வன்யா

குடிலுக்கு அருகே மான்கள் ஆங்காங்கே சுற்றித் திரிந்தன. நீண்ட கூந்தலை உடைய காயத்ரி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காட்டை நோக்கி விரைந்தாள். தினமும் ஒரே வழியில் சென்றால் தடம் உருவாகி தன்னை காட்டிக் கொடுத்துவிடும் என அஞ்சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியாகத் தன் இலக்கை நோக்கி விரைந்தாள். காட்டில் இலந்தைப் பழங்களும் சருகும் எடுக்கச் சென்றால் நீண்ட நேரம் பிடிப்பாள் குடில் திரும்ப என்று அனைவரையும் நம்ப வைத்தாள். தந்தையின் சிஷ்யர்களின் குடில்களும் பக்கத்திலேயே இருந்தன. யாரும் பெரிதாக இவளைப் பற்றி யோசிப்பது இல்லை. தந்தை சதா சர்வகாலமும் வேதங்களில் மூழ்கி இருப்பார். தாயோ கணவரின் இறைப்பணிக்குப் பேருதவியாக இருப்பார். காயத்ரிக்கு தந்தையிடம் கல்வி கற்பதில் பெரிதாக நாட்டம் இல்லை. எப்போதும் காட்டில் வெட்டியாகச் சுற்றித் திரியும் பெண் என அனைவருக்கும் தெரியும். வளர்ப்பில் கற்றதை விடக் காட்டில் கற்றது நிறைய. பகலில் சூரிய ஒளியில் காட்டில் திரிவதில் ஓர் உற்சாகம். ஆனால் முழு நிலவில் காட்டில் வெள்ளி கதிர்கள் ஓர் அற்புதம். பகல் பொழுதுகள் நம் எண்ணங்களைச் சிதறடிப்பவை இரவின் வானமே பிரபஞ்சத்தில் நம் இடத்தை நினைவு படுத்துபவை. அது போன்ற இரவுகளில் ரகசியமாகக் குடிலை விட்டுக் கிளம்பி விடுவாள். உருக்கிய வெள்ளியாய் ஓடும் காட்டாறும், சுடர்விடும் கரும்பச்சை இலைகளும் வேறு ஓர் உலகத்தைக் காட்டில் விரித்தன.

விளையாட்டாய் சுற்றித் திரிந்தவளுக்கு ஒரு நாள் ஒரு வினோத அனுபவம் ஏற்பட்டது. தன்னைத் தவிர எந்த மனித நடமாட்டமும் இல்லாத சில அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு புதிய வாடையைக் கண்டறிய ஆரம்பித்தாள். தந்தையின் சிஷ்யர்கள் கூட அங்கெல்லாம் வருவது இல்லை. பெயரே தெரியாத சில புதிய வகைக் கனிகளுடன் அவள் குடிலுக்குத் திரும்புவதைக் கண்டு அவளின் தாயார் ஆச்சர்யப்பட்டுப் போவார். தன் சாம்ராஜ்யத்தில் வெளியுலக நடமாட்டம் இருப்பதை உணர்ந்தாள். பயம் என்றும் இல்லை ஆனால் என்ன என்று புரிபடாமல் குழம்பிப் போனாள். ஒரு மகிழ மரத்தின் கீழ் மல்லாந்து படுத்திருக்கையில்………….திடீரென்று படு வேகமாக ஏதோ மரக்கிளைகளில் நகர்ந்ததைக் கண்டாள். காட்டு மிருகங்களின் வேகம் இவளுக்குப் புரியும். ஆனால் இது ஏதோ வித்தியாசமாய் …….ஒரு பறவை எதிர் கிளையில் அமர்ந்து இவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்படியே ஒவ்வொரு விசித்திரமாய் நிகழ்ந்து ஏதோ கொண்டே இருந்தது. சில சமயங்களில் எதிர்பாராமல் நல்ல நறுமணம் வீசும். சந்தன மரங்களே இல்லாத காட்டில் சந்தன வாசமா? ஏதோ பறவையின் இதுவரை கேட்டிடாத கானம். அவளின் சாம்ராஜ்யத்தில் யாரோ? எதுவோ? உள்ளுணர்வு மட்டுமே இருந்தது நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. பயம் என்பது காட்டில் அவளுக்கு வந்ததில்லை வேற்று மனிதர்கள் தான் அவளுக்குப் பரிச்சயம் இல்லாத ஒன்று. மிருகங்களின் கால் தடம் கண்டு அஞ்சியவள் இல்லை புதிதாக ஒரு மனிதக் கால் தடம் கண்டு விக்கித்தாள். நிஜம் தான் போலும் யாரோ என் ஏகாந்தத்துக்கு ஊறுவிளைவிக்க வந்திருக்கிறார்கள். ஆணா? பெண்ணா? நண்பனா? பகைவனா?

ஒரு மாலை வேளை குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது  தந்தையுடன் யாரோ புதிதாக ஒரு மனிதரைக் கண்டாள். பார்ப்பதற்கு ஒரு தவசியைப் போல் இருந்தார். புலியின் பார்வையில் படாமல் மான் மறைந்து செல்லத்தான் நினைத்தது பாவம். அந்த மனிதர் இடதுபுறமாகத் திரும்பி குடிலுக்கு விரையும் காயத்ரியை உற்று நோக்கினார் அந்த எதிர் கிளை பறவை போல.

“காயத்ரி இவர் என் நண்பருக்குத் தெரிந்தவர். எதோ தேசாந்திரம் செல்கிறாராம் வழியில் சில மாதங்கள் இங்கே தங்கிச் செல்வார் இவர் தனிமையில் தியானிக்கக் காட்டில் எதாவது குகை உண்டா?” என்று அவளின் தந்தை கேட்டார்.

 “என்ன என் காட்டிலா?” என காயத்ரி பதறினாள். விக்ரமன் என்று அழைக்கப்படும் அந்த புதிய மனிதர் சிரித்துக் கொண்டே “என்ன உன் காடா?” என்றார். அடுத்த நாள் வேறு வழி இல்லாமல் அந்த மனிதரைக் காட்டிற்குள் அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. சற்றும் பொருந்தாத இடங்களைத் தேர்வு செய்து அலைக்கழித்தாள். “அவ்வளவுதான் அய்யா. இந்தக் காடு உங்களுக்குப் பொருத்தமாக இருக்காது என்றே நினைக்கிறேன் .நீங்கள் குடில் அருகே தியானம் செய்யுங்கள் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடுங்கள்” என்று அவரை துரத்துவதிலேயே குறியாய் இருந்தாள். ஆனால் அவர் அவ்வளவு எளிதாக விட்டு விடுவார் என்று தோன்றவில்லை. அன்று இரவு அமைதி குலைந்து, உறக்கம் கலைந்து தவித்தாள். அந்த மனிதர் சொன்னது ஒரு திசை மாறிய தேனீயைப் போல அவள் மனதில் அலைபாய்ந்தது. இடம் பெயர்ந்து போய்  விடுங்கள் என்று இவள் சொன்ன போது சற்றும் யோசிக்காமல், “நீ இன்னும் அந்த மகிழ மரத்தின் நிழலையும் காட்டாற்றின் கரையையும் காட்டவில்லையே?” என்றார். இவருக்கு எப்படி …? எதிர் கிளையின் பறவையை நினைத்தே உறங்கப் போனாள்.

அடுத்த நாள் முதல் விக்ரமனின் எல்லை மீறல்கள் மெல்ல அரங்கேறின. இவள் அதிகாலை காட்டிற்குள் செல்லும் போது அன்று ஸ்பரிசம் அலர்ந்த பூவாக முழுக்காடே இருக்கும். தினம் தோறும் புதிதாகக் காட்சியளிக்கும் காடு இன்று யாரோ உடுத்தி எரிந்த பழைய ஆடை போல இருந்தது காயத்ரிக்கு. சில சமயங்களில் விக்ரமனின் கால்தடம் தனக்கு முன்பே காட்டின் விளிம்பில் கண்டு எரிச்சல் படுவாள். இந்த மனிதனுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என் சாம்ராஜ்யத்தை ஏன் பங்கு போட வந்திருக்கிறார். விக்ரமன் வந்தது பங்கு போட  அல்ல மொத்தமாக ஸ்வீகரித்துக்கொள்ள என்பது காயத்ரிக்கு தெரியாது. அதுவும் அன்று மகிழ மரத்து நிழலில் அவர்  உறங்குவதைக் கண்டு தன் வாழ்நாள் இரகசியமே மேடை ஏறியது போல் கூச்சப்பட்டாள். இந்த மனிதனின் ஸ்பரிசம் பட்ட காட்டாறும் மகிழம்பூ படுக்கையும் அருவருப்பாய் இருந்தது. காடே இவன் வாசம் சுமந்து நின்றது. ஏகாந்தத்தைத் தேடி காட்டுக்குள் வாசம் செய்தவள் தற்போது காட்டை தவிர்க்கும் சூழல் உருவானது. அவன் இல்லாத பொழுதும் காடு முழுவதும் அவன் கண்கள் இருப்பது போலத் தோன்றியது.

. ஒரு நாள் பொறுக்க முடியாமல், “ஏன் ஐயா தாங்கள் தவசி என்றல்லவா தந்தை சொன்னார்? நீங்கள் என்னவோ எப்போதும் மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறீரே? அரச மரம் இன்னும் காட்டில் கிடைக்கவில்லை போலும்” என்று ஏளனம் செய்தாள். “எனக்குப் பூப்பபடுக்கையும், முள் படுக்கையும், மலைக் குகையும், கல் படுக்கையும் ஒன்று தான் பெண்ணே”.

“ஓகோ படுத்துக்கொண்டே தியானம் செய்பவர் போலும். இது என்ன புது வித்தையோ?”

“அசையாது, அனைத்தையும் அடக்கி தியானிக்கும் முறையைத் தந்தையிடம் கற்றிருப்பாய் என் வித்தை உனக்குப் புதியதாய் தான் இருக்கும். எண்ணங்களை ஒரு மையத்தில் குவிப்பது அல்ல என் தியானம். குவிந்தவற்றை எங்கும் வியாபித்திருக்கச் செய்வதே என் தியானம். என் எண்ணக் குவியல்கள் வெடித்துச் சிதறட்டும் எட்டுத்திக்கும்“.

“பரவட்டும் பரவட்டும் தங்களுக்கு மோட்சம் கிடைத்தாற் போலத்தான்” என்று கூறி விட்டு நகர்ந்தாள்.

காடு நனைந்து, குளிர்ந்து வெம்பிப் பூத்துக் காய்த்து உதிர்ந்து தணிந்தது. ஆனால் இந்த விக்ரமன் மட்டும் காட்டை விட்டு விலகவே இல்லை. யோசித்துப் பார்த்தால் தன்னை போலவே தான் இருக்கிறார் என்று காயத்ரிக்கு தோன்றியது குடிலில் இரவில் மட்டுமே பகல் முழுவதும் காட்டில் அலைவது தான் வேலை.

“ஐயா இங்கே நீங்கள் பெரிதாக எதுவும் செய்வது போல் தெரியவில்லையே பேசாமல் உங்கள் ஊரைப் பார்த்துப் போகலாமே?  ” என்றாள்.

“உனக்கும் இங்குப் பெரிதாக வேலை இருப்பதாகத் தெரியவில்லையே நீ ஏன் விட்டு விலகவில்லை?”

“இது என் வாழ்விடம், என் வளர்ந்த பொழுதுகளின் சாட்சிகள் இங்கே, இது என் காடு ….” முடிக்கும் முன்பே உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“என்ன உன்னுடையது என்றா சொன்னாய்? இந்த வனம் என் வசமாகி வெகுநாட்கள் ஆகிறதே தெரியாதா உனக்கு? என் வாசம் இந்த வனம் முழுவதும் வியாபித்து விட்டது என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

காடு எப்படி அவன் வசமானது என்று காயத்ரிக்கு காட்ட ஆரம்பித்தான். ஒரு நாள் காயத்ரி குடிலின் அருகே அமர்ந்து மறையும் கதிரை நோக்கியபடியே புல்லைக் கடித்துக் கொண்டிருந்த போது  விக்ரமன் காட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் கையில் ஒரு விசித்திரப் பூவுடன். அதன் வாசம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவள் கண்களில் இதுவரை பட்டிடாத ஒரு பூ இந்தக் காட்டில் இருக்கிறதா என்ன! ஒவ்வொரு நாளும் ஒரு விசித்திரத்தைக் காட்டில் கண்டெடுத்தான். அது அவளின் பார்வையில் படும்படி செய்தான். அவனுக்குத் தெரியும் அவள் வனத்தில் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி என்று. இது பூவுக்குப் புல்லரிக்குமே தவிரப் புயலுக்கு அஞ்சாது என்று.

இவன் நிச்சயமாக தவத்தில் நாட்டம் உள்ளவன் போலத் தெரியவில்லை. வேறு ஏதோ நோக்கத்துடனே இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறான். காரணம் தெரிந்து தெரிந்துவிட்டால் இந்தத் தொல்லையை இங்கிருந்து விரட்டி விடலாம். விக்ரமனை கண்காணிக்க ஆரம்பித்தாள். அது அவ்வளவு சுலபமாக இல்லை. விக்ரமனை பின்தொடர்வது கானல் நீரை அள்ளுவது போல இருந்தது. யார் இவன்? புரியாத புதிரிடம் எப்படிப் போட்டி போட்டு ஜெயிப்பது.

காடு கொஞ்சம் கொஞ்சமாக விக்ரமனுடன் கைகோர்க்க ஆரம்பித்தது. பட்ட மரங்கள் மெல்லத் துளிர்க்க ஆரம்பித்தன, அடிபட்ட ஜந்துக்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தன, மழை ஜோவென கொட்ட ஆரம்பித்தது. இதுவரை காட்டில் உள்ள உயிர்களையே பார்த்து வளர்ந்த காயத்ரிக்கு காடே உயிர்த்து எழுவது போல இருந்தது. இவ்வளவு நாட்களாக உறங்கிக் கொண்டிருந்த வனத்தையா பார்த்துப் பிரமித்தேன்?

  ஒரு நாள் விக்ரமனை பின் தொடர்ந்து செல்கையில் காட்டில் இருக்கும் ஓர் ஓடையில் கண்டாள். கோடையில் வற்றியே காணப்படும் ஓடையில் நீர் நிறைந்திருந்தது. இந்த முறை மழைக்குப் பஞ்சமே இல்லாததால் இருக்கும் என நினைத்தாள். மக்கிய இலைகளின் வாசம் தென்றல் சுமந்து வந்தது. ரம்மியமான அந்தச் சூழலில் அப்படியே நீரோடையின் அருகே படுத்து விட்டாள். மெல்லப் பூச்சிகள் சில அவளின் மேல் ஊற ஆரம்பித்தன. தென்றல் வீசிக் கொண்டே இருந்தது. மெல்லக் காற்றுக்குச் சற்று பலம் கூடியது. படுத்த படியே மர உச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மரக்கிளைகள் மெல்லச் சலனம் கொண்டன. காற்றின் வேகம் ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு அடிக்காமல் ஒரு வட்டத்திற்குள் சுழல்வது போல இருந்தது. தப்பிக்க வழியில்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்ட காற்று சற்று வீரியம் கொண்டு அதிவேகத்தில் ஊளை இட்டுக்கொண்டே சுழல ஆரம்பித்தது. சற்று பக்கவாட்டில் தலையைத் திருப்பி காயத்ரி அப்பால் இருக்கும் மரங்களைக் கண்டாள். அங்கே எந்தச் சூறாவளியும் வீசுவது போலத் தெரியவில்லை. அந்தரத்தில் சுழலும் காற்றில் இலைகளும், சருகுகளும் சேர்ந்து காற்றில் படு வேகத்தில் சுழல்வதைப் பார்த்துக் கொண்டே மூர்ச்சையானாள். அவள் நினைவு திரும்பி கண் திறந்த போது விக்ரமனின் முகத்தில் தான் விழித்தாள். “காடே என் வீடு என்பாயே? இதற்கே மூர்ச்சையாகி விட்டாய் போல?” என்று ஏளனம் செய்தான். அவனைப் பார்க்கப் பிடிக்காமல் குடில் நோக்கி விரைந்தாள். இரவின் உறக்கம் முழுவதும் கனவில் காற்றின் ஓலமே.

அன்று தான் முதன் முறையாக காயத்ரி ஒருவிஷயத்தை கவனித்தாள். விக்ரமனின் குரல் மிகவும் வசீகரமாக. இருந்தது. தோள் வரை படரும் கூந்தல், வார்த்தைகளில் ஏளனம். விக்ரமன் இரண்டு காதுகளுக்குப் பின்னால் இருந்து கூந்தலைத் தூக்கி முன் மண்டையில் கொண்டையாகக் கட்டி இருப்பான். சில நாட்களில் காட்டுப் பூக்களைக் கோர்த்து கழுத்தில் மாலையாய் போட்டிருப்பான். ஆற்றில் நனைந்த  தேகத்துடன் வெளியே வரும் விக்ரமனை நேருக்கு நேர் காண முடியாமல் தலை திருப்பிச் சென்று விடுவாள். ஆனால் கண்களிலோ பிரபஞ்சமே தெரிகிறது. சீ ஏன் இப்படி ஓர் எண்ணம் என நொந்துகொள்ள ஆரம்பித்தாள். காடு கைமாறிப் போனது மெல்ல  உரைக்க ஆரம்பித்தது. காட்டில் அவள் செய்ய முடியாது எனச் சில இருந்தன. பிறப்பும்-இறப்பும் இவள் கையில் இல்லை. உயிர்பிப்பது இவள் கையில் இல்லை. விக்ரமனால் அது சாத்தியப்பட்டது. இது காயத்ரிக்கு சற்று ஆறுதல் அளித்தது. காடு இது நாள் வரை அவளின் ஆன்மாவுக்கு ஆறுதல் அளித்தது. ஆனால் விக்ரமனோ காட்டையே உயிர்ப்பிக்கிறான். இவ்வளவு வித்தையை எவரிடம் கற்றானோ தெரியவில்லை? ஒரு வேளை அவன் சொன்ன விசித்திரத் தியானம் தான் அவனுக்கு அந்த வித்தையை கற்க உதவியதோ? இந்தக் காட்டிற்கு இவன் வந்த நோக்கம்தான் என்ன? கோபம் சற்று குறைந்து விட்டதோ? தான் காட்டிடம் இவ்வளவு நாள் எடுத்துத் தான் இருக்கிறோம் ஆனால் முதன் முறையாக யாரோ காட்டிற்கே திருப்பிக் கொடுக்கிறார்கள். என்னை விட இந்த வனத்திற்கு விக்ரமன் தான் தேவை என்று நினைக்க ஆரம்பித்தாள். நன்றி உணர்ச்சியே மேலெழுந்தது. கோடையிலும் வரண்டு போகாத குட்டைகள், மீண்டும் துளிர்க்கும் பட்ட மரங்கள், நட்புடன் பழகும் மிருகங்கள். அவனைச் சுற்றி எப்போதும் சில ஜீவன்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. எதை அவனிடம் பார்த்து இந்த ஜீவராசிகள் அவன் காலைச் சுற்றுகின்றன? காயத்ரியின் செல்ல மான் குட்டி அவள் மடியிலிருந்து வழுக்கி அவன் பின்னாலேயே ஓடியது .காடும் அவனுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிட்டதா என்ன?

காட்டில் உள்ள காயத்ரியும் அதற்கு விதிவிலக்கல்ல. காயத்ரிக்கு விக்ரமனுடன் நெருங்கிப் பழக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அவன் கண்களில் படும்படி செய்தாள். காட்டில் அவன் ஏதேனும் செய்யும் போது அவனுக்கு உதவியாக இருக்க முயன்றாள். அவன் முயலுக்கு வைத்தியம் பார்க்கும் போது மூலிகைச் சாற்றைப் பிழிந்து கொடுப்பாள் முறிந்திருக்கும் மரக்கிளைகளைக் கட்ட காய்ந்த வேர்களைக் கொண்டு வருவாள். சில வித்தைகளை அவனிடம் கற்க ஆரம்பித்தாள். புரிதல் அதிகரித்ததால் இருவருக்கிடையே பேச்சு குறைய ஆரம்பித்தது.

ஒரு நாள் விக்ரமன் அவளிடம் ஓர் உதவி கேட்டான். காயத்ரிக்கு விசித்திரமாக இருந்தது. நான் உதவி செய்யும் அளவிற்கு இவனுக்கு என்ன தேவை இருக்கிறது.

 “நான் சில நாட்களுக்கு வெளியே செல்லும் வேலை இருக்கிறது அது வரை இந்த வனத்தை நீ காப்பாற்ற வேண்டும்” என்று கூறினான்.

“வனத்தில் காப்பாற்ற என்ன இருக்கிறது? அப்படி என்றால் ஏதாவது ஆபத்தை எதிர்பார்க்கிறீர்களா?”

“ஆபத்து என்று இல்லை ஆனால் நீ காவல் காப்பேன் என்று எனக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும். செய்வாயா?”.

காடே இவன் வீடு போல அதை எனக்குக் காவல் வைத்துவிட்டுப் போகிறானே ஒரு வேலை இது தான் இவன் இந்தக் காட்டிற்கு வந்த நோக்கமோ காட்டை காக்கத்  தவசியை அனுப்பியவர்கள் யாரோ.

“ஆனால் ஆபத்து என்ன என்று சொல்லுங்கள்”

“என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் உறுதிமொழி மட்டும் அளிக்க வேண்டும் என்ன நடந்தாலும் நீ இந்தக் காட்டை கைவிடக் கூடாது” என்று சொல்லி பாசிப்பச்சை நிறத்தில் இருந்த ஒரு கல்லை அவள் கையில் கொடுத்துச் சென்றான். “நான் திரும்பும் வரை இதை நீ மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி அடுத்த நாள் மறைந்தான்.

காயத்ரியின் உள்ளங்கையை விடப் பெரியதாய் அந்தக் கல் இருந்தது உள்ளே ஏதோ நீரோட்டம் போல ஓடியது. அதைப் பத்திரமாகத்  தன் குடிலுக்குள் மறைத்தாள். அந்தக் கல்லைத் தினமும் காட்டிற்கு எடுத்துச்செல்வதும் மீண்டும் குடிலுக்குக் கொண்டு வருவதுமாய் இருந்தாள். ஒரு நாள் காட்டின் தனிமையில் அமர்ந்திருந்த போது  அந்தப் பறவை மீண்டும் எதிர் கிளையில் வந்து அமர்ந்தது.

ஒரு காலை வேளை வழக்கமாக இருக்கும் இடத்தில் மணியைக் காணவில்லை. பதற்றத்தில் முன்று சென்ற இடம் எல்லாம் தேடினாள் காயத்ரி. அவள் பதற்றத்தைக் கண்ட அவளின் தாய்,

“ஓ அதுவா அதை எதற்குச் சேர்த்து வைக்கிறாய் என்று நான் தான்  ஆற்றில் தூக்கி எறிந்தேன்”  

காயத்ரி ஆற்றை நோக்கி வேகமாக ஓடினாள். ஆற்றில் அடித்துச் சென்றிருந்தால் எப்படி மீட்பது என்று புரியாமல் தவித்தாள். மூச்சிரைக்க ஆற்றில் குதிக்கப் போனவள் விக்ரமன் கையில் மணியுடன் ஆற்றிலிருந்து எழுவதைக் கண்டாள். மணி கிடைத்த சந்தோஷம் ஆனால் இவர் எப்படிச் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார் எனக் குழப்பமாகவே இருந்தது. 

  விக்ரமன் காட்டை விட்டுப் போக வேண்டும் என்று நினைத்தவளுக்கு அவன் திரும்பி வந்தது பெரும் நிம்மதியைத் தந்தது அவன் திடீரென்று எப்படி அங்குத் தோன்றினான் என்று கேட்க வேண்டும் என்று நினைத்தாள்.

“அந்த மணியில் அப்படி என்ன தான் இருக்கிறது அதை அவ்வளவு பத்திரமாக வைக்கச்சொன்னீர்களே?”

“அது ஒன்றும் இல்லை சில ஆற்றுப்படுகைகளில் கிடைக்கும் பச்சை நிறம் கொண்ட கூழாங்கல் அதில் விசேஷம் ஒன்றும் இல்லை”

“என்ன?”

“மிகவும் பத்திரமாகக் காத்தாயோ?” என்று சொல்லிச் சிரித்தான்.

“பின்பு ஏன் அதைப் பாதுகாக்கச் சொன்னீர்கள்?”

“அதுவா நான் திரும்பும் வரை நீ என் நினைவாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படி ஒன்றைச் சொல்லிவிட்டுச் சென்றேன்”

தன் முட்டாள்தனத்தை வெளிக்காட்டாமல் காயத்ரி குடிலுக்கு வேகமாக நகர்ந்துவிட்டாள்.

சில நாட்கள் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தாள். பல நாட்கள் அந்தப் போக்கைத் தொடர முடியவில்லை மீண்டும் விக்ரமனுடன் சேர்ந்து காட்டை சுற்ற ஆரம்பித்தாள். விக்ரமனுடன் செல்லும் போது  அவன் நட்பு வட்டத்தைக் கவனித்தாள். அன்று ஒரு பறவை தானாகவே அவன் தோளில் வந்து அமர்ந்தது. அவன் எங்குச் சென்றாலும் சில மிருகங்கள் அவன் பின்னாலேயே தொடர்ந்து வரும். அவனை நெருங்க ஆரம்பித்ததில் இருந்தே அவ்வப்போது ஏதாவது ஒரு நறுமணம் அவனிடம் இருந்து காற்றில் படர்வதை உணர்ந்தாள். சில நேரங்களில் சந்தன வாடை சில நேரங்களில் மரமல்லியின் வாசம் நமக்கு எல்லாம் வேர்க்கும் இவனுக்கு மட்டும் மணக்கும் போல.

“உங்களிடம் மட்டும் எப்பொழுதும் நறுமணம் வீசுகிறதே எப்படி ஏதாவது வாசனை நெய் பூசுகிறீர்களோ?”

“அதுவா அதற்கு நீ தான் காரணம்”

“என்ன? நானா?”

“ஆமாம் நீ என்னை நினைத்தால் சந்தன வாடை வீசும் கொஞ்சம் பேசினால் பூக்களின் வாசம் வீசும்”

அந்த நாளில் இருந்து தனிமையிலும் சந்தன வாடையை உணர்ந்தாள் காயத்ரி. இரவின் உறக்கத்திலும் ஆற்றின் வெள்ளோட்டத்திலும் லயித்திருக்கும் போது உணரும் சந்தன வாடை உணர்ந்து நினைவு சங்கிலியை அறுக்க முயல்வாள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தனித்தே இயங்குபவை. ஒரு நொடியை இன்னொரு நொடியுடன் இணைப்பவை நம் நினைவு சங்கிலிகளே. நினைவு சங்கிலிகள் இல்லையென்றால் நமக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்திருக்காது. கடந்த காலத்தின் பெருமைகளையும்  வலிகளையும் தவறுகளையும் சுமந்து நிற்கும் சமூகங்களும் குடும்பங்களும் தனி மனிதர்களும் உண்மையில் அந்தச் சங்கிலியைக் கெட்டியாகப் பிடித்திருப்பவர்களே. காயத்ரி எவ்வளவு முயன்றாலும் சங்கிலியை மட்டும் அறுக்க முடியவில்லை மாறாக இருவரும் சேர்ந்தே சிறுகச் சிறுக சங்கிலியைக் கோர்த்தார்கள்.

நாட்கள் நகர வாசங்களுக்கு வாசல் திறக்க ஆரம்பித்தாள். அங்கொன்றும் ஈங்கொன்றுமாய் நாசியைத் தொட்ட வாசங்கள் இப்பொழுது இவள் மூச்சுக்காற்றாகிப் போனது. காட்டின் நாடியை அறிந்தவனுக்குப் பெண்ணின் மனநிலையா புரியாமல் போகும்.

“நேற்று நடு இரவில் அப்படி என்ன நினைத்தாய் என்னைப் பற்றி”

  “ஏன் கேட்கிறீர்கள்?”

“இல்லை நேற்று இரவு காரணமே இல்லாமல் என் உடல் வெட்பக் காடாகிப் போனது”  

தலைநகர் சென்று திரும்பிய சந்திரன் நாட்டு நடப்புகள் பற்றி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்கு சந்திரன் கூறிய ஒரு செய்தி பயத்தை உண்டாக்கியது. எதிரி நாட்டு ஒற்றன் ஒருவன் தலைநகரின் காவலிலிருந்து தப்பித்து விட்டான். பல மாதங்களாகக் கிடைக்கவில்லையாம். அந்த வாலிபன் விக்ரமனாக இருக்குமோ?   ஒருவேளை உண்மையாக இருந்தால் அவன் ஆட்டம் அன்றோடு முடிந்துவிட்டது. ஆனால் அதன் பின்னர் தன் நிலைமை? அவன் எதிரி நாட்டு வாலிபன் என்றும் இருக்க முடியவில்லை, காட்டின் சேவகன், நம்மவன் என்று நம்பி அவனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

ஒரு நாள் திடீரென்று குதிரைகளின் காலடி சத்தம் கேட்டு மிருகங்களும் பட்சிகளும் மனிதர்களும் அதிர்ந்தார்கள். ஆசிரமத்தின். அமைதியைக் குலைக்க வந்த கிருமிகளாக வந்து சேர்ந்தார்கள் படை வீரர்கள். ஆசிரமத்தில் காட்டில் எனப் பல இடங்களில் தேடினார்கள். புதிதாக ஒரு வாலிபன் அந்தக் காட்டின் அருகில் வசிப்பதாக யாரோ  கொடுத்த செய்தியின் பேரில் காட்டை வந்தடைந்தார்கள். காயத்ரி உட்பட அனைவரும் ஆசிரமத்திலேயே தங்கி விட்டனர். பொழுது சாயும் போது வெறும் கையுடன் வீரர்கள் வெளியேறினார். எப்படித் தப்பித்தான் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்கள் தேடி வந்த ஆள் இவன் இல்லை என்பதால் விட்டுச் சென்றார்களா? மறுநாள் விக்கிரமன் எப்பொழுதும் போல் காட்டில் உலாவிக்கொண்டிருந்தான்.

 “நேற்று வீரர்கள் வந்தார்களே அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்ததா?”

வார்த்தைகளை எச்சரிக்கையுடன் கோர்த்தாள் காயத்ரி.

“அவர்களுக்கு என்னைப் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை”

“என்ன மறைந்துவிட்டீர்களா? அல்லது மரத்தில் ஏறி அமர்ந்து விட்டீர்களா”

 “அன்றில் பறவையாய் மரத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்”

“தாங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று இதுவரை சொன்னதே இல்லையே?”

“அப்படி ஒன்றுமே ஒரு வட்டத்துக்குள் என்னை அடைத்து வைக்க முடியாது. வீசும் காற்றுக்குத் தேசம் கிடையாது பெண்ணே”

“தங்கள் உண்மையில் யார்? பரதேசியா? நாடோடியா? ஒற்றனா? கயவனா?”

“உன் உள்ளம் கவர் கள்வன்”

“இல்லை”

பொய் சொன்னதற்குத் தண்டனை இன்றைக்கு உனக்குக் கிட்டும் ஜாக்கிரதை. இரவு காயத்திற்கு உறக்கமே இல்லை. என்ன தண்டனை கொடுப்பான் என் குடிலுக்கு வந்துவிடுவானோ. பயத்தில் விளக்கை அணைக்காமலேயே படுத்திருந்தாள். மண் சுவற்றில் விழுந்த தன் நிழலையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மாயாவி தண்டனையைக் காயத்தின் தேகத்தில் தந்து விட்டுச் சென்றதே தெரியாமல் உறங்கினாள். விடிந்ததும் எதுவும் நடக்கவில்லை என்ற நிம்மதியில்  ஆற்றில் குளிக்கச் சென்றாள். ஆடைகளைக் கலைந்த போதுதான் கவனித்தாள். இடது மார்பில் இதயத்திற்கு மிக அருகே விக்ரமனின் உருவம் பச்சை மையில் பொறிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் காயத்ரி வேகமாக உடலை மறைத்தாள். மரக்கிளையில் ஓர் அணில்  தன்னையே பார்ப்பது போல இருந்தது. காயத்ரி  ஒரு கல்லை அதன் மேல் தூக்கி விட்டெறிந்தாள்.

அவன் முத்திரை பதித்த தேகத்தை அழிப்பதே பெரும்பாடாக இருந்தது. வசமாகப் பழிதீர்த்து விட்டானே. ஆனால் எப்போது வந்து இந்தக் காரியத்தைச் செய்துவிட்டுச் சென்றான் என்றே தெரியவில்லை. 

“என்ன காயத்ரி காதலனை இதயத்தின் அருகிலேயே சுமக்கிறாய் போலும்”

“எனக்குக் காதலன் கிடையாது. சுமைகளும் கிடையாது”

“உன் இதயத்தை நீயே கேட்டுப்பார் இல்லை நானே உன் இதயத்திடம் கேட்கவா” என்று சொல்லி விரல்களை அவள் இடது மார்பு வரை கொண்டு சென்றான். காயத்ரி பதற்றத்தில் விலகி நின்றாள்.

“என்ன தைரியத்தில் இரவில் ஒரு பெண்ணின் குடிலுக்கு  வந்தீர்கள். இந்தத் தண்டனையுடன் நான் எப்படி என் வாழ்நாளைக் கழிப்பேன். உங்கள் மேல் எனக்கு இருந்த மரியாதையை இழந்துவிட்டீர்கள். வெடித்துவிட்டுக் கிளம்பினாள்”

“சரி சரி கோபப்படாதே நானே அழித்துவிடுகிறேன்”

“எப்படி இதை அழிக்க முடியும்?”

“ எப்படித் தோன்றியதோ அப்படியே மறைந்துவிடும். ஆனால் நீ உன் காதலை ஒப்புக்கொள்ள வேண்டும்.”

இரவில் அகல் வெளிச்சத்தில் கண்ணீர் சிந்தப் பச்சை உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த இரவின் மாயாவி என்ன செய்தான் என்று தெரியவில்லை. விடிந்ததும் தண்டனைக்காலம் முடிந்து உருவம் வரைந்த சுவடே இல்லாமலானது. வெகு நாள் கோபத்தைச் சுமக்க முடியாமல் சகஜமானாள்  காயத்ரி. வந்த தடமும் தெரியவில்லை அழித்த தடமும் தெரியவில்லை. விக்ரமன் என்பதற்குப் பதில் விசித்திரன் என்று பெயர் வைத்திருக்கலாம். இந்தச் சித்து வேலையை எப்படிச் செய்தான் என்று கேட்கவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது காயத்ரிக்கு.

ஆசிரமத்தில் நான்கு வேதங்களைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. காயத்ரிக்கு பொழுது போகாமல் அதைப் பற்றி விக்ரமனிடம் கேட்கலாம் என்று பிரபஞ்சத்தைப்பற்றித் தோன்றிய சில யூகங்களை விக்ரமனிடம் சற்று வினவினாள்.

 “மாயாவி பிரம்மம் என்றால் என்ன? இந்த இயற்கை ஏன் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது?”

“தாயின் மடி போல் இருப்பதினாள்.”

“தங்களுக்கு இந்த வனம் தாயா? மழலையை?”

விக்கிரமன் தன்னை மறந்து அமைதியாய் இருந்தான். ஏதோ சில தருணங்களில் அவன் இது போல் அமைதியாக இருப்பதுண்டு. இது நல்ல தருணம் என்று காயத்ரி அவனிடம் “இங்கே எதற்கு வந்தீர்கள்? உண்மையில் நீங்கள் யார்?” என்று கேட்டாள்.

“விளையாட்டாய்  வந்துவிட்டேன். ஆனால் திரும்பிச் செல்வது இயலாது போலிருக்கிறது”.

“ஏன் இந்த வனம் விட்டுச் செல்ல மனமில்லையா?”

“நானும் இந்த வனமும் வெவ்வேறு அல்லவே விட்டுப் பிரிய. வந்த காரியம் இன்னும் முடியவில்லை”

“என்ன காரியமோ?”

“விரித்த வலையில் நானே சிக்கித் தவிக்கிறேன்”

“யாருக்காக விரித்த வலை எனக்காகவா?”.

“காயத்ரி நீ எனக்கு ஓர் உதவி செய்வாயா?”

“இந்த முறை என்ன? சிவப்புக்கல்லைக் காக்க வேண்டுமா?”

“காயத்ரி உனக்கு என்னை எவ்வளவு நாட்களாகத் தெரியும்?”

“ஒரு வருடம் ஆகி விட்டது நீங்கள் வந்து”

“இல்லை நான் எப்போதும் உன்னுடனே தான் இருக்கிறேன். யோசித்துப் பார். ஒருவேளை உனக்கு விடை கிடைக்கலாம்”

“புதிர் வேண்டாமே”

“உண்மையை ஏற்கும் பக்குவம் வரும் வரை எல்லாம் புதிராகத்தான் தோன்றும்”

“எனக்கு தலையே சுற்றுகிறது. ஒரு மாயாவி நடத்தும் நாடகம் என்று தெரிகிறது ஆனால் எப்படி முடிப்பது”

“தொடங்கியவள் நீதனே நான் எப்படி முடிக்க”

விசித்திரன் மறைந்து விட்டான். எப்போது வனம் திருப்புவான் என்று தெரியவில்லை. அன்று இரவு அந்தப் பறவை அவளின் குடிலின் கூரையில் வந்து அமர்ந்தது. குழம்பிய மனநிலையில் விடிந்ததும் அந்தப் பறவையைத் தேடினாள். எப்படிக் கிடைக்கும்? விக்ரம் தான் திரும்பிவிட்டானே. 

“என்ன காயத்ரி தெளிந்திருப்பாய் என்று நினைத்தேன் மேலும் குழம்பி விட்டாய் போலும்”

“இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை நான் எப்படி ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை மாயாவி நடத்தும் நாடகம் என்று புரிகிறது ஆனால் இதில் என் பாத்திரம் என்ன என்று தான் புரியவில்லை”

“உன் அழைப்பின் பேரிலேயே நான் வந்தேன்”

“எப்படி?”

“நீதனே வேண்டினாய் பெண்ணே காட்டின் காவலன் உயிர்த்தெழுந்து வர வேண்டும் என்று. உறங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டி எழுப்பியவள் நீ தானே. வரம் கேட்டாய் அளித்துவிட்டேன். இனி கதையை நீதான் முடிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு மறைந்தான்.

காயத்ரியின் ஆழ்மனது கனவில் புதிர் அவிழ்த்தது. காயத்ரிக்கு சிறு வயதில் இருந்தே பிராணிகள் மீது பிரியம் அதிகம். தன் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது நேர்ந்தால் அழுகையை அடக்கவே முடியாது. செல்ல மான் குட்டி ஒன்றுக்குக் கால் முறிந்ததை அவளால் தாங்கிக்கொள்ளவே  முடியவில்லை. சதா அழுது கொண்டே இருந்தாள். அவளை விட வயதில் சற்று பெரியவர்கள் சிஷ்யர்களாக அங்கே சிலர் இருந்தனர். அவர்களில் சந்திரனும் ஒருவன். அவன் விளையாட்டாய்,

“அங்கே ஒரு மகிழமரம் இருக்கிறது பார் அதனிடம் சொன்னால் மான் குட்டிக்குச் சரியாகிவிடும்” என்றான்.

“நிஜமாகவா?”

“ஆமாம் ஆனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் போய்  அழைக்க வேண்டும்”

“என்ன சொல்லி அழைக்க வேண்டும்”

“காட்டின் காவலனே மனமிறங்கி வந்து என் மான் குட்டியைச் சரி செய்யவும்” என்று கேட்க வேண்டும்.

காயத்ரி மகிழமரத்திடம் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடினாள் . பல முறை அழைத்தும் மரம் அசையாதிருந்தது. அழுது கொண்டே குடிலை அடைந்தாள்.

அடுத்த நாள் மாலை காயத்ரி மகிழமரத்தின் அருகே உட்கார்ந்திருந்த போது காட்டில் இடையர்கள் ஆடு மாடுகளை மேய்த்து விட்டு தங்கள் இருப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டம் நகர்ந்த பின் இடையர் கூட்டத்துச் சிறுவன் ஒருவன் மட்டும் தனியே வந்து கொண்டிருந்தான். இடுப்பில் ஊதுகோல் சொருகி மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்து காலசைத்து கொண்டிருந்தான். காயத்ரியின் அழுகையைப் பார்த்து அவளை நெருங்கி வந்து ஸ்நேஹமாய் சிரித்தான். இடுப்பில் இருந்த ஒரு பழத்தை எடுத்து நீட்டினான். அவளோ அவனைச் சட்டை செய்யவே இல்லை.

“குட்டியின் காலை நான் சரி செய்கிறேன் என்னிடம் கொடு” என்றான்.

“உனக்கு என்ன தெரியும்? இது மான் குட்டி ஆட்டுக் குட்டி இல்லை”

“எனக்கு மூலிகைகளின் பரிச்சயம் உண்டு”

அவள் அசந்த நேரம் பார்த்து மான் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். அடுத்த நாள் இவள் இருக்கும் இடம் தேடி வந்து மான் குட்டியைத் திருப்பித் தந்தான்.

“போய் விடு இது என் காடு” என்று கத்தினாள்.

“போனால் திரும்ப வரமாட்டேன்”

“பரவாயில்லை”

“மிகவும் வருந்துவாய்” என்று சொல்லிச் சென்று விட்டான்.

பிறகு தான் காயத்ரி கவனித்தாள் குட்டியின் காலில் எந்தக் காயமும் இல்லை. குட்டி உற்சாகமாக விளையாடியது. அந்தச் சிறுவன் மீண்டும் வரவே இல்லை. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஓடை நீரில் அந்தச் சிறுவனின் உருவத்தைப் பார்த்தால் காயத்ரி. கையில் மூங்கில் குச்சியுடன் மரத்தின் மேல் அமர்ந்திருந்த அந்த உருவத்தின் தேவகானம் காயத்ரிக்கு வசீகரமாக இருந்தது. தினமும் தேடி அழைத்தாள், வேண்டினாள், மன்றாடினாள். அந்த கானம் திரும்பக் கேட்கவே இல்லை. மீண்டும் மீண்டும் நீரின் மேல் அந்த உருவத்தைத் தேடி அலைந்தாள். தந்தையின் பாடசாலையிலும் கல்வியிலும் நாட்டம் குறைந்தது. சதா வனத்தையே சுற்றி அலைந்தாள். இசைப்பவரை நேரில் காண மன்றாடினாள். அவளுக்கு மிகவும் பரிச்சயம் ஆன மகிழ மரத்திடம், மான் கூட்டங்களிலும் தினமும் தன் ஆசையைக் கூறினாள். வனத்தில் ஊர்வனவற்றிடம் பேசுவாள், கிளைகளுடன் கிசுகிசுப்பாள். பல வருடங்கள் கழித்து உருவம் மீண்டும் வந்தது. வரம் கிடைத்தது கூட தெரியாமல் விக்ரமனிடம் பகைமை பாராட்டினாள்.

புதிர் அவிழ்ந்ததும் மகிழ மரத்தை நோக்கி ஓடினாள். அவள் கொண்டு வந்த முல்லைப் பூவை சூடி ஒரு கற்பாறையில் அமர்ந்து தேவ கானம் இசைக்க ஆரம்பித்தான் விக்ரமன். அவன் காலடியில் காயத்ரி அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள். மரவட்டைகளும் நின்று ரசித்தன.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “வன்யா”

Leave a Reply to Mrs.M.jessy malathiManivasagamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.