நினைவோடையின் படிமம் –  ஜெயந்த மஹாபாத்ரா

ஒடிசா மாநிலம் கடக்கில் பிறந்த ஜெயந்த மஹாபாத்ரா (1928 -2023) தன்  தாய் மொழியான ஓடியாவை விட அதிகம் ஆங்கிலத்தில்தான் எழுதினார். சாஹித்திய அகாடமி விருதும் 1981இல் அவருடைய ஆங்கில எழுத்துக்களுக்கே வழங்கப்பட்டது. ஜெயந்தாவின் ஆங்கிலக் கவிதைகள் நினைவோடையில் பதிந்த படிமத்தின் வார்த்தை வெளிபாட்டியங்கள். நேர்த்தியான ஆங்கில சொல் உபயோகம் – நீர்குமிழித் தருணங்களை வார்த்தைகளில் பிடிக்கும் முயற்சிகள் எனக் கூறலாம். உதாரணத்திற்கு “இந்திய வெயில் காலம்” (Indian Summer) என்ற படைப்பின் ஆரம்ப வரிகளில் இடம்பெறும் “soughing” என்ற வார்த்தை. பொதுவாக இலைகளுக்குள் வருடிச்செல்லும் காற்றின் சப்தத்தை “Murmur” அல்லது “Rustling” என குறிப்பிடுவது இயல்பு. ஜெயந்தாவின் இந்தச் சொல் உபயோகம் புலன்களின் உணர்வுக்கு  நுட்பமான வர்ணிப்பை தருகிறது.

இந்திய வெயில் காலம்

இலைகளுக்குள் இசைக்கும் காற்றொலிக்கு மேல்
பண்டிதர்களின் குரல்கள் எழுகிறது
நதி வாய் திறக்கிறது

முதலைகள் ஆழத்திற்கு பாய்கின்றன

வரட்டிப் புகையில் வருக்கும் காலைப் பொழுது

என் படுக்கையில்
அன்பு மனைவி
மதியம் முழுதும் வீற்றிருக்கிறாள்,
எரியும் சிதையின் அலறலில்
துயிலெழாமல், சோர்வடையாமல்

முதல் ஐந்து வரிகளின் தொடர்ச்சி எதிர்பாராமல் கடைசி பத்தியின் அமைதிக்கு தாவுகிறது, எச்சரிக்கையின்றி மரணத்திலிருந்து வாழ்வுக்கு பெயர்கிறது. அசல் படைப்பில் “the mouth of India opens ….” என்பது ஒரு உருவகம். கங்கையையோ அல்லது வேறு நதியையோ அது குறிக்கும். இதனால் இந்த வரியை “நதி வாய் திறக்கிறது” என மொழிபெயர்க்கலாம். முதலைகள் எரியும் சடலங்களை எதிர்பார்த்து நதியின் ஆழத்திற்கு பாய்வது வாழ்க்கையின் அந்திம யதார்த்தத்தை பிரதிபலிக்கும் அப்பட்டமான கவித்துவம். காற்றின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருக்கும் சிந்தையில் பண்டிதர்களின் ஒப்பிப்பு தடங்கலாக தோன்றுகிறது. மரணம், எரியும் சிதையின் ரூபத்தில் தன்னையும் தன்  மனைவியையும்  தீண்டாமல் இருப்பது மனதினுள் உவகையை கொடுக்கிறது. 

ஜெயந்தாவின் ஆங்கில மொழிநடை சில சமையம் வார்த்தை சிக்கல்களாகவும், ஊமை உருவகங்களாகவும் இருப்பதினால் அவற்றின் விளக்கங்கள்  கடுமையாகின்றன.  “It was hard to believe the flesh was heavy on my back” என்ற “பசி” (Hunger) கவிதையின் ஆரம்ப வரிகளில் வரும் “Flesh” (சதை) என்பதற்கு உளவியல் ரீதியான அர்த்தங்கள் இல்லாமல் நேரடி பாலியல் மேற்கோள் இருக்கிறது. “பசி” அவருடைய முக்கிய படைப்புகளில் ஒன்று. 

பசி

சதையின் பாரம் இத்தனை கணக்கும் என நம்பமுடியவில்லை,
மீனவன் கேட்டான்: ‘அவளை எடுத்துக்கொள்கிறாயா?’, இரக்கமில்லாமல்
வலையையும் துயரையும் பிணைத்தவாறு, பேசியதை
நிலைமையினால் நியாயப்படுத்துவதை போல,
எலும்புத் துணுக்குகள் அவன் கண்களை அடித்தன.

பரந்த மணற்பரப்பின் மேல் அவனைப் பின் தொடர்ந்தேன்,
சதையின் வேட்கை இருதயத்தில் துடித்துக்கொண்டு,
வீட்டை எரித்தால் ஒருவேளை விடிவெள்ளி பிறக்குமோ?
மௌனம் கவ்வியது; வெறும் நுரையைத்தான் அவன்
பழைய வலை கடலிலிருந்து சுரண்டியிருந்தது

மறையும் ஒளியில் பனங்கீற்று குடிசை புண்னைபோல திறந்தது,
நேற்றும், முன் ராத்திரிகளில் நுழைந்து வெளிவந்த காற்றைப்போல நான்,
பனங்கீற்று என் தோலை சீண்டியது; உள்ளே ஒரு
எண்ணெய் விளக்கு ஓலைக் கீற்றில் நெசவிய வருடங்களை பிரித்தது,
விளக்கு மையின் இருள் என் சிந்தைக்குள் பரவியது

‘என் பெண்ணுக்கு பதினைந்து’ அவன் சொல்லக் கேட்டேன்
‘தொட்டுப்பார்…விரைவில் வருகிறேன், ஒன்பதுக்கு நீ கிளம்பவேண்டும்’,
வானம் என் மேல் இடிந்து விழுந்தது, தகப்பனின் சாதுர்யம் புரிந்தது,
மெலிந்த நீளமான ஈர ரப்பரைப் போல அவள்,
கால்களை விரித்தாள், அதனுள் பசியை உணர்ந்தேன்,
அதனுள் துடித்து நெளியும் மீனை உணர்ந்தேன்.

வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடிசையில் காற்று நுழைவதுபோல அந்த குடிசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது.  “வீட்டை எரித்தால் ஒருவேளை விடிவெள்ளி பிறக்குமோ?” (“Hope lay perhaps in burning the house I lived in“) என்கிற வரி ஜெயந்தாவின் மனப்போராட்டத்தை பிரதிபலிக்கிறது.  

ஜெயாதாவின் கீழ்வரும் படைப்பில் மீண்டும் நதிக்கரை சுடுகாட்டை மையமாக கொண்டிருக்கிறது.

பூரியில் புலரி (Dawn at puri)

எண்ணற்ற காக்கைகளின் கரையல்கள்,
புனித மண்ணில் எஞ்சிய மண்டையோடு
அம்மண்னின் பசியை நோக்கி திரும்புகிறது

தங்கள் நடுவயதைத் தாண்டிய
வெள்ளை உடுத்திய விதவைகள்
பெரியக் கோவிலில் நுழைய காத்திருக்கிறார்கள்

அவர்களின் எளிய கண்கள்
இளங்காலை சமையக் கதிர் வலையில்
சிக்கி முழித்து தவிக்கின்றன

முன் பொழுதின் வெளிச்சம் உடைந்த வாத உடல்
ஓடுகளை ஒன்றின் மேல் ஒன்றாக காட்டுகிறது,
பெயரில்லா குறுகிய முகங்களின் குவியல்

என்னுள்ளிருந்து ஏதோ ஒன்று திடீரென
ஒரு ஒத்தை சிதையின் எரியும் புகையில்
என் முதிய தாய்க்குள் புகுகிறது

இங்கு எரியூட்டப்படுவது அவளின் கடைசி ஆசை
நிலையற்ற மண்ணில் தெளிவற்ற ஒளியைப்போல

அவரை வெகுவாக வாசித்தவர்களுக்கு கூட பெரும்பாலும் தெரியாத விவரம், ஜெயந்த மஹாபாத்ரா பிறப்பால் கிறிஸ்துவர் என்பது. பிறவிக் கிறிஸ்துவர் என்றாலும் ஜெயந்தாவின் கவிதைகளில் அவருடைய கிறிஸ்துவ தர்ம சார்பே காணமுடிவதில்லை. மாறாக ஹிந்து தர்மத்தின் பிம்பங்கள் பெரிதும் தென்படுகிறது. 

தொன்மம் (Myth )

இருட்டு ஈர கர்பாகிரஹத்திற்குள்
செல்ல எனக்கு துணிவில்லை,
அங்கு தொன்மம் கைகளிலிருந்து கைகளுக்கு
கண்களிலிருந்து கண்களுக்கு பெயர்கிறது,
உலர்ந்த பூஜை மலர்கள் என்னை பார்த்து நகைக்கின்றன
நான் ஒரு வைரம் ஆகிவிட்டேன்,
மங்கிய தூரத்து மலைகளுக்கு ஒத்த என் ஓலம்
சாகும் பட்டாம்பூச்சியைப்போல,
காவியணிந்த சாமியார் கறாராக கேட்கிறார்
“நீ ஹிந்துவா?”

கோவில் முக்கியத் தெரு (Main Temple Street)

சேற்று வண்ணச் சிறுவர்கள்
முடங்களையும் புணரும் நாய்களையும்
பார்த்து சிரிக்கிறார்கள்,
கவலையின்றி திரிகிறர்கள்

முடிவில்லா தாளம் அந்த கோவில்

வழுக்கைத்தலைக்கு ஒத்த அந்த புழுதி பாதையில்
எப்போதும் ஏதாவது நகர்ந்துகொண்டே இருக்கிறது,
ஆனால் எதுவும் காணாமல் போவதில்லை

வெக்கையில் புண் மயக்கம்

அந்த வானம் அங்கே
வெல்லமுடியா இறைக்கு சொந்தம்,
முடத்தைபோல மௌனம் காக்கிறது

மூன்று- ஒன்று என்ற சீரில் அமைந்த இந்த கவிதை, கோவில் கொண்டுள்ள  முக்கியத் தெருவின் கொண்டாட்ட குதூகலத்தை வனத்தின் மௌனத்துடன் ஒப்பிடுகிறது. உருவகத்தின் மூலம் தெய்வத்தின் செயலின்மையையும்  மனிதர்களின் அன்றாட அசைவுத் தாளங்களையும்  இரு நேர் எதிர் படிமங்களாக வெளிக்கொண்டுவருகிறது. 

சில கவிதைகளில் தோன்றும் மெல்லிய உணர்ச்சிகள் – நிலைமையின் தீவிரத்தை கிசுகிசுக்கும் வார்த்தைகளில் பேசுவதைப்போல அமைகிறது. 

அவள் கைகள் (Her Hands)

அந்தச் சிறுமியின் கைகள் இருளினால் ஆனது
அதை எப்படி ஏந்துவது?

சிதைக்கப்பட்ட தலைகள் தெரு விளக்குகள்,
குருதி எங்கள் இடையே இருந்த கதவை திறந்தது

தாயின் வாய் வலியினால் தேய்க்கப்பட்டு
உடல், ஆணியின் படுக்கையில் துடிக்கிறது

கிழிந்த உடலைத்தவிர அவளிடம் வேறேதும் இல்லை எனக்கு அளிக்க
குற்ற உணர்வு தடுக்க முயன்றும் முடியவில்லை அவளை நான் அணைக்க

வன்புணர்ச்சிக்கு ஆளான ஆதறவற்ற தெரு வாழ் சிறுமியை சந்தித்த ஒரு மனிதரின் அறப்போராட்டம். இதிலும் சில படிமங்கள் தெரிகின்றன. தெரு விளக்குகளை சிதைந்த சிரங்களுக்கு ஒப்பிடுகிறார் ஜெயந்த். அந்த சிறுமிக்கு ஆறுதல் சொல்ல தவிக்கும் ஜெயந்த், ஒரு ரத்தம் படிந்த கதவை தாண்ட வேண்டிய அவசியத்தை உணர்கிறார். 

அந்த காதலைப்பற்றி – (of that love)

காதலில், நாம் மழையில்
நடந்த தூரத்தில்- இப்போது
சோர்வுதான் மிஞ்சியுள்ளது

என் கண்ணாடியில் நான்
ஒரு வேற்று மனிதன்
தருணங்கள் அதன் மேல்
மிக மெதுவாய் நகர்கிறது
என் வேற்று முகத்தை நானே
பரிகாசித்துக் கொள்கிறேன்

நெருங்கியவர் யாரும்
என்னிடம் இப்போதில்லை
உன் பக்கத்தில் உட்கார்ந்து
மேகங்களின்றி தவிக்கும்
வானத்தை பார்த்து
காலங்கள் ஆகிவிட்டது
உன்னுள் நீ வசிப்பது பார்த்து.

ஜெயந்தாவின் படைப்புகளில் உள்ள மெல்லிய உணர்ச்சிகள் சில சமயம் வார்த்தை வலைக்குள் சிக்கி தவிக்கிறது. ஒரு மேலான வாசிப்பில் புலப்படக்கூடிய கவிஞர் அல்ல ஜெயந்த். புலன்களை சீண்டும் படிமங்களின் லகுவை புரிந்துகொள்ள பக்குவமான வாசிப்பு தேவை. நினைவோடையில்  எழுந்து மறையும் சிறு அலைகள் அவரது வரிகள். அவர் படைப்புகள் வாசப்பொட்டலங்கள். நேரடி அனுபவங்களின் நினைவோடை பதிப்புகளே அந்த வாசத்தின் மூலம்.



Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.