்லறேன்” எனச் செய்தி வந்தது.

அதற்குள் அந்த அவள் தனது நோட்டு புத்தகத்தினை மூடி பையில் வைத்து விட்டு என்னை நோக்கி நடந்து வந்தாள்.

“என்ன இன்னைக்கும் வேலை இருக்கா? போனில் சம பிசியா இருக்கிங்க”   அமைதியாகக் கேட்டாள்.

“இல்லை. சோசியல் மீடியா… ஒரு டிபேட்..”  கொஞ்சம் பெருமையுடன் சொன்னேன்.

“வாவ்”  என்றாள்.  கிண்டலோ என்று தோன்றியது.

“நீங்க சோசியல் மீடியாவில் உண்டா”  .

“யார் இல்லை.. “   எதிர்க்கேள்வி கேட்டாள்.

“நீங்க வரைஞ்சதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்விங்களா, எனக்கு ஓவியம் பிடிக்கும் … உங்க நோட்டை பார்க்கலாமா..”   எனக்கு அவள் என்னத்தான் வரைந்தாள் என கேள்வி இருந்தது.

“ஸ்யூர்”  பையைத் திறந்து எடுத்துக் கொடுத்தாள்.

அழகழான ஓவியங்கள். ஹம்பி, எல்லோரா, காசி, கோவா, தஞ்சை,மதுரை, லண்டன் நகரத் தெருக்கள், வெஸ்ட் மினிஸ்டர் சாப்பல், இன்று பார்த்த குதிரை வீரன், கோலம் எல்லாமே இருந்தது.

“ரொம்ப அழகா இருக்கு, சம டீட்டைல், எப்படி நம்ம வேலை டென்ஷன்ல இதை மேனேஜ் செய்யறிங்க” என் வியப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ரொம்ப பாராட்டுகின்றேனோ? 

“உலகம் என் இஷ்டத்துக்கு இருக்குமா என்ன? உலகம் பெர்சபோன் மாதிரிதான், ஐடி வேலையுடன் பாதாளத்திலும், பென்சிலிங் ஓவியமா பூமி மேலேயும் இரண்டாக இருக்கும். That is not a bug, that is a feature”  அவள் வரைந்த பென்சிலிங் போலச் சிரித்தாள்.

“ வசந்தமும் உண்டு, பாதாளமும் உண்டு போல”

“யெஸ். பாதாளத்திலிருந்து மேலுலகம் வரும் சுழற்சிக்குக் காத்திருக்க வேண்டியதுதான். மேலுலகம் வந்தால் பாதாளமும் போக தெரியனும். அதுக்கும் ஒரு காத்திருப்பு. Just play your best”

“காத்திருப்பு.. இண்டரஸ்டிங் வார்த்தை. எனக்கு ஒரு பரசுராம் கதை தெரியும், நம்ம ஊர் கதை. பன்னிரெண்டு வருட வெயிட்டிங். இன்றைக்கு எலியட்டின் வேஸ்ட்லேண்ட் போயிட்டு அங்கே இருந்து பரசுராம்கிட்ட போய்ட்டேன், பரசுராம் வெயிட்டிங் தொந்தரவு பண்ண இங்க பெர்ஸபோனிடம் வந்தேன்….இங்க இவங்களும் வெயிட்டிங். நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு….”

“ஒரே நாளில் இவ்வளவு ட்ரவலா? வாவ். கூடு விட்டு கூடு பாயற மாதிரி, கவிதை விட்டு கதை பாயறிங்க…காத்திருப்பைத் துரத்திக்கிட்டு போறிங்க.. நீங்கச் சொன்ன  பரசுராமன் கதை திரிபுரை கதைதானே….எனக்குத் தெரியும்…  இன்னைக்கு என்னாச்சு…. ”

“அதைத்தான் யோசிக்கிறேன்…. உங்களுக்கு கதைனா பிடிக்குமா?”  கேள்வி வழியாக என்னை விளக்குவதைத் தவிர்த்தேன்.

“உங்களுக்குப் பிடிக்குதே. நீங்க பத்திரிக்கைகளில் எழுதுவிங்களா” அவள் குரலில் ஆர்வம் தெரிந்தது. 

“இல்லை. சோசியல் மீடியாதான்” ஒரு கம்பீரத்துடன் சொன்னேனா?

“என்ன எழுதுவிங்க” கேட்டாள். இதற்குதான் காத்திருந்தேன்.

“டெய்லி பாலிடிக்ஸ், சோசியல் க்ரிட்டிக்கல் அனாலிசிஸ், பொலிடிக்கல் ஆக்டிவிசம்” என் எழுத்துத் தளம் அனைத்தும் விரித்து வைத்தேன், கடை விரித்தேனா?

“ரொம்ப ஆக்டிவ் போல, நான் கூட பாலோ செய்யறனா என்னவோ… இவ்வளவு பிசி ஆளாக இருக்கிங்க..மானிட்டைஸ் செய்யறிங்களா?”  முகத்தில் கூர்மை இருந்தது. எங்கேயோ பார்த்தது.

“மானிட்டைசைஸ் செய்ய விருப்பம் இல்லை. நான் என்ன சேல்ஸ்மேனா?” என் குரல் கடுமையானது.

“நான் அப்படி கேட்கலை. சோசியல் மீடியாவில் உங்க அப்ரோச் என்னனு க்யூரியஸ்” அவள் விடவில்லை, புதிதாக பார்த்தவனிடம் கூட.  வேகமாய் கார் ஓட்டி சிக்கினால் காவல்துறை நிறுத்தி விடாமல் கேட்பது போலக் கேட்கின்றாள். 

“ஆடியென்ஸ் டேஸ்ட் எப்படியோ அதை ஒட்டி எழுதுவேன்”   எனக்கென்ன என் தரப்பைச் சொல்லப் பயமா என்ன?

“நீங்க ஆடியன்ஸ் விருப்பத்துக்கு மட்டும் எழுதினா, அது என்டெர்டெய்ன்மெண்ட்”  அவளும் விடவில்லை.

எவ்வளவுதான் தவளை தவ்வி அகன்று செல்வது. பாம்பு விடாமல் வந்தால் என்னத்தான் செய்வது. இருப்பது சிறு கிணறுதானே…கோபம் வந்தது. கட்டுப் படுத்திக் கொண்டேன்.

“சாரி. வேற விதமா சொல்லணும்னு நினைச்சேன்.” அவள் குரலில் மென்மை வந்தது. என் மாற்றத்தினை கண்டுக் கொண்டாளோ. பாம்பாகவும்,தவளையாகவும் நான் படும் பாடறிந்தாளோ. கையில் இருந்த ம்யூசியம் கையேட்டை உயர்த்திக் காட்டினாள். “இப்ப நாம…”

“கிரேக்கத்தில்….செக்‌ஷன் 18”

“எகிப்து?”

“எகிப்து… செகண்ட் ப்ளோர்.. 61-66”

அவள் கையேட்டின் வரைபடத்தை சுட்டிக்காட்டினாள். “பார்த்தீங்களா? இந்த வரைபடம் நம்மை கிரேக்கத்திலிருந்து எகிப்துக்கு அழைச்சுப் போறது – கடல் கடக்காம, விமானம் ஏறாம. ஓவ்வொரு ரூமும் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சு அதை ஒரு லாஜிக்கல் எண்டிங்குக்கு எடுத்துப் போகும். கற்காலம் போகனும்னா கூட இதே ம்யூசியம்ல ரூம் 50 போனா போதும். சுலபமா இருக்கு, ஆனால் அழகா, அர்த்தம் உள்ளதா இருக்கு.”

எனக்கு புரிந்தது அவள் எங்கே போகிறாள் என்று. “ஆனா இங்க எல்லாமே துண்டு துண்டா, பல அறைகளில்…”

“அவள் சிரித்தாள். “அதுதான் நவீன வாழ்க்கை.” அவள் கண்கள் சுற்றிலும் இருந்த சிற்பங்களையும், பொருட்களையும் தொட்டெடுத்தன. “இந்த ம்யூசியத்துல பாருங்க – வித விதமான மொழி பேசும், பலவிதமான வாழ்க்கை கொண்ட வரலாற்றுச் சக்திகள் எல்லாம் ஒரே கூரைக்குள் இருக்கு. ஆனா பல அறைகளில் விதவிதமான காரணங்களால் இருக்கு. நாம எல்லாரும் அப்படித்தான் வாழறோம் – ஒவ்வொரு அறையிலும் ஒரு முகம். பல அறைகள், பல முகங்கள் – இது நம்மை உடைக்காம, நம்ம கதையைச் சொல்ல உதவனும். ஆனா எல்லா அறைகளும் ஒரு  பெரும்கதையின் பகுதி. இந்த ம்யூசியம் சொல்லற பெரும்கதை பிரிடிஷ் பார்வையில் வர மனுஷங்களோட பெரும் கதை. நமக்குக் கதை உண்டா?  யார் சொல்லறது? “

எண்ணம் தவளை போல தாவி கிணற்றைத் தாண்டி என்னை மேலே கொண்டு சென்றது. சமுத்திரத்தின் பிரமாண்டம் காட்சியானது. அளவில் மட்டுமல்ல ம்யூசியம் சொல்லும் கதையின் உள்ளடக்கத்தில் அது முன் வைத்த பிரமாண்டம், அழகு,கவனம்……அவளை மடக்கி நான் யார் எனக் காட்ட வேண்டுமென்ற ஓரமாக ஒட்டி இருந்த எண்ணம் அறவே அறுந்தது.

“இது என்ன ஆடியன்ஸ் விருப்பத்துக்கு மட்டுமிருக்கா”  அடுத்து என்னிடம் கேள்வியை வைத்தாள்.

“அப்படினு சொல்ல முடியாது.. ஆடியன்ஸ் ப்ரெண்ட்லி, ஆடியன்ஸ் விருப்பத்துக்கான கதை இல்லை. இதுக்கு வேறொரு நோக்கம் உண்டு.  ஆரம்பத்தில் ம்யூசியம் ஹிஸ்டரி பார்த்திங்கனா வெறும் Cabinets of Curiosities ஆக ஆரம்பிச்சதுதான். ஆனா இப்ப.. ” கையை சுற்றிக் காட்டினேன்.

ஆமோதித்து தலையை அசைத்தாள் ” முன்னாடி வெறும் சின்ன க்யூரியாசிட்டி, இப்ப  பெரிய நோக்கம்… அதுக்காக கதை சொல்றது… அந்த நோக்கமே கதையை மாத்துது. அதனால கதைக்குள் கல்லும் பேசுது, சிலையும் பேசுது. நாம ஆடியன்ஸும் கதைல ஒரு பார்ட் ஆகறோம்” அவள் தன் ஸ்கெட்ச்புக்கை சுட்டிக் காட்டினாள்.”இது போல…”

“ எப்படி இப்படியெல்லாம்….”  நோட்டைத் திரும்பக் கொடுத்தேன்.

“பிடிச்சிருக்கு…செய்யறேன். என் நோட்டுக்குள்ளே கிரேக்கம், சோழம், மராட்டிய ஆர்ட் இருக்கு. என்னோட வெர்ஷனா. நான் செஞ்சதா”  என்றாள்.

“யார் பார்ப்பாங்க”  என்றேன். என் குரலில் ஆச்சரியம் வரக் கூடாது எனக் கவனமாக இருந்தேன்.

“நான் பார்ப்பேன்….”  என்றாள்.

நான் பேசவில்லை. எதுவும் சொன்னால் மிகையாக இருக்குமோ என சொல்லவில்லை.

“பயப்படாதிங்க. ரொம்ப தனியா சிக்கிட்ட விஷயம் இல்லை. சின்னதாக  லைக் மைண்டட் மக்கள் உண்டு. அதில்லாமல் வரைஞ்சா ஒரு திருப்தி, நிறைவு, டேஸ்ட். அதுதான் வரையறேன்.”

“அது போதுமா”  இது என்னைக் கேட்டேனா, அவளைக் கேட்டேனா எனத் தெரியவில்லை

“அது என்ன?” அவள் விரல் பெர்சபோன் அருகே இருந்த டயோனிசஸ் சிலையைச் சுட்டிக் காட்டியது.

“விடுதலை உணர்வின் தெய்வம்” 

அவள் தன் ஸ்கெட்ச் புத்தகத்தினை காட்டி, “இதுவும் ஒரு தெய்வம்தான். எந்த விஷயத்திலும் அதோட finest, peak ஆக வெளிப்படும் சக்தி தெய்வம்தான்…”

நான் மெல்லத் தலை அசைத்தேன். அவள் என்ன சொல்லப் போகின்றாள் எனக் காத்திருந்தேன்.

“அந்த பார்வையில் அங்க இருக்கறது விடுதலையின் finest and peak act ,  என் ஆர்ட் என் சக்தியை மேக்ஸிமைஸ் செய்யும் முயற்சி. இந்த கோடுகள், உருவங்கள், அது பின்னாடியான எல்லாமே அதுதான். My journey.  In a way it’s my half. My outward movement” சொல்லி பையில் வைத்துக் கொண்டாள்.

அவள் போன் எங்கள் உரையாடலின் குறுக்கே அழைத்தது. எடுத்தாள். “எக்ஸ்க்யூஸ் மி” சொல்லி நகர்ந்து போய் மென்மையான குரலில் பேசினாள்.

“சாரி நான் கிளம்பனும்..ப்ரெண்ட்ஸ் வெளியே வெயிட் பண்ணறாங்க, Bye பரசுராம்..” குறும்பாகச் சிரித்தாள்.

இன்னும் கொஞ்சம் இருப்பாள் என நான் நினைக்கையில் ஓட்டமும் நடையுமாக அறையை விட்டு அகன்றாள்.

அவள் மறைந்தாள். அவள் சிரிப்பும், சொல்லும் அந்த அறையில் இருந்தது. கடைசி சொல் என்ன?  நான் பரசுராமன். நான் சென்றடைய வேண்டிய  இடம் எங்கோ பருவெளியில், புறத்தில் இல்லையோ?  நான் கண்டடைந்த காட்சி எது? தெரிந்து கொள்ள வேண்டிய பொருளெது?

என் கற்பனை கொண்டு நான்  பாலையான பாதாளத்தையும், பசுமையான வசந்தத்தையும் எதிர்க் கொள்ள முடியுமா? 

காத்திருந்தேன். பாம்பு முழுப்படமும் விரித்து மெல்ல நிமிர்ந்து உற்று நோக்க ஆரம்பித்தது. தவளை தாவல் அடங்கி ஒரிடத்தில் அமர்ந்தது.

எவ்வளவு நேரமென யோசிக்கவில்லை. போனில் செய்தி வந்தது. எடுத்துப் பார்த்தேன். 

மணியிடம் இருந்து செய்தி “சாரி. செல்வி வரவில்லை. அவங்க வீட்டில் இந்த வரன் வேண்டாம் எனச் சொல்லி விட்டார்கள். இந்தியா காலில் உள்ளேன். உடனே க்ரவுண்ட் ப்ளோர் கேப்டீரியா வரவும். நான் அங்கிருக்கின்றேன்”.  எனக்கு அது எந்த உணர்வினையும் தரவில்லை. எங்கோ தூரத்தில் ம்யூசியத்தில் யாரோ பேசும் குரல் என்றே இருந்தது. 

போனை பையில் வைத்தேன். பெர்சபோன் சிலையைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.