கும்பமுனி கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி எழுதினால் அவர் சங்கி என உலகம் தூற்றும் அல்லால் பூமாரி பொழியும் என்பதுவும் அறிவார். 1919-ம் ஆண்டில் பிறந்த நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்த கோகிலம் என்பது பாடகியின் முழுப்பெயர். இரிஞ்ஞாலைக்குடா, கோபாலபுரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்தவர். காசநோய் வந்து, 1951-ல் தனது முப்பத்திரண்டாவது வயதில் பூவுலகை நீத்தவர்.
கும்பமுனியிடம் என்.சி. வசந்தகோகிலம் பாடல்கள் இரண்டு கேசட்டுகள் இருந்தன. அதனை சி.டி.களாக மாற்றி வைத்திருந்தார். சில்லறை வேலைகள் இதுபோல் சிலவற்றை அவருக்கு நாஞ்சில்நாடன்தான் செய்து கொடுப்பான். சண்முகப் பிரியா இராகத்தில் அமைந்த பொன்னையா பிள்ளை எழுதிய கீர்த்தனை. பாடலை, கீர்த்தனையை, சாகித்யம் என்றும் சொல்வதுண்டு.
பல்லவி
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ ஐயா! பெற்ற – (தந்தை தாய்…)
அனுபல்லவி
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமையுடனே பெற்றுப் பெருமையுடன் வளர்த்த – (தந்தை தாய்…)
சரணம்
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க – காண்டீபம் எனும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத் திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ஐயா
(பெற்ற தாய் தந்தை இருந்தால்…)
சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்த கும்பமுனியின் சிந்தனையும் இசை பாடிற்று. நிந்தாஸ்துதியில் அல்லது வஞ்சப்புகழ்ச்சியின் அருமையான பாவம். ஆமாம்! கால காலன் கயிலைநாதன், ஆலகாலம் அணிசெய் கண்டன். தாயுமிலி தந்தையிலி தான் தனியன். அவன் பெயரில் ஒரு பிள்ளைத்தமிழ் கூட இல்லை. ஏகன், அநேகன். என்றாலும் அவன் நிலைமை! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கினான். காளத்தி வேடன் செருப்பால் மிதித்தான். நாயன்மார்கள் பித்தா, பிறைசூடி, பேயா என விளித்தனர். ஒருவன் கல்லால் அடித்தான். மற்றொருவன் காண்டீபம் எனும் வில்லால் அடித்தான். கூசாமல் ஒருவன் கைக் கோடரியால் வெட்டினான். பெற்ற தந்தை தாய் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?
சுடலைப் பொடியாடிய கறை மிடற்றனைப் போலத்தான் இன்று சராசரி இந்தியக் குடிமகனும் என்று குறுக்குச் சால்பாய்ந்தது கும்பமுனியின் மனம். பொறுப்பான தாய் தகப்பனைப் போல நாட்டின் தலைவர்களும், சமூகக் காவலர்களும், ஆன்மீக வழிகாட்டிகளும் இருந்தால் ஏழைக் குடிமகனுக்கு இந்த நிலைமை வருமா ஐயா? கொள்ளைப் பணம் சிலர் குவிக்க, போதைப்பொருள் சிலர் விற்க, குற்றமும் கொடுமையும் சிலர் புரிய, பிறவா நெறிப் பெற்றியனைப் பூசிக்கும் பலர் இவர்களுக்கே கூட்டு நிற்க…
“பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் நமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ ஐயா?
இசை கேட்டால் வயிற்றிளைச்சல், மூலக்கடுப்பு, நெஞ்செரிச்சல், புத்தி பேதலிப்பு யாவும் மாறும் அல்லது குறையும் என்று எழுதி இருந்தார்கள்! மாறாக அவை அவற்றை முடுக்கவே செய்கின்றன. அவருக்கு காலையில் கேட்ட பங்கய மாமணி விருது பெற்ற மா மா க் கவிஞனின் (தவறாகப் பொருள் கொளல் ஆகா. மா எனில் பெரிய, மா மா எனில் பெரிய பெரிய) காவிய இதிகாச இலக்கியத் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது. கும்பமுனிக்கு எந்தப் பாடலைக் கேட்டாலும் மனப்பாடம் ஆகிவிடும். எனவே கூகுளைத் தைவரல் செய்யாமல் நினைவில் இருந்தே எடுத்தாள்கிறார்
| அவன் | கண்ணு, என் கண்ணு, என் கண்ணு கால் மேல கால் போட்டுக் கிடக்கலாமா? கண்ணு, என் கண்ணு, என் கண்ணு… |
| அவள் | மார் மேலேயும் கை போட்டுப் படுக்கலாமே பொன்னு, என் பொன்னு, என் பொன்னு… |
| அவன் | பிள்ளை உண்டானா என்ன செய்ய கண்ணு, என் கண்ணு, என் கண்ணு… |
| அவள் | பத்தாயிரம் பணம் உண்டானா கலச்சிரலாம் பொன்னு, என் பொன்னு, என் பொன்னு… |
நினைத்துக் கொண்டார் கும்பமுனி – எப்படி ஐயா மூலப் பவுந்தரம் காணாமற் போகும்? உள்மூலம் யாவும் வெளிமூலமாகத்தானே புறம் பிதுங்கும்!
அவரே தமக்குள் சொல்லிக் கொண்டார். நஞ்சும் அமுதும் கண்முன்னால் கைக்கெட்டும் இடத்தில் கிடக்கிறது! தேர்ந்தெடுத்து உண்பது நம் பொறுப்பல்லவா? கட்டிப் பீ ஆனாலும் காடிப் பீ ஆனாலும் அது பீ எனத் தெரியாதா?
கம்ப இராமாயணத்தில் யுத்த காண்டத்தில், கும்பகர்ணன் வதைப் படலத்தில், கும்பகர்ணன் தன் அண்ணனாகிய இராவணனிடம் கேட்டான், உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டு, ‘நூறு நூறு குடம் கள்ளும் ஆறு நூறு சகடத்து அடிசிலும் நுங்கி’ அவன் முன் நிறுத்தப்பட்டபோது –
“திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே”
என. அவனே கேட்பான் தொடர்ந்து, “அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ?” என்று.
கும்பமுனி எண்ணலானார், அமுதா விடமா எனும் தேர்வு நமதுதானே! பொறுக்கும் சூட்டில் கட்டன் சாயா கிளாசை ஏந்தி வந்து எதிர் நின்றார் தவசிப்பிள்ளை. அவர் முகத்தில் ஒரு கரிசனக் கடுப்பு பிரகாசித்தது.
“சொன்னாக் கேக்க மாட்டேங்கேரு பாட்டா? என்ன எழவுக்காக்கும் குத்தி இருந்து இந்த பேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் எல்லாவற்றையும் விடாம நோண்டுகேரு? ஒரு நாளைக்கு ஆறேழு மணிக்கூர் இதே வேலையா? அந்த நேரத்திலே என்னலாம் எழுதலாம், வாசிக்கலாம்… போற காலம் வந்தாச்சு… பின்னே மூலக்கடுப்பு, உள்மூலம், வெளிமூலம், கந்தமூலம், கனகமூலம் வராம என்ன செய்யும்? கொஞ்சம் தேங்கா எண்ணெயை விரல்லே தொட்டு அங்க சளம்பத் தேயும்…” என்று உபதேசித்தார்.
நியாயம் இல்லாமல் இல்லை தவசிப்பிள்ளை கூற்றிலும். போனவாரம் பயன்பாட்டு அறிக்கை வந்தபோது, தவசிப்பிள்ளை சொன்ன அனைத்து ஐட்டங்களும் காட்டி, பயன்பாட்டு நேரம் 56 மணி, 24 மணித்துளி, 11 நொடி என்றது அறிக்கை. தினசரி கிட்டத்தட்ட – ஏறத்தாழ – உத்தேசமாக – தோராயமாக – சுமாராக எட்டுமணி நேரம் என்பது புல்லெனப் புரட்டிப் போட்டுப் போகும் சங்கதி அல்ல. ஒருவேளை மூலக்கடுப்பு தேசீய அளவில் வளர்ச்சி பெற்றதற்கு அதுவும் ஓர் காரணமாகலாம். கேன்சர் என்பது மேல்தட்டு உயர்சாதி ஆதிக்க சமூக நோயும், மூலக்கடுப்பு என்பது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நோயுமா?
‘நம்ம மருந்து வேலை செய்யி போலிருக்கு!’ என்று உள்நகை பூத்தார் தவசிப்பிள்ளை.
“கெட்ட வார்த்தை சொல்லகராதி தொகுக்கப் போறதா சொன்னேருல்லா… அதைத் தொடங்குமே” என்றார் ஊக்கம் பெற்று. என்றாலும் அவர் மனம் சலித்துக் கொண்டது, ‘எலும்பைக் கடிப்பானேன், சொத்தப்பல்லு போவானேன்?’ என்று.
தவசிப்பிள்ளை சொல்வதிலும் காரியம் உண்டென்று கருதி கும்பமுனி சிந்தனைப் பெருநெருப்பில் தகிப்புண்டார்.
‘ஆமா… என்ன எழவு சமாச்சாரம்தான் போடுகான் நித்தமும் நியமமா! நம்ம சோலியைத் தொடங்க வேண்டியதுதான். கெட்ட வார்த்தை அகராதிக்குண்ணு சொற்சேகரம் தொடங்குவோம்… மொதல்ல ‘அ’விலே இருந்து ஆரம்பிப்போம்’ என்று துணிந்தார். சேகரித்து அடுக்கி கிளிப் போட்டு வைத்திருந்த ஒரு பக்கம் எழுதாத தாள் கட்டு எடுத்து, தாளின் நெற்றியில் ‘உ’ என எழுதினார். சும்மாவா ‘உலகெலாம்’ என்றும் ‘உலகம்’ என்றும் ‘உலகு’ என்றும் ‘உலகவாம்’ என்று அடியெடுத்துத் தொடங்கினர் முன்னோடிகள்?

தவசிப்பிள்ளையின் அதட்டலுக்கு அங்கீகாரம் கொடுத்து சில சொற்களை எழுதலாம் என்று தோன்றியது. கூடவே பழைய நினைப்பு ஒன்றும். 1981-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரிசல் இலக்கிய முன்னத்தி ஏர் கி. ராஜநாராயணனை பம்பாயில் வாழ்ந்திருந்த நாஞ்சில் நாடன் பார்க்கப் போனானாம். அப்போது கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாகி வெளியான காலகட்டம். அதே போன்றதொரு வேலையை அவனையும் செய்யச் சொல்லக் கருதி, சின்ன பாக்கெட் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து நாஞ்சில் நாட்டுச் சொல்லகராதி தொகுக்க முதற்சொல்லை எழுதச் சொன்னாராம் கி.ரா. அவனும் பெரிய மத்தவன் போல வாங்கி, வணங்கி முதற்சொல்லை ‘அவியல்’ என்று எழுதினானாம். நாப்பத்து நாலு வருசமாச்சு… செறுக்கி விள்ளை இன்னும் அவியலத் தாண்டல்லே… என்றெண்ணிச் சிரித்தார் கும்பமுனி.
“ஏன்… கொஞ்சம் வேலையை ஒம்ம சிஷ்யப்பிள்ளைகிட்டே ஒப்படைக்கலாம்ணு பாக்கேரா? வௌங்கீரும்…” என்று எக்ஸ்பர்ட் கமெண்ட் கொடுத்தார் தவசியார்.
அவரைப் பொருட்படுத்தாமல் முதற்சொல்லை எழுதினார் கும்பமுனி.
அம்மணங்குண்டி.
அடுத்துத் தொடர்ந்தார் –
அறுதக் கூதி
அண்டி களைஞ்சான்
அவுசாரி முண்டை
கவனித்துக் கொண்டு நின்ற தவசிப்பிள்ளை திருவதனத்தில் மென்னகை அரும்பிற்று. அந்த இளநகையை அவதானித்த கும்பமுனி, ‘எருது ஈன்றது எனும் முனம் என்ன கன்று என வினவினான்’ எனும் பழமொழியை நினைவுகூர்ந்தார். சமாளிப்பதுபோல் தவசிப்பிள்ளை கேட்டார் –
“இதுமாதிரி பொஸ்தகம் போடதுக்கு ஐம்பதினாயிரம் நிதி தாறாங்களாம் பாட்டா” என்றார்.
“திருப்பித் தரவேண்டமாவேய்?” என முனிந்தார் கும்பமுனி.
“தராண்டாம்… ஆனா பரிந்துரை வாங்கதுக்குக் கொஞ்சம் செலவு உண்டும்”
“பரிந்துரை யார் தருவா?”
“அது வந்து செம்புலப்பெயல், பசுந்தாழைமலர், கொடுக்காப்புளி போல உள்ள விருது ஏற்கனவே வாங்கீருக்கப் பட்டவங்க…”
“அதாவது கள்ள மாப்பிள்ளை பிடிச்சு வரப்பட்ட காசு பிள்ளை அழிக்கதுக்கு ஆச்சு!”
“வேறயும் உண்டு கேளும்… பொஸ்தகம் வந்தபிறகு ஆறு காப்பி அனுப்பிக் குடுக்கணும். தன்னைப்போல நூலகங்களுக்கு மூணாயிரம் காப்பி வாங்கிக்கிடுவாங்களாம்” என்று உசுப்பேற்றினார் கண்ணுபிள்ளை.
“இந்த எழவை எல்லாம் எங்கிட்ட ஏம்வே கொண்டாந்து அவுக்கேரு?” எனக் கடிந்தார் கும்பமுனி.
“வரவர இப்பிடியே பேசீட்டே போயி ஏதாம் கிடங்கிலே சாடி மறியப் போறேரு பாத்துக்கிடும்” என்றும் பொருமினார்.
சற்றுத் தணிந்த குரலில் பென்டகன் இரகசியம் அல்லது தொல்குடி மக்களின் பாவனைக்காக மரக்கலத்தில் வந்திறங்கிய போதைப்பொருள் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் உளவுச் செய்திபோல் – மெதுவாகச் சொன்னார் தவசிப்பிள்ளை.
“இன்னும் ஒரு காரியம் உண்டும் பாத்துக்கிடும்… நீரு கூட்டத்திலே வச்சு எனக்க அரைமுண்டை உரிய மாட்டேருண்ணா சொல்லுகேன்… நம்ம மேலே இனத்துரோக வழக்கு பாயதுக்கு நீரு வாமடை வெட்டீரப்பிடாது…”
“சும்மா கெடந்து பொலம்பாம நீரு காரியத்துக்கு வாரும்வே!” என்று காண்டானார் கும்பமுனி.
“ஒமக்கு தலைத்தட்டுலே ஆள்பிடி உண்டும்ணு வச்சுக்கிடும்… மொதல்லே கெட்ட வார்த்தைச் சொல்லகராதி… ஐம்பதாயிரம் நிதி உதவி… நூலகங்களுக்கு மூணாயிரம் பிரதி. முறுக்கிப் பிடிச்சேருண்ணா எதாம் பல்கலையிலே பாடமாட்டு வைக்கலாம். ஒரு வருசம் செண்ணு அதே பொஸ்தகத்துக்கு தலைப்பும் அட்டையும் மாத்தணும்… தீச்சொல் நிகண்டுண்ணு புதுப்பேரு வச்சுக்கிடலாம்… பிறகு அதுக்கும் ஐம்பதினாயிரம் வெளியீட்டு நிதி… மூவாயிரம் படி…”
“வே… வே… வே…” என்று பதறினார் கும்பமுனி. வெளிப்படையான பதற்றத்துடனேயே பேசினார்.
“உமக்கு மொளச்ச மயிரு எல்லாமே கள்ள மயிருவே! சும்மாவா சொன்னான்… குடிக்கிற தண்ணீல குறியை விட்டு ஆழம் பாக்கக் கூடியவர்ணு… எப்பிடி எல்லாம் யோசிக்கேரு? என்னைக் கொண்ணு குழியில இறக்கி, எரிச்சு சாம்பலாக்கி, எலும்புக்கு எண்ணெயும் பாலும் களப சந்தனமும் தேனும் கருக்கு வெள்ளமும் பழையாற்றுத் தண்ணீரும் விட்டு அபிசேகம் பண்ணாம அடங்க மாட்டேரு என்னா? உம்மால என் பேரே கெட்டுக் கெடக்கு… ஒரு கோசலை ராமரத்னா விருது கெடைக்கமாதிரி இருக்கு… மேற்படி ஆளுக இல்லேண்ணாலும் தருவான் போல… அதையும் கெடுத்துக் குட்டிச்சுவரு ஆக்கிக் குளமும் தோண்டீடுவேரு போலிருக்கு…”
“ரொம்பவும் குலை நடுங்கப்பட்ட நாடகம் போடாதீரும் பாட்டா… இதெல்லாம் நீரு அறியாத சங்கதிகளா? உமக்கு சம்சியம் உண்டும்ணா உமக்கு மத்தவன் நாஞ்சிலான் கிட்டே கேளும்… பூச்சை கண்ணை மூடிச்சுண்ணா பூலோகம் இருண்டு போயிருமா?”
“பேச்சை மாத்தும்வே கண்ணுவிள்ளே… நம்ம சோலியை மட்டும் பாப்போம்… இதுவரை நீரு பேசினது எதையும் நீரும் பேசல்லே, நானும் கேக்கல்லே… உலகத்தைத் திருத்துகது நம்ம வேலையா ஓய்… திருவள்ளுவர் சொல்லாததையா நாம சொல்லீரப் போறோம்… நுங்கு கள்ளத்தனமா வெட்டிக் குடிச்சவன் போயிருவான், கூந்தல் வழிச்சு நக்குனவன் அகப்பட்டுக்கிடுவான் பாத்துக்கிடும்…”
“சரி பாட்டா… நீரு எதுக்குப் பம்முகேருண்ணு நமக்குத் தெரியும்!”
சினத்தில் முகம் சிவந்து, இல்லாத வீர மறவ மீசையை மனத்தால் திருகி, கும்பமுனி கொதித்துக் கேட்டார்.
“என்னவே? என்னவே? என்னவே? தொறந்து சொல்லும்!”
“சொன்னா சினக்கப்பிடாது…”
“இதுக்கு மேல என்னா… சும்மா சொல்லும்…”
“நீரு செத்தபிறகு அசம்பு ரோட்டுக்கு ஒம்ம பேரை வைப்பானுகோண்ணு உமக்கு ஒரு எண்ணம் இருக்கு… கண்டதையும் எழுதி அதை என்னத்துக்குக் கெடுக்கணும்ணு பாக்கேரு…”
“செத்தபிறகு சிவலோகமோ, வைகுந்தமோ, பரமண்டலமோ, பாழ் நரகமோ யாரு கண்டாவே? திருமூலர் சொன்னாருல்லா!
‘பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்’
அப்படீண்ணு…”
“சரி சரி… இப்பம் ஒரு கட்டன் எடுக்கச் சொல்லுவீரே!” என இடக்குச் செய்தார் தவசிப்பிள்ளை.
கும்பமுனி அகரவரிசையில் வரக்கூடிய அடுத்த கெட்ட வார்த்தையை யோசிக்கலானார். ஒன்றும் முளைத்தெழவில்லை. சரி, இசை கேட்போம் என தேடித் தடவி ஆல்பத்தினுட் புகுந்தார். பாவநாசம் சிவன் கீர்த்தனை. இராகம் மாயா மாளவ கௌளை. பாடியவர் சஞ்சய் சுப்பிரமணியம்.
‘பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன்
என்னைப் புவிதனில் ஏன் படைத்தாய் – சம்போ!
நல்லோரைக் கனவிலும் நணுக மாட்டேன்
நல்லது சொன்னாலும் நான் கேட்கமாட்டேன் (பொல்லா…)
உன் நாமம் என் நாவாலும் சொல்ல மாட்டேன்
உள்ளிடும் காமக் குரோதம் தள்ள மாட்டேன்
என் நாளும் மூவாசையை வெல்ல மாட்டேன்
என் ஐயன் உன் ஆலயத்துள் செல்ல மாட்டேன் (பொல்லா…)
கண்மூடி மௌனித்துக் கேட்டுக் கொண்டிருந்த கும்பமுனியின் சிந்தனைப் படகு சஞ்சலப் புயலில் தத்தளித்தது. மெல்ல முனகிக் கொண்டார், “நம்ம வாழ்க்கையே மாயா மாளவ கௌளை ராகம் போல ஓ என்று அலறிப் போயிற்று’’ என்று.
கேட்டுக் கொண்டே கட்டன் எடுத்து வந்த தவசிப்பிள்ளை சொன்னார், “விளக்கில்லாத வீட்டிலேதான் பேய் குடியிருக்கும்”. கும்பமுனியின் மனம் – பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன்’ என்று புலம்பியது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
