
இலட்சிய இந்து ஓட்டல்
நிலையத்தை ஒட்டி , மிகத் தரமான ஓட்டல் ஒன்றை அமைப்பது தான். சமையல் செய்வதில் தேர்ந்தவனும் உழைக்கத் தயங்காதவனும் மிக நேர்மையாளனும் சாதுவான குணமும் உடையவனாகிய ஹஜாரி அந்த இலக்கை எப்படி அடைகிறான் என்பது தான் நாவல் பேசும் கதை.
சீரான சாலையில் செல்லும் அலுங்கல் குலுங்கல் இல்லாத பேருந்தில் ஜன்னலோரப் பயணம் போன்றது விபூதி பூஷனின் எழுத்து நடை. சாதாரணர்களின் வாழ்விலும் சுவாரஸ்யமான தருணங்களும் அந்தந் தருணங்களிலும் ஒளிரும் மானுடமும் தான் அவரது எழுத்து.
வாசிக்கும் நமக்கே கூட கோபம் வந்துவிடும் , ஆனால் அசாத்திய பொறுமை ஹஜாரிக்கு. தன் இலட்சியத்துக்காக எந்த வகையிலும் தன் இயல்பிலிருந்து மாறிவிடாத நல்லவன். இது போன்றவர்களைத் தன் வாழ்வில் பல முறை எதிர்கொண்டதாக விபூதிபூஷன் குறிப்பிட்டிருப்பதாக , இதன் முன்னுரையில் க்ஷிதிஷ் ராய் சுட்டிக்காட்டுகிறார். சிறப்பான முன்னுரையும் கூட.
குஸுமா, அஸதி, யாதவர் வீட்டு மருமகள் மூன்று பெண்களின் , கைம்மாறு கருதா உதவியால் ஹஜாரியின் கனவு நனவாகிறது. அதையும் தாண்டியும் கூட ஹஜாரி வளர்ந்து விடுகிறான்.
எளிய, இனிய நாவல்.
இதில், சாதி முக்கிய இடம் பெறுகிறது. ஏறக்குறைய எல்லாப் பாத்திரங்களும் சாதியைத் தொட்டு விட்டே பேசுகிறார்கள். சாதிதான் கதையை நகர்த்துகிறது.
தன்னைக் குலினர் சாதி என ஹஜாரி அறிமுகப்படுத்திக் கொள்கிறான். குலினர் எனத் தேடிப் பார்த்தால் பங்களா பீடியாவில் (Bangladesh) சுவராஸ்யமான தகவல்கள் வருகின்றன.
1940 களின் நடுவில் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இரயில் நிலையங்களில் இந்து பானி, முஸ்லீம் பானி என்று (தண்ணீர்) என்று தனித்தனியாக வைக்கக் கூடாது என்பதோடு , இந்த இரண்டையும் ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்த இருக்கும் தடையைக் கண்டித்தும் அந்த அறிக்கை பேசும். இது தான் அக்காலத்திய நிலை.
அந்தச் சமூகப் பரப்பை இந்த நாவல் பேசுகிறது என்பது தான், எளிய கதையை மீறி இது தரும் சுவாரஸ்யம்.
த.நா. சேனாபதியின் மொழிபெயர்ப்பு வருடிச் செல்லும் தென்றல் காற்று.
வாசிக்க வேண்டிய நாவல்.
National Book Trust வெளியீடு
தலைப்பு / ஆக்கம்: இலட்சிய இந்து ஓட்டல்
எழுத்தாளர் / மொழியாக்கம்: விபூதி பூஷண் பந்தோபாத்யாய (ஆசிரியர்), த.நா.சேனாபதி (தமிழில்)
பகுப்பு: Novel | நாவல் , 2024 New Releases
விலை: ₹340
பின்னட்டைக் குறிப்பு:
விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுதிய நாற்பது நூல்களில் பிரபலமாக விளங்கும் சிலவற்றில் ஒன்று, ‘இலட்சிய இந்து ஓட்டல்’. வங்க இலக்கியத்தில் இதற்கோர் சிறப்பிடம் உண்டு. என்றாவது ஒருநாள் சொந்த ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஒரு கிராமவாசியின் கனவைச் சுற்றி வேயப்பட்டுள்ள இந்நாவலில் எளிய கம்பீரமும், கபடின்மையும் இழைந்து உள்ளன. மனித வாழ்வில் அவ்வப்போது தென்படுகிற மேன்மையின் சாயல் இதில் இயல்பாகப் படிந்திருக்கிறது.
சத்யஜித் ரேயின் உலகப்புகழ் பெற்ற திரைக்காவியமாகிய, ‘பதேர் பாஞ்சாலி’ நாவலின் ஆசிரியரான விபூதிபூஷண் பந்தோபாத்யாய, வங்க இலக்கியத்துக்கு உலக அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ள வெகுசிலரில் ஒருவர். எளிய முறையில் அரிய அனுபவங்களை உருவாக்குவதில் இவர் வல்லவர்.
த.நா.சேனாபதி, தமிழகத்தின் தண்டலம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், வங்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். தானே பல நூல்களை எழுதியதுடன்,ரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், விபூதிபூஷண் உள்ளிட்ட ஏராளமான வங்க எழுத்தாளர்களின் நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.
அவன் காட்டை வென்றான்
ஒரு கிழவன் காணாமல் போய்விட்ட தன் நிறைமாத பன்றியைத் தேடிப் போகிறான்.அது காட்டுக்குள் ஒரு புதரில் பத்து குட்டிகறளை ஈன்றிருப்பதை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிடுகிறான். குட்டிகளும் தாய்ப் பன்றியும் பிறகென்ன ஆகின்றன என்பது தான் கதை.
கிழவன் தான் ஒரே கதாபாத்திரம். அவனுக்கும் பெயரில்லை. அவன், தன் மனதுக்குகந்த தாய்ப் பன்றியைத் தேடிப் போகும் ஒரே இரவு தான் கதை நிகழும் காலம். அவன் குடிசையிலிருந்து காடு, காடு, காட்டிலிருந்து குடிசை இவ்வளவே கதை நிகழும் தளம்.
எனினும் சுவாரஸ்யம் குறையாத குறுநாவல். கேசவரெட்டி தொழில்முறை மருத்துவர். எழுத்தால் புகழ் பெற்றிருக்கிறார். காடு , காட்டு விலங்கினங்கள், பன்றி ஆகியவை குறித்த நுட்பமான அவதானிப்புகளை பதிவு செய்துள்ளார்.
உவமைகள் என்றால் அவருக்குக் கருப்பட்டி போல. நாவல் முழுக்க ஏராளமான உவமைகள்.
மகாபாரத்த்தை ஒட்டிய உவமைகளும் நிறைய. பீமன் தான் இந்தக் கிழவன் கதாபாத்திரத்துக்கான ஈர்ப்பாகவும் இருந்திருக்கலாம். கிழவன் எந்த நிலையிலும் தளர்ச்சிக்கோ அச்சத்திற்கோ இடம் கொடாதவன். அவனது விடா முயற்சி தான் கதையே.
இறுதியில் அவன் தாய்ப்பன்றியையோ குட்டிகளையோ மீட்டு விடவில்லை. தாய்ப் பன்றியை, நரிகளிடமிருந்து குட்டிகளைக் காப்பாற்ற நடந்த போராட்டத்தில் அவனே தவறுதலாகத் தன் ஈட்டியைத் தாய்ப்பன்றியின் மீது பாய்ச்ச நேர்கிறது. குட்டிகள் குடிசை வந்து சேரும் போதே பருந்துகளுக்கு இரையாகின்றன. அவன் முயற்சித்தான்; போரிட்டான் என்பதே வெற்றி. காடு, ஒரு நொடி நீரில் விலகிய பாசி போலச் சிறு சலனத்தோடு தன் அந்தகாரத்தின் மோனத்தில் ஆழ்ந்து விடுகிறது.
மனிதனின் நிராசைகள், போராட்டங்கள், வருத்தங்கள் குறித்தெல்லாம் காட்டுக்கோ காலத்துக்கோ உலகுக்கோ என்ன கவலை. ஆனால் மனிதனுக்குத் தான் எத்தனைத் த்த்தளிப்பு!
ஏ.ஜி. எத்திராஜூலு அவர்களின் மொழிபெயர்ப்பு. அருமையாக இருக்கிறது. காட்டுக்குள் செல்பவனுக்குத் தானாய் வழி புலப்படுவது போல ,நாவல் நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது.
தாய்பன்றியைப் பற்றிய குறிப்புகள் வெகு சுவாரஸ்யமானவை. முன்னர் ஜெயமோகன் அவர்கள் எழுத்தில் இது போன்ற ஒன்றை வாசித்த நினைவு.
நேஷனல் புக் டிரஸ்டு வெளியீடு.
அசல் தலைப்பு – அவன் காட்டை வென்றான் | He Conquered the Jungle
எழுத்தாளர் & மொழியாக்கம்: கேசவரெட்டி (ஆசிரியர்), ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்)
பகுப்பு: Translation | மொழிபெயர்ப்பு , Classics | கிளாசிக்ஸ் , Ecology | சூழலியல்
விலை: ₹105
பக்கங்கள்: 78பின்னட்டை: தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம்.
குறுந்தொகையின் கவினுறு அழகு
குருதிப் பூ. அம்சிறைத் தும்பி. இமை தீய்ப்பன்ன கண்ணீர். நள்ளென்றன்றே யாம்ம்
வேய் பயில் அழுவம். பெய்யாப் பூ. விழவு முதலாட்டி. எறும்பி அளையிற் குறும்பல் சுனை.
அமிழ்து பொதி செந்நா. சின்மொழி அரிவை. குவிமுகிழ் எருக்கம். சிறுகோட்டுப் பெரும் பழம்.
தேம்ஊர் ஒள்நுதல். வேனில் அம்சினை. மனவுகோப்பன்ன நன்னெடும் கூந்தல்.
கருங்கால் வேம்பின் ஓண்பூ. தினைத் தாளன்ன சிறுபசும்கால். என் மாமைக் கவின்.
அலமரல்அசை வளி. மகவுடை மந்தி போல அகனுறத தழீஇ. செம்புலப் பெயல்நீர்.
சாறு கொள் ஊர். அணிலாடு முன்றில். புன்கண் மாலை. நல்லை அல்லை நெடுவெண்ணிலவே.
அணிற்பல்லன்ன கொங்கு முதிர் முண்டகம். ஐயவீ அன்ன சிறுவீ ஞாழல். தூமணற் சேர்ப்பன்.
எக்கர். மாக்கழி மணிப்பூ. நெஞ்சமர்ந்தோள். ஞாயிறு காயும வெவ்வறை மருங்கு.
தச்சன் செய்த சிறு மா வையம். பசுவீ முல்லை.ஐது தொடை மாண்ட கோதை. வம்ப மாரி.
வேப்ப ஒண்பழம். பூழ்க் காலன்ன செங்கால் உழுந்து. அரும்பனி அச்சிரம். காமர் மந்தி.
பெருமழைக் கண். விசும்பு தோய் பசுங்கழைக் குன்று. பொன்மலி பாடலி. காந்தள் வேலி .
தண்வரல் வாடை. நெடுவெள்ளருவி. அம்குடிச் சீறூர். மழைதவழ் பொதி. துள்ளு நடைச் சேவல்.
தேம்பொதி கொண்ட தீங்கழைக் கரும்பு. சேயரி மழைக் கண். ஒலி வெள்ளருவி.
கறிவளர் அடுக்கம். பூநாறு பலவுகனி. அரிபவர்ப் பிரம்பு. ஓவாதீயும் மாரி. பெருந்தண் மாரி.
அனை பெரு காம்ம். பணைப் பெருந்தோள். வான்தோய்வற்றே காம்ம். துயர்கூர் வாடை.
நீரோரன்ன சாயல். காந்தள் வேலிச் சிறுகுடி. தண் சிதர். பொன் போல் சிறு தினை.
நீர்மலி கண். மழை விளையாடும் குன்று. முடக்கால் இறவு. பீலி ஒள் பொறி கருவிளை
நுண் மணல் அறல். நார் இல் மாலை. இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல்.
நிலவு குவித்தன்ன வெண்மணல். பசு வெண் திங்கள். காமர் வனப்பு. சாஅய் நோக்கு.
கதழ் வீழ் அருவி. மயிலடி இலைய மாக்குரல் நொச்சி. மணி மருள் பூ.
கடப்பாட்டாளன் உடை பொருள் போல. நெட்டிரா. மயிரேர்பொழுகிய அங்கவின் மாமை
நறும் புகை நெகிழி. பாம்பின் உரி நிமிர்ந்தன்ன உருப்பவிர் அமையம். வாள் போல் வைகறை
நெருப்பின்ன்ன செந்தலை அன்றில். பெருந்தண் வாடை. மாரி யானை. நள்ளென் கங்குல்
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழுமுகை. பொன்னேர் ஆவிரை. நொப்பறை வாவல்.
தொழுது காண் பிறை. கொன்றையம் பசு வீ. தண்கார் வியன்புனம். மின்னின் தூவி யிருங்குயில்
கட்கின் புதுமலர். தேங்கமழ் திருநுதல். அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்.
விருந்து வரக் கரைந்த காக்கை. வேனில் ஓர் இணர். இன் துயில் முனிநர். பிறங்கு குரல் இறடி.
படருப் பைபயப் பெயரும். பாசிலை வாடா வள்ளியங் காடு. பாடமை சேக்கை. ஐதே காம்ம்.
விடர் முகை அடுக்கம். விறல்கெழு சூலி. வெருகு சிரித்தன்ன பசுவீ.பழமழைக் கலித்த புதுப்புன வரகு.
முல்லையும் பூத்தன. சூடியவெல்லாம் சிறுபசு முகையே. மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை.
பேரூர் கொண்ட ஆர்கலி விழவு. அன்னை ஓம்பிய ஆய்நலம். கவலை யாத்த அவல நீளிடை.
பூவொடு புரையும் கண். தாழை வெண்பூக் குருகென மலரும். கான நண்ணிய சிறுகுடி. நெஞ்சிற் கணியர்.
மணமகிழ் யியற்கை. வயச் சுறா வழங்கு நீரத்தம். ஏதிலாளர் சுடலை போல. கவலை கெண்டிய அகல்வாய்ச்
சிறுகுழி. கொன்றை ஒள்வீ. சுடர் செல் வானம். குடுமிக் கோழி. பாம்பின் தூங்குதோல் கடுக்கும் தூவெள்ளருவி. நெல்லி மரையின் ஆரும் முன்றில். புல்வேய் குரம்பை. குன்றத்தன்ன குவ வு மணலடைகரை.
கோட்புலி வழங்கும் சோலை. விடர்முகைச் சிலம்புடன் கமழும். நறுந்தாதூதும் குறுஞ்சிறைத் தும்பி.
பாம்புமிழ் மணி. முந்தூழ் வேலி. அவரைக் கிளிவாபொப்பின் ஒளிவிடு பன்மலர். வெருக்குப் பல்லுருவின் முல்லை. மணிநெடுங் குன்று. மானடியன்ன கவட்டிலை அடும்பு. புள்ளுமிழ் பெருங்கடல். நள்ளென் யாம்ம்.
ஓரி முருங்கப் பீலி சாய. பெருங் கடற்றிரையது சிறுவெண் காக்கை. பின்னுவிடு கதுப்பு. மின்னிழை மகளிர்.
வேங்கை வீயா மென்சினை வீயுக. நரைமுக வூகம். படுமழை பொழிந்த சாரல். கால மாரி. கடவுள் கற்பின்.
ஒலிகழை நிவந்த ஓங்கு மலர்ச் சாரல். புலி புகாவுறுத்த புலவுநாறு கல்லளை. இலையில் அம்சினை.
முலையேர் மென்முகை யவிழ்ந்த கோங்கு. மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை. மானேறு உகளும் கானம்.
மழை சேர்ந்தெழுதரு மாரிக்குன்று. பல்லிதழ் மழைக்கண் மாஅயோய். மழைவிளையாடு நாடன்.
செய்வினை முடித்த செம்மல் உள்ளம். உப்பு விளை கழனி். புறவு பறத்தன்ன புன்கால்உகாய்.முல்லை ஊர்ந்த கல்உயர். வெண் கூதாளத்து அம்தூம்பு புதுமலர். அறல் போல் கூந்தல். பேரமர் மழைக்கண் கொடிச்சி.
பசும்புளி வேட்கை கடுஞ்சூழ் மகளிர். பெரு நீரக் கல்பொரு சிறுநுரை. ஓரான் வல்சி சீர்இல் வாழ்க்கை.
புள்ளுமிழ் கானல். முதுநீர்ப் புணரி. இணரவழில் புன்னை யெக்கர் நீழல். பகை தரு நட்பு. குப்பைக் கோழித் தனிப்போர் போல. நம்மே போலும் ம்ம்மர்த்தாகி. இரண்டு அறி கள்வி. அமரா முகத்தள். பூக்கமழ் பொதும்பு.
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்ப. கள்வனும் கடவனும் புணைவனுந் தானே. நிலவு நிற வெண்மணல்.
முல்லைப் பசுமுகைத் தாது நாறு நறுநுதல். கவைமக நஞ்சுண்டாங்கு. பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ. பல்வீ பட்ட பசுநனைக் குரவம். பெருநீர் வேலியெஞ் சிறுநல்லூர். பனிகூர் மாலை. பசு வெண்ணிலவு.
பிடிக்கையன்ன பெருங்குரலேனல். அரிற் பவர் பிரம்பு. கோடை தூக்கும் கானம். ஆம்பல் அணிநிறக் கொழுமுகை. மைபடு சிலம்பு. முடங்கல் இறைய தூங்கணங்குரீஇ. தொண்டகச் சிறுபறை.
சூருடை அடுக்கத்து ஆரம். தாமரை உள்ளகத்தன்ன சிறுவெம்மையளே. ஈங்கைய வண்ணத் துய்மலர்.
வெண்குருகு நரலும். தண்கமழ் கானல். பூமலி பொதும்பர். தீயுறு தளிரினடுங்கி. நெடும்பல் கூந்தல்
குறுந்தொடி மகளிர். கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை.
அணிச்சிறைத் தும்பி. துடவை அம் சிறுதினை. பிரசம் தூங்கும் மலை. நறவுமலி பாக்கம்.
அரவுநுங்கு மதி. நனை முதிர் ஞாழல் சினை மருள் திரள் வீ. ஊருண் கேணி.
மொத்தம் ஏறக்குறைய இருநூற்றுப் பதினாறு சொற்றொடர்கள். வார்த்தைகள்.
குறுந்தொகை எப்போதுமே மனதை ஈர்ப்பதாகவே இருந்து வருகிறது. காரணம் அளவில் சிறியது என்பதும் அந்தச் சிறிய அளவிலேயே அழகானதொரு உணர்வை,அதனினும் அழகான உவமையோடு அதனினும் அழகான சொற்களைச் சேர்த்து ,அதன் பாடல்கள் உணர்த்தும் திறனாய் இருக்கலாம். அதன் ஒரு சொற்றொடர், மனதில் அலையாய்க்
கற்பனையைக் காட்சியில் விரிய வைக்கும். ஒவ்வொன்றாய்ச் சுவைத்து வாசித்து மகிழும் போது, அவற்றைத் தொகுத்து எழுதி வைத்துக் கொண்டால், ஒரு அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்து ரசிக்கும் உணர்வு கிட்டும்
என்பதற்காகவே, எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து மகிழ்வேன். அதைப் பிறரும் வாசித்து மகிழ்வதற்காக பகிர்ந்துள்ளேன்.
உவமைகள்
அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இடையிடையே தட்டுப்படும் உவமைகளைப் புன்சிரிப்பில்லாமல் கடந்து சென்று விட முடியாது. அவர் அவற்றை எங்கிருந்து தருவிக்கிறார் என்ற வியப்பும் கூடவே எழும்.அவை,புவிய்யல் சார்ந்தவையாகவே,இயற்கையியல் சார்ந்தவையாக,உயிரினங்களின் பழக்கங்களைக் கூறுவனவாக வித்யாசமான பாணியில் அமைந்திருப்பதும் கூட இந்த ஈர்ப்புக்குக் காரணம். அவரது கதைகளில் அடிக்கோடிட்டு வைத்து வாசித்து மகிழ்ந்தவற்றை ,ஒரு சில உவமைகளைத் தொகுத்து வைத்துக் கொள்வது மீண்டும் மீண்டும் புன்னகைக்க ஏதுவாகும். ஒரு சில:
1.ரேஸ் குதிரை கடைசி மூச்சில் தலையை நீட்டுவது போல
2.நின்ற இடத்திலேயே குதிரை,குளம்பைத் தூக்கித் தூக்கி அடிப்பது போல
3.பழைய பாடல் மெட்டை மறந்தது போல
4.ஒரு போர்க்கப்பல் அகன்றது போல
5.கார்க் கண்ணாடி தண்ணீர் மட்டம் உயர்வது போல உயர்ந்து மூடியது.
6.எலி சுவர் ஓரமாக ஓடுவது போல
7.நான்காம் வகுப்பு மாணவனிடம் எட்டாம் வகுப்புக் கணக்குச் செய்யச் சொன்னது போல
8.வாய்க்குள் சிறிய கூழாங்கல்லை வைத்துக் கொண்டு பேசுவது போல
9.கடந்த உறை ஒட்டிய பின் தான் நினைவுக்கு வருவது போல
10.சங்கிலியைக் கதவில் கொழுவியபடி கதவைக் கொஞ்சம் திறப்பது போல
11.சில சமயங்களில் இசை ஓடிக்கொண்டிருக்கும்.நின்றவுடன் தான் அது அத்தனை நேரமும் ஒலித்துக் கொண்டிருந்தது தெரியவரும்.அது போலத் தான் இவரது கவிதையும்.
12.பேய்க்குச் சாப்பாடு போட்டால் நீண்ட அகப்பட வேண்டும்.
13.நூலகத்துப் பழைய புத்தகம் போல மஞ்சள் நிறம்.
14.பனிச்சறுக்கு காரி போல
15.தாஜ்மகாலைத் தபால்தலையில் பார்த்துவிட்டு இந்தியாவைக் கற்பனை செய்வது போலத் தான்
16.வீதியிலே யாரோ பாலை ஊற்றி விட்டது போல நிலவு ஒளி
17.வேட்டைக்குப் போய்த்திரும்பும் பழங்காலத்து அரசனின் மனம் போல
18.படுத்திருந்த வீட்டு நாய் தலை தூக்கிப் பார்ப்பது போல
19.விலை உயர்ந்த மதுவை மிடறு மிடறாக விழுங்குவது போல
20.கல் உருள்வது போல நிறுத்தாமல் பேசுவார்
21.நீச்சல் துள்ளு பலகையில் துள்ளுவது போல நாலு தரம் துள்ளுவார்
22.குற்றம் செய்த வீட்டு நாய் போலக் குனிந்து தரையைப் பார்த்து
23.சிலந்தி வலையைத் தொடுவது போல மெதுவாக ஓரத்தில் தொட்டு
24.மழையை முகத்தில் ஏந்துவது போல மேலே பார்த்துக் கொண்டு
25.காதலி வீட்டு யன்னலின் கீழ் மணித் தியாலக் கணக்காக நிற்கும் காதலன் போல
26.பேப்பர் பறக்காமல் இருக்க ஒரு கல் வைப்பது போல ஆணை இடும் போதே அதை மறக்காமல் இருக்க ஓர் அடியும் வைப்பார்.
27.அவர் சமிக்ஞை விளக்கு போல அடிக்கடி மனம் மாறுகிறவர்.
28.கார் முகப்பு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக ரோட்டைக் காட்டுவது போல
29.ஏதோ விட்ட பஸ்ஸைப் பிடிக்கப் போவது போல
30.ஒரு ந்த்தையைத் தொடருவது போல கீழே பார்த்தபடி மெல்ல மெல்ல
31.வாசல் கதவு பறவை செட்டை விரிப்பது போல இரண்டு பக்கமும் பிளந்து திறந்தது.
32.ஐந்து ஓட்டை வைத்த சேர்ட்டில் ஆறாவது பட்டனைப் பார்த்தது போல் குழம்பிப் போய் என்னைப் பார்த்தார்.
33.தேனீக்கள் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்திருப்பது போல ஆட்கள் நெட்டியடித்துக் கொண்டு
34.பல் வைத்தியர் இன்னும் அகலமா இன்னும் அகலமா என்பது போல அதே கேளிவியைத் திருப்பித் திருப்பிக் கேட்டார்.
35.அரக்கியர் நடுவே இருந்த அசோகவனத்துச் சீதை போலப் பிடிவாதமாக இருந்து விட்டாள்.
36.கோவிலுக்கு நேர்ந்து விட்ட சேவல் வதக் வதக் எனக் கொத்துவது போல
37.டென்னிஸ் போட்டி பார்ப்பவருடைய கண்களைப் போல.
அவன் காட்டை வென்றான்
கேசவரெட்டி தெலுங்கில் எழுதிய இக்குறுநாவல் எத்திராஜூலு அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
நாவலில் பல்வேறு உவமைகள் இடம்பெறுகின்றன. தொகுத்துப் பார்த்தாலும் சுவையாகத்தான் இருக்கின்றன.
அவற்றில் சில:
நிலவின் நிழல்கள் வயது வராதவனின் மீசையைப் போல அடர்த்தியற்று தெளிவில்லாமல் இருந்தன.
வயதுக்கு வராத சேவல் கூவுவது போலவும் தொண்டையில் மீன் முள் சிக்கிக் கொண்ட குள்ள நரி ஊளையிடுவது போலவும் அவன் குரல் எழுப்பிக் கொண்டிருந்தான்.
அந்தப் பாதை மிகவும் தெளிவற்றதாக இருந்தது. சற்று நேரத்திற்கப்புறம் அது வித்தை காட்டுபவன் செய்யும்
அற்புதம் போல புதர்களிடையே மாயமாய் மறைந்து விட்டது.
சுட்ட கல்லின் மீது விடப்பட்ட எறும்பைப் போல்,மாலை இருட்டில் பசி கொண்ட மின்மினிப்பூச்சி போல அவன் திரிந்து கொண்டிருந்தான்.
சுருட்டிப் படுத்துக் கொண்டிருந்த பாம்புக் குட்டி விழித்தெழுந்து தலையை மேலே உயர்த்தியதைப் போல
அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் நிராசை தலைதூக்கியது.
துரோபதையைக் கீசகனிடமிருந்து விடுவிக்கச் செல்லும் வீமனைப் போல் அவன் விரைந்து சென்று கொண்டிருக்கிறான்.
நிலா வெளியிலிருந்து வெண்ணிலா வாலிப்ப் பருவத்தைப் போல்,சோகம் போல், ஞானம் போல் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
ஊசி முனையில் நூலைக் கோப்பவனின் முகத்திலும் ,கன்றைப் பசுவின் கர்ப்பத்திலிருந்து இழுக்கும் கால்நடை
மருத்துவரின் முகத்திலும் தெரியும் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் அவனது முகத்திலும் தெரிகிறது.
கோணல் மாணலாக வளைந்தோடும் பாம்புக்குட்டியைத் தொடர்ந்தோடி சமயம் பார்த்து அதைக் கொத்திவிட முயற்சிக்கும் காட்டுக் கோழியைப் போல அவன் நடந்துகொண்டிருந்தான்.
பெண் மைனாவை அழைக்கும் ஆண் மைனாவின் வாலைப் போல் பனை ஓலை டிக் டிக் என்று அசைந்து கொண்டிருக்கிறது.
கைக்குழந்தைகள் தமது மார்பகங்களைச் சுவைத்துக் கொண்டிருக்கும் போது,பாதி மூடிய கண்களுடன் படுத்துக் கிடக்கும் தாய்மார்களைப் போல காட்டிலுள்ள பெரிய பெரிய மரங்களும் செடிகளும்,குரங்குகள்,குருவிகள்,கரடிகள் முதலிய விலங்குகளைத் தம் கிளைகளின் மீதும் பொந்துகளிலும் வைத்துக் கொண்டு உறங்குகின்றன.
கல்யாண முருங்கை மரங்கள் இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு செக்கச் சிவந்த மலர்களை உடல்பூராவும் நிரப்பிக் கொண்டு போர்க்களத்திலே காயமடைந்தவர்களைப் போல ஆங்காங்கே நின்றுள்ளன.
நரிகளைக் கண்டதுமே கிழவன் வயிற்றின் மீது அடிப்பட்ட நிறைமாத கர்ப்பிணியைப் போல் கதறி விட்டான்.
உலர்ந்த மணலில் பதிந்த அடிச்சுவடுகளை வெள்ளம் அனாயசமாக அழித்து விடுவதைப் போலவும்
வீட்டுவாசலில் தெளிக்கும் தண்ணீரைக் காலை கதிரவன் சுலபமாக மறைத்துவிடுவது போலவும்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
