ஜெர்மன் மூலக் கதை: யோகோ தவாடா
ஜெர்மன் மூலக் கதையை இங்கிலிஷுக்கு மொழி பெயர்ப்பு : சூஸன் பெர்னாஃப்ஸ்கி
தமிழாக்கம் : மைத்ரேயன்

பாட்ரிக்கின் முன்னால் நிற்பவர், பார்ப்பதற்கு ‘ட்ரான்ஸ்-திபெத்தன்’ போல இருக்கிறார். ஸீலானின் இந்த வார்த்தையை முதல் முறையாக பாட்ரிக் பயன்படுத்தி இருக்கிறார், அதை நீண்ட காலமாகத் தன் இறகுகளின் அடியே கதகதப்பாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார், அதிலிருந்து பொரிக்கப்பட்டு வெளி வரப் போவது எந்த மக்களோ அல்லது மொழிகளோ என்பது அவருக்கு முன்னதாகத் தெரியவில்லை. இந்த நபர் நிஜமாகவே பார்ப்பதற்கு ட்ரான்ஸ்- திபெத்தன் போல இருக்கிறார்; இப்படிச் சொல்வது ஒரு தன்னிலைப் பார்வை, இங்கு சில பண்புச் சொற்கள் சேர்க்கப்பட்டதன் நோக்கம், இந்தத் தன்னிலைத் தோய்ப்பிற்கு ஆதரவு காட்டத்தான்.
அந்த மனிதர் பாட்ரிக் அமர்ந்திருக்கும் மேஜையருகே சேர்ந்து உட்கார அனுமதி கேட்கிறார். அவர் பேசுகிற மொழி ஏதோ அபூர்வப் பறவை போல இல்லை, அதை வருணிக்க அரிய கலைச் சொற்களாக இமய மலைப் பிராந்தியம் சேர்ந்த, அல்லது சீன-திபெத்திய மொழி என்று ஏதோ வர்ணனையைப் பயன்படுத்த அவசியமில்லை. அவர் பேசுவது நேரடியான ஜெர்மன் மொழி, அயல் மொழிச் சாயலும் பேச்சில் இலேசாகத்தான் தெரிகிறது. மற்ற மேஜைகளருகே மனிதர் அமர்ந்திருக்கிறார்கள், எனவே இரு ஆண்கள் ஒற்றுமையாக ஒரு மேஜையைப் பகிரக் கேட்பது, தர்க்கப்படி சரியானதாகவே பாட்ரிக்குக்குப் புலப்பட்டது.
வசீகரமாகத் தன் கையை நீட்டி விட்டு, பாட்ரிக் அதற்கு மறுவினை செய்யுமுன் அதைப் பின்னெடுத்துக் கொண்டபடி, அந்த மனிதர் சொல்கிறார், “என் பெயர் லியோ-எரிக் ஃபு’. அறிமுகத்துக்கான சைகை, உடல் தொடுகையால் பூர்த்தி செய்யப்படத் தேவை இல்லை என்பது பாட்ரிக்குக்குப் புரிந்திருக்கிறது. அவர் புத்தியில் ஒரு கேள்வி ரீங்கரிக்கிறது. போகிற போக்கில் சிறிது நேரம் ஒரு கஃபேயில் சந்திக்கிறவரிடம், நம் முழுப் பெயரையும் சொல்லத் தேவையுண்டா, இல்லை, அந்த மூன்று பாகங்களும்- லியோ, எரிக் மற்றும் ஃபு- அவருக்காகவே கொடுக்கப்பட்ட பெயர்கள்தானா? பாட்ரிக் எச்சரிக்கையாக இருக்கிறார், தனக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் முதலாவது ஒன்றை மட்டும் சொல்கிறார்.
“என் பெயர் பாட்ரிக்.”
தான் புரிந்து கொண்டதாகக் காட்டித் தலையை அசைத்து,“எனக்குத் தெரியும்,’ என்கிறார் லியோ-எரிக். இந்தப் பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல், பாட்ரிக் சிறிது நிலை குலைகிறார். பாட்ரிக் இந்த கஃபேயில் அமர்வதை பல முறை தான் பார்த்திருப்பதாக லியோ-எரிக் சொல்கிறார்- மேலும் சொன்னால், கடந்த முறை, ஃபாடன்சான்னென் (த்ரெட்ஸன்ஸ்) என்கிற கவிதைத் தொகுப்புப் புத்தகத்தைப் படித்தபடி அவர் அங்கு இருந்ததைச் சொல்கிறார். தான் அந்த மாதிரி இருந்த நினைவே பாட்ரிக்குக்கு இல்லை, என்றாலும் அவர் அந்த கஃபேயில் கவிதைகளைப் படித்து இருந்திருக்க வாய்ப்பு அதிகம், மேலும் அவர் பாரிஸில் பௌல் ஸீலான் மீதான ஆய்வுக் கூட்டத்தில் ஒரு கட்டுரையை அளிக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த நேரத்தில் தான் அந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவோமா அல்லது உரை நிகழ்த்துவோர் பட்டியலில் இருந்து, மிகையாக உணர்ச்சி வசப்படும் ஒரு கிறுக்கன் என்று கருதப்பட்டு நீக்கப்பட்டு விடுவோமா என்பது அவருக்கு நிச்சயமில்லாமல் இருந்தது.
“த்ரெட்ஸன்ஸ் பற்றி ஓர் உரை நிகழ்த்த நீங்கள் எண்ணியிருக்கிறீர்கள்.”
“ சில வாரங்கள் முன்பு அப்படி எண்ணியிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, அப்படி இல்லை.”
“ஏன் அப்படி?”
இந்தக் கேள்விக்குப் பாட்ரிக்கால் ஒரு விடை காண முடியவில்லை, எனவே தரையை நோக்கிய வண்ணம், துரிதமாக ஒரு காரணத்தை அவர் உற்பத்தி செய்தார்.
“எனக்குக் கூட்டங்கள் பிடிக்காது.”
“ஏன்?”
“எல்லாப் பக்கங்களிலும் இருந்து நாம் பார்க்கப்படுவதால், அவை மன அழுத்தத்தைக் கொணர்கின்றன. எல்லாரும் திடீரென்று சாத்தானின் முகமூடிகளைத் தரித்தவர்களாகிறார்கள்.”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
“முதலில் உரை, பின் கேள்விகள், விடைகள், கலந்துரையாடல்: இது அரங்கில் மேடையேறும் நாடகம் போலிருக்கிறது.”
“சமூகமே நாடக அரங்குதான், அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ஜனநாயகத்துக்குத் தேவையானவை, ஒரு முந்தைய கதை, ஒரு விளக்கவுரைக் கதை, மற்றும் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட பல போக்குகளில் மாற்றிப் பார்க்கும் கதைகள். முழுதும் நம்பகமான உணர்ச்சிகளால் மட்டுமே ஜனநாயகத்தைக் கட்ட முடியாது.”
லியோ-எரிக் ஃபு ஹாங்காங்கிலிருந்து வந்திருக்கும் சுதந்திரப் போராட்டக்காரராக இருப்பாரோ என்ற ஐயத்துடன், பாட்ரிக் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறார். ஒரு கணத்துக்குப் பிறகு, இந்த ஊகச் சிந்தனையைத் தன் புத்திப் பக்கத்திலிருந்து அழித்து விடுகிறார். பெய்ஜிங்கிலிருந்து வருபவர் கூட சுதந்திரப் போராட்டக்காரராக இருக்கக் கூடும். ஒருக்கால் பாட்ரிக்தான் ஜனநாயக மனோபாவம் சிறிதும் இல்லாத மனிதராக இருக்கக் கூடும்.
“எனக்குக் கேள்விகள், விமர்சனம் அல்லது கலந்துரையாடல் எல்லாம் பிடிக்காது,” பாட்ரிக் பதிலளிக்கிறார். “ஆனால் அதை நாம் உரக்கச் சொல்லி விட முடியாது, மேலும் என்ன இருந்தாலும், நான் இப்படி இருப்பது சரியென்று நான் கூட நினைக்கவில்லை.”
“கலந்துரையாடும் பழக்கவழக்கத்தில் உங்களுக்குப் பிடிக்காதது எது? கொஞ்சம் விளக்குங்க, அதைத் தெரிந்து கொள்ள எனக்கு உண்மையாகவே ஆர்வமிருக்கிறது.”
பாட்ரிக்கின் புத்தியில் ஒரு புயல் சுழன்றெழுகிறது; பல வண்ணங்களில் எண்ணத் துண்டுகள் பெருகும்போது அவற்றைச் சரியாகப் பிரித்தறிய முடியாதது வாதையாக இருந்தது. ஏதோ பிடிமானம் கொடுப்பதாகத் தோன்றியதால் அவர் ஒரு புதுக் கோட்பாட்டைக் கண்டு பிடிக்கிறார்: லியோ-எரிக் ஜனநாயகத்துக்கு எதிரான அறிக்கைகளை விடுப்போர் பற்றிச் சிறு காட்சித் துண்டுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒளிந்திருக்கும் ஒலிப்பதிவுக் கருவியைப் பயன்படுத்துகிறார், யூரோப்பியக் கூட்டமைப்பின் குடிமக்கள் குரல்களைப் பதிவு செய்கிறார். அந்தப் பதிவுகள் மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் அமைப்புகளில் பாடங்கள் நடத்தப் பயன்படுத்தப்படுகின்றன. தன் தலைக்குள் இந்த மாதிரியான அபத்தமான யோசனைகள் உருவாகிக் கொண்டிருக்கும் நேரம் பாட்ரிக் தன் முன் நெற்றியில் மூன்று விரல் நுனிகளால் தட்டிக் கொண்டார். மரப்பட்டைக்குப் பின்னே உள்ள புழுக்களை விழுங்கக் கொத்தும் மரங்கொத்தியின் செயல் போல இருந்தது அவர் செயல், அவர் கொழுத்த யோசனைப் புழுக்களைக் கொத்தி எடுக்க முயல்கிறார்.
“ஓர் ஆய்வுக் கூட்டத்துக்கான கட்டுரையைத் தயார் செய்யும்போது, கடற்கரையில் மணல் வீடு கட்டும்போது நாம் கொள்ளும் அக்கறையைப் போன்ற கவனத்தோடுதான் தயாரிப்பேன். குழந்தைகளில் அனேகர் தங்கள் பொம்மை மண்வெட்டிகளால் என் மணல் கோட்டையைக் குரூரமாக அழிப்பதில் ஏன் அத்தனை ஈடுபாடு கொள்கிறார்கள் என்பது எனக்குப் புரிவதில்லை.”
மண்வெட்டி என்ற சொல்லை எப்போது கேட்டாலும் பாட்ரிக்குக்குச் சிறிது மயிர்க்கூச்செறியும். தானே அந்தச் சொல்லைப் பயன்படுத்தியபோது, தன் உள்ளே என்னவோ நசுங்கிப் போனது போல அவர் உணர்ந்தார், ஆனால் லியோ-எரிக்கின் உதட்டு ஓரங்களில் ஒரு சிரிப்பு எழுந்ததைப் பார்த்தபோது அவருக்குச் சிறிது ஆறுதல் உணர்வு கிட்டியது. லியோ-எரிக் சொல்கிறார்:
“ஓ, அக்குழந்தைகளுக்கு எந்த நோக்கமும் மனத்தில் இருக்காது. அவர்களுடைய விளையாட்டில் நீங்கள் குறித்துத் தாக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”
“நான் எதையும் என்னைப் பற்றியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், பிறகு என் தனித் தன்மை என்பது என்னவாகும்?”
“ஒரு பொம்மை மண்வெட்டி சிறிதும் ஆபத்தில்லாதது, நாம் ஐஸ்க்ரீம் சாப்பிடப் பயன்படுத்தும் மர ஸ்பூன் போன்றதுதான்.”
“மருத்துவரின் ஒரு சிறு ஸ்பூன் என் நாளங்களில் உரசும்போதுகூட எனக்கு அத்தனை பாதிப்பு ஏற்படும், அதை என்னால் ஒரு வினாடி கூடத் தாங்க முடிவதில்லை.”
“ஸ்ட்ராபெர்ரிகளுடன் ஒரு குளிர்ப் பாலேடு கொடுங்கள், ப்ளீஸ்!”
இந்த வாக்கியம் பாட்ரிக்கை நோக்கிச் சொல்லப்படவில்லை. பணிப் பெண் ஆமோதிப்புடன் தலையசைத்து, பாட்ரிக்கின் முன் ஒரு கோப்பை பாலை வைக்கிறாள்.
“மன்னியுங்க, நான் பால் ஏதும் தருவிக்கவில்லையே?”
“அந்த முடிவை என்னிடம் விட்டீங்க. உங்களுக்குப் பால்தான் உகந்தது என்று நான் தீர்மானித்தேன்.”
அந்தப் பெண்ணிடம் தான் என்ன சொன்னோம் என்பது பாட்ரிக்குக்கு உண்மையாக நினைவிருக்கிறது- இந்தக் கணத்தில் அவருக்கு எல்லாமே தொடர்பு கொண்டனவாகத் தெரிகின்றன, அந்த உணர்வு அவருக்கு அரியதொன்று.
“ஆமாம், அது சரிதான். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள நான் விரும்பினேன். எனக்கு இன்னும் பால் பற்கள்தான் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது, அப்படித்தானா?”
ஹா, ஹா, ரொம்பவே நகைச்சுவைதான். அவருடைய வார்த்தைகளை லட்சியம் செய்யாமல் திரும்பிய பணிப் பெண், தன் கையை அப்போதே உயர்த்தி அவள் கவனத்தை ஈர்த்த அடுத்த மேஜைக்காரரை நோக்கி நகர்கிறாள். லியோ-எரிக் தட்டச்சுப் பிழைகளை மறைக்க உதவும் வெண்பசையை ஒத்த நிறம் கொண்ட அந்தக் குவளைப் பாலை நோக்குகிறார், சொல்கிறார்:
“பௌல் சீலானின் ‘த்ரெட்ஸன்ஸ்’ புத்தகத்தின் முதல் பதிப்புப் பிரதி ஒன்றை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், இல்லையா?”
பாட்ரிக்கின் வாழ்வில் உள்ள சாதாரணத் தகவல்களைப் பற்றிக் கூட இந்த நபருக்குத் தெரிந்திருக்கிறார்போல இருக்கிறது.
“என்னிடம் 1968 ஆம் வருடப் பதிப்பு இருக்கிறது. ஆனால் அதொன்றும் விசேஷமானதில்லை.”
“ஏன் இல்லை?”
“அதைப் போல ஐயாயிரம் பிரதிகள் இருக்கின்றன. ஐயாயிரம் வாசகர்களில் நான் ஒருவன். புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும் ஒரு புத்தகத்துக்கு அத்தனை பெரிய எண்ணிக்கையில் வாசகர்கள் இருப்பது வியப்புக்குரிய விஷயம்தான். டாயிட்ச் ஓபெரா கூட இரண்டாயிரம் பேருக்குத்தான் இருக்கைகள் தருகிறது.”
லியோ-எரிக் உற்சாகமான சிரிப்பு ஒன்றை வீசுகிறார்.
“இருந்தாலும், அதற்கு ஐயாயிரம் பேரும் உண்மையிலேயே அந்தப் புத்தகத்தை வாசித்தார்கள் என்று பொருளில்லையே. அதை இன்னமும் படித்து, அதைப் பற்றிச் சிந்திப்பவர்கள் அனேகமாக மிகச் சிறு எண்ணிக்கையாகத்தான் இருப்பார்கள், அவர்களில் நீங்கள் ஒருவர்.”
”உண்மையைச் சொன்னால், இப்படி ஒரு சிக்கலான புத்தகத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாத அளவு நான் களைத்திருக்கிறேன். என் பெண் தோழி இந்தப் புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கி, எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தாள். அவள் அதைக் கொடுத்தபோது எனக்கு ஒரே ஆத்திரமாக வந்திருந்தது. அதைக் குப்பையிலே வீசுவதற்கு இருந்தேன். ஆனால் பனித்தூள் போல வெண்மையாக இருந்த அதன் அட்டையையும், மெலிந்த அளவே இருந்த அதன் வடிவையும் பார்த்து எனக்கு அது பிடித்துப் போயிற்று, அதனால் அதை அலமாரியில் வைத்தேன். இன்னும் கொஞ்சம் தடிமனான புத்தகம் நெருப்பில் போடப்பட்டிருக்கும்.”
“உங்கள் தோழி அப்படி என்ன பிழை செய்தார்?”
“முன் திட்டம் இல்லாது இருப்பது எனக்குத் தலையாயது. நான் ஒரு உரை நிகழ்த்த என்னை வற்புறுத்திக் கட்டுரை எழுத வைப்பது அவள் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது. நல்ல நோக்கத்தோடு பெண்ணொருத்தி மேற்கொள்ளும் எந்தத் தந்திரமும் பாம்பின் விஷம் போலக் கொடியது.”
முகம் மாறாது லியோ-எரிக் தலையசைக்கிறார், பிறகு சொல்கிறார்: “ஒரு வாழ்க்கைப் பணி செஞ்சிப்பி போல ஒரு போதும் ஒளிராது.”
பணி வாழ்வில் ஈடுபாடு இல்லாத ஒருவர் சீனாவிலிருந்து வர வாய்ப்பில்லை என்று பாட்ரிக் யோசிக்கிறார். ஒருக்கால் இவர் திபெத்திலிருந்து வந்திருக்கலாம். மலைகளில் உயரே எங்கோ இருந்து இரவும் பகலும் தியானத்தில் ஈடுபட்டிருப்பதால், பணத்தையோ, வாழ்வுப் பிரச்சினைகளையோ பற்றி எந்த அக்கறையும் இல்லாத துறவிகளில் ஒருத்தராக இருக்கலாம். தேய்ந்த தடத்தில் ஓடப் பார்க்கும் தன் சிந்தனை பற்றி மனதுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டு, அதன் ஓட்டத்தை நிறுத்த அதற்கு ஒரு பதில் காண்கிறார்: ஒரு திபெத்தியர் கூட ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்குமளவு வெற்றி கண்ட தொழிலதிபராக இருக்கலாம். லியோ-எரிக் எங்கிருந்து வந்தவர் என்று முடிவில்லாமல் ஊகித்துக் கொண்டிருக்க பாட்ரிக்குக்கு விருப்பமில்லை, மாறாக அவர் வெறுமனே கேட்டுக் கொண்டிருக்கத் தயாராக உள்ளார். இந்தக் கருத்து தெள்ளத் தெளிவான ஒன்று, பதிலளிக்கத் தக்கது.
“ஒரு பணி வாழ்வு சிப்பியைப் போலச் சுடர் விடாது என்றால் வேறு எதுதான் ஒளிரும்?”
அந்த உரையாடலை முன்னகர்த்தக் கூடிய ஒரு கேள்வியைக் கேட்பதில் பாட்ரிக் வெற்றியடைந்து விட்டார். சிப்பி என்ற அந்தச் சொல்லை, சிவப்பு ஒயினின் ஒரு மிடறைப் போல தன் வாய்க்குள் ருசித்துக் கொண்டிருக்கிறார். ஒன்று, அவர் சொல்வது என்னவென்று விளங்காதபடிக்கு வழக்கு அழிந்து போன சொற்களை அடிக்கடி பயன்படுத்துவார், அல்லது மனச் சிகிச்சைக்கான நேரத்தில் பேச மறுத்துப் பிடிவாதமாக அமர்ந்திருக்கும் நோயாளியின் நிலைக்குத் திரும்பி விடுவார். ஆனால் இன்று நோய்ப்ப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட முடியாதவராக, புதிதாகப் பிழிந்த சொற்களைப் பேச அவருக்கு இயல்கிறது, லியோ-எரிக் தன் தலையை மென்மையாக இடப்பக்கம் சாய்க்கிறார், பதில் சொல்ல யோசனை செய்கிறார். அவர் சாவகாசமாகவே அதைச் செய்கிறார்.
மனிதர்கள் இப்படி அமைதியான போது, ஓர் இசையொலி அங்கு கேட்கிறது. ஒரு மரத்தில், ஒரு பாடகி பொறுமையின்றிக் கூவுகிறாள். அவள் தன் முதல் ஒலித் துண்டை உயர்ந்த ஸ்தாயியில் வீசுகிறாள், பிறகு தன் குரலைப் படிப்படியாகச் சரிய விடுகிறாள், பிறகு துரிதமாக மறுபடி உயர்த்துகிறாள். கருங்குயில். தன் மரத்திலிருந்து அவள் கீழிறங்கி வரும் வரை நீங்கள் அவள் உருவைக் காண முடிவதில்லை. இத்தனை கூச்சமுள்ள ஒரு பாடகி அத்தனை சக்தியோடு உயர்ந்த ஸ்தாயியில் பாட முடியுமா? ஓ சரிதான், அதைச் செய்யக் கூடியவள்தான் அவள். மிகைப்பட்ட கூச்சம் என்பதே ஒரு வகை போக்குவரத்து நெரிசல்தான். அந்த அணைக்குப் பின்னே, ஏகப்பட்ட அழுத்தம் சேர்ந்து, அந்த அரங்கின் லஸ்தர் விளக்குகள் எல்லாவற்றையும் ஒளிரச் செய்யும் அளவு மின்சக்தி அங்கு உற்பத்தியாகிறது. பாட்ரிக் குயில் மீதான கவனத்தை இழந்து, லியோ-எரிக்கைக் கவனிப்பவராகத் தான் ஆகி விட்டதை அறிகிறார், லியோ-எரிக்கிடம் பறவையை ஒத்த ஏதோ தெரிகிறது. ஒருக்கால் அவரது மெலிவான கழுத்தோ அல்லது கருத்த கண்ணாடி மணிகளை ஒத்த அவரது கண்களோ அப்படித் தோற்றம் எழக் காரணமாக இருக்கலாம். லியோ-எரிக் ஒரு கருங்குயில் இல்லை என்று சொல்லக் கூடியவர் யார்? அவரும் மர உச்சியிலிருந்து ஜனங்களைக் கவனிக்கிறார், உண்மைகளைச் சேகரிக்கிறார், அவற்றால் ஒரு கூட்டைக் கட்டுகிறார், அவை பயனுள்ளவை என்று காண்கிறபோது, அவர் மனித உரு எடுக்கிறார். இறகுள்ள உயிரினங்களிடமிருந்து உதவி பெறக் காத்திருக்கும் மனிதர்களில் பாட்ரிக்கும் ஒருவர். இறுதியாக லியோ-எரிக் மௌனம் கலைகிறார்.
”உங்களுக்கு இல்லை மரம் பற்றித் தெரியுமா? திறந்த வெளியில் அந்த மரம் நிற்கிறது. ஒரே கேள்வியை திசை மானியின் எட்டு மூலைப் புள்ளிகளிலிருந்தும் அதைப் பார்த்துக் கேட்கலாம். விடை ஒவ்வொரு முறையும் வேறுபட்டு இருக்கும், ஆனால், இல்லை என்பதுதான் எப்போதும் கிட்டும் விடை.”
ஜென் பௌத்த மரபில் வரும் கோஆன் புதிர்களைப் போலத்தான் இது என்று பாட்ரிக்குக்குத் தோன்றுகிறது. ஒருக்கால் லியோ எரிக், ஜென் பௌத்தர்கள் நிறையப் பேர்கள் இன்று வாழும் ஒரு நாடான, ஃப்ரான்ஸிலிருந்து வருபவரோ? இந்த ஊகம் லியோ-எரிக் மேலும் சொல்வதிலிருந்து பாதி உறுதியாகிறது:
“ கரீயர் என்கிற சொல் ஃப்ரெஞ்சுச் சொல்லான ‘கரியே’ என்பதிலிருந்து வருகிறது, அதற்கு கல்சுரங்கம் என்றும் பொருள் உண்டு. ஒருக்கால் பலருக்கு பணிவாழ்வு (கரீயர்) என்பது துளைக்க முடியாத கருங்கல் போலத் தோன்றுவது இதனால்தானோ என்னவோ.”
பாட்ரிக் பதிலளிக்கிறார்: “பணிவாழ்வு என்பதன் எல்லா அம்சங்களுமே எனக்கு ஒவ்வாமையைக் கொடுக்கின்றன. ஒரு பணிவாழ்வுப் பாதையில் அடைக்கப்படுவதை நான் விரும்பவில்லை, சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். நெடுஞ்சாலையும் வேண்டாம், ரயில் தண்டவாளங்களும் வேண்டாம். தடங்கள் இல்லாத, பாதைகள் இல்லாத, திறந்த வெளிகள்தான் எனக்கு விருப்பம். ஒரு நவீன கால மனிதருக்கு எல்லாத் திசைகளிலும் நடப்பது சாத்தியமாக இருக்க வேண்டும். திசைமானியின் நான்கு அல்லது எட்டு முனைகளைச் சொல்லவில்லை நான். எட்டுத் திசைகளுக்கு மேல், பல உள்ளன.”
“ஆனால் நீங்கள் வளர்ந்தது ஒன்றும் மத்திய ஆசிய ஸ்டெப் சமவெளி இல்லையே, உயர்ந்த கட்டடங்கள் இருந்த நகரம்தானே.”
“ஆமாம், அது உண்மைதான்.”
“ஒரு நகரத்தில் பாதசாரிகளும், கார்களும் அனேகமாக, நான்கு திசைகளில்தான் நகர முடியும்: முன்னால், பின்னால், இடம், வலம். அவ்வளவுதான். ஆனால் நான்கு திசைகளே கூட ஏற்கனவே உங்கள் தேவைக்கு அதிகம். ஒவ்வொரு கணத்திலும் ஒரு புது முடிவை அடைய வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்புவதற்காக, ஒவ்வொரு நிலைமைக்கும் பொருந்தக் கூடிய ஒரே ஒரு விடையை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.”
“அது என்ன விடை?”
“இடது பக்கம் திரும்புவது.”
பாட்ரிக் விழுங்குகிறார், ஸ்ட்ரோபோஸ்கோப்பைப் போல கண்ணைக் கொட்டுகிறார். அதில் ஒளியும், நிழலுமாக மாறி மாறி வீசும் அமளியில் அவரோடு உரையாடுபவர் காணாமல் போயிருக்கிறார். இது பேசுவதைச் சுலபமாக்குகிறது.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“நான் சொல்லவில்லையா, உங்களை நான் கவனித்தபடி இருக்கிறேன்.”
அலகு ஏதும் இல்லாத இந்த மனிதர் ஒரு கருங்குயிலாக இருக்க முடியாது, பாட்ரிக் நினைக்கிறார். ஒருக்கால் புத்திசாலியாகத் தோற்றம் தரும் இந்த மனிதர், கொரியன் தீபகற்பத்தின் வடப் பாதியிலிருந்து வந்திருப்பாரோ, ஏதோ ஒரு தகவல் சேகரிப்பு மையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய விசேஷ காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்திருக்கிறாரோ. தன் சிந்தனை மறுபடியும் தடம்புரண்டு விட்டதென்று பாட்ரிக் அறிந்து கொண்டார், எதார்த்தமென்னும் மையத் தடத்துக்கு எப்படி மறுபடி திரும்புவதென்று யோசித்தார். லியோ-எரிக் தன் புருவங்களைப் பின்னலாக்கியபடி பேசினார்:
“தயவு செய்து அச்சப்படாதீர்கள். நான் உங்களை வேட்டையாடித் திரியும் பித்தனில்லை.”
ஒரு வேட்டைக்காரர்! பாட்ரிக்குக்கு அப்படி ஓர் எண்ணமே எழுந்திருக்கவில்லை. என்னதானிருந்தாலும், கசங்கிய சட்டையணிந்த, கன்னங்களில் நிறமே இல்லாத மனிதன் ஒருவன் ஒரு வேட்டைக்காரரின் இலக்காக இருக்க வாய்ப்பென்ன இருக்கிறது.
“இல்லையே, நீங்கள் என்னை வேட்டையாடுபவர் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை, இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், அப்படி ஒரு நடவடிக்கைக்கு நான் இலக்காக இருப்பேன் என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. நீங்கள் ஒருக்கால் ஒரு உளவாளியாக இருப்பீர்களோ என்று ஊகம் செய்தேன். ஆனால் என்னிடம் எந்த ஒரு முக்கியமான தகவலும் இல்லை, எனவே அதுவும் எண்ணக் கூடாதது. ஒருவேளை நீங்கள் ஒரு ஜென் பௌத்த உளவாளியாக இருந்து, என் தலைக்குள்ளே இருக்கிற பிரும்மாண்டமான வெற்றிடத்தைத் திருட வந்திருக்கலாமோ என்னவோ?”
வேடிக்கைப் பேச்சால் சங்கடமான ஒரு நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காண்பதில் பாட்ரிக் வெற்றி பெற்று விட்டார். லியோ-எரிக்கும் தேறுதல் உணர்வைப் பெற்றவராகப் புன்முறுவல் செய்கிறார், பிறகு தான் ஏற்கனவே தயாரித்திருந்த ஒரு உரையைச் சரளமாகச் சொல்கிறார்:
“நான் உங்களிடம் பேச வந்தது, மனித உடலில் ஓடுகிற வாய்க்கால்களைப் பற்றித்தான். தீர்க்கரேகைகள் எனப்படும் பனிரெண்டு மைய வாய்க்கால்கள் உள்ளன. தீர்க்கரேகை (மெரிடியன்) என்ற சொல் சீனச் சொல்லான ‘ஜிங்மாய்’ என்பதன் மொழி பெயர்ப்பு.”
தன்னியல்பாக பாட்ரிக் பதில் சொல்கிறார்.
“ஆனால் தீர்க்க ரேகை என்று ஒன்றுதானே இருக்கும். நீங்கள் ஏன் பன்மையில் அதைச் சொல்கிறீர்கள்?”
“அனேக மனிதர் ஒரே ஒரு தீர்க்கரேகையை, ஜீரோ தீர்க்க ரேகையை மட்டும்தான் கருதுகிறார்கள், மற்றவற்றைப் புறக்கணித்து விடுகிறார்கள்.”
“என்னவென்றால், பௌல் சீலானின் கவித்துவப் படைப்புகள் அத்தனையேதும் இல்லை, அதனால் “தீர்க்கரேகை (த மெரிடியன்)” என்பது எனக்கு உண்மையிலேயே முக்கியமானது.”
“ஆனால் அவருடைய கவிதைகளை விளக்க ஒரு தீர்க்க ரேகை போதுமானதா என்ன?”
“நிச்சயமாக இல்லை. உங்களுக்கு ஒரு தீர்க்க ரேகை போதாது என்றால், இன்னும் எத்தனையை உங்களால் கொடுக்க முடியும்?”
“கடிகாரத்தில் எத்தனை எண்கள் உண்டோ அத்தனை முக்கியமான தீர்க்க ரேகைகள் உண்டு: பனிரெண்டு.”
“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?”
“உதாரணமாக, கல்லீரலுக்கான தீர்க்க ரேகை கால் பெருவிரலில் நகத்தின் கீழே துவங்குகிறது, பாதத்தின் மேல்புறத்தைக் கடந்து முழங்கால் வழியே, தொடை வழியே மேலே போகிறது. அது கல்லீரல் வழியே கடந்து போய், தொண்டையின் பின்புறப் பகுதி வழியே மேலே சென்று, மூக்கு, கண்கள், பின்னர் முன் நெற்றி வழியே தலயின் உச்சிக்குப் போய்ச் சேர்கிறது. யாருக்காவது கல்லீரலில் பிரச்சினை இருந்தால், இந்தத் தீர்க்க ரேகையில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும் சிறு ஊசியைச் செலுத்தி சிகிச்சை செய்யலாம்.”
“ஆஹா, நீங்கள் குத்தூசி மருத்துவம் (அக்யூபங்க்ச்சர்) பற்றிப் பேசுகிறீர்களா!”
பாட்ரிக்குக்கு உடனே ஆறுதல் கிட்டுகிறது. இப்போது அங்கே என்ன நடக்கிறது என்பது அவருக்குப் புரிபடும். ஆனால் இந்த மூச்சு விடும் நேர இடைவெளியில் கிட்டிய ஆறுதல் நீடிக்கவில்லை. லியோ-எரிக் இன்னொரு புதிய குழப்பச் சுழலில் அவரை அமிழ்த்தி விடுகிறார்.
“இல்லை, நான் பௌல் சீலானின் ஒரு கவிதை பற்றித்தான் பேசுகிறேன்: “மறுவழி-/வரைபடங்கள், எரியமான….”உங்களுக்கு இந்தக் கவிதை தெரியுமா?”
“தெரியாமல் என்ன? இந்தக் கவிதையில் ‘பெருந்தமனி’ என்ற சொல் உண்டு, குழந்தையாக நான் இருந்தபோது என்னிடம் ‘பெருந்தமனி (எயோட்டா)’ என்ற பெயரில் ஒரு நாய் இருந்தது. இந்த விஷயத்தில் இந்தக் கவிதை என் நினைவுகளுக்கு ஒரு மறுவழியாகவும் இருக்கிறது.”
பாட்ரிக் இப்போது தன் கால் பெருவிரல்களைப் பற்றிய நினைவைக் கொள்கிறார், அவை என்ன காரணத்தாலோ அவற்றுக்குக் கீழே உள்ள நிலத்தை உணர்வதற்கு முடியாமல் ஆகியிருக்கின்றன.
“என் கால்கள் இந்தக் கணம் வினோதமாகத் தெரிகின்றன. அவற்றால் கீழே உள்ள நிலத்தை உணர முடியவில்லை.”
“என் தாத்தா சொல்வதுண்டு: யாருடன் பேசினாலும் உன் கால்களுக்குக் கவனம் செலுத்து! கால் ஒரு அருமையான தடித்த புத்தகம். சிலர் கண்களோ அல்லது இதயமோ மட்டும்தான் ஆன்மாவுடன் தொடர்புள்ளவை என்று நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. உடலுக்குள் உள்ள வலைப் பின்னல்தொடர்கள் பலமடங்கு சிக்கலானவை.”
“ஆனால் பௌல் சீலான் இந்த மாதிரி தீர்க்க ரேகைகளைப் பற்றிப் பேசியிருக்க வாய்ப்பில்லையே. அவருக்கு ஒரே ஒரு தீர்க்கரேகைதான் இருந்தது.”
“லண்டன் வழியே கடந்து போகும் தீர்க்க ரேகையா அது? நான் அதை நம்பவில்லை. இங்கே பார்த்தால் பௌல் சீலானுக்கு இன்னொரு முக்கியமான தீர்க்க ரேகை இருக்கிறது: பாரிஸை ஸ்டாக்ஹோமுடன் இணைக்கும் தீர்க்கரேகை.”
நெல்லி சாக்ஸுடன் பௌல் சீலான் நடத்திய ஒரு கடிதப் பரிமாற்றத்தில் ஒரு தீர்க்க ரேகை வருவது, மின்னலாக பாட்ரிக்குக்கு நினைவு வருகிறது. ‘ஸ்டாக்ஹோமுக்கும் பாரிஸுக்குமிடையே வலிக்கும் தேறுதலுக்கும் இடையிலான தீர்க்க ரேகை ஓடுகிறது,’ அவர் தன் நினைவிலிருந்து மேற்கோள் காட்டுகிறார், பின் சொல்கிறார், “பல தீர்க்கரேகைகள் இருக்கின்றன- உருவகமாகச் சொன்னால். ஆனால் நான் உருவகங்களில் அதிகம் மதிப்பு வைப்பதில்லை, அவை கடற்பஞ்சு போல மிக நொய்மையானவை. திக்குதிசை அறிய எனக்கு எண்களையும், எழுத்துகளையும் பயன்படுத்துவதே விருப்பமானது.”
மென்மையாக லியோ-எரிக் சொல்கிறார், “நான் உருவகமாகப் பேசவில்லை, ஆனால் நிலப்பரப்பைப் பற்றிப் பேசுகிறேன். எப்போதாவது பாரிஸில் உள்ள வரலாற்று ஆய்வுக் கூடத்திற்குப் போயிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“பாரிஸின் தீர்க்கரேகை என்று சொல்லப்படுவது அங்கே காணப்படுகிறது, தரையில் பல வண்ணக் கற்களால் பதிக்கப்பட்டுக் காணப்படும்.”
“நீங்கள் உடலில் உள்ள வாய்க்கால்கள் பற்றித்தான் பேசினீர்கள், இல்லையா?”
“பூமிக்கோளத்துக்கும், உடலுக்குமிடையே என்ன வேறுபாடு இருக்க முடியும்? கவிஞருக்கு இடப் பெயர்களும், உடலுறுப்பின் பாகங்களும் சமமான முக்கியத்துவம் கொண்டவையாக இருந்தன. நாம் அவை இரண்டையும் இணைக்கும் வரிகளைத் தேட வேண்டும்.”
“இதெல்லாம் மிகவும் சுவாரசியமானதுதான்,” பாட்ரிக் சொல்கிறார். “நீங்களே அந்தக் கூட்டரங்குக்கு ஏன் போகக் கூடாது? சீலான் மற்றும் தீர்க்கரேகை, அல்லது உங்கள் விருப்பப்படி தீர்க்கரேகைகள், பற்றிப் பேசுவது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.”
“துரதிர்ஷ்டவசமாக என்னால் அதைச் செய்ய முடியாது. இதில் எனக்குச் சிறப்புப் பயிற்சி ஏதும் இல்லை. என் தாத்தா பாரிஸ் நகரில் 1950களில், 1960களில் சீன மருத்துவ சிகிச்சை செய்து வந்தார்- அந்தக் கால கட்டத்தில் பௌல் சீலான் அங்கே வாழ்ந்திருந்தார். என் தாத்தா மெத்தப் படித்த மனிதர், அவர் சீனம், ஃப்ரெஞ்சு, ஹீப்ரூ மற்றும் ஜெர்மன் மொழிகளில் படித்தவர். அவர் இறந்த பிறகு அவருடைய குறிப்புகளில் பௌல் சீலானின் கவிதைகள் பற்றி அவர் எழுதிய குறிப்புகளை நான் கண்டெடுத்தேன்.”
“தயவு செய்து மேலே சொல்லுங்க.”
“வெகு சிலருக்கே தெரியக் கூடிய சில விஷயங்களை உங்களுக்கு என்னால் தெரிவிக்க முடியும். அந்தத் தகவல்களை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது உங்கள் பொறுப்பு. உங்கள் தொழில்வாழ்வில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ இல்லையோ அதெல்லாம் எனக்கு ஒரே போலத்தான். நான் உங்கள் முன் வைப்பது ஒரு பணி வாழ்வு இல்லை, அதெல்லாம் ஒரு கையளவு தீர்க்க ரேகைகள் மட்டுமே.”
***

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தேவதைப் பருப்பொருளின் நெசவு”