இருபத்தியேழு வருடங்கள் கழித்து ஆச்சியை இங்கு பார்ப்பேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. உண்மையில் இது ஆச்சர்யமா அதிர்ச்சியா கனவா ஒன்றும் தெளிவில்லை. எங்களை வெறுத்து விட்டு போனவரை அத்தனை ஆண்டுகள் கழித்து கண்டபோது தலை கிறுகிறுத்து பேச்சு வரவில்லை.
மாய்ந்து போய் யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றியது, ஆனால் ஒருவரும் நம்ப மாட்டார்கள், சரி உங்களிடமே சொல்கிறேனே இப்போ என்ன கெட்டுவிடப்போகிறது!
முதலில் என் கதை:
எனக்கு பிறப்பு முதலே சுவாச குழாயில் ஒரு சிறு பிரச்சனை இருந்தது. என்றதும் நீங்கள் ஏதோ நோய் என்று நினைக்க வேண்டாம். இது படைத்தவன் விட்ட சிறு பிழை. எனது சுவாச குழாய் சுற்றளவு சராசரியை விட சற்று குறைவு.
அதனால் என்ன மூச்சு விட முடியும் தானே என்று நினைப்பீர்கள் உங்கள் நினைப்பு சரியே. மூச்செல்லாம் நன்றாகவே விடுவேன். பொறாமையிலும் இயலாமையிலும் பெருமூச்சு அடிக்கடி வரும். ஆனால் சிரித்தாலும் அழுதாலும் மூச்சு விடுவது சிரமம் ஆகும், விக்கல் தொடங்கும். விக்கலென்றால் தண்ணீர் குடித்தோ, சர்க்கரையை வாயில் இட்டுக்கொண்டோ நிறுத்தக்கூடிய விக்கல் அல்ல. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் விக்கல் நீளும். வாயை திறந்து திறந்து தண்ணீருக்கு தவிக்கும் மீனை போல நுரையீரலை ப்ரணவாயுவால் நிரப்ப வயிற்றை உள்ளிழுத்து மூச்சு விட வேண்டும்.
நீண்ட நேர விக்கலினால் நிறைய சிக்கல்கள். பேச கூட முடியாது, உணவு விழுங்கினால் மூக்கில் ஏறும், விக்கி விக்கி விலா நோகும், வாய் நோக மூச்சு விட்டு தாடையெல்லாம் பிடித்துக்கொள்ளும்.
மருத்துவர்கள் பலரையும் பார்த்தாகிவிட்டது
அனைவரும் சொன்னது, நாம் அழும் போதும் சிரிக்கும் போதும் நம் பிராணவாயு உள்ளிழுப்பும் வெளியிடுவதும் சற்று திக்கும். இது இயல்பே. குறுகிய சுவாச குழாய் வாய்த்த எனக்கு அதனாலேயே விக்கல் வருகிறதென்றும் இதுவே குறையற்ற சுவாச குழாய் வாய்தவர்களுக்கு கொஞ்சம் சுலபம், அவர்கள் ஒரு முறை நன்றாக வாய் திறந்து மூச்சு விட்டாலே சரியாகிவிடும்.
இளம் வயதில் விக்கல் பிரச்சனையாக இருந்தது வயது ஏற ஏற எதிர்பாராமல் மனம் ஒப்பாத ஏதேனும் நடந்தாலோ, மனம் பாரம் ஆனாலோ பேச்சே வராமல் நின்றுவிடுகிறது, சாலை விபத்தை பார்த்தால் நம் அனைவருக்கும் நடப்பது போன்றது தான். என்ன எனக்கு கொஞ்சம் நீண்ட நேரம் பேச்சு நின்று விடுகிறது.
இந்த சுவாச பிரச்னையும் எனக்கு உள்ளூரில் இருக்கும் வரை பெரிய இடர் இல்லை. சிரிப்பது அழுவதையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வேன். ஆனால் மலை ஏறினேனோ முடிந்தது கதை. வாய், கை கால் எல்லாம் மூச்சு விட வேண்டி வரும். குளிரில் கேட்கவே வேண்டாம், நெபுலைஸிர் பயன்படுத்த வேண்டி வரும்.
மருத்துவர்கள் எனக்கு மருந்து ஒன்றும் பரிந்துரைக்கவில்லை. இது ஒரு அசௌகரியம் அவ்வளவே. கொஞ்சம் சீரான ஓட்ட பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் சுவாச குழாய் இயல்பாக விரிவாக சற்றே உதவ கூடும், முயன்று பாருங்கள் என்றார்கள்.
நமக்கு தான் ஒரு வரம் உண்டே, நாம் தேடி போகும்போது கிட்டாதது வேண்டாம் என்று விட்டு தொலைத்தபின் கிடைக்கும். அப்படி வந்தது தான் ஆன்சைட் அசைன்மென்ட். பாஸ்டன் நகருக்கு.
போகலாமா வேண்டாமா என்று யோசிக்க கூட மனசு விடவில்லை, அவன் அவன் பேசும் டாலர் பெருமைகளும், ஸ்டேட்டஸில் வைக்கும் படங்களும் முக்கியமாக அவற்றை பார்த்தபின் வரும் என் வயிற்றெரிச்சல்களும், கடைசியாக பார்த்து கொண்டிருக்கும் வேலைக்கு ஏதேனும் ஒரு அனுகூலம் நடக்கும் ( அப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லாதபோதும்) என்ற என் ஒப்புக்கு சப்பாணி காரணத்துக்காகவும் பாஸ்டன் கிளம்ப ட்ராலியுடன் நல்ல தடித்த ஜாக்கெட் ரெண்டும் ஆர்டர் போட்டேன்.
பாஸ்டன் குளிர் பற்றி தெரிந்தாலும் வந்த ஆறு வாரத்தில் இந்த குளிருக்கு எனக்கு இன்னும் நான்கு சுவாச குழாய் வேண்டுமென்று உரைத்தது.
எப்படியோ நிறைய விக்கலுடனும் கொஞ்சம் ஓட்ட பயிற்சியுடனும் நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் நான் பேசுவதே தடைபடும் அளவுக்கு மூச்சு விட சிரமம் இருந்தது. அவ்வப்போது மருத்துவரையும் அழைத்து ஆலோசனை கேட்டுக்கொள்வேன்.
என் அதிர்ஷடமோ என்னவோ மருத்துவர் என் இந்த அழைப்பின்போது புதிதாக வந்துள்ள ஒரு பரிந்துரையில் சுவாச குழாயின் சுற்றளவு சற்றே விரிவு செய்யும் ஒரு சிகிச்சை முறை பற்றி விளக்கினார்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்த புதிய மருத்துவமுறை பற்றி தேடி தேடி படித்தேன் ( பெரிதாக ஒன்றும் புரியவில்லை). அறிந்த தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் விசாரித்தேன்.
நான் இல்லாவிட்டாலும் ஸ்தம்பித்து விடாத ப்ராஜெக்ட் தான் என்றாலும் நான்கு நாள் யோசனைக்குப்பின் மருத்துவ விடுப்புக்கு மெயிலை தட்டினேன். கொஞ்சம் பிகுவிற்கு பின் ஒப்புக்கொண்டு இரு வார விடுப்புக்கு ஒப்புதல் அளித்தார் மேலாளர்.
ஊர் வந்த இரண்டாம் நாள் மருத்துவரை சந்திக்க சென்றேன். பல பரிசோதனைகளை பரிந்துரைத்து, அதன் முடிவுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் சுவாச குழாய் விரிவாக்க அறுவை சிகிச்சையை அந்த வாரமே திட்டமிடலாம் என்று நம்பிக்கையாக கூறினார்.
மூன்றாம் நாள் பரிசோதனை முடிவுகளுடன் ஒரு இதய நோய் சிறப்பு மருத்துவர், மயக்க மருத்துவர், நுரையீரல் மருத்துவர் ஆகியோருடன் எனக்கும் சில விவரணைகளை (வேறு என்ன, சிகிச்சை செலவு, சிறப்பு மருத்துவர்களின் கட்டணம்…..) என் மருத்துவர் தெரிவித்தார்.
முடிவாக அடுத்து வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை என்று முடிவானது.
அறுவை சிகிச்சை என்று சொல்லும் போது கொஞ்சம் பெரிதாக தோன்றும் ஆனால் ஒரு சிறு குழாயை உட்செலுத்தி செய்யப்படும் ஒரு பிழை திருத்த சிகிச்சைதான் இது. ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஆகலாம் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
வழக்கம் போல் வழிபாடு, நேர்ச்சை எல்லாம் வைத்துவிட்டு அம்மாவிடம் ஆசீர்வாதமும் பெற்று, ஆச்சியின் படத்தை என்னவோ தெரியவில்லை நீண்ட நேரம் கையில் வைத்திருந்துவிட்டு நானும் அம்மாவும் மருத்துவமனைக்கு கிளம்பினோம்.
இது தான் என் நாற்பது வயதில் நடக்கும் முதல் அறுவை சிகிச்சை.
சில அடிப்படை பரிசோதனைகளை மாலை வரை மாற்றி மாற்றி ஒரு செவிலியர் செய்தார், நாலரைக்கு அறுவை சிகிச்சை அரங்கினுள் நுழைத்தேன்.
நுழைந்தவுடன் ஏதோ இசையுடன் கூடிய ஆராய்ச்சி கூடத்தில் நுழைந்த உண்டர்வே முதலில் உண்டானது.
ஒவ்வொருவராக வந்த மருத்துவர்களும் அதுவரை நான் திரைப்படங்களில் பார்த்த மருத்துவர்களின் பதட்டம் ஏதுமின்றி சகஜமாக ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டு, போக்குவரத்து நெரிசல், பங்கு சந்தை நிலவரம் என்று வெகு உற்சாகமாக வழக்கமாக நாம் வெளியில் பேசும் சங்கதிகளையே பேசி கொண்டிருந்தார்கள், என்ன, இடைஇடையே செவிலியர்களுக்கு உத்தரவும் பறந்தது. சொல்லி வைத்தது போல அனைவரும் அப்போது தான் குளித்த விட்டு வந்தவர் போல புத்துணர்வுடன் இருந்தார்கள்.
நான் மலங்க மலங்க கிலியுடன் விழிப்பதை பார்த்த மயக்க மருத்துவர் ” வேற பாட்டு வேணா மாத்தலாமா ?” என்று கேட்டு, என்னிடம் பேச்சு கொடுத்தார். என் வேலை, பாஸ்டனில் எவ்வளவு காலம் இருக்கின்றேன் என்று பேசிக்கொண்டே சிகிச்சை தொடங்க போவதற்கான ஆயத்தங்களை எனக்கு கோடி காட்டினார்.
அடுத்த நிமிடம் அனைத்து மருத்துவர்களும் என்னை சுற்றி நின்று தங்களை மீண்டும் அறிமுகம் செய்துகொண்டு சிகிச்சை பற்றியும் ஒரு முறை விளக்கி விட்டு எனக்கு வாழ்த்து கூறி புன்னகைத்தனர்.

மயக்க மருத்துவர் தான் துவங்கினார், பேசும் போது அவரின் இடது பக்கம் விழும் மெல்லிய அந்த கன்ன குழியை நான் பார்த்தவாறே இருக்க அவர் பேசிக்கொண்டே ஒரு குழாயை என் தொண்டைக்குள் மெதுவாக இறுக்கினார். ” சாரி இது லேசா தொண்டையில் உராயும் ” என்று என் தோள்களை நீவிகொடுத்தார்.
ஒன்று, இரண்டு என்று அவர் எண்ணுவது எனக்கு கேட்டது, ஆறுக்கு பின் தண்ணீரில் மூழ்குவது போல மூச்சு மமுட்டியது. அது எத்தனை நிமிடம் என்று தெரியவில்லை உடலின் உணர்வேயின்றி எங்கோ மெல்ல விழுந்துகொண்டிருந்தேன்.
உயிருடன் தான் இருக்கிறேனா இல்லை மரணித்துவிட்டேனா…
மரணமென்றால் இப்படி தான் இருக்குமா இல்லை இது மயக்கமா…
விழுகிறேன் பின் சற்றே மிதக்கிறேன். எங்கோ ஒரு வெட்டவெளி. ஒரு நீண்ட பாதை கண் முன்னே தெரிகிறது.
யாரோ சிலர் மெதுவாக நடந்து செல்கிறார்கள். அவர்களின் முகம் எனக்கு தெளிவாக புலப்படவில்லை.
ஒரே புகை மூட்டம் போல் இருக்கிறது.
புகை மூட்டத்தினூடே ஏதேதோ முகங்கள். நான் அறிந்தவை, வெறுத்தவை, எனக்கு பிரியமானவை, நான் தேடியவை….நீருள் துழாவுவது போல முகங்களை துழாவி …..இயலாமை கொடுத்த கோபம் , வைத்திருந்த நம்பிக்கை பொய்த்து போன பின் வரும் முகத்தின் இறுக்கம், ஏக்கம் இவை படிந்த என் ஆச்சியின் முகம்….
நான் கடைசியாக பார்த்த அதே உருவம் கொண்டு.
ஆச்சி என்று கத்த தான் செய்கிறேன் ஆனால் சத்தம் தான் வரவில்லை .
கண்ணீருடன் மறுமுறை நெஞ்சுஅதிர கத்தினேன், ஆச்சி நின்று திரும்பி பார்த்தார்.
“கண்ணு” என்று சொல்லி கைகளை இறுக பற்றினார். ” நீ எங்க கண்ணு இங்க வந்த ” என்று அதிர்ச்சியானார்.
மரணமே என்னையும் வான் மண்டலம் சேர்த்தது என்பதை ஆச்சியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தான் சோறூட்டி வளர்த்த பிள்ளைகளுக்கு மரணம் வரும் என்று எந்த ஆச்சி தான் யோசிப்பார்.
நான் சிகிச்சைக்கு வந்து மரணித்ததை ஆச்சி நம்பம முடியாமல் கண்ணீர் உகுத்தார்.
அப்போதும் ” தங்கத்துக்கு தான் துக்கத்துக்கு மேல துக்கமே சேருது” என்று என் அம்மாவை நினைத்து கேவினார்.
இப்போதும் ஆச்சியின் மீது அந்த மெல்லிய வியர்வை வாசமும், நெகமம் புடவையின் மனமும் வீசியது.
ஆச்சியை நாங்கள் கடைசியாக பார்த்தது ஒரு செங்கல் நிற நெகமம் சேலையில். அப்போதும் புது சேலையின் மொடமொடப்பு உடையவில்லை. அம்மா ஆச்சியின் முகத்தை தடவி, புடவையை கால் பக்கம் நீவி விட்டார்.
அந்த சேலை நானும் அம்மாவும் அந்த வருடம் தீபாவளிக்கு அங்கு விலாஸில் ஆச்சிக்கு எடுத்த்தது.
அந்த சேலையை எப்படி மறப்பேன், ஆச்சி தூக்கிட்டு கொண்டபோது கட்டியிருந்த சேலை அல்லவா அது.
ஒரு நொடியில் விறுக்கென்று உணர்வு பெற்றவளாக ” ஆச்சி ஏன் ஆச்சி இப்படி பண்ணுனீங்க” வாய் குழற நான் கேட்க, ” என்னமோ எல்லாமே வெறுத்து போய், சீ சோத்துக்காகவா வாழறதுன்னு ….” பேச முடியாமல் என் கையை இறுக பற்றினார்.
” உசுரு துடிக்கறப்பவும் தங்கம்மாவ தான் நெனச்சுகிட்டேன் ” என்று ஆச்சி அம்மாவின் நினைவில் தேங்கி நின்றார்.
ஆச்சியின் மறைவு அம்மாவை மிக தீவிரமாக தாக்கியது. ஒரு மூன்று வருடங்கள் அம்மா ஆச்சியின் பழைய புடவைகளை எடுத்து வைத்து பேசிக்கொண்டிருப்பார். அவரால் குற்றஉணர்ச்சிக்கும் போதாமைக்கும் நடுவில் மல்லுக்கட்ட முடியாமல் கதறி வெடிக்கும் நாட்களில், துணி துவைக்கும் கல்லில் ஏதாவது ஒரு துணியை அம்மா அம்மா என்று கத்திக்கொண்டு வெறி கொண்டு கை ஓயும் வரை அடித்து துவைப்பார்.
அம்மா எந்த கவுன்சிலிங்கும் வர மறுத்து விட்டார்.
அம்மா அழுயோடோ, கதறலோடோ துக்கத்தை வெளியேற்றிக்கொண்டே இருந்தார்.
எனக்கு தான் சீறி பாயும் துக்கம் தொண்டை வரை வந்தவுடன் மூச்சு முட்டி, பேச்சு அறுந்து போய் நெஞ்சு அடைக்கும்.
இருபத்தியேழு வருடங்களுக்கு முன் ஒரு சொல் ஆச்சியை அந்த முடிவை நோக்கி தள்ளியது.
அந்த கதையையும் உங்களுக்கு கூறுகிறேன்.
ஆச்சிக்கு கொஞ்சம் மூச்சிரைப்பு உண்டு, கூடவே மூட்டு வலியும். ஓய்ந்து ஓய்ந்து வீட்டு வேலைகளை செய்வார்.
என்ன நினைத்தாரோ பின் தெருவில்தான் மாமா வீடு. இனி தனக்கும் அய்யனுக்கும் இரு வேளை உணவை அங்கு வந்து இருவரும் சாப்பிடுவதாகவும், ஆச்சி வாங்கி கொண்டிருக்கும் முன்பக்க கடை வாடகையை மாமா வாங்கி கொள்ளவேண்டுமென்றும் ஆச்சி வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
பொதுவாக சாதுவாகவே தெரியும் என் அத்தை அன்று என்ன கணக்கு போட்டாரோ தெரியவில்லை.
கால் பெருவிரல் நகத்தில் செறுமிய மண்ணை குத்திக்கொண்டே ஆச்சியை நிமிர்ந்து பாக்காமல்
“இப்போ இருந்தே சாப்பாடு போடறதுன்னா எப்புடி, நடமாட்டம் இல்லைனா அப்போ பாக்கலாம் ” என்று சலனமே இல்லாமல் கூறினார். மாமா பீடியை பற்றவைத்துக் கொண்டு பட்டாசாலில் போய் அமர்ந்துவிட்டார்.
மேலே பேச ஒன்றுமில்லை என்பதை உணர்ந்த ஆச்சி தன வீடு வந்து அய்யனிடம் பொருமினார்.
பழையபடி முடிந்ததை சமைத்தார்.
அய்யன் போய் மகனிடம் கேட்பார் என்று ஆச்சி எதிர்பார்த்தார், அய்யன் போகவில்லை.
இந்த சம்பவமெல்லாம் நடந்த அந்த வியாழன் தான் நானும் அம்மாவும் ஆச்சியை பார்க்க பூரி சுட்டு கொண்டு, ஜோதியில் அய்யனுக்கு தயிர் வடை வாங்கிக்கொண்டு சென்றோம்.
ஆச்சி வர காபி போட்டு குடுத்தார்.
அய்யன் தயிர் வடையை சாப்பிட்டு முடிக்கும் வரை ஆச்சி ஒரு பூரியையே நிமிண்டிக்கொண்டிருந்தார்.
அய்யன் தான் நடந்தவற்றை சொன்னார். அம்மா உடனே மாமாவின் வீட்டுக்கு படையெடுத்தார். போன வேகத்திலேயே திரும்பி வந்து ஆச்சிக்கு சமாதானம் சொல்லி ” கொஞ்ச நாள் பாரு மா, முடியாட்டி அங்க வந்துருங்க ” என்று தான் அத்தையிடம் தோற்றதை வார்த்தைகளால் பூசி மெழுகினார்.
“மகனே சோறு போட நாள் கணக்கு பாக்குறான் இதுல மருமக்கமாறுகிட்ட வந்து நிக்க சொல்றியா, போ புள்ள, என் வழிய நான் பாத்துக்கறேன்” என்று சொல்லி எழுந்து போய் மிச்ச பூரியை களனி பானையில் போட்டார்.
“மழை தூத்தல் போட முன்னால கெளம்பு தங்கமா” என்று ஒரு சீப்பு வாழைப்பழத்தை எங்கள் கூடையில் போட்டு கொண்டே சொன்னார்.
ரோட்டை தாண்டி நான் திரும்பி கை காட்டியபோது ஆச்சி அம்மாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை காலை எங்களுக்கு தகவல் வந்து நாங்கள் சென்ற போது பதினாலு மணிநேரம் முன்னர் உயிருடன் பார்த்த ஆச்சியா இது என்று நம்ப முடியாமல் நின்றோம். அந்த நொடியிலிருந்து இந்த இருபத்தியேழு வருடங்களில் குற்றஉணர்ச்சியும், வலுக்கட்டாயமா வெட்டப்பட்ட உறவு தரும் வலியுடனும் இட்டு நிரப்பவே முடியாத வெறுமையாக என்னாலும் அம்மாவாலும் ஆச்சியை தாண்டவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் புதிய உறவுகள் வந்தாலும் அவை கொடுத்த சுகத்தை முழுவதும் அனுபவித்ததில்லை. எந்த சின்ன சந்தோசங்களின் பின்னும் ஆழத்திலிருந்து இந்த துக்கம் எட்டிப்பார்க்கவே செய்தது.
எதுவுமே பேசாமல் நிற்கும் ஆச்சியை பார்த்தேன், கைகளை பற்றினேன். மெலிந்த கைகளின் சற்றே புடைத்த பச்சை நரம்பு தட்டுப்பட்டது.
வாழ்வை பாதியில் விட்டொழித்ததன் வலி ஆச்சியின் முகத்திலும் ஆசுவாசம் தரும் அபூர்வ உறவொன்றினை தொலைத்த வலி என் முகத்திலும் தேங்கியது.
ஆழ்கடலில் தொலைத்ததை கரை ஏறி கண்டெத்துதது மாதிரி இருந்தது ஆச்சி கையை பிடித்துக்கொண்டபோது.
ஒவ்வொரு தீபாவளிக்கும் பண்டங்கள் செய்யும் நாளில் தனித்து வந்து அமர்ந்து நீண்ட நேரம் கரையும் காகமும், தினமும் சோறு வைத்தவுடன் அருகில் வைக்கும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு போகும் காகமும் நீங்கள் தானே ஆச்சி என்று கேட்டு முடிக்கையில், ஆச்சி ஏதோ சொல்ல வாய் திறந்தார் ….
எனக்கு எங்கோ மெல்லிய இசை கேட்க என் காதருகில் ” நீங்கள் மெதுவாக விழிகளை திறக்க முயலுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. விழியை திறக்க எத்தனிக்கும் போதெல்லாம் கண்கள் மேல் ஒரு பாரம் அழுத்தியது. நான் உருண்டு உருண்டு கீழே விழுவது போன்ற உணர்வு. பெரும் பிரயத்தனப்பட்டு கண்களை திறந்தேன். சுற்றிலும் மருத்துவர் குழு ” யூ ஆர் த்ரூ இட் ” என்று புன்னகைக்க நான் கண்கள் செருக விழிப்பும் இல்லை மயக்கமும் இல்லை என்ற அவஸ்தையில் இருந்தேன்.
மூன்றே நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு வந்தேன்.
சுவாசம் கொஞ்சம் இலகுவானது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

ஒரே மூச்சில் படிக்க வைத்தது கதை
Nice story