நீலதாவணி – நிறம் மாறாத அசல்களின் சித்திரம்

நீலதாவணி ரம்யாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் எட்டு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் கவனிக்கத்தக்க பல கதைகள் உள்ளன. பெண்ணின் மன ஆழத்தின் அலைவுகளை நுட்பமாக பதிவிடும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் அடங்கியத் தொகுப்பிது. பெண்களின் நுட்ப உணர்வுகளுக்கு அடிநாதமாக ஆண்களே இருக்கின்றனர் என்பதை கோடிடும் இடங்கள் அபாரமானவை. இந்த கதைகள் பெண் தன் அடையாளங்களை நினைத்து பெருமிதப்படும் கதைகள், பெண்ணிய கருத்துக்கு அருகில் நிற்கும் கதைகள், நாடகக் கலையை போற்றும் கதைகள், அறிவியல் புனைவு பரிசோதனைக் கதை, ஆன்மீகத்தை அடித்தளமாகக் கொண்டு மனித உணர்வுகளை விசாரணை செய்யும் கதைகள் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களில் இயங்குபவைகளாக இருக்கின்றன. பெண் அக உணர்வுகளை எழுத்தாளர்கள் சிலர் நுட்பமாக எழுதுவதைப் போல ரம்யா ஆண்களின் அக உணர்வுகளையும் அவர்களுக்கு தொழில் மீதான அக்கறையையும் அழுத்தமாக எழுத முனைந்துள்ளார். தொகுப்பில் கதைகளை பெண்களை மையப்புள்ளியாக வைத்து இயக்கும் கதைகள், பெண்கள் மையம் கொள்ளாத கதைகள் என்று இரண்டு விதமாக பகுத்து விடலாம். இரண்டு பகுப்பிலுமே குறிப்பிட்டு நினைவில் இருத்திக் கொள்ளத்தகுந்த கதைகள் அடங்கிய தொகுப்பு நீலதாவணி.

பொதுவாக பெண்களிடம் தன் உடலுக்கு வயதேறுவதை விரும்பாத அல்லது அப்படி வெளியே தெரியாமல் தவிர்ப்பது சார்ந்த ஆழமான தவிப்பும் மேலும் தன் இளமையை அதிக ஆயுட்காலம் நீட்டி வைக்க பேராசையுறும் உள்ளுணர்வும் அதிகமிருக்கும். தன் உடலை மோகிக்கும் அக விளைவுகள் குறைவான பெண்களை எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம். ஆண்டாள் நாச்சியார் சூடி கொடுத்த கதையில் அவள் கண்ணாடி முன் மயங்கி நிற்கும் காட்சியும், கிளியோபாட்ரா தன் மேனி எழிலை பராமரிக்க மேற்கொண்ட பல்வேறு ரகசியங்களும் பல நூறாண்டுகளாகியும் நம்மை வந்தவை. வரலூறு தொன்மம் எல்லா இடத்திலும் இந்த மயக்கநிலைக்கு பின்னால் விரியும் உளவியல் இப்போதும் ஆர்ச்சரியமூட்டுகின்றன. அவை பெண்களின் அக விளைவான தன் அழகுக்கு தானே மயங்குதல்,  உடலை அழகுற பேணுதல், அதற்கு வருடங்கள் கடந்தும் அதே பொலிவோடு இருக்க எண்ணும் பெரும் கனவே அதன் காரணம். அழகு சாதனங்களும், நகைகளும் ஆடை அலங்காரப் பொருட்களின் வியாபாரம் பெண்கள் தங்களை எப்போதும் பதினாறாக உணர விரும்பும் அடிமன ஏக்கத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்  கொள்கின்றனர் என்பது கண்கூடு. இந்த உடலரசியலின் மறுபக்கம் அன்பிற்கான ஆழமாக தேடல் என்றும் சொல்லலாம். இந்த உளவியல் சிக்கலை நுட்பமாக பேசும் கதை தொகுப்பின் முதல் கதையான நீலதாவணி. தென் தமிழகத்தில் தனக்கு வயது வந்த மகள் இருக்கிறாள் என்பதை உணர்த்த பெண்கள் கொண்டை போடும் வழக்கம் இருப்பதாக யாரோ கூறக் கேட்டிருக்கிறேன். இது பெண் திருமணமானவள் என்பதை காட்ட நெற்றி உச்சியில் குங்குமத்தை சூட்டி வைப்பதை போல, மெட்டி அணிவிப்பதைப் போல, கணவன் இறந்த பின்னர் கைமை நோன்பெடுக்க சொல்லி கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு சற்றும் குறைந்து போகவியலாத புற அடையாளம். அப்படியாக அடையாளப்படுத்தும் விஷயத்தை நீலதாவணி என்ற கதையில் நுட்பமாக கையாள்கிறார் ரம்யா.  கதையின் இடையிடையே ஊடாடும் ஒரு சில வரிகளில் அப்படி அடையாளப்படுத்துவதன் நோக்கத்தை பகிரங்கமாக வாசகப்பார்வைக்கு வைக்கிறார். பெண்ணுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அடையாளங்களும் பின்னணியில் இருப்பது ஆண்களே என்பதை குறிப்புணர்த்தும் இடங்களும் பூடகமாக கதையில் உண்டு. ஆனால் கதையில் வரும் கதைசொல்லியின் அம்மா அந்த கட்டுப்பாட்டை மீற துடிக்கிறாள். அதற்கு தன் மகளை ஆடை அலங்காரத்தில் கதைசொல்லியின் அம்மா செலுத்தும் அதிகாரம் நுட்பமானது.  ஒரு அடையாளத்தை மறைக்க மறுக்க தன் மகளுக்கு வேறொரு அடையாளத்தை தரவோ அங்கரீக்கவோ மறுக்கிறாள். தாய்க்கும் மகளுக்குமான உறவை புனிதபடுத்தாமல் தாய்மை போற்றுதலுக்குரிய மகத்தானது என்ற கற்பித்தங்களை உடைத்து தாயும் பெண் தான். அவளுக்கென்ற பிரத்தியோக ஆசாபாசங்கள் உண்டு என்று சொல்லும் மிக சிறப்பான கதை நீலதாவணி. 

பால் அடையாளங்கள் உடலரசியலின் அடுத்த ஆயுதம். பாலியல் குற்றங்கள் ஒரு பாலினத்தை அடக்கியாழ நினைக்கும் கீழ்மை. எந்த பாலினத்தை சார்ந்தவரென்றாலும் அவமானம் செய்யவும் வசவு சொல்லவும் பெரும்பாலும் பெண்களின் பால் அடையாளங்களே உள்ளடக்கிய வன்மான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. புத்தாயிரத்துக்கு முந்திய காலகட்டங்களில் பெரும்பாலான பெண்களுக்கு முக்கியமாய் தென் தமிழகத்திலிருந்து வரும் பெண்களுக்கு தாவணியோ அல்லது துப்பட்டா அணியாமல் வெளியே நடமாட அவர்களுக்குள் பெரிய கூச்ச உணர்வு இருக்கும். அப்படி மேலாடை மேலொரு துணியை பரப்பி அணியாமல் இருப்பது ஏதோ குற்றம் போல தவிப்பார்கள். மேலும் இயன்ற அளவு தளர்வான ஆடைகளையே அணிவார்கள். இது பெண் தங்களது பாலின அடையாளத்தின் மீது கொண்டிருக்கும் தாழ்வுணர்வு என்ற பெண்ணிய கருத்தை ரம்யா மறைமுகமாக சில கதைகளில் பதிவு செய்கிறார். ரம்யாவின் நீலதாவணி மற்றும் ட்ராமா குயின் கதைகளில் . பெண்கள் தாங்கள் அடையாளங்களை பெருமிதமாக நினைக்கும் காட்சிகள் உண்டு. இதை தவிர வஞ்சி, கர்ப்பகிரகம் போன்ற கதைகளின் காதல் என்ற போர்வையில் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் அந்த ஏமாற்றத்திலிருந்து எப்படி வெளியேறி உலகை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது போன்ற தீர்வை பேசுகின்றது.  இந்த வித கதைகள் பெண்ணிய கருத்துக்கு அருகில் நிற்கும் கதைகள். இவை அனைத்தும் பிரச்சார தொனியின்றி எதார்த்த கதைகளாக எழுதப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆறுதலான ஒன்று.

பெண்களின் அக உணர்வை ஆழமாக எழுதிய அதே அளவுக்கு ஆண்களின் நுண்ணுர்வையை அவர்களின் மன கிலேசங்களையும் ரம்யா பதிவு செய்யத் தவறவில்லை. மெக்தலின் கிருஸ்துவுடன் அணுக்கமாக இருப்பதை ஆண் மனம் என்ன நினைக்குமோ அதே கோணத்தில் எழுதியிருப்பது ஆர்ச்சயமூட்டும் வகைமை கதை. அதில் தூய அன்பு எப்படி எதிரியை ஆட்கொண்டு அவர்களை தம் வசம் திரும்புமென்பதை மிக இயல்பாக பதிவிடுகிறார். அந்த இடத்தில் கதை வேறு வடிவம் கொள்கிறது. இந்த இறுதிக் காட்சியில்லாமல் இருந்தால் கதை மனத்தின் மனிதத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும் கதையாக மாறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். வஞ்சி கதையில் ஆண் மனகீழ்மைகளை பதிவிடும் அதே இடத்தில் காதல் என்ற பெயரில் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவள் மீண்டெழ உதவும் தோழமையாக இன்னொரு ஆண் கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார். கர்ப்பககிரகம் கதையில் வஞ்சிக்கப்பட்ட பெண் தெய்வ நிலைக்கு உயர ஒரு சமூகமே உதவுகிறது. பெண் வழி சமூகமாக இல்லாத சமூகத்திலிருந்தே ஒரு ஆண் பிரதிநிதி அந்த பெண்ணுக்கு துணை நிற்கிறான். அப்படி துணை நிற்கும் மூப்பனுக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த உறவு மசியையும் பூசாமல் இருப்பது கதையின் இன்னொரு தனித்துவம். பொதுவாக பெண்ணிய கதைகள் எல்லாம் ஆண் வெறுப்பு கதைகளாக இருப்பதிலிருந்து ரம்யா மாறுபட்டு இருப்பது இவ்வாறு தான். கர்ப்பகிரகம் கதையின் தொன்மத்தின் நீட்சியாக யுகம் பல கடந்த பின்னர் வரும் பெண்ணும் காமம் நுகரும் பொருட்டு வஞ்சிக்கபடுவது தொடர்கிறது. ஆனால் ரம்யா படைக்கும் பெண்கள் அப்படி வஞ்சிக்கப்படும் போது அதோடு சகலமும் முடிந்தது என்று சுணங்கிப் போவதில்லை. அங்கிருந்து முன்னகர்ந்து தனக்கான இன்னொரு உலகத்தை மேலும் ஒளி பொருந்தியதாக உருவாக்கிக் கொள்கிறார்கள். 

 பெண்கள் எழுதும் பெரும்பாலான கதைகளில் நாயக பாவம் கொள்வது பெண் உணர்வுகளே. அவர்களில் ஆண்களின் உலகை எழுதினாலும் அதில் மேலெழுந்து வருவது அந்த ஆண்களை அவ்வாறாக உருவாக்கிய தாயோ, சகோதரியோ, தோழி அவர்களது நுட்பமான உணர்வாகவே இருக்கும். ரம்யாவின் சில கதைகள் ஆண்களின் உலகம் தத்ரூபமாக வரைந்து காட்டப்பட்டுள்ளது. அவர்கள் தொழில் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர்கள் என்பதை சில நுட்பமாக வரிகளில் சொல்லிவிடும் கதை தூசி. ரெக்கார்ட் ரூம் மீது கதைசொல்லிக்கு இருக்கும் பக்தி அவன் தொழில் மேல் எவ்வளவு காதல் கொண்டவன் என்பதை உணர்த்தும். கூடவே அரசுத்துறையும், உடன் அரசு ஊழியர்களும் தொழில்பக்தியில் இருப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை எழுதியிருப்பது சிறப்பான ஒன்று. நொடித்துப் போன தனது நாடகக் கம்பெனியை மீட்டெடுக்க தனது ஆணவத்தை விட்டொழித்து, சக நடிகைப் பார்க்க சென்று அவளை தங்களுடன் நடிக்க அழைப்பதும் ஒருவிதத்தில் தொழில் பக்தியே. மேலும் நாடகத்துறையில் ரம்யாவுக்கு பிரத்தியோகமான காதல் இருக்கிறது. தூசி, டிராம குயின், வஞ்சி ஆகிய கதைகளில் நாடகம் காட்சிகளாக மட்டுமல்லாது ஒரு கதைப் பார்த்திரம் போலவே வந்து அமைந்து விட்டது பாராட்டிற்குரியது. 

எல்லா மதமும் அடிப்படையில் பேசுவது அன்பை. சக மனிதர்களின் மீதான அன்பு, கருணை. சடங்குகளும் சம்பிரதாயங்களும் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படையில் மதங்கள் போதிக்க விளைவது மனிதநேயத்தை.  மெக்தலின், அழைப்பு, ராஜமுனி, கர்ப்பகிரகம் போன்ற கதை மதவாத கருத்துகளை கேள்வி கேட்பவை. மெக்தலின், அழைப்பு இரண்டும் கிருஸ்துவ மதப் பிண்ணனியில் எழுதப்பட்ட கதைகள். கிருஸ்துவ மதம் முன்னிருத்துவது ஒழுக்கநெறியை. கடவுள் மனிதன் செல்ல வேண்டிய பாதை நெறிபடுத்துவது, சாத்தான் அதனை பிறழ்த்துவதும் என்ற இரண்டு கூறுகளுக்கு இடையே பாவங்களும் பாவ மன்னிப்புகளும் கட்டமைக்கபடுகின்றன. மெக்தலின் கிருஸ்துவின் மீது கொண்டிருந்த அதீத நெருக்கம் கிருஸ்து போதித்த ஒழுக்க நெறிகளை எதிராக இயங்குவதா என்பது ஜான் எழுப்பும் அழுத்தமான கேள்வி. அதற்கு பதில் அவனே தூய அன்பை உணரும் தருணம். அழைப்பு கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவான ரோமன் கத்தோலிகளின் அடிப்படை நம்பிக்கையை கேள்வி கேட்பது. எல்லா பாவங்களையும் பிதாவால் மன்னிக்க முடியுமா என்பதே இந்த கதை எழுப்பும் கேள்வி. இதில் பாவம் என்ன என்பதை கதை சொல்லி வாசகர்களுக்கு உணர்த்தும் தருணம் அபாரமானது. கர்ப்பகிரகம், ராஜ முனி இரண்டும் இந்து மதத்தை பாவிக்கும் கதாப் பாத்திரங்களைக் கொண்டது. இரண்டுமே இந்து மதத்தின் ஆதார நம்பிக்கையான சக்தியும் சிவனும் ஒரே ஒன்றின் சரி பாதி என்பதிலிருந்து சற்றே விலகி நிற்கின்றன. இன நீட்சியை ஒரு பாலின்பம் துய்க தூண்டும் கருவியாக மட்டும் பாவிக்கலாமே என்ற கேள்வியை எழுப்பி, அப்படி நடந்தால் சக்தியானவள் என்ன செய்ய வேண்டுமென்ற நம்பிக்கையூட்டும் பதிலையும் சொல்ல முயற்சி செய்கிறது. ராஜ முனி இந்து மதங்களில் ஊறி இழையாடும் சாதி அடுக்குகளையும், சடங்குகளையும் மத நம்பிக்கைகளையும் பூடகமாக கேள்வி கேட்கிறது. சாதி வேறுபாட்டுக்கு தீர்வு படித்து முன்னேறுவது என்பது கனவோ நனவோ என்று இருவேறு உலகில் இயங்குபவை என்பதாக கதையில் குறியீடாக இணை பிரபஞ்சம் என்ற கருத்துக்கோளை கவனமாக உபயோகித்திருப்பது வியப்பூட்ட கூடியது. மத நம்பிக்கைகளை எதிர் கோணத்தில் அணுக பிரதியோக கவனம் வேண்டும் சிறிதே பிசகினாலும் அது போதனைகளை செய்யும் தத்துவ வியாக்கினம் போல ஆகிவிடும். இந்த கதைகளை அப்படி ஆகாமல் ரம்யா புனைவு உத்திகள் மூலம் கவனமாக எழுதி இருப்பது நுட்பமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

முழுதொகுப்பாக இந்த தொகுப்பை வாசிக்கும் போது ஒவ்வொரு கதையின் கதை வடிவம் வெவ்வேறாக இருப்பதை கவனிக்க முடியும். சில கதைகளை காட்சியை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. தூசி கதையின் ரெக்காட்ர்டு ரூம். அங்கே படிந்திருக்கும் ‘தூசி படலம்’ கதையின் பகுதியாக அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவம் கொள்ளும் காட்சி கண் முன்னே விரிகிறது. அதே போல இரண்டு கதைகளில் அறிவியல் புனைவுக்கு அருகில் கொண்டு வந்திருப்பதும் அதற்கான கருவை யோசிக்கும் போது இன்னும் ஆச்சரியானதாக அது மாறிவிடுகிறது. ஒவ்வொரு கதையிலும் குறிப்பிட்டு சொல்லும்படி ஏதேனும் ஒரு விஷயம் இருப்பது இந்த தொகுப்பில் முக்கியமான ஒன்று. கதைகளில் இடையே சொல்லப்படும் வரிகள் இன்னொரு கதையாக விரிந்துவிடும் அழுத்தம் கொண்ட வரிகளை கதை சொல்லும் உத்தியாக பயன்படுத்தியிருப்பது நீலதாவணி, ட்ராமகுயின், தூசி போன்ற கதைகளில் காண முடியும். இன்னும் சில கதைகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கி படிக்கலாம் என்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது வஞ்சி, கர்ப்பகிரகம், ராஜமுனி போன்ற கதைகள் அவ்வாறானவை. சில கதைகளில் கொஞ்சம் பகுதிகளை அல்லது வரிகளை நீக்கியிருந்தால் இன்னும் அழுத்தமாக மாறியிருக்கும் வாய்ப்புகள் உண்டு. நீலதாவணியில் இறுதி பத்தி இல்லாமலே புரிந்துவிடுகிறது. மேலும் புத்தாயிரத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டை கடந்த பின்னரும் நீலதாவணியின் கதைசொல்லி போன்ற அப்பாவி பெண்கள் இருப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அதில் நிகழும் காலம் தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. இன்னும் சில கதைகளின் விவரணைகளை கூர்மையாக முடியுமென்ற இடங்கள் இருக்கின்றன. இவை எல்லாமே முதல் தொகுப்புக்குறிய சிறு சறுக்கல்களே அதை அந்த அளவுக்கு பெரிதுபடுத்த தேவையில்லை. மற்றபடி அசலான மண்ணின் கதைமாந்தர்களையும் அதன் நிறம் மங்காத சித்திரத்தையும் தீட்டி வந்திருக்கும் நீலதாவணி தமிழ் சிறுகதைகளுக்கு முக்கியமான வரவு.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “நீலதாவணி – நிறம் மாறாத அசல்களின் சித்திரம்”

  1. அன்புள்ள லாவண்யா, உங்கள் கூர்மையான வாசிப்புக்கு மிக்க நன்றி. பல இடங்களில் நான் வாசகர் அடைய உத்தேசித்த இடங்களை தொட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீலத்தாவணி கதைக்கு வந்த முதல் முழுமையான கட்டுரை இதுவே. மிக்க அன்பு. சக எழுத்தாளராக தொடர் உரையாடலில் இருப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.