அணங்கு

  இரு புறமும் அடர்ந்து  உயர்ந்து வளர்ந்திருந்த  மூங்கில் புதர்கள் நெறஞ்ச அந்த மலைப்பாதையில் ர்ர்ர்ரும் என்று   உருமலுடன் குலுங்கி நிற்கிறது ஜீப். முன் பக்கமாக இறங்கிய ஆதி அண்ணாந்து பார்க்கிறான்.கரும்பச்சை நிற.  மூங்கில்கழிகள்  வளைந்து அவற்றில் பொன்னிற  சிறுசிறு முட்கள்    ஒளிர்கின்றன. நீண்ட பசும் மூங்கில் இலைகளும், படர்ந்துள்ள கொடிகளின் இதய வடிவ இலைகளும் அசைகின்றன.விரளளவு தெரியும் மஞ்சள் வயித்து  அடைக்கலான் குருவிகளும்,வயிறு பெருத்த தவிட்டுக் குருவிகளும் கிக்கிக் என  சிறகசைக்கின்றன.சாலையின் இடப்புறம் மூங்கில் புதர்களின் அடியில் பாசி படர்ந்த நீரோடை அசைகிறது.    சருகுகள்  படர்ந்த தரையில் கீரி போன்ற சிறு விலங்கொன்று ஓடி மறைகிறது. காற்று அதிகமாகவும் மூங்கில்கள் உரசி சப்திக்கின்றன.கரும்பச்சை  யூனிபார்மில் நிற்கும் ஆதியின் தலைமுடி கலைகிறது. இந்த எடம் நல்லா இருக்கே. யானைங்க இங்க தான் இருக்கா?

       ஜீப்பின் பின்புறம் இருந்து இறங்கிய பாரஸ்டர் சோமராஜ்  ஆமா சார்.நாலு யானைங்க இருக்கு. நைட்ல இந்த எடத்துல கிராஸ் பண்ணுங்க. இப்பிடியே ஏறி ஆலஞ்சனூர் வழியா பட்டரைக்காடு பீட்டுக்குள்ள போயிடுங்க. நைட் வர பஸ்ஸுக்கு மட்டும் கொஞ்சம் ரிஸ்க். ஆனா இது வரைக்கும் யாரையும் ஒண்ணும் பண்ணல  என்கிறார்.

பின்புறம் திரும்பி அதோ தெரியறது தான் காவலூர் வைணு பாப்பு அப்சர்வேட்ரி  என்று காட்டுகிறார்.தொலைவில்  மேகங்களின் நடுவே உயர்ந்த வளைவான வெண்ணிற டோம் தெரிகிறது.சரி என்று தலையசைக்கும் ஆதி  உயரமாய்  சைடில் ட்ரிம் செய்யப்பட்ட சிகையுடன் இருக்கிறான். புருவங்கள் அடர்ந்து கூரிய பார்வையுடன் சிறிய கண்கள், முன்முறம் சற்று வளைந்த நாசி அழுத்தமான உதடுகள் ஷேவ் செய்த பச்சை அடையாளம் தெரியும் சிவந்த நிறம்  என்று இளமையாத் தெரிகிறான்.வலுவான தோள்களில் பொன்னிற பட்டையில் ஆதித்யவர்மா , பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீசர் என்ற எழுத்துக்கள் மின்னுகின்றன.

         தூரத்தில் ஜவ்வாது மலைத்தொடர்கள் நீலவண்ணமாய் தெரிகின்றன.சைடில் இருந்து வந்த டிரைவர் சாம் ஏறியவுடன் எல்லாரும் வண்டிக்குள் செல்கிறார்கள்.

      எனக்கு ஃபர்ஸ்ட் அப்பாயின்மெண்ட் சத்ய மங்கலம் ரேஞ்ச். அது இது விட டென்ஸ் பாரஸ்ட்  என்று ஆதி சொல்லவும்  அது  வீரப்பன் காடாச்சே ஐயா. பின்ன அடரத்தியா தான் இருக்கும் என்கிறார் பின்னாடி அமர்ந்திருந்த கார்ட் சென்னப்பன்.

  வீரப்பன் போயி எத்தனை வருஷம் ஆனாலும் அது அவனோட எடமா?

  எல்லோரும் சிரிக்கறாங்க. மலைப்பாதை உயர்ந்து கொண்டை ஊசி வளைவுகள் தெரிகின்றன. வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ள அலுமினிய தடுப்புகளை தாண்டி புதர்கள் வருகின்றன இடது புறம் ஜவ்வாது மலையின் அழகிய பள்ளத்தாக்குகள் பசுமையாய்  மிளிர்கின்றன. சாலை நடுவில் அமர்ந்திருந்த குரங்கு கூட்டம் ஒன்று சிதறி ஓடுகின்றது குட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டு தாவும் குரங்கையே பார்க்கிறான் ஆதி.  இதுதான் மலைமேல் ஏறும் கடைசியா என் நினைக்கிறான். மனசில் அந்த இரவு மங்கலாக வருகிறது. 

            ரைத்த மயிரைச்  சேர்த்து  கொண்டையாக  இறுக்கி  நெற்றியில் திலகமின்றி சோர்ந்த முகத்துடன் பச்சை நைட்டியில் கட்டிலில் சாய்ந்து இருந்த அம்மாவைப் பார்க்கையில் இவனுக்கு ஒரு பக்கம் பாவமாகவும் ஆபீஸ் போற அவசரத்துல கோபமாகவும் இருக்கு.மூச்சு இளைக்க இளைக்க  நீ போறியாப்பா என்கிறாள்.    டிஎப்ஓ வரார் நான் போயி ஆகணும்.  ஜெனி வந்துருவாங்க.நீ படு.அவள் பதிலே சொல்லவில்லை.

          குனிந்து  ஷுவை மாட்டிக்கிட்டே நான் வரேம்மா என்று நடக்கிறான்.அம்மா மூச்சிளைப்பது மின்விசிறி ஒலியைத்தாண்டி கேக்குது.

         வண்டியில போகும் போதே மாதேஷ் கால்  பண்ணி சார் உங்களை புவனகிரி வரச்சொல்லிட்டாங்க என்கிறான்.அன்றைய வேலை பரபரப்புகள் காப்புக் காடுகள் மரங்கள் கணக்கெடுப்பு ரிப்போர்ட் டிஎப்ஓ பாரஸ்டர் வாச்சர்கள். என் இருக்கையில் நர்ஸ் ஜெனி அழைக்கிறாள். சார் அஞ்சு மணிக்கு நான் போகணும். சரியா சாப்பிடல. நெபுலைசர் வச்சாலும் எடுத்து போட்டுட்டாங்க. வீசிங் இன்னும் அதிகமாவுது. யாருமே இல்லாம பூட்டிட்டு போக சங்கடமா இருக்கு”

       ஒன்பதரை மணிக்கு பனிக்குளிர் இறங்கிய ரோட்டில் வண்டி ஓட்டிட்டு வரும்போது ஆதிக்கு பயமா இருக்கு.தனியா என்ன பண்றாளோ என்று கதவைத் திறந்தால் தூங்கிக்கிட்டிருக்கா.பக்கத்துல தட்டில் இட்டிலி மூடி வச்சது அப்பிடியே இருக்கு.ஏறி இறங்கும் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் கர் கர்ரென ஆஸ்துமா இளைப்பு சத்தம் கோரமா கேக்குது.வாய் ஒரு பக்கமா கோணி திறந்திருக்கு.  யூனிபார்மை கூட கழட்டாம உக்காந்திருக்கான்.

       கொஞ்ச நேரத்தில் விழித்தவள்   சுஜா எங்கடா? வேல முடிஞ்சி வந்துட்டாளா.நீ சாப்ட்டியான்னு கேக்கறா.இவன் மருந்துகளை எடுத்து குடுக்கவும் எங்கடா அவ என்று திரும்பவும் இவனைப் பாக்கறா.

       அவதான் போயிட்டாளே.நீ மட்டுந்தான் இன்னும் இருந்து என்  உசுர எடுக்கற

        அப்பாவக் கூடப்பிடுடா.பாவா சீக்கிரம் வா. இவன் என்னை என்னென்ன சொல்றான் பாரு என்று உள் அறையப் பாத்து கத்தறா.ஆதிக்கு வெறும் வயித்துல பத்து கிலோமீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்து இவளோட போராடறதுக்கு ஆத்திரம் வருது.

       பேசாம மருந்தக் குடியேன்.எழவு யாரு செத்தாங்க இருக்காங்கன்னே தெரியல.  அடம் பண்ற.மருந்தை கட்டாயமா வாயைத் திறந்து ஊத்தறான்.அப்பிடியே சரிஞ்சி தூங்கிட்டா. இப்பிடித்தான் தூக்கமும் விழிப்புமா அரைகொறை நினைவோட பேசறா.இந்த வீட்டுல அவளையும் அவனையும் தவிர யாரும் இல்லைன்னு மறந்துடறா.

       அப்பா இருந்த வரைக்கும் முகத்தில் பூசன மஞ்சள் முன்புற கூந்தலில் தெரிய குங்குமப் பொட்டும்.  வாயில் சேலையுமா எப்பவும் சிரிச்சிக்கிட்டே தான் இருப்பா.     ஆதி  வெல்லமிட்டு பூஷணிக்கா புளிக்கறி வச்சிருக்கேண்டா. பருப்பு அடையும் மெந்தியக் கொழம்பும் எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட்டுட்டு போயேன். கிருஷ்ண பாதம் வரைஞ்சு ஸ்வாமியை அழைக்கனுமே, விநாயகருக்கு அருகு கொண்டாயேன். பெரட்டாசியில பெருமாளுக்கும் தாயாருக்கும் தளிகை வைக்கலன்னா எப்பிடின்னு எதையாவது சொல்லிக்கிட்டு அப்பாவையும் இவனையும் இழுத்து இழுத்து ஸ்வாமி நமஸ்காரம் பண்ண வைப்பா.

         இவன் சுஜாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லவும் அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரியாகாதுடான்னு  தேம்பித்தேம்பி அழுதா.அப்பா  தான் அவன்  இஷ்டப்பட்ட பொண்ணு தான வசந்தின்னு பேசி சரி பண்ணார்.

                 றவைகளின் சத்தங்கேட்டு கண் முழிச்சவனுக்கு கொஞ்சங்கொஞ்சமா  இப்ப இருக்கறது ஜவ்வாது மலையில், அம்மா போயிட்டா இனி என்ன செய்யறதுன்னு எல்லாமே நினைவுக்கு வருது. ஐரோப்பியர் காலத்துல கட்டப்பட்ட அந்த பங்களா பெரிய தூண்களும் சுவர்களில் ஓவியங்களுமாய்  அழகா இருக்கு. வெளியே வந்து நிக்கிறான்.பசும் இலைகளும் பொன்னிற துளிர்களும் குட்டி குட்டியான சிறிய சிவப்பு பழங்களும் நெறஞ்ச ஆலமரம் பெருசா நிக்குது. மண் வண்ண விழுதுகள் தார்ச்சாலையின் மேலே உயரத்தில் அசைகின்றன. மைனாக்களும் குருவிகளும் பறக்கின்றன.மாலை வெயில் மஞ்சளாய் ஆரஞ்சாய் தூரத்து மரங்களிடையில் படர்ந்திருக்கிறது. கொஞ்சதூரம் நடக்கிறான். சீமை வாகை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. காய்ந்த சருகுகள் சாலையெங்கும் சிதறிக் கிடக்கின்றன. இடப்புறம் பெரிய பரப்பாக தெரியும் கொல்லைகள் தெரிகின்றன.மனசுக்குள் இந்த இடம்தான் சரின்னு நெனச்சிக்கிறான்.

           நீல வண்ண டாப்சும் அலையும் கூந்தலுமாய் அவளைப் பார்த்த நொடியே முடிவு செஞ்சிட்டான்.பெரிய கண்கள் மலர ஹாய் என் புன்னகைத்தவளைப்  பார்த்துக்கிட்டே நிக்கிறான்.அவளுக்கும் மனசில் ஏதோ தோன்றியிருக்கக்கூடும்.அதே வேகத்தில் திருமணம் குடித்தனம்  என்று எல்லாம் முடிஞ்சப்பறம் தான் தொடங்கிச்சு.

    அம்மா சுஜாவுக்கு தான் சப்போர்ட் பண்ணா. ஏண்டா அவ சொல்றதைக் கேளேன். பொண்டாட்டிய பொறுப்பா பாத்துக்கோயேன். அறிவுரைகள் எல்லாம் அவனுக்குத்தான். பெரிய சண்டையின் முடிவில் ஒரு நாள் நைட் கார எடுத்துட்டு போயிட்டா. ஆதியால அத ஏத்துக்கவே முடியல. உருகி மலர்ந்து படபடத்தது எல்லாமே அவ்ளோ தானா? எத்தனை சீக்கிரமா நீ வேணாம் போடான்னுட்டா. இவன் குடும்பமே கலைஞ்சிடுச்சி.

        ஒத்தப் புள்ளையா அப்பாவைத் தூக்கினப்போ கூட்டத்துல ஓரமா வந்து நின்னுட்டு எதுவுமே பேசாம போயிட்டா. அதுக்கப்பறம் அம்மாவோட ஒரு வருஷம் போராட்டம். அவளோட முடிவு. வேணும்னு இவன் பண்ணல. ஆனா நடந்துடிச்சி.

அப்பா எந்த சிரமமும் இல்லாம நைட்டு தூக்கத்துல போயிட்டாரு. புருஷன் புள்ளையின்னே வாழ்ந்தவளுக்கு அவரும் இல்லாம இவனும் தனியா நின்னது தாளல. பெருமாளே அலர்மேலுத்தாயாரேன்னு  பொலம்பிக்கிட்டே கெடந்தா. மனசு உடம்பு எல்லாம் நோயில் நொந்து போனவள ஆதியாலப் பாக்க முடியல. ரேஞ்ச் ஆபீசர் வேலை அம்மா படுக்கை ஆஸ்பிட்டல் அவளுக்கு மூச்சு இளுக்கறது எல்லாமே சுஜா தந்த நோட்டீசோட சேர்ந்து அவனைப் படுத்துது.

            ஊரிலேன் காணியில்லை

             உறவு மற்றொருவர் இல்லை

            பாரில் நின் பாதமூலம் 

         பற்றிலேன் பரம மூர்த்தி

               அழகா ஸ்லோகம் சொல்லும் வசந்தி இப்ப நினைவு தப்பி இழுத்துக் கிட்டு கெடக்கறத  இவனால் சகிக்க முடியல. அன்னிக்கு நர்ஸ் வரல. சிதம்பரம் தாண்டி வண்டி ஓட்டிட்டு வந்த அலுப்பு. வீட்டை தெறந்ததும் தெரியற வெறுமை என்னமோ பண்ணிச்சு. சுஜா எப்ப உள்ள வந்தாலும் என்னடா வாங்கிட்டு வந்தேன்னு கேப்பா. அப்பிடியே ரெண்டு பேரும் போயி எதையாவது கொறிச்சிட்டு வருவாங்க. வழியெல்லாம் தொணதொணன்னு பூ புஸ்தகம் பாரதி கவிதை வண்ணதாசன்னு எதையாவது சொல்லிட்டே வருவா.

        அம்மா நல்ல தூக்கத்துல இருந்தா. காலையில பொறப்படறப்பவும் எதுவும் பேசல. கிச்சன்ல வச்சிருந்த பாதி விஸ்கி போத்தலை எடுத்துட்டு மேல போயிட்டான்.தனியா குடிச்சா   தன்னிரக்கம் அதிகமாயிடுது. அம்மா சுஜான்னு மாறி மாறி கூப்பிடறான். யாரும் வரல. சிஸ்டத்த ஆன் பண்ணவும் எம்எஸ் குரல் ஒலிக்குது.  மாயமாளவகௌளை . அம்மா தான் ராகமெல்லாம்  சொல்லுவா. அந்தக்குரல் என்னமோ பண்ணுது. மனசு வெம்மி வெம்பி  கண்ணீர் வழிய அப்பிடியே படுத்துட்டான். காலையில லேட்டா எழுந்து வந்தப்ப அம்மா இல்லை.கட்டிலில் இருந்து தரையில உருண்டு கெடந்தா.ராத்திரியில கூப்பிட்டாளா தண்ணி கேட்டாளா எதாவது சொல்லனும்னு நெனச்சாளா எதுவுமே தெரியல.

     நாந்தான் கொன்னுட்டனா? அந்தக் கேள்விக்கு பதில் தெரியல.எல்லாம முடிஞ்சப்பறம் அந்த வீட்டுல இருக்க முடியல. அவ வந்து நின்னு சிரிக்கிறா. இனிமே எதுவுமே வேண்டாம் அம்மாகிட்டே போயிடலாம்னு நெனச்சப்ப தான் இந்த மாறுதல் கெடைச்சிருக்கு. இந்த மலையிலிருந்து குதிச்சிடலாம்னு தான் வந்திருக்கான்.

          ரெண்டு நாள் எல்லா காட்டையும் சுத்தி பாத்தாச்சி.நல்ல எடம் நெறய இருக்கு.      இரவு உணவுக்கு கோதும்ப ரொட்டியும் தக்காளியும் கொண்டாந்து வைக்கிறான்  காசி.    சார் இன்னிக்கு பாத்தமே  அதை பழைய கோட்டைனு பாரஸ்டர் சொல்றாரு. ஆனா எங்க ஆசா எங்க தேவங்க கட்டின கொயிலுன்னு சொல்லும்.

               அப்படியா காசி அது என்னா தெய்வம்.

                   ஏளு கன்னிமாரு சார்.அவங்க ஒட்டுக்கா தான் இருப்பாங்க.ராவுல அந்த வெண்ணியாத்துல குளிச்சிட்டு மசுர விரிச்சி போட்டு அம்மாம் அழகா   திரிவாங்க. அர்ச்சுன ராசாவ கட்டணும்னு ஆசைப்பட்டு கன்னியாவே ஒலாத்தறாங்க. நான் கூட சின்ன புள்ளையில வேட்டைக்கு போனப்ப   பாத்திருக்கன் சார். கீழ்நாட்டாரெல்லாம் நம்ப மாட்டாங்க. அவ்ளோ அழகான பொம்பளங்ஙள பாத்துட்டு நாங்கல்லாம் ஒடியாந்துட்டோம்.

               காசி போன பிறகு நிதானமா சாப்பிடறான்.அவ்ளோ தானா என் வாழ்க்கை.இந்த தன்னந்தனி மலைக் காட்டுல செத்துப்போனா சுஜாவுக்கு யார் சொல்லுவாங்க.

     பத்து மணிக்கு எழுந்து இருட்டுல போறான். அடர்ந்த மரங்களைத் தாண்டி சமவெளியில் பெரிய பெரிய பாறைங்க மங்கலான நெலா வெளிச்சத்துல படுத்திருக்கு. செவந்த இலைகளோடு நுணா மரங்களும் மஞ்சள் பூக்களோட கருந்தடர்ந்த வேங்கை மரங்களும் நிற்கின்றன. ராத்திரி நேர சத்தங்க மரங்களின் அசைவுகள் ராப்பூச்சிகளின் ஒலிகள் .

         கல் தூண்களும் சரிஞ்ச மதில் சுவர்களுமா அந்த கோட்டை தெரியுது. கோயிலா கோட்டையா? கருங்கல் மதிலுக்கு மேல மூலையில நந்தி உருவம் தெரியுது. நெறய செடிங்க கல்லுங்களுக்கு இடையில வளர்ந்திருக்கு. காசி சொன்னானே கன்னிமாரு இங்க தான் இருக்காங்களா.

       மாலை வெயிலில் தனியா  வாற்கோதுமை கதிர்களை அறுவடை  செய்யற பெண்ணைப் பத்தின கவிதை நினைவுக்கு வருது.ஷெல்லியா வோர்ட்ஸ்வொர்த்தா

அதோ அந்த இளமாலை வெயில்
அவள் தனியாக வயல்வெளியில்
குனிந்து அருவாளால் கதிர்களை
அறுக்கிறாள்
அரேபிய பாலை மணல் வெளியின்
இசைப்பாடகர்களைப் போல
வசந்தத்தில் பாடும் நைட்டிங்கேலின் இசையைப் போல
தனிமையின் துயரப்பாடல் ஒன்றை அவள் பாடுகிறாள்.

       அப்படியே அன்னாந்து வானத்தை பார்க்கிறான்.மங்கிய நிலவொளியில் நட்சத்திர மினுக்கல்கள் தெரிகின்றன.ஒரு பெரிய ஸ்டார்.அதைச்சுத்தி நாலு சின்ன மினுக் மினுக்குன்னு ஒளிக்கீத்துங்க.அத்தனை அழகான இரவு வானத்தை இங்க தான் பார்க்கிறான். காற்றில் பூக்களின் மணம் பரவுது.பச்சை இலைகளின் வாசம்.திரும்ப போயிடலாமா.

        திடீர்னு அந்த நட்சத்திர வெளிச்சம் அதிகமாகுது .அப்பிடியே எதிர்ல பள்ளத்தாக்குல மினுங்குது.மெதுவா நகருது. அம்மா தான் அவதான்  கூப்பிடறா. தனியா இருக்காத வந்திரு ஆதி. அம்மா அம்மா வேகமா அந்த வெளிச்சப் புள்ளியப் பாத்துகிட்டே யாருமில்லாத அந்த காட்டுவெளியில அப்பிடியே மிதந்து மிதந்து போறான்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.