மூலம் : டோபையாஸ் ஓல்ஃப்
தமிழாக்கம்: மைத்ரேயன்

நாங்கள் உணவும், உறைவிடமும் கொடுக்கும் வாடகை விடுதிகளில் இனிமேல் வசிக்க மாட்டோம் என்று என் அம்மா வாக்குறுதி கொடுத்திருந்தார், ஆனால் சூழ்நிலைகள், அவர் அந்த உறுதியை நிறைவேற்ற விடவில்லை. அவர் வசிக்கும் நகரங்களை மாற்ற முடிவெடுத்தார்; நாங்கள் எங்காவது படுத்து உறங்க இடம் வேண்டி இருந்தது. இந்த விடுதி முந்தையதை விட மோசமானதாக இருந்தது, நட்புணர்வில்லாததாகவும், சாவு வீட்டைப் போலவும் இருந்தது, தவிர, நம்பிக்கை இழந்த மக்கள் தம்மைச் சூழும்படி விட்டு விடும் மோசமான வாடைகளால் சூழப்பட்டிருந்தது. எங்கள் தளத்திற்குக் கீழ்த் தளத்தில், ஒரு பயணக்கப்பல் ஊழியர், ஓய்வு பெற்றவர், இருமி இருமித் தன் நுரையீரல்களையே தொலைத்து விட முயன்று கொண்டிருந்தார். அவர் நட்பு பாராட்டும் குணமுள்ள முதியவர், தன்னுடைய படுக்கை விளிம்பில் அமர்ந்து எந்நேரமும் புகை பிடிக்கும் அவரின் மங்கிய ஒளியுள்ள அறையைக் கடந்து எங்கள் அறைக்கு நாங்கள் படிக்கட்டில் ஏறும் போதெல்லாம் என் அம்மாவுக்கு ஏதாவது பாராட்டைத் தருபவராக இருந்தார். பகல் நேரத்தில் நாங்கள் அவர் மீது பரிவு கொண்டிருந்தோம், ஆனால் இரவில், அடுத்த முறை வரப் போகிற இடைவிடாத இருமல்களை எதிர்பார்த்தபடி இருக்கையில், இடையில் இருந்த மௌனம் கனத்து எங்கள் அறையை நிரப்பும், அப்போது அவரை வெறுத்தோம். குறைந்தது, நான் வெறுத்தேன்.
என் அம்மா இது தற்காலிக ஏற்பாடு என்றார். நிச்சயமாக நாங்கள் அங்கிருந்து வெளியேறப் போகிறோம். இந்த எண்ணம் நிஜமாக நடக்கப் போகிற திட்டம் என்று எனக்கும், ஒருக்கால் அவருக்குமே நிரூபிக்கவோ என்னவோ, ஒவ்வொரு சனிக்கிழமையிலும், காலை உணவு நேரத்தில், செய்தித்தாளில் முழு வசதிகளுடன் கொடுப்பதாகச் சொல்லப்பட்ட அடுக்ககங்களுக்கான விளம்பரங்களைப் பூராவும் பார்வையிடுவார், அவற்றில் சிலவற்றை வட்டமிட்டுக் குறித்து வைப்பார், அவர் சொற்களில், அவை ‘எங்கள் தேவைகளுக்கு ஏற்றன’ என்று தெரிந்தவை. அந்த வர்ணிப்பு எனக்குப் பிடித்திருந்தது. உலகத்தில் எங்கள் தேவைகளுக்கும் ஏதோ மதிப்பு இருப்பது போல என்னை அது உணரச் செய்தது. அப்போது, தன் சாதுரியமான முகபாவத்தைத் தரித்துக் கொண்டு, என் அம்மா அவற்றின் வாடகைத் தொகைகளை ஒப்பிடுவார், மிகவும் அதிகமாக இருந்தவற்றோடு கூடவே, மலிவாக இருந்தவற்றையும் விலக்கி விடுவார். பின் வகைகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, குட்டியான ஃப்ரிட்ஜ், ஈரம் கோர்த்த சுவர்கள், குளியலறையில் தரைக்குள்ளே இறங்கிக் கொண்டிருக்கும் குளியல் தொட்டி, மேல் தளத்தில் பெண்சாதியை அடிக்கும் நபர். அந்தப் பாதையில் நாங்கள் ஏற்கனவே போய் வந்திருந்தோம். ஐந்து அல்லது ஆறு சாத்தியமான இடங்கள் தேறியதும், அவை இன்னும் கிடைக்கக் கூடிய நிலையில் இருந்தனவா என்பதைத் தொலைபேசி அழைப்பில் உறுதி செய்து கொள்வார், பிறகு அந்த நாள் முழுவதையும் ஒவ்வொரு இடமாகப் போய்ப் பார்த்து வருவதில் கழிப்போம்.
ஓரிடத்தை எடுகக இன்னமும் எங்களுக்கு வசதி இருக்கவில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள், முதல் மற்றும் கடைசி மாத வாடகைத் தொகைகள், சுத்தம் செய்ய ஒரு வைப்புத் தொகை என்றெல்லாம் கேட்டார்கள். அவற்றைக் கொடுக்கத் தேவையான பணத்தைச் சேகரிக்க என் அம்மாவுக்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும். இது எனக்கும் தெரிந்து இருந்தது, ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் அம்மா இதே நிகழ்ச்சிகளை மறுபடி நடத்தினார், அது நான் கற்பனையில் மூழ்கி விடக் கூடாது என்பது போலிருந்தது. நாங்கள் சும்மா பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். சந்தை நிலைமை எப்படி என்று அறிந்து வந்தோம்.
பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதில் ஒரு கிளர்ச்சி நமக்குக் கிட்டும். தனக்கு என்ன வேண்டுமென்று அறிந்திருக்கும் ஒரு மனிதன், அதைத் தன் வீட்டுக்கு எடுத்துப் போகக் கூடிய நிலையில் இருக்கும்போது கிட்டும் அந்தக் கிளர்ச்சியை நான் இப்போதும் அனுபவித்து மகிழ்கிறேன். ஆனால் அந்நாட்களில் நான் வெறுமனே பார்த்து இருப்பதிலேயே மகிழ்ச்சி அடைந்து வந்தேன். அப்படி இருந்தது என் அதிர்ஷ்டம், ஏனெனில் நாங்கள் ஏகமாகப் பார்வையிட்டோம், எதையும் வாங்கவில்லை.
விலைச் சீட்டைக் குறி வைத்து நேராகப் போய்ப் பார்த்து, விலையை எப்படி ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்று சுற்றி இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்கும்படி குறை சொல்லிக் கொண்டு தம் தலையை ஆட்டிக் கண்டனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களும் விலைகளை ஒப்பீட்டில் சோதித்து வாங்குபவருமான சிலரைப் போன்றவர் இல்லை என் அம்மா. விலையைப் பற்றி அவருக்கு அப்படி ஒன்றும் அக்கறை இல்லை. அவரிடம் பணமும் இல்லை, ஆனால் அதை விட ஆழமானது ஒன்று இருந்தது அங்கு. அவர் பொருட்களைப் பார்வையிடுவதை விரும்பிச் செய்தார், ஏனெனில் கடைகளில் தான் இயல்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார், மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டவைகள் மீது அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவருக்கு உதவ வரும் விற்பனையாளர்கள் பொறுமையாக இருந்தார்கள், அவருடைய ஆர்வத்தில் ஏதும் மேலோட்டமாகவோ, ஈனத்தனமோ இல்லை என்பதை அவர்கள் பார்த்தனர். அந்த ஆர்வம் அவரை இளமையானவராக வைத்திருந்தது, அவரைத் தீவிரமாக இருக்க உந்தியது. வெளியில் அங்கே என்ன இருந்தது என்பதைப் பார்த்தே ஆக வேண்டியிருந்தது அவருக்கு.
நாங்கள் எப்போதுமே கடைகண்ணிகளுக்குப் போய்க் கொண்டிருந்தோம் என்றாலும், சியாட்டில் நகரில் கழித்த முதல் இலையுதிர்காலத்தின்போது, முன்பு எப்போதும் இல்லாதபடி நாங்கள் மிகவுமே நொடித்த நிலையில் இருந்தோம், அதனால் மிக மும்முரமாகக் கடைகளுக்குப் போனோம். நாங்கள் தோல் பெட்டிகளைப் பார்வையிட்டோம். புராதனப் பொருட்கள் மற்றும் ஓரியண்டல் தரை விரிப்புகளைப் பார்க்கப் போனோம். ஓரியண்டல் தரை விரிப்புகளைப் பார்ப்பது இலேசாகச் செய்யக் கூடிய வேலையில்லை, ஏனெனில் அவற்றை விற்கும் மனிதர்கள், உயரமான குவியல்களிலிருந்து குறிப்பிட்ட விரிப்புகளை இழுத்துக் கீழே தள்ளி, வியர்த்து வழிந்து கொண்டும், மூச்சு வாங்கிக் கொண்டும், அவற்றின் பளுவால் திண்டாடிக் கொண்டும், தம் முகங்களில் எங்கும் விரிப்புகளின் தூசு தும்புகள் அப்பியிருக்க, அவற்றை நம்மை நோக்கி உருட்டி வந்து, நாயாக உழைத்தார்கள். அவர்கள் அனேகமாக சிறு உருவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். நாம் கொஞ்சமும் கூச்சமில்லாமல் இருக்க வேண்டும். வெட்கமெல்லாம் அற்றவர்களாக, நம்மால் வாங்க முடியாதவற்றையும் பார்வையிடும் உரிமை நமக்கு உண்டு என்று நம்புபவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படிப்பட்டவர்களாக இருந்தோம்.
புது மோஸ்தர் ஆடைகள் வந்த போது, என் அம்மா அவற்றை அணிந்து பார்ப்பார், நான் அவரைப் பார்த்தபடி இருப்பேன். அவர் முன்பு ஆடைகளைக் காட்சியாக்கும் விளம்பரப்பெண்ணாக இருந்தவர், எப்படி கண்ணாடி முன் பாவனைகள் காட்டி நிற்பது, அகன்று போவது போலச் சுலபமாக நடந்து செல்வது, பிறகு ஒரு புறம் இடுப்பை உயர்த்திக் கொண்டு, யார் அவர் பெயரைச் சொல்லி அழைத்தார் என்று தோளுக்குப் பின்னே கழுத்தை மட்டும் திருப்பிப் பார்ப்பது போல நிற்பது என்பதெல்லாம் தெரிந்தவர். என்னைப் பார்க்க அவர் திரும்பும்போது, ஒரு புன்சிரிப்போடு அல்லது தோள் குலுக்கலோடு அல்லது சிறு வெறுப்போடு தலையை ஆட்டுவது என்று என் தீர்ப்புகளை வழங்குவேன். அவர் எல்லாவற்றிலுமே அழகாகத்தான் இருந்தார் என்று நான் நினைத்தேன், ஆனால் கொஞ்சம் தராதரம் பார்க்க வேண்டும் என்றும் எனக்கு இருந்தது. அவருக்கு மிகையான பாராட்டுதல் பிடிக்காது. அது மூச்சுத் திணறலை அவருக்குக் கொடுத்தது.
நாங்கள் செப்புப் பாத்திரங்களைப் பார்த்தோம். புல்வெளியில் போடும் மரக்கலன்களைப் பார்த்தோம், பிறகு பெக்கான் மரத்தில் செய்யப்பட்ட சாப்பாட்டு அறைக்கான மரக்கலன்களைப் பார்த்தோம். படகுத்துறைப் பக்கம், நொடித்துப் போன ஒரு க்ரிஸ்-க்ராஃப்ட் படகு விற்பனை நிலையத்தில் ஒருநாள் பூராவும் செலவழித்தோம். பெரும் தள்ளுபடி நாள் என்று அதை அவர்கள் அழைத்திருந்தனர். குறிப்பிடும்படி நாங்கள் சென்ற தள்ளுபடி விற்பனை அது ஒன்றுதான்.
வீட்டு வேட்டைக்கு நாங்கள் போகும்போது அம்மா அருமையான சாம்பல் நிறத்தில் முறையான முழு உடைகளை அணிவார். நான் இளம் கனவான்களுக்கான உடுப்புகளையும், V கழுத்துள்ள ஸ்வெட்டர், மற்றும் ஒரு வில் வடிவக் கழுத்துப் பட்டியையும் அணிந்து செல்வேன். ஸ்வெட்டரில் ‘தோழர்கள் அணி’ என்ற சொற்கள் முன்புறம் குறுக்காகப் பின்னப்பட்டிருந்தன. நாங்கள் கண்ணியமானவர்கள் போலத் தெரிந்தோம், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நாங்கள் அப்படிப்பட்டவர்கள்தான். பார்வைக்கு வசதியுள்ளவர்கள் போலவும் இருந்தோம்.
இந்தக் குறிப்பிட்ட நாளன்று பல்கலை வட்டாரத்தில் இருந்த அடுக்ககங்களை நாங்கள் சுற்றிப் பார்த்து வந்தோம். நாங்கள் பார்த்த முதல் மூன்று இடங்கள் பரவாயில்லை என்னும்படி இருந்தன, நான்காவது பாடாவதியாக இருந்தது- முந்தைய குடித்தனக்காரர், ஒரு பெண், குகையில் இருக்கும் மிருகம் போல அங்கு வசித்திருக்க வேண்டும். அதைச் சுத்தம் செய்து வைக்க யாரோ முயன்றிருக்க வேண்டும், ஆனால் ஜன்னல்களெல்லாம் திறந்திருந்த போதும், குளிரான காற்று உள்ளே அடித்து வீசிக் கடந்து போனபோதும், அந்த இடம் அழுகின மாமிசம் போல வாடை அடித்தது. வீட்டுச் சொந்தக்காரர், அந்தப் பெண் அவளுடைய திருமணம் முறிந்ததால் மிக மனமுடைந்து போயிருந்தார் என்று சொன்னார். வீட்டுக்குப் பெயிண்ட் அடித்துக் கொடுப்பதையும், புதுத் தரை விரிப்புகள் போடுவதையும் பற்றி அவர் பேசினாலும், வீட்டுக்காரர் சலித்துப் போயிருந்தார், விரைவிலேயே மௌனமாகி விட்டார். நாங்கள் அறைகளூடே நடந்து போனோம், பிறகு வெளியே வந்தோம். நாங்கள் அந்த இடத்தை எடுத்துக் கொள்வதில் ஈடுபாடற்றிருந்தோம் என்று அவருக்குத் தெரிந்து போயிருந்தது, தன்னுடைய தொடர்பு அட்டையைக் கொடுக்கக் கூட அவர் தயாராக இல்லை.
நாங்கள் பார்வையிட இன்னுமொரு அடுக்ககம் பாக்கி இருந்தது, ஆனால் என் அம்மா தனக்குப் பார்த்தவரையில் போதும் என்றார். எனக்குத் துறைமுகப் பக்கம் போகணுமா, இல்லை வீட்டுக்குப் போகணுமா இல்லை வேறெதாவது செய்யணுமா என்று என்னிடம் கேட்டார். அவருடைய முகம் வாடியிருந்தது, வாய் இறுகலாக இருந்தது. சுமுகமாக இருக்க அவர் முயன்றார், ஆனால் அவருடைய மனநிலை இருண்டிருந்தது. வீட்டுக்கோ, எங்கள் அறைக்கோ திரும்பிப் போகும் எண்ணம் எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் பல்கலைப் பக்கம் நடந்து போய் அங்கு ஏதாவது சுற்றிப் பார்க்கலாம் என்றேன்.
அவர் தெருவின் மேல் பக்கம் உற்று நோக்கினார். வேண்டாம் என்று சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். “சரி,” என்றார், “ஏன் செய்யக் கூடாது? ஏற்கனவே இங்கே வந்திருக்கோம்.””
நாங்கள் நடக்கத் தொடங்கினோம். சாலையின் பாதசாரிகளுக்கான நடைபாதையின் மருங்கில் பெரும் மேபிள் மரங்கள் இருந்தன. காற்று வீசி அடித்தபோது, கீழே வீழ்ந்திருந்த இலைகள், எங்கள் கால்களை உரசின, சுற்றிச் சுழன்றன.
“அப்படி ஒருபோதும் விழுந்துடக் கூடாது,” கைகளால் தன்னைக் கட்டிக் கொண்டபடி அம்மா சொன்னார், கீழே நோக்கினார். “அதை மன்னிக்கவே முடியாது.”
அந்தராத்மாவிலேயே புண்படுத்தப்பட்டவர் போலத் தெரிந்தார். நான் ஏதும் செய்யவில்லை என்று எனக்குத் தெரிந்திருந்ததால் நான் அமைதியாக இருந்தேன். அவர் சொன்னார், “என்ன ஆச்சுங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை, ஆனா அப்படி விழுந்து போகிறதுக்கு மன்னிப்பே கிடையாது. நான் என்ன சொல்றேங்கறதைக் கேட்டுகிட்டிருக்கியா நீ?”
“ஆமாம், அம்மா.”
கிளர்ச்சியோடு பேசியபடி, பத்துப் பனிரெண்டு சீனர்களின் குழு ஒன்று, எல்லாரும் அதில் இளைஞரகள், எங்கள் பின்னே வந்து கொண்டிருந்தது. எங்களருகே வந்து பிரிந்து கொண்டார்கள், கல் ஒன்றைச் சுற்றி ஓடும் நீர்போல, தாண்டியதும் மறுபடி இணைந்து, பேசிக் கொண்டே போனார்கள். நாங்கள் அவர்களின் பின்னே தெருவில் மேலே போனோம், குறுக்காகக் கடந்து அந்தப் பல்கலைக்குச் சென்றோம், அங்கே கட்டடங்களிடையே ஒளி மங்கும்வரையும், காற்றில் குளிர் அதிகமாகும்வரை, திரிந்தோம், நாங்கள் இங்கு இடம் பெயர்ந்த பின்னர் வந்த நாட்களில், இதுதான் குளிர் அதிகமாக இருந்த முதல் நாள், நாங்கள் குளிருக்குப் பாதுகாப்பாக உடுத்தியிருக்கவில்லை. ஆனால் நான் வாயைத் திறக்கவில்லை, எனக்கு இன்னமும் வீட்டுக்குத் திரும்பிப் போக விருப்பமில்லை. பல்கலை வட்டாரத்தில் அதற்கு முன் நான் நுழைந்ததே இல்லை, அது எப்படி இருக்கும் என்ற என் கற்பனையோடு எதிரே இருந்ததை ஒப்பிட்டு நோக்கப் பேராவல் கொண்டிருந்தேன். அங்கு எல்லாமே இருந்தன. கல்லால் ஆன வளைவுகளும், உயரமான வளைவான மேல்புறத்தோடு ஜன்னல்களும் இருந்த புராதனக் கட்டடங்கள். செழுமையான பசும்வெளிகள். ஐவி பசுங்கொடிகள். மேற்கைப் பார்த்த சுவர்களில், உயரத்தில் படந்த ஐவி கொடிகளைக் காற்று கலைத்த போது, எஞ்சி இருந்த சூரிய ஒளியில் அவற்றின் சிவந்த இலைகள் மின்னின. அவ்வப்போது ஹஸ்கி விளையாட்டு மைதானத்திலிருந்து பெரும் ஆரவாரம் உயர்ந்தெழுந்தது, அங்கே ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் அதைக் கேட்கும்போது அதில் நானும் ஒரு கூட்டாளி போல, அங்கே நானும் சேர்ந்திருப்பது போல என்னுள் ஒரு விதிர்ப்பு ஓடியது. அங்கே நான் பொருந்தி இருப்பது போல எனக்குத் தோன்றியது, அங்கே செங்கல் பதித்த நடைகளில் நாங்கள் அவர்களைக் கடக்கும்போது, மாணவர்கள் என்னைப் பார்க்கையில் அவர்களில் ஒருவனாக என்னைப் பார்ப்பார்கள்- அந்த ‘தோழர்கள் அணி’ வாசகம்- அவளுடைய கையை என் தோளில் வைத்தபடி என்னுடன் நடக்கும் அந்தப் பெண்மணி மட்டும் இல்லாதிருந்தால் என்று நினைத்தேன். அந்தக் கையின் பாரத்தை நான் உணரத் தொடங்கினேன்.
என் அம்மா அதைக் கவனிக்கவில்லை. அவர் மறுபடியும் உற்சாகத்தைப் பெற்றிருந்தார், முந்நாளில் அவருடைய தோழி ஒருத்தி யேல் பல்கலையிலும், ட்ரினிடி கல்லூரியிலும் விளையாட்டணியில் இருந்த ஒரு மாணவனோடு பழகி வந்தவள், கால்பந்தாட்டங்களுக்கு இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெற்று இவருக்குக் கொடுத்து வந்ததால் இது போன்ற நாட்களை அந்த விளையாட்டு அரங்குகளில்் கழித்த நினைவுகளில் மூழ்கியவரின் முகம் குளிரால் சிவந்திருந்தது. அவரே கூட ஒரு விளையாட்டணிக்காரரோடு சுற்றிக் கொண்டிருந்தார், அந்த மாணவன் யேல் பல்கலையிலிருந்து அனைத்து அமெரிக்க க்வார்ட்டர்பாக் என்ற அந்தஸ்தைப் பெற்றவன், பெயர் டட்ச் டீஃபென்பேக்கர். அவன் தன்னை மணம் செய்து கொள்ள விரும்பினான், என்று அந்தத் தகவலில் அக்கறையில்லாமல் அவர் சொன்னார்.
“அவர் உங்களை நிஜமாகவே கேட்டார்னா சொல்றீங்க?””
“அவன் எனக்கு ஒரு மோதிரம் கூடக் கொடுத்தான். என் அப்பாதான் அதை அவனுக்கு விற்றிருந்தார். அவரோ, தான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு பெண்ணுக்குக் கொடுக்கத்தான் அதை வாங்கியிருந்தார், ஆனா அவ அதை ஏற்கல்லை. அவ நிஜமாகவே என்ன சொன்னா தெரியுமா, ‘உங்களைப் போல ஒரு கிழவரையா நான் திருமணம் செய்துப்பேன்?’” இதைச் சொல்லிவிட்டு என் அம்மா வாய்விட்டுச் சிரித்தார்.
“ஒரு நிமிஷம் இருங்க,” என்றேன். “யேல் பல்கலையிலிருந்து ஆல் அமெரிக்கன் விளையாட்டுக்காரனைக் கல்யாணம் செய்ற வாய்ப்பு உங்களுக்கு இருந்ததா?”
“நிச்சயமா.”
“நீங்க ஏன் செஞ்சுக்கல்லை?”
இலைகள் அடைத்திருந்த ஒரு நீரூற்றின் அருகே நாங்கள் நின்றோம். என் அம்மா தண்ணீருக்குள் உற்றுப் பார்த்தார். “எனக்குத் தெரியாது. நான் அப்பொ ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்தேன், டட்ச் ஒண்ணும் கலகலப்பான ஆள் இல்லை. நல்லவனா இருந்தான்… மந்தமா இருந்தான். ரொம்ப மந்தம்.” அவர் ஆழமாக ஒரு முறை மூச்சிழுத்து விட்டுச் சொன்னார், அதில் ஓர் அழுத்தமான வேகம் இருந்தது, “கடவுளே, அவன் அப்படி ஒரு சலிப்பான ஆள்!”
“நான் அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டிருப்பேன்,” என்றேன் நான். இந்தக் கதையை நான் முன்னால் கேட்டதே இல்லை. என் அம்மா, பள்ளிக்கூடப் பெண்களுக்கே உரிய அகம்பாவத்தால், யேல் பல்கலையிலிருந்து ஓர் ஆல் அமெரிக்கன் விளையாட்டுக்காரன் என் அப்பாவாக இருந்திருக்கக் கூடிய வாய்ப்பை ஒழித்தார் என்பது படு மோசமான செயலாக எனக்குப் பட்டது. இப்போது நான் செல்வத்தோடு, ஒரு கோலி நாயோடு இருந்திருப்பேன். எல்லாமே என் வாழ்க்கையில் பெரிதும் மாறி இருக்கும்.
நாங்கள் நீரூற்றைச் சுற்றி நடந்தோம், வந்த வழியே திரும்பிப் போனோம். சாலையை அடைந்த போது, நாங்கள் முன்பு விட்டிருந்த அடுக்ககத்தை எனக்குப் பார்க்க வேண்டுமா என்று அம்மா என்னிடம் கேட்டார். நான் தயங்கியதைப் பார்த்து, “அட, இதென்ன பெரிய விஷயம்?” என்றார், “இங்கெதான் எங்கெயோ இருக்கு அது. வந்ததுக்கு நாம இதை முழுசா செய்துடலாமே?”
நானோ குளிரால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் இதுவரை ஏதும் சொல்லாமல் இருந்ததால், இப்போது குறையைச் சொன்னால் அது பொய்யாகத் தெரியும் என்று, போலியாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கும் என்று நினைத்தேன். எழுத்துகள் இருந்த ஸ்வெட்டர் அணிந்த இரு பெண்களை அவர் நிறுத்தினார்- இருபாலார் சேர்ந்து படிக்கும் கல்வி நிறுவனத்திலிருந்து வருபவர்கள் என்று நான் நினைக்கவும் எனக்கு “கோஎட்ஸ்” என்ற அந்தச் சொல் தீவிரமான எழுச்சியைக் கொடுத்தது- அவருக்கு அந்தப் பெண்கள் வழியைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அருகிலிருந்த புத்தகக் கடையின் ஜன்னலில் காட்சியாக வைக்கப்பட்டிருந்தவற்றை நான் கூர்ந்து நோக்கினேன், அந்த வழி தெரியாத பெண்மணிக்கு அருகில் ஏதோ நான் தற்செயலாக நின்றிருப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தேன்.
அந்த மாலை குறைந்த நேரமே நீடித்தாலும் தெளிவாக இருந்தது. ஒரு நேரம் மெலிவான ஒளி எழுந்து அடங்கியது, பின் அது மறைந்து விட்டது. நாங்கள் பல தெருக்களைக் கடந்து நடந்தோம், விக்டோரிய பாணி வீடுகள் இருந்த ஒரு வட்டாரத்தை அடைந்தோம், அங்கு வீட்டு ஜன்னல்கள், காலியாக இருந்த தெருவிலிருந்து பார்க்கும்போது, அதிசயமான, அடர்ந்த ஒளியால் மின்னின. காற்று எங்கள் முதுகுப்புறம் அடித்து வீசியது. நான் நடுங்கத் துவங்கியிருந்தேன். இன்னமும் என் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை. முன்னாடியே சொல்லி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருந்தது, சொல்லாமலிருந்தது முட்டாள்தனம், ஆனால் இப்போது அந்த முட்டாள்தனத்தை மறைக்க, அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு என் முழு மனோபலத்தையும் செலுத்திக் கடும் முயற்சி செய்தேன்.
கூரையில் ஒரு கூண்டு இருந்த வீடு ஒன்றின் முன் நாங்கள் நின்றோம். மேல் தளம் இருண்டிருந்தது. “நாம தாமதமா வந்திருக்கோம்,” என்றேன்.
“அத்தனை தாமதம் ஒண்ணுமில்லை,” என் அம்மா சொன்னார். “அதைத் தவிர, இந்த வாடகையிடம் கீழ்த் தளத்துலதான் இருக்கு.”
வாசலின் முன் மேடை வரை அவர் நடந்து போனார், நான் தெருவில் நடைபாதையில் காத்திருந்தேன். அடங்கிய ஒலியில் அழைப்பானின் மணிஓசை உள்ளே ஒலிப்பதை நான் கேட்டேன், ஜன்னல்களில் ஏதும் அசைவு தெரிகிறதா என்று கவனித்திருந்தேன்.
“ரொம்ப மோசம்… நான் முன்னாலேயே கூப்பிட்டிருக்கணும்,” என் அம்மா சொன்னார். அவர் வாயிலிலிருந்து திரும்பி நகர்ந்து வந்தார், அப்போது இரண்டு கதவுகள் விரிந்து திறந்தன, ஒரு நபர் வெளியே எட்டிப் பார்த்தார், பெரிய உருவம், பளீரென்றிருந்த வாசல்படி அருகே கோட்டுருவாகத் தெரிந்தார். “என்ன வேணும்?” என்றார். அவர் பொறுமையில்லாதவர் போலத் தொனித்தார், ஆனால் என் அம்மா திரும்பி அவரைப் பார்க்க நின்றபோது, மென்மையாகவே கேட்டார், “நான் உங்களுக்கு என்ன செய்யணும்?” அவர் குரல் அத்தனை ஆழ்ந்த ஒலிகொண்டதாக இருந்ததால், சரிவுக் கூண்டில் நிலக்கரித் துண்டுகள் சரிந்து விழுந்தாற்போல, அந்த ஒலியை என்னால் உணர முடிந்தது,
நாங்கள் அந்த வாடகைக் குடியிருப்பைப் பார்க்க வந்திருப்பதாக அம்மா சொன்னார். “நாங்க கொஞ்சம் தாமதமாக வந்திருக்கோம்னு நெனைக்கறேன்,” என்றார்.
“ஒரு மணி நேரம் தாமதம்,” என்றார் அவர்.
என் அம்மா ஆச்சரியப்பட்டார், பல்கலை வளாகத்தில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதைக் கவனிக்கவில்லை என்று சொன்னார். மிகவும் வருத்தப்பட்டதாகக் காட்டினார், ஆனால் அங்கிருந்து நகர்வதாக இல்லை, அது அவருக்குத் தெளிவாக்கி இருக்க வேண்டும், வீட்டைப் பார்க்காமல் இவர் அங்கிருந்து போகமாட்டார் என்று. எனக்கு அது தெளிவாகப் புரிந்தது. வீட்டு முன் நடையில் நடந்து போய், முன்மேடையின் படிகளில் ஏறினேன்.
அந்த மனிதர் எல்லாப் பக்கமும் பெரும் உருவாக இருந்தார்- உயரம், உருண்டையாக உப்பிய உடல், பெரும் தலை, சுவற்றில் காட்சிப் பொருளாக வைக்குமளவு பெரிய தலை. பார்ப்பவர்களின் மனத்தில், அவருடைய உருவத்தின் அளவால், ஒரு அடைபெயராக ‘டைனி’ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் அவரை அப்படி யாரும் அழைத்திருக்க மாட்டார்கள என்பது எனக்கு நிச்சயம். அவர் மிகவுமே தீவிரமாக, எங்கோ கவனம் வைத்தவராக இருந்தார். அவருடைய முகம் ஒரு எருமையைப் போல அகலமாகவும், உள்ளுக்குள் ஆழ்ந்ததாகவும் இருந்தது. அவர் கரும் சட்டகமிட்ட மூக்குக் கண்ணாடி வழியே குனிந்து எங்களைப் பார்த்தார். “ அப்படியா, சரி நீங்க வந்துட்டீங்க,” என்றார், அதில் வெறுப்பேதும் இல்லை, நாங்கள் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே போனோம்.
முதலில் நான் பார்த்தது கணப்பு நெருப்புதான். மற்றதெல்லாமும் அங்கு இருந்தனெவென்று எனக்குத் தெரிந்தது, மரக்கலன்கள், சர்ச்சின் உள்புறம் போன்ற விஸ்தாரமான அறை என்று, ஆனால் என் கண்கள் நெருப்பின் ஜ்வாலைகளை நோக்கித்தான் நேராகச் சென்றன. குனியாமலேயே, கிட்டத்தட்ட நேராகவே நடந்து நான் உள்ளே போயிருக்கக் கூடிய அளவு பெரியதாக இருந்த கணப்படுப்பில் நெருப்பு உஸ்ஸென்ற சத்தத்தோடு எரிந்தது. அதன் முன் ஒரு பெண் குப்புறப் படுத்திருந்தாள். ஒரு கால் உயர்ந்திருந்தது, மெதுவாகச் சுழன்று ஆடிக் கொண்டிருந்தது, அவளுடைய முகவாய் ஒரு கையால் தாங்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. அவள் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் உள்ளே வந்த பின்னும் சில நிமிடங்கள் அவள் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். பிறகு எழுந்து உட்கார்ந்தவள், மிகக் கருக்காக, ‘குட் ஈவ்னிங்,” என்றாள். அவளுக்கு மார்பகங்கள் இருந்தன. அவளுடைய மேல் சட்டையில் அவை புடைத்திருந்ததை நான் பார்த்தேன். ஆனால் அவள் அழகாக இல்லை. ஆந்தை போலிருந்தாள், பெரும் உடல், அந்த மனிதரைப் போலவே மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள், துரதிர்ஷ்டவசமாக பார்வைக்கும் அவரைப் போலவே இருந்தாள். அடிக்கடி கண்ணைக் கொட்டிக் கொண்டிருந்தாள். அவளுடன் உடனே சகஜமாக உணர்ந்தேன். அழகான பெண்களைப் பார்த்தால் அலட்சியம் செய்வதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ என் வழக்கம், மாறாக இவளைப் பார்த்துப் புன்னகைத்து ஹாய் என்றேன்.
அடுமனையில் ஏதோ இருந்தது, சாக்லேட்டால் ஆன ஏதோ. நெருப்புக்கருகில் சென்றேன், அதற்கு என் முதுகைக் காட்டி நின்றேன், என் கைகளை என் பின்னே உதறிக் கொண்டேன்.
“ஓ ஆமாம், அது ரொம்ப வசதியாயிருக்கும்,” என்றார் அந்த மனிதர், என் அம்மா ஏதோ சொன்னதற்குப் பதில் அது. சுற்றுமுற்றும் பார்வையால் அவர் துழாவியது, தான் அங்கே இருந்தது அவருக்கே எதிர்பாராத ஒரு நடப்பு என்பது போல இருந்தது. அறை பெரிதாக இருந்தது, ஒரு அடுக்ககத்தில் நான் இதுவரை பார்த்ததிலேயே அதுதான் பெரிய அறை. அங்கே வசிக்குமளவு வசதி எங்களிடம் ஒருநாளும் இருக்காது, ஆனால் நான் ஏற்கனவே அந்த உண்மையைக் கவனிக்க மறுக்கும் நிலைக்கு வந்திருந்தேன்.
“நான் போய் என் மனைவியை அழைத்து வருகிறேன்,” என்றார் அந்த மனிதர், ஆனால் அங்கிருந்து போகாமல் என் அம்மாவைக் கவனித்தபடி இருந்தார்.
திரும்பிய அம்மா, ஆழ்ந்த சிந்தனையிலிருந்து விடுபட்டாற்போலத் தெரிந்தவர், தனக்குள்ளேயே ஏதோ சொல்வது போலத் தலையசைத்தார். “இங்கே இருக்கிற இத்தனை இடமும்,” என்றார். “நம்மை சுதந்திரம் பெற்றார்போல உணர வைக்கும். இதை விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் எப்படித் தாங்குவீர்கள்?”
முதலில் அவர் பதில் சொல்லவில்லை. அந்தப் பெண் தரை விரிப்பில் எதையோ பொறுக்க ஆரம்பித்தாள். பிறகு அவர் சொன்னார், “ஒரு மாறுதலுக்கு நாங்கள் தயாராகிறோம். அப்படித்தானே, சகோதரி?”
அந்தப் பெண் நிமிர்ந்து பார்க்காமல், தலையசைத்து ஆமோதித்தாள்.
ஒரு பெண்மணி அடுத்த அறையிலிருந்து வந்தார், ஒரு தட்டில் ப்ரௌனிக்களைக் கொணர்ந்தார். அவருடைய கன்னங்களில் ஆழமான பள்ளங்கள் கோடு போல ஓடின, அவை அவருடைய வாயைச் சுற்றிய அடைப்புக் குறிகள் போலத் தெரிந்தன. அவருடைய நரைமுடி ஒரு குதிரைவால் கொண்டையாக இழுத்துப் போடப்பட்டிருந்தது. ஏதோ நிவேதனப் பொருளை எடுத்து வருபவர் போல மெதுவாக அளந்து காலடிகள் வைத்து, எங்களை நோக்கி வந்தார், அந்தத் தட்டை ஒரு காஃபி மேஜையில் வைத்தார். “டாக்டர் ஆவெரியின் ப்ரௌனிகளைச் சாப்பிடச் சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள்,” என்றார்.
முதலில் அவர் ஏதோ ஒரு தயாரிப்புக் குறிப்பின் பெயரைச் சொன்னார் என்று நினைத்தேன். அப்போது அந்த மனிதர் விரைந்து வந்து தட்டிலிருந்து ஒரு கை நிறைய ப்ரௌனிகளை அள்ளி எடுத்துக் கொண்டார். அப்போது அவர்தான் டாக்டர் ஆவெரி என்று அறிந்து கொண்டேன், அதோடு அந்த ப்ரௌனிகள் அவருக்கானவை என்றும் புரிந்து கொண்டேன்; அந்தத் தட்டை நோக்கி அவர் வந்தது படையெடுத்தாற்போல இருந்ததால், அவர் எவ்வளவு தீவிரமாக அதைத் தன் உடைமையாகக் கருதுகிறார் என்று காட்டியது. அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொள்ள எனக்கு தைரியமில்லை. ஆனால் சகோதரி ஒன்றை எடுத்துக் கொண்டாள், தப்பித்திருந்தாள், இன்னொன்றையும் எடுத்தாள். நானும் சிலதை எடுத்துக் கொண்டேன். நாங்கள் அவற்றைத் தின்னும்போது, அந்தப் பெண்மணி டாக்டர் ஆவெரியின் முதுகுக்குப் பின்னால் தன் கையை நீட்டி அவர் மீது சாய்ந்து நின்றார். மணவாழ்க்கையில் நான் பார்த்திருந்த கொஞ்சநஞ்சம் என்னை, கணவர்களும் மனைவிகளும் பொதுவில் காட்டிக் கொள்ளும் பாசமெல்லாம் வெறும் நாடகக்கலை- பாருங்க, இது வீடு, இங்கே மக்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வார்கள் (என்பது போல)- என்று நினைக்க வைத்திருந்தது, ஆனால் இங்கே அந்தப் பெண் அவர் இருந்த இடத்தைப் பற்றி மகிழ்வோடுதான் இருந்தார் என்பது தெரிந்தது, அவருடைய மகிழ்ச்சியைப் பகிராமல் என்னால் இருக்க முடியவில்லை.
என் அம்மா அந்த அறையைச் சுற்றிச் சுற்றி ஓயாமல் நடந்தார். “நான் இடத்தைச் சுற்றிப் பார்க்கலாமா? உங்களுக்கு அது சம்மதமா?”
திருமதி ஆவெரி சகோதரியை அந்த இருப்பிடத்தின் மீதிப் பகுதியைப் பார்க்க எங்களை அழைத்துப் போகச் சொன்னார்.
இன்னும் சில பெரும் அறைகள். இரண்டில் கணப்புப் பிறைகள் இருந்தன. மையப் படுக்கை அறையின் கணப்பைச் சுற்றி அமைந்த தடுப்பு மரத் தட்டிற்கு மேலே சுவரில், யோசனையில் ஆழ்ந்த, கருத்த கண்களோடிருந்த ஒரு மனிதனின் பெரிய ஒளிப்படம் தொங்கியது. சகோதரியிடம் அவர் யார் என்று நான் கேட்டபோது, அவள் கொஞ்சம் முக்கியமானதைச் சொல்லும் பாவனையோடு, “கர்ட்ஜீயெஃப்,” என்றாள்.
எனக்கு அருள் பாலிக்கும் குரலில் அவள் பேசினாலும், அதை நான் பொருட்படுத்தவில்லை. அவள் என்னை விட வயதில் மூத்தவள், பெரிய உருக் கொண்டவள், தவிர என்னை விடப் புத்திசாலி என்று நான் ஐயப்பட்டேன். அருள் பாலிப்பது முற்றிலும் தகுந்த நடத்தை என்று தோன்றியது.
“குர்ட்ஜியெஃப்,” என் அம்மா சொன்னார். “நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“கர்ட்ஜீயெஃப்,” சகோதரி திரும்பச் சொன்னாள், அம்மா தவறாகச் சொன்னாரென்பது போல இருந்தது அவள் சொன்னது.
முன்னறைக்குத் திரும்பினோம், நெருப்பைச் சுற்றி அமர்ந்தோம், டாக்டர் மற்றும் திருமதி ஆவெரிகள் சாய்விருக்கையில் அமர்ந்திருந்தனர், ஓர் ஆடும் நாற்காலியில் எதிரே என் அம்மா அமர்ந்தார். சகோதரியும், நானும் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டோம். அவள் தன் புத்தகத்தைத் திறந்தாள், ஒரு கணம் கழித்து அவள் கால் மறுபடி காற்றில் உயர்ந்தது, தன் சுழலும் இயக்கத்தைத் தொடர்ந்தது. என் அம்மாவும் திருமதி ஆவெரியும் அந்த வாடகை இருப்பிடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் நெருப்பு ஜ்வாலைகளுக்குள் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன், அந்தக் குரல்கள் எனக்கு மேலே இதமானதாகவும், பொருளற்றதாகவும் ஒலித்திருந்தன, ஓரிடத்தில் என் பெயர் உச்சரிக்கப்படும் வரை. என் அம்மா திருமதி ஆவெரியிடம் பல்கலை வளாகத்தில் நாங்கள் சுற்றி நடந்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அது ஒரு அழகான வளாகம் என்று சொன்னார்.
“அழகானதா?” டாக்டர் ஆவெரி சொன்னார். “அழகுன்னு நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்?”
என் அம்மா அவரைப் பார்த்தார். பதில் சொல்லவில்லை.
“நீங்க அந்தக் கட்டடங்களைச் சொல்றீங்கன்னு எடுத்துக்கறேன் நான்.”
“நிச்சயமா. அந்தக் கட்டடங்கள், புல் வெளிகள். பொதுவான வடிவமைப்பு, அதெல்லாத்தையும்.”
“போலி- காதிக் பாணியில் பாசாங்கு,” டாக்டர் ஆவெரி சொன்னார். “மூவி-செட்.”
“பல்கலை வெறும் தோற்றங்களுக்கு அதிக கவனம் செலுத்தறதுன்னு டாக்டர் ஆவெரி நினைக்கிறார்,” திருமதி ஆவெரி சொன்னார்.
“அது ஒண்ணைத்தான் அவங்க கவனிக்கிறாங்க,” டாக்டர் ஆவெரி சொன்னார்.
“எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாது,” என் அம்மா சொன்னார். “கட்டடக் கலை பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. எனக்கு அதெல்லாம் நல்லா இருக்கறதாத்தான் தெரியறது.”
“ஆமாம். ஆனா அதுலதான் விஷயமே இருக்கு, இல்லையா?” டாக்டர் ஆவெரி சொன்னார். “அது பார்க்கறதுக்கு பல்கலை மாதிரி இருக்கு. அவங்க ஏதோ கல்வின்னு ஒண்ணை விக்கிறாங்களில்லையா, அதுவும் அப்படியேதான். மேலிருந்து கீழ் வரை அது எல்லாம் போலி, சுத்தமா உள்ளடக்கம்னு எதுவுமே இல்லாதது. ‘ஆல் மடீரியா, நோ அனிமா’” [மொ.பெ குறிப்பு: லத்தீன் வாக்கியம்: எல்லாம் வெறும் ஜடப்பொருள், ஆன்மா (உயிர்) இல்லாதது.]]
இதில் அவர் சொன்னது எனக்குப் பிடிபடவில்லை, நான் ஜ்வாலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தேன். டாக்டர். ஆவெரி பொருமியபடி மேலும் பேசிப் போனார். முதலில் அவர் அதிகம் பேசாமல் இருந்தார், ஆனால் பேசத் தொடங்கிய பின் அவர் நிறுத்தவே இல்லை, அவர் நிறுத்த வேண்டும் என்று நானும் நினைக்கவில்லை. அவருடைய குரலொலி எனக்கு ஒரு பாதுகாப்புணர்வைக் கொடுத்து இலேசான கிறக்கத்தைக் கொடுத்தது, ஒரு நீண்ட சாலைப் பயணத்துக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது, பின் இருக்கையில் நாம் உட்கார்ந்திருக்கையில், காரின் எஞ்சின் ஒலி நம்மைத் தூக்கக் கலக்கத்தில் ஆழ்த்துவதைப் போல இருந்தது. அவ்வப்போது திருமதி ஆவெரி இடைமறித்தார், தானும் டாக்டரோடு முழுதும் ஒத்துப் போகிறதைத் தெரிவித்தார்; பிறகு அவர் தொடர்ந்தார். என் அருகில் இருந்த சகோதரி சிறிது அசைந்தாள். கொட்டாவி விட்டபடி ஒரு பக்கத்தைத் திருப்பினாள். கணப்பில் விறகுக் கட்டைகள் மெதுவாக, இடம் பெயர்ந்து அமர்ந்தன, ஏதோ ஒரு கிழ நாய் தன் எலும்புகளைச் சரி செய்து கொண்டு அமர்வது போல.
டாக்டர் ஆவெரி நிறைய நேரம் பேசிக் கொண்டே போனார். அப்போது என் அம்மா என் பெயரை மறுபடி சொன்னாள். என் பெயரை மட்டும்தான் சொன்னாள், வேறேதும் சொல்லவில்லை. டாக்டர் ஆவெரி அதைக் கேட்காதவர் போல மேலே பேசிக் கொண்டிருந்தார். முன்னால் நகர்ந்து சாய்ந்தபடி, தன் பேச்சின் கதிக்கு ஒத்தாற்போல அவரது ஒரு விரலை ஆட்டிக் கொண்டிருந்தார், அவரது தலை ஆடியபோது அவரது மூக்குக் கண்ணாடி மினுமினுத்தது. நான் என் அம்மாவைப் பார்த்தேன். ஆடும் நாற்காலியில் அவர் விறைப்பாக அமர்ந்திருந்தார், கைகள் மடியில் இருந்த கைப்பையைப் பிசைந்து கொண்டிருந்தன. அவரது முகம் இருண்டு, உறைந்திருந்தது. விட்டு நீங்காமல் விடாப்பிடிவாதமாகப் பேசியபடி நிற்கும் விற்பனையாளர் அல்லது மார்மன் கிருஸ்தவப் பிரச்சாரகர்களிடம் சிக்கியிருக்கும்போது இந்த முகபாவம்தான் அவர் காட்டுவது. அவர் அங்கிருந்து போக விரும்புகிறார்.
எனக்கு அங்கிருந்து போக விருப்பமில்லை. நெருப்பருகே அமர்ந்து அரைத் தூக்கத்தில் தலையாடியபடி, சோம்பலாயும், மனநிறைவோடும் அமர்ந்திருந்ததில், அது என் வீடு இல்லையென்பதை நான் மறந்து போயிருந்தேன். அந்த வெப்பமும், கணப்பொளியும் டாக்டர் ஆவெரியின் குரலைப் போலவே என்னைப் பாதித்திருந்தன, அந்த வீட்டு மனிதர்கள் மகிழ்வுடன் அனுபவித்ததாகத் தெரிந்த குடும்பத்து நிறைவுணர்வை எனக்கும் கொடுத்து என்னை நிதானப்படுத்தித் தேற்றி இருந்தன. அவர்கள் என் குடும்பத்தினர் இல்லை, அவர்களும் சிறிது நேரத்தில் என் வாழ்வைக் கடந்து போய்விடுவார்கள் என்பதையும் மறந்திருந்தேன். என் கதையில் அவர்களை ஒரு பங்காக ஆக்கி இருந்தேன், அவர்களுக்கென்று தனியொரு வாழ்வு உண்டு என்பதை அந்த நேரம் நான் அறியவில்லை.
அதென்னவாக இருந்ததென்று எனக்குத் தெரியவில்லை. அவர்களை நாங்கள் மறுபடி பார்க்கவே இல்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து, நான் ஓர் ஊகத்தை முன் வைக்கக் கூடும். அந்தப் பல்கலையில் டாக்டர் ஆவெரிக்கு பணி நிரந்தரமாவது மறுக்கப்பட்டிருந்தது என்பது என் ஊகம். மேலும் இப்படி ஆவது அவருக்கு முதல் தடவை இல்லை என்பதும், அது கடைசித் தடவையாக இராது என்பதும் என் ஊகங்கள். அவர் இப்படி அசலான தன்மையை நாடி நிற்பது என்ற தன் நிலைப்பாட்டைத் தான் சென்ற ஒவ்வொரு பல்கலைக்கும் எடுத்துப் போயிருப்பார், அவை ஒவ்வொன்றும் அந்த அறைகூவலை மேன்மேலும் அதிகரித்து வரும் அழுத்தத்தோடு நிராகரித்திருக்கும், பின்னர் அவை தரமற்ற கல்விக் கூடங்கள் என்று அவர் தன் முடிவை அறிவிப்பார் என்று என்னால் பார்க்க முடிகிறது. டாக்டர் ஆவெரியின் சக போதனையாளர்கள், சிறுமதி படைத்தவர்கள் தங்கள் குறுகிய உள்ளங்களோடு, அவரைத் தொல்லை பிடித்தவர் என்றும், சலிப்பூட்டுபவர் என்றும் கேலி செய்வார்கள். அவருடைய உயர்ந்த நிலைப்பாட்டெல்லாம் தன் துறையில் அவரால் ஏதும் குறிப்பிடும்படி சாதிக்க முடியாததை- அப்படிப்பட்ட சாதனை என்னவானாலும் சரி- மறைக்க அவர் மேற்கொள்ளும் ஓர் உத்தி என்று அவர்கள் கருதுவார்கள். மறுபடி மறுபடி அவர்கள் அவரை பணி நீக்கம் செய்வார்கள். திருமதி ஆவெரி, தளராத தன் விசுவாத்தோடு, காயம்பட்ட அவரது ‘அனிமா’வைத் (ஆன்மா) தேற்றி, அவரைச் சுற்றிப் பெருகி வரும் ஜடப்பொருளுலகைச் சமாளிக்க மேன்மேலும் பெரிய அளவில் ப்ரௌனிகளைத் தயாரித்துக் கொடுத்து வருவார். அந்தப் பெண்மணி அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை, அதற்கு எது அடிப்படையாக இருந்தபோதும், மேன்மையானது. அவரளவு பரந்த மனதில்லாத ஒரு பெண்ணாக இருந்தால், தன் சந்தோஷத்திற்கான எல்லா வாய்ப்புகளும்- பழகிய நண்பர்கள், தனக்கென்று ஓரிடம், சமூகமொன்றில் வேரூன்றிய வாழ்க்கை போன்றன- ஒரு உயரிய உண்மைக்காகத் தியாகம் செய்யப்பட்டன என்று எண்ணாமல், அகம்பாவத்துக்கும், போலி கௌரவத்துக்கும் பலியிடப்பட்டன என்று எண்ணி இருக்கக் கூடும். இந்தப் பெண்மணிக்கு அது ஒரு முறை கூடத் தோன்றவில்லை போல.
இருக்காது, அப்படி மாற்றி யோசிப்பது சகோதரியாக இருக்கும். எதிர்பார்ப்பை உடைத்துப் போகக் கூடியவள் சகோதரிதான். காலப் போக்கில், இந்த இரவுக்குப் பிறகு வெகு சில வருடங்கள் கழித்தே, தன் வாழ்வின் ஏமாற்றங்கள் எல்லாம் அவர்களுடைய திறனில்லாமையால்தான் ஏற்பட்டன என்ற முடிவுக்கு அவள் வருவாள். சகோதரிக்குத் தெரிவதை விட மேலாக வேறு யாருக்கு அந்தத் தோல்விகள் பற்றித் தெரியப் போகிறது? அங்கு நாடகக் காட்சிகள் இருக்கும். டாக்டர் ஆவெரி அவராக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவார். திருமதி ஆவெரியும் அதே போலக் குறை சொல்லப்படுவார். பார்னார்ட் (கல்லூரி) அல்லது ரீட் (கல்லூரி) அல்லது வேறெங்கு சகோதரியின் உபகாரச் சம்பளம் இட்டுச் செல்கிறதோ அங்கிருந்தும், பிறகு அவள் எந்த தூரத்து நகரில் வேலைக்குப் போகிறாளோ அங்கிருந்தும், அவள் வீட்டிற்கு வருவதெல்லாம் நாடகக் காட்சிகளாகி விடும். சமையலறையில் கோபமான ரகசியப் பேச்சுகள், சாப்பாட்டு மேஜையில் கத்திப் பேசி வாதங்கள், திடீரென்று கிளம்பிப் போய் விடுதல். இது பல வருடங்கள் நடக்கும், ஆனால் எல்லாக் காலமும் தொடராது. சகோதரி அப்போது தன் பெற்றோருடன் சமாதானத்துக்கு வருவாள். அவள் எதை வெறுத்தாளோ அதை மதிக்கக் கூடத் தொடங்குவாள். மற்றவர்களைப் போலப் பேசவும், நடக்கவும் அவர்கள் மறுக்கும் விதம், முடிவில்லாது ஊரூராகக் குடி பெயரும் விதம், ஆகியவற்றை சேற்றுக் குழம்பாக ஓடும் வாழ்வில் பளிச்சிடும் வண்ணக்கீற்றாக அவள் கருத ஆரம்பிப்பாள். அவர்களை நேசிப்பதைத் தவிர தனக்கு வேறெந்தத் தேர்வும் இல்லாததை அவள் உணர்வாள், அவர்களை நேசிப்பதை சகோதரியை விட மேலாக யாரே செய்யக் கூடியவர்கள்?
இப்படி அவர்கள் கதை போயிருக்கக் கூடும், அல்லது வேறு வழியிலும் போயிருக்கலாம். அன்று இரவு என்னை அவர்களில் ஒருவனாக நான் கற்பனை செய்து கொண்டிருந்ததைப் போலவே, இப்போதும் அவர்களின் வாழ்வு பற்றி ஏதும் தெரியாமல், நான் அவர்களை என் கதையில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் பரஸ்பரம் வேற்று மனிதர்களாகவே இருந்தோம். நான் அவர்களின் அடுக்ககத்தில் செலவழித்த நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் போலத்தான் இருந்திருக்கும். நிஜத் தகவல்களைக் கவனிக்காமல் விடவும், உடலைச் சற்று உஷ்ணப்படுத்திக் கொள்ளவும் போதுமான நேரம்தான் அது.
என் அம்மா என் பெயரை மறுபடி உச்சரித்தார். நான் இருந்த இடத்திலேயே இருந்தேன். வழக்கமாக உந்தப்படாமல் உடனே எழுந்து நின்றிருப்பேன், அடிபணிய வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் அவருடைய தேவைகளை முன் கூட்டி அறிவது எனக்குப் பிடித்தமான ஒன்று, எங்கள் கூட்டு வேலையைப் பார்வைக்கு வைக்கும் விதம் அது. இந்த முறை நான் அவரைப் பார்த்ததில் வேண்டாவெறுப்பு தெரிந்திருக்கும். அந்த ஆடும் நாற்காலியில் அவர் இருந்தது பொருந்தாத ஒன்றாகத் தெரிந்தது; அதற்குத் தகாத கவர்ச்சி அவரிடம் இருந்தது. அவரது எழிலை அவரிடமிருந்து தனிப்பட்ட ஒன்றாக என்னால் பார்க்க முடிந்தது, இன்னொரு தனி இருப்பாக, அவரை அங்கிருந்து, அந்த குடும்பத்தன்மையின் நிதானத்திலிருந்து வெளியே இழுத்துப் போகும் அவசரத்தில் இருக்கும் துடுக்கான ஒரு தோழியாக அதை நான் பார்த்தேன்.
நாங்கள் வீட்டுக்குத் திரும்புவதைப் பற்றி யோசிக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார். சகோதரி தன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் இன்னும் நகராமல் இருந்தேன். என் அம்மாவின் வியப்பை என்னால் பார்க்க முடிந்தது. நான் ஏதாவது செய்யப் போகிறேன் என்று அவர் காத்திருந்தார், நான் ஏதும் செய்யாதிருப்பதைப் பார்த்ததும், அவர் ஆடியபடி மெதுவாக முன்னால் நகர்ந்தார், எழுந்து நின்றார். எல்லாரும் அவரோடு எழுந்து நின்றார்கள், என்னைத் தவிர. எழுந்திருக்காமல் நான் மட்டும் தனியாகத் தரையில் அமர்ந்திருப்பதால், மரியாதை தவறியவனாக நான் இருப்பதாக, முட்டாளாக உணர்ந்தேன், ஆனால் அவர் தன் கடைசி முகமன்களைச் சொல்லி முடிக்கும்வரை அங்கேயே இருந்தேன். அவர் கதவை நோக்கி நகர்ந்ததும், நான் எழுந்திருந்து என் விடைபெறல் வார்த்தைகளைச் சன்னமாகச் சொன்னேன், பிறகு அவர் பின்னே வெளியேறினேன்.
டாக்டர் ஆவெரி எங்களுக்காகக் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டு நின்றார்.
“நான் இன்னமும் இது ஓர் அழகான வளாகம் என்றுதான் நினைக்கிறேன்,” என்றார் அம்மா.
அவர் பெரிதாகச் சிரித்தார்- ஹோ ஹோ ஹோ என்று. “சரி, அப்படியே இருக்கட்டுமே,” என்றார். “அவரவர்க்குப் பிடித்தது.” நாங்கள் தெருவில் நடைபாதைக்குப் போய்ச் சேரும்வரை காத்திருந்தார், பிறகு விளக்கை அணைத்து விட்டுக் கதவை மூடினார். எங்கள் பின்னே அது அடித்துச் சாத்தப்பட்ட ஒலியை உரக்க எழுப்பியது.
“அதெல்லாம் என்னதுக்காக?” என்றார் அம்மா.
நான் பதில் சொல்லவில்லை.
“உனக்கு எல்லாம் சரியா இருக்கா?”
“ஆமாம்.” பிறகு நான் சொன்னேன், “நான் கொஞ்சம் உறைஞ்சு போயிருக்கேன்.”
”குளிரறதா? அப்ப ஏன் ஒண்ணும் சொல்லல்லை?” கவலைப்பட்டவராகக் காட்சியளித்தார், ஆனால் அந்த வீட்டில் நடந்ததற்கு ஒரு சுலபமான விளக்கம் கிட்டியது பற்றி அவருக்கு நிம்மதி கிட்டியது என்று நான் புரிந்து கொண்டேன்.
தன் மேல் அங்கியை அவர் கழற்றினார். “இந்தா.”
“பரவாயில்லை மா.”
“போட்டுக்க.”
“எதுக்கு அம்மா. நான் சரியா இருக்கேன்.”
“போட்டுக்கோ, மடப்பயலே!”
மேலங்கியை என் தோள்கள் மேல் இழுத்து அணிந்தேன். கொஞ்ச நேரம் நடந்தோம். “என்னைப் பார்த்தால் கேவலமா இருக்கும்,” என்றேன்.
“இருந்தா…இங்கே யாருக்கென்ன கவலை?”
“நான் படறேன்.”
“ஓகே. நீ கவலைப்படு. ஸாரி. பையா, நீ இன்னக்கி ராத்திரி செய்றதெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கு.”
“நான் பஸ்ல இதைப் போட்டுகிட்டு வர மாட்டேன்.”
“பஸ்லெ இதைப் போட்டுகிட்டு வரணும்னு யாரும் இங்கே சொல்லல்லை. நாம திரும்பிப் போகிறதுக்கு முன்னாடி ஏதாவது சாப்பிடணுமா உனக்கு?”
நான், சரி, நல்லது, அவருக்கு என்ன வேணுமோ அப்படிச் செய்யலாம் என்றேன்.
“ஏதாவது பீட்ஸா கடை நமக்குக் கிடைக்கலாம். உன்னால கொஞ்சம் பீட்ஸா சாப்பிட முடியும்னு நினைக்கிறியா?”
என்னால் முடியும் என்று நான் நினைப்பதாகச் சொன்னேன்.
பளபளக்கும் கண்கள் கொண்ட கருப்பு நாய் ஒன்று தெருவைக் குறுக்கே கடந்து எங்களை நோக்கி வந்தது.
“ஹெல்லோ, ஸ்போர்ட்,” என்றார் என் அம்மா.
எங்களோடு கொஞ்ச தூரம் அந்த நாய் ஓடி வந்தது, பிறகு ஓடிப் போய் விட்டது.
நான் மேலங்கியின் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டேன், பிறகு என் தோள்களைக் குறுக்கிக் கொண்டேன்.
“உனக்கு இன்னும் குளிரறதா?”
“கொஞ்சம்.” நான் மோசமாக நடுங்கிக் கொண்டிருந்தேன். இதற்கு முன்னால் ஒருபோதும் இத்தனை குளிர்ந்து இருந்ததே இல்லை நான் என்று எனக்குத் தோன்றியது, என்னை நெருப்பிலிருந்து அகற்றி, மறுபடி வெளியே அழைத்து வந்ததற்கு என் அம்மா மேல்தான் நான் குறை கண்டேன். அது அவருடைய தவறில்லை என்று எனக்குத் தெரிந்தது, ஆனால் அவர் மீது பழியைப் போட்டேன் – இதற்கும், என் முகத்தில் அடித்து வீசிய காற்றுக்கும், மேலும் அதது சரியாக இல்லாததற்குக் காரணமான பெயரில்லாத எல்லாவற்றுக்குமாக அவரையே காரணமாகப் பார்த்துக் குறை கண்டேன்.
“இங்கே வா.” அவர் என்னை இழுத்தார், அவருடைய கையை மேலும் கீழுமாக என் கை மீது தேய்க்கத் தொடங்கினார். நான் சாய்ந்து தள்ளிப் போக முயன்றபோது, அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மேலும் தேய்த்தார். அது நன்றாக இருந்தது. நான் சூடாக உணரவில்லை, ஆனால் அந்த நேரம் அவ்வளவுதான் என்னால் உஷ்ணம் பெற முடிந்திருக்கும்.
“எனக்குத் தெரியறதுக்காகக் கேட்கறேன்,” அம்மா சொன்னார். “இந்த வளாகத்தைப் பத்தி நீ என்ன நினைக்கிறே? உண்மையாச் சொல்லு.”
“எனக்குப் பிடிச்சது.”
“இது பிரமாதமா இருக்குன்னு நான் நினைச்சேன்.”
“நானுந்தான்.”
“அந்தப் பெரிய உளறுவாயன்,” என்றார். “அவனுக்கு என்னதான் கேடு?”
. . .
என்னிடம் சொந்தக் கணப்புப் பிறை ஒன்று இப்போது உண்டு. நாங்கள் வாழும் இடத்தில் குளிர்காலங்கள் நீண்டவை, மிகக் குளிரானவை. காற்றுப் பனித் துகள்களைப் பக்கவாட்டில் விசிறி அடிக்கிறது, வீடு மரமர என்று சத்தமிடுகிறது, ஜன்னல்களில் பனிக்கட்டி படலமாகப் படர்ந்து வளர்கிறது. இரவுணவுக்குப் பிறகு நான் நெருப்பை மூட்டுகிறேன், கூரை இல்லாத அறை போல மரக்கட்டைகளால் நான்கு சுவர்களைக் கட்டுகிறேன். அதுதான் சிறந்த வழி. விவரம் இன்னும் பிடிபடாத கற்றுக் குட்டிகள்தான் கூம்பாகக் கட்டைகளை அடுக்குவார்கள். என் குழந்தைகள் என் பின்னே காத்திருக்கிறார்கள், இடம் பிடிக்கத் தள்ளு முள்ளு செய்கிறார்கள், நெருப்புக் குச்சியின் ஜ்வாலையை கட்டைகள் மீது இடுவதற்குத் தங்கள் உரிமையைப் பற்றி வாதிடுகிறார்கள். அவர்களைக் கூட்டு சேர்ந்து அதைச் செய்யும்படி சொல்கிறேன். நெருப்புக் குச்சியை உரசி ஜ்வாலையைக் கிளப்பி அதை கசக்கிய காகிதங்களில் பற்றச் செய்ய முயலும்போது, ஆர்வத்தில் அவர்களுடைய கைகள் நடுங்குகின்றன, மரக்குச்சிகளில் நெருப்பு பிடித்து படபடப்பாக வெடிக்கத் துவங்கும் முன் அந்தக் காகிதப் பந்தில் எத்தனை இடங்களில் பற்ற வைக்க முடியுமோ அத்தனை செய்கிறார்கள். பிறகு குதிகால்களில் பின்னே சாய்ந்து அமர்கிறார்கள், அந்த மரக்கட்டைச் சுவர்களில் நெருப்பு பற்றி அவற்றை முழுதும் மூடுவதைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் முகங்களில் பக்திப் பரவசம் தெரிகிறது.
என் மனைவி அங்கு வந்து, நெருப்பைப் பாராட்டுகிறாள், எனக்கு அந்த நெருப்பு பற்றி எத்தனை பெருமிதம் என்பது அவளுக்குத் தெரியும். அவள் ஒரு புத்தகத்துடன் சாய்வு இருக்கையில் படுத்துக் கொள்கிறாள், ஆனால் படிக்கவில்லை. நான் நெருப்பைப் பார்க்கிறேன், அதன் ஒளி என் குடும்பத்தினரின் முகங்களில் மாறி மாறி வீசுவதைக் கவனிக்கிறேன். வீட்டில் இருப்பதில் கிட்டும் உணர்வை அனுபவிக்க முயல்கிறேன், அனேகமாக, முற்றிலும் அந்த உணர்வு கிட்டுகிறது. நான் தூரத்து இடங்களுக்குப் போகும்போது இந்தக் கணம் பற்றிதான் நான் கற்பனை செய்கிறேன்; இதுதான் வீட்டைப் பற்றிய என் கனவு. ஆனால் இந்தக் கணத்தின் மையத்தில் நான் எதற்கோ என்னைச் சற்று இறுக்கித் தயாராக்குகிறேன், ஏதோ நான் ஏமாற்றப்படுகிறேன் என்று அச்சம் எழுவது போல இருக்கிறது. இந்தக் கணத்தை நிஜமாக நம்புவது அதை எப்படியோ காணாமலடித்து விடும், தூக்கத்திலிருந்து என்னை எழுப்பும் ஒரு குரல் போல என்பது போலிருக்கிறது.
இங்கிலிஷ் மூலக் கதை: ‘ஃபயர்லைட்’ என்ற தலைப்புள்ள கதை ‘அவர் ஸ்டோரி பிகின்ஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.
கதை/ புத்தக விவரங்கள்:
‘Firelight’ from the book, ‘Our Story Begins – New and Selected Stories’ by Tobias Wolff
Published by Alfred A.Knopf/ 2008
டொபையாஸ் ஓல்ஃப் பற்றி 2008 இல் பிரசுரமான ஒரு கட்டுரை விவரங்களோடு அவரது அக உலகைப் பற்றியும் பேசுகிறது. அந்தக் கட்டுரையை இங்கே காணலாம்: https://www.theguardian.com/books/2008/jul/19/fiction2
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
